அத்தியாயம் 26

“நீ உனது ஏகாதசி விரதப் பலனை உன்னவருக்கான சாபத்தை நீக்க தாரை வார்த்ததால், எப்பிறவியிலும் உன்னை மணக்க முடியாதென உன்னவருக்கு உன் தந்தை அளித்த சாபத்திற்குத் தீர்வு கிடைத்திருக்கிறது மகளே” முத்தரசி கூறியதைக் கேட்டுக் கண்கள் ஒளிர,

“தீர்வு கிடைத்து விட்டதா?” மகிழ்ச்சியுடன் வினவியிருந்தாள் கோதை.

“ஆம் மகளே! உன்னுடைய ஏகாதசி விரதப் பலனால் உன் தந்தையளித்த சாபம் முழுவதுமாய் நீங்கி விடும். ஆனால் அப்படி நீங்குவதற்கு நீ உனது கர்மவினைப் பயனை அனுபவிக்கச் சித்தமாய் இருக்க வேண்டும்” என்றார் சிவநேசன்.

“அவரவரின் கர்ம வினையை அனுபவித்துக் கடப்பதற்காகத் தானே இப்பூமியில் மனிதர்களாய் பிறப்பெடுக்கிறார்கள்! அதனால் நான் என் கர்ம வினையை அனுபவிப்பதற்குச் சித்தமாய் இருக்கிறேன் ஐயா” என்றாள் கோதை.

(கர்மம் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொருள். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு.

கர்மா அல்லது வினைப்பயன் என்பது ஒருவரின் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத் தொகையாகும், இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது)

“இனி நீ எடுக்கும் அனைத்துப் பிறப்பிலும் உன்னவரையே மணாளனாகப் பெறுவாய். ஆனால் உன் கர்மவினைப் பயனால் அடுத்தப் பிறவியில் மட்டும் மறுமணமாய்த் தான் நீ அவருடன் இணைய முடியும் மகளே” என்றார் சிவநேசன்.

சிவநேசன் கூறியதைக் கேட்டு தனது செவியை மூடியவளாய், “நாராயணா.. மாதவா.. இதென்ன சோதனை? அப்படியென்ன பெரும் குற்றம் இழைத்தேன் நான்? ஏன் அரசி மா எனக்கிந்த துர்பாக்கிய நிலை?” கண்ணீர் மல்க கதறியவளாய் அவள் கேட்க,

“இப்பிறவியிலேயே நீ மறுமணமாகத் தான் உன்னவரை மணக்க வேண்டுமென்பது தான் விதி கோதை!” என்று முத்தரசி சொன்னதும்,

“என்ன?” என்று அதிர்வுடன் அவர்களை நோக்கினாள் கோதை.

“ஆம் கோதை! நீயும் கருப்பண்ணனும் தம்பதியாய் இறையடிவர்களாய் முற்பிறவியில் வாழ்ந்திருந்த சமயம், உனது வழிகாட்டுதலில் உடையோனை விடுத்து மாற்றானுக்கு மணம் செய்விக்கப்பட்டாள் ஒரு பெண். அப்பெண்ணின் பெற்றோர், ‘நீ உன்னவரைச் சேராது வேறொருவரை மணப்பாய்’ என்று சாபம் விடுத்தனர். உன்னால் பாதிக்கப்பட்டப் பெண்ணின் வாழ்விற்காக, இறைவனிடம் மன்றாடி அப்பெண்ணுக்கு உரியவருடன் மறுமணம் செய்து வைத்தாய். இதனால் மனம் மகிழ்ந்த அப்பெற்றோர், ‘நீயும் உன்னவருடன் மறுமணமாய் மீண்டும் இணைவாய்’ என்று அச்சாபத்திற்கான நிவர்த்தியை வழங்கினர்.

அந்தக் கர்மவினை காரணமாக இப்பிறவியில் நீ மறுமணமாகத் தான் உன்னவரை மணக்க வேண்டுமென்பது விதி!

நீ பிறந்ததுமே உன் கர்மவினையை கணித்த சோதிடரான உன் தந்தை, அவ்வாறு நடவாமல் இருக்கவும், இவ்விதியை மாற்றவும் சிறுவயது முதல் உன்னை எங்களை வணங்குமாறும், என்னைப் போன்று நீயும் உன்னவரையே மணக்க வேண்டுமெனவும் கூறி வளர்த்தார்.

உனது பக்தியினாலும் முன்னோரான எங்களின் ஆசியினாலும் இப்பிறவியில் மறுமணமாய் அல்லாது முதல் மணமாகவே உன்னவரை மணந்து விட்டாய். ஆயினும் கர்ம வினையைத் தீர்க்கும் வரையில் அது பின்தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் மகளே! அதனால் தான் இப்பிறவியில் உனது கர்மத்தை அனுபவிக்க விடாமல் தடுத்த உனது தந்தையின் சாபத்துடன் உன்னவரை மணக்க வேண்டிய சூழல் வந்தது உனக்கு!

உன்னுடைய கர்ம வினை தீராத காரணத்தினால் நீ அடுத்தப் பிறவியில் மறுமணமாய் உன்னவரை மணப்பாய் கோதை! அடுத்தப் பிறவியில் உன்னவரை நீ அறிந்து கொண்டு மணப்பதற்கு நாங்கள் உதவிடுவோம்.

உன் தந்தையின் சாபத்திற்கான நிவர்த்தி, இப்பிறவிக்கான உனது கர்மத்தை அடுத்தப் பிறவியில் அனுபவித்துக் கழித்து விடுவது மட்டுமே! அதன் பிறகு நீ இப்பூமியில் எடுக்கும் அத்தனை பிறவியிலும் உன்னவரே உனக்கு மணாளனாகிடுவார். இன்புற்று வாழ்வீர்கள் இருவரும்” என்று முத்தரசி கூறியதைக் கேட்டு அடுத்தப் பிறவியை நினைத்து மனம் கலங்கியது அவளுக்கு. ஆயினும் கர்மத்தைக் கழிக்க அதனை ஏற்றுத் தான் ஆக வேண்டுமெனத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

“கடந்த மூன்று மாதங்களாக உனது தந்தை தனது சாப நிவர்த்திக்காக உண்ணா நோன்பிருக்கிறார் மகளே! உன்னுடைய ஏகாதசி விரதப் பலனும் அவரது நோன்பின் பலனும் இணைந்த பலனால் இன்று நாங்கள் உனக்கு வருங்காலத்தை உரைத்தோம். உனக்கு உரியவர்களைத் தவிர எவரிடமும் இவ்விடயத்தைப் பகிராதே” என்றவர்களாய் அவளுக்கு ஆசி வழங்கிவிட்டு மறைந்தனர் இருவரும்.

சரியாய் அச்சமயம் கோதை என்றழைத்தவாறு அவளருகில் வந்து நின்றான் கருப்பண்ணன்.

“உறங்காது இங்கே என்ன செய்கிறாய் கோதை” எனக் கேட்டவாறு அவளருகே அமர்ந்தான்.

“உறக்கம் வரவில்லை. அதனால் அரசிமாவை வணங்கியவாறு அமர்ந்து விட்டேன்” என்றாள்.

ஏனோ நடந்தவற்றை எவரிடமும் பகிரத் தோன்றவில்லை அவளுக்கு. அதனால் உரியவர்களிடம் கூட இதனைப் பற்றி உரைக்காது இருந்து விட்டாள் கோதை.

இங்கே இக்காட்சியைக் கண்டிருந்த தாமரைக்கு உள்ளம் பரவசத்தில் துள்ளியது.

‘நான் தெய்வமாய் வணங்கினவங்களே என் கூட மனுஷங்களா பிறந்து இருக்காங்களா! சிவநேசன் ஐயாவும் முத்தரசிமாவும் வாக்குக் கொடுத்தது போலவே இளவஞ்சியும் சக்தீஸ்வரனுமா வந்து நானும் மாதவனும் சேருவதற்கு எவ்ளோ அழகா உதவிச் செஞ்சிருக்காங்க! இறைவன் கொடுத்த வாக்கைக் காப்பாத்துவான்னு சொல்றது எவ்ளோ உண்மை’ என்று மனத்தோடு நினைத்தவளாய் பூரித்துப் போனாள்.

மறுநாள் தந்தையை நேரில் சென்று சந்தித்த கோதை, “அரசிமா எனக்குக் கனவில் காட்சியளித்துத் தங்களது சாபத்திற்கான நிவர்த்தியைத் தெரிவித்து விட்டார்கள் தந்தையே! தங்களின் நோன்பிற்கான பலன் கிடைத்து விட்டது. அதனால் தங்களின் நோன்பை நிறைவு செய்து விடுங்கள் தந்தையே” என்று உரைத்தவள் நடந்தவைகளை முழுதாய் எவரிடமும் உரைக்கவில்லை.

அடுத்து வந்த நாள்களில் கோதை தனது அரசாங்கப் பணியைச் செய்தவளாய் நரசிம்மப் பெருமாள் கோவிலின் மேற்பார்வையைப் பார்த்திருந்த போது, அக்கோவிலின் சிலை வடிவமைப்பில் இருந்து அனைத்து கட்டுமானங்களையும் தனது ரசனைக்கேற்பச் செய்தாள்.

அச்சமயம் ஒரு நாள், அனைத்துக் கோவில்களிலிருக்கும் உற்சவச்சிலைகளின் கணக்குகளைச் சரி பார்த்துச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார் அரசர்.

சோலைவனத்தின் சிவன் கோவிலில் வீரபத்திரனின் தம்பி வீரய்யனே பூசாரியாய் இருந்ததால், அக்கோவிலின் பாதாள அறைக்குக் கோதையை அழைத்துச் சென்று அங்குப் பாதுகாக்கப் பட்டிருக்கும் சிலைகளைக் காண்பித்தான்.

ஒரு ஆண் சிலையும் பெண் சிலையும் கணவனும் மனைவியுமாய்ச் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்வது போன்ற பஞ்சலோகச் சிலையை அங்கே பார்த்தவள், “இவர்கள் சிவநேசன் ஐயாவும் முத்தரசி அம்மாவும் தானே?” எனக் கேட்டாள்.

ஆமென அவர் சொல்லவும், “ஏன் இதை இங்கே தனித்து வைத்திருக்கிறீர்கள். இச்சிலையைக் கோவிலில் மக்கள் வணங்கும் இடத்தில் வையுங்கள்” என்று உத்தரவிட்டாள்.

இதனைக் காட்சியாய்ப் பார்த்திருந்த தாமரை, ‘அன்னிக்கு சோலைவனத்து சிவன் கோவில்ல காணோம்னு சொல்லி நான் தேடினச் சிலை இது தானே! அப்ப இந்தச் சிலை இப்ப எங்கே இருக்கு?’ எனச் சிந்தித்திருந்தாள்‌.

அடுத்து வந்த நல்ல நாளில் கருப்பண்ணனும் கோதையும் அச்சிலைக்கு அபிஷேகம் செய்தவர்களாய் சிவன் கோவிலில் சுற்றுப் பிரகாரத்தில் வைத்தனர். அன்றிலிருந்து இருவருமாய் இணைந்து அன்றாடம் அபிஷேகம் செய்வதை வாடிக்கையாக்கியிருந்தனர்.

நரசிம்மப் பெருமாள் கோவிலிலிருந்த உற்சவச் சிலைகளைக் கருப்பண்ணனே கோதையை அழைத்துச் சென்று காண்பித்தான். கையில் தீப்பந்தம் ஏந்தியவாறு பாதாள அறைக்குச் சென்றவன், அத்தீப்பந்தத்தின் ஒளியிலேயே சிலைகளை மரப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்த போது, ஒரு சிலையிலிருந்து வந்த ஒளியால் அவ்வறைக்குள்ளே தீப்பந்தத்தின் ஒளியைத் தாண்டி பெரும் வெளிச்சம் பரவியது.

பேராச்சரியத்துடன் கண்களை விரித்தவளாய், “எந்தச் சிலையிலிருந்து இத்தகைய தெய்வீக ஒளி வீசுகிறது கண்ணா” எனக் கேட்டாள்.

பொன்மேனிச்சிலையாய் தகதகவென மின்னிய மாதவப் பெருமாளின் பஞ்சலோகச் சிலையைப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்த கருப்பண்ணன், “நான் என் சரசில் சுமக்கும் மாதவப் பெருமாளிடமிருந்து தான் இந்த ஒளி வீசுகிறது கோதை” என்றான்.

மாதவப் பெருமாளின் பஞ்சலோகச் சிலையை அவளிடம் காண்பித்தவனாய், “இங்கே பெருமாளின் கழுத்தைப் பார் கோதை” என்றான்.

அங்கே மாதவப் பெருமாளின் பஞ்சலோகச் சிலையின் கழுத்தில் ஒரு ஓட்டை இருக்க, அதில் பொருத்தப்பட்டிருந்த கல் இவ்வொளியை வீசியிருந்தது.

வியப்பில் மேலும் அவளின் கண்கள் விரிய, “இந்தக் கல்லிலிருந்தா ஒளி வீசுகிறது? என்ன கல் இது? எத்தனை அழகாய் இருக்கிறது? ஆனால் அன்று தங்களின் சிரசில் இருந்த போது இந்த ஒளி வீசவில்லையே ஏன்?” கண்ணைப் பறிக்கும் அழகுடன் ஒளி வீசிய அக்கல்லைப் பார்த்தவளாய் ஆச்சரியத்துடன் கேள்விகளைத் தொடுத்தாள்.

“எம் முன்னோரான வீரசேகரன் அயல் நாட்டினருடன் போர் புரிந்த போது, அவரது வீரத்தைக் கண்டு மெச்சி அயல் நாட்டு அரசர் அவருக்கு அளித்த பஞ்சேந்திர கல் இது! பச்சை நிறத்திலான இக்கல் அரிதினும் அரிதாய் பூமியில் விளையும் கல்! அரிதானவை அனைத்தும் ஆண்டவனுக்கே சொந்தமென எம் முன்னோர் இக்கல்லை பெருமாளின் சிலையில் பொருத்திவிட்டனர். இச்சிலையில் இப்படியொரு விசேஷம் இருப்பது இங்குப் பூசாரியாய் பணிபுரிபவர்களைத் தவிர எவருக்கும் தெரியாது கோதை. நான் என் சிரசில் சுமக்கும் போது, இக்கல் வெளியே தெரியாத அளவிற்கு அவருக்கு ஆடை அணிகலனை அணிவித்து விடுவேன்” என்றான்.

“ஆனால் ஏன் வெளியே தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறீர்?” எனக் கேட்டாள்.

“ஏனென்றால் அரிதினும் அரிதாய் பூமியில் கிடைக்கும் பொருள்களுக்கு மதிப்பு அதிகம் கோதை. அதனுடன் இறையாசியும் இணையும் போது அவை இருக்குமிடத்தில் சௌபாக்கியமும் சகல நன்மைகளும் கிட்டும். இவ்வாறானதை களவாட சிலர் முனையலாம் என்பதால் மறை பொருளாய் வைத்திருக்கிறார்கள் எம் முன்னோர்” என்றவன்,

“இனி இச்சிலையைக் காப்பது எனது இல்லாளான உனது கடமையும் கூட கோதை! அதனால் தான் மாதவனை இன்று உனக்குக் காண்பித்தேன்” என்றான்.

மாதவப் பெருமாள் சிலையைக் கையினில் ஏந்தியவளாய், “நிச்சயமாகக் கண்ணா! கண்ணும் கருத்துமாய் எம் மாதவனை நான் பாதுகாப்பேன்” என்று வாக்களித்தாள்.

நாள்கள் அதன் போக்கில் செல்ல திருமணமாகிய பதின்மூன்றாம் மாதத்தில் மகனை ஈன்றெடுத்திருந்தாள் கோதை.

கோதையின் விருப்பத்திற்கிணங்க, “மாதவக் கண்ணன்” எனக் குழந்தைக்குப் பெயர் சூட்டினர்.

அவளின் மாதவப் பெருமாளையும் கண்ணனான கணவனையும் இருகண்களாய் நினைத்து இப்பெயரை மகனுக்குச் சூட்டினாள் கோதை.

கணவன், மனைவி, மகனுடன் இன்பமாய் வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது, எதிரி நாடான இமையானின் அரசன் இமையேந்திரன், தங்களது நாட்டின் மீது படையெடுத்து வரப் போவதாக ஒற்றன் மூலமாகச் செய்தி வந்தது.

அரசவையில் மன்னர் சிவவைந்தராசன் ஒற்றனிடம், “இமையான் அரசன் நம் நாட்டின் மீது திடீரெனப் போர் தொடுக்க நினைத்ததன் காரணம் என்னவோ?” என வினவினார்.

“சோலைவனத்தின் பூசாரியான செங்கோடனே இதற்குக் காரணம் அரசே” என்று ஒற்றன் உரைத்ததைக் கேட்டு வீரபத்திரனும் கருப்பண்ணனும் ஒருவரையொருவர் புருவத்தை உயர்த்தியவாறு பார்த்துக் கொண்டனர்.

“செங்கோடனா?” அரசர் புரியாது கேட்க,

“ஆமாம் அரசே! சோலைவனத்து மக்கள் செங்கோடனை ஒரு வருடத்திற்கு ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். அதற்குப் பழி வாங்கவென நமது எதிரி நாட்டு அரசனை அவனது சூழ்ச்சிக்குள் சிக்க வைத்து நமது நாட்டின் மீது படையெடுக்கச் செய்திருக்கிறான் அரசே” என்றார் ஒற்றன்.

“ஆனால் நம் ராஜ்ஜியத்தின் மீது போர் தொடுப்பதால் அந்த அரசருக்கு என்ன லாபம்? செங்கோடன் தனது பழி வெறிக்காக நம் எதிரி நாட்டு அரசரை உசுப்பேற்றியிருந்தாலும், அந்த அரசர் இதனை ஒப்புக் கொள்ள ஏதேனும் காரணம் இருந்திருக்குமே! என்ன காரணம் அது? அதனை அறிய முடிந்ததா ஒற்றரே” எனக் கேட்டார் அரசர்.

“நமது நாட்டிலிருக்கும் கலைப் பொக்கிஷங்களையும் கோவில் சிலைகளையும் அவர்களுடையதாக்கிக் கொள்ளவே இந்தப் போர் அரசே!” என்று ஒற்றன் சொன்னதைக் கேட்டு நெஞ்சம் கொதிக்கப் பார்த்துக் கொண்டனர் வீரபத்திரனும் கருப்பண்ணனும்.