மருத்துவமனையின் காத்திருப்பு இடத்தில் அமர்ந்திருந்தனர் மாதவனும் தாமரையும்.
“இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க கண்ணா?” எனக்கு எதுக்கு ஃபுல் பாடி செக்அப்?” எனக் கேட்டாள் தாமரை.
“அந்த அம்மா கையால தானே இரண்டு நாளா சாப்பிடுற தாமரை. கோதைக்கு குடிக்கிற நீராகாரத்துலயே விஷத்தை கலந்து கொடுத்திருக்காங்கனா, உனக்கு சாப்பாட்டுல எதுவும் கலந்து கொடுத்திருக்காமலா இருந்திருப்பாங்க” என்றவன் சொன்னதைக் கேட்டு, அவளுக்கு சிரிப்பும் நெகிழ்ச்சியுமாய் இருந்தது.
“அப்படி எதுவும் அவங்க செஞ்சிருந்தா இப்படி உட்கார்ந்து உங்ககிட்ட பேசிட்டு இருக்க மாட்டேனே கண்ணா” கனிவான குரலில் அவள் உரைக்க,
“இல்ல தாமரை! சக்தீஸ்வரன் சார்கிட்ட நான் பேசின போது அவரும் வக்கீல் ராஜாவும் சேர்ந்து விசாரணை செஞ்சதுல, இங்க நடந்த ஆபிசர்ஸ் இறப்புல இந்த செந்தாமரை அம்மா மேலயும் அவங்க பையன் மேலயும் ஏற்கனவே சந்தேகம் இருக்குனு சொன்னாங்க” என்றான்.
மாதவன் சக்தீஸ்வரன் என்றதும் தாமரையின் மனம் முன்ஜென்மத்தில் கண்ட சிவநேசனிடம் சென்று நின்றது. தாம் தானே முற்பிறவியில் சிவநேசனையும் முத்தரசியையும் கனவில் கண்டோம். இவர் பார்த்திருக்க வாய்ப்பில்லையே! பிறரிடம் அவர்களின் முன் ஜென்ம கதையை கூறக் கூடாது என்று வேறு சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் கூறி விட்டார்கள். ஆக இவர்கள் யாரென இந்த ஜென்மத்தில் என்னைத் தவிர நான் யாரிடமும் கூற முடியாது என்று மனத்திற்குள் நினைத்தவளாய் அமர்ந்திருந்தவளை உலுக்கியவனாய், “என்ன நான் சொன்னதைக் கேட்டு அப்படியே உறைஞ்சு போய்ட்ட” எனக் கேட்டான் மாதவன்.
“அந்தம்மாவை அப்படி நினைக்கவே முடியலை கண்ணா” என்றாள்.
“என்னமோ கோதையை அப்படிப் பார்த்ததும் உனக்கு செக் அப் செஞ்சி முழுசா நீ நல்லா இருக்கனு தெரிஞ்சா தான் மனசு ஒரு நிலைக்கு வரும்னு தோணுச்சு. அதான் உடனே தியானத்தை கலைச்சு உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன்” என்றவனை இமை சிமிட்டாது குமிழ்ச்சிரிப்புடன் பார்த்திருந்தாள்.
அவளின் பார்வையில் சற்று சங்கோஜம் கொண்டவனாய், “என்ன அப்படிப் பார்க்கிற?” எனக் கேட்டான்.
“என் வாழ்நாள்ல அப்பா அம்மாக்குப் பிறகு முதல் முறையா எனக்காகத் துடிக்கிற எனக்காகனு யோசிக்கிற ஜீவனைப் பார்க்கிறேன். மனசுக்கு ஒரு மாதிரி இதமா இருக்குப்பா” மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த குரலில் உரைத்தவளாய் அவனது கரத்தினைப் பற்றினாள்.
இதழ் விரிய மென்னகைப் புரிந்தவனின் கன்னத்தில் குழி விழ, தன்னை மீறி அதனை தொட்டவளாய், “கோதைக்கு மட்டுமில்ல எனக்கும் உங்க கன்னக்குழியைப் பிடிக்கும்” என்றவள் சொல்லியப் பின் நாக்கைக் கடித்தவளாய் அங்கிருந்து எழுந்து யாருமற்ற இடத்தில் தள்ளி நின்று கொண்டாள்.
‘அய்யோ என்ன சொல்லி வச்சிருக்க தாமரை நீ?’ என தன்னைத் தானே திட்டிக் கொண்டவளாய் சங்கடப் பாவனையுடன் நின்றவளின் அருகே சிரிப்புடன் வந்து நின்றவனாய், “இளமை திரும்புதே புரியாத புதிராச்சே” என்று மெல்ல பாடினான்.
“மனசுல காதல் வந்தாலே வாழ்க்கை அழகாகிடுதுல! டீன் ஏஜ் மாதிரி மனசுல படபடப்போட வயித்துல பட்டாம்பூச்சி பறக்குற உணர்வுலாம் தானா வந்துடுது” அவளின் கன்னம் கிள்ளி உரைத்திருந்த பொழுது,
செவிலியர் வந்து தாமரை என்று சத்தமாய் அழைக்க, நிகழ்விற்கு வந்தவர்களாய் இருவரும் இயல்பான முகத்துடன் அவரை நோக்கிச் சென்றனர்.
அன்றைய பகற்பொழுது முழுவதும் அவளின் முழு உடற் பரிசோதனையிலேயே சென்றிருக்க, பரிசோதனையின் முடிவை மறுநாள் கூறுவதாக உரைத்து அவர்களை அனுப்பி வைத்தார் செவிலியர்.
மாலை நான்கு மணியளவில் மதிய உணவை இருவருமாக இணைந்து உண்டு முடித்து விட்டு அமர்ந்தவனாய், “வீட்டுல பேசிடலாமா தாமரை?” என்றவன் கேட்டதும் அதிர்ந்தவளாய்,
“அய்யோ வேண்டாம்” என்றாள்.
“என்ன வேண்டாம்? நாம தாலிக் கட்டி கல்யாணம் செஞ்சிக்க வேண்டாமா? இப்ப நாம மாலை மாத்தினதே போதும்னு சொல்றியா? அப்படினா எனக்குச் சந்தோஷம் தான்ப்பா! இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் பிளான் செஞ்சிடுவேன்” என்றவன் விளையாட்டாய் கூற,
“பொண்டாட்டிக்கிட்ட இப்படிக் கூட பேசலைனா எப்படி?” என்றவன் கண் சிமிட்ட, சங்கோஜமான வெட்கத்தோடு அவன் தோளில் பட்டென அடித்தவளாய்,
“நான் அதை சொல்லலை. இப்ப நாம செஞ்ச கல்யாணம் யாருக்கும் தெரிய வேண்டாம்னு சொல்ல வந்தேன். நம்ம வீட்டுல பேசி எனக்கு தாலி கட்டி நடக்குற கல்யாணம் தான் நமக்கு நிஜமான கல்யாணம். இன்னிக்கு நடந்ததை நிச்சயதார்த்தம்னு வேணா வச்சிக்கலாம்” என்றாள்.
“அப்ப இன்னிக்கு நடந்தது நம்ம இரண்டு பேரைத் தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம்னு சொல்றீயா?” எனக் கேட்டான்.
“ஆமா கண்ணா! எனக்கு ஒரு மாதிரி சங்கோஜமா இருக்கு! உங்ககிட்ட இயல்பா இருக்க முடியாது. ஆனா சட்டுனு இதெல்லாம் வெளியே சொல்ல வெட்கமா இருக்கு” என்றவளாய் தலையைக் குனிந்து கொள்ள, அவளின் முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தவனாய்,
“எனக்கு அப்படி எந்த சங்கோஜமும் சங்கடமும் இல்லப்பா! நானே இரண்டு வீட்டுக்கும் கால் செஞ்சி சீக்கிரம் கல்யாணத் தேதியைக் குறிக்கச் சொல்றேன்” என்றவனாய் இருவரின் வீட்டிற்கும் அழைத்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகக் கூறி திருமணத்திற்கான நாளைக் குறிக்கச் சொன்னான்.
இதற்காகவே காத்திருந்த மாதவனின் அன்னை வினோதினியும் தாமரையின் அன்னை விமலாவும் அன்று மாலையே ஒன்று கூடி திருமணப் பேச்சு வார்த்தைகளைத் துவங்கியிருந்தனர்.
மாலை வரை தாமரையும் மாதவனும் வீட்டிற்கு வராது இருப்பதை செந்தாமரை தனது மகனுக்கு அழைத்து தகவலைப் பகிர்ந்தார்.
“டேய் தம்பி! அந்த ஆபிசர் சிறுக்கிக்காக பாயாசத்தை ரெடி செஞ்சி வச்சா, அவ இந்த வீட்டுப் பக்கமே வரலையேடா! நம்மளை பத்தி அவளுக்குத் தெரிஞ்சிடுச்சோ? நமக்கு எதுவும் பிரச்சினை வருமோ?” என்று கேட்டார்.
“ஹ்ம்ம் நம்மளை பத்தி அவளுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு தான்! நேத்து அவளோட மேலதிகாரி கூட, அவ ரொம்ப ஸ்பீடா போறானு சொன்னாரு! இன்னிக்குப் பார்த்தா நரசிம்மர் கோவிலுக்கே வந்து நிக்கிறா! அதான் உன்னை இன்னிக்கே பாயாசத்தைப் போட சொன்னேன். இன்னிக்கு முழுக்க அவ வீட்டுக்கே வராம இருந்தானா சொல்லு! நாளைக்கு அவளுக்கு வேற ஸ்கெட்ச் போடுறேன்” என்றவனாய் கைப்பேசியை வைத்தவன் தனது தந்தைக்கு அழைத்து அடுத்த திட்டத்தைப் பற்றி பேசலானான்.
அதே நேரம் இங்கே மாதவனும் தாமரையும் மாதவப் பெருமாள் கோவிலை நோக்கிச் சென்றிருந்தனர்.
தாமரைக்கு அக்கோவிலில் ஏதோ அலுவல் வேலை இருக்கிறது என்று நினைத்துத் தான் அவளை அங்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான் மாதவன்.
“இப்ப அங்கே போய் நீ என்ன செய்யப் போற தாமரை? எதுவும் பெண்டிங் ஆபிஸ் வேலை இருக்கா?” எனக் கேட்டான் மாதவன்.
“கண்ணா, முற்பிறவில நீங்க தலைல தூக்கி வச்சிட்டு ஆடின சிலையை இந்தப் பிறவில எப்பவாவது பார்த்திருக்கீங்களா?” எனக் கேட்டாள் தாமரை.
இல்லையென அவன் தலையசைக்க, “அந்தச் சிலை மாதவப் பெருமாள் கோவில் கஜானா அறைல இருக்கு” என்றவள் சொன்னதும் இவனது உள்ளத்திற்குள் இனம்புரியாத உற்சாக அலை பொங்கி பெருக, “நிஜமாவா தாமரை! என்னோட மாதவன் இன்னும் இருக்காரா? நான் சுமந்து தாங்கிய மாதவன் இப்பவும் இருக்காரா” உள்ளுக்குள் பேருவகை பெருக்கெடுத்து ஓட ஆசையும் ஆவலுமாய் கேட்டவனை புன்சிரிப்புடன் பார்த்தவளாய்,
“ஆமா கண்ணா! ஆனா நரசிம்மப் பெருமாள் கோவில்ல இருக்க வேண்டிய சிலை எப்படி மாதவப் பெருமாள் கோவிலுக்கு வந்துச்சுனு தான் எனக்குத் தெரியலை. ஒரு வேளை அந்தப் பிறவில சிலையை எதிரிகள்கிட்ட இருந்து பாதுகாக்க நீங்களே அங்கே கொண்டு போய் வச்சிருப்பீங்களோ? அந்தக் காலத்துல தான் மாதவப் பெருமாள் கோவில்லருந்து நரசிம்மப் பெருமாள் கோவிலுக்கு சுரங்கப் பாதை வழி இருந்துச்சே” என்றாள்.
“இருக்கலாம் தாமரை. என்னோட மாதவனை பார்க்கப் போறேன்னு நினைக்கும் போதே மனசுக்குள்ள ஒரு மாதிரி பூரிப்பா சந்தோஷமா இருக்கு” கண்கள் மின்ன கூறியவனை மகிழ்வுடன் பார்த்தவளாய்,
“கேட்டதுக்கே சந்தோஷப்படுறீங்களே! நீங்க மாதவன் சிலையை நேர்ல பார்த்தீங்கனா எப்படி ரியாக்ட் செய்வீங்கனு பார்க்க ஆசையா இருக்கு” என்றாள்.
இருவருமாய் கோவிலை அடைந்து அலுவலக அறைக்குள் நுழைந்தனர்.
தாமரை தன்னிடமிருந்த சாவி மூலமாக கஜானா அறையை திறந்தவளாய் மாதவனை உள்ளே அழைத்துச் செல்ல, “ஹே நீ பாட்டுக்கு என்னை உள்ளே கூட்டிட்டு வர! உன் வேலைக்கு எதுவும் பிரச்சினை ஆகிடப் போகுது தாமரை” எனக் கேட்டவாறே உள்ளே நுழைந்தான் மாதவன்.
“இல்லனா மட்டும் என்னை இங்கே வச்சிருப்பாங்கனு நினைக்கிறீங்களா கண்ணா! இங்கே நிறைய சிலைக் கடத்தல்கள் மறைமுகமாக நடந்துட்டு இருக்கு. எந்த ஆபிசர் அதை கண்டுகாமல் இருக்காங்களோ அவங்க தான் இங்கே நீடிக்க முடியும்னு என்னுடைய ஹையர் ஆபிசரை பார்த்த அன்னிக்கே புரிஞ்சிக்கிட்டேன். ஆனா இங்கிருந்து போகுறதுக்குள்ள என்னாலான நல்லதை செஞ்சிட்டு போகனும்னு அப்பவே முடிவு செஞ்சேன். இப்ப இந்த சிலைகளோட நம்மளோட உயிரும் உணர்வும் கலந்து இருக்குனு தெரிஞ்ச பிறகு கண்டிப்பா இதெல்லாம் மீட்காம விட மாட்டேன்” என்றவளாய் பெரிய மரப்பெட்டியை திறந்தவள் அதனுள் இருந்த ஐம்பொன்னாலான மாதவப் பெருமாள் உற்சவ சிலையை வெளியே எடுத்தாள்.
அச்சிலையை கையில் ஏந்தியவளாய் மாதவனிடம் திரும்பியவள், “பாருங்க! இது தான் நம்ம உயிரோடும் உணர்வோடும் கலந்த சிலை” என்றவளாய் அவன் கையில் அச்சிலையைக் கொடுத்தாள்.
அவன் பூரித்து நெகிழ்ந்து கண்ணீர் சிந்துவான் என்றெல்லாம் எதிர்பார்த்தவளாய் அவனை அவள் பார்த்திருக்க, அவனோ எவ்வித உணர்வுமின்றி யோசனையில் சுருங்கிய புருவத்துடன் அமைதியாக அச்சிலையின் முகத்தையே பார்த்திருந்தான்.
“என்னாச்சு கண்ணா? ஏன் இப்படிப் பார்க்கிறீங்க?” எனக் கேட்டாள்.
சிலையை முன்னே பின்னே ஆராய்ந்தவாறு அச்சிலையில் உடுத்தியிருந்த பட்டுச் சட்டையை கழுத்தினோரம் மெல்ல விலக்கிப் பார்த்தவனாய், “இந்தச் சிலை நான் தலையில் தூக்கி வச்சிட்டு ஆடின என்னோட மாதவப் பெருமாள் சிலை இல்லை தாமரை” என்றான்.
அவனது செயலைப் பார்த்திருந்தவளாய் இவளும் சிலையின் கழுத்தை உற்று நோக்கினாள்.
“ஆமா கண்ணா! இந்தச் சிலைல பிரகாசிக்கிற அந்தக் கல் இல்லையே!” என்றவள் சொல்லவும்,
“அட அந்தக் கல்லை விடு! அந்தக் கல் வைக்கிறதுக்கு இருந்த ஓட்டைக் கூட இல்லைப் பாரு தாமரை!” என்றவன் சொன்ன பிறகு பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
“அப்ப இந்தச் சிலை ஒரிஜினல் சிலை இல்லையா? ஒரிஜிலை வித்துட்டு டூப்ளிகேட் செஞ்சி வச்சிட்டாங்களா” என்றவள் கூறியதைக் கேட்டவனின் இதயம் வெடித்து விடும் போல் வலித்தது.