Advertisement

*20.2 & 20.3*
“முதல் முறையா நம்ம வயலுக்கு போயிருக்க. எப்படி இருக்குமா? எல்லாம் சரியா நடக்குதா? பையன் ஒழுங்கா இருக்கானா?” அந்தி சாய்ந்து வேலை அனைத்தும் நிறைவான பின் உணவும் முடிந்து ஓய்வாய் ஆங்காங்கு தூணில் சாய்ந்து அனைவரும் அமர்ந்திருக்க, அன்பரசன் ஏதோ கணக்கு பார்த்தபடி குந்தவையிடம் பேச்சு கொடுத்தார்.
“என்னை வேவு பார்க்கத்தான் அவளை அனுப்புனீங்களா?” குந்தவை பதில் கூறும் முன்னரே முந்திக்கொண்டு எகிறினான் தச்சன்.
“ஏலேய்! நீ என்ன பண்றேன்னு குந்தவை அங்க வந்து வேவு பார்த்து சொல்லித்தான் தெரியனும்னு இல்லை. எனக்கு செய்தி தானா வந்துடும். நீ கொஞ்சம் அடங்கு.” என்று அடக்கினார் அன்பரசன் அவனுக்கு அப்பனாய்.
“அதுதானே! நீங்க தான் இந்த ஊர் முழுக்க ஸ்பை வச்சிருக்கீங்களே.” என்று தச்சன் முணுக, குந்தவை அவனை ஒருபார்வை பார்த்துவிட்டு அன்பரசனுக்கு பதில் கொடுத்தாள்.
“பரவாயில்லை மாமா. எனக்கு தான் இன்னும் எதுவும் பிடிபடலை. இன்னைக்கு நம்ம நிலத்துக்கு வர்ற கண்மாய், வாய்க்கால் தூர்வாருற வேலை நடந்துச்சு. நாளைக்கு முடிஞ்சிடும்னு நினைக்கிறன்.”
“அது முடிஞ்சாலும் இப்போ பயன்தராதுமா. இந்த முறை மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகும் போலிருக்கு. கர்நாடகாவிலிருந்து வரத்து குறைஞ்சிடுச்சாம். அணை நிரம்பி, ஆத்துல திறந்துவிட்டு நம்ம இடத்துக்கு வரமுன்னாடியே நாம அறுவடை முடிச்சிடுவோம்.” என்றார் அன்பரசன் கவலையாய்.
“என்னங்க இப்படி சொல்றீங்க? நான் வந்துடும்னு நினைச்சேன்.” என்று நீலாவும் ஆதங்கப்பட, அதை ஆமோதிக்கும் விதமாய் அன்பரசன்,
“என்னைக்கு நாம நினைக்கிறது நடந்திருக்கு? வரும்னு நினைப்போம் வராது. இல்லைனா பத்தாது.”
“இப்படி லேட்டா திறந்துவிட்டா வேஸ்ட் தானே மாமா? யாருக்குமே இதனால் பயன் இல்லையே.” இருவரின் பேச்சில் தொனித்த வருத்தத்தையும் உன்னிப்பாய் கவனித்த குந்தவை யோசனையுடன் வினா எழுப்பினாள்.
“அப்படி சொல்லிட முடியாதுமா. பொதுவா குறுவை சாகுபடி சில இடங்களில் மே மாசமும் சில இடங்களில் ஜூன், ஜூலையிலும் தொடங்கும். அதிலிருந்து நூற்றிருபது நாள் தான் கணக்கு. அதுக்குள்ள நெல்மணி நல்லா வளர்ந்து அறுவடைக்கு தயாராகிடும். ஒருசில ரகம் நூறு நாளிலேயே மகசூல் கொடுத்துடும். எழுபத்தைந்து நாள் பயிரும் இருக்கு. நாம எந்த ரகத்தை விதைக்கிறோமோ அதை பொறுத்து அறுவடை மாதம் மாறுபடும். நம்ம ஊர் பக்கம் ஜூன் மாசம் பயிரிட்டு தான் பழக்கம். ஆனா இந்த முறை நாம சீக்கிரமே விதைச்சிட்டோம். போன வருஷமே தேவைக்கு அதிகமாகவே மழை பெய்ததால் நிலத்தடி நீரும் உசந்து பயிரும் நல்லா வந்திருக்கு. சீக்கிரம் அறுவடை பண்ணிடலாம். இங்க பக்கத்து ஊரில் லேட்டா விதைப்பு நடந்துச்சு. தாமதமா காவிரி பாய்ஞ்சா அவங்களுக்கு உபயோகமா இருக்கும். முன்னாடியே காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டா நம்ம பயிர் இன்னும் செழிப்பாகும். என்னதான் நிலத்தடி நீர் இருந்தாலும் மலைப்பகுதியிலிருந்து பிரத்யேகமான தாதுக்களை அடிச்சிட்டு வரும் ஆத்து நீர் வயலில் பாயுறதுக்கு ஈடாகாது. எதுவும் நம்ம கையில் இல்லைமா… நம்ம பொழப்பு வானம் பார்த்து தான் ஓடுது.” குந்தவையின் ஆர்வத்தில் மகிழ்ந்து விளக்கமாய் அன்பரசன் பதில் கூற, குந்தவையும் உரையாடலில் இயல்பாய் தன்னை புகுத்திக் கொண்டாள்.
“ச்சு… வருத்தமா இருக்கு மாமா. நீங்க இங்க தண்ணீர் வருமோ வராதோ? அறுவடைக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சி குழம்பி, காவிரியை எப்ப திறந்து விடுவாங்கன்னு காத்திட்டு இருக்கீங்க. ஆனா பாருங்க பல இடங்களில் தண்ணீர் விரையம் ஆகிட்டு இருக்கு. 
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும்போது கூட சினிமா காட்சிகளில் தண்ணீருக்கு பஞ்சமில்லை. ஆனா நாம கேட்டா மட்டும் தண்ணி இல்லைன்னு சொல்றாங்க. எத்தனை முறை ரீடேக் வாங்கி ஒரே சீனை எடுப்பாங்களோ… அத்தனை முறையும் எவ்வளவு தண்ணீர் விரையமாகுது. தவிர்க்கக்கூடிய நிலையில் இருந்தாலும் பெரும்பான்மையாய் அவங்க மழையில் நடக்கிற சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளை தவிர்க்கிறதில்லை. அதேமாதிரி தான் இந்த குளிர்பான கம்பெனியும். நிலத்தடி நீரை உறிஞ்சி அதில் ஏதேதோ கலந்து கடைசியில் உடலுக்கு கெடுதல் தர சாறை தான் தராங்க. தண்ணியை உறிஞ்சாமல் இருந்தால் அது விவசாயத்திற்காவது பயன்படும்.”
“எல்லாருக்கும் விதவிதமா சாப்பிடனும்னு ஆசை இருக்கிற அளவுக்கு அதை விளைவிப்பவர்கள் குறைஞ்சிட்டு வராங்க… அதனால் வரும் காலங்களில் சாப்பாட்டுக்கு பஞ்சம் வரும், விலைவாசி ஏறும்னு புரியுறது இல்லை. எல்லாத் துறையும் வளர்ச்சிப் பாதையில் போயிட்டு இருக்கும் போது அதற்கு நேரெதிரா பாதாளத்திற்கு போற துறை இதுதான். நாட்டின் முதுகெழும்புன்னு சொல்லி சொல்லியே முதுகில் சவாரி செஞ்சு படுக்க வச்சிட்டாங்க. மற்ற துறைகளுக்கு கொடுக்கும் ஊக்கம் அரசிடமிருந்தே விவசாயத்திற்கு கிடைக்காதப்போ சாதாரண மனுஷங்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்லையே. கும்பிடுற கடவுள் மேலையும் உசுரா நினைக்குற நிலத்தையும் நம்பித் தான் இன்னமும் இதை செஞ்சிட்டு இருக்கோம். நல்லதே நடக்கும்னு நம்புவோம்.”
பேச்சுக்கள் இறுக்கமாக தச்சனுக்கு அந்த சூழ்நிலையில் துளியும் நாட்டமில்லை, “நம்பிக்கை தானே எல்லாம். சோக கீதம் வாசிக்காம போய் தூங்குங்க எல்லோரும். நீங்க இப்படி பட்டிமன்றம் போடுறதால தீர்வு கிடைச்சிடப் போறதில்லை.” என்றவன் எழுந்துகொள்ள,
“அதுதானே உருப்படியான பேச்செல்லாம் சாருக்கு அலர்ஜி ஆச்சே… உடனே சபையை கலச்சிடுவாறு… ராஜன் தான் இதிலெல்லாம் கெட்டி. விஷயாதி.”  என்று பொருமினார் அன்பரசன்.
ராஜராஜனை தூக்கி வைத்து பேசவும் தச்சனைப் பற்றி சொல்லவும் வேண்டுமா! முகக்கோணலுடன், “ஆமாம் இப்போ அதுக்கு என்னங்குற? நம்ம கண்ட்ரோலில் இல்லாத விஷயத்தை எதுக்கு தேவையில்லாம பேசி வருத்தத்தை வாலண்டியரா வாங்கிக்கணும்? நடக்க வேண்டியது நடந்தே தீரும். இந்த போகத்துக்கு நமக்கு இருக்கிற தண்ணியே போதும். சமாளிச்சிடலாம்.” என்று அசராது பேசியவன் கண்ணாலே குந்தவையும் எழச் சொல்ல அவள் அசையாது அமர்ந்திருந்தாள்.
“உனக்கு வேற தனியா சொல்லனுமா குந்தவை? வெட்டியா இங்க உட்கார்ந்து இல்லாததையும் பொல்லாததையும் பேசிட்டு வந்து அப்புறம் என்னை தொல்லை பண்ணுவ… எழுந்து வா.” என்று தச்சன் குந்தவையை அனைவர் முன்னும் அதட்ட, வரப்போகும் விபரீதம் உணர்ந்து அவர்களை விரட்டினார் நீலா.
“நேரமாச்சு போய் தூங்குங்க. நாளைக்கு நேரமே ராஜன் வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கான். அவனை பார்த்துட்டு அப்புறம் வயலுக்கு போகலாம்.” 
நீலா நினைத்தது போலவே தச்சனை முறைத்துக்கொண்டே எழுந்து அவனைத் தொடர்ந்தாள் குந்தவை.
அறைக்குள் நுழைந்ததுமே கடுப்புடன் மெத்தையில் ஏறி அமர்ந்த குந்தவை, முறைப்பதை தொடர்ந்து, “திண்ணக்கம் அதிகம்டா உனக்கு. எல்லோர் முன்னாடியும் அப்படி அதட்டுற?”
அவளது பார்வையை தூசு போல தட்டியவன் கதவடைத்துவிட்டு, “ஏன் நீ என்னை திட்டினதே இல்லையோ? நீ எப்படி பேசுவேன்னு இங்க இருக்குற எல்லோருக்குமே தெரியும். நீலாவே பிரச்சனை வேண்டாம்னு தான் நம்மளை அங்கிருந்து விரட்டி விட்டுச்சு. நீலாவையே பதற வச்சிட்டடி நீ!” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அவளை நெருங்கி அணைத்துக்கொள்ள, அவனை தள்ளிவிட்டு முகத்தை திருப்பினாள் குந்தவை.
“என் மேல கோபமா இருக்கேன்னு நினைச்சேன். மதியம் சண்டைக்கு அப்புறம் நீ பேசவே இல்லை. முறுக்கிக்கிட்டு போன. இப்போ என்ன இழையுற?”
“ஆமா இருந்தேன். அதுக்காக அப்படியே இருந்திட முடியுமா? உன்கிட்ட பேசாம இருந்து என்ன சாதிச்சிடப் போறேன்.” எப்போதும் போல அனாயசமான பேச்சு அவனிடம்.
“அப்போ என்னோட பேசிட்டு இருந்து என்ன சாதிக்க போற? இல்லை என்ன சாதிச்ச?” என்றாள் அவளும் இடக்காய்.
“சரி தான்… உன்கிட்ட பேசினாலே சண்டை தான் வருது. இதில் எங்கிருந்து சாதிக்கிறது!” என்று தச்சனும் அலுப்புடன் சொல்லிவிட்டு படுத்துக்கொள்ள, உர்ரென்று முகத்தை தூக்கியவள், “அப்போ இனிமே என்கூட பேசாத.” என்றுவிட்டு அவனுக்கு மறுபுறம் முதுகுகாட்டி படுத்துக்கொண்டாள்.
அவளது கோபச் சிணுங்கள் அவனை குஷியாக்கிவிட்ட குந்தவையை பின்னிருந்து இறுக அணைத்தவன், “இதுகூட நல்லாயிருக்கே… பேசினா தான் எல்லாம் தடைபடுது. நேரமும் சக்தியும் விரையமாகுது. நாம நேரடியா காரியத்தில் இறங்கிட வேண்டியது தான்.” என்று வார்த்தைகளாலும், இதழொற்றல்களாலும் அவள் செவிகளைத் தீண்ட, குந்தவை இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. 
“கொஞ்ச நேரமாவது கோபமா இருக்க விடுறீயா என்னை? ஏதாவது பேசி மயக்கிடுற…”
“போச்சுடா… என்னதிது புதுக்கதை? நான் உன்னை மயக்குறேனா! கோபமா இருக்க விடுறது இல்லையா? பாதிநேரம் நீ முறைச்சிக்கிட்டு தான்டி சுத்திட்டு இருக்க.” என்று இவன் சிரிக்க, தன் வயிற்றில் பதிந்திருந்த அவன் கையை நறுக்கென்று கிள்ளினாள்.
“ஷ்..ஆ… வாய் மட்டுமில்லை கையும் நீளம்டி உனக்கு. பொசுக்கு பொசுக்குனு கைநீட்டுற. வளர்ப்பு சரியில்லை. என் மாமனாரை சொல்லணும்… உனக்கு அதிகம் இடம்கொடுத்து பழக்கி விட்டுட்டாரு. அவரோட வேலைக்கான வினையை நான் அனுபவிக்கிறேன்.” என்று பேச்சுவாக்கில் சொல்ல, குந்தவை சட்டென அமைதியாகிவிட்டாள். அதை சில வினாடிகள் கழித்தே உணர்ந்த தச்சன் எம்பி அவள் முகத்தைப் பார்க்க, நெற்றியில் மட்டும் கோடுகள் படர்ந்து அவளது இறுக்கத்தை காட்டியது.
“என்ன அமைதியாகிட்ட? மாமா நியாபகம் வந்துடுச்சா?” 
தச்சனின் குரல் பரிவாய் ஒலிக்க, அவன் புறம் திரும்பிப் படுத்தவள், முறுவலிக்க முற்பட்டு தோற்றவளாய், “அதெப்படி வராம இருக்கும். உருவமா இல்லைனாலும் என்னோடவே என் நினைவுகளில் தான் இருக்காங்க. என் மேல முழு நம்பிக்கை வச்சு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. என்ன உன் விஷயத்துல மட்டும் தான் கொஞ்சம் தகராறு ஆகிட்டு. நீ வேணாம்ன்னு சொன்னதை அவர் காதிலே வாங்கல. ஏதோ வசியம் பண்ணிட்ட அவரை.”
“அது அப்படி இருக்காது. இந்த பையன் அப்பாவியா இருக்கான். நம்ம பொண்ணை கட்டிமேயக்க இந்த இளிச்சவாயனை விட்டால் வேற யாரும் கிடைக்க மாட்டாங்கன்னு அவருக்கு புரிஞ்சிருக்கும். அதுதான் புடுச்சு கட்டிவச்சிட்டாரு.” என்றான் சிரியாது.
“என்னது கட்டி மேய்க்கிறியா?” என்று குந்தவை விழிகளை உருட்ட, அவளைச் சுற்றி கரங்களை போட்டு இறுக அணைத்தவன், “இப்படி கட்டிக்கிறதையும் சொல்லலாம்.”
“நல்லா சமாளிக்க கத்துகிட்ட.”
“இல்லைன்னா உன்கிட்ட முடியுமா? அடக்கி உட்கார வச்சிட மாட்ட?” என்று தச்சன் குறை போல சொல்ல, அவனை விட்டு விலகி அவன் முகம் பார்த்த குந்தவை,
“அடக்குறனா? உன் நல்லதுக்கு தான் எல்லாம் சொல்றேன்.”
“நம்ம நல்லதுக்குன்னு வாயில வருதா பாரு…”
“அதை நான் தனியா வேற சொல்லனுமா? நான் செய்யுறதை பார்த்தாலே புரியலையா உனக்கு? எல்லாமே நம்ம எதிர்காலத்துக்கு தான் செய்றேன்.”
“அப்போ நீ என்கூட வயலுக்கு வர்றதும் அதுக்குத்தானா?” கிடைத்த சந்தர்ப்பத்தில் மதியம் விட்டதை மீண்டும் தொடர்ந்தான் தச்சன்.
“வேற எதுக்காம்? வேலைக்கு போறதில் சிக்கல் வந்தால் நான் அப்படியே வீட்டிலேயே இருந்திடுவேனா என்ன? ஏதாவது செய்யணும். அது நமக்காக இருந்துட்டு போகுது. அத்தானை கூட சேர்த்துகிட்டு வயலில் வேலை செய்ய உனக்கு விருப்பமில்லை. மாமாவையும் பக்கத்துல சேர்க்க மாட்டேங்குற. அதுதான் நான் வந்தேன்.”
“அப்போ உனக்கான அடையாளம்? நீ என்கூட வந்தா என் நிழல் தான் உன்னை பின்தொடரும். என்னோட கனவுகள் தான் உன்னோடதாவும். அது உனக்கு கண்டிப்பா பிடிக்காது. ஆரம்பத்திலிருந்தே நீ உனக்கான இடத்தை தான் தேடிட்டு இருக்க. இப்போவும் எதுவும் கெட்டுப்போயிடலை. லோன் போடுவோம் நீ மேல படி. இல்லைனா இந்த கவர்மென்ட் வேலைக்கு எல்லாம் எக்ஸாம் வைக்கிறாங்களே. அதை எழுது. ஜம்முனு ஆபீசில் வேலை பாரு. இன்னைக்கு ஒரு நாள் வயலுக்கு வந்ததிலேயே களைச்சி போயிட்ட…” என்று ஆதங்கமாய், பரிவாய் தனக்காய் யோசிக்கும் தச்சனை காணக்காண முன்பு எழாத எண்ணங்கள் எல்லாம் அவளுள் எழுந்தது. 
அதன் பிரதிபலிப்பாய் பார்வை ரசனையாய் அவன் மீது படிய, அவனது விரல்கள் அவள் வதனத்தில் கோடிழுத்தது.
“பொண்ணு பார்க்க வந்தப்போ இப்படி தான்டி என்னை பார்த்து வச்ச… அதுக்கப்புறம் இப்போ தான் என்னை முழுங்குற மாதிரி பார்க்கிற.” மையலுடன் வெளிப்பட்ட அவனது வார்த்தைகளுக்கு இணையாய் அவளது பார்வையும் அவனை ஆசையாய் வருட, ஒன்றிரண்டு வினாடிகள் கழித்தே அவன் சொன்னது அவள் கருத்தில் பதிந்து, மையலிலிருந்து அவளை எழுப்பியது.
“என்னது பொண்ணு பார்க்க வந்தப்போவா? நான் இப்படியெல்லாம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லையே… கல்யாணமாகி இத்தனை நாளில் இப்போதான்டா நீ என்னை இம்ப்ரஸ் பண்ணியிருக்க. லேட் பிக்கப் நீ…” என்று குந்தவை புருவம் உயர்த்தி இகழ, தச்சன் தன் ட்ரேட்மார்க் குரலில்,
“அடியேய் பொண்ணு பார்க்க வந்தப்போ என்னமா சைட் அடிச்சு எனக்கே டஃப் கொடுத்த… இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி பீலா விடுற. நான் தான் பார்த்தேனே அங்குலம் அங்குலமா என்னை சைட் அடிச்சடி நீ… நான் கூட குட் பாயா இவ்வளவு நாளா உன்னை அப்படியெல்லாம் சைட் அடிச்சது இல்லை.” என்று பாவம் போல முடிக்க, குந்தவையை கேட்கவும் வேண்டுமா… ஒரே தள்ளு… தச்சனை தள்ளப் பார்த்தாள். அந்தோபரிதாபம் அவளின் அசைவுகளை நன்கு தெரிந்து வைத்திருந்தவன் அவளை அலேக்காய் மடக்கி தன் எடையை அவள் மீது சரித்து அவளை அமுக்கிவிட்டான்.
அவனது திடீர் தாக்குதலில் மூச்சு வாங்கியவள் அவன் தாடியை பிடித்திழுத்து, “பிராடு… பேச்சைப் பாரு. இவர் பெரிய மன்மதன் இவரை சைட் அடிக்குறாங்க. சைட்டுக்குற வார்த்தையை கேட்டாலே கண்ணை நோண்டிடுவேன்… இதுல நான் இவரை சைட் அடிச்சேனாம். எண்ணம் எப்படி போகுது பாரு உனக்கு. முகம் முழுக்க முடியை வளர்த்து வச்சி வாய் எங்கன்னு தேட வச்சவன்டா நீ… என்ன ஸ்டைலோ கருமமோ இந்த தாடியை எடுத்தாத்தான் என்னவாம்? தாடியை எடுத்துட்டு முறுக்கு மீசை வச்சா கொஞ்சம் பார்க்கிற மாதிரியாவது இருப்ப.”
எப்போதும் திட்டுபவள் தன்னை ரசனையுடன் கவனித்தும் இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டதில் உள்ளம் குத்தாட்டம் போட சீட்டியடித்தவன், “அமுக்குணி. மனசுக்குள்ள இதெல்லாம் நினைச்சிருக்க. ஆனால் இதுவரை இதை பத்தி மூச்சுவிடல… நாளைக்கு பாரு சார் எப்படி ரெடி ஆகுறாருன்னு…”
“அப்படியே இந்த பேண்ட்டை தூர போட்டுட்டு மாமா மாதிரி வேட்டி கட்டிக்கோ. உனக்கு எடுப்பா பொருத்தமா இருக்கும்.” என்று குந்தவை கனாவுடன் சொல்ல, தச்சனின் எண்ணங்கள் இடக்காய் யோசித்து மீண்டது.

Advertisement