Advertisement

*19.2*
 “நானும் நேத்திலிருந்து பார்க்கிறேன், என்னை கண்டாலே ஒளிஞ்சிக்குறீங்க இல்லைன்னா மறைஞ்சு மறைஞ்சு போறீங்க?” பழையது எல்லாம் தெளிவாகி இந்த வீட்டோடு ஐக்கியமானதிலிருந்தே அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் விருந்து முடிந்து கூட்டமெல்லாம் குறைந்தவுடன் வெளியே உலாத்திக் கொண்டிருக்க, கொடியில் காய்ந்து கொண்டிருந்த பிள்ளைகளின் துணியை எடுக்க வந்த வானதியை பிடித்துக் கொண்டான்.
“இல்… இல்லையே. அப்படியெல்லாம் இல்லை. நான் ஏன் உங்களைப் பார்த்து மறைஞ்சி போகணும்?” ராஜராஜனின் இருப்பை எதிர்பாராத வானதி மாட்டிக்கொண்ட பாவனையில் திகைத்து திக்கித் திணறினாள்.
ஆனால் அவளுக்கு எதிர்பதமாய் ராஜனோ மிகவும் இயல்பாய், “பொய் சொல்றதையும் பதற்றப்படாம சொல்லுங்க. அப்போ தான் எதிர்ல இருக்குறவங்க நம்புவாங்க.” என்று சொல்ல, ‘இவனிடம் மட்டும் வம்பாய் மாட்டிக்கொண்டு எப்போதும் பேச்சு வாங்குறோமே’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு, அவமானத்தில் சிவந்து பார்வையை எங்கோ பதித்து அவனை நேரே பார்க்க முடியாமல் அவனெதிரே நின்றாள் வானதி.
“நீங்க சங்கடப்படனும்னு சொல்லல. உங்க நல்லதுக்குத் தான் சொன்னேன்.” என்று ராஜன் சமாதானமாய் சொன்னாலும் வானதியால் எதுவும் சொல்லமுடியவில்லை.
“பாருங்க இதுக்குத் தான் சொன்னேன். என்கிட்ட நேரா பேச முடியாம நிக்குறீங்க. எங்க பேசணுமோ அங்க பேசாம, தேவையில்லாம மூக்கை நுழைச்சி தேவையில்லாத காரியத்தில் மாட்டிக்குறீங்க… வீட்டுக்கு வந்தவங்க யாராக இருந்தாலும் வாங்கன்னு சொல்றது தான் வழக்கம். நான் இங்க வந்தப்போ என்னை இங்கிருந்து விரட்டுறதிலேயே குறியா இருந்தீங்க. ஆனா கடைசியா என்ன நடந்துச்சுனு உங்களுக்கே தெரியும். வேற யாரவது வம்பு பேசுறவங்ககிட்ட நீங்க இப்படி பேசியிருந்தா பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். சிலநேரம் நாம நம்ம வாழ்க்கையை மட்டும் பார்த்தா போதுங்க… அடுத்தவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. அதுவும் உங்க தங்கச்சியை பத்தி நீங்க கவலைப்படவே வேண்டாம். குந்தவை எல்லோரையும் சமாளிச்சு கரை ஏறிடும். நீங்க குந்தவைக்காக யோசிக்கிறேன்னு நினைச்சி அவளுக்கு பிரச்சனையை இழுத்து விட்டுறாதீங்க.” என்று சொல்ல, வானதியின் விழிகளில் கண்ணீர் பெருகி ஒன்றிரண்டு கீழே விழுந்தது. அவன் தான் பதறிவிட்டான்.
“ஐயோ… ஏங்க இதுக்கு போய் இப்படி அழறீங்க? நான் எதார்த்தமாய் தான் சொன்னேன். தப்பா சொல்லலை…”
“இல்லை நீங்க சரியாத் தான் சொல்றீங்க. என் வாழ்க்கையை… பார்க்கிறதை விட்டுட்டு அவள் வாழ்க்கையை காவந்து பண்றேன்னு சுத்திட்டு இருக்கேன். ஆனால் நான்… நான் தான் எதையாவது செய்யத் தெரியாம செஞ்சு பிரச்சனையை இழுத்து விட்டுறேன். எல்லோருக்கும் இடைஞ்சலா இருக்கேன்.” என்று சிறுமையுடன் திணறலாய் சொன்னவள் துணிகளை வாரி சுருட்டிக்கொண்டு, விழத் தயாராயிருந்த கண்ணீரையும் உள்ளிழுத்துக்கொண்டே வேக எட்டுக்கள் எடுத்துவைத்து சென்றுவிட, ராஜனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
அதே நேரம் சேட்டைகள் செய்து கலைத்து உறக்கத்தை தழுவும் நிலையிலிருந்த அறிவழகனை இடையில் சுமந்தபடி வானதியை தேடி வந்தாள் குந்தவை. வானதி எதிர்படவுமே அவளை நிறுத்தி அறிவழகனை அவளிடத்தில் ஒப்படைத்துவிட்டு தான் வானதியின் முகவாட்டத்தையே கவனித்தாள், “என்னடி ஆச்சு? அழுதியா?” என்று கேள்வியோடு கூர்மையாகவும் பார்த்துவைக்க, வானதி மீண்டும் பொங்கத் துடிக்கும் விழிநீரை தொண்டைக் குழியில் இறக்கி,
“நாளைக்கு அம்மாவோட இங்கிருந்து கிளம்புறேனா அதுதான் ஒருமாதிரி இருந்துச்சு… இவ்வளவு நாள் எந்த பிக்கல் பிடுங்கலும் பயமும் இல்லாம இருந்துட்டு திரும்ப அங்க போனதும் இயல்புக்கு திரும்பிடுமேன்னு ஒரு சோர்வு. அவ்வளவு தான்…” என்று வானதி ஒருவாறாய் பதில் சொல்ல ஆச்சர்யமாய் பார்த்தாள் குந்தவை.
தங்கையின் பார்வையில் குழம்பியவள், “என்னடி?” என்று கேட்க குந்தவையிடமிருந்து வந்த பதிலும் வியப்பு தாங்கியே வந்தது.
“நீங்க ஊருக்கு நாளைக்கே கிளம்புறேன்னு சொல்லவே இல்லை. அம்மாவும் மூச்சு விடல. உனக்கு என்னாச்சு? முன்னாடி இங்கிருந்து கிளம்புன்னு சொன்னாலே இது என்னவோ உன்னோட பிறந்தவீடு மாதிரி இன்னும் கொஞ்ச நாள்னு சொல்லிட்டு ஜம்பமா கிளம்ப மாட்டேன்னு இருந்த. இப்போ எல்லாத்துக்கும் தயாராகிட்டீயா?”
“என்னைக்கு இருந்தாலும் இது உன்னோட புகுந்த வீடு. உன்னோட புகுந்த வீட்டு சொந்தங்கள் இருப்பாங்க. நான் உன்னோட அக்கா. விருந்தாளியா வரலாம். ஆனால் எப்போதும் இங்கேயே இருந்திட முடியுமா என்ன?” என்று திருப்பி பதில் சொன்ன வானதியை ஆவென்று தான் பார்த்தாள் குந்தவை. 
இதைத் தான் பல நாட்களாக மறைமுகமாக அவளுக்கு புரியவைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாள் அதை செவியிலேயே வாங்கிடாதவள் திடுமென இன்று புரிந்துகொண்டதற்கான காரணம் என்னவோ! அதுவும் புரிந்தது அடுத்த சில நொடிகளிலே. சுற்றிமுற்றி பார்த்தவள் என்ன நினைத்தாளோ வானதியை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“இன்னைக்கு வந்தவங்க யாராவது ஏதாவது சொன்னங்களாடி? இல்லை அத்தான் வீட்டுக்கு வந்ததால சொல்றியா?”
“யாரும் எதுவும் சொல்லல.” பேச்சினூடே குழந்தையுடன் கீழே அமர்ந்து அறிவழகனை மடியில் போட்டு தட்டிக்கொடுத்தாள் வானதி.
“நிஜமாவா? என்கிட்ட எதுவும் மறைக்கிறீயா?” என்ற குந்தவையும் கீழே அவள் அருகில் அமர்ந்துகொண்டாள்.
“ப்ச்… நான் என்ன பொய்யா சொல்றேன்! இவ்வளவு நாள் இது உன் வீடுன்னு மட்டும் தான் தோனுச்சு, உன் வீட்டுக்காரும் நல்ல மனுஷன். அவர் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருப்பாரு. ஆனால் இப்போ வந்திருக்காரே… அவர் அண்ணன், அதுதான் உன் அத்தான். ஷப்பா… அவர் இருக்கிற இடத்தில என்னால இருக்க முடியாது. எப்போதும் அவர்கிட்ட ஏடாகூடமா மாட்டிக்கிட்டு பேச்சு வாங்குற மாதிரியே ஆகிடுது. நான் வீட்டுக்கே போறேன்.”
“நீ என்னடி பண்ணிவச்ச? அத்தான் நல்ல விவரமானவரு, தெளிவாவும் பேசுறாரு… அவர்கிட்ட மாட்டிகிட்டேன்னா நீ என்னவோ கிறுக்குத்தனம் பண்ணியிருக்க… என்ன பண்ண?”
“ஏன்? எனக்கு எதுவுமே தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டீயா? எனக்கும் ரெண்டு புள்ளைங்க இருக்கு… எனக்குன்னு வாழ்க்கை இருக்கு. அதை நான் பார்க்க வேண்டாமா?” ராஜராஜனிடம் பேசி சமாளிக்கத் தெரியாமல் தவித்த தவிப்பை குந்தவையிடம் வார்த்தைகளாய் கொட்டினாள் வானதி.
“என்னவோ ஆச்சுடி உனக்கு… எந்த மரத்துக்கு கீழ போய் உட்கார்ந்துட்டு வந்தியோ தெரியல. ஆனால் உருப்படியா பேசுற… ஒழுங்கா யோசிக்கிற. இப்படியே இரு. நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன். நாளை மறுநாளிலிருந்து வேலைக்கு போகவும் தயாராய் இரு.” என்று சொல்லிவிட்டு வேலைக்கு செல்வது குறித்து வானதி எதுவும் மறுப்பு தெரிவிப்பாளோ என்பது போல பார்க்க, வானதி மறுப்பும் சொல்லவில்லை சம்மதமும் தெரிவிக்கவில்லை. இதற்கு மேல் தேவையின்றி கேள்விகள் கேட்டு ஒழுங்காய் சென்றுக் கொண்டிருப்பதை கெடுத்துக்கொள்ள வேண்டாமென எண்ணி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் குந்தவை.
***
அந்தி சாய்ந்து இரவு வேலை உணவெல்லாம் முடிந்த பின் சமையலறை வாயிலில் அமர்ந்து பிள்ளைகளுக்கு உணவூட்டிக் கொண்டிருக்கும் வானதியை பார்ப்பதுமாய் பின் குழந்தைகளை பார்ப்பதுமாய் நேரத்தை தள்ளிக் கொண்டிருந்தான் ராஜராஜன். அருகில் திவ்யா கணவன் கதிரவன் அமர்ந்துகொண்டு தன் புது மைத்துனனுடம் எதுவோ பேசிக்கொண்டிருக்க, ராஜனால் தான் அந்த உரையாடலில் முழுதாய் ஈடுபட முடியவில்லை. 
மாலை பேசிய போது வானதி அழுகையுடன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளுக்கு பின் எதுவோ மறைந்திருப்பது போலத் தோன்ற, மனம் கேளாமல் நேரே நீலாவிடம் சென்றான்.
“என்னாச்சுமா குந்தவை அக்காக்கு? எல்லோரும் இருக்காங்க ஆனால் அந்த பொண்ணோட வீட்டுக்காரரை காணோம்? அந்த பொண்ணும் எப்போதும் எதையோ இழந்துட்டு நிலையில்லாம வாழுற மாதிரியே இருக்கு. ஒரு ஒதுக்கம் தெரியுது?” என்று கேட்க, அருகில் இருந்த அன்பரசன் அவனை குழப்பமாய் பார்த்தார். ஆனால் எதுவும் கேட்கவில்லை சொல்லவுமில்லை.
நீலா நடந்ததை சொல்ல அதனுடன் வானதி அவனிடம் கடைசியாய் கூறிச் சென்ற வார்த்தைகளை பொருத்திப் பார்த்து அவள் என்ன நினைத்திருப்பாள் என்றும் யூகத்திருந்தான்.
மனம் அவளுக்காகவும் அவளின் பிள்ளைகளுக்காகவும் வருந்த, வார்த்தைகள் அடுத்து அவர்கள் வாழ்க்கையில் என்ன என்ற வினாவை ஆவலாய் எழுப்பியது, “அடுத்து என்ன பண்ண போறாங்களாம்?”
“குந்தவை அவங்க அப்பா வேலை பார்த்த இடத்திற்கு அருகிலேயே வானதிக்கும் வேலைக்கு சொல்லி இருக்காளாம். நாளைக்கு ஊருக்கு கிளம்புறாங்க.” என்று நீலா சொன்னதிலிருந்து வானதியிடம் பேசிட வேண்டுமென நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் வானதி அவனை நாசுக்காய் தவிர்த்து அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள். இன்னொரு முறை தவறு செய்த பிள்ளை போல அவனிடம் மாட்டிக்கொண்டு விழிக்க விருப்பமில்லை அவளுக்கு.
“வானதி என்ன தடவிட்டு இருக்க? நீ போய் துணியெல்லாம் எடுத்து வை. காலையில் வெயிலுக்கு முன்னாடியே கிளம்பிடுவோம். நான் பிள்ளைக்கு ஊட்டி விடுறேன்.” என்று சுமதி வந்து ஒரு பிள்ளையை தூக்கிக் கொள்ள, குந்தவை மற்றொரு பிள்ளையை தூக்கிக் கொண்டு தன் அன்னையை தொடர்ந்தாள். வானதியிடம் தெரிந்த மாற்றத்திற்கு காரணமான ராஜானிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்டுப் பார்ப்போமா என்றெழுந்த எண்ணத்தை கூட வானதியின் தன்மானம் கருதி ஒதுக்கிவிட்டாள் குந்தவை. ராஜன் எவ்வளவு தெளிவாய் இருந்தாலும் அவனிடம் வானதியை பற்றி பேசுவது தேவையற்றது தானே… 
பிள்ளைகள் நகர்ந்ததும் வானதியிடம் பேச முடியுமா என்பது போல ராஜன் பார்க்க, அவனை காணாதது போல குந்தவையின் அறைக்குள் புகுந்து கொண்டாள் வானதி. ராஜனும் வேறு வழியின்றி கதிரவனுடன் பேச்சை தொடர்ந்தான்.
***
வெளியே வேடிக்கை காட்டிக்கொண்டே பிள்ளைகளுக்கு உணவூட்டிய அன்னையிடம், “வரவர இந்த குட்டீஸோட சேட்டை அதிகமாதுமா… இங்க வந்ததும் செல்லம் கூடிப் போச்சு. எல்லோரும் இவங்க கேக்குறதை உடனே கொடுத்திடுறாங்களா… பிடிவாதமும் அதிகமாகிடுச்சு. நாளையிலிருந்து தனியா நீ எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல.” இடுப்பிலிருந்து நழுவி கீழே இறங்க முற்பட்ட அறிவழகியை முறைத்தபடியே முறையிட்டாள் குந்தவை.
“அங்க போனதும் மாத்திடலாம்டி… ஊருக்கு கிளம்பும் போது வானதியையும் சேர்த்து கூட்டிட்டு போறேன்னு சம்பந்திகிட்ட சொன்னதும் உன் மாமனார் தனியா போகவேண்டாம் உன்னையும் மாப்பிள்ளையையும் அனுப்புறேன்னு சொன்னாரு. மாப்பிள்ளைக்கு எதுக்கு அலைச்சல் நாங்களே போயிடுறோம் குந்தவை. நீ உன் மாமனார்கிட்ட சொல்லேன். அவர் அப்படி அக்கறையில் சொல்லும் போது முடியாதுன்னு சொல்ல முடியல. ஆனா மாப்பிள்ளை நமக்கு நிறைய செஞ்சிட்டாருடி. அவரை சும்மா சும்மா அலைய வைக்கக் கூடாது.”
“அம்மாவுக்கும் மூத்த பொண்ணுக்கும் எங்கிருந்து திடீர் ஞானம் வந்துச்சுன்னு தெரியல.”
“ம்ச்… நீ தானடி வானதியை அனுப்புறன் வீட்டுக்கு கூட்டிட்டு போன்னு சொல்லிட்டே இருந்த. அதுதான் இங்கிருந்து போகும் போதே கூட்டிட்டு போயிடலாம்னு நினைச்சேன். எனக்கும் பசங்க இல்லாம அங்க தனியா இருக்க என்னவோ போல இருக்கு.”
“என்னமோ மரியாதையை தக்கவச்சிகிட்டா சரி. மாமா என்கிட்ட முன்னாடியே இங்கிருந்து நான் தான் வானதியை வீட்டுக்கு கொண்டுபோய் விடணும்னு சொல்லிட்டாங்க. அதை மீறமுடியாது. வானதி நாளை மறுநாளிலிருந்து வேலைக்கு போவா… அவளை கிளப்ப தயாரா இருந்துக்கோ. நாளைக்கு எவ்வளவு வேலையிருக்குன்னு குணா அண்ணனை கேட்டுட்டு அதற்கு தகுந்தமாதிரி அவனும் நானும் அங்க தங்குறோம். என்னால அங்க ரொம்ப நாள் தங்க முடியாது. படிப்புக்கு தகுந்த வேலையை இப்போவே தேட ஆரம்பிக்கணும்.”
“என்னது வேலைக்கா? உன் மாமியார் மாமனார்கிட்ட சொல்லிட்டீயா? மாப்பிள்ளை ஒத்துக்கிட்டாரா?”
“உன் மாப்பிள்ளை முடியாதுன்னு சொல்லிடுவானா என்ன!” என்று புருவத்தை உயர்த்தியவள், அறிவழகிக்கு உணவு ஊட்டிக்கொண்டே, “எங்க வேலைக்கு போறதுன்னு இன்னும் முடிவு பண்ணல. முடிவானதும் அத்தை மாமாகிட்ட நான் பேசிக்கிறேன். நீ தேவையில்லாம எதையாவது உளறி வைக்காத.”
“என்னடி மாப்பிள்ளையை இப்படி பேசுற… இதெல்லாம் தப்பு. மரியாதை கொடுத்து பேசு.”
“ம்மா… நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற… அவனை இப்படித் தான் கூப்பிடுவேன்னு இங்க எல்லோருக்கும் தெரியும் ஆனா யாருமே எதுவும் சொன்னதில்லை. நீயும் வானதியும் தான் குதிக்கிறீங்க. நமக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு, அதை எப்படி சரிபண்றதுன்னு யோசி. வானதிக்கு மாப்பிள்ளை பார்க்கவான்னு மாமா கேட்டுட்டு இருக்காங்க. எனக்கும் அதுதான் சரின்னு தோணுது. நீ அவகிட்ட பக்குவமா பேசு. நான் பேசுனா அவள் பதிலுக்கு ஏதாவது பேசுவா நான் திட்டிடுற மாதிரி ஆகிடும். அப்புறம் அவள் மூக்குறிஞ்ச ஆரம்பிச்சிடுவா.”
“மாப்பிள்ளையா? இன்னொரு கல்யாணமா? புரிஞ்சி தான் பேசுறியா நீ? ரெண்டு புள்ளை இருக்குடி. யார் கட்டிக்க ஒத்துப்பா? அப்படியே ஒத்துகிட்டாலும் நம்ம புள்ளைங்களை முழு மனசோட ஏத்துப்பாங்களா? பசங்களை தன்னோட பசங்க மாதிரி வளர்ப்பாங்களா? எனக்கு பயமா இருக்கு குந்தவை.”
“அதெல்லாம் யோசிக்காம நான் சரின்னு சொல்லுவேன்னு நினைக்கிறீயா? இல்லை இங்க தான் எல்லோரும் அப்படியே விட்டுருவாங்களா? வானதி காலம் முழுக்க இப்படியே தனியா இருந்திடனும்னு அவசியமில்லையே. அவளுக்குன்னு ஒரு குடும்பம் அமைச்சி கொடுக்கிறது தான் சரியா வரும். அதோட பசங்களுக்கு ஒண்ணுன்னா உன் மாப்பிள்ளை முன்னாடி வந்து நிப்பான். மாமாவை பத்தி நான் சொல்லனும்னு அவசியமே இல்லை. இந்த முறை தெளிவா விசாரிச்சு வானதியோட முழு விருப்பத்தோட யோசிச்சு செய்யணும். அவளுக்கு நம்பிக்கை வரணும் அப்புறம் தான் கல்யாணம் எல்லாம்… நீ அவகிட்ட இதை பத்தி பேச்சு கொடுத்து பாரு. அதுக்கு தான் உன்கிட்ட முன்னாடியே தகவல் சொல்றேன்.” குந்தவை நம்பிக்கையுடன் அழுத்தமாய் சொல்ல, சுமதிக்கும் வானதிக்கும் ஒரு வாழ்வு அமைந்தால் நன்றாய் இருக்குமே என்ற ஆவல் பிறந்தது. பெற்ற உள்ளம் கேடு நினைத்துவிடுமா என்ன…

Advertisement