Advertisement

“நல்லது நடந்தா சரி… சீக்கிரம் சாப்பாடு ஊட்டிவிட்டுட்டு மாப்பிள்ளை எங்கன்னு பார்த்து கவனி. எல்லோரும் சாப்பிட்டாச்சு ஆனால் அவர மட்டும் காணோம்.”
“வயலுக்கு போயிருக்காரு… வந்ததும் உன் மாப்பிள்ளையை தரமா கவனிச்சிடுறேன்.” என்று குந்தவை இலகுவாய் சொல்ல, இறுக்கம் சற்று தளர்ந்தது. ஆனால் தச்சன் சற்று நேரத்திலேயே இறுக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தான். விருந்தின் வேலை பளுவில் அனைவருமே சற்று ஓய்வாய் அமர்ந்திருக்க பிள்ளைகள் இருவரும் உறங்கியிருந்தனர்.
“ஏன் இவ்வளவு நேரமாச்சு தச்சா? நேரமா சாப்பிட்டுட்டு சீக்கிரம் தூங்கலாம்ல? காலையில் சீக்கிரமே கிளம்பனும்.”
“மேட்டூர் அணையை சீக்கிரம் திறக்கிறதுக்கு வாய்ப்பிருக்குற மாதிரி தெரியுது. அதுதான் இப்போவே நம்ம வயலுக்கு வர வாய்க்கால் வரப்பை எல்லாம் சரிபண்ணி வச்சிட்டா வசதியா இருக்கும்னு பார்த்தேன்.” நீலா கேள்வி எழுப்பவுமே உற்சாகமாய் பதில் கூறினான் தச்சன்.
“சீக்கிரமே திறந்துவிட்டா இந்த முறையாவது கடைமடை வரை அறுவடைக்கு முன்னாடி தண்ணி பாயும். நமக்கும் விளைச்சல் அமோகமா இருக்கும்.” என்று நீலா பெருமூச்சிழுக்க,
“நாம தூர்வாரினா மட்டும் போதாது. ஆறு, குளம், ஏரி, கால்வாய் எல்லாத்தையும் தூர்வாரினா தான் கடைமடை வரை தண்ணி பாயும். அமைச்சர் முதல் கவுன்சிலர், அதிகாரி வரை ஊருக்குள் தண்ணி வர இடத்தை மட்டும் தூர்வாரிட்டு முழுசா தூர்வாரின மாதிரி கணக்கு காண்பிச்சு பணம் பார்த்திடுறாங்க. கடைமட்டத்தில் இருக்குறவங்க தான் அவர்களோட பேராசைக்கு பலியாகுறாங்க.” என்று அன்பரசனும் தன் வருத்தத்தை தெரிவிக்க, ராஜனின் மனம் தன்னைப்போல வானதியின் நிலையை நினைவு கூர்ந்தது.
“இதுக்கு எதுவுமே செய்ய முடியாதா? இப்படி காசு பார்க்கிறவங்களும் சாப்பிடுறாங்க தானே! அதை விளைவிப்பவர்கள் வயிற்றை காயப்போட்டு அவங்க வாழ்வாதாரத்தில் கைவச்சா நாளைக்கு எப்படி உணவு கிடைக்கும்? எல்லாத்துக்கும் ஒரு யூனியன் இருக்குற மாதிரி இதுக்கும் ஏதாவது இருக்குமே அது மூலமா இதற்கு தீர்வு காணலாமே!” என்று ராஜன் யோசனை கூற, தச்சன் தன் தந்தையை பார்த்தான்.
“இருக்கு ராஜா. ஆனால் எதுவும் செய்ய முடியல. விதவிதமா போராட்டம் எல்லாம் பண்ணித்தான் பார்க்கிறாங்க. நான் கூட ரெண்டு முறை கண்டனப் போராட்டத்தில் கலந்துகிட்டேன். அந்த நேரம் நம்மல சமாதானம் செய்ய வாக்குறுதிகள் கொடுக்கிறாங்க. ஆனா அதெல்லாம் தண்ணியில் போட்ட கல்லா அப்படியே கிடக்கு. பூனைக்கு யார் மணிக்கட்டுறதுன்னு தான் தெரியல… இதை பத்தி பேசுனா பேசிகிட்டே இருக்கலாம். சீக்கிரம் சாப்பிட்டுட்டு போய் தூங்குங்க எல்லோரும்.” என்று அன்பரசன் அதோடு அந்த பேச்சை முடித்து நகர, நீலா ஆர்வமாய் தச்சன் கையை சுரண்டினார்.
“நாளைக்கு வயலுக்கு போகும் போது ராஜனையும் கூட்டிட்டு போடா… அவனும் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கட்டும். இனிமே நீங்க ரெண்டு பேரும் தான் இதெல்லாத்தையும் பார்த்துக்கணும். உனக்கு துணை அவன், அவனுக்கு துணை நீதான்.” என்று சொன்னவுடன் தச்சனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே… குந்தவை மட்டுமே அதை கவனித்தாள். 
இதற்கு இன்றே ஒரு தீர்வை கண்டுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனுடனான தனிமைக்கு அவள் காத்திருக்க அது விரைவிலேயே நடந்தது. உண்டுவிட்டு அறைக்கு வந்தவன் சோர்வாய் சட்டையை கழற்றி வீசிவிட்டு மெத்தையில் அப்படியே குப்புற விழுந்தான். அவனைத் தொடர்ந்து வந்த குந்தவை கதவடைத்து விளக்கை அணைத்துவிட்டு, அவன் முதுகில் முகம் புதைத்து அவனை அணைத்தார் போல அவன் மீதே குப்புற படுக்க, தச்சனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
‘என்னடா அதிசயம்…’ என்று நினைத்தவள் தன் விரலால் அவன் முதுகை சுரண்ட மறுப்பாய் உடலை அசைத்தானே ஒழிய வாய் திறக்கவில்லை.
“பாருடா சாரை… ரொம்ப புகு பண்றாரு.” சத்தமாய் சொன்னவள் அவனிடையை கிள்ள புருவச் சுழிப்புடன் அவள் கையை பிடித்தவன், அவளை தன்மீதிருந்து உதறி திரும்பிப்படுத்து முறைத்தான்.
“என்னடி வேணும் உனக்கு?”
அவன் மார்பில் கையூன்றி குறும்பாய் கண்சிமிட்டியவள், “ஒரு உம்மா வேணும்.” என்று சொல்ல, சிரித்துவிட்டான் தச்சன். அவ்வளவு தான் அவனது முகத்திருப்பலும் வருத்தமும்… இருந்த இடம் தெரியாமல் பின்னுக்கு சென்றுவிட்டது.
“ஏய் என்னடி இப்படி பேசுற? என்னமோ ஆச்சு உனக்கு?”
“பின்ன என்னவாம்… பிரியாணியை மொத்தமா மறந்துட்ட… ரெண்டு நாளா நீ வேற ஏதோ சிந்தனையிலேயே இருக்க.”
“அதை மறப்பேனா நானு…” என்று மறுத்தவன் மறக்கவில்லை என்பதை நிரூபித்துவிட்டு தான் அவளை விட்டு விலகினான்.
அவளின் சிகை கோதியபடி அவள் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்தவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான், “தயிர்சாதமா மாறிட்டீயா என்ன? இவ்வளவு நிதானமா இருக்க… அதுவும் என்னை திட்டாம.”
முகத்தை அவன் நெஞ்சத்திலிருந்து உயர்த்தியவள் அவனின் மீசையை வலிக்கும்படி இழுத்து விடுவித்தாள், “ஏன் மதியம் வாங்குனது மறந்து போச்சா? இல்லை இன்னைக்கு டோஸ் பத்தலையா?” 
“ஷ்… போதும்டி… தெரியாம கேட்டுட்டேன். டேஸ்டான பிரியாணியை கொடுத்துட்டு அதை மறக்கடிக்கிற மாதிரி பாகற்காயை கொடுத்திடாத.”
“நான் கொடுக்கிறது இருக்கட்டும். நீ ஏன் அப்பப்போ இஞ்சியை தின்ன மாதிரி சுத்திட்டு இருக்க? மதியம் பேசினோம் தானே. இன்னும் என்ன பிரச்சனை உனக்கு?”
“ஹூம்… அதை நியாபகப்படுத்தாத.”
“டேய்… என்னை பேசவைக்காம என்னனு நீயே சொல்லிடு.”
“என்னத்தை சொல்லணும்? அதுதான் சொன்னேனே நமக்கு கல்யாண விருந்துன்னு சொல்லிட்டு இந்த நீலாவும் அன்பரசனும் அவன் பின்னாடியே சுத்திட்டு இருந்தாங்க.”
“சின்ன பிள்ளை மாதிரி புரிஞ்சிக்காம பேசாத. இன்னைக்கு உங்க அண்ணனுக்கு பிறந்தநாளாம். அதுவும் எத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்காங்க. அப்போ கொண்டாடத் தான் செய்வாங்க.”
“கொண்டாடட்டும் நான் வேணாம்னு சொல்லல… ஆனால்…” அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்த தச்சன் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டான்.
“என்ன ஆனால்? குற்றம் சொல்ல காரணம் கிடைக்கலையோ? நீ பண்றதை எல்லாம் பார்த்தா சிரிப்பு தான்டா வருது எனக்கு.”
“வரும்டி வரும். உனக்கென்ன… உன்னையா இத்தனை நாள் தூக்கிவச்சி கொண்டாடிட்டு கீழ போட்டு உடைச்சாங்க?” தச்சனின் சொல்லிலும் முகத்திலும் கசப்பு பரவியிருக்க, அவனது எண்ணங்கள் செல்லும் திக்கறிந்து அவனை சமாதானம் செய்யவென குந்தவை தன்னை தானே சாந்தப்படுத்திக் கொண்டாள். 
“என்னத்தை உடைச்சிட்டாங்க இப்போ? பிரச்சனைன்னு வந்தப்போ அத்தானை கையாள்வதில் சின்ன பிசகு ஏற்பட்டுடுச்சு. அதை சரிபண்ற நோக்கத்தோட உங்களை எதுவும் சொல்லாம வளர்த்திருக்காங்க. அதுதான் உனக்கு உறுத்துதோ? திரும்பத் திரும்ப தேவையில்லாததை கற்பனை பண்ணி உன்னை நீயே எரிச்சல்படுத்திக்கிற.”
“நான் என்ன வேணும்னேவா அவன் மேல விரோதத்தை வளர்த்திட்டு இருக்கேன். என்னவோ கடுப்பா வருதுடி. வந்தவன் முன்னாடியே வந்து தொலைச்சிருக்கலாம்.” 
“ஏன்? அவங்க இப்போ வந்தது தான் உனக்கு பிரச்சனையா?” என்று குந்தவை கேட்க, காரணம் தேடிபிடித்து அவளிடம் வம்படியாய் முறையிட்டான் தச்சன்.
“நீலா சொன்னதை நீயும் கேட்டியே… நான் அவனை வயலுக்கு கூட்டிட்டு போகணுமாம்.”
“அதுக்கு என்ன? கூட்டிட்டு போ.”
“முடியாது.”
“என்னடா பிரச்சனை உனக்கு? நீதான் எல்லாத்தையும் ஈஸியா எடுத்துட்டு போயிடுவீயே. இப்போவும் அதையே செய். அண்ணன் வந்துட்டாங்க. இனி நம்ம கூடவே நமக்கு வழிகாட்டியா இருப்பாங்க, தோள் கொடுப்பாங்கன்னு நினைச்சிக்கிட்டு போயிட்டே இரு. உன் வேலையைப் பாரு. அவங்க அவங்க வேலையை பார்ப்பாங்க. அவங்க உன் எதிரி இல்லை உன் அண்ணன்.”
“நான் எப்போ அவனை எதிரின்னு சொன்னேன். என்னமோ அவன் வந்ததும் எல்லாமே என்னைவிட்டு போகிற மாதிரி தோணுது. எப்போதும் எதையாவது எடக்கா சொல்ற அப்பா கூட என்னை எதுவுமே சொல்லல… 
எல்லாமே மாறின மாதிரி இருக்கு. இதுல நான் அவனை வயலுக்கு கூட்டிட்டு போகணுமாம். இன்னைக்கு கூட்டிட்டு போன்னு சொல்லுவாங்க. நாளைக்கே அவனே பார்க்கட்டும் நீ அண்ணனுக்கு ஒத்தாசையா இருன்னு சொன்னாலும் சொல்லுவாங்க. என்னால முடியாது. நேத்திக்கு வந்துட்டு நீலாவையும் நிலத்தையும் அவன் பங்குப்போட்டுக்கிறது எனக்கு பிடிக்கல. நான் ஜெய்க்கிறேன் இல்லை அது வேற விஷயம். ஆனா என்னோடது எனக்கானது மட்டும் தான்.” என்று அழுத்தமாய் சொன்ன இந்த தச்சன் புதிதாய் தெரிந்தான் குந்தவைக்கு.
தச்சன் பிடிவாதக்காரன் என்பது குந்தவை முன்னரே அறிந்தது தான் ஆனால் எவ்வளவு பிடிவாதம் பிடித்தாலும் மணமான பின் அவள் சொல்பேச்சை கேட்டு தன்னைத்தானே மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறான் என்பதும் அவள் அறிந்ததே. இப்போது இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிடிவாதம்… அவள் சொல்வது எதுவும் அவன் மண்டையில் ஏறுவது போலவே தெரியவில்லையே. சொன்னதையே வேறு வேறு விதமாய் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறானே என்ற கவலை பிறக்க குந்தவை அசதியாய் அவனை பார்த்து வைத்தாள்.
“என்னடி சோர்வா இருக்கா? தூங்கு. நீயும் காலையிலிருந்து வீட்டுக்கும் கொல்லைக்கும் அலைஞ்சிட்டே இருந்த.” என்று பரிவாய் சொல்லி, அவள் முதுகை இதமாய் வருடிவிட, அவன் நெஞ்சத்திலே முகம் புதைத்து கண்களை மூடிக்கொண்டாள் குந்தவை.
“இப்படி இருக்காதடா. இது நல்லதில்லை. அத்தான் உன்கூட பிறந்தவங்க. உனக்கு அத்தைகிட்ட என்ன உரிமை இருக்கோ அதே உரிமை அவங்களுக்கும் இருக்கு. அதை நீ குறைசொல்ல முடியாது. அத்தானும் வேணும்னே எதுவும் செய்யல. அந்த வயசில் அவங்களுக்கு அப்படி தோணியிருக்க கூடாதுதான் ஆனால் அதுக்காக என்ன செய்ய முடியும். பெரிய குடும்பம் இருந்தும் ஊர்ஊரா சுற்றி கஷ்டப்பட்டு இப்போ தான் வீடுவந்து சேர்ந்திருக்காங்க. அவங்களை உனக்கு போட்டியா பார்க்காம திவ்யா அண்ணியை எப்படி பார்க்கிறீயோ அப்படி பாரு. அண்ணி அத்தானை அவங்க அண்ணனா ஏத்துகிட்டாங்க நீதான் முறுக்கிக்கிட்டு இருக்க.” என்று என்றுமில்லாத நிதானத்துடம் அவனுக்கு எடுத்துக்கூறியவள் ‘இதற்கு மேல் இவனிடம் மல்லுகட்ட முடியாது.’ என்ற எண்ணத்தோடு பேச்சை முடித்துக்கொண்டாள். 
தச்சன் அவள் சொன்னதை அசைபோட்டபடி எப்போது தூங்கினானோ காலையில் குந்தவை அவளை உசுப்பவும் தான் எழுந்தான். 
“சீக்கிரம் கிளம்பு. பசங்க தூங்கிட்டு இருக்கும் போதே நாம கிளம்பினா தான் சரியா இருக்கும். இல்லைனா அழுக ஆரம்பிச்சிடுவாங்க.” என்று அவனை அவசரப்படுத்த, தச்சன் விரைவாய் குளித்துவிட்டு கிளம்பினான்.
ஏற்கனவே கார் சொல்லியிருக்க அதுவும் நேரமே வந்து நின்றது. உறங்கும் பிள்ளையை தோளில் போட்டுக்கொண்டு வானதி பையை தூக்க எங்கிருந்தோ வேகமாய் வந்து அவளுக்கு உதவினான் ராஜராஜன்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே எடுத்துப்பேன்.” என்று வானதி விழியை உயர்த்தாமல் நிலத்தில் பதித்து மறுக்க, அவளை சங்கடமாய் பார்த்தான் ராஜன்.
“நேத்து நீங்க அழுதது எனக்கு சங்கடமா ஆகிடுச்சு. உங்களை குறைவா தாழ்த்திப் பேசனும்னு பேசலைங்க. பொதுவா சொன்னேன்.  ஆனால் சொன்ன விஷயம் சரிதாங்க. குந்தவையை நம்பியோ இல்லை உங்க அம்மாவை நம்பியோ உங்க வாழ்க்கை இல்லை. நீங்க அவங்களை சார்ந்து இருக்கலாம் தப்பில்லை ஆனால் அவங்க நிழலிலேயே வாழ்க்கை முழுதும் இருக்கனும்னு முடிவு பண்ணா உங்க வாழ்க்கையை, ஆசையை தொலைச்சிடுவீங்க. அவங்க கைப்பாவையா மாறினாலும் மாறிடுவீங்க. உங்களுக்குன்னு தனிப்பட்டது இருக்காது. அவங்க பேச்சை தான் கேட்கணும். யோசிச்சிக்கோங்க. வேலைக்கு போகப்போறீங்கன்னு அம்மா சொன்னாங்க. நீங்க தைரியமா போயிட்டு வாங்க. அப்புறம் தானா நிமிர்ந்திடுவீங்க.” என்று ஒரே மூச்சில் சொல்ல, ஓசையின்றி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.
“என்னங்க அப்படி பார்க்கிறீங்க?”
“எப்போதும் நீங்க தான் பேசுறீங்க. நான் கேட்டுட்டு இருக்கேன். இப்போவும் அதே தான்… நீங்க சொன்னதை நான் கேட்டுகிட்டேன்.” வானதி.
‘என்ன மாதிரியான பதில் இது?’ என்ற கேள்வியோடு ராஜன் காரை நோக்கிச் செல்லும் வானதியை பார்த்து நிற்க, சற்று தள்ளிநின்று அவனையே யோசனையுடன் பார்த்து நின்றார் அன்பரசன். மற்ற அனைவரும் ஏற்கனவே விழித்திருந்த அறிவழகனுக்கு முத்தங்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.
“ராஜா பேக்கை காரில் வைக்காம என்ன யோசிச்சிட்டு இருக்க?” அன்பரசன் நின்ற இடத்திலிருந்தே குரல் கொடுக்க, தலையை சிலுப்பிக் கொண்டவன் பேக்கை காரில் வைத்துவிட்டு தள்ளி நின்றுகொண்டான்.
பெண்கள் மூவரும் பின்னே அமர்ந்திருக்க தச்சன் முன்னே ஓட்டுனர் அருகே அமர்ந்திருந்தான். 
“பார்த்து பத்திரமா போங்க. தச்சா பார்த்து கூட்டிட்டு போ.” என்று சொன்ன நீலாவிடம் தச்சன் தலையசைக்க, கார் மெல்ல நகர்ந்தது. 
ராஜனின் பார்வை குழப்பத்துடன் கதவோரம் அமர்ந்திருந்த வானதி மீது பதிய, அவளும் அவனைத் தான் பார்த்தாள். கார் வேகமெடுக்கும் முன் பொத்தம்போதுவாய் கையசைத்தவள், ராஜனிடம் சென்றுவருகிறேன் என்பது போல தலையசைக்க, ராஜனின் தலையும் தானாய் அசைந்து இதழில் முறுவல் எட்டிப்பார்த்தது.
 

Advertisement