Advertisement

“ஏய் குந்தவை… இப்போவே சொல்லிடுறேன் உன் ரூல்ஸ் புக்கை தூக்கிட்டு வந்து இதுல எதுவும் கலகம் பண்ணிடாத… கம்முனு இருக்கனும்.” என்று மனைவியை அதிகாரம் செய்த பெருந்தச்சன் ராஜனின் தோளில் கைபோட்டு அவன் அருகிலேயே அமர்ந்துகொண்டான்.
“டேய் நீ என்ன பேயறைஞ்ச மாதிரி இருக்க… நீ பயப்படுற அளவுக்கெல்லாம் இவிங்க வொர்த் இல்லை… சும்மா ரெண்டு கத்து கத்திட்டு  போயிடுவாங்க…” என்று அண்ணனை தேற்ற, ராஜனின் மனம் நெகிழ்ந்து வார்த்தைகள் மறதிக்கு இரையாகியது.
“எதுக்கு இப்போ எல்லாம் அமைதியா இருக்கீங்க? புதுசா ஒன்னு இல்லை மூணு பேர் வரப்போறாங்க… கொண்டாட வேண்டாமா… முதல்ல திவ்யாகிட்ட சொல்லணும் இதை…” என்று தன்பாட்டிற்கு பேசிக்கொண்டே சென்ற தச்சன் அலைபேசியை எடுத்து தங்கையிடம் பேச சென்றுவிட, தச்சனின் அலப்பறையில் அங்கு இயல்பு திரும்பியது.
“அத்தை?” குந்தவை நீலாவின் முடிவை நம்பாது அவரை தயக்கமாய் பார்க்க, அவளை தீர்க்கமாய் எதிர்கொண்ட நீலாவும், “உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருக்கும் குந்தவை. நீ சொல்லியிருக்கலாம். அக்காவை கூடவே வச்சுக்க சாதகமான சூழல் ஒன்னு கூடி வந்திருக்கு, இதில் உனக்கு உடன்பாடு இல்லாமையா இருக்கும்?”
“நான் என்ன சொல்ல முடியும் அத்தை? இதில் என் பங்கு எதுவும் இல்லை… அவங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணியிருக்கிற விஷயமிது… இத்தனைக்கும் வானதி என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல… அத்தான் விருப்பத்தை சொல்லியிருக்கேன்னு சொன்னாங்க, வானதி இன்னும் பதில் சொல்லைன்னும் சொன்னாங்க. எனக்கே இன்னும் வானதிகிட்ட பேச நிறையா இருக்கு அத்தை.”
“ம்மா… வானதி இப்போ தான் சம்மதம் சொன்னா… அதையும் நேரடியா சொல்லல… நீங்க எல்லோரும் இதை எப்படி எடுத்துக்குவீங்கன்னு அவளுக்கு பயம். நானாதான் பேசி பேசி ஒருமாதிரி சம்மதிக்க வச்சிருக்கேன்.” என்று ராஜன் குறுக்கிட, அவனை அழுத்தமாய் பார்த்த நீலா, “இப்போவே சமாளிக்க ஆரம்பிச்சிட்ட…” என்று சொல்ல, அசடு வழிய சிரித்தான் ராஜன்.
“ம்மா… உனக்கு இதில் வருத்தம் எதுவுமில்லையே?”
“நல்ல காரியம் பேசும்போது அபசகுணமா எதுவும் பேசிட கூடாது.” என்று புதிர்போட்டு நகர்ந்துவிட, விளங்காத பார்வையோடு தந்தையை காண அவரோ, “எல்லாம் சரியாகிடும்…” என்றதோடு முடித்துக் கொண்டு நகர்ந்துவிட்டார்.
“என்ன ராசா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீயே…” என்ற மங்களமும் சுருங்கிய முகத்தோடு கொல்லைப்புறம் சென்றுவிட, தச்சனைத் தவிர வேறு எவருக்கும் இதில் உடன்பாடில்லை என்று தெள்ளத்தெளிவாய் புரிந்தது.
சட்டென சோர்வடைந்திருந்த ராஜனை யோசனையுடன் ஒருபார்வை பார்த்த குந்தவை, அலைபேசியில் வானதியை தொடர்புகொண்டு அவளின் முடிவை வேண்ட,
“அவங்க சொல்லியிருப்பாங்களே குந்தவை.” என்றுதான் மழுப்பினாள் வானதி.
“அவங்க அவங்களோட விருப்பத்தை சொன்னாங்க. அதுமாதிரி நீ எதுவும் சொன்னியா என்ன?”
“அம்மாகிட்ட சொல்ல ஒருமாதிரி இருக்கு.” என்று வானதி இழுக்க பல்லை கடித்தாள் குந்தவை, “என்கிட்ட சொல்றதை பத்தி கேட்டா நீ என்ன பேசுற?”
“நான் என்ன செய்ய குந்தவை… அவங்க அவ்வளவு நம்பிக்கையா பேசும் போது எனக்கு மறுக்கணும்னு தோணலை.” என்று பாவம் போல சொல்ல, குந்தவை அமைதி அமைதி என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொள்ளும் நிலைதான்.
“இது என்ன பதில்? தெளிவா சொல்லு…”
“எனக்குன்னு பார்க்கிறத விட, பசங்களுக்காக யோசிச்சேன்…” 
‘நேரடியா பதில் வருதா பாரேன்’ என்று மனதில் திட்டிக்கொண்டே குந்தவை அவளை உசுப்பினாள், “அத்தான் இங்க வந்ததால கோச்சிகிட்டு ஊருக்கு மூட்டையை கட்டுன… இப்போ பசங்களுக்காக யோசிச்சேன்னு சொல்லிட்டு இருக்க? அப்படி என்ன யோசிச்ச?”
“அவர்கிட்ட பேச்சு வாங்க எனக்கு பிடிக்கலைதான்… ஆனா அவர் சொல்றது செய்றது எல்லாமே சரியாத்தானே இருக்கு. போதாகுறைக்கு நீ இருக்கடி…” 
“சரியா இருக்குங்குறதால ஒத்துக்கணும்னு ஒன்னும் இல்லையே…” என்று குந்தவையும் விதவிதமாய் போட்டுத்தான் பார்த்தாள். ம்கூம்! வானதி வாயிலிருந்து அவள் எதிர்பார்த்த வார்த்தை மட்டும் வரவேயில்லை.
“என்னை குழப்பிவிடாத குந்தவை…”
“முடிவா என்னதான் சொல்ற?”
“நீ இப்படி திரும்ப திரும்ப கேட்டா என்னோட முடிவு சரிதானான்னு எனக்கே குழப்பம் வருது. நான் சரியாத்தானே முடிவெடுத்திருக்கேன் குந்தவை? உனக்கு இது ஒத்துவராதுன்னு தோணுச்சுன்னா விட்டுரலாம்டி…”
“திரும்ப முருங்கைமரம் ஏறாத தாயே! நீ எவ்வளவு பட்டாலும் திரும்பத்திரும்ப குழம்பிகிட்டேதான் இருப்ப… நீ அமைதியாவே இரு. நானே பேசிக்கிறேன்.” என்று ஆயாசமாய் அழைப்பை துண்டித்த குந்தவை ராஜனிடம் வந்தாள். அவனோ குழப்பமும் தவிப்பும் தாங்கி அமர்ந்திருக்க அவனை நெருங்கியவள்,
“எதிர்பார்த்ததை விட சேதாரம் கம்மி தான்…” என்று தேற்றும் விதமாய் சொல்லி சற்று தள்ளி அமர, அவளை பாவமாய் பார்த்தான் ராஜன்.
“ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க இப்படி சம்மதம் சொன்னதும் வருத்தமா இருக்கு.”
“ஆழ்மனசுல சில சிந்தனைகள் நம்மை அறியாமலேயே ஊறிபோயிருக்கு. அதை மாற்றுவது அவ்வளவு சுலபம் கிடையாது. குழந்தையோடு தனியா நிற்குற ஆணுக்கு மறுமணம் செய்யுறதை சுலபமா ஏத்துக்கிற அந்த பக்குவம் பெண்ணுக்குன்னு வரும்போது காணாம போயிடுது.” என்ற குந்தவையின் பேச்சில் ராஜனுக்கு பக்கென்றது.
“ஹே… அப்படியெல்லாம் இல்லை… நம்ம வீட்டுல அப்படி யாரு நினைக்கப் போறாங்க…” என்றவனுக்கு வறண்ட புன்னகையை முதலில் வழங்கியவள் தொடர்ந்து,
“உங்க அப்பா அம்மாவை காப்பாத்த நினைச்சி சப்பை கட்டுகட்டுறீங்க… ஆனா மெய் அதில்லையே. அவங்க வாயை திறந்து சொல்லலைன்னாலும் அவங்க முகபாவனையே அவங்க மனசில் என்ன ஓடுதுன்னு காட்டிக்கொடுக்குது. முதல்ல வானதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு சொன்னதே மாமா தான்… அப்போ அவங்களை நினைச்சி பெருமையா இருந்துச்சு. ஆனா அதே மாமா இன்னைக்கு தன்னோட பிள்ளை அதே வானதியை கல்யாணம் செய்துக்க விருப்பப்படும்போது இருகரம் விரிச்சி வரவேற்களையே… உங்களை மறுக்கமுடியாம சம்மதம் சொல்லிட்டு போறாங்க… 
எனக்கு இதில் வருத்தம்தான் அத்தான். ஆனா அதை நான் காண்பிச்சா சரியா இருக்காது… வானதிக்கு இதில் விருப்பம் இருக்கும் போது நான் முறுக்கிக்கிட்டு நின்னு அவளுக்கு அமையுற நல்ல விஷயத்தை தடுக்க விரும்பலை… அந்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். வானதியை முழுமனசோட அத்தையும் மாமாவும் எப்போ ஏத்துக்கிறாங்களோ அப்போதான் எனக்கு முழு திருப்தி.”
“அதுக்கு நான் பொறுப்பு குந்தவை.” என்று சங்கடத்துடன் வாக்கு கொடுத்தவன் அடுத்து என்ன என்பது போல அமர்ந்திருந்தான்.
சில நொடி அமைதிக்கு பின் குந்தவையே அதை கலைக்கும் விதமாய், “அப்புறம் வேலைக்கு போறதை பத்தி என்ன சொல்றாங்க மேடம்?”
“என்கிட்ட சொல்ல என்ன இருக்கு குந்தவை?… விட்டா இப்போவே வீட்டுக்குள்ள பதுங்க தயாரா இருக்காங்க மேடம்.” 
சன்னமாய் சிரித்த குந்தவை, “நீங்க பேசின பிறகு அதோட தாக்கத்தில்தான் வேலைக்கு போயிருப்பாளோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.”
“என்னதிது புதுக்கதை?” என்று வியப்பில் விளித்து நிமிர்ந்தான் ராஜராஜன்.
“கொஞ்சம் புதுக்கதை தான்… வேலைக்கு போன்னு நான் சொல்லாத நாளில்லை. ஆனா நீங்க வந்தப்பிறகு விருந்தெல்லாம் முடிச்சு இங்கிருந்து ஊருக்கு கிளம்புனவ எந்த எதிர்ப்பும் சொல்லாம திடீர்னு நான் ஏற்பாடு பண்ணி வச்சிருந்த வேலைக்கு பையை தூக்கிட்டு கிளம்பிட்டா.”
“நான் சும்மா ஆறுதலா பேசுனேன் குந்தவை.”
“நீங்க சொன்ன ஆறுதல் வார்த்தை கூட அவளுக்கு தெம்பா இருந்திருக்கலாம்… பாருங்களேன்… அப்போகூட நாங்க சொல்லி கேட்காதவ நீங்க சொல்லவும் கேட்டிருக்கா…” என்று குந்தவை கேலி செய்ய அதை மறுத்தவனோ,
“உங்க மேல இருக்குற அதீதமான உரிமையுணர்வு உங்க பேச்சை கேட்க விட்டிருக்காது குந்தவை. நம்ம தங்கச்சிதானே என்ன சொல்லிட போறா, அப்படியே நீ ஏதாவது சொன்னாலும் நம்ம தங்கச்சி தானே சொல்றான்னு ஒரு அலட்சியம் வந்திரும். ஆனால் அதுவே வெளியாட்கள் சொன்னா அது வேற மாதிரி. சுருக்குன்னு குத்தும். தன்மானம் சீண்டப்படும். இவன் என்ன நம்மள சொல்றது. நம்ம விஷயத்தில் மூக்கை நுழைக்கிறதுன்னு எரிச்சல் வரும். எப்படியாவது தூற்றுனவன் வாக்கை பொய்யாக்கணும்னு தோணும். அந்த எண்ணம்தான் அவங்களோட உந்துசக்தி. இது தான் உன் அக்கா விஷயத்திலும் நடந்திருக்கும். நான் சொன்னதை நேர்மறையாவும் எடுத்திருக்கலாம் இல்லைனா எதிர்மறையாவும் எடுத்திருக்கலாம்.”
“இப்படி பேசி பேசியே அவளை ஒத்துக்க வச்சிருப்பீங்கன்னு நினைக்கிறன்.”
“நான் ஒத்துக்க வைக்கலை. அவளா ஒத்துகிட்டா…” என்று ராஜன் சொல்ல, ஏதோ பாடலை முணுமுணுத்தபடி அவர்களிடம் வந்தான் தச்சன்.
“இப்படி தான் எனக்கு தெரியாம ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து காரியம் சாதிச்சிருக்கீங்க… நீயாது சொல்லியிருக்கலாம்டி… அவங்களை அனுப்பாம நம்மகூடவே வச்சிருக்கலாம்.” 
குறைபடித்த தச்சனை விழிகள் உருட்டி முறைத்தவள், “உனக்கு தெரியாமயெல்லாம் ஒன்னும் செய்யலை… இதை உன்கிட்ட சொல்ல முயற்சி பண்ணேன்… சார் தான் பெரிய்ய்ய் இவர் மாதிரி அவர் அண்ணன் பேச்செடுத்தாலே முறுக்கிக்கிட்டு போனாரு… நான் என்ன பண்றதாம்!” என்று குந்தவை கழுத்தை வெட்ட, ஈயென்று பல்லிளித்து வைத்தான் தச்சனோ,
“அதெல்லாம் அப்போ….” என்று இழுக்க, புருவம் உயர்த்தினாள் குந்தவை.
“இப்போ?”
“இப்போ இப்படித்தான்…” என்று ராஜனின் தோளில் கைப்போட்டு அவனை பக்கவாட்டில் அணைத்துக்கொள்ள, ராஜன் பூரிப்புடன் தம்பியின் தோளில் கரம் போட்டு அணைத்துக்கொள்ள… பிறகென்ன அறுவடை முடிந்த கையோடு தச்சனின் அவசரத்திலும் அலம்பளிலும் சம்மந்தம் வெகு சீக்கிரமே நிச்சயக்கப்பட்டு, வெகு எளிமையாய் கோவிலில் திருமணம் நிகழ்ந்தேறியது.
பட்டு வேட்டி சட்டையில் முகம் கொள்ளா பூரிப்புடன் தச்சன் அறிவழகனை பெருமையாய் கையிலேந்திக்கொண்டு வலம் வர, திவ்யா ஆசையாய் அறிவழகியை தூக்கிக்கொண்டாள்.
“உன் மாமியார் என்னடி நீலா காதுல முணுமுணுத்துகிட்டே இருக்கு… நீலாவே எல்லாத்தையும் வேற வழியில்லாம செஞ்சிட்டு இருக்கு, இவங்க ஏதாவது கொளுத்தி போட்டு போயிடப் போறாங்க…” என்று தங்கையின் காதில் கிசுகிசுத்த தச்சனின் பார்வை முழுதும் சற்று தொலைவில் கழுத்தில் மாலையுடன் தம்பதி சகிதமாய் அமர்ந்திருக்கும் ராஜன் மற்றும் வானதியின் பின்னிருக்கும் நீலாவிடமே நிலைத்திருந்தது.
“அவங்க ஏதாவது பேசிட்டு போறாங்க விடு…” என்ற திவ்யா இவ்விஷயத்தை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாய் தச்சனோ புருவச் சுழிப்புடன்,
“அதெப்படி விடமுடியும்?”
“என் மாமியார் மட்டுமில்லை நம்ம சொந்தக்காரங்க நிறைய பேர் வாயில இந்த கல்யாணம் தான் அரைபட்டுட்டு இருக்கு. அவங்க ஒவ்வொருத்தர்கிட்டேயும் போய் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியுமா? இந்த கல்யாணத்தால் அண்ணி குடும்பம் மட்டுமில்லை நாமளும் கொஞ்சம் காதை பொத்திக்கத்தான் வேண்டியதிருக்கு. இந்த வஞ்சப்புகழ்ச்சிகள், எள்ளல் பேச்சுன்னு நம்ம காதிலேயும் வந்து விழும். அதை கடந்து போக நாம எல்லோருமே தயாரா இருக்கணும். அம்மாவும்தான்… இப்போவே பழகிகட்டும் விடு…”
“என்னடி இப்படி சொல்ற?”
“நடக்குறதை தானே சொல்றேன். நம்மாள மத்தவங்க எண்ணத்தை மாத்த முடியாதுன்னு தெரியும் போது நாம மாறிக்க வேண்டியதுதான்…”
“என்னடி தத்துவம் எல்லாம் பேசுற?” 
“எல்லாம் அனுபவப் பாடம்டா… உனக்கு புரியாது.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கணவன் அவளிடம் வந்தான்.
“நைசா எங்களை கழற்றி விட்டுட்டு அண்ணனும் தங்கச்சியும் இங்க தனியா வந்து கதையளந்துட்டு இருக்கீங்க?”
“ம்க்கும்… இவள் ஏதேதோ பேசிட்டு இருக்கா… அதெல்லாம் என்னன்னு பார்க்கிறது இல்லையா நீங்க?” என்று மச்சினனை பிடித்துக்கொண்டான் தச்சன்.
“அப்படி என்ன பேசினா?”
“அவன் புரியாம உளருவான்… நீங்க வாய் கொடுக்காதீங்க…” என்று திவ்யா குறுக்கே புகுந்து கலைக்க, தங்கையை அடக்கிய தச்சன் அவளை அர்த்தமாய் பார்த்துவிட்டு மச்சினன் புறம் கவனத்தை திருப்பினான்.
“ஏய் நீ சும்மா இரு… நீங்க அவளை ரெண்டு வாரம் இங்கேயே விட்டுட்டு போங்க. பசங்க கூட இருக்கட்டும்.” 
“ஏன் இந்த கொலைவெறி மச்சான்… பெரியண்ணன் கல்யாணம்னு ஏற்கனவே பதினஞ்சு நாள் இங்க டேரா போட்டாச்சு. நீங்க இன்னும் ரெண்டு வாரம் கேக்குறீங்க?”
“அது கல்யாணத்துக்காக வந்திருந்தா… இப்போ பசங்க வந்ததும் வீடே களைகட்டிட்டும். இவள் இல்லாம எப்படி… நீங்களும் கூட ரெண்டு நாள் சேர்த்து லீவ் போட்டுட்டு இருந்துட்டு போங்களேன்…”
“மச்சான் பாட்டுக்கு புரியாம பேசிட்டு போறாரு. நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்க திவ்யா… அம்மா எப்படின்னு உனக்கு தெரியுமே!” என்று மனைவியை கண்டிப்புடன் பார்த்த கதிரவனின் பார்வை மொத்தமாய் மாறியிருந்தது. தவறாது அது தச்சனின் கண்களில் சிக்கிவிட அப்படியென்ன தான் இருக்கிறதோ என்ற தீவிரம் அவனிடத்தில்.
“ஏன் அவங்களுக்கு என்ன?”
“ஷ்… சும்மா இரு… நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்… இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு தான் போவேன். ஆனா அவர் கிளம்பிடுவாறு இன்னைக்கு நைட்டே…” பேச்சில் மழுப்பி விழியாலே தச்சனை மிரட்டியவள் அவனை அமைதியாய் இருக்கச் சொல்ல, கேட்பானா அவன்!
“அவங்களுக்கும் விருப்பம் இல்லைனா அவங்க தங்க வேண்டாம்… நீங்க இருந்துட்டு போங்க.” என்று சொல்லிவைக்க, கதிரவன் முகம் போன போக்கில் திவ்யாவுக்கு பக்கென்றது. இதுவரை பெரிதாய் மேலெழாத பிரச்சனையை இவன் பேசியே வரவைத்து விடுவான் போலிருக்கே என்று தவித்து நின்றவள் இருபக்கமும் பிரச்சனை எழாதவாறு சமாளிக்க காரணம் தேடியலைய, அவளின் தவிப்பை போக்கும் விதமாய் அவர்களை நோக்கி முறைப்புடன் வந்தாள் குந்தவை.

Advertisement