Advertisement

தந்தையுமானவள்….

 எழுபதுகளின் காலகட்டம் அது… அப்போதெல்லாம் விவசாயம், அதனை சார்ந்த தொழில்கள் மட்டுமே முதன்மை பெற்றிருந்தது. பல குடும்பங்கள் விவசாயத்தை நம்பி மட்டுமே  இருந்தன… 

 கொங்கு பகுதியில் ஒன்றான ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். அதை கிராமம் என்று கூட சொல்லமுடியாது. ஒவ்வொரு தோட்டத்திற்கு நடுவிலும் கூறைவேயிந்த வீடுகளும், ஒரு சில ஓட்டு வீடுகளும் மட்டுமே இருந்தது. காவேரி பாசனம் பாய்வதால் அந்த கிராமத்தை சுற்றிலும் கண்ணுக்கெட்டியதூரம் வரைலும் பசுமை மட்டுமே…

  சிலர் தன் வயலில்   காளைமாடுகள் பூட்டி ஏர் ஓட்டிக் கொண்டிருந்தனர்… ஒரு பக்கம் நாற்றங்காலில் பெண்கள் களைப்பு தெரியாமலிருக்க பேசிக்கொண்டே களை எடுத்துக்கொண்டிருந்தனர்… அதில் நம்கதையின் நாயகி  பதிமூன்று வயதே ஆன மீனாட்சியும் இருந்தாள்.

பாவாடை சட்டைப்போட்டு தலையில் மண்டைக்கட்டுடன் மாநிறத்தில் வெயிலில் வேலை செய்வதால் நிறம் மங்கி மாநிறத்துக்கும் இன்னும் குறைவான நிறத்தில் கூலி வேலை செய்யும் கிராமத்து பெண்ணாக இருந்தாள்.

மிகவும் ஏழ்மையான குடும்பம்.   இரண்டு அண்ணன் மூன்று அக்காவுக்கு  பிறகு ஆறாவது பெண்குழந்தையாக பிறந்தவள்.  தந்தையை சிறுவயதிலே இழந்து தாய் நல்லாம்மா, தமையன்களின் வளர்ப்பில் வளர்பவள்… விவரம் எதுவும் அறியாத வெள்ளந்தியான கிராமத்து  பெண். அவளுடன் பிறந்த இரண்டு அண்ணன்களுக்கும், இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. நல்லம்மா சிறு வயதிலை கணவனை இழந்தாலும் அதை நினைத்து வருந்தாமல் இதுதான் வாழ்க்கை என அதை ஏற்றுக் கொண்டு கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைங்களை வளர்த்தார். பசங்களுக்கு திருமணம் ஆனதுமே பிரச்சினை வராமல் இருக்க இருவருக்கும் நிலத்தில் பாதியை பிரித்துக் கொடுத்து தனிக்குடித்தனம் வைத்துவிட்டார். பெரிய மகளையும் தன் தம்பிக்கே கட்டிக்குடுத்திருந்தார். அவர்களும் பக்கத்திலே குடி இருந்தனர்.

வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த மீனாட்சி திடீர் என்று தன் வயிற்றை பிடித்துக்கொண்டே அம்மா என கத்திக்கொண்டு அழுதாள்… அவளின் அழுகுரல் கேட்டு பக்கத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த மீனாட்சியின் அக்காக்களும் மற்ற பெண்களும் அவளைசுற்றி நின்று  “ஏம்புள்ள அழுகற என்னாச்சுனு சொல்லுபுள்ள??” என கேட்டனர்.

அவளின் அருகில் இருந்த  பவளாயி ஆத்தா அவளை பார்த்தே அவள் எதற்காக அழுகிறாள் என்பதை  கண்டுபிடித்து விட்டார். 

“ஏன்டி புள்ளைங்ளா பதரிங்க… எல்லா நல்ல விசயம்தே.. மீனா புள்ள பெரியமனசி ஆயிட்டா… இவள ஆம்பளைங்க ஆரும் பாத்துப்போடறதுக்குள்ள வூட்டுக்கு கூட்டிப் போட்டு போங்க…” என்றார்.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு அம்மா “என்ன ஆத்தா சொல்றிங்க.. இவளவிட மூத்தவ இருக்கும்போது அதுக்குள்ள சின்னவ உக்கோர்ந்துட்டாளா.???”

“ஏன்டி கூறுகெட்டவளே புள்ளைங்க பெரியமனசி ஆகரதெல்லாம் நம்ம கைலையா இருக்கு. அது அது எப்போ  நடக்கோணும்னு இருக்கோ அது நடந்துதானே ஆகோணும்…” என்றவர்,

மீனாட்சியின் சின்ன அக்காவிடம் “ஏய்புள்ள செல்வி மசமசனு நிக்காம எதாவது நிழல் படறதுக்குள்ள உன்ற ஆத்தாக்காரிய வந்து கூட்டிப் போக சொல்லுடி…”

பக்கத்துக்காட்டில் அவளுடைய அம்மாவும் அண்ணன்களும்  பரம்பு அடித்துக் கொண்டிருந்தனர்.(காளைமாடுகள் பூட்டி நாத்து நடுவதற்க்கு முன்னாடி சேத்து ஒலவு ஓட்டுவது).

சின்ன மகள் வந்து   விசயத்தை கூறியதும்  ஏரை அப்படியே விட்டுவிட்டு  “கடவுளே என்ன ஏ இப்படி சோதிக்கற.. மூத்தவ இருக்கும்போதே இளையவ உட்கோர்ந்துட்டாளே இவள எப்படி நா கரைசேத்துவேன்” என புலம்பிக் கொண்டே ஓடிவந்தார்.

பவளாயி ஆத்தா, “அடியேய் நல்லம்மா இப்போ என்னாகிப்போச்சுனு ஒப்பாரி வச்சிப்போட்டு இருக்க??” என கடிந்தார்.

“அழுகாம வேற என்னங் பெரியம்மா நா செய்வேன்.. இவளுக்கு முன்னாடி பொறந்தவ இருக்கும்போது இவ உட்கோர்ந்துட்டா.. ரெண்டையும் நா எப்படி கரைசேக்கபோறேனு தெரியலையே..” என சொல்லிக்கொண்டே அழுதார்.

அவரின் பக்கத்தில் வந்து உட்கோர்ந்த பவளாயி ஆத்தா “இங்கன பாரு புள்ள எது நடக்கோணும்னு இருக்கோ அது நடந்துத்தா தீரும்.. நாலு புள்ளைங்கள கரைசேத்த உண்ணால இவங்க ரெண்டு பேரையும் கரைசேர்க்க முடியாம போயிடுமா என்ன?? சின்ன வயசுலையே கட்டுனவன பறிகுடுத்துப்போட்டு ஆறு புள்ளைங்ளையும் வச்சிப்போட்டு ஒன்டியாளா பண்ணையம் பாத்தவடி நீ…  நீயே இப்படி கண்ண கசக்கிப்போட்டு இருந்தினா புள்ளைங்க பயந்து போயிடாது?? எழுந்து கண்ண தொடச்சிப்போட்டு புள்ளைக்கு ஆகவேண்டியத பாரு…” என நல்லம்மாவிடம் கூறியவர்,

 “ஏ புள்ள செல்வி மசமசனு நிக்காம வெரசா போய் உன்ற மாமன்காரனையும் அக்காகாரியையும் கூட்டிப்போட்டு வா…” என்றார்.

“சரிங் ஆத்தா…” என்றவள் பக்கத்து தோட்டத்தில் குடியிருக்கும் தன் தாய் மாமனை கூட்டிவர ஓடினாள்…

“நல்லம்மா எந்திருச்சி புள்ளைய கூட்டிப்போட்டு வா புள்ளைக்கு செய்யவேண்டியதெல்லாம் செய்யோணும்ல…” ஆத்தா கூறியதும் நல்லம்மா மகளை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டிற்கு வந்ததும் பவளாயி ஆத்தா “ஏ புள்ள தனம் உன்ற தங்கச்சிய கூட்டிப்போய் வூட்டுக்கு பொறவால ஆரும் பாக்காதமாரி இவள உட்கோரவை டி… மாமான்காரன் வந்து குடிசை கட்டுனதுக்கப்பறம் தா தண்ணி ஊத்தி குடிசைக்குள்ள உடோணும்…”

பவளாயி ஆத்தா பேசிக்கொண்டிருக்கும்போதே மீனாட்சியின் தாய்மாமனும் அக்கா கணவனுமான முருகனும், பெரிய அக்கா ராசாத்தியும் வீட்டிற்கு வந்தனர்…

ராசாத்தி, “மாமா நீங்க அம்மாகிட்ட பேசிப்போட்டு இருங்க நா மீனாட்சிய போய் பாத்துப்போட்டு வாறேன்” என்றவள் வீட்டிற்க்கு பின்னால் இருந்த மீனாட்சியிடம் சென்றாள்…

நல்லம்மா திண்ணையில் கவலையாக உட்கோர்ந்திருந்ததை பார்த்த முருகன் “ஏனுங்க்கா இப்படி உட்கோர்ந்துப்போட்டிங்க?? எல்லாம் நல்ல விசயம்தானே நடந்துருக்குது??” என்றார்.

“வாடாப்பா நீயே வந்து உன்ற அக்காகாரிக்கிட்ட சொல்லு என்னமோ குடியே முழுகிப்போன மாதிரி உட்கோர்ந்துருக்கா…” பவளாயி ஆத்தா கூறியதும்,

அக்காவின் அருகில் சென்று உட்கோர்ந்த முருகன் “அக்கா நீங்க இப்படி இடிஞ்சிப்போய் உட்கோர்ந்துருக்கரத பாத்தா எனக்கு கஷ்டமா இருக்கு…  எம்புட்டுபெரிய கஷ்டம் வந்தாலும் அத அம்புட்டுசுளுவா சமாளிச்சிருக்கிங்க அப்படிபட்ட நீங்க இன்னைக்கு இப்படி இடிஞ்சிப்போய் உட்கோர்ந்துப்போட்டிங்களே??”

“பெரியவ இருக்கும்போது சின்னவ உட்கோர்ந்துட்டாளே தம்பி இவள எம்புட்டு நாளைக்கு கட்டிகுடுக்காம வூட்ல வச்சிருக்க முடியும். அப்படியே கட்டிகுடுத்தாலும் நாளைக்கு பெரியவளுக்கு ஏ இன்னும் கண்ணாலம் ஆகலனு வரவங்க எல்லாம் கேக்கமாட்டாங்ளா??”

“அக்கா கேக்கரவங்க கேக்கத்தா செய்வாங்க அதுக்காக நீங்க இப்படி கவலைபட்டுட்டு உட்கோர்ந்துருந்தா எல்லாம் சரியாகிடுமா?? முதல்ல எந்திரிங்க அதா உங்களுக்கு தொனையா உன்ற பொறந்தவன் நா இருக்கேன்ல.. அப்பறம் ஏங்க்கா பயப்படறிங்க?? நல்லநேரம் போரதுக்குள்ள  புள்ளைக்கு ஆகவேண்டியத செய்யுங்க.. நாம்போய் மட்டைவெட்டி கீத்து பின்னிப்போட்டு வாறேன்… ஆமா ரெண்டு  மாப்பிள்ளைங்களும் எங்கங்க்கா?? இன்னும் அவங்களுக்கு தகவல் சொல்லலையா?”

“என்றக்கூடத்தே வரப்பு கங்கு எடுத்து கட்டிப்போட்டு  இருந்தானுங்க தம்பி… நா பாதி வயல் பரம்பு அடிச்சிப்போட்டு இருக்கப்ப சின்னவ பெரியமனசி ஆகிட்டானு கேள்விபட்டதும் அப்படியே பரம்ப வயல்ல உட்டுப்போட்டு ஓடியாந்துப்போட்டேன்.. அவனுங்க வயல சேர் அடிச்சி முடிச்சிப்போட்டு வருவானுங்க…” என நல்லம்மா முருகனிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வயலில் இருந்து  மாரியப்பனும், கணேசனும் வந்தனர்…

பவளாயி ஆத்தா, “டேய் கணேசா நீ வெரசாப்போய் வன்னாமாத்துக்கு சொல்லிப்போட்டு வா.. புள்ளைக்கு தண்ணி வூத்துனா வேணும்…” என்றார்.

“சரிங் ஆத்தா…”

கணேசன் சென்றதும் மாரியப்பனும் முருகனும் தென்னம்மட்டை வெட்ட சென்றனர்…

தாய்மாமன் குடிசை கட்டி முடித்ததும்

நல்லநேரம் பார்த்து தண்ணி ஊற்றி கொண்டுவந்திருந்த வன்னாமாத்தை குடுத்து மீனாட்சியை குடிசைக்குள் விட்டனர்…

ஒன்பதாம் நாள் காலையில் வெளி ஆட்கள் யாரையும் அழைக்காமல் மீனாட்சியின் அண்ணன் குடும்பம் அக்கா குடும்பம் மட்டுமே இருக்க மீனாட்சியை முக்காலியில் உட்கோரவைத்து வைத்து  மீனாட்சிக்கு செஞ்சோறு சுற்றி தலைக்கு தண்ணீர் ஊற்றி தீட்டு கழித்து  வூட்டிற்குள் விட்டனர்…

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. மீனாட்சி பெரிய மனுசி ஆகி ஒருவருடம் ஓடிவிட்டது. மேட்டாங்காட்டில் தட்டக்கா பறித்துக்கொண்டிருந்தார் நல்லம்மாள்… 

அப்போது அங்கு வந்த பவளாயி ஆத்தா “ஏம்புள்ள நல்லம்மா எங்க புள்ளைங்கள அல்லாம் காணாம்? நீ மட்டும் காய் பொறிச்சிப்போட்டு இருக்க??”

“புள்ளைங்க எல்லாம் ராமசாமி அண்ணே காட்டுக்கு வேலைக்கு போயிருக்காங்க பெரியம்மா. என்னங் பெரியம்மா இந்த பக்கம் காட்ல ஏதும் வேலை இல்லையா??”

“குடியானவன் வூட்ல பொறந்தவளுக்கு வேலைக்கா பஞ்சம் அது கெடக்குது. நா உன்றகிட்ட ஒன்னு கேட்டுபோட்டு போலாம்னு வந்தேன் புள்ள…”

“என்றகிட்ட என்னங் பெரியம்மா கேக்கபோறிங்க??”

“அது ஒன்னுமில்லை புள்ள.. என்ற நாத்தனாக்காரியோட கொழுந்தியா ஒருத்தி இருக்காள.. அவளோட பையனுக்கு பொண்ணு இருந்தா சொல்லுங்கனு என்ற நாத்தனாகாரி கேட்டா.. சரி அதா நம்ம மீனாட்சிய அந்த பையனுக்கு குடுக்கரியானு கேட்டுபோட்டு போலாம்னு வந்தேன்…”

“அது எப்படிங் பெரியம்மா பெரியவ இருக்கும்போது சின்னவளுக்கு கண்ணாலம் மூக்கிறது…?”

“அதுக்கு என்ன பண்றது புள்ள பெரியவதா இன்னும் பெரியமனுசி ஆகலையே.. அதனால நல்ல இடம் வரும்போது சின்னவளுக்கு மூச்சிப்போட்டினா அப்பறமா பெரியவளுக்கு பாத்துக்கலாம்ல உனக்கும் ஒரு சுமை குறையும்…”

“நீங்க சொல்றதும் சரிதானுங் பெரிம்மா.. ஆனா  சின்னவனுக்கு கண்ணாலம் மூச்ச கடனோ இன்னும் கட்டி முடியலை… இப்போ உடனேனா எப்படி இவளுக்கு செய்யறது??”

“ஏம்புள்ள பணம் இல்லைங்றதுக்காக வயசுபுள்ளை வூட்லையே வச்சிருக்கபோறியா?? கடன வுடன வாங்கியாவது பண்ணித்தானே ஆவோணும்…?”

“இந்த இடம் பெருசா வரதட்சனை எல்லாம் கேக்கமாட்டாங்க புள்ள.. அதனால உன்னால முடிஞ்சத போடு…”

“பையன் கூட பொறந்தது எத்தனை பேருங் பெரியம்மா??”

“பையனோட சேர்த்து நாலுபேர் புள்ள அதுல ரெண்டு பையன், ரெண்டு பொண்ணு, மத்த மூனு பேருக்கும் கண்ணாலம் ஆகிபோச்சு..  இந்த பையன் தான் கடைசி.. சொத்து ஆறு ஏக்கர் இருக்கு புள்ள…”

“சரிங் பெரியம்மா.. நா வூட்ல தம்பிகிட்டையும் பசங்ககிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுபோட்டு உங்களுக்கு தகவல் சொல்றேனுங்க..”

“சரி புள்ள யோசிச்சு நல்ல முடிவா சொல்லு நா போயிட்டு வாறேன்…” என்று கூறிவிட்டு கிளம்பி சென்றார்.

அவர் கிளம்பிச்சென்றதும் அவர் சொல்லி சென்ற விசயத்தை நினைத்துக் கொண்டே காய் பறிக்க ஆரம்பித்தார்.

Advertisement