Advertisement

20.3

“இன்னும் வேற ஏதாவது பாக்கி இருந்தா சொல்லிடு. மொத்தமா செஞ்சிடுறேன். இப்படி கொஞ்ச கொஞ்சமா லிஸ்ட் போட்டா மலைப்பா இருக்குள்ள…”
“இப்போ நீ என்மேல இருக்குறது தான் மலை மாதிரி இருக்கு. நகருடா…”
“முடியாது போடி!”
“தள்ளுடா…”
“நீ சொல்றதை நான் கேட்கனும்னா நான் சொல்றதை நீ கேட்கணும்.”
“ஒரு ஆணியும் புடுங்க வேணாம். நான் இப்படியே தூங்கிடுவேன்.”
“தூங்கேன் பார்ப்போம்…” என்று சவாலாய் சொன்னவன் அவள் கழுத்து வளைவில் குறுகுறுப்பு மூட்ட, குந்தவை இடவலமாய் நெளிந்து புன்னகைக்க, சிறிது நேரத்திலேயே அவனின் கைவண்ணத்தில் அவளது புன்னகை சிரிப்பொலியாய் மாறி, உடலும் உள்ளமும் நெகிழ்ந்து நாணத்தை பூசிக்கொண்டது.
***
அதிகாலையே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்ல வேண்டும் என்று தெரிந்தும் மேலும் ஒரு பத்து நிமிடம் உறங்கிவிட்டு செல்லலாம் என்று நினைக்கும் போதே குந்தவை வந்து உலுக்க, எரிச்சலுடன் திரும்பிப் படுத்தான் தச்சன்.
“எழுந்திருடா. வயலில் மோட்டார் போடணுமே நேரமாச்சு. தண்ணீர் பாய்ச்சிட்டு தோட்டத்திலிருந்து அத்தான் வர்றதுக்குள்ள அவருக்கு இளநீர் எடுத்துட்டு வருவீயாம். அத்தை சொல்லச் சொன்னாங்க.” என்று குந்தவை அவசரமாய் அவனை எழுப்ப எந்த பதிலும் இல்லை அவனிடம்.
“எழுந்திருன்னு சொல்றேன்ல… வயலுக்கு போற எண்ணமே இல்லையா?” என்று குந்தவை மீண்டும் சத்தம் போட, பல்லை கடித்துக்கொண்டு போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்தி மறைந்துகொண்டான். அவனது செயல்கள் அவளது பொறுமையை சோதிக்கத்தான் செய்தது. 
“கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? நேத்து அவ்வளவு பேச்சு பேசிட்டு இப்போ இழுத்து போர்த்திக்கிட்டு தூங்குறதை பாரு… வாய்ச்சவடாலுக்குத் தான் லாயக்கு நீ.” என்று குந்தவை பொரிந்து தள்ள, போர்வையை விலக்கிவிட்டு கடுப்புடன் எழுந்தமர்ந்தான் தச்சன்.
“இன்னைக்கு ஒருநாள் சீக்கிரம் எழுந்துட்டு ஏன்டி என்னை படுத்துற… அவனுக்கு இளநீர் எடுக்கவெல்லாம் போக முடியாது. தண்ணியை குடிச்சிக்க சொல்லு இல்லைனா எனக்கு எப்போதும் கொடுக்குற பழைய கஞ்சியை குடிக்கச் சொல்லு. இளநீர் இல்லைனா தேஞ்சி போயிட மாட்டான்.”
“உடம்பு முழுக்க கொழுப்புடா உனக்கு… அத்தையை சொல்லணும். தடியனா வளர்த்து விட்டிருக்காங்க.”
“எதுக்கு இப்போ காலையிலேயே நீலாவை இழுக்குற?”
“அவ்வளவு அக்கறையும் பாசமும் இருந்தா அத்தை சொன்னதை செய்… அதை விட்டுட்டு வீண் காரணம் கண்டுபிடுச்சு அத்தான் மேல பகையை வளர்த்துட்டு இருக்க?”
“அவன் என்ன என்னோட எதிரியா நான் பகையை வளர்த்துக்க? சும்மா இதையே சொல்லிட்டு இருக்க?”
“அப்போ அவங்க யாரு உனக்கு?”
“இந்த நேரத்தில் இந்த பேச்சு தேவையா? நான் கிளம்புறேன்.” என்று எழ, அவனை தடுத்தாள் குந்தவை.
“என்னோட கேள்விக்கு பதிலை சொல்லிட்டு போ. அத்தான் யாரு உனக்கு?”
“இதென்ன கேள்வி. பதில் தெரிஞ்சிகிட்டே என் நேரத்தை வீணடிக்கிற குந்தவை. நகரு… எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று தச்சன் எரிந்து விழ, அவனை அழுத்தமாய் பார்த்து அவன் கையையும் இறுக பிடித்து நிறுத்தினாள் குந்தவை.
“என் கேள்விக்கான பதில் எனக்குத் தெரியும். ஆனா உனக்கு தெரியுமாங்குறது தான் எனக்கு சந்தேகம். பதில் சொல்லிட்டு உன் வேலையை பார்க்கப் போகலாம்.”
“ப்ச்… என்னடி ஏழரையை காலையிலேயே இழுக்குற. அவன் என் அண்ணன் தான் போதுமா? பதில் கிடைச்சிடுச்சா? நான் போகலாமா?”
“பதில் எனக்குத் தேவையில்லை. உனக்கு தான் தேவை. மனசுல ஏத்திக்கோ. அவங்க உன் அண்ணன். உன் கூட பிறந்தவங்க.”
“அதெல்லாம் உணரணும்டி… சும்மா சும்மா அவன் என் அண்ணன் அண்ணன்னு சொல்றதால அவன் மேல எனக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடாது. நானா உணரனும் அவன் என்கூட பிறந்தவன்னு… திவ்யா எப்படியோ அவனும் எனக்கு அப்படித்தான்னு என்னைக்கு எனக்கு தோணுதோ அப்போ நானே சரியாயிப்பேன். நீ அதுவரைக்கும் என்னை நச்சரிக்காம இருந்தாலே போதும். சும்மா குறுக்கால பூந்து எதையாவது செஞ்சிட்டு இருக்காத.” என்று கண்டிப்பு காட்ட, இது தேறாது என்று குந்தவை முனுகளுடன் நகர்ந்து கொண்டாள்.
அவள் நகர்ந்ததும் விரைவாய் கிளம்பி வயலுக்கு சென்று தண்ணீர் பாய்ச்சிவிட்டு திரும்பியவன் மறவாது தோட்டத்தில் இருந்து இளநீரும் எடுத்து வந்து நீலாவிடம் நீட்டினான்.
“எங்க உன் புள்ளை? வந்துட்டானா?” தச்சனின் கேள்வி அக்கறையின்றி ஒலித்தாலும் அவனது விழிகள் ராஜனை தேடின. 
ஏற்றுக்கொண்ட ஆர்டர்களை முடித்துவிட்டு சேர்க்க வேண்டியதை அதன் இடத்தில் சேர்த்துவிட்டு குடும்பத்துடன் மீதி வாழ்க்கையை தொடர வீட்டிற்கே வந்துவிடுவேன் என்று வானதி ஊருக்குச் சென்றவுடனேயே சொல்லிச் சென்றவன் இருபத்தைந்து நாட்கள் கழித்து மீண்டும் அன்று தான் வீடு வருவதாய் இருந்தது. அந்த பரபரப்பில் தான் நீலாவும் பெரிய மகனை கவனிக்கவென அவனுக்கு பிடித்த உணவுகளை மும்மரமாய் தயார் செய்துகொண்டிருந்தார். தச்சனும் அந்த இருபத்தைந்து நாட்களும் தன்னியல்பிலேயே சுற்றிக்கொண்டிருந்தான். ராஜன் வருகிறான் என்று தெரிந்ததும் அதிருப்தியும் சேர்ந்தே வந்து ஒட்டிக்கொண்டது.
“அண்ணன்னு கூப்பிடுன்னு எத்தனை முறை சொல்றது?” நீலா முறைப்புடன் மகனைக் கடிய, அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை தச்சன்.
“சீக்கிரம் சாப்பாடு எடுத்துவை. எனக்கு பசிக்குது.”
“குந்தவையை எடுத்து வைக்கச் சொல்றேன். ராஜன் பின்னாடி இருக்கான். போய் பாரு.” என்று நீலா வேலைக்கு இடையில் சொல்ல, தச்சன் நேராக திண்ணையில் சென்று அமர்ந்துகொண்டான். 
அவனைத் தொடர்ந்து பின்னேயே வந்த ராஜன் அவனருகில் உட்கார்ந்து, “இப்போ தான் வந்தீயா தச்சா? வயலுக்கு போயிருக்கேன்னு அம்மா சொன்னாங்க.” என்று இயல்பாய் பேச, தச்சனிடம் அந்த இயல்பு துளியுமில்லை.
“நான் வந்துட்டேன்னு தெரிஞ்சி தானே வந்து பேசுற… அப்புறம் என்ன இப்போதான் வந்தீயான்னு ஒரு கேள்வி?” என்று இடக்காய் தச்சன் வேண்டுமென்றே சொல்ல, இதழ்களை பெரிதாய் வளைத்தான் ராஜராஜன்.
“ஒண்ணா வளர்ந்திருந்தா எப்படி இருந்திருக்கும்னு கற்பனை பண்ணி, எல்லாத்தையும் தவற விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டுட்டு இருந்தேன்… அதை ஈடுசெயுற மாதிரி நீ நடந்துகுற. எல்லாத்துக்கும் முகத்தை தூக்கிட்டு உன்னை யாரும் கண்டுக்கலைன்னு நீ பண்றதெல்லாம் பார்க்கும் போது வளர்ந்த சின்ன தம்பியா தெரியுற…”
அவனது பேச்சை கண்டும் காணாதது போல காட்டிக்கொண்டாலும் தச்சனால் தன் வறட்டுப் பிடிவாதத்தை இழுத்துப்பிடித்து வைத்திருக்க முடியவில்லை.
“என்னது சின்னத்தம்பியா?” என்று முகத்தை சுழித்து வினை புரிந்த தச்சன் தன்னையும் மறந்து குனிந்து ஒருமுறை தன்னை பார்த்துவிட்டு ராஜனிடம் அதே சுழிப்புடன், “சின்னத்தம்பி பிரபு மாதிரியா இருக்கேன்?” என்று கேட்க, ராஜன் சிரித்தே விட்டான். அவனின் சிரிப்பில் தச்சனின் முகம் மீண்டும் இறுகிவிட, சிரிப்பை மட்டுப்படுத்திய ராஜன்,
“கொழுகொழுன்னு அப்படி இருந்தாலும் நல்லாத்தான் இருப்ப… ஆனா களத்தில் இறங்கி வேலை செய்றீல்ல உடம்பு இப்படித்தான் இருக்கும். நீ தாடியை எடுத்துட்டு, மீசையை முறுக்கிவிட்டு, வேஷ்டி கட்டி நடந்துபோனா கம்பீரமா இருப்ப…” என்று சொல்லி தச்சனின் கன்னம் தட்டி, கையோடு எடுத்து வந்திருந்த பையையும் அவனிடம் நீட்டி, 
“உனக்காக வாங்கிட்டு வந்தேன்.” என்று அதை அவன் கையில் திணித்துவிட்டு முறுவலோடு எழுந்து சென்றுவிட, ராஜன் செல்வதையே பார்த்த தச்சன் அவன் மறைந்ததும் அவன் கொடுத்துவிட்டுச் சென்ற பையை பிரித்துப் பார்த்தான். அதில் கதர் வேட்டியும் நீலநிற முழுக்கை சட்டையும் இருந்தது.
‘பரவாயில்லை நமக்காக வாங்கிட்டு வந்திருக்கான். கொஞ்சம் பாசக்காரனா இருப்பான் போல… குந்தவை ஆசைப்பட்ட மாதிரி இன்னைக்கு இதை கட்டிட வேண்டியது தான்.’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவன், தாடியை மழித்து மீசையை முறுக்கிவிட்டு வேட்டி சட்டையில் வந்து நின்றதும் ராஜனின் மனம் குளிர்ந்துவிட்டது. அவனுக்கு குந்தவையும் இதையே சொல்லியிருப்பது தெரியாதே! தான் சொன்னதாலேயே தச்சன் இப்படி வந்து நிற்கிறான் என்று நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டான்.
“அட என்ன எல்லாம் புதுசா இருக்கு?” என்று அன்பரசன் மேலும் கீழும் இளைய மகனை பார்த்துவிட்டு தன் வேலையைத் தொடர,
“ராஜன் வாங்கிக்கொடுத்தது நல்லாயில்லாம இருக்குமா?” என்ற நீலாவின் குரல் உற்சாகமாய் சமையலறையிலிருந்து கேட்டது.
‘இது வேறையா?’ என்று சலித்துக்கொண்ட தச்சன் குந்தவையைத் தேட,
“அப்படியே உங்கப்பனாட்டம் இருக்க… இப்ப தான் உனக்கு கலையே வந்திருக்கு. குந்தவை மாட்டுக்கு வைக்கோல் வைக்க போயிருக்கா.” என்ற பதிலும் பாராட்டும் மங்களத்திடமிருந்து வந்தது. அவரிடம் தலையசைத்தவன் ஆவலுடன் குந்தவையை தேடிச் சென்று அவள் முன் நின்றான்.
“ஓய்… பொண்டாட்டி இங்க பாருடி… நீ இனி கஷ்டப்பட்டு சைட் அடிக்க வேண்டாம். அப்படியே நிமிர்ந்து பார்த்தா போதும் நீ வசதியா சைட் அடிக்க தாடியெல்லாம் எடுத்துட்டு ஐயா எப்படி ஜம்முனு வந்துட்டேன் பாரு…” என்று பற்பசை விளம்பரத்தில் வருவது போல் பளிச்சென்று பற்களை காட்டிக்கொண்டு நிற்க, நிமிர்ந்து அவனை ஒரு முறை முறைத்தவள் மீண்டும் தன் வேலையைத் தொடர, அவனின் உற்சாகம் வடிந்தது. 
“நிமிர்ந்துதான் பார்க்கச் சொன்னேன். முறைச்சு இல்லை.”
“நான் தான் நிமிர்ந்து பார்த்தேனே… உன் அண்ணன் வாங்கிக்கொடுத்ததை போட்டுகிட்டு பிலிம் காட்டிட்டு நிக்குற.” என்று அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னவள் கைகளை கழுவ, பற்களை நறநறவென கடித்த தச்சன் அங்கு குமித்து வைத்திருந்த வைக்கோலை எட்டி உதைத்துவிட்டு,
“போடி… உன்கிட்ட கேட்டேன் பாரு… இம்சைடி நீ… ஆசையா வந்தா கூட கடுப்பாக்கி விட்டுர்ற…” எரிச்சலுடன் ஆதங்கமும் சேர்ந்துகொள்ள அவள் புறம் கடினப்பார்வை வீசிவிட்டு, நிற்காமல் வீட்டு வாயிலை நோக்கி நடைபோட்டான். அவன் பின்னாலே ஓடிவந்த குந்தவை அவன் இடையை பிடித்து நிறுத்தி பின்னிருந்தே அவன் கன்னத்தில் அழுந்த இதழ் ஒற்றி எடுத்தாள்.
“உன்னை பார்த்ததும் இதுதான் செய்ய தோணுச்சு. வைக்கோல், பருத்தியெல்லாம் எடுத்ததால கை அழுக்கா இருந்துச்சு. அதுதான் சும்மா விளையாண்டேன். உடனே சாருக்கு கோபம் வந்துடுச்சு.” என்று கதை போல சொல்லி, துரிதமாய் அவனை அணைத்துவிட்டு விலக, தச்சன் முகத்தில் மறைந்த புன்னகை மீண்டும் உதித்தது.
“லூசு… கொஞ்ச நேரத்துல என்னை டென்ஷன் பண்ணிட்ட நீ…”
“இன்னைக்கான பிரியாணி கோட்டாவை கொடுக்காம விட்டா வரலாறு தப்பா பேசாது அதுதான் சும்மா…” என்று கண்சிமிட்டியவள், அவன் கரத்தினுள் தன் கரத்தை நுழைத்து, “இன்னைக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்துடு. அத்தைக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. தனியா அவ்வளவும் எப்படி செய்வாங்க. நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு மதியத்திற்கு மேல உன்கூட வயலுக்கு வரேன்.”
“நான் மதியம் வந்து உன்னை கூட்டிட்டு போறேன். நிறைய வேலையை இழுத்துப்போட்டு செய்யாத. நீலாவையும் செய்ய விடாத… அவன் விருந்து சாப்பாடு சாப்பிடலைன்னா ஒன்னும் ஆகிடப் போறதில்லை. சொல்லப்போனால் அவனுக்கு இருக்கிற தொப்பையாவது குறையும்.” என்று துடுக்காய் பேசி அசல் பிரியாணியை மீண்டுமொருமுறை காது எரிய எரிய அனுபவித்துவிட்டே அன்றைய வேலைக்குச் சென்றான் தச்சன்.

Advertisement