Advertisement

*13*
உறக்கத்தில் இருந்த அறிவழகியை வாகாய் மெத்தையில் படுக்க வைத்து, தலையணை கொண்டு அணை கட்டிவிட்டு வானதியை கீழே அமரச் சொல்லி தானும் அருகில் அமர்ந்துகொண்டாள் குந்தவை. விவரம் தெரியாமல் குந்தவை குழப்பத்துடன் தவிக்க, வானதியிடம் எந்த பதட்டமும் இல்லை. 
“என்னாச்சு? என்கிட்ட கூட சொல்லாம அம்மா எப்படி உன்னை அனுப்புனாங்க? நீயும் அப்படியே கிளம்பி வந்திருக்க?” இறுக்கம் ஏறிய குரலில் குந்தவை அதிருப்தியை வெளிப்படுத்த வானதி முகத்தை சுழித்தாள்.
“நான் வந்ததே தப்பு என்கிறது போல என்னடி இப்படி பேசுற?”
“தப்புன்னு சொல்லல… இப்போ எதுக்கு கிளம்பி வந்தேன்னு தான் கேக்குறேன். நானே இப்போ தான் இங்க பொருந்திப் போயிருக்கேன். அதுக்குள்ள என்ன அவசரம் வந்தது இப்போ?”
“அவசரமில்லை. அவசியம் வந்துடுச்சு… நீயும் இங்க வந்துட்ட… அங்க என் மாமியாரும் அவங்க சின்ன பையனும் ஆளுங்களை கூட்டிட்டு வீட்டுக்கே வந்துட்டாங்க. இதுவரைக்கும் உங்கப்பா இருந்தாங்க அதனால இங்கேயே இருக்கட்டும்னு விட்டுட்டோம். இப்போ நீங்களே ஆதரவு இல்லாமல் வருமானத்திற்கு வழியின்றி இருக்கும் போது எப்படி பசங்களை வளர்ப்பீங்க? எங்க வீட்டு வாரிசு எங்களுக்கு வேணும்னு வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணிட்டாங்க. எங்களால் சமாளிக்க முடியல. 
அப்போ தான் உன் வீட்டுக்காரர் வந்தாரு. அவரும் பேசிப்பார்த்தாரு. அவர் சொன்னதையும் கேக்கல. அப்புறம் தான் கொல்லி வச்ச உரிமை எனக்கிருக்கு. இந்த வீட்டுப் பிள்ளையா நான் பார்த்துப்பேன்னு அவர் சொன்னதும் தான் கொஞ்சம் அடங்குனாங்க. அப்படியும் அவங்க கிளம்பல. நானும் என் பெண்டாட்டியும் பசங்களுக்கு என்ன செய்யணுமோ எல்லாத்தையும் செய்வோம். விருப்பமில்லாதவங்களை அனுப்பி வைக்க முடியாதுனு கறாரா சொல்லிட்டாரு. அப்புறம் இந்த பிரச்சனை முடியும் வரை கொஞ்ச நாள் குந்தவையோட இருங்கனு சொல்லி இங்க கூப்பிட்டாங்க. அதுதான் நானும் கிளம்பி வந்துட்டேன். உனக்கு போன் போட்டேன் நீ எடுக்கவே இல்லை.” என்று கதை போல வானதி சொல்ல உன்னை வெட்டவா குத்தவா என்பது போல முறைத்தாள் குந்தவை.
“என்னடி கதை படிக்குற? இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கு… ஒருமுறை எடுக்கலைன்னா திரும்ப என்ன கூப்பிட மாட்டியா? அம்மா என்ன பண்ணிட்டு இருக்கு அங்க? இந்த மனுஷனும் என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாம இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்காரு.” என்று தச்சனையும் சேர்த்து கடிந்துகொண்டாள் குந்தவை.
“ரெண்டு மூணு முறை கூப்பிட்டேன்டி… நீ எடுக்கல. நீ எடுக்குற வரைக்கும் நான் போன் போட்டுட்டு இருந்தா அவங்க பசங்களை மட்டும் கூட்டிட்டு போனாலும் கூட்டிட்டு போயிருப்பாங்க.”
“இதுக்குத் தான் அப்போவே அப்பாகிட்ட சொன்னேன். வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா இதை முடிச்சு விட்டுருங்க. இழுக்க வேண்டாம்னு… எனக்கு விவரம் போதாதுன்னு என் வாயை அடைச்சீங்க. அப்புறம் அதைப் பற்றி அவரும் கேக்கல… நீங்களும் அப்போ அமைதியா இருந்திட்டீங்க. அதோட வினை எங்க வந்து நிக்குது பாரு…” என்று தலையில் கைவைத்தே அமர்ந்துவிட்டாள் குந்தவை. இப்போதெல்லாம் தந்தை இழப்பைவிட அவர் விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்பத் தான் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. 
குடும்பத்தின் ஆணி வேர் நீத்துவிட, கிளைகளை விரிவுபடுத்தாமல் அனைத்தையும் தன் தோளிலேயே சுமந்ததன் பலனை இப்போது இவர்கள் அனுபவிக்க வேண்டியதாகியிருந்தது. அவர் சுமந்திருந்த பாரத்தின் கணமும் விளங்கியது.
“ஏன்டி இப்படி உட்கார்ந்திருக்க? நீயே இப்படியிருந்தா அப்புறம் நான் என்ன செய்றது? உன்னை விட்டால் யாருடி இருக்கா எனக்கு?” அழுதுவிடுபவள் போல வானதி பேச முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு எழுந்தாள் குந்தவை.
“இப்போதாவது உனக்கு என்ன வேணும்னு தெளிவா சொல்லு. உனக்கு அங்க போக விருப்பம் இருக்கா இல்லையா? எல்லா முறையும் அப்பா வேண்டாம்ணு சொல்லிட்டாரு நானும் கூடாதுன்னு சொல்லிட்டேன்… அதனால் வேண்டாம்னு சொல்லிட்டு திரிஞ்ச. இன்னைக்கு நீ முடிவு எடுத்துத்தான் ஆகணும். அது உன்னோட முடிவா இருக்கணும். அந்த முடிவில் இறுதிவரை அழுத்தமா இருக்கணும். அவங்க கூட போக வேண்டாம் என்றாலும் கடைசி வரை அம்மாவோடவே இருந்துடுவீயா? பசங்களை எப்படி வளர்க்கப் போறதா உத்தேசம்? அதைப் பற்றி ஏதாவது யோசிச்சு வச்சிருக்கியா இல்லையா?” குந்தவை கேள்விகளை அடுக்க, அவளையே மலைப்பாய் பார்த்தாள் வானதி.
“இப்படி முழிச்சேன்னா இழுத்துவச்சு பளார்னு அறைஞ்சிடுவேன்டி…” என்று ஆத்திரத்தில் குந்தவை கையை ஓங்கிவிட, வானதி அழுதே விட்டாள்.
“ரெட்டை புள்ளை வச்சிருக்க அதுங்க எதிர்காலம் பற்றிய பயம் ஏதாவது இருக்கா உனக்கு? யார் இழுத்தாலும் அவங்க இழுப்புக்கு போயிட வேண்டியது.”
“என் பசங்களை பற்றிய அக்கறை எனக்கு இல்லாத மாதிரி பேசுற… ஒவ்வொரு நொடியும் பயந்து பயந்து வாழ்ந்துட்டு இருக்கேன். எந்த நேரம் யார் நம்மை விட்டு போயிடுவாங்களோ… பசங்களை எப்படி கரை ஏத்தப்போறேன்னு ஒவ்வொரு நாழிகையும் எனக்குள் கேள்வி ஓடிட்டே இருக்கு.”
“அது ஓடிட்டே இருந்தால் மட்டும் போதாது அதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கணும். நீ அதை செய்யுற மாதிரியே தெரியல… புழுங்கி புழுங்கி அழுதுட்டே இருக்கியே ஒழிய அதைவிட்டு வெளியே வரமாட்டேங்குற…” ஆதங்கத்தில் குந்தவையின் குரல் தானாகவே உயர, நீலா சரியாய் அந்நேரம் பாலை எடுத்துக்கொண்டு வந்தார்.
“ஷ்… குந்தவை… குழந்தை தூங்கிட்டு இருக்கா நீ என்ன இப்படி சத்தம் போட்டுட்டு இருக்க. குழந்தைக்கு பால் கொடுத்துட்டு வாங்க. நிதானமா பேசலாம்.” என்றுவிட்டு இரண்டு தம்ளரை கொடுத்துவிட்டுச் சென்றார்.
“நீ குடி… நான் இவள் பாட்டிலை சுத்தம் பண்ணிட்டு வரேன். குட்டிப்பையனுக்கும் கொடுத்துடுறேன்.” என்றுவிட்டு இரு பாட்டில்களையும் எடுத்துக்கொண்டு குந்தவை வெளியேற, முற்றத்திலேயே அறிவழகனை மடியில் வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டே தம்ளர் கொண்டே சிறிது சிறிதாய் பால் புகட்டிக் கொண்டிருந்தான் தச்சன்.
வியப்புடன் அவனை நெருங்கியவள், “சமத்தா குடிக்குறானே… பாட்டில்ல தான் குடிப்பான்னு நான் பாட்டில் எடுத்துட்டு வந்தேன்.” என்று அவள் பாட்டிலை காட்ட, 
“அதற்கெல்லாம் திறமை வேணும்டி…” என்று காலரை தூக்கிய தச்சன் மடியில் இருந்த பிஞ்சின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதிக்க, அறிவழகன் கையுர்த்தி தன் தளிர் விரல்கள் கொண்டு தச்சனின் கன்னத்தை பிடித்திழுத்தான்.
“அப்படித்தான் செல்லம்…. நல்லா கிள்ளு உன் சித்தப்பாவை… அவருக்கு இருக்குற வாய் கொழுப்பாவது அடங்கும்…” என்று நாக்கை துருத்திக் காண்பித்துவிட்டு குந்தவை நகர்ந்துவிட, 
“ப்பா… ப்பா…” என்று மழலையில் பிதற்ற ஆரம்பித்துவிட்டான் அறிவழகன். அவனை பிடித்தமுக்கி தனக்குள் புதைத்துக்கொண்டவன் அவன் உச்சியில் முத்தம் வைத்து, “என் செல்லக்குட்டி… உன் சித்திக்காரி சதிகாரி… அவ பேச்சை கேட்காத… அப்படியே மயக்கிடுவா… நாம ஸ்டெடியா இருக்கனும்…”
அங்கேயே சற்று தள்ளி நாற்காலியில் அமர்ந்திருந்த அன்பரசன், “குழந்தைகிட்ட என்ன பேசுறான் பாரு…” என்று தலையில் அடித்துக் கொண்டார்.
“இதோ… இவரும் உன் சித்திக்கு கூட்டு… அவள் என்ன செஞ்சாலும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுவாரு…” என்று அவரையும் வம்புக்கு இழுத்தான் தச்சன்.
“ஏலேய்…” அன்பரசனின் சத்தத்தோடு அவர் கையில் இருந்த தம்ளரும் அவன் முதுகை பதம்பார்த்தது.
முகத்தை சுழித்துக்கொண்டு ‘ஷ்’ என்று வலியில் தச்சன் சத்தம் எழுப்ப… பொறுப்பாரா மங்களம்…
“டேய்… தோளுக்கு மேல வளர்ந்த புள்ளை… இன்னும் கொஞ்ச நாள்ல அவனுக்கே புள்ளை வந்துரும்… இன்னமும் அவனை அடிக்குற…” என்று மகனை கடிந்துகொண்டார் மங்களம்.
“நீ தான் அவனை கெடுத்து வச்சிருக்க… என்ன பிரச்சனைன்னு தெரியாம நாம இங்க உட்கார்ந்திருக்கோம், இவன் குழந்தைகிட்ட என்ன பேச்சு பேசுறான் பாரு… அப்பன்னு மரியாதை கொஞ்சம் கூட இல்லாம இருக்கான்னா… அதையே அந்த புள்ளைக்கும் சொல்லிக் கொடுக்குறான். நாளைக்கு இவன் புள்ளையை எப்படி ஒழுங்கா வளர்க்கப் போறானோ தெரியல…” என்று அன்னையையும், மகனையும் ஒருசேர கடிந்துகொண்டார் அன்பரசன்.
“உன் பேத்தி இப்போதைக்கு புள்ளை பெத்து தரமாட்டேன்னு சொல்லிட்டா… சோ நோ கவலைஸ்…” என்று கிசுகிசுத்தவனை என்ன செய்தால் தகும் என்பது போல் பார்த்து வைத்தார் மங்களம். 
“கீ கொடுக்குற பொம்மை மாதிரி நீ ஆடிட்டு உங்கப்பாவை சொல்றியா நீ?” என்று தன்பங்கிற்கு நீலாவும் வேலை முடித்துவிட்டு வந்தமர, தச்சன் கப்சிப். அவரும் குந்தவையும் எந்த நேரம் சேர்ந்திருக்கிறார்கள் முறைத்துக் கொள்கிறார்கள் என்று தெரியாத நேரத்தில் குந்தவையின் அக்காவை அல்லவா சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்திருக்கிறான். அதற்கே என்ன பஞ்சாயத்து காத்திருக்கிறதோ… இந்த நேரத்தில் தேவையில்லாமல் வாய் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாமென அமைதியாகி விட்டான்.
“என்ன அமைதியாகிட்ட?” அவனிடம் ஒரு தம்ளரை கொடுத்துவிட்டு அறிவழகனை தூக்க முயல, அந்த சின்ன சிட்டு அவரிடம் செல்ல மறுத்து கைகளை உதறிச் சிணுங்கியது.
“அடேய் முதல்ல பார்த்த போது உன்னை தூக்கவே யோசிச்சான்டா இவன்… இப்போ என்னவோ கோந்து மாதிரி கூடவே ஒட்டவச்சி உட்கார்ந்திருக்கான்.” என்று தச்சனை காட்டி சிலிர்த்துக்கொள்ள, அறிவழகனை தன் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டான் தச்சன்.
“ரொம்பத்தான் செல்லம் கொஞ்சிக்குறீங்க…” என்று நொடித்துக்கொண்ட நீலாவிடம்  இப்போது அந்த பிஞ்சின் மீது எந்த வருத்தமும், பயமுமில்லை. வானதி வந்திருப்பது மட்டுமே நெருடலாய் தெரிந்தது. அதையே கேட்கவும் செய்தார்.
“என்ன பிரச்சனை தச்சா? இப்படி அவசர அவசரமா பிள்ளைங்களையும் கூட்டிட்டு வந்திருக்க. யாருக்கிட்டேயும் சொல்லவுமில்லை. குந்தவைக்குக் கூட தெரியல. அவங்க வீட்டிலிருந்தும் யாரும் எதுவும் சொல்லல?”
“அத்தை இவங்களை அனுப்ப மாட்டேன்னு தான் சொன்னாங்க. நான் தான் பிடிவாதமா கூட்டிட்டு வந்தேன். உங்கட்ட பேசினதும் நானே போன் போட்டு தரேன் பேசுங்க.”
“விஷயம் என்னனு சொல்லுடா…” அன்பரசன் துரிதப்படுத்த தச்சன் வாய் திறந்தான்.
“உதவித்தொகை பற்றி விசாரிச்சப்போ அத்தையோட கையெழுத்தும் அவங்க வங்கி கணக்கு விவரமும் வேணும்னு சொன்னாங்க. பெண்ணோட அப்பா இல்லை அம்மா வங்கிக்கணக்கில் தான் பணம் போடுவாங்களாம். தங்கமும் அவங்க தான் போய் வாங்கணுமாம். இந்த தகவலை சொல்லி கையெழுத்து வாங்குவோம்னு வீட்டுக்கு போனா பத்து பேர் நாட்டாமை மாதிரி உட்கார்ந்து சத்தம் போட்டுட்டு கிடந்தாங்க. 
குந்தவை அக்காவை அவங்ககூட வரச் சொல்லி சண்டை. அவங்க வரலைன்னா பிள்ளைங்களை எங்ககூட அனுப்பிவைங்கன்னு பேச வாய் தகராறு ஆகிடுச்சு. இவங்களுக்கு அங்க போக விருப்பமில்லை… தனியா அத்தனை பேரை சமாளிக்கவும் முடியல… குழந்தைகளை வச்சிக்கிட்டு தவிச்சு போய் நின்னுட்டு இருந்தாங்க. எப்படி அப்படியே விட்டுட்டு வரமுடியும்? நாளைக்கே யாரும் இல்லாத போது வந்து பிரச்சனை பண்ணா என்ன செய்யறது? அதுதான் கூட்டிட்டு வந்துட்டேன்.”
“குந்தவை உன் அக்காவை வரச்சொல்லு மா… இவன் இன்னைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம் ஆனால் இந்த பிரச்சனை இதோட முடியப்போறது இல்லை. தனியா முடிவெடுக்கிற காரியமும் இல்லை.” பிரச்சனை இன்னவென தெரிந்தவுடன் அன்பரசன் அதில் முழுவீச்சில் இறங்கிவிட்டார். 
தங்கள் வீடுவரை ஆதரவு தேடி வந்திருப்பவளுக்கு நியாயம் செய்திட வேண்டும் என்ற எண்ணம். அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பு நீலாவிடம் தெரிகிறதா என்பது போல பார்க்க, “என்னனு பார்த்து முடிச்சி விட்டுருங்க. நம்ம பையன் அவனோட பொறுப்பில் கூட்டிட்டு வந்திருக்கான். அதோட அவளும் நம்ம வீட்டு பொண்ணு மாதிரி தானே… குந்தவைக்கு ஒன்னுன்னா சும்மா இருந்திடுவோமோ அதுமாதிரி தான் அந்த பொண்ணும். ஆதரவு இல்லாம இருக்கும்போது நாம தான் ஒத்தாசையா இருக்கணும்.” என்றுவிட அன்பரசனுக்கு தயக்கமெதுவுமில்லை.

Advertisement