அத்தியாயம் 22

கோதை ஆற்றங்கரையில் யாருமற்ற தனிமையில், ஆற்று மணலில் வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தவனின் மார்பினில் தாடையைப் பதித்து அவன் முகத்தை நோக்கியவளாய் படுத்திருந்தாள் கோதை.

“நான் இவ்வாறு களவியலில் ஈடுபடுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை கண்ணா” என்றாள்.

“களவியலா? அப்படியென்றால்” தெரிந்தும் தெரியாதவன் போல் கேட்டிருந்தான்.

“அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது. ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் இல்லறத்தின் பயனால் அவ்விருவரையும் ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்தும், பிரித்தும் வைப்பதுமான இருவகை ஊழ்வினை உண்டு. அவற்றுள் நல்லூழின் ஆணையால் அன்பு, நிறை, அருள், உணர்வு என்னும் தெய்வீகப் பண்புகளுடன் இருக்கும் ஓர் ஆணும், பெண்ணும் கண்டு காதல் வயப்படுவதே களவியல். இதில் தலைவன் தலைவியுடன் ஒத்த பண்புடையனாகவும் பெரியோனாகவும் இருத்தல் வேண்டும். நம் நல்லூழின் பயனால் தான் தங்களைக் கண்டு காதல் வயப்பட்டேன் கண்ணா” நாணத்துடன் தலைக் கவிழ்த்தவளாய் உரைத்தவளின் தாடையைப் பற்றி அவளின் கண்களில் தனக்காய் வெளிப்படும் காதலினை நோக்கியவனாய்,

“நானும் தான் கன்னியின் கடைக்கண் பார்வையில் வீழும் காளையனாய் மாறுவேன் என்று நினைத்ததில்லை. என் வாழ்வில் என்றுமே வில் அம்போடு மட்டும் தான் போரிடுவேன் என்று எண்ணியிருந்தவனை உனது விழியெனும் அம்பெய்தி காதல் போரிடச் செய்தவள் நீ” என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் முகத்தைத் தழுவிய கண்கள் அவனது மேனிக்குள் உலவி ரசிக்க, “உனக்கேற்றவனாய் இருக்கிறேனா?” அவளின் ரசனைப் பார்வையைக் கண்டு கேட்டான்.

“தாங்கள் எப்படி இருந்தாலும் தங்களைக் கண்டுணருவது எனக்குப் பிடிக்கும். காதல் மனத்திற்குத் தன்னவரை கண்டுணர்ந்து ரசிப்பதில் தான் பேரின்பம்” என்றவளாய் எழுந்தவள் ஆற்று நீரில் கால்களை நனைத்தவாறு அமர,

“உன்னை எம் கரம் கண்டுணரும் காலத்திற்காய்க் காத்திருக்கிறேன் கண்ணே” என்றவனாய் குமிழ்ச் சிரிப்புடன் அவனும் எழுந்து அமர்ந்தான்.

அவனது சிரிப்பினால் உண்டான கன்னக்குழியை ரசித்தவாறு பார்த்தவளின் முகம் சட்டென இறுக, அவனது இடையில் இருந்த வாளை உறுவியவளாய் தண்ணீரினுள் சுழற்றினாள்.

திடீரென்ற எதிர்பாரா இச்செயலில் திடுக்கிட்டவனாய் அவளையும் நீரையும் பார்க்க, நீரினுள் சிகப்பாய் இரத்தம் கலப்பதைக் கண்டு பதறியவாறு, வாளின் மீதும் படிந்திருந்த ரத்தக்கரையையும் பார்த்தவனாய் அவளிடம், “என்னாயிற்று கோதை?” என வினவினான்.

நீரிலிருந்து வாளின் முனையைத் தூக்கியவள் அதில் சுருண்டு செத்துக் கிடந்த பாம்பை, வாளைச் சுழற்றித் தூக்கி எறிந்தவளாய், “நீரில் மிதந்து வந்த பாம்பு என் காலைச் சுற்றிவிட்டது கண்ணா. என்னைக் காத்துக் கொள்ளப் பாம்பை கொல்ல வேண்டியதாகி விட்டது” என்றவள் ஆற்று நீரில் வாளைக் கழுவி அவனது இடையில் சொருகினாள்.

அவளின் பேச்சைக் கேட்டவனின் கண்கள் பெருமையில் பொலிவுற, “உனது நாண முகத்தை விட இந்த வீர முகம் எம்மை வெகுவாய்க் கவர்கிறது பெண்ணே. இவ்வீரனுக்கேற்ற வீரத்திருமகளாய் ராங்கி ராக்காயியாய் உன்னைக் காண்பதில் பேருவகைப் பொங்குகிறது என்னுள்” பெரும் மகிழ்வும் பூரிப்புமாய் அவளின் கன்னத்தில் இதழ் பதித்திருந்தான். சட்டென நாணத்தில் தாழ்ந்து போனது அவள் முகம்.

கிடைக்கும் நேரத்தில் கிடைத்தற்கு அரியவர்களாகத் தங்களது இணையரைச் சந்திக்கும் இக்களவுக் காலம் என்பது இருவரின் இதயமும் அன்புவயப்பட்டு இன்பத்தின் உச்சத்தில் மனம் உலவும் பேரின்பக்காலம். அந்நிலையில் தான் இருந்தனர் கருப்பண்ணனும் கோதையும்.

மேலும் சில மணி நேரம் பேசியிருந்தவர்களாய் பிரியாவிடை பெற்று கிளம்பியிருந்தனர் இருவரும்.

கருப்பண்ணனுடனான சந்திப்பைச் சிந்தித்துப் புன்னகை முகமாய்க் கனவுலகில் சஞ்சரித்தவாறே வீட்டிற்குச் சென்றவள், “செங்கோடன் நல்லவன் நீலா” என்ற தந்தையின் பேச்சில் அப்படியே வாசலிலேயே நின்று விட்டாள். முகத்தில் இருந்த மகிழ்வு முற்றாய் வடிய அவளின் உள்ளம் அதிவேகமாய்த் துடித்திருந்தது.

“செங்கோடன் மிகுந்த பக்திமான். விடியற்காலையிலேயே எழுபவன், கோவிலில் நரசிம்மப் பெருமாளுக்குப் பூசை செய்த பிறகே அவனது கொல்லன் பணியைத் தொடர்கிறான். அன்றாடம் என்னைச் சந்தித்து அத்தனை குணமாக நடந்து கொள்கிறான். அவன் அதிர்ந்து பேசி இது வரை கண்டதில்லை. பேச்சில் நாராயணப் புராணமே மிகுதியாய்த் தெறிக்கிறது. இருவரின் ஜாதகமும் மிகுதியாய்ப் பொருந்துகிறது. பின்பும் ஏன் நம் மாப்பிள்ளைக்குச் செங்கோடனைப் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை எனக்கு. நம் மாப்பிள்ளைக்குக் கோதையை அவரது தோழரான கருப்பண்ணனுக்கு மணம் முடித்து வைக்க விருப்பம் போல! அதனாலேயே அவர் செங்கோடன் மீது பழிச்சொற்கள் கூறுகிறாரோ என்று தோன்றுகிறது” நீலாம்பிகையிடம் பேசியிருந்த முருகையனின் பேச்சைக் கேட்டவாறு வாசலில் நின்றிருந்த கோதையின் நெஞ்சம், ‘எங்கே தந்தை தன்னை வற்புறுத்தி செங்கோடனுக்கு மணம் முடித்து வைத்திடுவாரோ’ என்று அச்சம் கொண்டது.

“வைகாசி தான் கோதைக்கு மணமுடிக்க, கோள்கள் கூடிவரும் காலம். வைகாசி மாதத்திற்கு இன்னும் இரண்டு முழு மாதங்கள் இருக்கின்றன. அது வரை அவளின் திருமணத்தைப் பற்றிப் பேசாது ஒத்திப் போடலாம் என்றிருக்கிறேன்” என்றவர் சொன்னதும் தான் இவள் நெஞ்சம் இயல்பாய்த் துடித்திருந்தது.

வீட்டிற்குள் சென்றவள் நேராகப் பூஜையறையினுள் உள்ள சிவநேசன் முத்தரசி சிலையின் முன்பு சென்று நின்றாள்.

“அரசிமா! என்ன நடக்கிறது இங்கே? கருப்பண்ணனும் நானும் தான் இணையராக வாழப் பிறந்தவர்கள் என்றால் ஏன் என் தந்தையின் கணிப்பில் அது அகப்படவில்லை. ஏதேனும் செய்து என் தந்தையின் மனத்தைக் கருப்பண்ணன் நோக்கி திசைத்திருப்பி விடுங்களேன். வேறொருவருடன் மணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே உள்ளம் பதறுகிறது. எம் கண்ணனை தவிர வேறு எவரிடத்திலும் என் சிரம் தாழ்ந்து மாலை வாங்காது. அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் அது என் சவத்திற்குத் தான் நடக்கும்” என்றவளாய் விழிநீரைத் துடைத்து விட்டு தனதறைக்குள் சென்று விட்டாள்.

அடுத்த வந்த நாள்களில், கருப்பண்ணனே தனது மணாளனாக வேண்டுமென முத்தரசியிடம் வேண்டிக் கொண்டு அவளை நோக்கி தீவிர விரதத்தைக் கடைப்பிடித்தாள் கோதை.

******

நரசிம்மப் பெருமாள் கோவிலில் நடைபெறவிருக்கும் பங்குனி உத்திர திருவிழாவிற்காக வீரபத்திரனின் இல்லத்திற்கு வந்திருந்தனர் கோதைக் குடும்பத்தினர்.

காலை அவ்விடத்தை அடைந்தது முதல் கருப்பண்ணனைக் காண ஆவலும் ஏக்கமுமாய்க் காத்திருத்தது கோதையின் நெஞ்சம். ஆனால் அவள் கண்ணில் அகப்படவேயில்லை அவன்.

அத்திருவிழா சோலைவனத்தினருக்கு மாபெரும் பண்டிகைக் கொண்டாட்ட விழா என்பதால் அவ்வூரினருக்கு அரசாங்க விடுப்பைப் பிரகடனப்படுத்தியிருந்தார் அரசர். ஆக கருப்பண்ணன் பணிக்குச் சென்றிருக்க மாட்டானென அறிந்தவளாய் அவனுடன் இன்றைய பொழுதை கழிக்கலாம் என்று மகிழ்வுடன் வந்திருந்தவளின் கண்களில் சிக்காமல் தவிக்க விட்டிருந்தான் கருப்பண்ணன்.

கருப்பண்ணனை நினைத்தவாறே அன்றைய நாளின் திருவிழா நிகழ்வில் கலந்து கொண்டவள், இரவு நேர இறையாட்டத்தைக் காண கையில் தீப்பந்தத்துடன் தோழியர் புடைச்சூழ நரசிம்மக் கோவிலை நோக்கி நடந்திருந்த நேரம், “கோதை, இது தானே நீ முதல் முறையாகப் பார்க்கப் போகும் இறையாட்டம்?” எனக் கேட்டாள் அவளின் தோழி ஒருத்தி.

கருபண்ணனை எண்ணிச் சிந்தனைவயப்பட்டவளாய் வந்திருந்தவள் தோழியின் இக்கேள்வியில், “ஹான் என்ன கேட்டாய் வள்ளி?” என்றாள்.

“இது தானே நீ பார்க்கப் போகும் முதல் இறையாட்டமெனக் கேட்டேன்” என்றாள் கருப்பண்ணனின் தூர உறவினளான வள்ளி.

“ஆமாம் வள்ளி! அக்காவை இங்கே மணமுடித்துத் தந்த பிறகு தான் சோலைவனத்தில் நடைபெறும் விழாக்களில் பங்குக் கொள்கிறோம். அதற்கு முன்பு இங்கே வந்ததில்லை. மாதவப் பெருமாள் கோவிலின் நிகழ்வுகளில் தான் பங்கெடுத்துக் கொண்டிருப்போம்” என்றவள்,

“சாமானியன் மீது இறைசக்தி இறங்கி ஆடுவது தானே இறையாட்டம். மாதவப் பெருமாள் கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை இறைவனின் புராணத்தைப் பாடி ஆடுவதைக் கண்டிருக்கிறேன்” என்றாள்.

“இங்கே இறைவனின் புராணத்தைப் பாடி ஆட மாட்டார்கள். இறைவனையே தூக்கிக் கொண்டு ஆடுவர்” என்றாள் வள்ளி.

“நரசிம்மப் பெருமாளையா தூக்கிக் கொண்டு ஆடுவார்கள்?” என்று கோதை வினவியதற்கு,

“இல்லை மாதவப் பெருமாளின் பஞ்சலோகச் சிலையைத் தான் தூக்கிக் கொண்டு ஊர்வலம் செல்வர்” என்றாள் வள்ளி.

“என்னது மாதவப் பெருமாள் சிலையா? ஆனால் நரசிம்மர் கோவிலில் எப்படி மாதவப் பெருமாள் சிலை? இந்தத் திருவிழாவிற்கு முதல் நாள் மாதவப் பெருமாள் கோவிலில் இருந்து உற்சவ சிலையை இங்குக் கொண்டு வைப்பார்களா? ஆனால் இப்படி ஓர் ஐதீகத்தை மாதவப் பெருமாள் கோவிலில் இது வரை நான் பார்த்ததில்லையே” சிந்தித்தவாறே வினவினாள் கோதை.

“முன்பொரு முறை நம் நாட்டின் மீது மாத்திரியர்கள் படையெடுத்து வந்த போது மாதவப் பெருமாள் கோவிலைக் கைப்பற்றி, முன்மண்டபங்கள் சிலவற்றைச் சேதப்படுத்தத் தொடங்கியதும், அவர்களிடமிருந்து மாதவப் பெருமாள் உற்சவ விக்கிரகத்தைக் காப்பாற்றவென மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து சுரங்கப் பாதை வழியாக நரசிம்மப் பெருமாள் கோவிலுக்குச் வந்து அங்கே மாதவப் பெருமாள் உற்சவ சிலையைப் பதுக்கி வைத்தனர். இச்சிலையைக் காப்பாற்றவென மாத்திரியர்களிடம் போரிட்டு மாண்டனர் கருப்பண்ணன் பரம்பரையினர். அன்றிலிருந்து கருப்பண்ணின் பரம்பரையினர் இச்சிலையைப் பாதுகாக்கும் பொறுப்பையேற்று காத்து வருகின்றனர்” என்று வள்ளி கூறியதும்,

“மாத்திரியர்களா? யார் அவர்கள்? அவர்கள் ஏன் கோவிலைச் சிதைக்க நினைத்தார்கள்” எனக் கேட்டாள் கோதை.

“மாத்திரியர்கள் அயல்நாட்டில் வாழும் ஓர் இனக்குழுவினர். இறை எதிர்ப்பாளர்களான அவர்கள் இறைபக்தியே மக்களை முட்டாளாக்குகிறது என்று நம்புபவர்கள். அதனாலேயே கோவிலையும் அங்கிருக்கும் சிலைகளையும் சேதப்படுத்தி அவ்விடத்தை காட்சியகங்களாய் மாற்றி விடுவர்” என்று வள்ளிச் சொல்லி முடித்த சமயம், சிவன் கோவிலைத் தாண்டி கருப்பண்ணசாமி சிலையை அடைந்திருந்தனர் பாங்கியர் கூட்டம்.

அங்கே தலையில் மாதவப் பெருமாள் சிலையை வைத்துக் கொண்டு கருப்பண்ணசாமியாய் கண்களில் ஆவேசம் பொங்க, நிலம் அதிர ஆடிக் கொண்டிருந்த கருப்பண்ணனைப் பார்த்து அதிர்ந்து நின்று விட்டாள் கோதை.

தலையில் நீண்டிருந்த தலைமுடியை உச்சிக் கொண்டையிட்டுத் தலைப்பாகைக் கட்டி, கைகளில் வெள்ளி காப்புகளும், கால்களில் தண்டையும் அணிந்து, உடல் முழுவதும் சந்தனமும் சவ்வாதும் பூசியவனாய் கருப்பண்ணசாமியாகவே காட்சி கொடுத்தவாறு ஆவேசமாய் ஆடியிருந்த கருப்பண்ணனைப் பார்த்துப் பேச்சற்று நின்றிருந்தாள் கோதை. உடலெல்லாம் புல்லரித்துப் போனது அவளுக்கு. ‘கருப்பா’ என்று உதடுகள் உச்சரிக்க, தன்னிச்சையாய் அவளின் கைகள் எழுந்து அவனைக் கும்பிட்டன. அத்தனை அற்புதமான இறையருளை அவனிடம் உணர்ந்தாள்.

“இந்தச் சிலையை இங்கே பன்னிரண்டு வருடமாகப் பதுக்கி தான் வைத்திருந்தார்கள் கோதை. இப்படியொரு சிலை இங்கே உள்ளே ஒரு அறையில் பதுங்கி இருக்கின்றது என்றே மறந்திருந்த பொழுதில் ஒரு நாள் கருப்பண்ணன் பரம்பரையினர் ஒருவர் மீது வந்த கருப்பண்ணசாமி, மாதவப் பெருமாள் சிலை இங்கே பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை உரைத்து, திருவிழா நடத்தி சிலைக்கு உயிரூட்டுமாறு உரைத்தார். இனி ஒவ்வொரு வருடமும் நடக்கும் இத்திருவிழாவில் பெருமாளின் காவலனாய் இந்தக் கருப்பண்ணசாமி இந்தப் பரம்பரையினர் மீது வந்திறங்கி தலையில் தூக்கி வைத்து ஊர்வலம் சென்று வருவேன் என்றும் கூறினார்! அன்றிலிருந்து தான் இந்த இறையாட்ட நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கருப்பண்ணன் பரம்பரையினர் ஒருவர் மீது கருப்பண்ணசாமி இறங்கி ஊர்வலம் செல்வதும் தொடர்ந்து நிகழ்கிறது” என்றாள் வள்ளி.

“இறைசக்தியிறங்கும் ஒருவரை மணாளனாய் பெற என்னே தவம் செய்தேன் மாதவா” பூரிப்பும் நெகிழ்வுமான மனத்துடன் உரைத்தவளாய் கருப்பண்ணனை வணங்கி நின்றாள் கோதை.

இக்காட்சியினைக் கண்டவாறு தியானத்திலிருந்த தாமரை மற்றும் மாதவனின் உடல்களும் புல்லரித்திருந்தன.

‘என்னோட பிறவியின் நோக்கமே இந்தச் சிலையைக் காப்பாத்துறது தானா? ஆனால் இப்படியான தெய்வீகத் தன்மையுடைய நான் எப்படி இந்த பிறவியில இதுக்கு சம்பந்தமே இல்லாத வேறொரு ஆளா வேறொரு இடத்துல பிறந்திருக்கேன்’ எனச் சிந்தித்தவாறு தியானத்தில் இருந்தான் மாதவன்.

‘இந்தச் சிலையைத் தானே இப்ப நான் மாதவப் பெருமாள் கோவில்ல பார்த்தேன். இந்தச் சிலை எப்படி நரசிம்மர் கோவிலருந்து மாதவப் பெருமாள் கோவிலுக்குப் போச்சு’ என்ற கேள்வியுடன் அடுத்து வந்த காட்சிகளைப் பார்த்திருந்தாள் தாமரை.