Advertisement

*20.1*
உச்சி வெயில் நடுமண்டையை பிளக்க, நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி மூச்சு வாங்கினாள் குந்தவை. பிறந்தவீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து பழகியிருந்தவள் புகுந்த வீடு வந்தும் பெரிதாய் வேலைகள் செய்ததில்லை. மணமான உடனேயே ஏற்பட்ட தந்தையின் இழப்பு அதன் பின்னான பிரச்சனைகள், தேர்வுகள் என்று குந்தவைக்கு ஓய்வு அதிகம் தரப்பட்டது. வானதியும் உடன் இருந்ததால் அவளே குந்தவைக்கும் சேர்த்து வேலை பார்த்துவிடுவாள். நீலாவும் முக்கிய வேலைகளை தன்வசம் வைத்துக்கொண்டு சிறுசிறு வேலைகளுக்கு மட்டுமே குந்தவையை ஏவுவார். இப்போதும் மேற்பார்வை தான் பார்க்கிறாள் ஆனால் அது என்னவோ ஏசி அறையினுள் இல்லை. சுட்டெரிக்கும் சூரியனின் மேற்பார்வையில். அதுவும் அவளாய் ஏற்றுக்கொண்டது. அவனுக்காய்!!! 
எது வேண்டாம் என்று பிடிவாதமாய் மல்லுக்கு நின்றாளோ, எதை தச்சன் செய்யக்கூடாது என்று விரும்பினாளோ அதையே அவள் ஏற்றுச் செய்ய களமிறங்கிவிட்டாள். ஏனிந்த மாற்றம் என்று அவளை கேட்காதவர்கள் யாருமில்லை! தச்சனே கூட அவளை தடுத்து, மறுத்து, பேசாமல் இருந்து என்று எல்லாம் செய்து பார்த்துவிட்டான் ஆனால் அவளை அவன் பிடிக்கு கொண்டுவர முடியவில்லை. எப்போதும் போல அவள் விருப்பத்திற்கு இவன் பணிந்து போக வேண்டியிருந்தது. அது ஒருவிதமாய் பிடித்தும் பிடிக்காமலும் என கலவையான உணர்வில் மாட்டிக் கொண்டது போல இருந்தான் தச்சன்.
“நீ ஏன்டி இதெல்லாம் செய்யுற? சொல் பேச்சை கேட்கக்கூடாதுன்னே சபதம் எடுத்திருக்க.” என்று சலித்துக்கொண்டு தன் தோளில் இருந்த துண்டால் அவள் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டான் தச்சன்.
“நீதான் நான் சொல்றதையே கேட்க மாட்டேங்கிற… உன்னையே செய்ய வேண்டாம் சொன்ன விஷயத்தை நான் செய்ய இறங்கி இருக்கேன்னா யோசிக்காமலா செய்வேன்?” என்று அவனை உறுத்து விழித்தவள் தோட்டத்தை நோக்கி நடைபோட, தச்சன் அங்கிருந்தவர்களிடம் தலையசைத்துவிட்டு நெற்றியை தேய்த்தபடி அவளை தொடர்ந்தான்.
இரண்டு நிமிட நடையிலேயே தோட்டம் வந்துவிட, கேள்வியை தாங்கியபடி பார்வையையும் நடையையும் விரட்டியவள் மோட்டார் அறையின் வாயிலில் இருக்கும் கூடையை பார்த்து அங்கு சென்றாள். கூடையில் என்ன இருக்கிறது என்று எடுத்துப்பார்த்தவள் நிழலில் அமர்ந்து கூடையிலிருந்த சாப்பாட்டு கேரியரை பிரித்து எடுத்துவைக்க, அவளருகில் சென்று அமர்ந்த தச்சன் மீண்டும் துவங்கினான், “அப்படி எதை யோசிச்சு இதில் இறங்கி இருக்கேன்னு சொல்லவும் மாட்டேங்குற… எனக்கு மனசு கேக்கலடி. நீ ஏன் வெயில்ல இறங்கி வேலை செய்யுற?”
“நான் வேற என்ன செய்யட்டும் சொல்லு? ஓடி ஓடி யாருக்கு கீழோ வேலை செய்வதற்கு பதில் நம்ம இடத்தில் நமக்காய் நாம் முன்னேற, நம்மால் நாலு பேரு முன்னேற, இந்த சமுதாயத்திற்கு சோறுபோட உழைக்கிறது எந்த விதத்திலும் தப்பில்லை.” அவன் வாயை அடைக்கும் விதமாய் அவள் பேசினும் அவனுக்கு மனது கேளவில்லை.
“நான் வேணும்னா உன்னை தினம் ஆபீசுக்கு கொண்டுவந்து விடுறேன். அம்மாகிட்ட நான் பேசுறேன். நீ ஹாயா உட்கார்ந்துகிட்டு வேலை பார்க்கிற மாதிரியான வேலையை தேடிக்கோ. இங்க வேண்டாமேடி. உனக்கு பழக்கமில்லாதது, பிடித்தமில்லாதது.”
“பழக்கமில்லாததுன்னு வேணா சொல்லு. பிடித்தமில்லாதது எல்லாம் முன்னாடி… ஒருவேளை உனக்கு நான் இங்க வர்றது பிடிக்கலையோ? அத்தானை நினைக்கிற மாதிரி தான் என்னையும் நினைக்கிறியா நீ?” என்ற குந்தவை கூர்ப்பார்வையுடன் அவனை கிடுக்கிப்பிடி போட, அவன் சோர்ந்துவிட்டான் அவளது பிடிவாதத்திற்கு முன்.
“லூசுடி நீ. நீயும் அவனும் ஒண்ணா.”
“நீயும் நானும் ஒண்ணுன்னு வேணா சொல்லலாம்.” என்று குந்தவை குறும்பாக கண்சிமிட்ட, சோர்வுகள் பின் சென்று அவன் இதழில் பூக்கத் துடித்த நகையை தவிர்க்க முடியவில்லை.
“என்னை எப்படி லாக் பண்றதுன்னு உனக்கு நல்லாவே தெரியுது. நான் தான் அந்த விஷயத்தில் மக்கா இருக்கேன்.”
“எந்த விஷயத்துல?”
“குந்தவை…” குரலில் குழையல் இழையோட தலையை சிலுப்பிக் கொண்ட தச்சன் அவளின் முகம் பார்த்து இளித்தபடி, “இம்சைடி நீ… பலநேரம் சுகம், சிலநேரம் இப்போ மாதிரி. என்னை மட்டும் இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்த்து பேசு, கொஞ்சுன்னு சொல்லுவ. ஆனா நீ இருக்கீயே… எப்போ எப்படி பேசுறேன்னே தெரியல… ஆனா இப்போ கொஞ்ச நாளா உன்கிட்ட மாற்றம் தெரியுது.” என்றான் அவளை யோசனையுடன் பார்த்தபடி. 
“என்ன மாற்றம்? இப்போ உன்னை கொஞ்சம் கம்மியா திட்டுறேன்.” என்று கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் சுருக்கிக் காட்டினாள்.
“இதுதான்டி மாற்றம். நான்தான் இப்படி எல்லாம் பேசுவேன். இப்போ நீ பேசுற. அதுவும் பொறுமையா பேசுற.”
“அடடா… சாப்பிடறதுக்கு பிரேக் விட்டா நீ கேள்வியா அடுக்கிக்கிட்டு இருக்க. எல்லோரும் வர்றத்துக்கு முன்னாடி சாப்பிடணும்.” என்றவள் வீட்டிலிருந்து வந்திருந்த உணவை வெளியில் எடுத்து இருவருக்குமாய் தட்டில் பரிமாறினாள். 
பார்வையாலேயே அவனை உண்ணுமாரு உந்த, உதட்டை வளைத்தவன் அவளின் பிடிவாதம் உணர்ந்து அவள் சொல்லிற்கு மறுசொல் இன்றி உண்டான். உண்டு, உழைத்த களைப்பு என்னை கீழே கிடத்தேன் என்று இம்சிக்க, குந்தவையை ஒருமுறை ஏறிட்டு பார்த்தவன் அங்கிருந்த மோட்டார் அறைக்குள் சென்று நீலாவின் பழைய புடவை ஒன்றை எடுத்துவந்து வெளியே மரத்தின் கீழ் விரித்தான். இவன் என்ன செய்கிறான் என்று பார்த்தபடியே உண்ட தட்டு, கேரியரை கழுவி அனைத்தையும் கூடையில் எடுத்து வைத்தாள் குந்தவை.
விரிப்பில் ஒருபுறம் உடலை கிடத்தியவன் சோம்பல் முறித்துவிட்டு தூக்கம் கலந்த பார்வையுடன் குந்தவை புறம் கையை நீட்டி அழைத்தான் தச்சன்.
“எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இங்க வந்து கொஞ்ச நேரம் படுத்துக்கோ. எல்லோரும் சாப்பிட்டு ஓய்வெடுத்துட்டு தான் வருவாங்க. அதுக்குள்ள நாம ஒரு குட்டி தூக்கம் போட்ருவோம்.” 
சுற்றும் முற்றும் பார்த்த குந்தவை அவனருகில் வந்தமர்ந்து, “இங்கேயேவா?” என்று சந்தேகமாய் வினவ, 
“நம்ம தோட்டம் தான். வரும்போதே முள்வேலி வச்சி வாசலை அடைச்சிட்டு தான் வந்தேன். யாரும் வரமாட்டாங்க. குணாகிட்ட கூட இங்க வரவேண்டாம்னு சொல்லிட்டேன். அவன் வயல்லேயே இருந்துப்பான்.” என்றான் தச்சன் சமாதானமாய்.
“இருந்தாலும் எனக்கு ஒருமாதிரி இருக்கு. இப்படி வெட்ட வெளியில் படுத்து எனக்கு பழக்கமில்லை. நான் இப்படியே உட்கார்ந்துக்கிறேன்.” என்று மறுத்த குந்தவை அருகிலிருந்த மரத்தில் சாய்ந்து உட்கார்ந்துகொள்ள, தச்சன் சட்டென எழுந்து அவள் மடியில் தலைவைத்துக் கொண்டான்.
“டேய்…”
“ஷ்! சும்மா இருடி. இங்க யாரும் வரமாட்டாங்க. வேலியை நகர்த்திட்டு அப்படியே யாராவது வந்தாலும் என்ன ஆகிட போகுது இப்போ? என் பொண்டாட்டி கூடத்தானே இருக்கேன். யாரையும் தள்ளிக்கிட்டு வந்து ஜல்சா பண்ணிடலையே!” என்று வழக்கம் போல பேசி அவளிடம் வாங்கிகட்டிக் கொண்டான்.
“இடியே விழுந்தாலும் உன் புத்தி மாறவே மாறாதுடா.” 
“இடியே விழுந்தாலும் நீயும் உன் மனசுல என்ன ஓடுது… ஏன் இந்த திடீர் முடிவு? மாற்றம்? எல்லாம்னு எதுவும் சொல்லிட மாட்ட.” என்று அவனும் பதிலுக்கு முறைக்க, குந்தவையின் விரல்கள் தன்போல அவன் சிகைக்குள் புகுந்துகொண்டது.
“விடமாட்டீயே… முன்னாடி எப்போதும் ஏதோ ஒரு அலைப்புரிதல், நிதானமின்மை இருந்துச்சு. நான் நினைச்சபடி நீ இல்லை. உன்னோட அமையவிருந்த வாழ்க்கையும் தடுக்க முடியல. எனக்கு பிடிக்காத பலவிஷயத்தை நீ செஞ்ச. இதற்கெல்லாம் மேல நிகழ்ந்த அப்பாவோட திடீர் இழப்பு. எல்லாமே என்னை நுனியில் நிக்க வச்சிது. அப்பாவோட இடத்தை நான் நிரப்பணும்னு முயற்சி பண்ணேன். அதை முழுசா நிறைவேற்ற முடியலைன்னாலும் ஓரளவு குடும்பத்தை விழாம நிறுத்திட்டேன். அந்த நிம்மதி எனக்கு இப்போ இருக்கு. வானதியும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா. ஆஹோ ஓஹோன்னு இல்லைனாலும் கைக்கு வருமானம் வருது. அப்போவோட பி.எப். இன்ஷுரன்ஸ் எல்லாத்தையும் எப்.டில போட்டுட்டேன். இனி வானதிக்கு ஒரு துணையை ஏற்படுத்தி கொடுத்துட்டா போதும்… அதையும் செஞ்சிடுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா…” 
“என்னனு சொல்லுடி.”
“ஆரம்பத்தில் நம்பிக்கையா இருந்த நீ இப்போ தடுமாறுற. முன்ன இருந்த நம்பிக்கை இப்போ உன்கிட்ட இல்லை.” என்று அவன் முகத்தை அழுத்தமாய் பார்த்து சொல்ல, அவளின் விழி வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விழி தாழ்த்தினான் தச்சன்.
“உன்னோட நம்பிக்கையை மீட்டெடுக்கணும். நீ மேல வரணும்.”
“எனக்காக நீ இப்படி வந்து கஷ்டப்பட வேண்டாம் குந்தவை. நான் ஏதாவது பண்ணி மேல வந்துருவேன். நீ இன்னும் மேல படியேன்.” என்க, எங்கோ வெறித்தபடி, “வேண்டாம்.” என்றாள் குந்தவை.
“ஏன்?”
“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.”
“ப்ச்… படிக்கிறதை தள்ளிப்போடக் கூடாது குந்தவை. சூட்டோடு சூடா படிச்சிடனும். இடையில் விட்டுப்போனா அப்புறம் அப்படியே தள்ளிப் போயிடும். ஏற்கனவே ஒரு மாசம் எதையும் யோசிக்காம விட்டுட்டோம். நான் இங்க பக்கதுல எந்த காலேஜ்ல நல்லா சொல்லித் தராங்கன்னு விசாரிக்கவா?” என்று தச்சன் கரிசனமாய் கூற அவள் சுணங்கினாள்.
“நீ படிக்க வைக்கிறேன்னு சொல்லு. படிக்கிறேன். இல்லையா நானா எப்போ என் தேவைகளை பார்த்துக்கிற அளவுக்கு முன்னேறேனோ அப்போ படிச்சிப்பேன். என்னோட படிப்பு செலவையும் மாமா மேல திணிச்சு அவரை சார்ந்திருக்க விரும்பல.” என்றாள் ஒரேபோடாய்.
“ஷப்பா… தன்மானச் சிகரமே… இப்படியெல்லாம் இருந்தா முடியாதுடி.” என்று சலித்துக் கொண்டவனுக்கு அவளது கோரிக்கைகளை நினைத்து ஆயாசமாய் வந்தது.
“என்ன முடியாது? அதெல்லாம் முடியும். என்னை என் போக்கில் விட்டிரு இல்லைன்னா என்னை படிக்க வைக்கிற அளவுக்கு நீ வளரு…” என்றாள் அவளும் தன்பிடியில் அழுத்தமாய்.
“அங்க சுத்தி இங்க சுத்தி நீ ஒழுங்கா வேலை பாருடான்னு சொல்ல வர… ரைட்டு விடு… இந்த தச்சன் முதல் வேலையா சம்பாரிக்கிறான்! பொண்டாட்டிக்கு புது போன் வாங்கித் தரான்! அப்புறம் அவளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கப் போறான்!” 
“முதல்ல அத்தைக்கு மாமாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடு. அப்புறம் எனக்கு செய்யலாம்.”
“தங்கள் சித்தம் குந்தவை தேவியாரே.” என்று தச்சன் தலையசைத்து சிரிக்க, விரல்களை குவித்து அவன் கன்னத்தை கிள்ளியவள் குவிந்திருந்த தன் விரல்களுக்கே முத்தம் வைத்தாள் அவனுக்கே வைத்தது போல…
“இதெல்லாம் போங்கு…” என்று முணுமுணுத்தவன் அவள் உணரும் முன்னரே எக்கி அவளிழதில் அழுத்தமாய் துரித முத்தம் ஒன்றை வைத்துவிட்டு விலகினான்.
“வெளில இருந்தா இப்படி கொடுக்கணும்.” என்று தன் முந்திய செயலுக்கு விளக்கம் சொன்னவன் மீண்டும் எக்கி, “வீட்டுல இருந்தா இப்படி…” என்று டெமோ காட்டுவது போல அவளுக்கு அவகாசம் தராது அவளிழதலை வன்மையாய் கவ்வ, திமிறிக்கொண்டு அவனை தள்ளினாள் குந்தவை.
“பிராடு… விவஸ்தை கெட்டவன்… வெக்கமே கிடையாதுடா உனக்கு.” 
“எல்லாம் ஏற்கனவே தெரிஞ்சது தானே! நீயும் ஓயாம இதையே தான் சொல்லிட்டு இருக்க. புதுசா ஏதாவது சொல்லுடி.” என்று சிரிக்க, அவன் தோளை பிடித்து அவனை மடியிலிருந்து கீழிறக்கினாள் குந்தவை.
“என்ன ஆனாலும் உன் வாய் கொழுப்புக்கு ஒன்னும் குறைச்சல் இருக்க மாட்டேங்குது. எழுந்திரு. சாப்பிட்டு முடிச்சு வேலைக்கு ஆளுங்க வந்திருப்பாங்க.” 
“பொறுமையா போகலாம்டி. அவசரமில்லை.” என்றவன் சட்டமாய் படுத்துக்கொண்டான்.
“இப்படி நீ தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு தான் உனக்கான அடையாளம் இல்லாம தடுமாறிட்டு இருக்க. சாதிக்கனும்னா உழைப்பை போடணும். உழைப்பு இல்லாம எதுவுமே வராது.” என்ற குந்தவையின் வார்த்தைகளில் அழுத்தம் கூட, 
“எல்லாம் எங்களுக்கும் தெரியும்.” என்ற தச்சனும் இறுகினான். வார்த்தைகளும் வலுத்தது.
“உனக்கு தெரியுற லட்சணம் தான் எனக்கு தெரியுமே. சாவுகாசமா இருந்துட்டு இறுதியில பலன் வரலைன்னு ஐயோ அம்மான்னு புலம்ப வேண்டியது. என் நிலத்தை யாருக்கும் கொடுக்க மாட்டேன்னு வீராவசனம் பேசவேண்டியது. ஆனா உன்கிட்ட இருக்கிற நிலத்துக்காக புதுசா என்ன செஞ்ச நீ? மாமா என்ன பண்றாங்களோ அதைகூட நீ ஒழுங்கா செய்யல. அப்புறம் எப்படி முன்னுக்கு வரமுடியும்? பேர் வாங்கமுடியும்? நஷ்டம் இல்லாம ஓட்டுறதே பெரும்பாடா இருக்கும் போலிருக்கு. இதில சபதம் வேற…”
“ஒருநாள் வந்துட்டு விவசாயத்தையே கரைச்சு குடிச்சவ மாதிரி பேசுற? நான் எதுவுமே செய்யலைன்னு வசனம் பேசுறீயே… அதை நீ பார்த்தியா? ஏதோ ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கிடுச்சு… அதுக்காக எனக்கு ஒண்ணுமே தெரியாது, திண்ணுட்டு தூங்கத்தான் தெரியும்னு நீயா முடிவு பண்ணிடுவீயா? பயிரெல்லாம் வளர்ந்து நெல்மணி வர ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அறுப்பு வந்துடும். மகசூல் கம்மியானாலும் அனுபவம் நிறைய கிடைச்சிருக்கு. அடுத்த போகத்துக்கு என்ன பண்றேன்னு பாரு… இனிமே நீ இங்க ஒன்னும் புடுங்க வேண்டாம். வீட்டிலேயே என்னவோ பண்ணிக்கோ. இங்க வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன். எனக்கு யாரோட துணையும் வேண்டாம்.” 
“பேச்சு எல்லாம் நல்லாத்தான் பேசுற. செயல் தான் என்ன ஆகும்னு தெரியல. என்னால வீட்டில சும்மா இருக்க முடியாது. நான் இங்கத் தான் வருவேன். நிலத்தில் இறங்கி வேலை செய்றதெல்லாம் எனக்கு ஒத்துவராது. அதை நீ பார்த்துக்கோ மத்ததை நான் பார்த்துப்பேன்.” என்றாள் அவளும் பிடிவாதமாய்.
“என்னவோ பண்ணுடி… நீயும் உன் பிடிவாதமும்.” என்று கடுப்படித்தவன் எழுந்து வேலை நடக்கும் இடம்நோக்கி நடைபோட்டான். அவன் பின்னேயே குந்தவையும் செல்ல, இருவரும் அதன் பிறகு பேசிக்கொள்ளவில்லை. 

Advertisement