அத்தியாயம் 36

மூன்று மாதங்கள் கடந்திருந்தன!

ராமானுஜத்திடம் பேசிய மறுவாரமே சென்னைக்கு வந்த மாதவனும் தாமரையும் அடுத்த ஒரு வாரத்தில் திருமணத்தை முடித்து விட்டு ஆத்மநல்லூருக்கு வந்திருந்தனர்.

“உன் புள்ள என்னை மாதிரி பொண்டாட்டிதாசன் ஆகிட்டான்டி! கல்யாணம் முடிஞ்சி ஆத்மநல்லூருக்குப் போய் மூனு மாசமாகப் போகுது! அம்மா அப்பா எப்படி இருக்காங்க என்ன செய்றாங்கனு எட்டிப் பார்த்தானா?” என்று மாதவனின் தந்தையான ரங்கராஜன் ஆதங்கமும் கேலியுமாய்க் கூறியிருக்க,

“எதே! நீங்க பொண்டாட்டிதாசனா? அதை உங்க பொண்டாட்டியான நான் தான் சொல்லனும்” என்று முகத்தைச் சுழித்தார் வினோதினி.

அவரின் முகப்பாவனையில் சிரித்தவராய், “நல்ல வேளை இந்தப் பயலுக்கு அவன் ஆபிஸ்ல வர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்தாங்க. இல்லனா வேலையை விட்டுட்டு, பொண்டாட்டி பின்னாடியே சுத்திட்டு இருந்திருப்பான்” என்றவர் கூறிய நேரத்தில் தொலைகாட்சியில் வந்த செய்தியில் இருவரின் கவனமும் திரும்பியது.

இன்று காலை ஆத்மநல்லூர் மற்றும் சோலைவனம் கோவில் சிலைகள் மீட்டெடுக்கப்பட்டது‌‌ என்ற தலைப்பில் செய்தி வாசிப்பாளர் சிறப்புச் செய்தியாகச் சிலைக்கடத்தல் குறித்தான செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார்.

எண்ணற்ற நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழனின் திறன்மிகு சிற்பக் கலைக்குச் சான்றாக நிற்கிறது தமிழகத்தின் கோவில் சிலைகளும் சிற்பங்களும்.

அந்நியர் படையெடுப்பு, இயற்கை பேரிடர்கள், அரசியல்வாதிகளின் அரசியல், போன்ற எண்ணற்ற பிரச்சினைகளைச் சந்தித்துக் காலத்தின் சாட்சியாகக் எஞ்சி நிற்கும் பல ஐம்பொன் சிலைகளுக்கு மத்தியில் இன்று வெளிநாட்டிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட சோலைவனக் கோவிலின் ஐம்பொன் சிலைகளைப் பற்றித் தான் இப்பொழுது பார்க்க உள்ளோம்.

மீட்கப்பட்ட சிலைகள் எல்லாம் காணொளியாகக் காட்டப்பட்டன.

உறக்கத்தில் இருக்கும் சில அரசுத்துறைகள் தலைமை அதிகாரிகளின் மாற்றத்தால் சட்டென்று விழிப்புற்று பரபரப்புடனும் சுறுசுறுப்புடனும் இயங்கும். அத்தகைய மாற்றம் தான் தமிழகக் காவல்துறையினரின் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவிலும், அறநிலையத்துறைப் பிரிவிலும் நடந்து கொண்டிருக்கிறது.

தெய்வச் சிலைகளைக் காக்கவெனவே நீதி மன்றம், தமிழகச் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் திருமுருகன் என்ற காவலரை நியமித்தது.

செய்யும் தொழிலைத் தெய்வமாக நேசித்துச் செய்யும் அறநிலையத் துறை தலைமை அலுவலர் ராமானுஜமும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர் திருமுருகனும் பதவி ஏற்றுக் கொண்டதும், தூசி படிந்து தூங்கிக்கொண்டிருந்த சிலைக் கடத்தல் வழக்குகளை எல்லாம் தேடி ஆராயந்து தங்களது பணியைத் தொடங்கினர்.

இவர்கள் தலைமையிலான குழு எடுத்த அதிரடி நடவடிக்கையில், கடந்த மூன்று மாதங்களில் தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டதோடு இல்லாமல் சுமார் இருநூற்று ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது. சிலைக்கடத்தல் பிரிவில் முப்பது வழக்குகள் உட்படத் தமிழகம் முழுவதும் நானூறு வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன. இதுவரை இந்தத்துறை இவ்வளவு வேகமாக இயங்கியதில்லை என்று நாட்டு மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டிலிருந்து மீட்டிருக்கின்றனர்.

அண்மையில் ராமானுஜம் வெளிக் கொண்டு வந்த ஐம்பொன் சிலை மோசடியில் கைது செய்யப்பட்ட அரசியல் பின்புலம் கொண்ட அமைச்சர் செங்கல்வராயனின் ஜாமீன் மனு வழக்கில், தானே நேரில் ஆஜராகி அவருக்கு ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று நீதிபதியிடம் விளக்கினார் ராமானுஜம்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீனை நிராகரித்து அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு இல்லாமல், அமைச்சர் செங்கல்வராயன் மீது சுமத்தப்பட்ட சிலைக்கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட அவரது மனைவி, மகன் உட்பட மூன்று பேருக்கும் தலா ஐம்பது லட்சம் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்தார். இவை அல்லாமல் அரசு அலுவலர்களின் இறப்புக் குறித்த வழக்கும் அவர்கள் மூவரின் மீதும் பதியப்பட்டு விசாரணையில் இருக்கிறது.

அதோடு செங்கல்வராயனை விசாரித்து அவரால் வெளிநாட்டிற்கு விற்கப்பட்ட, கடத்தப்பட்ட சிலைகளை மீட்டெடுக்கத் தனிப்படை அமைக்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டார் நீதிபதி.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சோலைவனச்சிலை மீட்புக் குழு துரிதமாய்ச் செயல்பட்டு இரண்டடி உயரமுள்ள ஓர் ஆண் ஐம்பொன்சிலை, ஒரு பெண் ஐம்பொன்சிலை உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளனர்.

இன்று மீட்கப்பட்ட இச்சிலைகள் நாளை மறுநாள் அதனதன் கோவிலில் நிறுவப்பட உள்ளதாகக் கூறிய ராமானுஜம், ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலின் மாதவப் பெருமாள் ஐம்பொன் சிலையைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், அச்சிலையைப் பற்றிய தகவல் தெரிந்தால் மக்கள் சிலைத்தடுப்புப் பிரிவுக்குத் தெரிவிக்குமாறும் தெரிவித்தார் என்று செய்தியாளர் வாசித்துக் கொண்டிருக்க, பிண்ணனியில் கருப்பு வெள்ளைப் படமாய்ப் பழங்காலத்தில் இருந்த மாதவப் பெருமாள் ஐம்பொன் சிலை தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

மாதவனும் தாமரையும் பழைய மாதவப் பெருமாள் சிலைக் குறித்த சான்றைத் தேடி அலைந்த போது சென்னைக் கலைவாணி அரங்கத்தில் இருக்கும் நூலகத்தில் எண்பதுகளில் எழுதப்பட்ட நூல் ஒன்று இருப்பதாகவும், அதில் இந்தியாவின் அரிய ஐம்பொன் சிலைகள் குறித்த தகவல்கள் இருப்பதாகவும் கேள்விப்பட்டுச் சென்று பார்த்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதில் மெட்ராஸ் ஸ்டேட் மியூசியம், இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள் குறித்து, ‘Indian Bronze Master Pieces’ என்ற தலைப்பில் வெளியிட்ட அந்நூலில் பழைய மாதவப் பெருமாள் ஐம்பொன் சிலை புகைப்படம் பதிவிடப்பட்டு, அச்சிலை மாதவப்பெருமாள் கோவிலைச் சார்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்த மாதவனும் தாமரையும் உடனே அதனை ராமானுஜத்திற்கு அனுப்பியிருந்தனர்.

இப்பொழுது அந்தப் புகைப்படத்தைத் தான் மக்களின் முன் காண்பித்து, அதைக் குறித்துத் தகவல் தெரிந்தால் கூறுமாறு தெரிவித்திருந்தனர்.

இந்தச் சிலைகளை மீட்டெடுக்கப் பேருதவிப் புரிந்த அறநிலையத்துறை அதிகாரி தாமரைக்குப் பாராட்டுதலும், அவரின் கணவர் மாதவனுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராமானுஜம் பேசியதைக் காண்பித்து,

“வினோ நம்ம மருமகளை நினைச்சா பெருமையா இருக்குடி! எவ்ளோ பெரிய காரியம் செஞ்சிருக்கு அந்தப் பொண்ணு. தன்னோட உயிரைக் கூடத் துச்சமா நினைச்சுக் கோவில் சிலைப் பத்தின தகவல்களை இந்தச் சாருக்கு கொடுத்தனால தானே இன்னிக்கு இதெல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க” என்று பெருமிதத்தோடு ரங்கராஜன் உரைத்ததை முகம் மின்ன ஆமோதித்திருந்தார் வினோதினி.

அந்நேரம் தாமரையின் தாய் விமலா, வினோதினியின் கைப்பேசியில் அழைப்பு விடுத்தார்.

தாமரையும் மாதவனும் தங்களுடன் ஆத்மநல்லூருக்கு வந்து தங்கிவிடுமாறு விமலாவிடம் கூறினர். ஆனால் சொந்த வீட்டை விட்டு ஊர் ஊராய் சுற்றுவது பிடிக்காமல், தான் இங்கேயே இருந்து மேல் மாடி வீட்டை வாடகை விட்டு வாழ்ந்து கொள்வதாய் உரைத்து விட்டார் விமலா.

விமலாவின் அழைப்பை ஏற்றவராய், “சொல்லு விமலா” என்ற வினோதினி, மறுபுறம் விமலா கூறிய செய்தியில் வாய்விட்டுச் சிரித்தவராய், “விமலா ஒரு நிமிஷம்” என்றவர் ரங்கராஜனின் அருகில் அமர்ந்தவராய் தனது கைப்பேசியை ஒலிப்பரப்பியில் போட்டு, “நீ சொன்னதைத் திரும்பச் சொல்லு விமலா” என்றார்.

“ஏன்டி நான் சொன்னது காதுல விழலையா?” என்றவராய், “டிவியைப் பார்த்தியானு கேட்டேன். கட்டிக் கொடுத்த பிறகாவது வேலையை விட்டுட்டு குழந்தைப் பெத்துக்கிறதைப் பார்ப்பானுப் பார்த்தா என் பொண்ணு பண்ணுற வேலையைப் பாருடி” என்று ஆதங்கத்துடன் அவர் கூறியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்திருந்தனர் ரங்கராஜனும் வினோதினியும்.

“ஏன்டி நாங்க இங்க உன் பொண்ணைப் பெருமையா பேசிட்டு இருந்தா, உன் பொண்ணோட மாமியாருக்கே போன் செஞ்சி பொண்ணைக் குறைச் சொல்லிட்டு இருக்க நீ! மேலதிகாரிக்கிட்ட பாராட்டு வாங்குறதுலாம் என்ன சின்ன விஷயமா! அதையும் அவர் இப்படிப் பப்ளிக்கா சொல்லும் போது சந்தோஷப்படாம இப்படிப் புலம்புறியே” என்று வினோதினி கேட்க,

“அட போடி! வயசு என்ன வருதா போகுதா! இதுக்கு மேலயும் தள்ளிப்போடாம அவ குழந்தையைப் பெத்துக்கனுமே! அதிலும் தாயும் சேயும் ஆரேக்கியமா இருக்கனுமேனு என்னோட கவலை ஏன் உங்க யாருக்கும் புரிய மாட்டேங்குது” கவலையும் ஆதங்கமுமாய் அவர் கூறியதைக் கேட்டு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

கைப்பேசியைத் தனது கையில் எடுத்தவராய்,

“தங்கச்சி நான் ரங்கராஜன் பேசுறேன்” என்றவர் பேசத் தொடங்கவும்,

“சொல்லுங்கண்ணா” என்று அங்கே அட்டென்ஷனில் நின்று விட்டார் விமலா.

“அவங்க வாழ்க்கைய அவங்களை வாழ விடுங்கமா. நாளைக்கு வரப் போறதை நினைச்சு இன்னியோட சந்தோஷத்தை அனுபவிக்காம விடுறது தப்பு. குழந்தை அவங்களுக்கு வேணும்னா பெத்துக்கட்டும் இல்லனா இப்படியே இருக்கட்டும். அவங்க வாழ்க்கையின் முடிவுக்குள்ள நாம போறது சரி வராது” என்று அவர் பேசியதைக் கேட்டு விமலா மற்றும் வினோதினி இருவரின் மனங்களும் சுணங்கினாலும் விட்டுப் பிடிக்கலாம் என்று அமைதியாக இருந்தனர்.

அதே நேரம் அங்கே ஆத்மநல்லூரில்,

“கண்ணா எங்கே இருக்கீங்க?” எனக் கேட்டவளாய் அவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டிற்குள் நுழைந்தாள் தாமரை.

“இங்கே இருக்கேன் தாமரை” என்றவனாய் தனது படுக்கையில் மடிக்கணினியோடு அமர்ந்திருந்தவனின் அருகில் சென்று அவனை அணைத்தவளாய், “எனக்கு டபுள் புரொமேஷன் கிடைச்சிருக்கு கண்ணா!” என்றவளாய் முகம் நிறைந்த மகிழ்வும் புன்னகையுமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“வாவ் சூப்பர் தாமரை” தனது மடியில் இருந்த கணிணியை ஓரமாய் எடுத்து வைத்தவனாய் அவளின் இடையைப் பற்றித் தனது மடியில் அமர வைத்தவன், சிரித்த முகமாய் “கங்கிராஷூலேஷன்” என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவனின் கழுத்தைச் சுற்றி கரம் கோர்த்தவளாய் அவன் கன்னக்குழியை ரசித்துப் பார்த்து முத்தமிட்டவாறு அவன் முகத்தைப் பார்த்தவள், “ஏற்கனவே ஒரு புரோமோஷனோட தான் இங்கே வந்தேன். இப்ப அந்த சர்வேஷ்வரன் போஸ்ட்டிங்கையும் எனக்குக் கொடுத்திருக்காங்க. சோ ஒரே வருஷத்துல டபுள் புரொமோஷன்” என்று மகிழ்ச்சியுடன் கண் சிமிட்டிச் சிரித்தாள்.

“ஹ்ம்ம் ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கு. என் பொண்டாட்டியை நினைச்சு ரொம்ப ரொம்பப் பெருமையா இருக்கு” மனத்தின் அதீத மகிழ்வில்‌, மேலும் அவனைத் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தாள்.

அவனது மார்பு முடியை வருடியவளாய் மேலும் அவள் முகத்தை மார்பில் புதைத்து முத்தமிட, மனைவியின் அணைப்பின் மாறுதலில் வெளிப்பட்ட மோகத்தைப் புரிந்தவனாய் அவளின் உச்சியில் முத்தமிட்டு முகத்தைக் கைகளில் தாங்கியவன், கண்களை மூடியவாறு தனது முத்தத்திற்காகப் பூரிப்பான முகத்துடன் காத்திருக்கும் மனையாளின் முக உணர்வுகளை ரசித்தவனாய், அவளிதழில் ஆழ்ந்த முத்தமிட்டான். இதழ்களில் உரசலில் உணர்வுகள் இன்னிசை மீட்ட, அம்முத்தத்தை ரசித்து மூழ்கிப் போயினர் இருவரும்.

உடலிலுள்ள நாளங்கள் அனைத்திலும் தித்திப்பை உணர்ந்தவளாய் கிறங்கிக் கிடந்தவளின் முகத்தில் முத்த ஊர்வலத்தை நடத்தியவன், அவளது கழுத்தினில் இளைப்பாறி தனது பயணத்தைத் தொடர, அங்கங்களில் புல்லரிக்கச் செய்யும் அவனது வித்தையினில் தன்னை மறந்தவளாய் படுக்கையில் விழுந்தவளின் மேல் புரண்டிருந்தான் அவன்.

காதல் காமமாகி கசிந்துருகிய நிலையில் இருவரும் இன்ப உலகில் சஞ்சரித்து இன்பத்தின் உச்சத்தை அடைந்து மீண்டு வந்து இளைப்பாறிய நேரத்தில், அவனது மார்பில் அடைக்கலமாகி இருந்தவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டவளாய், “லவ் யூ கண்ணா” என்றாள்.

தனது உடல் பாகத்தில் பாதியாய் தன்னோடு ஒட்டி உறவாடி அணைத்துப் படுத்திருக்கும் மனைவியின் இதழில் முத்தமிட்டவனாய்,

லவ் யூ லவ் யூ

லவ் யூ லவ் யூ சொன்னாளே

உள்ளத்தை அள்ளி அள்ளித் தந்தாளே

என்று சத்தமாய்ப் பாட,

அவன் மார்பின் மீது தாடை வைத்து அவன் முகத்தைப் பார்த்தவாறு படுத்தவளாய், “உள்ளத்தை மட்டுமில்ல மொத்தத்தையும் அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கேனாக்கும்” நாணச்சிரிப்புடன் அவள் கூற, வாய்விட்டுச் சிரித்திருந்தாள்‌ அவன்.

அவளும் சிரித்தவளாய் அவனோடு கலந்திருந்தாள்.

இன்பமாய் இல்லற வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த போது மேலும் ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், மாதவப் பெருமாள் சிலை கிடைக்காதிருப்பதை எண்ணி கவலைக் கொண்டவர்களாய், ஐம்பொன் சிலை கிடைக்க வேண்டி மாதவனும் தாமரையும் தினசரி பூஜையில் ஈடுபட்டனர்.

அன்று ஒரு நாள் ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலில் அப்பொழுது தான் தாமரையுடன் இணைந்து பூஜையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்றிருந்தான் மாதவன்.

கோவில் அலுவலகத்தில் தனது முகநூலைப் பார்வையிட்டவளாய் அமர்ந்திருந்த தாமரை திடீரென மாதவனுக்கு அழைத்தாள்.

“கண்ணா, நம்ம வேண்டுதலுக்குப் பலன் கிடைச்சிருச்சு. மாதவப் பெருமாள் சிலை எங்கேயிருக்குனு தெரிஞ்சிருச்சு” மகிழ்ச்சியுடன் கூறியவள்,

“நான் வாட்ஸ்அப்ல உங்களுக்கு அனுப்பியிருக்கப் போட்டோவைப் பாருங்களேன்” என்றாள்.

உடனே கைப்பேசியை எடுத்து அந்த ஒளிப்படத்தைப் பார்த்தான்.

ஏதோ மியூசியத்தில் ஒரு பெண் மாதவப் பெருமாள் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டு இருந்ததைப் பார்த்து அந்தப் படத்தை மாதவனுக்கு அனுப்பியிருந்தாள் தாமரை.

அந்தப் படத்தைப் பார்த்ததும் அவனின் மெய்சிலிர்த்துக் கண்களில் கண்ணீர் பெருக, “இது நம்ம மாதவப் பெருமாள் சிலையே தான் தாமரை” என்று நெகிழ்வாய் உரைத்திருந்தான் மாதவன்.

“சென்னைல இருக்க ஏதோ மியூசியமா இருக்குமோ இது” என்று தாமரை கேட்க,

“ஆனா இது சென்னை மாதிரி தெரியலையே! சிலைக்குப் பக்கத்துல இருக்கப் போர்ட்ல ஹிந்தில எழுதியிருக்கே” என்றவன் சொன்னதைக் கேட்டு முகநூலில் அந்தப் படத்தை மீண்டுமாய்ப் பார்த்தவள், “கண்ணா! ஆமா! போட்டோ கமெண்ட்ல இது டெல்லி மியூசியத்துல எடுத்த போட்டோனு சொல்லிருக்காங்க” என்றாள் தாமரை.

“அப்ப ஆசான் தலைநகரம்னு சொன்னது இந்தியாவோட தலைநகரம் டெல்லியைத் தானா! சூப்பர்ல! அவர் சொன்ன மாதிரியே சிலை அங்கே இருக்கே” என்று வியப்புடன் கூறியிருந்தான் மாதவன்.