Advertisement

அத்தியாயம்—5
திருக்கார்த்திகை…தமிழ் கடவுள் முருகனுக்கான பண்டிகை..இன்னாளில் இருளடைந்து கிடக்கும் வீடுகளே ஜொலிக்கும்…செல்லக்கிளியின் வீட்டை கேட்கவா வேண்டும்..வீடு முழுவதும் வெள்ளி விளக்குகள்,பித்தளை விளக்குகள்,காமாட்சி விளக்குகள்,வாழைப் பூ விளக்குகள், கேரளா விளக்குகள், மண் அகல் விளக்குகள்,மெழுகு வர்த்திகள்….என்று,முன்வாசல்,பூஜை அறை,ஹால்,படுக்கை அறைகள்,சமையலறை,பின்வாசல்,மொட்டைமாடி,சுற்றுச் சுவர்,என,ஒளி இல்லாத இடமே இல்லை..
.ஒரு தூக்கு வாளியில்,நல்லெண்ணெய் ஊற்றி. அதில் குழிகரண்டியும் போட்டு,மகனிடம் தந்து விட்டாள் செல்லக்கிளி…எந்த ஒரு விளக்கிலும், எண்ணெய் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பச்சையின் பொறுப்பு.
..மல்லிகா,பூக்களைப் போட்டு,பூஜை அறையை தயார் செய்து கொண்டிருந்தாள்….அக்கம் பக்கம் வீடுகளுக்கும்,பிரசாதம் வழங்கப்படும் என்பதால்,செல்லக்கிளி,நீர் கொழுக்கட்டை,இனிப்பு பொரி,ஆகியவற்றை,கூடுதல் அளவிலேயே தயார் செய்து  கொண்டிருந்தாள்..
..வெளியே சென்றிருந்த ஆண்டவனும்,வந்து விட,பூஜை தொடங்க முடிவானது..பூஜை அறையில் மூன்று வெள்ளி விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன…பக்கத்தில் வேஷ்டி கட்டிய வெள்ளிப் பிள்ளையார்….அதன் முன்பாக,ஒன்றன் மீது ஒன்றாக இரண்டு முழு இலைகள் விரிக்கப்பட்டு,அதில்,உடைத்த தேங்காய்,வாழைப்பழம், வெற்றிலை பாக்கு,பரப்பிய கொழுக்கட்டை,அதன் மீது கொழுக்கட்டை விளக்குகள் மூன்று,பொரி,ஆகியவை வைக்கப்பட்டன…
‘’மாவிளக்கு வைக்கலியாமா’’—ஆண்டவன்.
‘’தோ …எடுத்தாரேன்’பச்சைஅரிசி மாவுடன்,வெல்லம் சேர்த்துப் பிசைந்த மாவுருண்டையை கொண்டு வந்து இலையில் வைத்து, நடுவில் கிண்ணம் போல் செய்து அதனுள்,பசு நெய் ஊற்றி திரி போட்டாள்
..மாவிளக்கிற்க்கு மஞ்சள்,குங்குமம் பூ வைத்தபின், அந்த விளக்கையும் ஏற்றினாள்…ஆண்டவன் தூப தீபம் காட்டி,மணியடித்து பூஜை செய்தார்….அனைவரும்,கீழே விழுந்து நமஸ்காரம் செய்தனர்.
..சாம்ப்ராணி புகை,ஜொலித்த விளக்கொளி,பட்சணங்களின் வாசம்,மல்லிகா பாடிய சண்முக கவசம், லிங்காஷ்டகம்…..எல்லாம் சேர்ந்து அவர்கள் வீடு பக்தியின் உச்சத்தில் இருந்தது..
.நாற்காலியில் அமர்ந்தவாறு,அதனை,கண் மூடி ஆனந்தித்தார் ஆண்டவன்..
‘’என்னங்க,,,விபூதி பூசி விடுங்க’’
மனைவி மகனை ஆசீர்வதித்தார்…பின்பு மூவரும் மல்லிகாவிடம் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டனர்…பிரசாதங்களை உண்டனர்
…சிறிது நேரம் சென்று,எதிர் வீட்டு,காந்தி வந்தாள்..
‘’எக்கா…எங்க வீட்ல ஓலைக் கொழுக்கட்டை…சாப்டுப் பாருங்க’’என்று ஒரு கிண்ணத்தை தந்தாள்
…ஒரு மரியாதைக்காக, அவளை உட்காரச் சொன்னாள் செல்லக்கிளி …அதுதான் சாக்கென்று சோபாவில் அமர்ந்து கதையளக்க தொடங்கி விட்டாள்…
‘’காலையில எந்திரிச்ச நேரத்துலெர்ந்து,இன்னேரமுட்டும்  வேலைதாங்க்கா…எங்க மாமியாரு ஒரு உதவியும் செய்யல …அவுக மகளா இருந்தா இப்டி கை கட்டி,வேடிக்கை பாக்குமா….இந்த அம்மாமாருக,மகனுக்கு பொண்ணு தேடும்போது மட்டும்,எங்க வீட்டுக்கு வார மருமகளை மகளா பார்த்துக்கிடுவோம்னு வாய் வார்த்தைக்கு சொல்லுவாக…ஆனா,அந்த புள்ளைய மகளா இல்ல…மனுசியாக் கூட மதிக்க மாட்டாக..’’என்று அவசர அவசரமாக,கொட்டினாள்.
..செல்லக்கிளியும் பேச மறந்து அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள்…காந்தி மாமியாரை முடிந்த மட்டும் கழுவி ஊற்றினாள்..
‘’காந்தி,உங்க அத்தைக்கு, பின்ன பொழுது எப்பிடித்தான் கழியும்?’’
‘’டி‌வி எதுக்கு இருக்கு…..எந்நேரமும் அது முன்னாலதான் உக்கார்த்தி வச்சிருக்கும்…..பொழுதன்னைக்கும் நாடகம்தான்….எனக்கென்னவோ, அதப் பாத்து பாத்து தான் எங்க அத்தை இப்பிடி வில்லியா மாறிடுச்சோன்னு சந்தேகமா இருக்கு….டி‌வி நடிகை மாதிரி நகை நட்டு அள்ளி போட்டுக்காம இருக்கு…ஏன்னா வீட்டுல இல்ல.’’
காந்தி சொன்னதை கேட்டு,அவளோடு சேர்ந்து சிரித்து விட்டாள் செல்லக்கிளி…..திரௌபதி சிரித்து மகாபாரதப் போர் ஏற்ப்பட்டது போல,தனது இந்த சிரிப்பிற்குப் பின்னாலும், ஒரு போர் இருப்பதை செல்லக்கிளி அறிந்திருக்கவில்லை..
..காந்தி ஒரு வழியாக விடை பெற்று சென்ற பின்னர் ,இரவு சாப்பாடு ஆனது….மல்லிகா சாப்பிட வரவில்லை..அதை வீட்டில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை….ஆனால்,மறு நாளும் மல்லிகா உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது,அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
..அதிகாலையில் எழுந்து,மதுரை கோர்ட்டுக்கு போக வேண்டியிருப்பதாகச் சொல்லி ஆண்டவன் கிளம்பிப் போய் விட்டார்….பச்சையும்,கல்லூரிக்குப் போய் விட்டதால், செல்லக்கிளி தான் ஒற்றை ஆளாக,மல்லிகாவுடன்,மண்டை உடைத்தாள்…பலனில்லை…இரவு பத்து மணி போல ஆண்டவன் வீடு திரும்பியதும்,அவரிடம் விஷயத்தை சொன்னாள் செல்லக்கிளி….
‘’பகல் பூராம் சாப்டலியா? ஏன் ? என்ன நடந்துச்சு?’’
‘’ஒண்ணுமில்லையே..’’
‘’ப்ச்…மனுஷன் வெளிய அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்கு வந்தா ஓரு நிம்மதி இருக்கா…பிரச்சினையை உண்டாக்கி வச்சிக்கிட்டு காத்திட்டு இருக்கீக..’’ என்று எரிச்சலாக,செல்லக்கிளியும்,கடுப்பானாள்…
‘’உங்க அக்கா சாப்டலேங்கிறதை உங்க கிட்ட சொல்லாம,வேற யார்கிட்ட சொல்ல?’’
கேள்வி நியாயம்தான்….தலையை சொறிந்தபடி,அக்காவின் அறைக்குள் போனார் ஆண்டவன்….அவள் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள்…..
‘’என்னக்கா….ஏன் சாப்பிடல’’
‘’சும்மாதான்’’
‘’உள்ளத சொல்லுக்கா,,,வயிறு பசிக்கலையா’’
‘’ஆமா’’
‘’ஏன் பசிக்கல’’
‘’ஏம்லா என்னையப் போட்டு தொலைச்சு எடுக்க…சாப்ட பிடிக்கலேன்னா விடேன்….தொண தொணனு ‘’ என்று மல்லிகா சொற்களில் கடுமை காட்ட
,’’என்னமோ நடந்திருக்கு….ரெண்டு பொம்பளைகளும் என்கிட்ட மறைக்கீக’’
தம்பி இதை சொன்னதும்,ஆவேசமாய் எழுந்தமர்ந்தாள் மல்லிகா,,
‘’அவ எப்பூடி சொல்லுவா?எதிர்த்த வீட்டு புள்ள கூட சேர்ந்துக்கிட்டு,என்னை கிண்டல் பண்ணி சிரிச்சதே அவதான’’ என்று கத்தினாள்…
‘’நெனச்சேன்’’ என்றவாறு சமையலறையைப் பார்த்து
‘’ஏய் ‘’ என்று குரல் கொடுத்தார் ஆண்டவன்அவர் மனித நிலையிலிருந்து இறங்கி மிருக நிலைக்கு வந்திருக்கும் நேரமிது..
,,கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே போட்டு விட்டு கிட்டத் தட்ட ஓடி வந்தாள் செல்லக்கிளி…
‘’என்னங்க’’
‘’ம்‌….நொன்னங்க..நான் என்ன நடந்திச்சுன்னு கேட்டம்லா…நீ நல்லவ மாதிரி,ஒண்ணுமிலேன்னூட்ட’’
‘’ஆமாங்க…வித்தியாசமா எதுவும் நடக்கலியே’’
‘’நேத்து ராத்திரி,அந்த காந்தி பிள்ள கூட சேர்ந்துக்கிட்டு.என்னை கேலி பண்ணி சிரிக்கலென்னு சொல்லு’’
‘’ஐயோ…மதினி…சத்தியமா இல்ல…காந்தி அவளோட மாமியாரை பத்திதான் ஆவலாதி சொன்னா…’’
‘’ஆம…நீ என்னைப் பத்தி சொன்ன..ரெண்டு பேருக்கும் சிரிப்பாணி அள்ளிக்கிட்டுப் போச்சி…..எல்லாம் உள்ள உக்காந்து நானும் கேட்டுகிட்டுத்கான இருந்தேன்…நல்ல நாளூ அதுவுமா பொம்பளைக பேசற பேச்சை பாரு ‘’ என்று முகம் வெட்டினாள் மல்லிகா…இவ்வளவு போதாதா ஆண்டவனுக்கு…
‘’தேவை இல்லாத விஷயங்களை பேசாதேன்னு உன்கிட்ட படிச்சு படிச்சு சொல்லியாச்சு…கேப்பானாங்க’’
‘’இல்லங்க…நான் லெட்சுமிக்கா கிட்டாயாவது மனசு விட்டு பேசுவேன்….இந்த புள்ள கிட்டல்லாம் அவ்வளவா பேச்சு வச்சுக்கிட மாட்டேன்’’
‘’ம்…அப்ப அந்த அக்காகிட்ட வம்பு பேசியிருக்க…இந்தா…உன் வாயாலயே வந்துட்டுல்லா….உனக்கு ஏன் இந்த புத்தி? எங்க அக்காவுக்கு நான்லா சோறு போடுதேன்…உனக்கேன் வலிக்கி? அவ உன் தல மேலயா இருக்கா…வாய் கூடிப் போச்சு உனக்கு’’ என்று ஆண்டவன் கட்டுப் பாடு இல்லாமல்,கத்தத் தொடங்கவும்,இனி பேசிப் பயனில்லை என்று வாயை மூடிக்கொண்டாள் செல்லக்கிளி
..அறை கதவை திறந்து பார்த்த .பச்சை வழக்கமான சண்டைதான் என்றறிந்து,கதவை சாத்திக் கொண்டான்…செல்லக்கிளிக்கு சரமாரியாக திட்டு விழுந்து கொண்டிருந்தது.
..ஆண்கள் என்றுமே எடுப்பார் கைப்பிள்ளைதானே..என்று மனதை தேற்றிக் கொண்டாள் செல்லக்கிளி…திரும்பி மல்லிகாவைப் பார்த்தாள்…உணவு உண்ணாத ஆயாசத்தையும்,மீறி.அவள் முகத்தில்,ஒரு திருப்தி தெரிந்தது.
…மல்லிகாவிற்கு,தான் இழந்த தனது வாழ்க்கை குறித்து,ஒரு.தாழ்வு மனப்பான்மை இருக்கிறது….அது அவளை மாம்பழத்தை வண்டு துளைப்பது போல் துளைத்தெடுக்கிறது….அந்த வலி அடிக்கடி,இது போல் குடும்ப அமைதியை பலி கேட்கிறது….அது ஒவ்வொரு நாளும் காரணம் தேடுகிறது….இன்று காந்தி..நாளை??

Advertisement