Advertisement

“எவ்வளவு வேலை இருக்கு… இப்படி கதை பேசிட்டு இருக்கீங்க? அண்ணி உங்களைதான் அத்தை தேடிட்டு இருக்காங்க. நாத்தனார் முறை செய்யணுமாமே… நீங்க போய் பாருங்க.”
விட்டால் போதுமென திவ்யா அறிவழகியை குந்தவையிடம் கொடுத்துவிட்டு நடையை கட்டிவிட அவள் பின்னாலே சென்றான் கதிரவனும்.
“என்னடா பேசி வச்ச அவங்ககிட்ட? அண்ணி எப்படா இங்கிருந்து ஓடலாம்னு தவிச்சிக்கிட்டு நின்னாங்க? அண்ணன் முகமும் சரியில்லை?” தூங்கி வழியும் அக்கா மகளை மடியில் போட்டுக்கொண்டு அப்படியே கீழே அமர்ந்தாள் குந்தவை. அவளை ஒட்டி தச்சனும் அருகிலேயே அமர்ந்துகொள்ள அறிவழகன் கீழிறங்கி ஓடத் தயாராய் இருந்தான். அவனிடம் தன் அலைபேசியை கொடுத்து மடியில் இருந்திக்கொண்டு குந்தவையை சலிப்புடன் ஏறிட்டான்.
“ம்ச்… எங்கடா இன்னும் நம்ம பிரியாணியை காணோம்னு பார்த்தேன். விசாரணை பண்ண மட்டும் கரெக்டா ஆஜராகிடுற… என்னை மட்டும் அப்படி இருக்காத இப்படி இருக்காதேன்னு இந்த வாங்கு வாங்குறீயே வேற யாரவையாது தட்டிக் கேட்குறீயா? நம்ம திவ்யா மாமியாரு நீலாவையும் உசுப்பேத்தி விட்டுட்டு இருக்காங்க… இதையெல்லாம் சரி பண்ண மாட்டேங்குற… திவ்யாவையும் ஏதோ சொல்லி இருப்பாங்க போல. அவள் பேச்சே சரியாயில்லை. பத்து நாள் இங்கேயே இருக்கட்டும்னு சொல்றேன், அவ வீட்டுக்காரர் என்னவோ அப்படி பார்க்குராறு, முறைக்கிறாரு. அவங்க அம்மாக்கு இதில் உடன்பாடு இல்லைங்குறத்துக்காக அண்ணன் கல்யாணத்தில் திவ்யா அனுசரிச்சு போகணுமா? இதுதான் நம்ம வீட்டில் கடைசி கல்யாணம்… அவள் ஜாலியா இருந்து சீராடிட்டு போகட்டுமே.” அவளது கேள்விக்கு வரிசையாய் கேள்விகளிலேயே பதிலைப் புகுத்தி அவளின் எரிச்சலை இன்னுமே அதிகப்படுத்தினான் தச்சன்.
“எல்லோரும் இருக்காங்கன்னு பார்க்குறேன். என்னை கடுப்பேத்தாம இரு…” என்று பில்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்பியவள் பார்வையை திருப்பிக்கொண்டு நீண்ட மூச்சுக்களை வெளியேற்றி தன்னை சமன் செய்ய முயற்சிக்க, அது அவ்வளவு எளிதாய் இல்லை. பட்டும்படாமல் அவள் காதுக்கு வந்த அத்தனையும் அவனிடத்தில் வடிகாலாய் தஞ்சம் புகுந்தது.
“நான்தான் சாமர்த்தியமா திட்டம் போட்டு உங்க எல்லோரையும் கைக்குள்ள போட்டுகிட்டு என் அக்காவை இந்த வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டேனாம். நீங்களாம் சுதாரிப்பா இல்லாததால எங்களோட சுமையை இங்க ஈசியா தள்ளிட்டேனாம்… குடும்பத்தில் என் கை ஓங்கிடும்னு நீ என் அப்பாக்கு ஈமச்சடங்கு செஞ்சப்பவே அவங்களுக்கு தெரியுமாம். இப்போ அக்காளையும் கூட்டிட்டு வந்துட்டா இனி அக்கா தங்கச்சி ராஜ்ஜியம் தான் நடக்கும். திவ்யா அண்ணிக்கு வீட்டுல மதிப்பு இருக்காது அது இதுன்னு அவங்க பாட்டுக்கு பேசிட்டே போறாங்க. அண்ணியோட மாமியாரா இருக்காங்கன்னு அமைதியா போனா ரொம்ப பேசுறாங்க.” எரிச்சலுடன் வந்து விழுந்த அவளது வார்த்தைகள் அவனுக்கு புதிதாய் இருந்தது.
“இப்படியெல்லாமா பேசுறாங்க? இவ்வளவு நாள் இதுமாதிரி அவங்க நம்ம குடும்பத்தில் மூக்கை நுழைச்சது இல்லையே…”
“அவங்களை பார்த்தா பேசுற ஆள் மாதிரிதான் இருக்கு. இவ்வளவு நாள் இப்படி பேச சந்தர்ப்பம் அமையாம இருந்திருக்கலாம் இல்லைனா உனக்கு தெரியாம இருந்திருக்கும். அண்ணியா இருக்கப்போய் அனுசரிச்சு போறாங்க இல்லைனா ரொம்ப கஷ்டம்… நானா இருந்தா நல்லா கேட்டு விட்டிருப்பேன், அண்ணிக்கு பிரச்சனை வந்துருமேன்னு பார்க்குறேன்… நல்ல வேலை அத்தான் பேச்சை கேட்டுகிட்டு அம்மாவை இங்கேயே தங்க வைக்க ஏற்பாடு பண்ணல. அப்படி நடந்திருந்தா என்னவெல்லாம் பேசுவங்களோ. அம்மா மயிலாடுதுறையில் இருக்கிறதுதான் நல்லது. எங்களுக்கும் அதுதான் மரியாதை.”
அவனிடம் கொட்டிய பிறகும் அவளது ஆதங்கம் தீர்ந்தபாடில்லை. மனதிற்கு தவறென்றுபட்டதை பட்டென கேட்டு பழகியவளுக்கு குடும்பத்தில் நிம்மதியை நிலைநாட்ட அமைதியாய் இருப்பதை தவிர வேறேதும் வழி தெரியவில்லை. சிலநேர மெளனங்களும் அவதூறுகளை துவம்சம் செய்துவிடும் என்ற நம்பிக்கையில் தன்னைத்தானே அடக்கிக்கொண்டு இருந்தாள்.
யார் எப்படி நடந்தாலும், என்ன பிரச்சனை வந்தாலும் தச்சனுக்கு தன் மனையாளை சீண்டாமல் நாள் ஓடிடுமா என்ன! தீவிரமாய் சென்றுகொண்டிருந்த உரையாடல் சட்டென திசை திரும்பியது, “இப்போல்லாம் நீ அநியாயத்துக்கு மாறிட்டடி நீ?” 
“அப்படியா?”
“அநியாயத்தை கண்டா பொங்கி எழுந்தவ இப்போ இப்படி குடும்ப இஸ்திரியா அனுசரிச்சு போறதை பத்தியெல்லாம் பேசுற…” என்று வேண்டுமென்றே அவள் தோளை இடிக்க வேறு செய்ய, அவள் இன்னும் முந்திய பேச்சின் தாக்கத்திலேயே இருந்தாள்.
“என்ன இருந்தாலும் அது அவங்க குடும்பம், நான் போய் தட்டிக்கேக்குறேன்னு அதிகாரம் பண்ணா அண்ணிக்கு கொடைச்சல் கொடுப்பாங்க. இன்னொன்னு இது நேரா என் காதுக்கு வரலை. அவங்க என்கிட்ட நேரடியா கேட்கட்டும் அப்புறம் இருக்கு அவங்களுக்கு. அதோட, இப்போவரை அண்ணன் அண்ணியை நல்லா பார்த்துக்குறாங்க, ஏன் அவங்க மாமியார் கூட இப்போவரை அண்ணிகிட்ட அவ்வளவா பிரச்சனை செஞ்சது இல்லையாம். இந்த கல்யாண பேச்செடுத்ததும் தான் முனகிக்கிட்டு இருக்காங்கனு அண்ணி சொல்லிட்டு இருந்தாங்க. அதுதான் தேவையில்லாம சுமூகமா இருக்குறதை கெடுத்துட வேண்டாம்னு பார்த்தேன்.”
“இதென்ன வம்பா இருக்கு? என் அண்ணனுக்கு உன் அக்காவை பிடிச்சிருக்கு, உன் அக்காக்கும் இதில் விருப்பம்தான். அப்புறம் ஏன் இதுல இவ்வளவு பேச்சு வருதுனு எனக்கு புரியலை. மத்தவங்க இதில் பேச என்ன இருக்கு?”
“என்ன இல்லை? என் அக்காக்கு ரெண்டு குழந்தை இருக்கு, அதுதான் இப்போ எல்லோர் கண்ணையும் உறுத்துது. அண்ணியோட மாமியாருக்கும் அதுதான் உறுத்துது. உங்கம்மாவுக்கும் அதுதான் உறுத்துது.” என்று அவள் அழுத்தமாய் சொல்ல, தச்சனின் முகம் இப்போது தீவிரமாகியது.
“இப்போ ஏன் உன் முகம் மாறுது? உன் அம்மாவை சொன்னதும் உனக்கு கடுப்பாகுது அதேதான் கதிரவன் அண்ணனுக்கும். ரெண்டு மாமியாரும் ஒரே புள்ளியில் தான் இருக்காங்க. அவங்களா சரியாகுறாங்களான்னு பார்ப்போம் இல்லைனா ஒரு பிரியாணியை போட்டுற வேண்டியதுதான்…” சூழ்நிலையை இயல்பாக்கும் பொருட்டு குந்தவை குறும்பாய் சிரிக்க, தச்சனும் தன் நிலைக்கு திரும்பிவிட்டான். அவன் கரமும் தானாய் அவள் தோள் சுற்றி விழுந்தது.
“படத்துல அந்த ஆயா போடுற மாதிரி பாயசம் போடாம இருந்தா சரிதான்.” என்றான் தச்சனும் சலைக்காது.
“இதோ வந்துட்டாரு சினிமா பைத்தியம்… கையை எடு, இது கோவில்… எல்லோரும் இருக்காங்க.” என்று தோளை உதற உடனே கேட்டுக்கொண்டான் தச்சன்.
‛சொன்னதும் கேட்டுட்டானே.’ என்று குந்தவை நினைத்த நேரம் துள்ளிக்குதித்து பிள்ளையோடு எழுந்திருந்தான் தச்சன்.
குந்தவையும் பதறளுடன் பிள்ளையை தூக்கிக்கொண்டு எழ, தச்சன் முகத்தை சுழித்துக் கொண்டு அறிவழகனை கீழிறக்கினான்.
“சட்டையை நனைச்சிட்டான்டி… அவளுக்கு போட்டிருக்கிற மாதிரி டையப்பர் மாட்டிவிட வேண்டியதுதானே!” என்று வேட்டியை உதறியபடி இதழை கோணலாய் வளைத்து மூக்கை மூடிக்கொண்டு நின்றான்.
“டையப்பர் போடலையா? வானதி போட்டுவிட்டேன் தான் சொன்னா?” என்றபடியே எழுந்த குந்தவை அறிவழகியை தோளில் போட்டு தட்டிக்கொடுத்துவிட்டு தன் அன்னையை தேடினாள்.
“நல்லா சொன்னாங்க போடி… வேட்டி நாறுதுடி…” என்று தச்சனின் சிணுங்கல்கள் தொடர்ந்தது.
“பசங்க நம்ம கூடவே இருப்பாங்கன்னு அந்த குதிகுதிச்ச… இப்போ புள்ளை நனைச்சிட்டானு சின்ன புள்ளை மாதிரி சிணுங்குற… கொஞ்சமாவது பொறுப்பா புள்ளையை தூக்கிட்டு போய் டிரெஸ் மாத்தி விடுறீயா?”
“என்னது நானா! அதெல்லாம் முடியாது போடி… நான் அழகியை வச்சிக்குறேன்… எனக்கு டிரெஸ் எடுத்துட்டு வா…” என்று அறிவழகியை அவளிடமிருந்து வாங்க முற்பட, பின்னே நகர்ந்தவள் மறுப்பாய் தலையசைத்தாள்.
“நினைப்புதான்… அவன் அப்பா அப்பான்னு உன் பின்னாடி வரும்போது ஆசையா தூக்கிவச்சிக்க தெரியுதுல்ல, அப்போ இதுவும் செய்யணும், செய்யத் தெரியனும்… ஒழுங்கா இப்போவே எல்லாத்தையும் கத்து வச்சுக்கோ. நாளைக்கு உன் புள்ளைக்கு செய்ய சுலபமா இருக்கும். நானெல்லாம் உன்னை பெண்டு கழட்டிடுவேன். நான் என்ன எல்லாம் செய்றேனோ அது எல்லாத்தையும் நீயும் புள்ளைக்கு செய்யணும்.”
“நானா நான் ஏன் கத்துக்கணும்… அதெல்லாம் நீயே பார்த்துக்க, எனக்கு இதெல்லாம் சரிவராது…” 
பிள்ளையை அப்படியே நிற்க வைத்துவிட்டு இவர்கள் வாக்குவாதத்தில் இறங்க, அறிவழகன் பாவமாய் தச்சனின் வேட்டியை ஒருகையிலும், அவனின் அலைபேசியை மறுகையிலும் பிடித்துக்கொண்டு அதை வாயில் வைத்து சப்பிக் கொண்டிருந்தான்.
“கொஞ்சமாச்சு பொறுப்பு இருக்கா உங்க ரெண்டு பேருக்கும்… இன்னும் பிறக்காத பிள்ளைக்கு சண்டை போட்டுகிட்டு பக்கத்துல நிக்குற புள்ளையை கவனிக்காம இருக்கீங்க. போனெல்லாம் எதுக்கு புள்ளைக்கு கொடுக்கிற?” மகனையும் மருமகளையும் அதட்டியவர் அறிவழகனிடமிருந்து அலைபேசியை பறிக்க, அவன் வீலென்று அழுகையை கூட்டினான்.
“அழக்கூடாதுடா தங்கம்… சமத்து பையன்தானே நீங்க…” என்று செல்லம் கொஞ்சி அழும் அழகனை கையில் ஏந்தி சமாதானம் செய்யும்போதே அவனது உடையில் ஈரத்தை உணர்ந்து அதை களைந்துவிட்டு அவனை தச்சனிடமே கொடுத்தார்.
“ரூம்ல போய் மாத்திட்டு வாங்க…” 
“அதுதான் நீ வந்துட்டீயே… நீயே தூக்கிட்டு போய் போட்டுவிட்டுறு…” என்று தச்சன் மறுக்க, போகிறபோக்கில், “சும்மா அண்ணன் அண்ணன்னு அண்ணன் பின்னாடி சுத்துனா பத்தாது அண்ணன் பிள்ளைக்கு எல்லாம் செஞ்சு விடனும். பசிச்சா சாப்பாடு ஊட்டிவிடு. குந்தவையையும் கூட கூட்டிட்டு போ.” என்று சொல்லிவிட்டு நகர, 
“என்ன உளறிட்டு போகுது நீலா? நான் எப்போ அண்ணன் அண்ணன்னு அவன் பின்னாடி சுத்துனேன், சுத்துற மாதிரியா இருக்கான் அவன்…” என்று முகத்தை சுழித்த தச்சனை என்ன செய்தால் தகும் என்று பார்த்துதான் நின்றாள் குந்தவை.
“இவங்க உன் அண்ணன் பிள்ளைங்கன்னு சொல்லிட்டு போறாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு மண்டையில பல்பு எரியுதா இல்லையா? அவங்க சொன்ன முக்கியமானதை விட்டுட்டு ஒன்னுமில்லாததை புடிச்சு தொங்கு.” 
அவள் சொன்னவுடன்தான் ஐயாவுக்கும் பல்பு எரிந்து முகம் பிரகாசித்தது, “நேரா சொன்னாதான் புரியும்… இப்படி புதிர் போட்டு பேசுனா எனக்கெப்படி புரியும்?” என்று வெகுளியாய் கேட்டவனை முறைத்துவிட்டு கோவிலை விட்டு வெளியே அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த விடுதிக்கு நடையை விரட்ட,
“ஏய் என்னடி?” என்று பின்னோடு வந்தான் அவன்.
“உனக்கு என்னதான் புரிஞ்சிருக்கு? நல்லா வாய் பேசத் தெரியும்.” 
“இன்னும்கூட நிறையா தெரியும்டி… வேணும்னா ரூமுக்கு போனதும் ஒரு ட்ரையல் காட்டவா?”
“ஆணியே புடுங்க வேண்டாம்… நீ என்னத்த காட்டுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ உன்கூட மல்லுக்கு நிற்க இது சரியான நேரமும் இல்லை, இடமும் இல்லை.”
“ரொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட… இவ்வளவு நேரம் மல்லுக்கு நின்னுட்டு இப்போ மட்டும் சரியான இடமில்லையாம்… பிராடு.”
பேசிக்கொண்டே விடுதிக்கு வந்திருந்தவர்கள் வரவேற்பறையில் அவர்கள் அறையின் சாவியை வாங்கிக்கொண்டு அறைக்குச் செல்ல, அவளை உரசிக்கொண்டே நடந்தவன் தன் காரியத்தில் கண்ணாய் இருந்தான் தச்சன். 
அறிவழகியை மெத்தையில் படுக்கவைத்துவிட்டு அறிவழகனின் உடையை தேட முயற்சிக்கும் குந்தவையை பின்னிருந்து அணைத்து, அவளை நகரவிடாமல் சிறை பிடித்து பின்னலில் சூடியிருந்த மல்லிகைப்பூ வாசத்தை தச்சன் உள்ளிழுத்து நிற்க, முழங்கையால் அவன் விலா எலும்பில் ஒருகுத்துவிட்டு நகர்ந்தாள் குந்தவை.
“எந்த நேரம் என்ன செய்யணும்னே உனக்கு தெரியாது.”
வலியில் முகம் சுருங்க அவள் குத்துவிட்ட இடத்தை தேய்த்துக்கொண்டே, “அடியேய்… இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லை. அக்கா கல்யாணத்துக்கு எல்லாமே நான்தான் முன்ன நின்னு செய்யணும், அம்மா தனியா கஷ்டப்படுவாங்கன்னு சொல்லி பத்து நாள் முன்னாடியே உன் வீட்டுக்கு போயிட்ட… பத்தோட இன்னைக்கும் சேர்த்து பதினோராவது நாளா ஒரு கிஸ் கூட இல்லாம உயிர்வாழ்ந்துட்டு இருக்கேன்டி.” என்று தச்சன் புலம்ப, அவன் உணரும் முன்னமே துரித முத்தமொன்றை அவன் கன்னத்தில் பதித்துவிட்டு நகர்ந்திருந்தாள் குந்தவை. 
“ஏய்… இதெல்லாம் போங்கு. அம்சமா புடவை கட்டி இம்சை பண்ணிட்டு இப்படி துக்கடா கிஸ் கொடுத்து ஏமாத்த பார்க்குற.” என்ற அவனின் சிணுங்கள் அறிவழகனின் சிணுங்களில் கேட்காமல் போனது.
“வெட்டியா கதை பேசாம சீக்கிரம் வேட்டியை மாத்து… கோவில்ல தேடுவாங்க…” அறிவழகனுக்கு உடை மாற்றியபடியே தச்சனை துரிதப்படுத்த, அவளை ஏக்கமாய் பார்த்தவன் வேறு உடைக்கு விரைவாய் மாறி அவளெதிரே ஒரு கோரிக்கையுடன் நின்றான். 
“பாரு நீ சொன்னதை நான் கேட்டுட்டேன்…”
அவனின் சொல்லில் விசித்திரமாய் பார்த்தவள், “அதுக்கு?”
“நான் சொல்றதை நீ கேட்கணும்.”
இவன் எப்படியும் வம்புக்கென எதையாவது கேட்டுவைப்பான் என்று யூகித்த குந்தவையோ தலையை சிலுப்பி, “நீ என்னன்னு சொல்லு கேட்கலாமா வேண்டாமான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்.” 
“நீ கேட்கனும்னு சொன்னேன்டி…” என்று தன் முடிவில் வீம்பாய் நின்றான் தச்சன். 
“என்னனு தெரியாம கண்ணை மூடிகிட்டு என்னால நீ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட முடியாது.” என்று அவளும் தன் பிடியிலிருந்து பின்வாங்கமால் நிற்க, புதிதாய் வேறென்ன நடந்துவிடப் போகிறது! சச்சரவுதான் தச்சனுக்கும் குந்தவைக்கும்…. 

Advertisement