யார் கூறுவதை நம்புவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் முருகையன்.
அதன் பிறகு இவ்வழக்கு வேறு வழக்காய் மாறிவிட, அந்தச் சடாமுடி சாமியாரின் சாட்சியத்தை ஏற்றவர்களாய், தனது ஜாதகத்தை மாற்றியளித்து ஏமாற்றி ஒரு பெண்ணை மணம் புரிய முனைந்த குற்றத்திற்காகச் செங்கோடனை ஒரு வருடம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகத் தீர்ப்பு வழங்கியிருந்தனர் வழக்கு மன்றத்தின் பெருமக்கள்.
ஆத்திரம் கொண்டவனாய், “நீங்கள் இருவரும் எப்படிச் சுகமாக வாழ்கிறீர்கள் என்று பார்த்து விடுகிறேன்” என்று கருப்பண்ணனிடம் கோபாவேசமாகக் கத்தியவாறு அங்கிருந்து சென்றிருந்தான் செங்கோடன்.
“அய்யோ இந்தக் கெட்டவனை நம்பி எம் மகளுக்கு நானே சாபமளித்து மாபாதகச் செயலைச் செய்து விட்டேனே! இந்தப் பாவத்தை எங்கே சென்று தீர்ப்பேன் மாதவா!” என்று அழுது கரைந்த முருகையன்,
“உன் தந்தையை மன்னித்து விடு மகளே” என்றவராய் கூனிக் குறுகி அவள் முன் கரம் கூப்பி நின்றார்.
தந்தையின் காலில் விழுந்து வணங்கியவளாய் எழுந்த கோதை, “என்னவரின் கரம் பற்றாது எப்பிறவியிலும் எம் வாழ்வு இன்பமாய் இராது தந்தையே! ஒரு தீங்கும் செய்யாத என்னவருக்குத் தாங்கள் அளித்த சாபத்திற்கு நிவர்த்தித் தாருங்கள்! அதுவே தங்களின் பாவத்தைப் போக்கும் மார்க்கம் தந்தையே” என்றாள்.
மகளின் கூற்றிலிருந்த உண்மையைப் புரிந்தவராய், “மாதவப் பெருமாளுக்கு நோன்பிருந்து பணிவிடைச் செய்து இந்தச் சாபத்திற்கான விமோசனத்தைப் பெற்ற பின் தான் என் உயிர் இந்த உடலை விட்டு போகும் மகளே” என்று அவளுக்கு வாக்களித்தார் முருகையன்.
முருகையனும் நீலாம்பிகையும் பெண்ணை மன்னித்து, இந்தக் களவியல் மணத்தை ஏற்றுக் கொண்ட போதிலும், ஊரார் கூடி கன்னியா தானம் செய்து கற்பியல் திருமணம் நடத்திய பிறகு கோதையைக் கருப்பண்ணனின் இல்லத்திற்கு அனுப்பி வைப்பதாய் உரைத்து கோதையைத் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர்.
இங்கே இக்காட்சிகளைக் கண்டவாறு இருந்த தாமரைக்கு, தனது அப்பாவின் மீது அத்தனை கோபமாக வந்தது. ஆம் அப்பிறவியில் தாயும் தந்தையுமாய் வந்தவர்கள் தான் இப்பிறவியிலும் இவளுக்குப் பெற்றோராய் வந்திருந்தனர். அப்பொழுது செய்த அதே தவற்றைத் தான் இப்பொழுதும் இவளின் தந்தை செய்து அவளை வேறொருவருக்கு மணம் புரிந்து வைத்திருந்தார். இப்பிறவியில் தானும் மாதவனும் இத்தனை தாமதமாகச் சந்தித்ததற்கு இவரின் சாபமே காரணமாகிப் போனதே என்று வருந்திய அதே சமயம், சாட்சி சொன்ன அந்தச் சடாமுடி சாமியார் சென்னையிலும் இங்கேயும் தன்னிடம் வந்து பேசியவரா என்று அவரை உற்று நோக்கியபடி இருந்தாள் தாமரை.
‘இவர் அந்தச் சாமியார் இல்லை’ என்று அவரின் முகச்சாயலை வைத்து உறுதிச் செய்தவளுக்கு, ‘அப்ப எங்ககிட்ட நேர்ல வந்து பேசி எங்களை ஆத்மநல்லூருக்கு வர வச்ச அந்தச் சாமியார் யாரு?’ என்ற கேள்வி எழுந்தது.
*****
செங்கோடனை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததினால் அவனின் அன்னை மேகலை தனித்து இருந்தார்.
கருப்பண்ணனின் தந்தையான பரமன் தங்கை மேகலை மீது கொண்ட கரிசனத்தால், அவரைத் தனித்து இராது தங்களின் இல்லத்தின் அருகே குடிசைப் போட்டு தங்கிக் கொள்ளுமாறு உரைத்தார்.
கருப்பண்ணனுக்குத் தனது அத்தையை அருகில் வைப்பதில் விருப்பமில்லை என்றாலும் தந்தையின் சொல்லிற்காக அமைதிக் காத்தான்.
உயிர் தியாகம் செய்து நரசிம்மர் கோவிலை மாத்திரியர்களிடம் இருந்து காப்பாற்றியது கருப்பண்ணனின் பரம்பரையினர் என்பதால் அப்பொழுது இருந்த அரசர் அக்கோவிலை கருப்பண்ணன் பரம்பரையின் சொத்தாக எழுதிக் கொடுத்து விட்டார். அதன் பொருட்டே இக்கோவிலுக்குப் பணிவிடை செய்தவனாய் செங்கோடன் இக்கோவிலின் முழு உரிமையும் தனக்கு வேண்டுமென முன்பு அரசவையில் வழக்குத் தொடுத்திருந்தான்.
அவ்வழக்கை இப்பொழுது அரசவையில் விசாரித்த அரசர், அவன் ஊராரால் ஒதுக்கி வைத்திருப்பதை அறிந்து, அவனின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தவராய் அக்கோவிலின் உரிமை கருப்பண்ணனின் தந்தை பரமனுக்கே உரித்தானது என்று தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கினால் நின்றிருந்த நரசிம்மர் கோவிலின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கச் செய்திருந்தான் கருப்பண்ணன். கோவில் பணிக்கான செலவுக்கு அரசாங்கம் உதவும் என்றும் கூறியிருந்தார் அரசர்.
நாள்கள் விரைந்தோடிச் செல்ல, அடுத்து வந்த நல்முகூர்த்தத்தில் மாதவப்பெருமாள் கோவிலில் அவர்களது பெற்றோர், ஊரார் புடைச்சூழ கற்பியல் மணம் புரிந்து கொண்டனர் கருப்பண்ணனும் கோதையும்.
களவியலில் ஈடுபடுவோர், களவு வெளிப்பட்ட பின் பலர் அறியத் திருமணம் செய்து இல்வாழ்க்கைக்குரிய நெறிகளைக் கற்பித்துக் கொண்டு, அவற்றுக்கு ஏற்ப வாழத் தொடங்கும் இல்லற வாழ்வே கற்பியல் எனப்படும்.
கணவன் மனைவியாய் அத்தகைய கற்பியல் இல்லற வாழ்வை வாழத் தொடங்கினர் கருப்பண்ணனும் கோதையும்.
மகிழ்வும் நெகிழ்வுமாய்க் கருப்பண்ணனின் மனைவியாய் அவனின் கரம் பிடித்துக் கூம்பு வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்த அவனது குடிலுக்குள் அடியெடுத்து வைத்தாள் கோதை.
அக்குடிலுக்குள் நான்கு நபர்கள் தங்கக் கூடிய அளவில் விசாலமான அறைகள் இருந்தன. வெளியே இருந்து பார்க்க சிறியதாய் தெரிந்த அக்குடில், உள்ளே இத்தனை அறைகளுடன் விசாலமாய் வடிவமைக்கப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்வையிட்டவளை தங்களது அறைக்குள் அழைத்துச் சென்றவனாய் அவளது விரிந்த விழியின் மீது முத்தமிட்டிருந்தான் கருப்பண்ணன்.
“இனி என் முன் இப்படி விழிகளை விரித்துப் பார்க்காதே கோதை! என்னை ஈர்க்கும் அந்தக் காந்த கண்களை முழுங்கி விட வேண்டுமென ஆர்ப்பரிக்கிறது நெஞ்சம்” என்றவனாய் அவளது முகத்தில் முத்த ஊர்வலம் மேற்கொள்ள, தன்னைச் சிலிர்க்கச் செய்யும் அவனின் செயலில் உருகியவளாய் அவனைத் தழுவின அவளின் கரங்கள்.
“இன்றைய பகல் ஏன் இத்தனை நீளமாகச் செல்கிறது கோதை” காதல் போதையேறிய கண்களுடன் அவளை நோக்கியவனாய் கூறியவன், “உன்னை முழுதாய் உணரப் போகும் இரவுக்காகக் காத்திருக்கிறேன்” இதழில் இதழை புதைத்து நீண்ட முத்தமிட்டவனாய் அவளையும் அவ்விரவிற்காக ஏங்க வைத்து விட்டு விலகிச் சென்றிருந்தான்.
‘காட்டான்.. காட்டான். பாதியிலேயே விட்டு போவதைப் பார்!’ என்று முனகியவளாய் நகர்ந்தவள், ‘இரவு வரட்டும். நாராயணா.. மாதவா.. என்றிருந்தவளை எப்படி மாற்றி வைத்திருக்கிறீர் பாரும் என்று புகாரளிக்கிறேன்’ நாணத்தோடு இயைந்த புன்னகை முகமாய் மனத்திற்குள்ளேயே அவனை அன்பாய் வசைப்பாடியவாறே பகல் பொழுதை கடத்தியிருந்தவள் இரவில் அவன் அணைப்பிற்குள் தன்னையே மறந்து போனாள்.
அதீத காதலின் உயர்நிலையை அணுஅணுவாய் தானும் உணர்ந்து அவளையும் உணரச் செய்து மெய்சிலிர்க்கச் செய்தவனாய் இவ்வாழ்வின் முழு இன்பத்தையும் அவ்விரவில் வாரி வழங்கியிருந்தவன் தனது அணைப்பிற்குள்ளேயே அவளை உறங்க வைத்திருந்தான்.
அடுத்து வந்த நாள்கள் எல்லாம் இவ்வுலகிலேயே தாங்கள் தான் மகிழ்வானவர்கள் என்று பறைச்சாற்றும் வண்ணம் சென்றிருந்தது அவர்களின் வாழ்க்கை.
தந்தை தனக்களித்திருந்த சாபத்தைக் கூட மறந்தவளாய் மகிழ்வுடன் வாழ்ந்திருந்தாள் கோதை.
திருமணத்திற்குப் பின் முதல் தடவையாக அரசாங்க காவல் பணிக்காக ஒரு வாரம் அங்கே அவன் தங்க வேண்டியதாகி விட, அவன் மீண்டும் வீட்டிற்கு வந்த அன்றிரவு, படுக்கையில் படுத்திருந்தவனின் மார்பில் நாடியை வைத்து அவனை ரசித்துப் பார்த்தவளாய்,
“தங்கள் மீது எண்ணற்ற புகார்கள் வைத்திருக்கிறேன் கண்ணா” சிணுங்கல் குரலில் உரைத்தாள்.
அவளின் மதிவதனத்தை அதில் தனக்காய் வெளிப்படும் முகப்பாவங்களை ஆசையாய் ரசித்துப் பார்த்தவனாய், “என்ன புகாராம் என் மனைவிக்கு என் மீது?” எனக் கேட்டான்.
“தாங்கள் காவல் பணியென வந்து விட்டால் என்னை மறந்து விடுகிறீர்! பல நாள்கள் வீட்டிற்கே வராமல் இருந்து விடுகிறீர்! தாங்கள் வீட்டிற்கு வராத நாள்களில் பார்க்கும் பொருள்களில் எல்லாம் தங்களை உணர்ந்து தங்களின் நினைவுடனேயே பித்தாகித் திரிகிறேன். ஆனால் தாங்களோ என்னை மறந்தே போய் விடுகிறீர். என் மீது தங்களுக்கு அன்பு குறைந்து விட்டதோ என்று ஐயம் கொள்கிறது மனம்” அவனது மார்பில் முகத்தைப் புதைத்தவாறு படுத்திருந்தவளாய் உரைத்தவளின் கண்ணீர் அவனது மார்பை நனைத்தது.
அவளது முகத்தை நிமிர்த்திக் கண்களைத் துடைத்து நெற்றியில் முத்தமிட்டவனைக் கூரிய விழிகளால் குற்றம் சுமத்தும் பார்வை பார்த்தவளாய், “இந்தப் பாசாங்கு எல்லாம் வேண்டாம். உமக்கு என் மீது காதல் இருக்கிறதா இல்லையா கூறும். இந்தப் பசலை நோயெல்லாம் பெண்களுக்குத் தானா? ஆண்களை அந்நோயெல்லாம் தாக்கவே செய்யாதா? பாரும் தங்களின் பிரிவினால் என் இடை எப்படி மெலிந்து விட்டது என்று! ஆனால் தாங்களோ அப்படியே இருக்கிறீர்?” என்று உரைத்தவளின் மெல்லிய இடையை இறுக்கி அணைத்து அவளிதழில் ஆழ்ந்த முத்தமிட்டு விலகியவன்,
“என் அன்பு குறைந்து விட்டதா? எனக்குப் பசலை நோய் வாட்டவில்லையா? என் பிரிவின் வாதையையும், என் நோயின் வாட்டத்தையும், என் அன்பின் ஆழத்தையும் உனக்கு உணர்த்தவா கண்ணே?” என்றவனாய் அவளுள் மூழ்கினான்.
அவள் உடலிலிருக்கும் அத்தனை இன்ப நாளங்களையும் மீட்டி இன்புறச் செய்தவனாய் முன்னேறியவன் அவளின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டித் தீண்டி வேறொரு உலகிற்கு அழைத்துச் சென்றவனாய் அவளுள் மூழ்கித் திளைத்தவனின் உடலின் நிறைவில், மனதும் நிறைய அவளின் நெற்றியில் முட்டியவாறு அவளருகே படுத்தவனாய், “ஏதோ புகாரளிக்க வேண்டும் என்றாயே! எங்கே கூறு” என்று கேலிச் சிரிப்புடன் கேட்டான்.
“ஹான் என்ன கூற வேண்டும்” தன்னையே மறந்த நிலையில் இன்பத்தைச் சுகித்திருந்தவள் அவனின் கேள்வியே புரியாது விழிக்க வாய்விட்டுச் சிரித்தவனாய், “உன் கண்ணனை உணர்ந்து கொண்டாயா கோதை?” எனக் கேட்டான்.
விரிந்திருந்த அவன் கரத்தினில் தலை வைத்து அவனது கழுத்தில் முகம் புதைத்தவளாய் நாணத்துடன் மென்மையான குரலில், “தங்களை உணர்ந்ததில் என்னை நானே மறந்து விட்டேன் கண்ணா! என் உடலின் ஒவ்வொரு அணுவிலும் தித்திப்பாய் தங்களை உணர்கிறேன் கண்ணா” என்றாள்.
ஊடலும் கூடலுமாய் இல்லற வாழ்வின் அத்தனை இனிமையினையும் உணர்ந்து வாழ்ந்திருந்தனர் கருப்பண்ணனும் கோதையும்.
தன்னை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லையெனக் கோதை கூறிய புகாருக்கு ஒரு வழி கண்டுபிடித்தவனாய், அரசரிடம் பேசி கோதைக்கும் அரண்மனையில் பணியை வாங்கிக் கொடுத்தான்.
கோதைக்குக் கணக்கு தெரியும் என்பதால் அவளை ஆலய நிர்வாகக் கணக்கராய் நியமித்தார் அரசர். அதனால் நரசிம்மப் பெருமாளின் கட்டுமான பணியினையும் அரசாங்க அதிகாரியாய் இவளே மேற்பார்வை பார்த்தாள்.
அரசாங்கப் பணியாளரான பிறகு அவளின் நேரத்திற்காக இவன் காத்திருக்க வேண்டியதாகிப் போனது.
வாழ்க்கை மகிழ்வாய்ச் சென்றிருந்த பொழுதில் ஒரு நாள் அவள் தந்தையின் சாபத்தை நினைவுறுத்துவதாய் நடந்தேறியது அந்நிகழ்வு!
அன்று ஏகாதசி!
அவள் குடிலிலிருந்து சில மைல் தூர நடையில் இருந்த பிரகலாதப் பெருமாள் கோவிலின் கட்டுமானம் நிறைவடையும் நிலையில் இருந்தது.
அக்கோவிலின் பூசாரியாக நியமிக்கப்பட்டிருந்தவர், தன்னைச் சுற்றி அமர்ந்திருந்த மக்களுக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி உரைத்துக் கொண்டிருந்தார். அம்மக்களுள் ஒருவராய் அமர்ந்திருந்தாள் கோதை.