Advertisement

“டேய்… என்ன கொழுப்பா… என் அப்பா வச்ச பேருல குறை கண்டுபிடிக்காத.”
“ஆனா அந்த அப்பா பெத்த பொண்ணு குறை கண்டுபிடிக்கிறதையே வேலையா செய்யுதே.” 
“டேய் அடங்கு… முக்கியமான விஷயமா போகும்போது என்னை கடுப்பேத்தி சண்டை போட வைக்காத. நேரமாகிட்டு இருக்கு.” என்று அவள் அதட்ட, பாடலை முணுமுணுத்தபடியே தச்சன் வண்டியை கிளப்பினான். 
கணநாழிகை அமைதிக்கு பின் தொண்டையை செருமிய குந்தவை பட்டும்படாமல், “ஆனாலும் நீயும் கொஞ்சோண்டு நல்லவனா இருக்க. சண்டை போட்டாலும் சொல்பேச்சு கேட்டுக்குற. என்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காம நடந்துக்கிற. அதோட இந்த பதவியெல்லாம் உன்னோட யோசனை, அதுதான் போனால் போகுதுன்னு உன்னோட பேரை சேர்த்து போட்டுக்குறேன். ஆனா…” 
“முழுசா சொல்லி முடிடி… ஏன் நடுப்புற கேப் விட்டு இழுக்குற?”
“இடக்கா நீ எதையாவது செஞ்சாகூட அது ரசிக்கும்படியா இருக்கும்… உன்னை பிடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்க.”
“அட, அதுதான் பக்கத்து தெரு கனகாவுக்கு கூட என்னை பிடிச்சுது போல… அமைதியான பொண்ணா இருந்தாலும் அதுவும் எவ்வளவோ சிக்னல் கொடுத்துச்சு, ஆனா பாரு எனக்கு அதை பிடிக்கலை. இப்போ உன்கிட்ட மாட்டிட்டு முழிக்குறேன்.” என்றான் துடுக்காய். 
வழக்கம் போல அவனது துடுக்குத்தனம் அவளது உஷ்ணத்தை கிளப்ப, அவன் தலையிலேயே லேசாய் தட்டினாள் அவள், “கொஞ்சம் புகழ்ந்தா போதுமே உடனே ஆரம்பிச்சிட வேண்டியது. உன்னை திருத்தவே முடியாது. உன்கிட்ட இதையெல்லாம் சொன்னேன் பாரு…” 
“சரி சரி ஆரம்பிக்காத, நீ இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு.”
இறங்க வேண்டிய இடம் வந்ததும் குந்தவை இறங்கிக்கொள்ள, சற்று தள்ளி நின்றிருந்த குணாவின் அக்கா வேகமாய் இவர்களை நோக்கி வந்து குந்தவையிடம் வரவேற்பாய் ஒரு புன்னகையை வீசிவிட்டு தச்சனை பிடித்துக்கொண்டார்.
“டேய் விளையாடுத்தனமா முடிவெடுத்து இந்த புள்ளையை மாட்டி விட்டுறாதடா. இவளே நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்குற பொண்ணு, இங்கன யாரும் அவ்வளவு பழக்கம் இருக்காது… நம்ம மக்களுக்கும் இவளை தெரியாது. அப்புறம் எப்படி இவளுக்கு ஓட்டு விழும். ஒரு ரெண்டு மூணு வருஷம் போகட்டுமே எதுக்கு இப்போ இதெல்லாம்?”
“ப்ச்… உன் தம்பி சொல்லிக்கொடுத்ததை அச்சுபிசகாம ஒப்பிச்சி முடிச்சிட்டீயா? அவன்கிட்ட இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டேன், இப்போ நீ ஆரம்பிக்காத… குந்தவை இங்க வந்து கிட்டத்தட்ட ஆறு மாசமாச்சு, இன்னும் என்ன புதுபொண்ணுன்னு ரீல் சுத்திட்டு இருக்க. குந்தவைக்குத்தான் இங்கன இருக்கிற நிறையா பேரை தெரியாது. நம்ம சனத்துக்கு இவளை தெரியும், யார் வீட்டு மருமகளுன்னும் தெரியும்.” என்றான் தச்சன் அழுத்தமாய். 
குந்தவையை தேர்தலில் முன்னிறுத்தும் யோசனை இருக்கிறது என்று அவன் பகிர்ந்ததுமே அவனுக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் ஒற்றுமையாய் செய்த ஒரே காரியம் அந்த முடிவை எதிர்த்ததுதான், குந்தவை உட்பட… 
“எல்லாத்துக்கும் பதில் தயாரா வச்சிருப்பாரு… நீங்க தேவையில்லாம அவர்கிட்ட வாய்கொடுத்து உங்க எனர்ஜியை வீணடிக்காதீங்க அக்கா.” என்றாள் குந்தவை உட்புகுந்து. அதை மறுத்த குணாவின் தமக்கை,
“அதுக்கில்லை குந்தவை… இதுல அனுபவமும் மக்களை வளைக்கிற உக்தியும் தெரிஞ்சவங்கதான் வெற்றியடைய முடியும். கூடவே காசை வாரியிறைக்கணும். அதெல்லாம் நம்மாள முடியுமா? கூழோ கஞ்சியோ குடிச்சாலும் கெளரவமா வாழ பழகினவங்க நாம… நம்மால அடிமட்டம் வரைக்கும் இறங்கி வேலை செய்ய முடியுமான்னு யோசிக்கணும்ல… களநிலவரம் தெரிஞ்சே போய் சேத்துல விழறது புத்திசாலித்தனம் இல்லையே.”
“ந்தா… பக்கம் பக்கமா வியாக்யானம் பேசுறவகிட்டேயே இந்த பாடம் எடுக்கிற வேலையை காண்பிக்காம வந்தவேலையை பார்த்துட்டு கிளம்பு ஊருக்கு.” தச்சன் தன்னியல்பில் பேசிட, குந்தவைக்கு அவன் பேசிய தொனி பிடிக்கவில்லை. எடுத்தோம் கவிழ்த்தோமென குடும்பத்திற்குள் பேசுவது வேறு. அதுவே மற்றவர்களிடமும் அப்படியே பேசினால் எப்படி… என்ற கடுப்பில் அவனை முறைத்துவைத்தாள் குந்தவை.
“நீங்க வாங்கக்கா… அவர் உளறிட்டு இருப்பாரு. களத்துல இறங்குறதுன்னு முடிவு பண்ணிட்டோம், என்னதான் முடிவு கிடைக்குதுன்னு பார்த்திடுவோம். முன்வச்ச காலை பின்னெடுக்க வேண்டாம்.” என்று குந்தவை தச்சனின் பேச்சை சமாளிக்க, மெலிதாய் சிரித்த குணாவின் உடன்பிறந்தவளோ,
“அவனை நீ விட்டுக்கொடுக்கிறதா இல்லை… எடுத்த முடிவில் துவண்டு போகாம தெளிவா நில்லுங்க. எடுத்தவுடனேயே வெற்றிக்கனி கைக்கு கிடைச்சிடாது.” 
“நீ இதுகூட சேராத குந்தவை… ஆரம்பத்துலேயே எதிர்மறையா பேசுது.” என்றான் தச்சன் கடுப்பாய். குணாவின் தமக்கையும் அவனை கடுப்படன்தான் பார்த்து நின்றார், “டேய்… இதே கொழுப்பை ஊருக்குள்ள காமிச்சிகிட்டு சுத்துனா ஒரு ஓட்டு கூட விழாதுடா…”
“ஷ்… நான் எல்லாத்துக்கும் தயாரா இருக்கேன். என்னை வச்சு நீங்க சண்டை போடாதீங்க…” என்று குந்தவை சமாதனம் பேசி அங்கு சூழ்ந்திருந்த இறுக்கத்தை கலைத்துவிட்டு, வேட்புமனு தாக்கல் செய்ய கிளம்பிட, குணாவின் தமக்கை சொன்னது போல அந்த தேர்தலில் வெற்றியடைவது அத்தனை சுலபமானதாகவோ எட்டும் கனியாகவோ இல்லை…
***
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாமா? அந்த ஜெராக்ஸ் கொண்டுவா இந்த இடத்துல கையெழுத்து வாங்கிட்டு வான்னு திருப்பி அனுப்பிடலையே? ஏன் கேக்குறேன்னா பின்புலம் இல்லாதவங்க பதவிக்கு புதுசா வர முயற்சி பண்ணா எதையாவது சொல்லி முட்டுக்கட்டை போட்டு நம்மளை அலையவிடனும்னே சில பேரு சுத்திட்டு இருப்பானுங்க. அப்படி எதுவும் பிரச்சனை வந்துடலையே?” 
காலையே தாக்கல் செய்யவேண்டியது எல்லாம் சரியாய் முடிந்ததா என்று அலைபேசியில் கேட்ட பின்தான் வேலையில் கவனம் செலுத்தினார். இருப்பினும் இரவு வீடு வந்தபின்னும் மற்றொருமுறை விசாரித்து விடுவோமென்று அன்பரசன் ஓய்வாய் அமர்ந்து குந்தவையை அழைத்துக் கேட்க, தச்சனும் புருவம் உயர்த்திவிட்டு குழந்தைகளுடன் குழந்தையாய் அமர்ந்துவிட்டான். 
“பிரச்சனைன்னு சொல்ல முடியாது, ஆனா என் பேருக்கு பின்னாடி இருக்குற அவரோட பெயரையும் என் சான்றிதழில் இருக்குற பெயரையும் ஒத்துப்பார்த்து மிஸ்மேட்ச்சுன்னு திருப்பி அனுப்ப பார்த்தாங்க மாமா. நாம எல்லா பேப்பரும் சரியா வச்சிருந்ததால அவங்களால நம்ம மனுவை ஏத்துக்காம இருக்க முடியலை.”
குந்தவையிடமிருந்து எதிர்பார்த்து யூகித்திருந்த பதிலே கிடைத்துவிட, சலிப்புடன் நிமிர்ந்தமர்ந்த அன்பரசன், “இதெல்லாம் இவனுங்க காலகாலமா செய்யுறதுதான். அந்த பதவியை குத்தகைக்கு எடுத்த மாதிரி ரெண்டு மூணு குடும்பம் மட்டுமே எப்போதும் போட்டியில் நிப்பாங்க. மத்தவங்களை டம்மி ஆக்கிடுவாங்க இல்லைன்னா மலிவான காரணத்தை வச்சிக்கிட்டு முடக்கப் பார்ப்பாங்க. ஆண்டாலும் அந்த மூணு குடும்பத்தில் உள்ளவங்கதான் ஆளனும்னு நினைக்கிறவனுங்க. நமக்கு போட்டி கடினமாத்தான் இருக்கும்.”
அமைதியாய் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த நீலாவின் பார்வை பயந்து விழிக்கும் வானதியிடம் நிலைத்திருக்க, வார்த்தைகள் கணவரை நோக்கி வந்தது, “குந்தவைக்கு சூழ்நிலையை விளக்குறேன்னு நினைச்சிக்கிட்டு வானதியை பயமுறுத்திட்டு இருக்கீங்க.” 
“பயப்படணும்னு சொல்லலை, இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்குன்னு எதார்த்தத்தை சொல்றேன். எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்ல. அச்சத்தை குறைக்கப் பாரு வானதி, முடிக்கணும்னு நினைச்சி ஒரு விஷயத்தில் இறங்கினா அதுக்கு ஆயிரம் தடை வரும். எதிர்நீச்சல் போட்டுதான் மேல வரணும்.”
“இல்லங்க மாமா… இது சின்ன விஷயமில்லையே. ஏதோ ஆபீசில் வேலைப் பார்க்கிறவங்க கூட சண்டைன்னா சமாளிச்சிடலாம். ஆனா இது பெரிய பெரிய ஆளுங்க புழங்குற இடம், குந்தவையும் பட்டுபட்டுன்னு பேசிடவா… ஏதாவது செஞ்சுடுவா… நீங்களே கூட ஆரம்பத்தில் இது வேண்டாம்னு தானே சொன்னீங்க…” என்று வானதி இழுக்க, 
அவளை அடக்கினாள் குந்தவை, “ம்ச்… சும்மா இரு வானதி. பார்த்துக்கலாம்… நீயும் பயந்து எல்லாரையும் குழப்பாத…”
வானதிக்கு ஆறுதலாய் நாலு வார்த்தை பேசுவோம் என்று வாயைத் திறந்த அன்பரசனை முந்திக்கொண்டு, “உன்னை நினைச்சு ஏற்கனவே பயந்திருக்கிறவங்களை அடக்காதடி… உங்க சந்தேகத்தை போக்குற அளவுக்கு இங்க யாருக்கும் அவ்வளவு விவரம் போதாது. கொஞ்சம் காத்திருங்க, உங்காளு வந்து எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வைப்பான்.”  என்று சந்தர்ப்பம் கிடைத்ததும் இடைபுகுந்த தச்சன் மனைவியை அதட்டிவிட்டு, வானதியிடம் ஆறுதலாய் பேசிட, தெளியாத பார்வையுடன் மண்டையை ஆட்டினாள் வானதி. 
அவள் மண்டையை ஆட்டியதும் தச்சனின் கவனம் என்னவோ குந்தவையை வம்பிழுப்பதில் சென்றுவிட்டது.
“பாரு உன்கூட பிறந்தாலும் எப்படி நிதானமா சாந்தமா சொல்பேச்சை கேட்டுட்டு இருக்காங்கன்னு… நீயும் கொஞ்சம் அவங்ககிட்ட அடக்கவொடுக்கமா எப்படி இருக்குறதுன்னு கத்துக்க குந்தவை…”
“நீயும் பொறுப்பா எப்படி இருக்குறதுன்னு அத்தான்கிட்ட கத்துங்க சார்.”
“நான் பொறுப்பா யோசிச்சதுனாலத்தான் நீங்க தலைவி ஆகப்போறீங்க மேடம்.”
“நீ யோசிச்சதால மட்டுமில்லை, எனக்கும் தோணுச்சு அதுதான் நானும் இதுக்கு சம்மதிச்சேன்.”
“ஷப்பா! திரும்பவுமா? நீங்க ரெண்டு பேரும் முதல்ல எப்படி சண்டை போடாம இருக்குறதுன்னு அப்பா அம்மாவை பார்த்து கத்துக்கோங்க, அப்புறம் எங்களை பார்த்து கத்துக்கலாம்.” என்று அங்கலாய்த்தபடியே ராஜராஜன் உள்ளே நுழைய, குந்தவை சங்கடத்துடன் முறுவலித்தாள்.
“இதோ வந்துட்டான்ல நாட்டாமை…” என்ற தச்சன் கழுத்தை உயர்த்தி ராஜன் கையிலிருக்கும் பையில் என்ன இருக்கிறது என்று பார்க்க, சட்டென அந்த பையை மறுகரத்திற்கு மாற்றிக்கொண்டான் ராஜராஜன்.
ராஜனின் செயலை கவனித்த தச்சன் ஆர்வத்தில் எழுந்தே விட்டான், “டேய் மறைக்கிற அளவுக்கு அப்படி என்ன வாங்கிட்டு வந்திருக்க?”
“ஷப்பா… வந்ததும் கைகால் கூட கழுவல, அதுக்குள்ள விசாரணை ஆரம்பிக்கிற? போய் உன் வயசுக்கு ஏத்தமாதிரி குழந்தைங்க கூட விளையாடு… அவங்க சாப்பிடுற நேரமாச்சு தானே… வானதி சாப்பாடு ரெடி பண்ணி தச்சன்கிட்ட கொடு, அவன் ஊட்டிவிட்டுருவான்…” தச்சனின் பார்வையிலிருந்து தப்பிக்கவென அவசரகதியில் மனைவியிடம் கண் ஜாடை காட்டியவன், கையிலிருந்த பெரிய பையிலிருந்து ஒரு சிறு பையை எடுத்து நீலாவிடம் கொடுத்துவிட்டு மற்றொரு பையை கையோடு அறைக்கு எடுத்துச் சென்றுவிட்டான்.
செல்லும் அவனையே விஷமமாய் பார்த்து சிரித்த தச்சன், நீலாவிடம் அவன் கொடுத்துவிட்டுச் சென்ற பையை பிரித்து பார்த்துவிட்டு, “கடையிலிருந்து பழமும் பூவும் எடுத்துட்டு வந்திருக்கான்,” என்ற வார்த்தையோடு நமட்டு சிரிப்பை உதிர்த்தான்.
“டேய் தச்சா அண்ணன் சொன்ன மாதிரி போய் பிள்ளைங்களோட விளையாடுற வழியப் பாரு… இவன் பேச ஆரம்பிச்சாலே நம்ம முக்கியமா பேசிட்டு இருக்கிற விஷயம் மறந்து போயிடும்…” இளைய மகனை அலுத்துக்கொண்ட அன்பரசன் தன் சட்டை பையிலிருந்து சிறிய காகிதத்தை எடுத்து குந்தவையிடம் நீட்டினார்.
“குந்தவை நான் முக்கியமா இந்த ஊருக்கு செய்ய வேண்டிய சில விஷயங்களை சின்ன குறிப்பா எழுதி வச்சிருக்கேன். நீ அதையெல்லாம் பாரு, உனக்கும் என்னென்ன செய்யலாம்னு யோசனை கிடைக்கும், புரிதல் வரும்.”
“நீங்க வாங்க செல்லம்… நாம கன்னுக்குட்டி பார்க்கப் போவோம். இவிங்க தீவிரமா ஆலோசனை பண்ணி சூரியனுக்கு ராக்கெட் விடப்போறாங்க…” வழக்கம்போல தச்சன் தன்னியல்பில் இடக்காய் பேசி, குழந்தைகளை இருகரத்திலும் ஏந்திக்கொண்டு வெளியேறிவிட்டான்.
அவனின் ரகளையில் பெருமூச்சை வெளியேற்றி கருமணிகளை சுழற்றிய குந்தவை அன்பரசன் கொடுத்த குறிப்புகளை மேலோட்டமாய் படித்துப் பார்த்தாள்.

Advertisement