Advertisement

அத்தியாயம் –4
தனலெட்சுமி வீடு…அவளுக்கும் அவள் கணவன் உலகநாதனுக்கும்,அது சற்று பெரிய வீடுதான்…பராமரிக்க சிரமம்தான்…எனினும் மற்ற அம்சங்கள் வசதியாக இருந்ததால்,இதனைப் பொருட்படுத்த வில்லை.
.மேலும்.வீட்டு வேலைகளில்,உலகநாதனும் உதவி செய்வார்….இரண்டு வருடங்கள் முன்பு வரை ஆறுமுக நேரியில்தான் வசித்தார்கள்…திடீர் என்று ஊரை விட்டு வெளியேறும் சூழல் உண்டாகி விட்டது….இன்று மாதிரி ஒரு புதன் கிழமைதான் தென்காசி வந்து சேர்ந்தார்கள்….மறக்க முடியுமா?
‘’ஏங்க,நாம  தென்காசி வந்து எறங்குனப்போ,மணி பத்து இருக்குமா?’’
குளித்து விட்டு வந்து வேட்டி கட்டிக் கொண்டிருந்தவர் கடுப்பானார்….
‘’உனக்கு காலங்கார்த்தால,பேசறதுக்கு விஷயம் கெடைக்கலையோ?’’
‘’ஞாபகம் வந்துருச்சி’’
‘’அதுதான் வரக்கூடாதுன்னு சொல்றேன்…புரியுதா இல்லையா உன் மரமண்டைக்கு’’ கோபத்தில் கத்தி னார் உலகநாதன்….தலையை குனிந்து கொண்டாள் தனம்….’
’இன்று நமக்கு வாயில் சனி போலும்’’இந்த பேச்செடுத்தால் அவருக்கு பிடிக்காதேன நன்றாகத் தெரியும்…தெரிந்தும்,அதே தவறை செய்தால்….வேறென்ன நடக்கும்….மனதை சமாதானப் படுத்திக் கொண்டு,அடுப்பில் சட்டியைப் போட்டாள்–தாளிக்க…உலகநாதன் தாளித்து முடித்து விட்டார்…இனி குழம்பு தாளிக்க வேண்டும்.
..தனம் வீட்டில் எப்பொழுதும் காலையில் சமையல் சாப்பாடு….மாலை நான்கு மணிக்கு சுண்டலும் டீயும் …இரவு ஏழு மணிக்கு சிற்றுண்டி….படுக்கைக்கு செல்லும் போது மிளகுப் பால்…இதுதான் அவர்களது தினசரி மெனு..அதில் மாற்றமில்லை….பூஜை அறையிலிருந்து உலகநாதனின் குரல் வந்தது…
‘’முதா கராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாசி லோக ரக்ஸகம்
அநாத கைக நாயகம்விநாசிதேப தைத்யகம் நாதாசுபாசு நாசகம்  நமாமிதம் விநாயகம் ‘’   
என்ற கணேச பஞ்சரத்னம் ஸ்தோத்திரத்தை சத்தமாகப் பாடினார்..மந்திரங்களை பக்திப் பாடல்களை வாய் விட்டு சத்தமாக சொல்லவேண்டும் என்பார் உலகநாதன்….அப்பொழுதுதான் வீடெங்கும்,அதன் நேர்மறை அலைவரிசை சென்று சேருமாம்.
…வழிபாடு முடித்து,தீபாராதனை காட்டும் போது, மனைவியை கூப்பிட்டார் உலகநாதன்…இருவருமாய் சேர்ந்து பூஜை முடித்த பின்னர், சாப்பிடத் தயாரானார்கள்…தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவர்….ஆகையால்,இரண்டு சதுர பாய்களை விரித்தாள்…சமையல் பாத்திரங்களையும்,தட்டுகளையும் பரப்பினாள் தனம்
.இன்றய சமையல் ..ரசம்,பருப்பு,பச்சடி,வெண்டைக்காய் பொரியல்…மோர் சிறு இலைத்தூண்டில்,சாதம் பருப்பு போட்டு தனம் பிசைந்து தர,உலகநாதன் அதனை காக்காய்க்கு வைத்து விட்டு வந்து சாப்பிட அமர்ந்தார்….நல்ல பசி போலும்….மோர் போட்டுக்கொள்ளும் வரை இருவரும் எதுவும் பேசாமலே சாப்பிட்டார்கள்…
‘’தனம்,நாளைக்கு சங்கடஹர சதுர்த்தி ..நினைவு இருக்கில்லா’’
‘’இருக்கு…இருக்கு…’’
‘’சாமான்கள்லாம்  இருக்கா…வாங்கணுமா?’’
‘’வாங்கிட்டேன்…மோதகமும்,சுண்டலும் போட்டுருவேன்’’…பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில்.உலகநாதன் பொருளாளர் ஆக இருக்கிறார்…தனம் கோவிலுக்கு வேண்டிய பிரசாதங்களை போட்டுக் கொடுப்பாள்…கோவில் சார்ந்த பணிகளை இருவரும்,தட்டாமல் செய்வதால்,இருவருக்கும்.,தெருவில் நல்ல பெயர்…உணவைமுடித்து  ஓய்வாய் அமர்ந்த வேளையில்,தெருவாசி பரமசிவம் வந்தார்…
‘’என்ன ஒய் ,,என்ன நடக்கு?’’
‘’வாங்க அண்ணாச்சி….இப்பதான் சாப்பாட்டுக் கடை முடிஞ்சுது,,,,சாப்பிடுதீகளா ‘’ என்று வரவேற்றாள் தனம்…
‘’இல்லம்மா தங்கச்சி….காலையில நமக்கு,இட்லி தோசதான் வேணும்…டிபன் ஆயிட்டு…இந்த சோறு சாபிடல்லாம் நமக்கு மதியம் ரெண்டு மணி ஆகணும்…அதுக்கு கொறஞ்சு தொண்டையில இறங்காது’’
தனம் உள்ளே போய் கடைந்து தாளித்த மோர் கொண்டு வந்து தந்தாள்…ஒரே மூச்சில் குடித்து முடித்தார் பரமசிவம்…
‘’உலகநாதன்…சொல்லுங்க…வேற என்ன விஷயம்’’
‘’இப்பதான நீங்க வந்திருக்க்கீக….இனிதான் விஷயம்,விஸேஷம் எல்லாம்’’—உலகநாதன்..
பெரிதாக சிரித்தார் பரமசிவம்…ஏனெனில்.அவர் ஒரு நாத்திக வாதி…பழுத்த ஆன்மீக வாதியான உலகநாதனுக்கும்.கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பரமசிவத்துக்கும்.ஏழாம் பொருத்தம்…இருந்தும் நட்பு தொடர்கிறது.
…மனைவியை இழந்தவர்…மகன் வீட்டில் இருக்கிறார்…எல்.ஐ .சி யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்…பென்சன் வருகிறது….காலம் ஓடுகிறது…
‘’சட்டையெல்லாம் மாட்டி எங்கியோ கிளம்பினாப்புல இருக்கு’’
‘’ஆமா அண்ணாச்சி…கோயிலுக்குப் போறேன்,,
கொஞ்சம் வேலை இருக்கு..’’
‘’எப்பிடித்தான் சலிக்காம,கோயில், கொட்டு.அபிஷேகம் ,ஆராதனைன்னு செய்யுதீகளோ…’’என்று சொல்லி சிரித்தார் பரமசிவம்…
‘’ஒரு நாளைக்கு மூணு நேரம் சாபிடுதோம்…சலிக்கவா செய்யுது…மேற்கொண்டும் வடை பஜ்ஜின்னு உள்ள தள்ளுதோம்’’
‘’சாபிடலான்னா உயிர் போயிரும்லா’
‘’எங்களுக்கு,நித்தம் சாமி கும்பிடலன்னாலும்,உயிர் போறாலத்தான் இருக்கு’’
‘’அது வேற ஒண்ணுமில்ல.சின்ன வயசுல சாமி சாத்தான்னு சொல்லி.பயமுறுத்தி வச்சிட்டாக…’’
‘’ச்சரி….சின்னப் புள்ளையில,அம்மா அப்பா சொன்னங்கன்னு தோப்புக்கரணம் போட்டோம்…வளர்ந்த பொறவு யோசிப்போம்லா’’
‘’யோசிக்கலையே….பொங்கலும் புளியோதரையும் போட்டு,நாக்கையும் கட்டிப் போட்டுட்டாக…அப்பறம்,நீங்க எங்க சிந்திக்கப் போறீக’’
‘’ஆமா…அண்ணாச்சி நீங்க கோயில் பக்கமே தலை வச்சி படுக்க மாட்டேக….ஆனா.புளியோதரையும்,பொங்கலும்,மட்டும்உங்க கண்ணை உறுத்துதாக்கும்’’என்று கணவன் வாதத்துக்கு வலு சேர்க்க முனைந்தாள் தனம்…
‘’சாப்ட ருசியா இருக்குல்லா’’ என்றார் உலகநாதன்..
‘’வழிக்கு வந்தீரா…கடவுளுக்கு படைச்சிட்டு சாப்பிடற தாலதான் பிரசாதமாகுது…தனி ருசியா இருக்கு’’—உலகநாதன்..
‘’பிரசாதம்னு ஒரு அக்கறையோட,அன்போட சமைக்காறாங்க பாருங்க…அந்த எண்ணம்லா சுவை குடுக்குது…. சாமி இல்ல,,,அதை சமைக்கற ஆசாமிதான்..காரணம்..’’என்று சளைக்காது கோல் போட்டார் பரமசிவம்…
‘’இன்னிக்கு பூராம் பேசினாலும் இது தீரப்போறாதில்ல..’’என்று சிரித்தாள் தனம்..
‘’இல்ல தனம்..இவுகல்லாம் புரியாதவுக இல்ல…புரியாதது போல காட்டிக்கிறவுக… ஒண்ணுஞ் செய்ய முடியாது’’ என்று எழுந்து தலை சீவினார் உலகநாதன்.
‘’இப்பிடி மந்திரிச்சி விட்டாப்புல,அலைதீகளே…கொஞ்சம் தேத்தி விடலாம்னு பாக்கேன்   ..எங்க நடக்கு…சரிய்யா ,,நீர் உம்ம வேலைய பாரும்…நான் வாரேன்…’’ என்று விடை பெற்று கிளம்பினார் பரமசிவம்… புயல் அடித்து ஓய்ந்தாற்போல இருந்தது…..கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பெருமூச்சு விட்டு சிரித்துக் கொண்டனர்…
‘’இப்பிடி மனுசங்களையும் சேர்த்துக்கிட்டுத்தான் பூமி சுத்துது.. .ஆனா.,தங்கமான ஆளு…யாருக்கும் இரக்கப்படுவார்….வீட்டுலயும் மகனுக்கு ஒரு தொந்தரவும் தரமாட்டாரு…காசு பணத்திலயும் கரெக்ட்டான ஆளு..நம்ம மேல ஒரு மரியாதை…அதான் அடிக்கடி வந்து போறாரு’’
‘’சரி….அவரு மனசுக்கு சாமி விஷயம் ஒப்பல…அதை வெளிப்படையா சொல்றாரு…தப்பு ஒண்ணுமில்ல…ஒரு வேலை அவரு வீட்டம்மா இறந்ததுலேர்ந்து அவருக்கு,கடவுள் நம்பிக்கை இல்லாமப் போச்சோ?’’ என்றாள் தனம்,சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தவாறு…
‘’இல்லியே…நான் அதையும் அவரு கிட்ட கேட்டுட்டேன்…எப்பவும் இப்பிடித்தானாம்…அந்தம்மா இருக்கும் போது,அவங்க மட்டும் கோயிலுக்குப் போயிட்டு வருவாங்களாம்… ‘’
‘’சரி ..உலகாம்னா நாலும் இருக்கத்தான் செய்யும்…கண்டும் காணாமலும் போய்க்கிட வேண்டியதுதான்’’’’
‘’கோயில்ல கொஞ்ச்ம் வேலையிருக்கு…போயிட்டு வாரேன்…தனம் மாத்திரை போட்டுட்டியா’’
‘’தோ….மாத்திரையப் போட்டுட்டு,சித்த நேரம் குறுக்கை சாய்க்க வேண்டியதுதான்,,,வலி கொடையுது’’
‘’என்ன அவசரம் கொள்ளை போகுது…ரெஸ்ட் எடுத்துட்டு வேலையப் பாரு’’
‘’தண்ணி பாட்டில் எடுத்துகிடுங்க..’’ என்று இருவரும் ஒருவரை ஒருவர் பேணிக்கொண்டிருந்த போது,அலைபேசி அடித்தது….தனம் மணி பார்த்தாள்…பதினொன்று….தினமும் இந்நேரம்,அலைபேசி அழைப்பு வருவதும்.அதனை,இவர்கள் மிஸ்டு கால் ஆக்குவதும் வழக்கமான ஒன்றுதான்..கணவன் மனைவி இருவரது பார்வையும் சில நொடிகள் சந்தித்து மீண்டன….அதில் சொல்ல முடியாத வலியும் வேதனையும் இருந்தது….அலைபேசி அடித்து ஓய்ந்தது…..உலகநாதன்,கைப்பையுடன்,வெளி செல்ல,விட்ட இடத்தில் இருந்து வேலைகளை தொடர தனம் உள்ளே சென்றாள்…..
    

Advertisement