Advertisement

*25*
ந. குந்தவை பெருந்தச்சன்.
தன் பெயரை இதுவரை எவர் முன்னும் பெருமையாய் உச்சரித்திருப்பானோ இல்லையோ வசைபாடாத நாளில்லை. ஆனால் இன்றோ அவள் பெயருடன் இணைந்திருக்கும் தன் பெயரை மீண்டும் மீண்டும் மனதிற்குள் உச்சரித்துப் பார்த்து குதூகலித்துக் கொண்டான்.
“என் பேருக்கே இப்போதான் பெருமை வந்திருக்கு.” அருகில் கைகூப்பி நின்றிருந்த மனைவியின் செவியில் எத்தனையாவது முறை சிலாகித்துக் கூறினானோ… ஒவ்வொரு முறையும் மனைவி சலிப்பாய் பார்த்து வைத்தாள்.
“எத்தனை தடவை சொல்லுவ? கேட்டு கேட்டு காது வலிக்குதுடா…” என்று குந்தவை கிசுகிசுப்பாய் தச்சனுக்கு பதில் கூற, எதிரே இருந்த நீலா அவர்களைக் கண்டிப்பாய் பார்த்தார்.
“குந்தவை அமைதியா இருடி.” அருகில் இருந்த வானதியும் தங்கையை கண்டிக்க, அக்காவையும் முறைத்தவள் கண்களை மூடி தந்தையிடம் மானசீகமாய் தான் எடுத்திருக்கும் புது முடிவை தெரிவித்து வாழ்த்து வேண்டி நிற்க, நீலா மணியடித்து தீபாராதனை செய்து வணங்கிவிட்டு விளக்கிற்கு அருகே இருந்த படிவத்தை எடுத்து கண்களில் ஒத்தியபின் குந்தவையிடம் நீட்டினார்.
முகம் மலர அதை ஏற்றுக்கொண்டவள் அன்பரசனிடமும் நீலாவிடமும் காலில் விழுந்து ஆசி வாங்க,
“என்னடி ஒத்தையா வாங்குற?” என்ற அலப்பரையோடு அவளுடன் சேர்ந்து இருவர் காலிலும் விழுந்து எழுந்தான் தச்சன்.
“உன்னை நம்பிதான் இதுக்கு ஒத்துக்குறோம் தச்சா… இதனால் குந்தவைக்கோ குடும்பத்துக்கோ தனிப்பட்ட பிரச்சனை எதுவும் வரக்கூடாது. அது உன்னோட பொறுப்பு…” என்று கண்டிப்பில் அழுத்தம் கொடுத்த அன்பரசன் மீண்டுமொருமுறை குந்தவையிடமிருந்த படிவத்தை வாங்கி சரி பார்த்தார். 
“அதெல்லாம் ஒன்னும் வராதுப்பா…” என்றான் ராஜன் ஆதரவாய்.
மறுப்பாய் தலையசைத்த அன்பரசன், “உங்கம்மாவ சமாளிக்குற மாதிரி என்னை சமாளிக்க பார்க்காத ராஜா. இதுல எந்த மாதிரி தொந்தரவுகள் வரும்னு எனக்கு நல்லா தெரியும். அதுவும் குந்தவை மாதிரி நேர்மையா தைரியமா நல்லது செய்யணும்னு எதிர்த்து நிக்குற பொண்ணுக்கு கண்டிப்பா தொந்தரவு வரும்.”
“என்ன மாமா இப்படி சொல்றீங்க? இவங்க பிரச்சனை எதுவும் இருக்காதுன்னு சொன்னாங்க… குந்தவை யோசிச்சு செய்யலாம்டி.” என்று ராஜனைக் கைகாட்டி பதறினாள் வானதி.
“ம்ச்… வானதி… குந்தவைக்கு ஒன்னுன்னா நாங்க அப்படியே விட்டிருவோமா. நீ சும்மா பதறாத.” வார்த்தைகளால் மட்டுமின்றி கண்களை சிமிட்டியும் ராஜன் தன் மனைவிக்கு தைரியம் சொல்ல, அவள் தெளியாத பார்வையையே வீசினாள் அவன்புறம்.
“நீங்க ஏன் இவ்வளவு பயப்படுறீங்க? உங்க தங்கச்சியை பார்த்துதான் எல்லோரும் பயந்து ஓடனும்.” என்று சூழலை சுமூகமாக்கும் விதமாய் தச்சன் சொல்ல, அவன் கையிலே பட்டென அடிபோட்டாள் குந்தவை.
அவள் அடித்தது வலிக்கவில்லை என்றாலும் போலியாய் முகத்தை சுருக்கி கையை தேய்த்துக்கொண்ட தச்சன் வானதியிடம், “சேம்ப்பில் காட்டுறா பாருங்க. இவதான் எல்லோருக்கும் தொல்லையா இருப்பா, அப்புறம் எங்க அவங்க இவளுக்கு தொல்லை கொடுக்கிறது?” என்ற தச்சனின் இலகளில் கூட அமைதியடைவில்லை வானதி. மாறாய் அவளின் தங்கையோ, ‘இவள் உங்கள்பாடு.’ என்ற பார்வையோடு ராஜனை பார்த்து நின்றாள். 
அர்த்தம் புரிந்தவனாய் ராஜன் தலையசைக்க, குந்தவையிடம் நிம்மதி மூச்சுக்கள். அவள் நினைத்ததை விடவே ராஜனின் பொறுமை அந்த இமையமலை உச்சியை நெருங்கி வானதியை எளிதாய் கையாண்டது. அவன் பேசினால் ஒழிய வானதி எந்த விஷயத்திலும் தெளிவடைவதில்லை என்ற நிதர்சனம் அங்கிருந்த அனைவருக்குமே அத்துப்படியாய் இருந்தது… அத்துபடியாய் இல்லாமல் போகுமா என்ன…. இரண்டு மாதங்களாகவே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
“நல்ல நேரத்திலேயே போயிட்டு வந்துருங்க… பத்திரம் குந்தவை.” என்று நீலாவும் தன் பங்கிற்கு விளிக்க,
“கிழவிகிட்ட விழுந்து கும்படலைடி…” என்று மனைவி கையை பிடித்த தச்சன் மங்களம் காலிலும் விழ, அவ்வளவு நேரம் சுரத்தை இன்றி ஓய்ந்திருந்த மங்களத்தின் முகம் பளிச்சென்று மின்னியது.
“எப்போதும் ஒத்துமையா இருந்து சாதிக்கணும்.” என்று மனதார வாழ்த்திய மங்களம் விபுதி குங்குமம் வைத்துவிட, ஆரவாரத்துடன் பைக்கில் கிளம்பினர் வேட்புமனுவை தாக்கல் செய்ய… 
ஆம், வேட்புமனு தாக்கல்! 
ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடதான் இத்தனையும். 
பதவியோ பணமோ இவ்விரண்டில் ஏதோவொன்றில் பலம் இருந்தால்தான் நியாயமான கோரிக்கையை கூட நிறைவேற்றிக்கொண்டு சாதிக்க முடியும் என்ற எண்ணம் முதல் அறுவடை பார்த்தவுடனேயே தச்சனுக்கு புரிந்துவிட, அவனின் எண்ணம் தான் இப்போது முடிவாய் வந்து நிற்கிறது. எப்போதும் குந்தவை சொல்வதை சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருந்த தச்சன், இம்முறை தன் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படும்படி பேசி கரைத்து வைத்திருந்தான்.
“எல்லோரையும் சரிகட்டிட்ட… இப்போ வேட்புமனுகூட தாக்கல் பண்ணப்போறோம். அடுத்து என்ன? வீடுவீடா போய் ஓட்டு கேட்கணுமா? இப்போவே சொல்லிடுறேன், எல்லார் வீட்டு வாசலையும் போய் நின்னு ஓட்டு பிச்சை போடுங்கன்னு என்னால கேட்க முடியாது… இதுனால நாம தோற்கிற நிலைமை வந்தாலும் என்னை கைகாட்ட கூடாது.” பைக்கில் தச்சனின் தோள்பற்றி அமர்ந்திருந்த குந்தவை முகத்தில் தீவிரம் குடுகொண்டிருக்க, எண்ணிலடங்கா முறையாய் தன் முடிவை அவன்முன் வைத்தாள்.
“இதைக் கேட்டு கேட்டு என் காதும் புளிச்சுபோய் கிடக்குடி. உன்னை ஜெயிக்க வைக்கவேண்டியது என் பொறுப்பு. நீ யார் காலுலையும் விழ வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.”
“நீ விழுந்தாலும் எனக்கு பிடிக்காது. நீ விழவும் கூடாது. நாம இந்த பதவிக்கு வந்தா அடுத்த அஞ்சு வருஷத்தில் என்னென உதவி செய்வோம்னு சொல்லுவோம். நம்ம மேல நம்பிக்கை இருந்தா நம்மளை ஜெயிக்க வைக்கட்டும். இல்லையா இதோட இதை விட்டுறணும் நீ… அடுத்த முறையும் தேர்தலில் நிற்கச் சொல்லி என்னை வற்புறுத்தக்கூடாது.” என்ற கறாராய் கோரிக்கை வைத்தாள் குந்தவை.
“அவனவன் கொலை கொள்ளை கந்துவட்டின்னு ஊருல இருக்குற அத்தனை அநியாயத்தையும் பண்ணிட்டு தலைவர் பதவிக்கு போட்டி போடுறானுங்க. உண்மையான அக்கறையோட ஏதாவது உபயோகரமா நல்லது செய்வோம்னு நினைக்குற நாம போட்டி போடக்கூடாதா? இங்கபாரு குந்தவை, இதுல நீ நிக்கனும்னு நான் சொன்னதுக்கு மூலக்காரணம் வேணும்னா சுயநலமா நம்ம நெல்லை கொள்முதல் நிலையில் கொள்முதல் பண்ணும்போது வர்ற தடங்கலை சரிசெய்யவும் விவசாயத்திற்கு இயந்திரம் வாங்குவதில் இருக்கும் சிக்கலை தீர்த்து செயற்கையாக வாடகை, விலைவாசி ஏற்றத்தை தவிர்க்கிறதுக்காக இருக்கலாம். ஆனா நாம ஒன்னும் ஊர் விளைநிலங்களுக்காக அரசு கொடுக்கும் மானியத்தையோ, நம்ம ஊருக்குன்னு வசதி வாய்ப்பு ஏற்படுத்த ஒதுக்குற நிதியையோ அபகரிக்க போறதில்லை. நமக்கான பாதையை ஒழுங்குபடுத்திட்டு ஊர் மக்களுக்கும் அவங்களுக்கு நியாயமா சேர வேண்டியதை வாங்கிக் கொடுக்கப் போறோம். பொதுநலத்தில் கொஞ்சோண்டு சுயநலம் கலந்திருந்தா தப்பில்லை.
இந்த ஊருக்கான ஊராட்சி தலைவர் பதவி பெண்களுக்குனு பிரத்யேகமா ஒதுக்கி இருக்குறது. சோ இதுவே நமக்கு சாதகமான விஷயம்தான். இதுவரை பெண்களை போட்டியில் நிறுத்தி ஜெயிச்ச பிறகு அவங்க புருஷன் வந்து நாட்டாமை பண்ணுவானுங்க. நாம அதை செய்ய மாட்டோம், இது முழுக்க முழுக்க என்னோட தலையீடு இல்லாத உன்னோட பதவி வேலைன்னு எல்லோருக்கும் புரிய வச்சாலே போதும், தானா ஓட்டு விழும்! 
நம்ம தெரு தாண்டி மெயின் ரோட்டில் உன்னை இறக்கி விடுறேன். அங்க ஏற்கனவே குணாவோட அம்மா, அக்கா, நம்ம வயலில் வேலை செய்யுற சில அக்காங்க இருப்பாங்க. அவங்க கூட போய் வேட்புமனு தாக்கல் பண்ணிடு. நம்ம குடும்பத்தோட தலையீடு உன்னோட வேலைக்குள் வராது இடையூராவும் இருக்காதுன்னு இப்போவே சூசகமா சொல்ல ஆரம்பிச்சிடணும். ஆட்டோக்கும் சொல்லியிருக்கு, நீ போயிட்டு வந்துரு. நானும் ராஜாவும் மெயின் ரோட்டிலேயே காத்திருப்போம் உனக்காக.” என்றவன் வண்டியின் வேகத்தை குறைத்து மெதுவாய் செல்ல, அவன் தோளை அழுத்திப் பிடித்தவள், 
“என்னை வயலுக்கு வரவிடாம பண்றதுக்கு காரணம் கண்டுபிடுச்சி ப்ளான் பண்ணி என்னை நைசா கழட்டி விட்டுட்ட…” என்று குறை படிக்க,
“அதுதான் கண்டுபிடிச்சிட்டீயே… உனக்கு இதுமாதிரி ஆபிஸ் வேலைதான் செட் ஆகும்.” என்றான் அவனும் சளைக்காது.
“எனக்கு எது செட் ஆகும்னு நீ எப்படி முடிவு பண்ணலாம்?” என்று வேதாளம் திரும்ப மேலேறிய கதையாய் குந்தவை மறுபடி ஆரம்பித்தாள்.
“எனக்குன்னு நீ பார்த்து பார்த்து செய்யும் போது உனக்காக நான் யோசிக்க மாட்டேனாடி… உனக்கு பெருசா ஆர்வமில்லைனாலும் எனக்காக வயலுக்கு வந்து எனக்கு உதவி பண்ணனும்னு நினைச்ச, அதை நான் கொஞ்சம் வேற மாதிரி மாத்தியிருக்கேன். இப்போவும் நீ எனக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவுவ குந்தவை. என்ன இப்போ செய்யுறது நமக்கானதா மட்டும் இருக்காது. ஆனா உனக்கு பேர் வரும், உனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும். அதில் ஐயாக்கு ரொம்ப பெருமை… குந்தவை பெருந்தச்சன். பேரே சூப்பர்ல… நீ இப்படி என் பேரையும் சேர்த்து எழுதுவேன்னு நினைச்ச பார்க்கலைடி…” ஆகாயத்தில் பறக்காத குறையாய் சிலாகித்தவன் வண்டியை நிறுத்தியேவிட, சன்னமாய் சிரித்தவள், “மாமா என்ன நினைச்சு உனக்கு பேர் வச்சா நீ எதை நினைச்சு பெருமைப்பட்டுட்டு இருக்க…”
“நான் இப்போ பெருமைப்படுறதில்  என்ன குறைஞ்சு போச்சு… சொல்லப்போனா மைனசும் மைனசும் ப்ளஸ் மாதிரி உன் பேரும் என் பேரும் சேர்ந்து டூராப்ளஸ் ஆச்சு.”
“அப்பப்போ இப்படி புரியாத மாதிரியே பேச வேண்டியது.” என்று அவன் தோள் தட்டியவள், “வண்டியை எடு.”
வண்டியை எடுக்காமல் உதட்டை சுழித்தவன் எதையோ கண்டுபிடித்தது போன்றதொரு பாவனையில், “ஆனாலும் உன்னோட பேர் கூட அப்படி ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி ஸ்டைலான பெயரெல்லாம் இல்லை. ஏதோ என் பேர் சேர்ந்ததும் கொஞ்சம் வித்தியாசமா  நச்சுன்னு தெரியுது.” 

Advertisement