Advertisement

குந்தவை அவன்புறம் திரும்பி ஒருமுறை முறைத்துவிட்டு இதழ்களை இறுக பூட்டிக்கொள்ள, ‘பெரிய்ய இவ… சிலுப்புறா… போடி.’ என்று முனுகிய தச்சன் குணாவை கேள்வியாய் பார்த்தான்.
“கொள்முதல் பண்றதுக்கு முன்னாடி மூட்டையை தனியா எடுத்து வைக்க சொல்லுச்சு… வேண்டாம்னு சொன்னா கேக்க மாட்டேங்குது.” என்றான் குணா குறையாய்.
தச்சனோ அடங்காது, “அது தேறாத கேஸு… ஒன் வே. ஆர்டர் மட்டும் தான் வரும், நாம திரும்ப எது சொன்னாலும் அங்க ஏறாது. நோ என்ட்ரி.” 
‘ஆஹா… நம்மளையும் இவிங்க புகைச்சலுக்குள்ள இழுக்க பார்க்குறான்… தப்பிச்சி ஓடிடு குணா, குந்தவை வேற ஃபார்முக்கு வந்துடுச்சு… இந்த தச்சன் வாயும் அடங்காது.’ விபரீதம் உணர்ந்தவன் தச்சனிடம் பல்லை காட்டிவிட்டு,
“எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு மச்சான்… நான் போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு வரேன்.” என்று நழுவிக்கொள்ள, கணவனும் மனைவியும் மட்டும் தனித்திருந்தனர்.
இருவருமே ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நிற்க, அன்று வேலைக்கு வந்தவர்களில் ஒரு பெண்மணி ஆடி அசைந்து தச்சனிடம் வந்து நின்றார்.
“இந்த பக்கம் சின்ன தம்பி வாசம் வீசுதே… கூலியை கொஞ்சம் பார்த்து குடுக்குறது. நீங்க வந்த நேரம் விளைச்சலும் அமோகமா இருக்கே!” தனக்கு சாதகமாய் எதுவும் கிடைக்குமா என்ற நோக்கில் அவர் கொக்கி போட, தச்சனின் எண்ணம் அவரின் சின்னத்தம்பியிலேயே நின்றது. ராஜன் ஒருமுறை அவனை அப்படி அழைத்தது நினைவு வந்து ஒரு வினாடி அவனை தேங்க வைத்தது. அதற்குள் அந்த பெண்மணி குந்தவையை பிடித்துக்கொண்டார்.
“அம்மணியும் இருக்கீங்க… கொஞ்சம் பார்த்து செய்றது. இந்த கழனி மாதிரியே எங்க மனசும் பர்ஸும் நிறைஞ்சிடும்.” 
குந்தவை பதில் சொல்லும் முன்னமே முந்திக்கொண்ட தச்சன், “அப்புறம் எங்க சட்டை ஓட்டையாகிடும் க்காவ்… நாத்துநட கூப்பிட்டப்போ பெருசா பிகு பண்ணிட்டு வரமாட்டேன்னு போன… இப்போ நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை இல்லாததால் இங்க வந்திருக்க. அங்க வேலையிருந்தா வருவீயா நீ?”
“உனக்கு வாக்கு கொடுத்துட்டு வேலைக்கு வராத மாதிரியே பேசுறீயே தச்சா?”
“வேற எப்படி பேசுறது? விவசாயம் செய்ய நிலத்தை மட்டும் நம்புனா பத்தாது உங்களை போல ஆளுங்களையும் நம்பிதான் இதில் இறங்குறோம். ஆகோ ஓகோன்னு லாபம் பார்க்கலைனாலும் உங்களுக்கு கொடுக்க வேண்டிய நியாயமான கூலியை கொடுக்கிறோம். ஆனா நீங்க வரமாட்டேங்கிறீங்க… நீங்க வருவீங்களாங்கிற சந்தேகத்தில் அதிக வாடகை கொடுத்து மெஷின் வச்சி வேலையில் இறங்குனா அப்போ வேலை வேணும்னு வந்து நிக்குறீங்க. மெஷினுக்கு வாடகையும் கொடுத்துட்டு உங்களுக்கும் கூலியோட படியளந்து கொடுத்தா எங்களுக்கு எப்படி கட்டுபடியாகும்? இதை இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான். இதுனாலேயே பாதி பேர் நிலத்தை பிளாட் போட்டு வித்திடுறாங்க… நீங்க தொடர்ந்து நம்ம இடத்துக்கு வாங்க அடுத்த அறுவடைக்கு பாப்போம்.” என்று தச்சன் கறாராய் சொல்ல, அந்த பெண்மணி முனகிக்கொண்டே நகர்ந்துவிட்டார்.
அருகிலிருந்த குந்தவையோ அவனை ஆவென்று பார்த்து நின்றாள்.
“நீ என்னடி ஆன்னு பார்த்துட்டு நிக்குற?”
“டேய்… இப்படியெல்லாம் உனக்கு பேசத் தெரியுமா? வீட்டுல உருப்படியான பேச்சை பேச ஆரம்பிச்சாலே அங்கிருந்து ஓடிடுவ… இப்போ இவ்வளவு பேசுற… ஏதோ உனக்கும் கொஞ்சம் விஷயமெல்லாம் தெரியுது.” 
“ஏய் பல்லை பேத்துடுவேன்டி… ஒண்ணுமே தெரியாத மடச்சாம்புராணின்னு நினைச்சிட்டீயா என்னை?”
இயல்பாய் துவங்கிய பேச்சுகூட மோதலில் முடிந்தால் என்னதான் செய்வது!
“நான் நினைக்கலை… நீதான் நினைச்சிட்டு இருக்க போல, அதுதான் அந்த வார்த்தை உன் வாயில வருது.” என்று குந்தவை அப்படியே பேச்சை அவன்புறம் திருப்ப, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவளை முறைத்தான்.
“கொழுப்புடி உனக்கு… என்னை வச்சி நல்லா செய்யுற! வாயில்லா பூச்சியா அப்பாவியா உன்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன்… எல்லாம் என் நேரம். உன்னை பிடிச்சி தொலைச்சிடுச்சு.” 
“பெரிய்ய இவரு… பிடிச்சதால பொறுத்து போற மாதிரி பேசவேண்டியது. பிரியாணி வேணும்னு பக்கத்துல வருவீல்ல அப்ப இருக்கு உனக்கு கச்சேரி.” ஏட்டிக்குப் போட்டியாய் பிணக்கு முடிய, விழியை உருட்டி மிரட்டல் விடுத்த குந்தவை, கோபத்தில் மூச்சுவாங்கியபடி நிற்க, அவள் எதிரேயே தலையிலடித்துக் கொண்டான் தச்சன்.
“இன்னைக்கும் வடை போச்சே… இதுக்குத் தான் பேசமாட்டேன்னு சொன்னேன் கேட்டீயா நீ! என் வாயை கிளறி திருப்தியா விருந்து முடிச்சாச்சா? கிளம்புடி… போ…”
“போறேன் போறேன்… போகாம இங்கேயே நின்னு உன்னை பார்த்துட்டா இருப்பாங்க…” என்று கழுத்தை வெட்டிச் சென்றவள் அதன்பின் மாலை வீடுவந்த பிறகுகூட பேசவில்லை.
ஒரே வண்டியில் வந்திறங்கினாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பாராது தனித்தனியாய் வீட்டினுள் நுழைய, அவர்களைக் கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தான் ராஜராஜன்.
பொறுக்குமா தச்சனுக்கு? தன்னை பார்த்து அவன் சிரிப்பதா என்று சிலிர்த்துக்கொண்டு அவன் எதிரே சென்று நின்றான், “எதுக்கு இப்போ சிரிக்கிற?”
உர்ரென்று தன்முன்னே நியாயம் கேட்க வந்திருப்பவன் போல் விறைப்பாய் நிற்கும் தம்பியைக் காணக்காண ராஜனின் இதழ்கள் அகண்டு கண்கள் மின்னியது.
“அதெப்படி தினம் ஒரேமாதிரி ஒரே ரியாக்ஷனோட ரெண்டு பேரும் வரீங்கன்னு நினைச்சேன். தானா சிரிப்பு வந்துடுச்சு… உங்க ரெண்டு பேருக்கும் பால்ய திருமணம் பண்ணி வச்சிட்டாங்களோன்னு சந்தேகமா இருக்கு.” என்று ராஜன் பெருநகையுடன் கூற, தச்சனுக்கு அத்தனை உவகையில்லை அவனது கேலிப்பேச்சுக்களில். 
“வெட்டியா இருந்தா இப்படித்தான் கேவலமா யோசிக்கத் தோணும். உருப்படியா ஏதாவது செய்யப்பாரு இந்த சந்தேகேமெல்லாம் வராது.” 
“தம்பி சொல்லுக்கு மறுப்புண்டோ!” என்று ஆணையை ஏற்பவன் போல் ராஜன் தலையை சரிக்க, தச்சன் தலையிலடித்துக் கொண்டான், “வக்கனையா பேசுற…”
தச்சன் எரிச்சலாவதை உணர்ந்து அவனை நெருங்கி அவன் தோளில் கைபோட்ட ராஜன் இயல்பாய், “உனக்கு பேசவேத் தெரியாத மாதிரி நடிக்காதடா தச்சா… அலைஞ்சிட்டு வந்திருக்கீயே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவோம்னு நினைச்சேன். உனக்கு பிடிக்கலைனா விடு, நான் பேசலை.”
தோளை உதறி ராஜனின் கரத்தை விலக்கியவன், பல்லிடுக்கில், “ரொம்ப சந்தோஷம்.” என்று முணுக, அந்நேரம் சரியாய் எதிரில் வந்து அவர்களை மடக்கினார் அன்பரசன். அவர் குரலிலும் உடல்மொழியிலும் கவலை தெரிய, அது என்னவென தனையன்கள் விசாரிக்கும் முன்னர் அவரே அருகில் வந்தார்.
“ரெண்டு பேரும் இங்கதான் இருக்கீங்களா? ரெண்டு பேரும் சேர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டுக்கு போயிட்டு வந்துடுங்களேன்…” 
“என்னப்பா விஷயம்?”
“அங்க எதுக்கு இப்போ?”
அன்பரசனின் கவலை ராஜனை தொற்றிக்கொள்ள, தச்சனிடம் பெரிதாய் பதட்டமில்லை.
“அறுவடை செஞ்சதை கொள்முதல் பண்ண கிடங்கில் இன்னைக்கு முன்னூறு மூட்டை இறக்கி டோக்கன் போட்டுட்டு வந்தேன். நாளைக்கு காலை முதல் வேலையா நம்மோட மூட்டையை கொள்முதல் பண்றேன்னு சொன்னாங்க… ஆனா இப்போ வேற தகவல் வந்திருக்கு. பக்கத்து ஊரில் உள்ளவங்க நெல்லையும் நம்ம கொள்முதல் நிலையத்தில் கமிஷன் வாங்கிக்கிட்டு அவங்களோடதை முதலில் கொள்முதல் பண்ணப் போறாங்களாம். வேற ஊர்காரங்க இங்க கொள்முதல் பண்ணா நம்ம ஊருல அறுவடை ஆகியிருக்கிற நெல்லை கொள்முதல் பண்ணி விலை நிர்ணயம் செய்றது தாமதமாகும். இப்போ வேற கண்ட நேரத்தில் மழை பெய்யுது. நெல் மழையில் நனைஞ்சி, சாக்கு மக்கிப்போய் தரம் குறைஞ்சிடும். அப்புறம் நியாயமான விலை நமக்கு கிடைக்காது.”
அன்பரசன் கவலையாய் சொல்ல, தச்சன் முற்றத்தில் தளர்வாய் அமர்ந்து அன்பரசனை அதிருப்தியுடன் ஏறிட்டான், “சாக்கு பாற்றாக்குறையா இருக்கு. அதை கேட்டாலே அங்கிருக்கிற கிளார்க் அந்த குதி குதிக்குறாரு. அதோட கமிஷன் வாங்கிட்டு இப்படி பக்கத்து ஊர்க்காரங்களை உள்ள விடுறதே அந்த ஊராட்சி மன்றத்  தலைவியா இருக்கே கலைச்செல்வி, அதோட புருஷன் தான்… நாம போய் பேசுனா உடனே ஒத்துப்பாங்களா என்ன! கட்டுகட்டா பணத்தை குடுத்தா நமக்கு சாதகமா பேசுவாரு.”
“அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா? நீ போய் பேசுடா… அந்த பொண்ணு தானே தலைவர் பதவியில இருக்கு, நியாயமா அதுதான் மக்களுக்கு என்ன தேவைன்னு கவனிச்சு செய்யனும். ஆனா அது சீட்டுல அந்த பொண்ணோட புருஷன் வந்து உட்கார்ந்து அவனே ஜெயிச்சு அந்த பதவிக்கு வந்த மாதிரி அதிகாரம் பண்ணிட்டு இருக்கான். நேர்ல பார்த்தா மட்டும் கும்பிடு போட்டு பவ்யமா பேசுறான், ஆனா நம்ம அடிமடியிலேயே கைவைக்கிறான்.
நான் பேசிப்பார்த்தேன் நம்மூர் நெல்லில் ஈரப்பதம் அதிகமிருக்கு. இன்னும் காயனும்னு சப்பை கட்டு கட்டுறான்… நாம காய வச்சிதான் எடுத்துட்டு போறோம். ஆனாலும் இப்படி ஏதாவது காரணம் சொல்றாங்க. நீங்க போய் ஒருமுறை பேசிப் பாருங்க… விளைச்சல் அமோகமா இருக்கு, மீதி இருக்குற கொஞ்சம் கடனை அடைச்சிடலாம்னு பாக்குறேன், இவன் விடமாட்டான் போலிருக்கு…” அன்பரசனிடம் வருத்தம் மேலோங்கியிருக்க, தச்சனோ சலித்துக்கொண்டான்.
“நம்ம பேசுனா ஒன்னும் நடக்காது. அவன் பெரிய இடத்துல காசு வாங்கிட்டான்… நீயும் தான் இவ்வளவு நாளா விவசாயம் பார்க்கிற, பண்ணையாரா முன்னேறி இந்த ஊரை ஒரு கலக்கு கலக்கியிருக்க வேணாமா… அப்படி நடந்திருந்தா எல்லோரும் நமக்கு கைகட்டி நின்னுருப்பானுங்க… இப்போ பாரு நாம கைகட்டி நிக்க வேண்டி இருக்கு.” 
“நானா இருக்கப்போய் ஏதோ கொஞ்சம் நிலம் வாங்கிப் போட்டு இருக்குறதை பெருக்கியிருக்கேன். என் காலத்துக்கு அப்புறம் நீ என்ன பண்ணப் போறியோன்னு தெரியல. என்ன ராஜா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற? நீயும் இதெல்லாம் தெரிஞ்சிக்கோ… நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தான் இதையெல்லாம் பார்த்துக்கணும்.” என்று அன்பரசன் தன் மூத்த மகனை உள்ளிழுக்க, அவனோ தூக்கத்திலிருந்து விழிப்பவன் போல் திடுக்கிட்டு நிமிருந்து அமர்ந்து முழுத்து, “என்னப்பா?” என்க,
அதனை தவறாது கவனித்துவிட்ட தச்சனோ சத்தமாய் சிரித்தான்.
“தூங்கிட்டான்… என்னை சொல்லுவ, இப்போ பாரு அவன் கூட தூங்குறான். அவ்வளவு அறுவை போடுற நீ!” என்று கேலிபேச, அன்பரசன் முகத்தை சுழித்தார்.
“இவன் திருந்தவே மாட்டான்!”
“டேய் சும்மா இருடா….” என்று அவனை அதட்டிய ராஜன் தந்தையை தீர்க்கமாய் பார்த்து, “தச்சனே எல்லாத்தையும் பார்த்துக்கட்டும் அப்பா. எனக்கு இதில் நாட்டமில்லை. நான் டவுன் பக்கம் பழக்கடையும், காய்கறி கடையும் சேர்த்தார்போல வைக்கலாம்னு யோசனையில் இருக்கேன். இங்க இருக்குற சந்தை நிலவரத்தை கணிச்சிட்டு நானே உங்ககிட்ட இதைப் பத்தி பேசலாம்னு இருந்தேன்.” 
“முடிவு பண்ணிட்ட… இனி பேசி என்ன செய்ய? ஒன்னுக்குள்ள ஒண்ணா இங்கேயே இருப்பேன்னு நினைச்சேன்…” ராஜனின் முடிவில் அன்பரசனுக்கு வருத்தமே.
“ஏன் ராஜா இப்படி சொல்ற? அண்ணனும் தம்பியுமா சேர்ந்து எல்லாத்தையும் பார்த்துப்பீங்கன்னு நினைச்சோம். கொஞ்ச நாள் வீட்டுல இருந்துட்டு அப்பாக்கு துணையா சம்பா சாகுபடியில் இறங்கிடுவேன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்.” அமைதியாய் அவர்களது உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த நீலா தச்சனுக்கு காபி ஆற்றி கொடுத்துவிட்டு ராஜனிடம் தன் மனத்தாங்களை இறக்கிவைக்க, மறுப்பாய் தலையசைத்தான் ராஜராஜன்.
“வேலை தான் வேற. மத்தபடி இங்கதானே இருக்கேன்… அவன் விவசாயத்தை பார்க்கட்டும், நான் வியாபாரத்தில் இறங்குறேன். போகப்போக நம்ம தோட்டத்தையே பெருசு பண்ணி அங்க விளையுறதை நம்ம கடையிலேயே சந்தைபடுத்தி இன்னும் விரிவுப்படுத்துவோம். இப்போ நான் ஓட்டுற லாரியை சரக்கு எடுக்க பயன்படுத்திக்கிட்டா லோடு இறக்க கொடுக்கிற வாடகை மிச்சமாகும். இன்னொரு லாரி வாங்க சேமிச்சி வச்சிருக்கும் பணத்தில் கடை ஆரம்பிச்சிடலாம்.” என்று ராஜன் எல்லாவற்றையும் பக்காவாய் முடிவு செய்து சொல்ல, அன்பரசன் தயக்கம் தகர்ந்துவிட்டது.
“இதுவும் நல்ல யோசனைதான்… உங்களுக்கு எதில விருப்பமோ அதை செய்யுங்க.” என்று அன்பரசனும் பச்சைக்கொடி காட்டிவிட, தச்சனுக்கு தலைகால் புரியவில்லை. 
“உருப்படியா யோசிச்சிருக்க…” என்று தச்சன் ராஜனைப் பார்த்து உல்லாசமாய் சீட்டியடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ராஜன் அழகாய் புன்னகைத்தான்.

Advertisement