Advertisement

*23*
மதியநேர உணவை முடித்த கையோடு உடலைத் தளர்த்தி ஓய்வாய் தோட்டத்தில் கால்நீட்டி மெளனமாய் படுத்திருந்தவனை சோபையாய் பார்த்தாள் குந்தவை.
“ரொம்ப அடக்கமானவன் மாதிரி நடிக்காதடா…” என்றுமில்லாத தச்சனின் அமைதி குந்தவையை சோர்வடைய வைக்க, அவனை சுரண்டினாள் குந்தவை.
முகத்தை சுழித்த தச்சனோ முனகளாய், “என்னை நோண்டாத குந்தவை… அப்புறம் நான் ஏதாவது இடக்கா பேசுவேன், நீ உடனே கோபப்படுவ… சண்டை பெருசாகி ரெண்டு பேரும் முகத்தை தூக்கி வச்சிப்போம். என்னால தினமெல்லாம் உன்கிட்ட கோபப்பட்டு பேசாம, உன் மேல கை போட்டு தூங்காம இருக்க முடியாது.”
“ஓ! அப்போ இதுதான் விஷயமா! என்கிட்ட நீதானடா கோச்சிகிட்டு முதுகை காண்பிச்சி தூங்கிட்டு இருந்த! நானா உன்னை கைபோட்டுக்க வேண்டாம்னு சொன்னேன்?” என்று குந்தவை உதட்டை பிதுக்கி தோள்களைக் குலுக்க, சிணுங்களுடன் அவள் புறம் திரும்பினான் தச்சன்.
“அப்போ நீ என் மேல கை போட வேண்டியது தானேடி… ராத்திரி ஒருத்தன் எவ்வளவுதான் கஷ்டப்படுறது?”
“ஐயே ஆசைதான்… சார் ஏதோவொரு சினிமா பாட்டை பார்த்துட்டு வந்து அதில இருக்குற மாதிரியே வெட்டவெளியில் மழையில நனைஞ்சிக்கிட்டு கிஸ் வேணும்னு கேட்டது மட்டுமில்லாம அதில வர ஹீரோயின் என்ன டிரெஸ், என்ன டிசைனில் ப்ளவுஸ் போட்டிருக்கான்னு நோட் பண்ணி அதுமாதிரியே என்னை போடச் சொல்லுவாராம்… நாங்க அப்படியே ஈன்னு பல்லை காட்டிட்டு இருக்கணுமா… நியாயமா நான்தான் உன்கிட்ட கோச்சிகிட்டு பேசாம இருக்கணும். ஆனா சார் பெரிய இவராட்டம் முறைச்சிக்கிட்டு எனக்கு முதுகை காட்டி படுப்பாராம். நான்  உடனே வந்து சமாதானப்படுத்தனுமாம்… உடம்பு முழுக்க கொழுப்பு உனக்கு.”
“பாரு! இப்போ கூட உனக்கு சத்தம் போட மட்டும்தான் வருது.” என்றான் குறையாய்.
“உன்னோட செயலுக்கான எதிர்வினைதான் என்னோட கோபத்துக்கான காரணம். அதை அப்படியே நேக்கா மறைச்சி என் மேல மட்டும் தப்பிருக்கிற மாதிரியே குறைசொல்ல வேண்டியது.” என்றாள் அவளும் தன் செயல்களை நியாயப்படுத்தும் விதமாய். 
“ம்ச்… பாரு வாண்டடா வந்து சண்டையை கிளப்பிவிடுற… இந்த வம்புக்கு தான் பிரச்சனையே வேண்டாம்னு நான் கம்முன்னு இருக்கேன்…”
“நம்புற மாதிரி வேறெதாவது சொல்லு… எனக்குத் தெரியும் உன்னால பேசாமெல்லாம் இருக்க முடியாது….”
“அடியேய் நம்புடி… எப்போதும் நீ நச்சரிச்சிகிட்டே இருந்தா எனக்கும் கடுப்பாகுதுள்ள. முன்னாடி வீட்டுல மட்டும் தான் சண்டை வந்துச்சு… நாள் முழுக்க வேலை செஞ்சிட்டு உன்கிட்ட வர்றோம்கிற சந்தோஷத்தில் இருப்பேன் அப்போ எல்லாமே சுவாரசியமா இருந்துச்சு. இப்போ இருபத்திநாலு மணிநேரமும் என்கூடவே இருக்க… நிமிஷத்துக்கு நிமிஷம் சண்டை வருது. எரிச்சலாகுது… அளவுக்கு மீறி எதுனாலும் சலிப்பு தட்டுது…”
“நான் உனக்கு சலிச்சு போயிட்டேன்… அதுதானே சொல்ல வர?” என்ற தன் யூகிப்பை ஒருமாதிரி அழுத்தமான குரலில் அவள் வெளிப்படுத்த, பதட்டமாகிவிட்டான் தச்சன்.
“ஏய் ஏன்டி எல்லாத்திலேயும் வினையை கண்டுபிடிக்குற? நான் எதார்த்தமான சொன்னேன் நீ அப்படியே அதை வேற அர்த்தத்தில் புரிஞ்சிகிட்ட. பக்கத்தில் இல்லாதப்போ தான் அவங்க அருகாமைக்காக மனசு ஏங்கும். அவங்ககிட்ட போகணும்னு தோணும். இந்த அர்த்தத்தில் நான் சொன்னேன்.”
“எப்படி யோசிச்சாலும் நீ சொன்னதுக்கான அர்த்தம் நான் இப்போ பக்கத்திலேயே இருக்கிறதால சலிச்சி போயிட்டேன். என்னோட இருக்க பிடிக்கலை உனக்கு.”
“ஷப்பா… நான் சொன்னது தான் நடக்குது பாரு. எந்த வழியில போனாலும் முட்டு சந்தில் முட்டி நிக்குற மாதிரி எப்போதும் வாக்குவாதத்தில் வந்து முட்டிட்டு நிக்குறோம். இந்த அரைமணி நேரம் தான் கொஞ்சம் ஓய்வா இருக்க முடியும். அதையும் இப்படி பேசி வேஸ்ட் பண்ண வேண்டாம்டி… அறுவடை வேலையே மூச்சுமுட்டுற அளவுக்கு இருக்கு.” என்று தச்சன் சோர்வாய் சொல்ல, குந்தவைக்கு அவனின் தவிப்பு புரிந்தது. 
சட்டென எழும் சினத்தை பலநேரம் அவளால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் அவர்களுக்குள் எழும் சண்டையை நினைத்து வருந்தி அவளின் கொஞ்சலுக்காய் அவன் ஏங்கிப் பேசும் நேரம் அமைதியாகிவிடுவாள். அப்படி பலதில் பிரத்யேக நேரமாகியது அந்நொடிகளும்.
அவன் சிகையை கலைத்தவள், “ரொம்ப டல்லடிக்கிற, பொழைச்சு போ… கொஞ்ச நேரம் தூங்கு. எல்லாரும் என்ன பண்றாங்கன்னு நான் போய் பார்க்குறேன். குணா அண்ணனையும் இங்க அனுப்பிவிடுறேன். அவரும் ஓயாம வேலை பார்க்குறாரு.” என்றுவிட்டு எழ முயன்றவள் கரத்தை பிடித்து நிறுத்தினான் தச்சன்.
“நீ ரெஸ்ட் எடு, நானே அஞ்சு நிமிஷத்தில் போய் பார்க்கிறேன். எப்படியும் மெஷின் ஹீட் குறைஞ்ச பின்னாடி தான் மீதி வேலை ஆரம்பிக்கும். அதுவரை அறுவடை செஞ்சதை உலர்த்தனும். வைக்கோலை தனியா கட்டி வைக்கணும்.” காத்திருக்கும் வேலைகளை எளிதாய் சொன்னவன் அவற்றை மனதில் வரிசைப்படுத்தி அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்ற யோசனையில் ஆழ, குந்தவை எழுந்துவிட்டாள்.
“நான் சும்மா தான இருக்கேன். நான் பாக்குறேன். பத்து நாளா நீதான் அலைஞ்சிட்டே இருக்க… இப்போ ரெஸ்ட் எடு…” என்று அவனின் வேலைப்பளு உணர்ந்து குந்தவை பொறுப்பை தனதாக்கிக்கொள்ள, அவன் வாய் சும்மாவா இருக்கும்! தானாய் வம்பிழுத்தது. 
“இப்போவாவது நான் வேலை செய்றேன்னு ஒத்துக்கிறீயே… இல்லைனா மாமனாரும் மருமகளும் சேர்ந்து நான் எதுவுமே பண்றது இல்லைன்னு முடிவுகட்டி எல்லாத்தையும் அவன்கிட்ட கொடுத்திடுவீங்க.” 
“யாரு, எதை கொடுத்தோம் இப்போ? தேவையில்லாம பேசாத… மாமாவே அத்தானை வருந்தி வருந்தி கூப்பிட்டாலும் அவங்க வயல் பக்கமே வர்றது இல்லை.” என்று அவள் மறுப்பு சொல்ல, சும்மாவே ராஜன் மீது கடுப்பில் இருப்பவன் குந்தவை ராஜன் சார்பாய் பேசினால்… இருக்கும் வேலையை விட்டுவிட்டு வம்புக்கு இறங்கினான்.
“அதுதானே! அவன் ஏன் வரப்போறான்! அவன் ஹாயா வெட்டியா ஊரை சுத்திட்டு இருக்கான். லாரி வச்சிருக்கேன் புதுசா இன்னொன்னும் வாங்கப் போறேன்னு கதை அளந்தான். ஆனா ஒன்னுத்தையும் காணோம். நான் சுத்தின போது மட்டும் ஆவூன்னு புலம்புனாங்க. இப்போ அவன் தடிமாடு மாதிரி சுத்திட்டு இருக்கான், அவனை யாரும் கேக்குறது இல்லை… இந்த நீலா அவனையே தலையில தூக்கி வச்சி கொண்டாடிட்டு இருக்கு. விட்டா இடுப்புல தூக்கிவச்சு சாப்பாடு ஊட்டிவிடும் போல…”
ராஜராஜன் பேச்செடுத்தாலே ஆர்வமின்மையை வெளிப்படுத்தும் கணவனை என்னதான் செய்வது? என்ற சோர்வு வந்திருந்தது குந்தவைக்கு. அவளும் அதட்டி, திட்டி, கொஞ்சி என அவன் மண்டையில் உறைக்கும்படி எத்தனையோ முறை சொல்லிவிட்டாள் ராஜனை அண்ணனாய் பார் என்று. கேட்டால்தானே இந்த பிடிவாதக்காரன்! காரணமேயின்றி வறட்டு வீம்பை பிடித்துக்கொண்டு உளருபவனை எப்படியாவது மாற்றிட வேண்டும் என்ற எண்ணம் வலுபெற்றுக்கொண்டே சென்றது ஒருசில காரணத்தினால்.
“என்னடி பதில் சொல்ல முடியலையா? பேச்சையே காணோம்?”
“நீங்க புரிஞ்சிக்காம பொறாமையில பொங்குறதுக்கு என்னோட சக்தியை நான் வீணடிக்கிறதா இல்லை பெருந்தச்சன் சார்.” உள்ளே எரிச்சல் மூண்டாலும் அதை அடக்கி பல்ளித்தபடியே அவள் பரிகாசமாய் சிரிக்க, பற்களை நறநறவென கடித்த தச்சனோ கடுப்புடன்,
“பேருல கூட ஓரவஞ்சனையா அவனுக்கு மட்டும் ராஜா பேரு ராஜராஜன்னு ஆனா எனக்கு… அசிங்கமா பெருந்தச்சன்னு…” என்று அவன் முகத்தை சுழிக்கவுமே அவளது பொறுமை காற்றி பறந்தது.
“சினிமாவை கட் பண்ணைனும் முதல்ல… அதை பார்த்து பார்த்து தான் நீ கெட்டுப்போயிருக்க…”
“ஸ்ஷ்… இப்போ என்ன கெட்டு போயிட்டேன் நானு?” என்று தச்சன் நெஞ்சை நிமிர்த்தி எகிறிக்கொண்டு எழ, அவன் நெஞ்சில் கைவைத்து அவனை லேசாய் பின் தள்ளினாள் குந்தவை.
“ஒண்ணா ரெண்டா…. நிறைய இருக்கு… இதோ இப்போ புதுசா ஒன்னை கிளப்பி இருக்கீயே! அப்படி என்ன உன் பேருல அசிங்கத்தை கண்டுட்ட? வித்தியாசமான பேரு தான் ஆனா கல்வெட்டில் நிலைச்சு இருக்குற ஒருத்தரோட பெயரை எவ்வளவு ஆசையா உனக்கு வச்சிருப்பாங்க. ஆனா நீ ஏதோ சினிமா பார்த்துட்டு வந்து அதுல வர்ற வசனத்தை காப்பியடிச்சி இங்க உளறிகிட்டு இருக்க… கண்டதை நினைச்சி என்னை டென்ஷன் பண்ணாம வேலைக்கு கிளம்பு முதல்ல… உன்கிட்ட பேசிபேசி என்னோட பீபி தான் ஏறுது…”
“எனக்கு மட்டும் இனிக்கவா செய்யுது? என்னோட பீபியும் தான் ஏறுது… இந்த இம்சைக்கு தான் ஆரம்பத்திலிருந்து சொல்றேன் இங்க வராதேன்னு கேட்குறீயா நீ? முதல்ல உனக்கு இந்த இடம் செட் ஆகாதுன்னு தான் நினைச்சேன் ஆனா இப்போ புரியுது நீ இங்க வர்றது எனக்கு செட்டே ஆகாது. ஏதோ டீச்சர் பரீட்சை பேப்பரை திருத்துற மாதிரியே வார்த்தைக்கு வார்த்தை என்னை திருத்த கிளம்பியிருக்க… உன் மாமனார் தானே இதுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருப்பாரு. எனக்கு தெரியும் அவர் சொல்லி தான் நீ இங்க வந்திருப்ப… இல்லைன்னா உனக்கு பிடிக்காததை செய்ய வருவீயா…” வாக்குவாதத்தில் பிறப்பெடுத்த எரிச்சலில் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓட, தச்சனும் தம்கட்டி கத்தினான். 
ம்கூம் குந்தவை அதற்கும் மேல்! அவனை பொருட்படுத்தாது,  
“என்னால சும்மா சும்மா உனக்கு விளக்கம் குடுத்துட்டு இருக்க முடியாது. உனக்கு தோள் கொடுத்து உனக்கு உதவியா இருக்கலாம்னு தான் வந்தேன்… அது உனக்கு பிடிக்கலைன்னா நான் எதுவும் செய்ய முடியாது. எனக்கு என் புருஷன் முன்னேறி மேல வரணும் நானும் ஏதாவது உருப்படியா செய்யனும் அவ்வளவு தான்… நாம இங்க சண்டை போடுறது நமக்கு தான் லாஸ்… தலைக்கு மேல வேலை கிடக்கு… நான் போறேன். நீ இங்கேயே நின்னு கத்திட்டு இரு.” என்றுவிட்டு அவனை கண்டுகொள்ளாமல் குந்தவை வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட,
ஆத்திரத்தில் தரையை உதைத்த தச்சன், “இம்சைடி… நீ நினைக்குறது சொல்றது மட்டுந்தான் நடக்கணும். ஆனா நான் சொல்ற எதையும் கேட்கமாட்ட…” ஆதவனின் வெம்மைக்கு நிகராய் அவனும் தகிக்க பாவம் அவனை கண்டுகொள்ளதான் யாருமில்லை.
*
“நீங்க கொஞ்ச நேரம் தோட்டத்தில் உங்க தோஸ்த்தோட ரெஸ்ட் எடுங்களேன்…” விழிகள் அனைத்தையும் கவனித்து புத்தியில் பதித்துக்கொள்ள, தனியாய் ஒரு ஓரமாய் நின்ற குணாவிடம் சென்று நின்றாள் குந்தவை.
“சும்மா தான் நிக்குறேன்மா… இன்னும் யாரும் சாப்டுட்டு வரலை. அதுவரை தோராயமா எவ்வளவு மூட்டை தேறும்னு கணக்கு பார்த்துட்டு இருக்கேன்’.”
“எவ்வளவு தேறுனாலும் ஐம்பது மூட்டையை தனியா வச்சிடுங்க. அதை விக்க வேணாம்.” என்று சொன்னவளை கேள்வியாய் பார்த்தான் குணா.
“எதுக்குமா? எப்போதும் அன்பு அப்பா எல்லா மூட்டையையும் அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பண்ணிடுவேன். அதேமாதிரி இங்க அறுவடை ஆகுறதையும் நல்லா காய வச்சி மூட்டை கட்டி கொள்முதல் பண்ணிடுங்கன்னு சொன்னாங்க. தச்சனும் அப்படியே பண்ணிடலாம்னு சொன்னான்.” 
“முதன்முதலா விளைச்சல் பார்த்திருக்கோம். அதை அப்படியே காசாக்காம உங்களுக்கு ஒரு நாற்பது, வீட்டுக்கு ஒரு அஞ்சு, அண்ணி வீட்டுக்கு ஒரு அஞ்சு மூட்டைன்னு பிரிச்சிடுவோம்னு பாக்குறேன். மீதியை கொள்முதல் பண்ணிடுங்க. நான் மாமாகிட்ட சொல்லிடுறேன்.” என்றவளை ஆச்சர்யமாக பார்த்த குணா, மறுக்கும் விதமாய்,
“எனக்கு எதுக்கும்மா? கொள்முதல் பண்றதுக்கு முன்னாடி பத்து மூட்டையை பிரிச்சி பக்கத்து ஊரில் இருக்கும் அரிசி மில்லுக்கு அனுப்பி வச்சிடுறேன். சின்ன மில்லில் மட்டும்தான் பத்து மூட்டை அரைக்க முடியும். அதுவும் கொஞ்சம் காலதாமதம் ஆகும். ஆனா கிடைச்சிடும்.”
“இதுல உங்களோட உழைப்பு தான் அதிகம் இருக்கு. விளையுறதை கொள்முதல் பண்ணி பணமா உங்களுக்கு கொடுக்க எனக்கு விருப்பமில்லை. நீங்களும் பணமா வாங்கமாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதுனால மூட்டையை பிரிச்சிக்கலாம். இது உங்களுக்கானது, உங்களோட உழைப்பு. சொல்லப்போனா இது கம்மி தான், இதில் எவ்வளவு வருமானம் வரும், விளைச்சல் இருக்கும்னு தெரியலை. அதுனால தோராயமா நாற்பதுன்னு சொன்னேன். கடைசியில எவ்வளவு வருதோ அதை சமமா பிரிச்சிக்கலாம்.” 
“ஐயோ என்னமா சமமா பிரிச்சிக்கலாம்னு சொல்ற… நான் எந்த பலனையும் எதிர்ப்பார்க்காம நட்புங்குற அடிப்படையில் தச்சனுக்காக வந்தேன். மற்றபடி எனக்கு எதுவும் வேண்டாம். தச்சன் ஆசைப்பட்டது நிறைவேறினாலே போதும். எனக்கு தேங்காய் ஏற்றுமதி வர்த்தகம் இருக்கு.”
குணா மறுப்பதிலேயே குறியாய் இருக்க, இது சரியாய் வராது என்றுணர்ந்த குந்தவை அவனுக்கு பேசும் வாய்ப்பை தராத வண்ணம் அதிகாரத் தோரணையில், “நான் உங்களுக்கு வேணுமான்னு கேக்கல… உங்களை பிரிச்சி எடுத்து வைக்கச் சொன்னேன்… உங்களுக்கு சேர வேண்டியது உங்க வீட்டுக்கு வந்து சேரும்.”
இனி குந்தவையிடம் பேசி ஒன்றும் ஆகாது என்றுணர்ந்த குணாவும் சிரித்து மழுப்பினான், “அதுதானே குந்தவை இவ்வளவு நேரம் பொறுமையா பேசுதேன்னு நினைச்சேன்… எனக்கும் ஆர்டர் தானா? நான் தச்சன்கிட்ட பேசுறேன்.” 
“அவர்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். அவரும் டபுள் ஒகே சொல்லியாச்சு…”
“என்ன ஒகே சொல்லியாச்சு?” அவர்களின் உரையாடலின் பிற்பாதியை மட்டும் கேட்ட தச்சன் அங்குவந்து நின்றான்.

Advertisement