அத்தியாயம் 25

“ஏகாதசி விரதம் இருப்பதால், மனத்தின் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். நோய் நீங்கும், வறுமை நீங்கும், செல்வம் சேரும்”

(மாச்சரியம் – பிறர் மீது பொறாமை கொண்டு, கோபம் வெறுப்புடன் வாழ்வது)

“இறைவனை வணங்குவதற்கு உடல் தூய்மையுடன் மனத்தூய்மை மிக முக்கியம். அனைவரிடமும் சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் மீது கோபப்படுவதோ, மற்றவர்களுக்குச் சாபம் வழங்குவதோ கூடாது. பிறரைத் துன்புறுத்தும், அவர்களின் மனம் வருந்தும்படியான எதையும் சொல்லவோ, செய்யவோ கூடாது. என்னைக் கேட்டால் விரத வரைமுறையென வைத்திருக்கும் பல்வேறு விதிமுறைகளிலும் தலையாயது என இவற்றைத் தான் சொல்வேன்” என்று ஏகாதசிக்கான பாராயணம் செய்திருந்தார் நரசிம்மக் கோவிலின் பூசாரி.

கோதைக்கு ஏகாதசி விரதமிருப்பது என்பது புதிதல்ல. நாராயணரை வழிபடும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் நினைவு தெரிந்த நாளிலிருந்து ஏகாதசி விரதமிருப்பவள் அவள்.

அன்று ஏகாதசி என்பதாலேயே அவ்விரதத்தைக் கடைபிடித்தவளாய் பூசாரியின் இந்தப் பாராயணத்தைக் கேட்க வந்திருந்தாள்.

அந்தப் பூசாரியின் பேச்சைக் கேட்டிருந்தவளுக்கு,

“இனி எப்பிறவியிலும் எம் மகளுக்கு நீ மணாளனாக மாட்டாயெனச் சபிக்கிறேன்”

தன்னவருக்குத் தந்தை அளித்த சாபம் மின்னலென மூளைக்குள் வந்து போனது அவளுக்கு.

உடனே உள்ளம் பதறிட, ‘மாதவா.. இதை எப்படி மறந்தே போனேன்! மூன்று மாதங்கள் ஆகியும் தந்தை சாப நிவர்த்தியைப் பற்றி ஏதும் கூறவில்லையே!’ என்று பதைபதைத்தது நெஞ்சம்.

‘நாளையே இதைப் பற்றித் தந்தையிடம் பேச வேண்டும்’ என மனத்திற்குள் குறித்துக் கொண்டவளாய் அங்கிருந்து புறப்பட்டாள்.

தனது குடிலுக்கு வந்த கோதை அன்றிரவு தான் உண்ணாவிட்டாலும், தனது குடும்பித்தினருக்காகச் சமைத்து வைத்திருந்தாள்.

கருப்பண்ணனுக்கு இரவுணவைப் பரிமாறியவளாய் அருகில் அவள் அமர்ந்திருக்க, “அய்யனும் அம்மையும் உண்டு விட்டனரா கோதை?” எனக் கேட்டான் அவன்.

“ம்ம்ம் உண்டப் பிறகு தான் ஏர்களத்தில் காவல் பணி செய்தவாறு அங்கேயே உறங்குவதாகக் கூறிச் சென்றனர் இருவரும்” என்றாள்.

“போதும் கோதை” பாதி உணவை மீதம் வைத்து விட்டு எழுந்தவனாய் கை கழுவ வீட்டின் பின்னே இருந்த அருவியின் ஓடையை நோக்கிச் சென்றான்.

சாம்பல் அருவி நீர், அவர்களின் குடிலுக்குப் பின்னே ஓடையாய் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.

அவன் உண்ட இலையை எடுத்தவள் அவன் பின்னாலேயே சென்றவளாய் மக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் உரைக்குழியில் போட்டு விட்டு அவனருகில் சென்று, “ஏன் பாதி உணவை வைத்து விட்டீர் கண்ணா? நள்ளிரவில் பசிக்கப் போகிறது! நீராகாரமாய் ஏதும் அருந்துகிறீர்களா? சூடாகப் பால் ஆற்றித் தரவா?” என்று கேட்டாள்.

“வேண்டாம் கோதை” என்றவனாய் வீட்டின் பின்னே இருந்த அருவினோடையின் பளிங்கு நீரில் கைக்கழுவினான்.

கையில்லாத மார்பு கச்சையுடன் அவள் அணிந்திருந்த மெல்லிய நூலினாலான சேலைக் குளிரைப் பரப்ப, கைகளைச் சூடேற்ற தேய்த்தவளாய் நின்றவளின் வடிவழகை நட்சத்திர ஒளியில் ரசித்தவனாய் நின்றிருந்தவனின் அருகே சென்றவளாய், “நான் விரதமிருக்கும் நாளெல்லாம் தாங்கள் சரியாகவே உண்பதில்லை கண்ணா. தாங்கள் வயிறார உண்ணும் போது தான் என் மனம் நிறைகிறது. இதனாலேயே திருமணமான நாளிலிருந்து நான் விரதமிருக்கும் போதெல்லாம் உங்களின் வயிற்றையும் காய வைக்கின்றேனே என்று மனம் சஞ்சலப்படுகிறது கண்ணா” வருத்தத்துடன் உரைத்தாள்.

அவளிடையில் சொருகியிருந்த சேலை முந்தானையில் கைகளைத் துடைத்தவனாய்,‌ “நாம் இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் போது மனத்தில் உண்டாகும் நிறைவும் மகிழ்வும் வயிற்றையும் நிறைத்து விடும் கோதை! சாப்பிடும் அளவே தெரியாது உண்பேன். நீ விரதமிருக்கும் நாட்களில் இப்படித் தனித்து உண்ணுவதை என் வயிறும் மனமும் விரும்புவதேயில்லை. அதனாலேயே உணவும் இறங்குவதில்லை” மென்னகையுடன் உரைத்திருந்தான்.

“நான் சிறு வயதிலிருந்தே இந்த விரதத்தை மேற்கொள்கிறேனே கண்ணா” வெற்று மார்புடன் மேலாடையின்றி இடைக்கச்சையுடன் வேட்டி அணிந்திருந்தவனின் கழுத்தில் மாலைப்போல் தனது கைகளைக் கோர்த்தவளாய் அவள் சொல்ல,

“உன்னவருக்காக இருக்கும் விரதத்தை. உன்னவருக்காகவே கைவிடலாம் தானே” அவளை நோக்கிக் குனிந்து நெற்றியில் முட்டியவாறு குமிழ்ச்சிரிப்புடன் கேட்டிருந்தான்.

அவனின் கன்னக்குழியை ரசித்துப் பார்த்தவளாய் தலைக் கவிழ்ந்தவள், “என் விரதத்திற்கான நோக்கமே வேறு கண்ணா” சற்றுத் தயக்கத்துடன் உரைத்தாள்.

“ஓ இத்தனை நாள்களாய் இவையெல்லாம் எனக்காக என்று நான் தான் தவறாய் நினைத்து விட்டேனோ?” அவன் உள்ளம் சுணங்கிய போதும், “வேறென்ன நோக்கம் கோதை?” எனக் கேட்டிருந்தான்.

“சிறு வயதிலிருந்து நான் இந்த விரதத்தை மேற்கொள்ளும் நோக்கம் முக்தி மட்டுமே கண்ணா. வைகுண்டப் பதம் அடைந்து மீண்டும் இப்பூமியில் பிறவாத வரத்தினை வேண்டியே இந்த விரதத்தை மேற்கொள்கிறேன் ” என்றாள்.

“ஓஹோ அப்பொழுது நீ இல்லாது நான் மட்டும் இந்தப் பூமியில் பிறந்தால் யாரை நான் மணம் செய்து கொள்வது கோதை? எனக்காக நீ மீண்டும் பிறவி எடுக்க மாட்டாயா என்ன?” சிரிப்புடன் விளையாட்டாகக் கேட்டிருந்தான்.

சிறுவயதில் இருந்தே மறுபிறவி இல்லா வாழ்வு வாழ வேண்டுமெனச் சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டதினால், ‘மீண்டுமொரு பிறப்பு’ என்றவன் சொன்னதும், ‘எங்கே நடந்து விடுமோ’ என்று இவளின் உள்ளம் அச்சம் கொண்டது.

‘அய்யோ வேண்டவே வேண்டாம்’ என்று எண்ணியவளாய் அவனை விட்டு தள்ளி நின்றவள், “வேறு யாரை வேண்டுமானாலும் மணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்காக இந்தப் பூமியில் நான் திரும்பவும் பிறப்பெடுக்க மாட்டேனப்பா!” என்றாள்.

அவளின் இந்தப் பேச்சில், ‘என்னை யாருக்கு வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்து விடுவாயா? அவ்வளவு தான் என் மீதான உனது அன்பா?’ என்று கோபம் கொண்டவனாய்,

“ஒரு வேளை எனக்கு முக்தி கிடைத்து, நீ மட்டுமே பூமியில் பிறந்தாயானால் வேறொருவரை மணந்து கொள்வாயா கோதை?” சற்றுக் காட்டமாய்க் கேட்டிருந்தான்.

அவனின் கேள்வியில், ‘நாராயணா!’ என்று செவியை மூடிக் கொண்டவளாய், “ஏன் இவ்வாறு கேட்டு என் மனத்தை வதைக்கிறீர்கள்?” அவள் கண்களில் கண்ணீரே வந்து விட, “அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது” என்றாள்.

‘வேறொருவரை மணம் செய்வதைப் பற்றிக் கேட்டாலே இவளுக்கு மனம் வதைப்படுகிறது என்றால் எனக்கு மட்டும் எப்படி இருக்குமாம்?’ என்று நினைத்தவனாய்,

“நடந்தால்” கோபத்துடன் அவளை உசுப்பேற்றவெனவே அழுத்திக் கேட்டான்.

அவன் கேள்வியில் மிகுந்த கோபமுற்றவளாய் அவனருகில் சென்று தீயாய் முறைத்தவாறு, “நடந்தால் என் பெற்றொர் சொல்லும் வரனை மணம் செய்து கொள்வேன். போதுமா! இதோடு நிறுத்துங்கள் இப்பேச்சை” குரல் தழுதழுக்க, அழுகையின் விம்மலுடன் உரைத்திருந்தாள்.

அவளின் பேச்சில் சிரித்தவனாய் தன்னருகே அவளை இழுத்துக் கண்களைத் துடைத்தவன், “என் மீது இத்தனை அன்பை வைத்துவிட்டு ஏன் அவ்வாறு கூறுவானேன். பின் கூறியதற்காக இப்படி வருந்துவானேன்” அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து அமைதிப்படுத்தினான்.

ஆனால் அமைதியடையவில்லை அவளின் மனம்.

தான் அவளை அமைதிப்படுத்தியும் அமைதியடையாது இருப்பதை, படுக்கையில் உறக்கம் வராது அவள் புரண்டிருந்ததில் உணர்ந்தவனாய் அவள் புறம் திரும்பிப் படுத்துக் கண்களை நோக்கியவன், “ஏன் உன் முகத்தில் இத்தனை கலக்கம் தெரிகிறது கோதை? எதை நினைத்துக் கலங்குகிறாய்” எனக் கேட்டான்.

அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் வடித்தவளாய், “அச்சமாய் உள்ளது கண்ணா” தழுதழுத்த குரலில் உரைத்தாள்.

தனது கைவளைவின் அணைப்பில் இருந்த மனையாளைப் புருவத்தை வளைத்து கேள்வியுடன் பார்த்தவனாய், “என்னுடைய ராங்கி ராக்காயிக்கு அச்சமா? ஏனிந்த கண்ணீர் கோதை? என்னாயிற்று? எதை நினைத்துக் கலங்குகிறது உன் மனம் கண்ணே” அவளின் தாடையைப் பற்றிக் கண்ணீரைத் துடைத்தவனாய் கேட்டான்.

“இத்தனை நாள்கள் இல்லாமல் இன்று ஏன் தாங்கள் அவ்வாறு பேசுனீர்? நானும் ஏன் அவ்வாறு உரைத்தேன்? தங்களை யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேனே! நானும் என் பெற்றோர் பார்க்கும் வரனை மணந்து கொள்வேன் என்று உரைத்து விட்டேனே! இத்தனை நாள்கள் இல்லாமல் இன்று ஏன் நான் இவ்வாறு உரைத்தேன்” கலங்கிய குரலில் உரைத்தவள்,

“இந்தப் பிரபஞ்சம் எதையோ உணர்த்த முனைகிறது கண்ணா! தந்தை அளித்த சாபம் தான் நம்மை இவ்வாறு பேச வைத்து விட்டதோ என்று மனம் அச்சம் கொள்கிறது!” பதறிய உள்ளத்தின் உணர்வைத் தாங்கிய முகத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தவாறு உரைத்தாள்.

அவன் முகத்தைக் கைகளில் தாங்கியவளாய், “தங்களின் இடத்தில் என்றுமே என்னால் வேறொருவரை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது கண்ணா! எப்பிறவியானாலும் தாங்கள் எனக்கு மட்டுமே சொந்தம்! தங்களை மனத்தில் வைத்து காதலிப்பதற்கும், தங்களை ஸ்பரிசிப்பதற்கும் தொடுவதற்கும் உணர்வதற்கும் அனைத்துக்கும் எனக்கு மட்டுமே உரிமை உண்டு. தாங்கள் இப்பூமியில் பிறக்கும் போதெல்லாம் நிச்சயமாய் நானும் பிறப்பேன். தங்களை மணப்பதற்காகவே பிறப்பேன். என் உரிமையை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்” விழிநீரால் நனைந்த விழிகளில் காதலும் கோபமும் போட்டிப் போட தனது உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்த மனைவியின் பேச்சில், சிறு பிள்ளை தனது பொம்மையை யாருக்கும் தர மாட்டேன் என உரிமைச் சண்டையிடும் வெள்ளந்தியான பாசமே வெளிப்பட,

அவளின் காதலில் நெகிழ்ந்தவனாய் நெற்றியில் முத்தமிட்டவன், “பல வருடங்களாக முக்தி வேண்டி விரதமிருப்பவள், அதற்காகவே என்னிடம் சண்டையிட்டவள் இப்பொழுது என்னை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன், எனக்காக மீண்டும் பிறப்பெடுப்பேன் என்று உரைத்துக் கொண்டிருக்கிறாய்.

இத்தகைய காதலைத் தாண்டி சாபம் பலித்து விடுமா என்ன கோதை?

நீ வீண் கற்பனை செய்கிறாய் கோதை! உன் தந்தையின் சாபத்தை விட நமது காதல் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. எக்காலத்திலும் அது நம்மை இணைக்கும்” என்றவனாய் அவளின் முதுகை வருடியவாறு ஆறுதல் படுத்தியவன் அப்படியே உறங்கிப் போனான்.

ஆனால் அவன் வருடலிலும் உறக்கம் வராது மனக்கலக்கத்துடன் அப்படியே அவன் மார்பின் மீது படுத்திருந்தவள் ஏதோ தோன்றியவளாய் மெல்ல எழுந்து சாமியறைக்குச் சென்றாள்.

அங்கு அவள் அன்றாடம் வணங்கும் சிவநேசன் முத்தரசி சிலையின் முன்பு சென்று நின்றவளாய், “அரசிமா! எனக்கொரு நல்வழியைக் காண்பியுங்கள்! நான் இத்தனை வருடங்களாக ஏகாதசி விரதம் இருந்து சேர்த்து வைத்திருக்கும் அனைத்து நற்பலன்களையும் இச்சாபம் தீர்வதற்கு அளிக்கச் சித்தமாய் உள்ளேன். எனக்கொரு நல்வழியைக் காண்பியுங்கள்” முத்தரசி சிவநேசனை நினைந்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனத்தோடு எண்ணற்ற முறை கூறியவாறே சாமியறையில் அமர்ந்திருந்தவள் அப்படியே ஆழ்ந்த தியான நிலைக்குப் போனாள்.

அவள் மனக்கண்ணில் காட்சியாய் தோன்றினர் முத்தரசியும் சிவநேசனும். இவளின் உடல் அப்படியே அக்காட்சியைப் பார்த்திருக்க, ஆன்மா முத்தரசி சிவநேசனிடம் பேசியிருந்தது.

அவர்களை நேரில் பார்த்தது போன்ற உணர்வில் உடலில் புல்லரிக்க அப்படியே அவர்களைப் பார்த்திருந்தது அவளின் ஆன்மா.

தான் எதற்காக அவர்களை அழைத்தேன் என்பதைக் கூட மறந்தவளாய், அவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து ரசித்து நின்றவளிடம், “வரமோ சாபமோ ஒரு முறை அளித்து விட்டால், அளித்தவர்களாலேயே அதனைத் திரும்பப் பெற முடியாது மகளே” என்றார் சிவநேசன்.

உடனே கோதையின் கண்கள் கலங்கி விட, “இதற்கு வேறு மார்க்கமே இல்லையா?” எனக் கேட்டாள்.

அவளைப் பார்த்து புன்சிரிப்புடன், “உன்னுடைய முன்னோர்களான எங்களால் அச்சாபத்திற்கான நிவர்த்தி மார்க்கத்தை நல்கமுடியும் கோதை!” என்ற முத்தரசி,

“நீ உனது ஏகாதசி விரதப் பலனை உன்னவருக்கான சாபத்தை நீக்க தாரை வார்த்ததால், எப்பிறவியிலும் உன்னை மணக்க முடியாதென உன்னவருக்கு உன் தந்தை அளித்த சாபத்திற்குத் தீர்வு கிடைத்திருக்கிறது” என்றார்.