Advertisement

“நீ நினைச்ச உடனே இறங்கி எங்களை மாதிரி வேலை பார்க்க முடியாதுடி. முதல்ல வரப்புல தடுக்காம நடக்கப் பழகு, அப்புறம் உள்ள இறங்கலாம். இப்போவே எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாம இறங்குனா சேற்றுப்புண் வரும். அரிப்பு வரும். கொஞ்ச கொஞ்சமா இந்த மண்ணுக்கு பழகிக்கலாம். அதுவரை நாங்க என்ன செய்றோம்னு பாரு… உனக்கே சிலது பிடிபடும்… அடுத்த அறுவடைக்கு நீயே இறங்கலாம்.” என்று சமாதானமாய் சொன்னவன் அவள் அருகில் சென்றமர்ந்து பாதம் நனையுமளவு ஓடிய கண்மாய் தண்ணீரில் காலை விட்டான்.
“என்னை ஏமாத்துற வேலையெல்லாம் வேண்டாம். வேணும்னே தானே நீ எனக்கு வேலை சொல்லித் தரமாட்டேங்குற. சும்மா இருக்கிறதுக்கு கடுப்பா இருக்கு.” குந்தவையின் குரல் வழக்கம் போல ஏற, தச்சன் அவன் இயல்பிலேயே நின்றான்.
“உனக்கு இது சரியா வராது குந்தவை. நீ எதிர்பார்க்கிற மாதிரி மாசாமாசம் இங்க சம்பளம் கிடைக்காது. உங்கக்காவுக்கும் குடுக்க முடியாது.” என்று தச்சன் நேரம் பார்த்து பேச, சில வினாடிகள் குந்தவையிடம் அமைதி… 
“தெரியும்… வானதி நான் பணம் கொடுத்தா வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா. என்கிட்ட பணம் வாங்குனா என்னை சார்ந்து என் பேச்சை கேட்டுட்டே கடைசி வரை வாழுற மாதிரி ஆகிடுமாம். அதுனால வேண்டாம்னு சொல்லிட்டா… அவள் இப்படியெல்லாம் யோசிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை… வேலைக்கு போறால்ல நல்லா பேச கத்துகிட்டா…”
“நிஜமாவா? உன் அக்காவா இப்படி பேசுனது? இவ்வளவு மாற்றமா நம்பவே முடியலையே…” என்றான் தச்சனும் நம்பாமல். அவனுக்கு இந்த விஷயம் புதிதாய் இருந்தது. பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று அவ்வப்போது குந்தவையிடம் விசாரிப்பான்… சில நேரம் போன் போட்டு அவர்களின் மழலையை ரசித்துக் கேட்பான். மற்றபடி வானதி பற்றியோ அவள் வேலை பற்றியோ பெரிதாய் அவன் கேட்டுக் கொண்டதில்லை. குந்தவையும் சொன்னதில்லை.
“என்னாலையும் நம்ப முடியலை… ஒரு மாசமா தான் வேலைக்கு போறா அதுக்கே இவ்வளவு மாற்றமா… இவள் என் அக்கா தானான்னு எனக்கே சந்தேகம் வருது.” என்ற குந்தவையின் குரலில் இன்னும் வியப்பே.
“அவங்க இப்படி இருக்கணும்னு தானே ஆசைப்பட்ட? இப்போ அதுவே நடக்குது. சந்தோசமா இரு… உனக்கு பிடிச்சதை செய்…”
“அதுதான் உன் பின்னாடியே வந்துட்டேன்…” என்று குழைவாய் சொன்னவள் அவன் கரத்தினுள் கரம் நுழைத்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள். மனம் நிறைந்திருக்க, கொளுத்தும் வெயிலிலிருந்து அவர்களை காக்கும் புங்கை மரம் மெல்ல அசைந்து அந்த இடத்தையும் குளுமை படுத்தியது.
“இது உனக்கு செட்டே ஆகலைடி. குந்தவை பிரியாணியா இருந்தாதான் நல்லாயிருக்கும். இப்படி வழவழ கொழகொழன்னு இருந்தா எனக்கு சந்தேகம் வருதுடி…” அரிதிலும் அரிதாய் வெளிப்பட்ட அவளின் மென்மையை ரசிக்காமல் அவன் வாய் முந்திக்கொண்டுவிட, குந்தவை கடுப்புடன் நகர்ந்து கொண்டாள்.
“வரும் வரும்… நான் சத்தம் போட்டா இம்சையா இருக்கேன்னு சொல்ற… சரின்னு இப்படி பேசுனா அதுக்கும் குறை சொல்ற.”
“பின்ன பிள்ளைக்கே இப்போ வழியில்லைன்னு சொல்லிட்டு அதை வச்சு நீ எவ்வளவு சண்டை போட்ட… இதுமாதிரி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்… குந்தவை இப்படித்தான்னு நான் செட் ஆகிட்டேன். அதிலிருந்து மாறி நீ இப்படியெல்லாம் பேசுனா நம்ம பொண்டாட்டியா இப்படின்னு எனக்கு வித்தியாசமா இருக்குடி…”
“இப்படித்தான்னா எப்படி? நான் சண்டைக்காரின்னு முடிவே பண்ணிட்டீயோ?” என்று எதிர்கேள்வி எழுப்பியவளிடம் அடுத்த சண்டைக்கான தொனி நன்றாய் வெளிப்பட, தச்சன் இப்போது அவள் தோள் மீது கைபோட்டு அவளை தன்னோடு நெருக்கிக்கொண்டான்.
“விடுடா… எல்லோரும் பார்ப்பாங்க.” என்று வழக்கமான மறுப்பு வெளிப்பட, தச்சன் தங்கள் நெருக்கத்தை இன்னுமே நெருக்கத்தான் செய்தான்.
“நீ என் தோளில் சாஞ்சப்போ பார்க்காதவங்க இப்போவா பார்க்கப் போறாங்க… சும்மா இருடி… தண்ணீர் வந்தப்புறம் இதுமாதிரி உன்னை நம்ம வயலுக்கு கூட்டிட்டு வரணும், தோட்டத்தில் இருக்கும் போர்செட்டில் குளிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். முதல் ஆசை நிறைவேறிடுச்சு… அடுத்தது எப்போன்னு நீதான் சொல்லணும் … இங்க கண்மாயில் குளிச்சா கூட சில்லுனு நல்லாதான் இருக்கும். ஆனா நீ தான் வெட்டவெளியா இருக்குன்னு சிலுபிப்ப…” 
“தோட்டம் மட்டும் வீட்டுக்குள்ளேயா இருக்கு! அதெல்லாம் முடியாது.” என்று அவன் சொன்னது போலவே சிலுப்பினாள் குந்தவை.
“வரீயான்னு கேட்கலை எப்போ வரேன்னு தான் கேக்குறேன்.”
“அதெல்லாம் முடியாது… அங்க தோட்டத்தில் மதியம் சும்மா படுக்கவே எனக்கு ஒருமாதிரி இருந்துச்சு. இதுல நீ குளிக்கனும்னு சொல்ற… வாய்ப்பேயில்லை.” என்று மறுத்து அவனிடமிருந்து விலகினாள் குந்தவை.
தச்சனும் விடாது, “நானும் உன்னை விடுறதா இல்லை… காலையிலேயே வந்துட்டோம்னா யாருமே இருக்க மாட்டாங்க. நைட்னா கூட எனக்கு ஓகே தான்…”
“நீ சொல்ற தினுசே சரியில்லை… உன் ஆசை எல்லாம் விவகாரமா தான் இருக்கும்… நான் வரலை இந்த விளையாட்டுக்கு.” என்று குந்தவை அழுத்தமாய் மறுக்க, அவளை சந்தேகமாய் பார்த்தான் தச்சன்.
“உன் புத்தி வேறெங்கையோ போற மாதிரி இருக்கே…”
“நீ நினைக்கிறதை என் வாயில் வாங்கப் பார்க்காத… எனக்கு இப்படி வெளிய குளிச்சி பழக்கமில்லை… வேணும்னா தோட்டத்தில் ஒரு பாத்ரூம் கட்டு நான் வரேன்…” என்றுவிட்டு அவள் எழுந்துகொள்ள, தச்சன் வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டான்.
“விளங்கிடும்… உன்னை வச்சிக்கிட்டு எங்கிருந்து நான் ரொமான்ஸ் பண்ண! தண்ணீர் வந்தப்புறம் ஊருக்கு அந்தப்பக்கம் ஆத்தங்கரையில் போய் பாருடி… இன்னமும் பொண்ணுங்க அங்கத் தான் குளிக்கிறாங்க…” 
நடக்கத் துவங்கியிருந்தவள் அவன் சொன்ன செய்தியில் சட்டென  நடையை நிறுத்தி திரும்பிப்பார்த்து அவனை முறைத்தாள், “அதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”
“என்ன கேள்வி இது? திவ்யா கூட எப்போவாவது அம்மாக்கு தெரியாம அங்க போவா… நானும் அந்தப்பக்கம் போகும்போது பார்த்திருக்கேன்.” என்றுவிட, வரப்போகும் சூறாவளியை சொல்லவும் வேண்டுமா!
“என்னது பார்த்திருக்கீயா? நீ எதுக்கு அங்கெல்லாம் போற?” குந்தவை சீற, தச்சன் சுதாரித்தான்.
“யாரையாவது பார்க்கப் போவேன். அந்தப்பக்கம் வீடெல்லாம் இருக்கு.” என்றதோடு அவன் நிறுத்தியிருக்கலாம். அவன் வாய் கேட்டால் தானே! “கொஞ்சம் நிதானமா இருக்க பழகு குந்தவை. நகரத்தில் பெருசா தெரியுற விஷயம் இங்க சாதாரணமா இருக்கும். அங்க சாதாரணமா இருக்கிறது இங்க பெருசா தெரியும். நம்ம வீட்டுலேயே திவ்யா பெரியவளானதும் தான் தனியா பாத்ரூம் கட்டுனாங்க. இங்க சாதாரணமா பாவாடை கட்டிட்டு குளிப்பாங்க. அதைத்தான் காப்பியடிச்சி சிட்டியிலும் சினிமாவிலும் கையில்லாம, தோள்ல பிடிமானம் இல்லாத டிரஸ்சை நாகரீகம்னு போட்டுட்டு சுத்துறாங்க. நீதான் சிட்டிக்கு போகணும்னு சொல்லிட்டே இருப்பீயே… அங்க இருக்கிற மாதிரி நினைச்சிகிட்டு இங்க ஒருநாள் வர்றது…” என்று தச்சன் துடுக்காய் சொல்லிவிட, அவன் எடுத்துக்காட்டிய உவமையை மையமாக்கியே அவனை ஊமையாக்கியிருந்தாள் குந்தவை.
‘ரெண்டு நாள் இவ வந்ததுக்கே கண்ணை கட்டுதே… இன்னும் சொச்ச நாள் எப்படி போகப் போகுதோ… உன் வாய் தாண்டா உனக்கு வம்பை இழுத்துவிடுது. அவளுக்கு இப்படி பேசுனா பிடிக்காதுன்னு தெரியுதுள்ள அப்புறம் ஏன் இப்படி பேசி வைச்சி அவகிட்ட பேச்சு வாங்குற? அவளும் அடங்க மாட்டா உன் வாயும் அடங்காது…’ என்று மானசீகமாய் திட்டிக்கொண்டவன் இரவு உறங்கும் வரை கூட அடுத்து அவளிடம் வாய் கொடுக்கவில்லை. 
***
மங்களம் டீவி சீரியலில் ஆழ்ந்திருக்க, நீலா கொல்லையில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தார். அன்பரசனும் திண்ணையில் அமர்ந்து கணக்கு பார்த்துக் கொண்டிருக்க குந்தவை தனியாய் சிக்கும் நேரம் வரை காத்திருந்து அவளை மறித்தான் ராஜன், “தச்சன் எங்க? அதுக்குள்ள தூங்கிட்டானா?” ராஜனின் பார்வை தச்சன் அறை புறம் சென்று மீண்டும் குந்தவையிடம் வந்தது.
“இன்னைக்கு சீக்கிரம் படுத்துட்டாங்க. டாக்டர் என்ன சொன்னாங்க? பாட்டிக்கிட்ட கேட்டேன் ஒன்னுமில்லைன்னு சொன்னாங்க.” என்று மரியாதைக்காய் குந்தவை கேட்டுவைத்தாள்.
“இப்போ சாப்பிடுற மாத்திரையே தொடர்ந்து போட்டுக்க சொல்லிட்டாங்க. பெருசா ஒன்னும் பிரச்சனையில்லை.” என்று பதிலளித்தவன் ஒரு நொடி தயங்கி பின் குந்தவையை நேராய் பார்த்து,
“உன் அக்கா எப்படி இருக்காங்க குந்தவை? வேலைக்கு போறாங்க தானே? பிரச்சனை எதுவும் இல்லையே?” தயக்கம் உடைத்து ஒருவழியாய் தவிப்புடன் கேட்க, 
குந்தவை குழப்பமுடன், “நல்லாயிருக்கா அத்தான். ஏன் கேட்குறீங்க?”
குந்தவையின் கேள்வியில் சங்கடமாய் உணர்ந்தவன் புன்னகைக்க முயன்று, “சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன் குந்தவை. இங்கிருக்கும் போது பேசிட்டு இருந்தோம். வேலைக்கு போக தயங்குறாங்களோன்னு தோணுச்சு. ஆறுதலா பேசி அனுப்புனேன். அதுதான் இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க கேட்டேன்.” 
ராஜனின் பதிலில் குந்தவையின் குழப்பம் ஆச்சர்யமாய் மாறியது. இவர்கள் எப்போது பேசினார்கள்? வானதியும் இவரோடு பேசினாளா! 
குந்தவை மேலே எதுவும் சொல்லாமல் அமைதி காக்க, ராஜனுக்கு ஒருமாதிரி ஆகிப்போனது. குந்தவையிடம் நேரடியாய் கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றிய நேரம் அவள் வியப்பிலிருந்து வெளிவந்திருந்தாள்.
“இப்போ நல்லாயிருக்கா அத்தான். தைரியமா வேலைக்கு போயிட்டு வர்றா…” என்று குந்தவை முடித்துக்கொள்ள, ராஜனின் தடுமாற்றம் தீர்ந்தபாடில்லை.
“பசங்களுக்கும் பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன். நாளைக்கு ஒரு வேலையா மயிலாடுதுறை வரை போறேன். உன் வீடு எங்கிருக்குன்னு சொன்னா பசங்களுக்கு வாங்குனதை அப்படியே கொடுத்துட்டு வந்துடுவேன்.” என்று ஒருவழியாய் சொல்லி முடித்து குந்தவையின் பதிலுக்காய் காத்திருந்தான்.
‛இவங்க பேசுறது ஏன் எனக்கு வித்தியாசமா தெரியுது? இவங்க சாதாரணமா நடந்துக்கிறது எனக்குத் தான் வித்தியாசமா தெரியுதா இல்லை இவங்க தான் வித்தியாசமா நடந்துகிறங்களா? ஒன்னும் புரியலையே… வீட்டு அட்ரஸ் கேக்குறாங்க சொல்லாம இருந்தா நல்லாயிருக்காது. இவங்க அங்க போயிட்டு வரட்டும் அப்புறம் நாம வானதிகிட்ட பேச்சு கொடுத்து பார்ப்போம்.’ என்ற முடிவிற்கு வந்தவள் அவனிடம் வீட்டு முகவரியை சொல்லிவிட்டு, 
“எல்லோருக்கும் பரிசு வாங்கி இருக்கீங்க. என் அக்கா பசங்களுக்கு கூட பரிசு ரெடியா இருக்கு. எனக்கு எதுவும் வந்தபாடில்லையே?” என்று இலகுவாய் கேட்க, சங்கடமான முறுவல் ஒன்றை உதிர்த்த ராஜன், “இங்கேயே இரு. வந்துடுறேன்…” என்று அவளை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு அவளுக்கென வாங்கி வந்திருந்த பேனாவை எடுத்துவந்து நீட்டினான்.
“எல்லோருக்கும் டிரெஸ் எடுத்தேன். உனக்கு என்ன வாங்குறதுன்னு தெரியல… இது உனக்கு உபயோகமானதா இருக்கும்னு நினைக்கிறேன்.” 
புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டவள், “தம்பிக்கு மட்டும் ஊரிலிருந்து வந்தவுடனே பரிசு கொடுத்தாச்சு. எங்களுக்கு எல்லாம் லேட்டா தான் வருது. அதுவும் கேட்டா தான் வருது.”
”அப்படியில்லை தம்பி கொஞ்சம் முறைச்சிக்கிட்டு இருக்கான். அவனை தாஜா பண்ணலாம்னு பார்த்தேன்.” என்று நெளிந்தவன், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று சொல்லி, விட்டால் போதுமென நகர்ந்துவிட்டான்.
இன்னும் அங்கேயே நின்று பேச்சு கொடுத்தால் ‛அவள் அக்கா பிள்ளைகளுக்கு மட்டுமில்லை. அவள் அக்காவிற்கே அவன் பரிசு வாங்கி வந்திருப்பது எதற்கோ? ஏனோ?’ என்று அவன் மனசாட்சியே கேள்வியெழுப்பி அவனை மீண்டும் துரத்த ஆரம்பித்து விடுமே!

Advertisement