Advertisement

குந்தவை வேலைக்குப் போகிறாள் என்று தெரிந்ததும் தச்சன் தன்னுடைய பழைய போன் ஒன்றை சரிசெய்து கொடுத்திருந்தான். முதலில் தன்னுடையதை தான் எடுத்துக்கொள்ள சொல்லியிருந்தான். ஆனால் அவனின் தன்மானச் சிங்கம் அவன் சம்பாதித்து வாங்கித்தரும் போனை மட்டும் தான் வாங்கிக்கொள்வேன் என்று பிடிவாதமாய் நின்றாள். வேறுவழியின்றி அவனுடைய பழைய மொபைலை சரிசெய்து கொடுத்திருந்தான். அதுவோ எப்போது சார்ஜ் தீரும் என்றே கணிக்க முடியாத அளவு இருந்தது. இருந்தாலும் அதைவைத்தே ஓட்டிவிடலாம் என்று குந்தவை அலட்சியமாய் இருந்ததன் பலன் அவளுக்கு தேவையான நேரத்தில் சார்ஜ் இறங்கி அவளை பழிவாங்கிவிட்டது. 
தாமதமாகிவிட்டது பஸ் கிடைத்ததும் வந்துவிடுகிறேன் என்பதை வீட்டிற்கு சொல்லிவிடுவோம் என்று வேலை முடித்து கிளம்பியதும் தகவல் தெரிவிக்க எத்தனிக்கும் போதே அந்த மொபைல் பல் இளித்திருந்தது. 
ஆறேழு வருடங்களுக்கு முன் எங்கு திரும்பினாலும் கண்ணில் தென்பட்ட தொலைபேசி பூத்துகளும், ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் தொலைபேசிகளும் அலைபேசியின் ஆதிக்கத்தில் மடிந்து, அவசரத்திற்கு கூட இப்போது அடுத்தவரின் அலைபேசியை வாங்கும் நிலைதான். அந்நியரிடம் அலைபேசி கடன்வாங்கிப் பேச குந்தவைக்கு விருப்பமில்லை. பார்த்துக்கொள்ளலாம் ஒருநாள் தானே தாமதமாக வீட்டிற்குச் செல்கிறோம் என்று அமைதியாய் இருந்துவிட்டாள். ஆனால் அப்போது தெரிந்திருக்கவில்லை தச்சன் அவளைத் தேடி வீட்டிலிருந்து கிளம்பியதை… 
இவள் பஸ்ஸில் ஏறிய நேரம் அவன் அவள் வேலை செய்யும் அலுவலக வாயிலில் சென்று நின்றிருந்தான். அவள் அங்கில்லை என்றதும் பேருந்து நிலையம் வந்து தேட, அவள் ஏறியிருந்த பேருந்து எப்போதோ கிளம்பியிருந்தது. ஒருவழியாய் அவள் வீடுவந்து சேர்ந்து நீலாவின் அலைபேசியில் இருந்து அவனுக்கு தகவல் தெரிவிக்கும் வரை தச்சன் பயத்துடன் டவுனிலேயே அவளைத்தேடி அலைந்து கொண்டிருந்தான். 
நீலா போட்டபோடில் அவன் அலைந்தது நினைவில் வர பதற்றத்துடன் குந்தவையை பார்த்த தச்சன், “அம்மா சொல்றதும் சரின்னு தான் தோணுது.” என்று சொல்ல குந்தவை முறைத்த முறைப்பில் தச்சன் பொசுங்காதது வியப்பே.
“என்ன நீயும் இப்படி பேசுற? நாளைக்கே நமக்கு பொண்ணு பிறந்தா… அவளை பாதுகாக்கிறதா நினைச்சி வீட்டுக்குள்ளேயே வச்சிப்பீயா? படிப்பு வேலைன்னு அவளுக்கான சுதந்திரத்தை, அவளோட தன்னம்பிக்கையை பறிச்சி உரிமையானதை கூட வேலிபோட்டு தடுத்துடுவீயோ?” என்று குந்தவை அவன் மேல பாய,
“இன்னும் பிறக்காத பிள்ளைக்கு ஏன்டி இவ்வளவு யோசிக்கிற? இப்போ உன்னை பத்தி பேசிட்டு இருக்கோம்.” என்று நுழுவாத குறையாய் தச்சன் அந்த பேச்சை கத்தரிக்க முற்பட, அதெல்லாம் குந்தவையிடம் சாத்தியமாகுமா என்ன!
“ஏன் இன்னைக்கு இல்லேன்னா எப்போதுமே பிறக்காதா என்ன? இல்லை பையனா பிறந்துட்டா அப்பாடான்னு இருந்திடுவீயோ?”
“ஏய் என்னடி நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னை இழுத்து விடுற? பையனோ பொண்ணோ எந்த புள்ளையா இருந்தாலும் படிக்க வைக்கத் தான் போறோம். போதுமா?”
“அப்போவும் டவுனில் நல்ல ஸ்கூலில் தான் படிக்க வைக்கணும். அப்போவும் இதே பஸ் பிரச்சனை இருக்குமே? அப்போ என்ன செய்வ? அத்தை நீங்க சொல்லுங்க… அப்போவும் இதையே சாக்கா வச்சி வீட்டிலேயே பசங்களை அடச்சிடுவீங்களா?” என்று கேள்வியை தச்சன் புறம் மட்டுமின்றி நீலாவிடமும் வைக்க, நீலா தடுமாறி பின் சமாளித்தார்.
“அதெப்படி முடியும்… வேணும்னா நீங்க டவுன்ல ஸ்கூல் பக்கம் ஜாகை மாத்திக்கோங்க. பசங்க எதிர்காலம் தான் முக்கியம். நாங்க இங்கேயே இருந்துக்கிறோம். தச்சன் இங்கன வந்து வேலை பார்த்துட்டு போகட்டும்…” என்று சொல்ல, தச்சனுக்கு மட்டுமில்லை குந்தவைக்கே அவரின் பதில் அதிர்ச்சியாய் தான் இருந்தது. என் மகன் எனக்கு முக்கியம். அவனை விட்டுத் தரமாட்டேன் என்று சொன்னவரா இவர்! என்றுதான் பார்த்தாள் குந்தவை.
“என்ன பேசுற நீ? நான் அவகிட்ட இந்த ஊரை விட்டு வரமாட்டேன் இங்கதான் இருப்பேன்னு சண்டை போட்டுட்டு இருக்கேன். நீ என்ன என்னை போகச் சொல்ற? உன் மூத்த பிள்ளை வந்துட்டான்னு என்னை கழட்டி விடுறீயா நீ?” என்று தச்சன் அதிர்ச்சியாய், ஆதங்கமாய் கேட்க, நீலாவுக்கு அழுகையே வந்துவிட்டது.
“என்னடா இப்படி சொல்லிட்ட? குந்தவை வேலைக்கு போறதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதே மாதிரி குந்தவை கேட்பதிலும் தப்பில்லையே. வீட்டுக்குள்ளேயே அடைச்சி அடைச்சு தான் ஒண்ணுமே தெரியாம இருக்கோம். நமக்கு அடுத்து வர சந்ததியாவது நாலும் தெரிஞ்சி முன்னேறட்டும்னு வெளியே கொஞ்சம் தைரியமா அனுப்புனா அதுக்கு வேட்டுவைக்கிற மாதிரியான சம்பவம் தான் நம்மை சுத்தி நடந்துட்டு இருக்கு. எனக்கு ரெண்டு மனசா இருக்கு. அவளோட தைரியத்தை பார்த்து கர்வப்பட்டிருக்கேன் ஆனால் அதுக்காக அவளோட பாதுகாப்பில் கவனக்குறைவா இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சமூகம் மாறும், மாற்றம் வரணும்னு காத்திட்டு இருக்கிறதுக்கு பதிலா நாம முன்னெச்சரிக்கையா இருந்துப்போமே… இப்போ இருக்கிற காலகட்டத்தில் நம்மை நாமே தற்காத்துக்கிறது அத்தியாவசியம். அதில் நாமே அலட்சியமா இருக்ககூடாது. அதுதான் அப்படிச் சொன்னேன்… உங்களுக்கு இனி எது சரின்னு படுதோ அதையே செய்யுங்க. நான் எதுவும் சொல்லல… எனக்கு நீங்க நல்லாயிருந்தா போதும்.” என்று கண்ணை கசக்கிக்கொண்டே சென்றுவிட்டார்.
‘அடுத்து என்ன?’ என்பது போல சோர்வாய் தச்சன் குந்தவையைப் பார்க்க,
‘இதுக்கெல்லாம் பயந்து என்னோட எதிர்காலத்தை நான் இழக்கனுமா? இன்னும் எத்தனை நாள் தான் இப்படி காரணம் சொல்லி சொல்லியே அடக்குவீங்க? முடியாது.’ என்ற திண்மையாய் பார்த்தாள் குந்தவை.
தச்சன் அதற்கு மேல் அந்த விஷயத்தில் தலையிடவில்லை. குந்தவை சொல்வதும் நியாயமாய் இருந்தது, நீலாவின் பார்வையிலும் கேடு இருக்கவில்லை. அவரவர் எண்ணத்தில் சரியாய் இருக்கிறார்கள், நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாகிவிட்டான். இந்த பேச்செல்லாம் நடக்கும் போது அன்பரசன் வீட்டில் இருக்கவில்லை, அவர் வந்ததும் நீலா அனைத்தையும் சொல்லிவிட அவராலும் எவர் பக்கமும் நின்று அடித்து பேசமுடியவில்லை. நீலாவிடம் பேசும் போது அவரின் எண்ணம் சரியென்பதாகவும் குந்தவையிடம் பேச்சு கொடுத்த போது அவள் வேண்டுவதிலும் பிழையேதும் தெரியாமல் போக இரண்டு பக்கத்தில் எந்த பக்கமும் சாயமுடியாமல் அமைதியாகிவிட்டார்.
விண்ணைத் தாண்டியே பெண்கள் சென்றுவிட்டு வந்துவிடலாம் போல ஆனால் எவ்வித பதட்டமுமின்றி வீட்டைத் தாண்டி சென்றுவிட்டு வருவது தான் கடினமாகி வருகிறது. சில பெண்பிள்ளைகளுக்கு படிப்பை தொடர்வதே பிரச்சனை என்றால் படிப்பு, அறிவு என்று எல்லாம் இருந்தும் பல குந்தவைகள் தாங்கள் நினைத்ததை சாதிக்க ஏணிகள் கிடைக்கிறதோ இல்லையோ தடைகள் மட்டும் கொட்டிக் கிடக்கிறது. சிலது வீட்டினரால், சிலது பொதுப்பிரச்சனையால்… 
வாக்குவாதத்திற்கு பின் நீலாவை எதிர்பாராது குந்தவையே சமைத்து சாப்பாடு எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்று வந்தாள். காலையில் தச்சன் அலுவலகத்தில் விட்டுவந்துவிடுவான். மாலை பேருந்தில் திரும்பிவிடுவாள். ஆனால் அதுவும் ஒரேவாரம் தான். சண்டை போட்டு சிரத்தை எடுத்து சென்ற வேலையில் திருப்தி வரவில்லை. கடமைக்கென ஏற்ற இறக்கமின்றி சீராய் செல்லும் இயந்திரத்தனமான வேலையில் அவள் தேடியது அவளை அமைதியுறச் செய்வது எதுவுமே இல்லாமல் போக அந்த வேலையை விட்டாள். அதற்கும் வீட்டில் வரவேற்போ எதிர்ப்போ எதுவும் எழவில்லை. என்னவோ செய் என்பது போல அவள் போக்கில் விட்டுவிட்டனர்.
இங்கிருந்து அருகில் இருக்கும் டவுனில் வேலைக்கு சென்று வருவதிலேயே சிக்கல்கள் இருக்க, ஏற்கனவே அவள் பிறந்த ஊரில் சொல்லி வைத்திருந்த வேலைக்கு வீட்டிலிருந்தே தினம் சென்று வரலாமா என்றெழுந்த யோசனை கூட அடிபட்டு போனது. டவுனிலே வேறு வேலை தேடலாமா இல்லை கல்யாணமான புதிதில் தச்சனிடம் சண்டையிட்டது போல தனியாய் நகரத்தில் தங்கி வேலை செய்வோமா என்று இன்னொரு கோணத்தில் எண்ணங்கள் சென்றாலும் இப்போது அனைவரையும் விட்டுவிட்டு செல்வது எந்தளவு சாத்தியம் என்பதில் ஐயமே! ஆக அவளுமே என்ன செய்வது என்ற குழப்பத்தில் தான் ஒருவாரத்தை தள்ளினாள்.
இவள் என்ன அமைதியாக இருக்கிறாள்… அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று அனைவருமே எதிர்பார்த்திருக்க, யாருமே எதிர்பாரா வண்ணம் தச்சனுக்கு துணையாய் கழனியில் இறங்கப் போகிறேன் என்று அதிரடியாய் சொல்ல, தச்சனுக்கு துணையாய் உள்ளூரிலே இருக்கப்போகிறாள் என்ற செய்தி நீலாவை குஷிப்படுத்தியது. ஆனால் தச்சன் மட்டும் கூடவே கூடாது என்று மல்லுக்கு நின்றான்.
“நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்றேன் குந்தவை. உனக்கு இது பிடிக்காதுன்னு எனக்கு தெரியும், அப்புறம் ஏன் இங்கே வரேன்னு சொல்ற?”
“நான் ஆரம்பத்திலேயே தெளிவா சொல்லியிருக்கேன் வானதிக்கு அப்படி நடந்ததால் தான் எனக்கு விவசாயம் மேல ஒரு பிடிமானம் இல்லாம போச்சு… நான் தேடிக்கிட்ட வேலையும் எனக்கு திருப்தியா இல்லை. இதுக்கு மேல என் மனசை மாத்த பார்க்காத… நான் உன்கூட வரேன் அவ்வளவுதான்…” என்று பிடிவாதம் பிடித்தாள். தச்சனும் பிடிவாதமாய் அவளை மறுத்துப் பார்த்தான். அவள் கேட்டால்தானே! 
“டேய் வேலை செய்யாம என்ன கனா கண்டுட்டு நிக்குற? குந்தவையை வரச்சொல்லவா நேர்லேயே டூயேட் பாடலாம்… ஆடலாம்…” என்று குணா தச்சனை உசுப்ப, நினைவடுக்கிலிருந்து வெளிவந்து அவனை முறைத்தான் தச்சன்.
“உன் தங்கச்சியாவது டூயட் ஆடுறதாவது… கதக்களி வேணும்னா ஆடுவா… நீயும் ஏதாவது கிறுக்குத்தனமா பேசுனா உன்னையும் புட்பால் ஆடுவா…”
“என்னை ஏன்டா உள்ள இழுக்குற? ஏற்கனவே ஒருதடவை என்னை குந்தவைகிட்ட கோர்த்துவிட்டு திட்டுவாங்க வச்சது பத்தாதா… நான் ஆட்டத்துக்கே வரலடா சாமி… ஆளை விடுங்க.” என்று கையெடுத்து கும்பிடாத குறையாய் கழன்றவன்,
‘இனி இதுங்க பஞ்சாயத்தை வேற பார்க்கணுமா நானு… சீக்கிரம் குந்தவையை பேக் பண்ணி அனுப்பிடனும் இல்லைனா நம்ம தலையை உருட்டிடுவாங்க புருஷனும் பொண்டாட்டியும்…’ என்று முனகிக்கொண்டே தச்சனை விட்டு நகர்ந்தான் குணா…
***
“உன்னை எங்கெல்லாம் தேடுறது இங்க வந்து உட்கார்ந்திருக்க? என் போன் உன்கிட்ட தான் இருக்கா? சட்டையில ஒண்ணுமே இல்லை?” கதிரவன் மேற்கு நோக்கி தன் சுழற்சியை வேகப்படுத்தியிருக்க, குந்தவையை தேடிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான் தச்சன்.
“போன் பணமெல்லாம் என்கிட்டதான் இருக்கு. தூர்வாருற வேலை எவ்வளவு முடிஞ்சிருக்குன்னு பார்க்க வந்தேன்… இங்க நிறையா அக்காங்களும் வேலை பார்த்துட்டு இருந்தாங்க அவங்ககூட பேசிட்டு இங்கேயே இருந்துட்டேன். நான் இறங்கி வேலை செய்யலாம்னு பார்த்தா எனக்கு ஒன்னுமே தெரியல. நீயும் அப்படியே விட்டுட்டு போயிட்ட… உனக்கு தெரிஞ்சதை சொல்லிக் கொடுத்தால்தான் என்னவாம்? நான் இங்க வேடிக்கை பார்க்கவா வர்றேன்?” இயல்பாய் துவங்கி அவள் குரல் ஆதங்கத்தில் முடிந்தது.

Advertisement