அத்தியாயம் 35

அதே அலுவலக அறையில் சர்வேஷ்வரன் அமர்ந்திருந்த சுழலும் நாற்காலியில் அமர்ந்து சுழன்றவாறே, தனக்கு எதிரிலிருந்த தாமரையைப் பார்த்து, “ஆர் யூ ஓகே தாமரை? தண்ணீர் எதுவும் வேணுமா?” எனக் கேட்டார் ராமானுஜம்.

இன்னுமே அவளின் நெஞ்சம் படபடவென படு வேகமாகத் தான் துடித்திருந்தது ஆயினும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவளாய், “சார்.. நீங்க.. உங்களுக்கு என்னை.. எப்படித் தெரியும்?” தன்னுடைய உயர் அதிகாரியிடம் எப்படி வார்த்தையைக் கோர்த்துக் கேட்பது என்று புரியாமல் தட்டுத் தடுமாறியவளாய் கேட்டிருந்தாள் தாமரை.

“நேர்மையான ஆபிசர்ஸ்ஸை தானே தண்ணீர் இல்லாத, மனுஷங்களே வாழாத காட்டுக்கு ஆபிசரா போடுவாங்க தாமரை. அதனால தான் உங்களை மாதிரி நேர்மையான ஆபிசரை வேணும்னே இந்தக் காட்டுக்கு புரொமோஷன் கொடுத்து அனுப்பினேன்” என்று கூறி சிரித்தார்.

“அப்ப நீங்க தான் எனக்கு இந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்ததா சார்” கண்கள் ஆச்சரியத்தில் மின்ன கேட்டவளாய்,

“நான் எந்த வம்பு தும்புக்கும் போகலையே! அங்கே என்னோட மேனேஜர்கிட்ட கூட எதிர்த்து பேசாம நான் உண்டு என் வேலை உண்டு இருப்பேனே! என்னை எதுக்கு இப்படியொரு காட்டுக்கு டிரான்ஸ்ஃபர் செய்றாங்கனு நிறைய நாள் நினைச்சிருக்கேன் சார்” என்றாள்.

அவளின் பேச்சில் சிரித்தவராய், “இது வரைக்கும் நீங்க வேலைப் பார்த்த எந்த கோவில்லயும் உங்களுக்கு நல்ல பேரு இல்லை தாமரை. ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர். எப்பவுமே நேர்மை எருமை  கருமைனே பேசிட்டு சுத்தும் சரியான ரூல்ஸ் ரங்கம்மானு பேசிக்கிட்டாங்க. இப்படி ஆளு தானே நமக்கு வேணும்னு தான் உங்களை இங்கே அனுப்பினேன்” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தனர் சக்தீஸ்வரன், ராஜா மற்றும் மாதவன்.

தாமரையை இங்கே அனுப்பி விட்டு வெளியே மறைவாய் காத்திருந்தனர் மூவரும். ராமானுஜம் வராமல் போயிருந்தாலும் இவர்கள் வந்து தாமரையைக் காப்பாற்றியிருப்பர்.

செல்வத்தையும் சர்வேஷ்வரனையும் காவலர்கள் கைது செய்து அழைத்துச் செல்வதைப் பார்த்து தான் உள்ளே வந்தனர் மூவரும்.

ராமானுஜத்தை மாதவன் யார் அவர் எனப் புரியாது பார்க்க, “சார் நீங்க எப்படி இங்கே?” எனக் கேட்டிருந்தனர் சக்தீஸ்வரனும் ராஜாவும்.

ஆறு மாதங்களுக்கு முன்பே ஆத்மநல்லூரில் ராஜாவை ஒரு பொது நல வழக்குப் போட வைத்திருந்தான் சக்தீஸ்வரன்.

கடந்த இரண்டு வருடங்களாக மர்மமான முறையில் அறநிலையத் துறை அலுவலர்கள் இறக்கிறார்கள். அதனை தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென பொது நல வழக்கைப் போட்டிருந்தான் ராஜா.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இறந்தவர்கள் அனைவருக்கும் இறப்பிற்கான காரணங்கள் தெளிவாய் இருக்கிறது என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார். செல்வத்தின் தந்தையான அமைச்சர் செங்கல்வராயன், நீதிபதியை மிரட்டி அவ்வாறு தள்ளுபடி செய்ய வைத்திருந்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நீதிபதி, வெளிப்பார்வைக்கு தள்ளுபடி செய்து விட்டு மத்திய அமைச்சரின் உதவியுடன் ராமானுஜத்தை நியமித்து இந்த வழக்கை மறைவாக விசாரிக்குமாறு ஆணையிட்டார்.

ஏற்கனவே ராமானுஜம் வேறொரு கோவில் சிலைக் கடத்தல் பிரச்சினைக்காக மறைவாய் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் ஆத்மநல்லூர் மர்மத்தையும் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றார்.

அச்சமயத்தில் தான் தன்னை சமூகநலவாதி என்று சக்தீஸ்வரனிடமும் ராஜாவிடமும் அறிமுகம் செய்து கொண்டு, பொது நலவழக்குத் தொடுத்தது சம்பந்தமான விபரங்களைக் கேட்டறிந்து கொண்டார் ராமானுஜம். ஒரே ஒரு முறை தான் இருவரிடமும் பேசியிருக்கிறார். அமைச்சர் செங்கல்வராயன், அவரது மனைவி செந்தாமரை மற்றும் அவர்களது மகன் செல்வம் மீது சந்தேகம் இருப்பதை ராஜா அவரிடம் உரைத்திருந்தான்‌.

அந்நேரம் விசாரித்த போது அவருக்கும் இங்கு நடக்கும் சிலைக் கடத்தல் பற்றி ஏதும் தகவல் கிட்டவில்லை. ஆத்மநல்லூரிலும் சோலைவனத்திலும் அனைத்துமே சரியாக இருக்கிறது என்று தான் அவருக்கும் தகவல் கிடைத்தது.

அந்நிலையில் தான் ஒரு நாள், நாட்டில் சிலைக் கடத்தல் குறித்து‌ நாட்டு மக்களுக்கு எவ்வித தகவல் தெரிந்தாலும் சிலைக் கடத்தல் குற்றப் பிரிவு மின்னஞ்சலுக்குத் தெரிவிக்குமாறு அரசாங்கம் ஒரு மின்னஞ்சலை வழங்கியது. ராமானுஜத்தின் ஆணையின் பேரில் அவரது நேரடி மேற்பார்வையில் அந்த மின்னஞ்சல் இருந்தது.

சோலைமலை சிவன் கோயிலில் அம்மன் சிலைகள், சிவநேசன் முத்தரசி சிலைகள் என பல சிலைகள் காணாமல் போயிருப்பதை உணர்ந்த தாமரை, அன்றிரவே அந்த மின்னுஞ்சலுக்கு, தனது பெயரைக் குறிப்பிடாமல், இதற்கெனவே புது மின்னஞ்சல் ‌முகவரியைத் திறந்து அதன் மூலம் இந்தச் செய்தியைப் பகிர்ந்திருந்தாள். ராமானுஜத்திற்கு யார் இந்தச் செய்தியை அனுப்புவது என்று கண்டுபிடிப்பது கடினமான காரியம் அல்லவே! ஆகையால் தாமரை தான் இதனை அனுப்புவது என்று தெரிந்து வைத்திருந்தார்.

செல்வத்திற்கு எதிராக தனக்கு கிடைக்கும் ஆதாரங்களை எல்லாம் ராஜாவும், இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்துக் கொண்டு இருந்தான்.

இன்று காலை செந்தாமரை தாமரைக்குப்‌ விஷம் கலந்த பாயாசம் அளித்துக் கொல்ல முற்பட்டதை ஆதாரத்துடன் அந்த மின்னஞ்சலுக்கு ராஜா அனுப்பியதைப் பார்த்து விட்டு, காவலர்களுடன் அமைச்சர் குடும்பத்தையும் சர்வேஷ்வரனையும் கைது செய்யும் ஆணையுடன் அந்த அரசு அலுவலகத்திற்கு வந்திருந்தார் ராமானுஜம்.

அச்சமயம் தாமரையிடம்  சர்வேஷ்வரன் பேசுவதைக் கேட்டு கோபம் கொண்டவராய் அறைக்கு வெளியே நின்றிருந்த போது, செல்வத்தின் வாயாலேயே அவனது தவற்றை ஒத்துக் கொள்ள வைத்தால், அது இந்த வழக்கிற்கு பேருதவியாக இருக்குமே என்ற எண்ணம் உதித்தது அவருக்கு. அந்த நொடியில் திட்டமிட்டவராய், காவலர்களை வெளியே இருக்க வைத்து விட்டு, இவர் மட்டும் உள்ளே வந்தார்.

இவற்றை எல்லாம் அவர்களிடம் பகிர்ந்தவாறு அமர்ந்திருந்த ராமானுஜம், “உங்க நாலு பேரால தான் என்னால இவ்வளோ சுலபமா இந்த கேஸை கண்டுபிடிக்க முடிஞ்சது. உங்களுக்கு தெரியாமலே எனக்கு நீங்க பெரிய உதவி செஞ்சிருக்கீங்க” என்றார்.

“இல்ல சார்! நீங்க தான் நாங்க கும்பிடும் கடவுளா வந்து உதவி செஞ்சிருக்கீங்க. அதுக்கு நன்றி! காணாமல் போன சிலை எல்லாம் மீட்டு எடுத்து அந்தந்த இடத்துல வச்சிட்டா எங்களுக்கு முழு நிம்மதி கிடைச்சிடும்” என்று சக்தீஸ்வரன் மனதார நன்றி உரைத்தான்.

மாதவப் பெருமாள் சிலை மாறியிருப்பதைப் பற்றி அவள் எந்தத் தகவலும் அளிக்கவில்லை. அதற்கான ஆதாரம் இல்லாமல் புகாரளித்தால், உங்களுக்கு எப்படி முன்பு இங்கு இப்படி ஒரு சிலை இருந்தது தெரியும் என்ற கேள்வி வரும் என்பதனால் முன்பிருந்த சிலைக் குறித்த ஆதாரத்தை எடுத்த பின்பே அதைப் பற்றி பேச வேண்டுமென்று அமைதியாக இருந்தாள்.

“சார் அந்த மினிஸ்டர் தன்னோட பையன் செல்வத்தை உடனே ஜாமீன் எடுத்துடுவாரு தானே. அதிகாரத்துல இருக்க ஆளுக்குலாம் நம்மளால எந்த தண்டனையும் வாங்கிக் கொடுக்க முடியாதுங்கிறது தானே கசப்பான உண்மை சார்” எனக் கேட்டாள் தாமரை.

“இல்ல தாமரை! அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்களே! அது தான் நடந்திருக்கு. இப்ப இருக்க அறநிலையத் துறை அமைச்சர் தானே இவங்களை சப்போர்ட் செய்றது. அவரு அந்தப் பதவியை விட்டு மாறிப் போய்ட்டா, இந்த மாதிரி தப்புக்கு எல்லாம் உடனே ஆக்ஷன் எடுக்கனும்னு சொல்ற அமைச்சர் அந்தப் பதவிக்கு வந்துட்டா, அதுவும் இந்த செல்வத்தோட அப்பாவை தன்னோட எதிரியா பார்க்கிற அமைச்சர் அந்தப் பதிவுக்கு வந்தா இவங்களை என்ன செய்வாரு?” என்று சிரிப்புடன் கேட்டிருந்தார்.

“ஜெயில்ல வச்சி கும்முவாரு” என்று சிரித்தவாறு மாதவன் உரைக்க,

அப்படியா என்ற ஆச்சரியத்துடன் தாமரையும் சக்தீஸ்வரனும் பார்த்திருக்க,

“சார்.. அப்படினா..” என்று ராஜா ஆச்சரியப் பாவனையுடன் ராமானுஜத்தைப் பார்த்திருந்தான்.

“ஆமா ராஜா! இன்னிக்கு சாயங்காலம் ஆட்சி மாற்றம் பத்தி மீடியால செய்தி வரும். இந்த நியூஸ் கான்பிடென்சியல். செய்தி வர வரைக்கும் யார்க்கிட்டயும் ஷேர் செய்யாதீங்க. இப்ப எனக்கு சப்போர்ட் செய்ற அமைச்சர் அறநிலையத் துறை அமைச்சரா பதவி ஏற்க போறனால தான் ராஜா அனுப்பின எவிடன்ஸ் கிடைச்ச மறுநொடி தாமதிக்கக் கூடாதுனு போலீஸ்ஸோட வந்தேன்” என்றவர் சொன்னதைக் கேட்டு, மாதவனும் தாமரையும் ஆச்சரியம் கலந்த விழியினால் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

‘தலைமை உனக்கு துணையா இருக்கும். இப்ப கேஸ் போடு கருப்பா! வெற்றி உங்களுக்குத் தான் கிடைக்கும்’ என்று அவனின் ஆசானான சாமியார் கூறியது அப்படியே நடக்கிறதே என்று ஆச்சரியம் கொண்டனர் இருவரும்.

இதற்கு மேலும் மாதவப் பெருமாள் சிலைக் குறித்து சொல்லாமல் இருப்பது நன்றன்று என்று எண்ணியவளாய் தாமரை,

“சார் இங்கே இருக்க மாதவப் பெருமாள் உற்சவ சிலை டூப்ளிகேட் சார்” என்று சொன்னாள்.

“என்ன? அப்படியா?” என்று மாதவனை தவிர மற்ற அனைவரும் ஆச்சரியத்துடன் வினவ,

ஆமெனத் தலையசைத்தவளாய், “இதை என்னால் உணர்வா தான் சொல்ல முடியும் சார்! அந்தச் சிலை என்னோட குலதெய்வம் மாதிரி. அந்தச் சிலையைத் தேடிக் கண்டுபிடிக்கத் தான் நான் இந்த ஊருக்கு வந்தேனோனு கூட தோணிருக்கு. அப்படி என் கூட பெர்சனல் அட்டாச்மெண்ட் இருக்க சிலை சார் அது. இதுக்கான ஆதாரத்தைத் தான் தேடிட்டு இருக்கேன். அந்தச் சிலையையும் மறைமுகமாகத் தேடச் சொல்லி உத்தரவு போடுங்க சார். என்னோட ஹம்புள் ரிக்வெஸ்ட் இது” என்று தயங்கியவாறே கூறியிருந்தாள் தாமரை.

“சரி தாமரை! உயிரே போனாலும் என் வேலையைச் செய்வேன்னு உயிர் பயம் இருந்தும் எனக்கு இன்பர்மேஷன் அனுப்பின உங்க நேர்மைக்காகவே இதை நான் செய்றேன்” என்றவராய்,

“என்ன தாமரை இந்த ஊரோடவே ஒன்றிப் போய்ட்டீங்களா? உங்களை சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் செஞ்சிடலாம்னு நினைச்சேனே?” எனச் சிரிப்புடன் கேட்டிருந்தார் ராமானுஜம்.

அவள் மாதவனைப் பார்க்க, “நான் தாமரையைக் கட்டிக்கப் போறவன் சார். இந்த ஊருல அவளுக்கு உயிர் பிரச்சினை இருக்குனு தான் நான் கூட பாதுகாப்புக்கு வந்தேன். ஆனால் இப்ப மாதவன் சிலையை இந்தக் கோவிலுக்குக் கொண்டு வர்ற வரைக்கும் அவளோட பொறுப்புல அவ இங்கே இருக்கிறது தான் சரியா வரும்” என்று உரைத்தவனாய் அவளைப்‌ பார்க்க, தான் நினைத்ததையே அவன் கூறியதில் அத்தனை மகிழ்ச்சி அவள் முகத்தில்.

“ஆஹா லவ் மேரேஜா சார்! அவங்க நினைச்சதையே நீங்க சொல்லிட்டீங்க போலயே! அவங்க முகம் ஜொலிக்குதே” என்று கேலிச் செய்திருந்தார் ராமானுஜம்.

மேலும் சில நிமிடங்கள் இவர்களிடம் பேசிவிட்டு ராமானுஜம் கிளம்பி விட, மூன்று ஆண்களும் தாமரையைப் பாராட்டியவர்களாய் கிளம்ப எத்தனிக்க,

மாதவப் பெருமாள் சிலைக் குறித்த ஆதாரத்தைச் சேகரித்து விட்டு வருவதாக தாமரை சொல்லவும், மாதவனும் அவளுடன் நின்று விட, மற்ற இருவரும் விடைப்பெற்று சென்றனர்.