Advertisement

அவங்களுக்கு நான் அப்பான்னு நீ சொல்றதை விட அதை அவங்களா உணரட்டும் வானதி. இவங்க தான் அப்பான்னு அம்மா சொல்லிதான் பசங்களுக்கு தெரியும்னு சொல்லுவாங்க. ஆனா அவங்க என்னை தானா உணரனும் வானதி. அவங்க எதிர்பார்க்கிற பாசமும் பாதுகாப்பும் பரிவும் என்கிட்ட கிடைக்கும்னு அவங்க நம்பி வரணும், அப்படி வந்துட்டா எவன் வந்து நாளைக்கு கலகம் பண்ண நினைச்சாலும் அவன் மூக்கறுபட்டு போயிடுவான். நான் அவங்களுக்கு என்னைக்குமே தோழனுக்கு தோழனா அவங்களுக்கு அரணா இருப்பேன்னு ஒருநாள் புரியும். அப்படி புரிதலில் தானா உருவாகிற பந்தம் நிலைச்சு நிக்கும். இதுக்கு மேல உன்கிட்ட கேள்வி எதுவும் பாக்கி இருக்கா?”
“குந்தவை?” என்று வானதி பயந்து உச்சரிக்கவும், குரலை உயர்த்தி சிரித்தான் ராஜன்.
“உன் தங்கச்சி எப்போவோ விசாரணை கமிஷன் வச்சி விசாரணை பண்ணி தீர்ப்பெழுதி ஓகே சொல்லியாச்சு.”
“நிஜமாவா?” களிப்பும் வியப்பும் அவள் குரலில் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று முந்தியது.
“நான் உன்னை நேரில் அலுவலகத்திற்கே வந்து பார்த்து கேட்ட கேள்வி உனக்கே புரிஞ்சிருக்கு. என்னோட நடவடிக்கைகளை வச்சி உன் தங்கச்சிக்கு புரியாம இருக்குமா? அதெல்லாம் அன்னைக்கே கேட்டா… நான் வீட்டுக்கு வரலைன்னு உங்க அம்மா சொல்லி இருப்பாங்க, கப்புன்னு கற்பூரம் மாதிரி புடிச்சிகிட்டா…” என்றவன் தனக்கு தேவையான பதில் கிடைத்துவிட்ட நிம்மதியுடன் குந்தவையிடம் பேசியதை அப்படியே வானதியிடம் ஒலிப்பதிவிட்டான்.
“நீங்க எதுக்கு வானதி ஆபீசுக்கு போனீங்க? என்கிட்ட வீட்டு விலாசம் தானே கேட்டீங்க? ஆனா வீட்டுக்கு போகவே இல்லை.” வானதி அலுவலகம் சென்று திரும்பிய இரவன்றே ராஜனை தனியாக பிடித்தாள் குந்தவை. 
குந்தவை அப்படி கேட்கவும் ஒரு நொடி திகைத்து பின் இயல்புக்கு திரும்பினான் ராஜராஜன். எப்படி இருந்தாலும் குந்தவைக்கு தெரியாமல் எதுவும் செய்யப் போவதில்லை, வானதி வாழ்க்கையை பற்றிய பெரிய பொறுப்பு அவளிடம் இருக்கும்போது இதை பேசிவிடுவோம் என்ற முடிவில் அவளை வெகு இயல்பாகவே எதிர்கொண்டான்.
“நீ புத்திசாலின்னு நினைச்சேன் குந்தவை.”
“புதிர் போட்டு பேசாதீங்க அத்தான். நானா யூகிக்கிறதை விட நீங்களே சொல்றது தான் சரியா இருக்கும். இது விளையாட்டு இல்லை.” என்று அழுத்தமாய் பேச, ராஜனும் தீவிரமானான்.
“உங்களுக்கெல்லாம் வாங்கின மாதிரி வானதிக்கும் பசங்களுக்கும் பரிசு வாங்கி இருந்தேன். வானதிக்கு பரிசு வாங்கின போது எதுக்கு வாங்குனேன்னு தெரியாது. ஆனா உன்கிட்ட அட்ரஸ் வாங்கின பிறகு எனக்கு வீட்டுக்கு போகவே விருப்பமில்லை. ஏன்னு யோசிச்சேன்! புரிஞ்சிது! முடிவு பண்ணி சொல்லிட்டேன்.”
“உங்க தம்பியை கல்யாணம் செஞ்சப்போ கூட எனக்கு இவ்வளவு படபடப்பு இல்லை. ஆனா இப்போ நீங்க பேசுறது எனக்கு பக்குன்னு இருக்கு அத்தான். உடைச்சு சொல்லிடுங்க.” என்று குந்தவை சற்று கலங்கியே சொல்ல, ராஜன் சற்று தயங்கினான்.
“எப்படி சொல்றதுன்னு தெரியலை குந்தவை. உன்கிட்ட சொல்றது சரியா இருக்குமான்னும் புரியல… ஆனா சொல்லித்தானே ஆகணும். வானதி இங்கேயே வந்துடட்டுமே இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா… என்னோட வாழ்க்கை துணையா…” என்றுவிட்டு குந்தவையை பார்க்க, அவள் அதிர்ந்து நின்றாள்.
“புரிஞ்சி தான் பேசுறீங்களா அத்தான்? இது எப்படி சாத்தியமாகும்?”
“இதில் அப்படி என்ன நெருக்கடி இருக்கு? ஒத்துக்குறேன், அம்மாவை சம்மதிக்க வைக்கிறது சவாலா இருக்கும். அதுக்கு பயந்து பின்வாங்க முடியுமா?” என்று ராஜன் கேட்க, குந்தவை மறுப்பாய் தலையசைத்தாள்.
“உங்களுக்கும் வானதிக்கும் பத்து வயசு வித்தியாசம். வானதி தனி ஆள் இல்லை. அவளை நம்பி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.”
“எல்லாம் தெரியும் குந்தவை. வயசையெல்லாம் ஒரு காரணம்னு சொல்லாத. உனக்கும் தச்சனுக்குமே ஏழெட்டு வயசு வித்தியாசம் இருக்கும். ஆனா எதிர்மறையா அது உங்க உறவில் பிரதிபலிக்குதா என்ன? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு அனுசரணையாதானே இருக்கீங்க?”
“எங்களை இதோட ஒப்புமை செய்யாதீங்க அத்தான். வானதி வேற… அவளோட வாழ்க்கையும் வேற… ஒருமுறை அடிபட்டு மனசளவில் அதிகமா பாதிக்கப்பட்டிருக்கா. அவளோட எண்ணங்கள் வேறையா இருக்கும். நீங்க அவகிட்ட எதிர்பார்க்கிறதை விட அதிகமா அவளுக்கு கொடுக்கிற மாதிரி இருக்கும்.”
“இதெல்லாம் நான் யோசிக்காம இருந்திருப்பேன்னு நினைக்கிறீயா குந்தவை?”
“நீங்க கேள்வியை என் பக்கம் திருப்பாதீங்க அத்தான். நியாயமான காரணம் சொல்லுங்க.”
“எனக்கு பிடிச்சிருக்கு. இதைவிட நியாயமான காரணம் வேற என்ன இருக்க முடியும்?” ராஜன் தன் நிலையில் தெளிவாய் நிற்க, குந்தவை முடிவெடுக்க முடியாமல் தவித்து நின்றாள்.
“நீங்க சொல்றதை எப்படி எடுத்துக்கிறதுன்னு நிஜமாவே எனக்கு புரியலை அத்தான். ஒரு பக்கம் உங்க மேல நம்பிக்கை இருக்கு, வானதி இங்க வந்துட்டா நல்லாயிருக்கும்னு தோணுது. ஆனா இது எந்த அளவுக்கு சாத்தியம்னு எனக்கு புரியலை.”
“முடிவா என்னதான் சொல்ற குந்தவை?”
“இது சரியா வராதுன்னு தோணுது. ஒரே வீட்டில் நாங்க ரெண்டு பேர்… வேண்டாம் அத்தான்…”
“வானதிக்கு சம்மதம்னா என்ன செய்வ? அப்போவும் இதே சொல்லி அவள் விருப்பத்தை உதாசீனம் செஞ்சுடுவீயா? அவளுக்கும் சேர்த்து நீயே முடிவெடுத்துடுவீயா? அப்படி நீயே முடிவெடுத்தா அவளோட வாழ்க்கையை அவள் ஆசைப்பட்ட மாதிரி எப்படி வாழ முடியும் குந்தவை? அவள் விருப்பத்திற்கு எதிரான ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுக்கிறது எந்தளவுக்கு திருப்தியா இருக்கும்னு நினைக்கிற? நீ சொல்றதுக்காக உங்கக்கா நீ கைகாட்டுறவனை ஏத்துப்பா… உன்னோட விருப்பத்திற்கு முன்னாடி அவளோட எந்த முடிவும் அழுத்தமா நிக்காது குந்தவை.” ராஜன் சற்று கடுமையாகவே பேச தலையில் கைவைத்தே அமர்ந்துவிட்டாள் குந்தவை.
“உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்… எதுவா இருந்தாலும் வானதி முடிவெடுக்கட்டும் அத்தான். நீங்க அவளை நிர்பந்திக்கவோ அழுத்தம் கொடுக்கவோ கூடாது. அவள் முடியாதுன்னு சொல்லிட்டா நீங்க ஒதுங்கிடனும். அதுவே சம்மதம் சொல்லிட்டா நீங்க எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். எல்லாத்துக்கும்னா எல்லாம்தான்! நிறைய பேச்சுக்கள் வரும், பசங்களை மையமா வச்சி பிரச்சனைகள் முளைக்கும். அவளோட மாமியார் வீட்டில் கலகம் பண்ண முயற்சிப்பாங்க, அவங்க உரிமையை நிலைநாட்ட பார்ப்பாங்க. ஏன் அத்தையே கூட இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம், பசங்களை ஒதுக்கலாம். எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். இதில் எது நடந்தாலும் நீங்க அவளுக்கு துணையா இருக்கனும்.”
“இதெல்லாம் செய்யலேன்னா நீ என் சட்டையை புடிச்சு கேள்வி கேட்கலாம்.”
“நல்லா கேட்பேன்… உங்க தம்பியை விட்டும் நாலு உதை கொடுக்க சொல்லுவேன்…” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் குந்தவை.
“அவன் ஏற்கனவே வெட்டவா குத்தவான்னு இருக்கான். நான் ஏதாவது கிறுக்கு பண்ணா அதை செஞ்சாலும் செஞ்சிடுவான்…” என்று ராஜன் சிரிக்க, குந்தவை மென்மையாய் முறுவலித்தாள். 
“அந்த பயம் இருக்கட்டும் அத்தான்… அப்புறம் அவளை ஆபீசில் பார்த்து என்ன பேசுனீங்க?”
“உண்மையை சொன்னேன்…” என்று மீண்டும் ராஜன் சிரிக்க, பல்லை கடித்தாள் குந்தவை.
“அத்தான்…”
“என்னோட விருப்பத்தை சொன்னேன் குந்தவை.”
“பதில் வந்துச்சா?”
“அது வரும்போது வரட்டும். நீ அவகிட்ட எதுவும் கேட்டுக்காத… யாரோட அழுத்தமும் இல்லாம அவளா யோசிச்சு பதில் சொல்லட்டும்.”
“விளங்கிடும்… சீக்கிரமே சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பா…”
“எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை. என் பேச்சை மதிச்சு யோசிப்பான்னு தோணுது குந்தவை.” 
“அவ்வளவு நம்பிக்கையா?”
“ஆமா… என்கிட்ட நல்லா பேசுறா இப்போ…”
“ம்ம்… போதும். இதுக்கு மேல பேச வேண்டாமே. நாளைக்கு இது ஒத்துவரலைன்னா வருத்தமா இருக்கும்.” என்று குந்தவை கத்தரிக்க, அதற்கு மேல் அவ்வப்போது மட்டுமே வானதி பற்றிய பேச்சுக்கள் இவ்விருவரிடமும்.
“போதுமா… இதுதான் உன் தங்கச்சி ஓகே சொன்ன கதை. நீ போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடு. நான் இனி பார்த்துகிறேன்.” 
“பயமா இருக்கு.”
“ஷ்… வானதி, நான்தான் பார்த்துக்குறேன்னு சொன்னேனே.” என்று ராஜன் பொறுமையாய் எடுத்துச் சொல்ல, ஓரிரு நொடி தயங்கிய வானதி, “உங்களுக்கு புரியுதுதானே! என்னோட சேர்ந்து பிள்ளைங்க எதிர்காலமும் இருக்கு.”
“என் மேல நம்பிக்கை வைக்க முயற்சி பண்ணு வானதி. நம்மோட எதிர்காலத்துக்காக நான் நிறைய யோசிச்சு வச்சிருக்கேன். நீ தைரியமா என்னோட சேர்ந்து பயணிக்கலாம். நமக்குன்னு ஒருகடை திறக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். அது திறந்ததும் நம்மோட நிலைமை இன்னும் சுமூகமாகிடும். நாம யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். ஆனா ஒன்னு மட்டும் இப்போவே சொல்லிடுறேன், இங்க அம்மா அப்பாவை விட்டு எங்கேயும் ஜாகை மாறுறதா இல்லை. இத்தனை வருடம் வீட்டை விட்டு தனியா இருந்துட்டேன். இனி அப்படி இருக்க முடியாது. 
அத்தை அங்க தனியா இருக்க வேண்டாம். இங்க பக்கத்தில் வீடு பார்த்து அழைச்சிட்டு வந்துருவோம். என்னைக்கு இருந்தாலும் உனக்கும் குந்தவைக்கும் பிறந்த வீடுன்னு ஒன்னு கண்டிப்பா வேணும். நம்மளை சார்ந்து அவங்க இருக்கிறது சரியா இருக்காது. சம்மந்திங்க உரசல் வரும். அதுனால அவங்க தனியா இருக்கிறதுதான் நல்லது. நான் குந்தவைகிட்ட இதைபத்தி பேசிக்கிறேன். நீ எதையும் போட்டு குழப்பிக்காத.” என்று அவள் மனம் படித்தவன் போல அனைத்தையும் அழகாய் தெள்ளத்தெளிவாய் விலக்கிவிட, ஐயத்திற்கு இடமுண்டோ பாவையின் மனதில்… 
தெளிந்த நீரோடையாய் அவள் உள்ளம் கசடுகள் நீங்கியிருக்க, தயக்கம் மட்டும் மிச்சம் ஒட்டிக் கொண்டிருந்தது வானதியிடம், “நீங்க… சாப்டீங்களா?”
“இல்லை… இனிதான். சரி நாம பொறுமையா நாளைக்கு பேசுவோம். இப்போ நீ பசங்களை பாரு. அவங்களை எதுக்கும் ஏங்க விடாத வானதி.” என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன், நேரே குந்தவையை தேடிச் செல்ல அவள் சமையலறையில் நீலாவுடன் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்.
சரி நேராக தந்தையிடம் சொல்லிவிடுவோம் என்று அன்பரசனை தேட, மங்களம் அவனை கேள்வியாய் பார்த்தார்.
“யாரை தேடுற ராஜா?”
“அப்பா எங்க பாட்டி?”
“கொல்லைக்கு போயிருக்கான்… என்ன விஷயம்? பரபரப்பா இருக்க?” என்று கேட்கும் போதே அன்பரசன் பின்னிருந்து உள்ளே நுழைய, படபடப்பு தொற்றிக் கொண்டது ராஜனிடம்.
“என்ன ராஜா இப்படி வீட்டுக்கு நடுவுல நிக்குற? உட்கார வேண்டியதுதானே?” என்று கேட்டுக்கொண்டே அன்பரசன் கீழே அமர, எச்சில் கூட்டி விழுங்கிய ராஜராஜன் அவரருகில் அமர்ந்து தயக்கமாய் அவரை ஏறிட்டான்.
“என்னடா?”
“ப்பா… உங்ககிட்ட முக்கியமா பேசணும்.”
“அதுக்கு ஏன் இவ்வளவு தயங்குற? சொல்லு ராஜா…” அன்பரசன் மகனின் தோளை தட்டி ஊக்கப்படுத்த, சட்டென பிறந்த தைரியத்தில் தந்தையை எதிர்கொண்டவன், “எனக்கு வெளில பொண்ணு பார்க்க வேண்டாம் ப்பா… நம்ம குந்தவை அக்காவை பேசுங்களேன்.” என்றுவிட, மகனின் தோளில் இருந்த அன்பரசனின் கை கீழிறங்கி அவனை பீதியாக்கியது.
“ப்பா…” என்று அதிர்ந்தவன் சற்று நிமிர்ந்து தந்தைக்கு பின் நின்றுகொண்டிருந்த அன்னையை காண அவனின் சப்தமும் அடங்கியது.
விழிகளில் அதிர்ச்சியை தேக்கி, அவனை நம்பாமல் பார்த்த நீலாவின் வதனத்தில் அப்பட்டமான அதிருப்தி குடிகொண்டு, அவனை மேலும் கலவரப்படுத்தியது.
“ம்மா…”
மகனின் விளிப்பில் திடுக்கிட்டவர் எதுவும் பேசாது அப்படியே கீழே அமர்ந்துவிட, ராஜன் தவிப்பாய் மங்களத்தை பார்த்துவைத்து பின் குந்தவையை நோக்கினான்.
மங்களமும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, குந்தவை உதட்டை பிதுக்கினாள். ஆனால் இந்த அதிர்விலும் யாருமே எதிர்பாராத வண்ணம் ராஜனின் முதுகில் பொத்தென வந்து விழுந்து அவனை பின்னிருந்து கட்டி அணைத்திருந்தான் பெருந்தச்சன்.
“இத்தனை வருஷம் கழிச்சி வந்ததுக்கு, உருப்படியா ஒரு வேலை செஞ்சிருக்க… ரெண்டு செல்லங்களும் இனி இங்கயே இருந்துடுவாங்க.” என்று சிலாகித்த தம்பி அண்ணன் கன்னத்தில் பச்சக்கென முத்தமொன்றை வைத்துவிட, அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவனே அதிர்ந்து அமர்ந்திருந்தான்.
“எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லியிருக்கான். என்ன எல்லாம் அமைதியா இருக்கீங்க? எப்போ கிளம்பப் போறீங்க குந்தவை வீட்டுக்கு?” என்று தச்சனே பேச்சை துவங்கி அனைவரையும் கலைக்க, நீலாவை அர்த்தமுடன் பார்த்த அன்பரசன் தச்சன் புறம் திரும்பி, “நல்ல நாள் பார்த்து போவோம்.” என்று முடித்துக்கொள்ள, குந்தவைக்குத் தான் இப்போது உண்மையான பேரதிர்ச்சி.
“மாமா?”
“ராஜன் என்ன ஆசைப்பட்டாலும் அதை நிறைவேற்றிடனும்னு நாங்க அவன் வந்தபோதே முடிவு பண்ணிட்டோம். வானதியை கட்டிக்க ஆசைபடுறான். அதை செஞ்சு வைக்க வேண்டியது எங்க கடமை. நீலா சொல்லு…”
“ஆமா… இவர் சொல்ற மாதிரி இனியும் அவன் மனசை புரிஞ்சிக்காம நடக்க எங்களுக்கு விருப்பமில்லை. வானதியை பிடிச்சிருக்குன்னா கட்டிக்கட்டும். நாங்க அதுக்கு தடையா இருக்க மாட்டோம். பசங்க நிம்மதியா இருந்தா போதும்.” என்று நீலாவும் அன்பரசன் சொன்னதையே சொல்லிவிட, ராஜன் இன்னுமே நம்பமுடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தான்.

Advertisement