Advertisement

“என்ன மாமா குறிப்புன்னு சொல்லிட்டு பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருக்கீங்க? பைபாஸ் ரோடு, ஹைட்ரோகார்பன், எண்ணை கசிவுன்னு நீங்க குறிச்சிருக்கிற பிரச்சனையெல்லாம் பெரிய விஷயமாச்சே…”
“பெருசுதான்மா… நல்லா விளைச்சல் கொடுக்கிற நிலத்தை பைபாஸ் ரோடு போட்டு ஊர்களை இணைக்கப்போறோம்னு சொல்லி கையகப்படுத்திட்டு, தரிசு நிலத்தை அதற்கு ஈடா கொடுத்து விவசாயத்தை அழிக்குறாங்க. இன்னொரு பக்கம் மீத்தேன் எடுக்குறேன், எண்ணையை பைப் போட்டு வேற இடத்துக்கு எடுத்துட்டு போறேன்னு சொல்லி வயலுக்கு கீழே ஆழத்துல பைப் புதைச்சு உபயோகப்படுதுறாங்க. சிலநேரம் ஆழத்தில் புதைச்சிருக்கிற பைப் உடைஞ்சி எண்ணை கசிந்து மேல வயல் பரப்புக்கு வந்து பயிரை நாசம் பண்றதோட இல்லாம அதற்குபிறகு அந்த நிலத்தில் விவசாயமே பண்ண முடியாத அளவுக்கு மண்ணு சத்துக்களை இழந்துடுது.
இதெல்லாம் போதாதுன்னு மழை கண்டநேரத்துக்கு பெய்து வயலில் தண்ணீர் தேங்குது இல்லைனா தண்ணீர் இல்லாம வறண்டு பாலம் பாலமா வெடிப்பு விட்டுருது. நீர் மேலாண்மை இருந்தா இந்த மாதிரி அசாதாரண சூழலை எளிதா கடந்து வந்திடலாம். ஆனா அதை யாரும் செய்யுறது இல்லை. வர்ற தண்ணியை சேமிக்கிறதுக்கான பாதை எல்லாத்தையும் அடைச்சு வச்சிருக்காங்க. ஒழுங்கா தூர்வார்றது இல்லை….
இந்த மாதிரி அடுக்கடுக்கான இடையூறால நெற்களஞ்சியம்னு பேர் எடுத்திருக்கிற ஊரு தரிசு நிலமா ஆகிடுமோன்னு பயமா இருக்கு. ஏற்கனவே தரமில்லாத ரசாயணம் கலந்த உரத்தை இறக்குமதி பண்ணி மக்களை வாங்கவச்சி மண்ணோட வளத்தை உறிஞ்சி மலடாகிட்டாங்க… 
இந்த சின்ன பதவியில் இது எல்லாத்தையும் சரிபண்றது இயலாத காரியம். ஆனா ஆசை யாரை விட்டுது, நம்ம பிரச்சனைகளுக்கு யாராவது குரல் கொடுப்பாங்களா… யாராவது முன்வந்து எல்லாத்தையும் சரிபண்ணிட மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம். இப்போ நீ உதவுற இடத்திற்கான போட்டியில் இறங்கியிருக்க, அதனால, இதையெல்லாம் நீ மனசுல வச்சிக்கோ. சின்னதோ பெருசோ நமக்கு நாமே குரல் கொடுத்து இதையெல்லாம் மீட்டெடுக்க முடியுதான்னு பார்ப்போம்.”
“கண்டிப்பா முயற்சி செய்வோம் மாமா… இதுவரை இதில் போட்டிப்போட ஒத்துக்கிட்டதே உங்க பையனோட வற்புறுத்தல்தான் காரணம்… ஆனா இனி அப்படியிருக்காது… ஜெயிக்கிற வரை இதை விடுறதா இல்லை மாமா…” என்ற குந்தவையின் மனதில் மெல்ல பாரமும் அதற்கு சரிசமமாய் வென்றுகாட்ட வேண்டுமென்ற உத்வேகமும் ஒருசேர சங்கமித்தது.
“பார்த்து இருந்துக்கோமா… தச்சனையும் எந்த வம்புக்கும் போகாம இருக்க சொல்லு… உன்னை ஜெயிக்க வைக்குறேன்னு எங்கேயாவது ஒரண்டை இழுத்திடப் போறான்.” என்று பரிவாய் சொல்லிச் சென்ற அன்பரசனிடம் தலையசைத்தவள் குறிப்புகள் இருந்த காகிதத்தை பத்திரமாய் அறையில் வைத்துவிட்டு வர, வானதி பிள்ளைகளின் உணவை குந்தவையிடமே நீட்டினாள்.
“ரெண்டு பேரையும் ஒத்தையா சமாளிக்குறது கஷ்டமா இருக்கும். நீயும் ஒத்தாசைக்கு போ குந்தவை. அப்படியே சாப்பாட்டையும் ஊட்டி விட்டுரு. அவங்களை ஊட்டச் சொல்லாத, பாவம் அவங்களே இப்போதான் வேலை முடிச்சு வந்திருக்காங்க, நீ செய்யு.”
“ரொம்பத்தான், நானும் இப்போதான்டி வெளியில் இருந்து வந்திருக்கேன். அவனுக்கு மட்டும் சலுகை கொடுத்துட்டு என்னை வேலை வாங்குற?”
“ம்ச்… போடி… எனக்கு வேலை இருக்கு.”
“ஆமாமா கண்சிமிட்ட கூட நேரமில்லாத அளவுக்கு உனக்கு வேலை இருக்குள்ள…!” என்று குந்தவை நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அதை காதில் வாங்காதது போல அங்கிருந்து நகர்ந்து அறைக்குச் சென்றாள் வானதி.
கண்களில் கனவைத் தேக்கி, ஏதோ எண்ணமிட்டபடி மிளிர்வுடன் அறைக்குள் நுழைந்த வானதியை புருவம் உயர்த்திப் பார்த்த ராஜன், “என்ன முகமெல்லாம் பளிச்சுன்னு இருக்கு? வெக்கப்படுறீயா என்ன?” என்று கேட்டு வைக்க, வானதியின் பொலிவு கூடி சிணுங்கலும் சேர்ந்துகொண்டது.
“போங்க… குந்தவை என்னை கிண்டல் பண்றா?”
“என்ன சொல்றா?”
“உங்களை யாரு அன்னைக்கு என்னை கண்சிமிட்டாம பார்க்கச் சொன்னது? அதை அவ பார்த்துட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேலி பேசுறா?”
“என்னமோ நான் மட்டும் பார்த்த மாதிரி சொல்ற? நானாவது யாருக்கும் தெரியாமத்தான் பார்த்தேன்…. நீதான் லூசு மாதிரி எல்லோரும் இருக்கும்போதே ‘ஆ’ன்னு என்னை பார்த்து நின்னுட்டு இருந்த…” பேச்சோடு பேச்சாய் அவனுமே குறும்பாய் கேட்டு, பார்த்து வைக்க, தடுமாறிப்போனாள் வானதி. 
விழிகள் அவனை நேராய் சந்திக்க திராணியற்று திக்கின்றி சுத்தியது, “அ.. அ… அது என்னமோ யோசனையில் அப்படியே நின்னுட்டேன்…”
“அதை மட்டும் தான் செய்யுற நீ?”
“எ.. என்ன செய்றேன்?”
“எப்போதும் அப்படியே நிக்குற… அதுவும் பத்தடி தள்ளியே…” 
தள்ளி நின்று குறைபடித்தவன், அறைக்கதவருகே தலை கவிழ்ந்து கைகளை பிசைந்து நிற்பவளை விழிகளால் தீண்டிவிட்டு, “என்ன பேச்சையே காணோம்?” என்று சீண்ட, அமைதிதான் பதிலாய் வந்தது.
“கேள்வி கேட்டாமட்டும் உன் வாய் பசை போட்ட மாதிரி ஒட்டிக்குது.” என்று சலித்துக்கொண்டவன் அவளை நெருங்கி தான் கையோடு எடுத்து வந்து கட்டிலில் கிடத்தியிருந்த பையிலிருந்து மல்லிகைப் பூவை எடுத்து அவள் சிகையில் சூடிவிட்டான்.
“ஐயோ… என்ன பண்றீங்க! நானே வச்சிப்பேன்.” என்ற பதறளைத் தவிர வேறென்ன எதிர்வினை கிடைத்துவிடப் போகிறது வானதியிடமிருந்து… 
அவளை கண்டுகொள்ளாது அவள் சிகையில் சரியாய் பூவை வைப்பதில் மட்டுமே அவன் குறியாய் இருக்க, பெருமூச்சிழுத்தவள், “இப்படியே நான் வெளியில போனா எல்லோரும் என்ன நினைப்பாங்க? இவ்வளவு நேரம் என் தலையில் பூ இல்லை…”
“நான் வாங்கிக் கொடுத்தேன்னு நினைப்பாங்க…” என்றான் அவன் வெகு இயல்பாய். அவளால்தான் அதை எளிதாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
“இல்லை… எனக்கு ஒருமாதிரி இருக்கு… எனக்கு மட்டும் எதுக்கு வாங்கிட்டு வந்து ரூமில் தனியா வச்சிருக்கீங்க? இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கிட்டு வந்து அத்தைகிட்ட கொடுத்திருந்தா அவங்களே மூணு பேருக்கும் பிரிச்சு கொடுத்திருப்பாங்க.” என்றவள் தலையிலேயே வலிக்காமல் ஒரு கொட்டு வைத்து விளையாட்டாய் முறைத்த ராஜன், 
“நீ இப்படி ஏதாவது கிறுக்குத்தனமா சொல்லுவேன்னு தெரிஞ்சுதான் கடையிலிருந்து பழமும் கொஞ்சம் பூவும் தனியா வீட்டுக்கு வாங்கிட்டு வந்து அம்மாகிட்ட கொடுத்தேன்… ஆனா இந்த தச்சன் பய மோப்பம் புடிச்சிட்டான்னு நினைக்குறேன்.”
அவன் கொட்டிய இடத்தை தேய்த்துகொண்டே அவனை முறைத்து நின்றவள், அவன் இறுதியாய் சொன்ன செய்தியில் உதட்டை பிதுக்கினாள்.
“பூ வாசனை காட்டி கொடுத்திருக்கும்…”
“ம்ச்… அதில்லை…” என்று இழுத்தவன் தாடையை தேய்த்தபடி கட்டிலில் வைத்திருந்த பையைப் பார்க்க, வானதியின் பார்வையும் அவன் விழி செல்லும் திசை நோக்கிச் சென்றது.
“அந்த பையில இன்னும் என்ன இருக்கு?” என்று கேட்டபடியே வானதியை அந்த பையை எடுத்து பிரிக்க,
“அதுல ஸ்வீட் இருக்கு. உனக்கு மட்டும்…” என்றான் அவள் பிரிக்கும் முன்னமே…
“என்ன ஸ்வீட்டா? எதுக்கு எனக்கு மட்டும் தனியா வாங்கிட்டு வந்தீங்க?”
“ம்ம்ம்ம்… அதை பிரிச்சு பாரு எதுக்கு உனக்கு மட்டும் வாங்கிட்டு வந்தேன்னு உனக்கே புரியும்…” என்று புதிராய் பேசுவதாய் நினைத்துக்கொண்டு அவள் என்ன சொல்லுவாள் என்று ஆவலுடன் அவளையே பார்த்து நிற்க, பையை பிரித்துப் பார்த்த வானதி, நமட்டுச் சிரிப்புடன் அந்த பையை மீண்டும் கீழே வைத்துவிட்டாள்.
“ஏய் என்ன சிரிக்கிற?” 
“எல்லாத்தையும் தெளிவா பேசுறவரு இப்படி ஒரு பழைய ஐடியாவை தூக்கிட்டு வந்திருக்கீங்களே.” என்றவள் மீண்டும் இதழ்களை அகல விரித்தாள்.
“அடிங்க… பழைய ஐடியாவா இருந்தாலும் இதுக்கு கிடைக்கிற பலனே தனிதான்…”
“என்ன பலன்?”
“ம்ம்ம்… இதுதான்.” என்றவன் தங்களின் இடையில் இருந்த இடைவெளி குறைந்திருந்ததை சுட்டிக்காட்ட, விழி விரித்தாள் வானதி.
பேச்சு சுவாரஸ்யத்தில் தன்னை நெருங்கி மூச்சுக்காற்று மேலே படுமளவுக்கு ஒட்டி நிற்பவனை கவனித்திருக்கவில்லையா இல்லை அவனது நெருக்கம் பழகிய ஒன்றாக மாறிப்போனதோ என்னவோ அதை யோசிக்கவெல்லாம் அந்நேரம் தோன்றவில்லை அவளுக்கு.
“பிடிக்கலைன்னா தாராளமா என்னை தள்ளி விடலாம்…” நுனிவிரல் கூட அவளை தீண்டாவிடினும் அவனது மூச்சுக்காற்றும் அதனுடன் இணைந்திருக்கும் நெருக்கமும் அவனது பேச்சுக்களும் அவளின் புலன்களை விழிக்கச் செய்திருந்தன… 
“நேரடியா உன்னால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தெரியும் வானதி. அதனால விருப்பமில்லைன்னா இப்போவே தள்ளி விட்டுரு… நான் புரிஞ்சிப்பேன்.”
உள்ளம் உள்ளே இல்லாமல் வெளியே வந்து விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டு வியர்வைத் துளிகளை முன்னே அனுப்ப, அவனை நிமிர்ந்துப் பார்த்த வானதி இமைகள் படபடக்க,
“தள்ளி விடலைன்னா?” என்ற அவளது வினாவிற்கு பதிலாய் அவள் கரத்தை எடுத்து தன்னுள் புதைத்துக் கொண்ட ராஜன், “நீயும் நானும் இனி தனித்தனி கிடையாது… எல்லாத்துலயும்… பசங்களுக்கு ஒரு நிறைவான பெத்தவங்களா பேதங்கள் இல்லாம… ஒண்ணா அவங்களை வளர்த்து வாழ்வோம்…”
அவனது வார்த்தைகளுக்குள் பொதிந்திருந்த மெய்யில் உணர்ச்சிகள் மேலெழும்பி அவளது செவ்விதழ்கள் துடிக்க, நெஞ்சத்தில் எழுந்த பூரிப்பை மறையாது வெளிப்படுத்தியவள், பட்டும்படாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து நடுங்கும் விரல்களைக் கொண்டு அவன் சட்டையை இறுக பற்றி, இமைகளை கவிழ்த்துக்கொண்டாள்.
தன்மேல் பட்டும்படாமல் சாய்ந்து நின்றவளை குனிந்து பார்த்த ராஜன், அவளுச்சியில் இதழ் ஒற்றி எடுக்க, கரங்கள் தன்னாலே அரணாய் அவளைச் சுற்றி வாரியணைத்துக் கொண்டது. 
அவள் ஏங்கிக்கொண்டிருந்த பாதுகாப்பு அவனது வார்த்தைகள் மூலம் அவ்வப்போது கிடைத்தாலும், அக்கணம் அரணாக இருந்த அவனது கரங்கள் அனைத்தையும் நிறைவானதாய் உணரச் செய்ய, அணைப்பிலிருந்து தலையை மட்டும் உயர்த்திய வானதி, 
“உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரவா?” என்று வினா எழுப்ப, அவளை விடுவித்தவன், “வேண்டாம்… பசங்க கூட கொஞ்சம் நேரம் விளையாடிட்டு நானே அவங்களுக்கு சாப்பாடு ஊட்டிட்டு வரேன்… தச்சன் பண்ண கூத்தில் பசங்களை சரியா பார்க்கக்கூட இல்லை, அப்படியே ரூமுக்குள்ள வந்துட்டேன்.”
“குந்தவையை சாப்பாடு ஊட்ட சொல்லியிருக்கேன்… நீங்க களைப்பா இருப்பீங்க, ரெஸ்ட் எடுங்க…” 
“ம்கூம்… நாம எப்போ வேணும்னாலும் ரெஸ்ட் எடுத்துக்கலாம் வானதி, ஆனா குழந்தைங்க நம்மோட சவுகரியத்துக்கு ஏற்ப வளரமாட்டாங்க, சீக்கிரம் வளர்ந்துடுவாங்க. அவங்களோட இப்போ நேரம் செலவழிகிறது ரொம்ப அவசியம்… நான் குந்தவையை அனுப்பிவிடுறேன்… நீங்க வேலை இருந்தா பாருங்க.” தினம் தவறாமல் சொல்லும் அதே வாக்கியத்தை சொல்லிவிட்டு வெளியேறுபவனை மனநிறைவுடன் பார்த்தாள் வானதி. இதுவரை அவள் எடுத்த முடிவுகளிலேயே என்றுமே பிழையாகிப்போகாதது ஒன்று உண்டென்றால் அது இந்த ராஜராஜன் தான்…
பிள்ளைகளை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்த ராஜராஜனை குதூகலத்துடன் முதலில் வரவேற்றது முகம் முழுக்க சோற்றை அப்பிக்கொண்டிருந்த அறிவழகன் தான்.

Advertisement