Advertisement

“சரி இது போகட்டும். கொள்முதல் பிரச்சனைக்கு என்ன பண்றது?” அன்பரசன் மீண்டும் விட்ட இடத்தில் துவங்க, தச்சனே பதில் கூறினான்.
“வேற வழியே கிடையாது. ஏதாவது அதிரடியா செய்யணும். அந்த கலைச்செல்வி புருஷன் பெரிய ஆள்தான். ஆனா பெரிய ஆள்னாலே போட்டிக்குன்னு ஒருத்தன் இருப்பானே… அவனை நான் கவனிச்சிடுறேன். மீதி செய்ய வேண்டியதை அவனே நமக்கு செஞ்சி கொடுத்திடுவான்.”
“அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் ஒரே குட்டையில் விழுந்த மட்டை தான். இன்னைக்கு எதிர்கட்சியா இருக்குறவன் நாளைக்கு பதவிக்கு வந்ததும் அவன் வேலையை காட்டுவான். நாம யாரையும் பகைச்சிக்க வேண்டாம்.”
“அப்புறம் என்ன தான் தீர்வு இதுக்கு?”
“பேசித்தான் பார்க்கணும். நீயும் குணாவும் ஒருமுறை பேசுங்க. பார்த்து பேசு, வார்த்தையை விட்டுறாத.”
“சரி சரி சொல்லிட்டீல்ல விடு… ம்மா சுடுதண்ணி போடுமா… வெந்நீர் குளியல் போட்டா தான் உடம்பு வலியெல்லாம் குறையும்.” என்று சோம்பல் முறித்த தச்சன் எழுந்து அறைக்குச் சென்றுவிட, நீலா மகன் கேட்டதை நிறைவேற்ற எழுந்துவிட்டார்.
“ராஜனோட ஜாதகத்தில் மஞ்சள் தடவி சாமிகிட்ட வச்சி வேண்டிட்டு எடுத்துவந்து கொடுத்துட்டு போ நீலா… இன்னைக்கு ஒரு வரன் வந்திருக்கு, அவங்களுக்கு ராஜன் ஜாதகம் வேணுமாம். இன்னைக்கே போட்டோ எடுத்து அனுப்பி வச்சிடுவோம்.” என்று அன்பரசன் இயல்பாய் நீலாவை கேட்க, அவரும் இயல்பாய் சம்மதிக்க, ராஜன் அதிர்ந்துவிட்டான். 
“அம்மா என்கிட்ட கேட்கவே இல்லை, அப்பா நீங்களும் இதைபத்தி ஒண்ணுமே சொல்லலை. இப்ப என்ன அவசரம்?” திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள் என்ற விஷயமே அவனுக்கு புது செய்தியாய் இருந்தது.
“என்ன அவசரமா? வயசு ஏறிட்டே போது ராஜா… இதுவே லேட்டு.” என்றார் நீலா.
“ம்மா இப்போ வேணாமே!”
“என்ன வேண்டாம்? இதெல்லாம் நேரம் வரும்போதே முடிச்சிடனும்.” என்றார் அன்பரசனும் தீர்மானமாய்.
“அப்பா…”
“உன் தம்பி மானத்தை இப்படி வாங்குறீயே ராசா… உனக்கு பொண்ணு பாக்குறோம்னு அவன்கிட்ட சொன்னதும் பறக்காத குறையா மிதந்திட்டு இருந்தான். நீ என்னன்னா இப்படி சொல்ற?”
“ஏய் கிழவி அவன் இப்போ கேட்டானா நான் என்ன பண்ணேன்னு. நீயா ஏன் என்னை டேமேஜ் பண்ற. பேசாம உக்காந்து டீவி சீரியலை பாரு.” சட்டையை கழற்றிவிட்டு குளிக்கத் தயாராய் வெளியவந்த தச்சன் மங்களத்தின் பேச்சில் நின்று அவர் தலையை லேசாய் தட்டிவிட்டுச் சென்றான்.
“நீலா சீக்கிரம் ஜாதகத்தை எடுத்து வந்து கொடுத்துட்டு தச்சனுக்கு என்ன வேணும்னு பாரு… அப்புறம் நொய்யு நொய்யுன்னு பிணாத்துவான். குந்தவை அவங்க இந்த வாட்சாப்பில் போட்டோவையும் ஜாதகத்தையும் அனுப்ப சொன்னாங்க. போட்டோ எடுத்து நீ கொஞ்சம் பார்த்து அனுப்பிவிடுமா.” என்று குந்தவையிடம் தன் அலைபேசியை நீட்ட, அவ்வளவு நேரம் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாய் இருந்த குந்தவை, ராஜனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அலைபேசியை வாங்கினாள்.
ராஜன் பாவமாய் முகத்தை வைத்து அனுப்பாதே என்று ஓசையின்றி முணுமுணுத்து மறுப்பாய் தலையசைக்க, அன்பரசனை கண்ட குந்தவை, “மாமா இங்க நெட்வொர்க் சரியா கிடைக்கலை. நானே அத்தைகிட்ட வாங்கி போட்டோ எடுத்து அனுப்பிடுறேன். நீங்க யாருக்கு அனுப்பனும்னு மட்டும் சொல்லுங்க.”
“அதுல கடைசியா ஒரு நம்பருக்கு பேசியிருப்பேன். அந்த நம்பருக்கே அனுப்பிடு. அவங்களும் விவரம் அனுப்புறேன்னு சொன்னாங்க. வந்திருக்கான்னு பாரு.” என்றவரிடம் தலையசைத்துவிட்டு நீலாவிடம் ராஜனின் விவரங்களை வாங்கிக்கொண்டு குந்தவை வெளியே செல்ல, அவளைத் தொடர்ந்து அவள் பின்னேயே சென்றான் ராஜன்.
“அனுப்பாதேன்னு சொல்றேன்… ஆனா நீ கண்டுக்காம உன் வேலையை பார்த்துட்டு இருக்க? விட்டா அவங்ககூட சேர்ந்து எனக்கு கல்யாணமே பண்ணிவச்சிடுவீயோ?”
“அதிலென்ன சந்தேகம்? நான் தான் உங்க கல்யாணத்தை முன்ன நின்னு செய்யப்போறேன். இந்த வீட்டு மருமகளா அது என்னோட உரிமை.” என்று குந்தவை உரிமையை நிலைநாட்ட, ராஜன் அவளை சோகமாய் பார்த்து வைத்தான்.
“எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி சொல்லலாமா?”
“எனக்கு என்ன தெரியும்? நீங்க ஏதாவது என்கிட்ட சொன்னீங்களா என்ன?” என்று அவள் இடக்காய் கேட்டுவைக்க, ராஜன் பெருமூச்சிழுத்து,
“நீயே தான கண்டுபிடிச்ச அப்புறம் எதுக்கு இந்த வீண் வேலை?”
“நான் கண்டுபிடிச்சாலும் என்னால எதுவும் பண்ணமுடியலையே. நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக தான் நான் இன்னும் இதில் தலையிடாம இருக்கேன் அத்தான். இல்லைனா எப்போவே வீட்டில் சொல்லி அவகிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டியிருப்பேன்.” 
ராஜன் போல் வளவளவென இழுத்து பொறுமை காப்பது குந்தவைக்கு சற்றும் ஒத்துவராத காரியம். அவளேதான் நிதானமாய் அடிகள் எடுத்து வைத்து, வானதிக்கு யோசிக்க நேரம் கொடுத்து அவளுக்கான வாழ்க்கையை அவளே முடிவு செய்ய வேண்டுமென ஆரம்பத்தில் சொன்னாள். ஆனால் என்று ராஜனுக்கு வானதி மேல் அபிப்பிராயம் இருக்கிறது என்று தெரிந்ததோ அன்றிலிருந்து இது ஒத்துவரும் வராது என்ற முடிவை எடுத்துவிட வேண்டுமென தவிக்கிறாள். இந்த ராஜன் மட்டும் அதற்கு அணை போட்டுக்கொண்டிருக்கிறான்.
“எப்படி? அவளை வற்புறுத்தி தானே! என்னோட விருப்பத்தை மட்டும் தான் நான் சொல்லியிருக்கேன். அதுக்கான பதில் இன்னும் அங்கிருந்து வரலை. இப்போ விஷயம் வீட்டிற்கு தெரிஞ்சா ஒன்னு பிரச்சனை வரும் இல்லைனா வானதியை எல்லோரும் சம்மதிக்க சொல்லி வற்புறுத்துவீங்க. என்ன முடிவா இருந்தாலும் அதை வானதியே சொல்லட்டும். நான் எதையும் ஏற்க தயாராய் இருக்கேன்.” என்றான் அவனும் தீர்க்கமாய்.
“முடிவு வராது எதிர்ப்பார்க்காதீங்க, நானே அவகிட்ட பேசுறேன்னு நானும் ஒரு மாசமா சொல்றேன், நீங்க கேக்க மாட்டேங்குறீங்க. அவள் சொல்ல மாட்டா… ஒத்துவரும், வராதுன்னு அவள் நேரடியா உங்ககிட்ட சொல்ல மாட்டா…”
“அது என் பிரச்சனை குந்தவை. நான் அவகிட்ட பதில் வாங்கிக்குறேன். நீ அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. அவ நல்லா யோசிக்கட்டும்.” ராஜனின் பேச்சுக்கள் வானதியின் சார்பாகவே இருந்தது.
“எத்தனை நாளுக்கு யோசிப்பா? உங்க விருப்பத்தை சொல்லிட்டு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது இன்னும் பதில் வரலை. அவளுக்கு அழுத்தம் கொடுக்காத வரைக்கும் அவள் எந்த முடிவுக்கும் வரமாட்டா…”
“இதுதான் வேண்டாம்னு சொல்றேன். எதுக்கு அழுத்தம் கொடுக்கணும்? அவளுக்கு வாழ்க்கையில் பிடிப்பு வரணும், தன்னம்பிக்கை வரணும்னு தானே நீ அவளை வேலைக்கு போகச்சொல்லி கட்டாயப்படுத்தின. இப்போதான் தன்னம்பிக்கை வந்திருக்கு, இனி யோசிப்பா. அதுக்கான சூழலை நாம தான் கொடுக்கணும். அவள் யோசிக்கட்டும்னு நினைச்சி தான் நான் அவளை அதுக்குபிறகு தொந்தரவு செய்யலை.”
“விளங்கிடும். நீங்க ஸ்பேஸ் கொடுக்கிறேன்னு விலகி நில்லுங்க. விருப்பத்தை சொல்லிட்டு இந்த மனுஷன் எங்கேயோ காணாம போயிட்டாரு, இதெல்லாம் கனவா நனவான்னு அங்கொருத்தி யோசிச்சிட்டு இருப்பா. கன்னாபின்னான்னு யோசிக்கிறவ யார்கிட்டேயும் சொல்லவும் மாட்டா. உள்ளேயே வச்சி புழுங்குவா. நீங்க உண்மையாவே அவளை நல்லா பார்த்துக்கணும்னு ஆசைப்பட்டா நீங்க அமைதியா இருங்க, நான் பேசுறேன் அவகிட்ட. எனக்கு என் அக்கா வாழ்க்கை ரொம்ப முக்கியம் அத்தான். அவள் முடியாதுன்னு சொல்லிட்டா நீங்க அவளை தொந்தரவு செய்யக்கூடாது.”
“அவ ஓக்கே சொல்லிட்டா நீ மறுக்கக்கூடாது குந்தவை.” என்று டீலுக்கு டீல் பேசினான் ராஜன்.
அவனைப் பார்த்து சன்னமாய் சிரித்த குந்தவை, “மறுக்கனும்னா எப்போவோ மறுத்திருப்பேன். இப்படி பொறுமையா உங்ககிட்ட பேசிட்டு இருக்க மாட்டேன்.”
“சரிவிடு… ஏதாவது காரணம் சொல்லி இந்த ஜாதகம் அனுப்புறது போட்டோ எடுக்குறது எல்லாதையும் தள்ளிப்போடு. நான் வானதிகிட்ட இன்னொரு முறை பேசுறேன். அப்படியும் சரியா வரலைன்னா அப்புறம் உன்னோட விருப்பம்.”
“வானதிக்காக எதுவும் செய்வேன்… இதுகூட செய்ய மாட்டேனா… சீக்கிரம் அவகிட்ட பதில் வாங்குங்க. அவள் இங்க வந்தா உங்களைவிட அதிகமான சந்தோசம் எனக்குத்தான். என் கூடவே, என் கண்முன்னாடியே அவளை பத்திரமா பார்த்துப்பேன்.” என்று கண்களில் கனவு மின்ன சொன்னவள் திடுமென ஏதோ நினைவு வந்தவளாய் குறும்பாய் கண்சிமிட்டி, “ஆமா என்ன புதுசா கடை வைக்கப்போறேன்னு சொல்லிட்டு இருந்தீங்க அத்தான்? என்ன விஷயம்?”
“கண்டுபிடிச்சிட்டீயா… எல்லாம் காரணமாத்தான்… ஒரே கல்லில் ரெண்டு மாங்கா… நான் விவசாயம் பண்ணலைன்னு தெரிஞ்சா உன் புருஷனும் சரி, அக்காளும் சரி ரெண்டு பேரும் நிம்மதியாகிடுவாங்க. தச்சனுக்கு எங்க அவனை பின்னாடி தள்ளி அவனோட கனவை நான் வாழ்ந்துடுவேனோன்னு பயம், உன் அக்காக்கு சொல்லவே வேண்டாம். 
விவசாயத்தால ஏற்பட்ட கசப்பான அனுபவம் வடுவா மனசில் இருக்கு. அதை அழிக்க என்னாலான சின்ன முயற்சி இது. ஒருவேலை அவளுக்கும் என்கூட வாழலாம்னு தோணினா என்னோட தொழிலைப் பார்த்து அவள் பயந்து பின்வாங்கக்கூடாது. நிலையான வாழ்க்கை உனக்கு காத்திட்டு இருக்குன்னு அவளுக்கு புரியவைக்கணும்னு நினைக்கிறன். எனக்கு வேற எதுவும் பெருசா கனவெல்லாம் இல்லை குந்தவை. குடும்பத்தை பிரிஞ்சி ரொம்ப வருஷம் தனியா கஷ்டப்பட்டுட்டேன், இனி கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு இங்கேயே இருந்திடுவேன். அதுபோதும் எனக்கு.”
“அதென்ன எப்போதும் வானதியை பத்தி மட்டுமே பேசுறீங்க? பசங்க?”
“பசங்க அவளோட அங்கம், அவங்களை நான் தனியா பிரிச்சிப் பார்க்கலை.”
“நல்லா பேசுறீங்க…. ஆனா அவகிட்ட எதுவும் செல்லுபடியாகாது.”
“அக்கா தங்கச்சி ரெண்டு பேருமே அழுத்தக்காரங்க. நீ எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சி செய்யுற, திடமா நிக்குற. அவள் குழம்பினாலும் கம்முன்னு அழுத்தமா இருக்கா.”
“இங்க மட்டும் என்னவாம்! அண்ணனும் தம்பியும் பிடிவாதக்காரங்க. வெளில பார்க்க ஆஹோ ஓஹோன்னு எல்லாத்துக்கும் வளைஞ்சு போறவங்க மாதிரி சீன் ஓட்ட வேண்டியது. ஆனா எல்லாத்திலையும் பிடிவாதம். நினைச்சதை சாதிச்சே ஆகனும்னு இருப்பீங்க.”
“தச்சன்கூட சேர்ந்து நீயும் அதிகமா வாய் பேசுற. போய் வேலையைப் பாரு குந்தவை. நானும் உங்கக்காகிட்ட பேச முடியுதான்னு பாக்குறேன்.”
“ஹலோ… அவ ஓக்கே சொன்னாலும் என் பெர்மிஷன் இல்லாம அங்கிருந்து ஒன்னும் அசையாதுன்னு நியாபகம் வச்சிக்கோங்க அத்தான்… என் உதவி உங்களுக்கு அத்தியாவசியமானது…” இயல்பான பேச்சுக்கள் உறவுகளை இணைக்கமாக்கியது. குந்தவையும் இலகுவாய் பேசினாள்.
“சரிங்க மேடம். போய் என் தம்பியை பாருங்க. நான் என் பொழப்பை பாக்குறேன்.” என்று கும்பிடு போட்டவன், குந்தவை நகர்ந்ததும் முதல் வேலையாய் வானதியை அழைத்தான் ஒரு மாதம் கழித்து. ஆம்! அவர்கள் பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. அன்று தன் விருப்பை சூசகமாய் சொல்லியவன் அதன்பின் இன்று தான் அழைக்கிறான். 
இதயம் இயல்புக்கு மீறி அடித்துக்கொண்டாலும் ஒரு முடிவுடன் இருந்தவன் அழைப்பு ஏற்கப்பட்டதுமே, “என்னோட காத்திருப்புக்கான முடிவு சுகமானதா சோகமானதான்னு எனக்கு இன்னைக்கே தெரிஞ்சாகனும் வானதி?” என்று கேட்டுவிட, மறுபுறம் மூச்சுக்கள் மட்டுமே ஓசையெழுப்பி அழைப்பில்தான் இருக்கிறேன் என்று சுட்டிக்காட்டியது.

Advertisement