Advertisement

*21*
“ரெண்டு நாளா ஆளே மாறிட்ட? எல்லாம் தங்கச்சியின் கைவண்ணமோ?” தச்சனை மெச்சுதலாய் பார்த்த குணா கைலியை மடித்து கட்டிக்கொண்டு கழனியில் இறங்க, தச்சன் கெத்தாய் தன் சட்டை காலரை தூக்கிவிட்டான்.
“கெத்தா இருக்குள்ள? நான்கூட எப்படி இருக்குமோன்னு யோசனையிலேயே தான் தாடி எடுத்துட்டு வேட்டி சட்டைக்கு மாறுனேன். ஆனா நம்ம மக்கா கொடுக்குற மரியாதை இருக்கே… இத்தனை வருஷத்தில எவனும் என்னை இப்படி மரியாதையா பார்த்தது இல்லைடா… வேட்டிக்குன்னு ஒரு தனி மரியாதை இருக்குடா. நமக்கு ஆகாத பயலுக கூட இப்போ தள்ளிப் போறானுங்க. கெத்துன்னு சொன்னாலே உன் தொங்கச்சி அடிக்காத குறையா எகிறிகிட்டு வருவா… ஆனால் இப்போ தான் உண்மையான கெத்து எதுன்னு புரியுது. செம்மையா இருக்குள்ள? நம்மளை மதிச்சி கும்புடு வேற போடுறானுங்க.” என்று சிலாகித்து சொல்ல, கழனியில் போட இருந்த உரத்தில் ஒருபிடி எடுத்து தச்சனின் மீது வீசினான் குணா.
“ரொம்ப பறக்காதடா. கொஞ்சம் கீழ இறங்கி தரையில காலை வை.”
சட்டையில் ஒட்டி இருந்த உரத்தை தட்டிவிட்டபடியே குணாவை முறைத்தவன், “பொறாமைடா உனக்கு. நீயும் கல்யாணம் பண்ணிக்கோ… செம்மையா வாழலாம். இதுபோல சிலபல நல்ல விஷயமும் நடக்கும்.” என்று தச்சன் கண்ணடிக்க, குணா அவனை நோக்கி மெச்சுதல் பார்வை ஒன்றை வீசி,
“இதை இப்போ நான் சொல்லியே ஆகனும். அஞ்சா நெஞ்சன்டா நீ… உனக்கு நேரதிரான பொறுப்பான பொண்ணை கட்டிகிட்டு எப்படி தான் காலத்தை தள்ளப் போறீயோன்னு நினைச்சேன். ஆனா குந்தவையை சமாளிக்குறது மட்டுமில்லாம என்னையும் கல்யாணம் பண்ணிக்க சொல்ற பார்த்தியா… அங்க நிக்குற நீ. மத்த கல்யாணமான பயலுவோ எல்லாம் கல்யாணமே பண்ணிக்காதேன்னு அட்வைஸ் பண்றானுங்க. நீதான்டா பின்ற…”
“குந்தவையை சமாளிக்கிறது எல்லாம் சப்பை மேட்டருடா. அதுக்கு பயந்தெல்லாம் கல்யாணம் பண்ணிக்காதேன்னு சொல்ல மாட்டேன்.” என்று அனாயசமாய் சொன்ன தச்சனை சந்தேகத்துடன் பார்த்து நின்றான் குணா.
“நம்புற மாதிரி இல்லையே? குந்தவை பாய்ண்டு புடிச்சி மடிக்கி பேசுற ஆளு. உன் திருட்டுத்தனம் எல்லாம் அங்க செல்லுபடி ஆகாதே.”
“குந்தவையை நான் எப்படி சமாளிக்கிறேன்னு ஆராய்ச்சி பண்ணி என்ன பண்ணப்போற? வேலையைப் பாருடா…”
“எல்லாம் என்நேரம்டா… உன் அலைப்பறை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. இன்னைக்காவது இறங்கி வேலை செய்யுற எண்ணம் இருக்கா இல்லா பண்ணையார் மாதிரி மரநிழலில் போய் கால்மேல கால் போட்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கப் போறீயா?” என்று குணா கேலியாய் இழுக்க, 
அப்பாவியாய் உதட்டை சுழித்த தச்சன், “புது வேட்டி சட்டை அழுக்காகிடும்டா.”
“அடிங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில் குந்தவை வந்துடும்ல. அப்போ இதை சொல்லித் தான் பாரேன்…” என்று குணா சும்மா பேச்சுக்காக சொல்ல, உண்மையாகவே அங்கு வந்து நின்றாள் குந்தவை.
“என்ன சொல்லணும் என்கிட்ட?” 
“ஒன்னுமில்லையே… நீ என்ன இவ்வளவு சீக்கிரமே வந்துட்ட? எப்படி வந்த? கிழவியை யார் கூட்டிட்டு போறா? நீ கிழவி கூட போகலைன்னு தெரிஞ்சிருந்தா நானே இங்க உன்னை கூட்டிட்டு வந்திருப்பேன்.” என்று குணாவை பேசவிடாது குந்தவையிடம் கேள்விகளை அடுக்கினான் தச்சன். 
‘உன் டக்கு இவ்வளவு தானா?’ என்பது போல குணா கேலியாய் புருவம் உயர்த்தி அவனைப் பார்த்து சிரித்து நின்றான்.
“அத்தானே பாட்டியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க… அதுதான் நான் மாமாகூட வந்துட்டேன்.” என்றாள் குந்தவை பதிலாய். 
நேற்று மதியத்திற்கு மேல் அவனுடன் வயலுக்கு வருகிறேன் என்று சொன்னவள் மதியம் இருந்த களைப்பில் வீட்டிலேயே இருந்துகொண்டாள். இன்றோ மங்களம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்யும் வழக்கமான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைக்கு குந்தவை அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லியிருக்க, கடைசி நேரத்தில் ராஜன் நான் கூட்டிச் செல்கிறேன் என்றுவிட்டான். இவளும் அன்பரசனுடன் கிளம்பி வயலுக்கு வந்துவிட்டாள். இவள் இன்று வரமாட்டாள் என்ற மிதப்பில் தான் தச்சன் குணாவிடம் வாயாடிக் கொண்டிருந்தான். அதில் இப்போது மண்விழுந்து விட்டதில் சற்று உதறலே தச்சனுக்கு. குணா தேவையில்லாமல் எதையாவது உளறி வைத்தால் மீண்டும் அவளின் உபதேசங்களை யார் கேட்பது! 
“நான் வரும்போது ஏதோ பேசிட்டு இருந்தீங்களே என்னது?” என்று குந்தவை விடாது துவங்க, அவள் கைபிடித்து தூரத்தில் இருக்கும் மரநிழலை நோக்கி இழுத்தே சென்றுவிட்டான் தச்சன்.
“டேய் மெதுவா… எனக்கு கால் தடுக்குது. ஏன் இப்போ என்னை வேகமாக இழுத்துட்டு போற? எல்லாரும் பார்க்கிறாங்க. கையை விடு.” என்று குந்தவை அடிக்குரலில் சீற, நடையின் வேகத்தை குறைத்தவன் நிழலுக்கு சென்ற பின்னே தான் அவள் கையை விட்டான்.
“என்ன பண்ணி வச்சிருக்க? அந்த அண்ணன் ஏதோ சொல்ல முயற்சி பண்ணாங்க நீ அதுக்கு அவகாசமே கொடுக்காம என்னை அழைச்சிட்டு வந்துட்ட…” என்று குந்தவை சரியாய் கேட்க, அவளுக்கு முன்னேயே தலையிலடித்துக் கொண்டான்.
“சரியான விடாக்கண்டியா இருக்கீயே…”
“அதென்னடா விடாக்கண்டி?”
“ஷப்பா… விடுடி… கேள்வி கேட்கவே பிறந்திருப்ப போல… நீ இங்கேயே இருந்து மேற்பார்வை பாரு. நான் மறுபக்கம் உரம் வச்சிட்டு வந்துறேன்.” என்றவன் அவளுக்கு அவகாசம் கொடுக்காது சட்டையை கழற்றி அவளிடத்தில் திணித்துவிட்டு, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தேவையானதை கையோடு எடுத்துக்கொண்டு கழனியில் இறங்கிவிட்டான்.
அவன் செல்வதையே பார்த்து நின்ற குந்தவை, ‘வேணும்னே இப்படி அவசர அவசரமா வேலை செய்யுற மாதிரி ஓடுறான். இப்போ நான் என்ன பண்றது? வேடிக்கை பார்க்கவா இங்க வந்தேன்? ஏதாவது வேலை சொல்லிட்டு போயிருக்கலாம்.’ என்று புலம்பியவள் பெருமூச்சை வெளியேற்றி, அவன் சட்டையில் இருந்த பணத்தையும் அவன் மொபைலையும் கையிலெடுத்துக்கொண்டு சட்டையை அங்கேயே மரத்தில் மாட்டிவிட்டாள். 
தெரிந்தவர்கள் யாரும் எதிரே தென்படுகிறார்களா என்று நோட்டம் விட்டபடியே காலாட நடந்து முந்திய நாள் தூர்வாரிய இடத்தை அடைந்து அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களோடு ஒன்றிவிட்டாள்.
இங்கோ குந்தவையிடமிருந்து தப்பித்தோம் என்ற திருப்தியில் குணாவை நோக்கி உரம் வீசிக்கொண்டு வந்த தச்சனை கேலியாய் பார்த்து சிரித்தான் குணா, “இதுதான் நீ சமாளிக்கிற லட்சணமா தச்சா… குந்தவை இப்படி இருக்கும்போதே நீ தெனாவெட்டா சுத்துறேன்னா எதாவது அப்பாவி பொண்ணு உன்கிட்ட மாட்டியிருந்தா அந்த பொண்ணு கதி ரொம்ப குஷ்டம்டா…”
“இப்போ என் நிலைமை தான் குஷ்டமா இருக்கு…” என்று குணாவை இடித்தவன், தன் வேலையை பார்த்துக்கொண்டே, “குந்தவை நல்ல பொண்ணு தான் ஆனா இருபத்திநாலு மணிநேரமும் கூடவே இருந்தா சரியா இருக்காதோன்னு தோணுது. எனக்கும் அவளுக்கும் எல்லா விஷயத்திலும் முட்டிக்குது.”
“இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி வேற ஏதோ சொன்னமாதிரி இருந்துச்சே! அதுக்குள்ள என்னடா அப்படியே அந்தர் பல்டி அடிக்குற? உங்களுக்குள்ள வேறுபாடுகள் இருந்தாலும் ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுக்காம தானே இருக்கீங்க! எல்லாம் சரியாத்தான் வரும். இல்லாத மூளையை ரொம்ப கசக்காத…” என்றான் குணா கேலியை கைவிட்டு… நண்பர்களுக்குள்ளான பேச்சுக்கள் கேலியை கைவிட்டு தீவிரமாய் மாறியது.
“ப்ச்… அதைவிடு., இங்க பக்கத்துல எங்கேயாவது குந்தவை வேலை செய்யுற மாதிரி உனக்கு தெரிஞ்ச காலியிடமிருந்தா சொல்லு. நல்ல இடமா பாதுகாப்பா இருக்கணும்.” 
“டவுனுக்குள்ள போனா நல்ல வேலை கிடைக்குமே. நீயே விசாரிக்கலாமேடா. குந்தவையும் ஏதோ வேலைக்கு போச்சே அதுக்கே தெரிஞ்சிருக்குமே?” 
“எனக்கும் குந்தவைக்கும் தெரிஞ்சா நான் ஏன்டா உன்கிட்ட கேட்கப் போறேன்? தெரிஞ்சா சொல்லு இல்லையா கம்முன்னு இரு.” என்று தச்சன் தன் இயல்பை விட்டுச் சொல்ல, குணா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
ஏற்கனவே அவர்கள் ஊரிலிருந்து இருபது மைல்கள் தள்ளி டவுனில் கிடைத்த வேலையில் குந்தவை சேர்ந்து ஒருவாரம் தான் ஒழுங்காய் சென்றிருப்பாள் அதற்குள் தொந்தரவுகள் வரத்துவங்கியது. வேலைக்குச் சென்ற புதிதில் அங்கிருப்பது பிடிபடவே இரண்டு நாள் தேவைப்பட்டது. அதன் பின்னோ அந்த அலுவலக வேலை அவளுக்கு சலிப்பாகி விட்டது. அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலையோ தகவல்களை கணினியில் பதிவேற்றும் வேலை. அதைத் தான் வேறேதோ பெயர் சொல்லி பூசி மொழுகி அவளை அங்கு சேர்த்துக்கொண்டனர். இளங்கலை இயற்பியல் படித்திருந்த அவளுக்கு வளர்ச்சிகளற்ற அந்த பணியை செய்வதில் சுணக்கமே. வேறு வேலை கிடைக்கும் வரை சும்மாயில்லாமல் இதையே தொடர்வோம் என்றுதான் சென்றுவந்து கொண்டிருந்தாள். அதற்கும் ஆப்படிக்கும் விதமாய் நீலா மெல்ல மெல்ல குறை படிக்கவும் துவங்கியிருந்தார்.
காலை நேரமே சமைத்து குந்தவைக்கு மதியசாப்பாடு கட்டிக்கொடுப்பதில் துவங்கிய சிறு சிறு முனகல்களும் உரசல்களும் குந்தவை வெளிவேலையைக் காட்டி வீட்டுவேலை செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்கிறாள் என்பதில் வந்து நின்றது. நீலா எதையுமே நேரடியாய் சொல்லவில்லை ஆனால் அவரின் முனகல்கள் அவ்வப்போது அந்த வீட்டில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒன்றிரண்டு முறை தச்சன் மல்லுக்கு நின்றான். ஆனால் அவனே பேசமுடியாத வகையில் ஒருநாள் குந்தவைக்கு வேலை முடிய தாமதமாகி, அன்று பேருந்தும் தாமதமாகவே கிடைக்க, வீடுவந்து சேரவும் நேரமாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துவிட்டாள். 
“எங்களையெல்லாம் இப்படி பயமுறுத்தி நீ வேலைக்குப் போய் சம்பாரிச்சுத் தான் ஆகணும்னு இல்லை குந்தவை. நீ புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன். என்னை கடுமையா பேச வச்சிடாத.” என்று பட்டும்படாமல் நீலா சொல்லிவிட, குந்தவைக்கு முதலில் கோபம் தான் வந்தது.
தச்சன் நேரமே வீடு வந்துவிடுபவன் தான். அறுவடை நேரம் நெருங்குவதால் தற்போது தாமதமாய் வீடுவருகிறான். ‘அதேபோலத் தான் நானும் என் வேலையை முடித்துவிட்டு தானே வரமுடியும்? வேலைப்பளுவை புரிந்து கொள்ளாமல் என்னை மட்டும் எதற்கு சாடவேண்டும்?’ என்ற சினம் எழ அதை நேரே கேட்டும் விட்டாள்.
“மாமாவோ இல்லை உங்க புள்ளையோ இப்படி வேலையால் தாமதமா வீட்டுக்கு வந்தா வேலைக்கே போகாதீங்கன்னு சொல்லி அவங்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லுவீங்களா அத்தை?”
“அதெப்படி முடியும்?” நீலாவிடமிருந்து உடனே பதில் வந்தது.
“அப்போ என்னை மட்டும் எதுக்கு சொல்றீங்க? அவங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? நான் ஏற்கனவே வேலைக்கு போவேன்னு சொல்லியிருக்கேன் அத்தை. எல்லாம் தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுறது எனக்கு வருத்தமா இருக்கு.”
“நியாயம் அநியாயம் பார்க்கிற நிலைமையில் நாடு இல்லை குந்தவை. உன்னை அவ்வளவு தூரம் வேலைக்கு அனுப்பிட்டு நீ எப்போ வருவீயோ? பத்திரமா வந்துடுவீயான்னு பயந்துகிட்டே ஒவ்வொரு நாளும் என்னால கடத்த முடியாது. உன் எண்ணம் சரியா இருந்தாலும் அது ஊரோட ஒத்துப்போகிற வகையில் இல்லை. ஆணும் பெண்ணும் சமம்னு நீ எவ்வளவு கூப்பாடு போட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்காய் இங்கிருக்கிற பாதி செவிடன்களுக்கு கேட்காது. 
நீ இழுத்து போர்த்திகிட்டு போனாலும் எவன் கண்ணு நோள்ளக்கண்ணு எவன் எண்ணம் ஒழுக்கமானதுன்னும் நமக்குத் தெரியாது. என்னை காப்பாத்திக்க எனக்குத் தெரியும்னு நீ சொல்லலாம் ஆனால் வீட்டில இருக்கிற எங்களுக்கு நெருப்பை கட்டிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. பிஞ்சிலிருந்து கிழவி வரை பெண்ணா பிறந்த யாருக்கும் பாதுகாப்பில்லை. அதுவும் நம்ம பக்கம் எல்லாம் கிராமம். சாயும்காலம் ஆறுமணிக்கு மேல இங்க சுத்துவட்டார மெயின் ரோட்டில் கூட ஆள்நடமாட்டம் குறைஞ்சிடும். தச்சனால் தினம் உன்னை அழைச்சிட்டு வரமுடியாது. அவனுக்கும் இப்போ வேலை சரியா இருக்கு. நம்ம ஊருக்கு டவுனிலிருந்து ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தான் பஸ்… எப்படி உன்னை அனுப்ப எங்களுக்கு தைரியம் வரும்னு நீயே சொல்லு.” என்று நீலா எதிர்கேள்வி எழுப்ப, குந்தவைக்கு ஆதரவாய் எப்போதும் நிற்கும் தச்சனே நடுங்கித்தான் விட்டான்.

Advertisement