Advertisement

அத்தியாயம் 1

 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.

 

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சி வாயவே நானறி விச்சையும்

நமச்சி வாயவே நாநவின் றேத்துமே

நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

 

ஒரு பிரதோஷ தினத்தில் அழகியநல்லூரில் அமைந்திருந்த அந்த சிவன் கோவிலில், பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்துக்க கொண்டிருக்க, ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த  சிவனடியார் தன் வெண்கலக்குரலால் மேற்கொண்ட பதிகத்தை சத்தமாக பாடிக் கொண்டிருக்க, அந்த இடம் முழுவதும் பக்திமணம் வீசிக் கொண்டிருந்தது. அங்கே இறைவனுக்கு அருகில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய, அந்த ஆதிசிவத்தை பக்தி பரவசத்தோடு கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தனர் அங்கே நின்றிருந்தவர்கள்.

 

அங்கே இறைவனுக்கு வலதுபுறத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் வேண்டிக் கொண்டிருந்தாள் அவள். முகம் மிகவும் பரிட்சையமாக தோன்ற உற்று பார்க்க தாமரை செல்வி தான். அவளோடு சுற்றிக் கொண்டிருந்த தோழி கணவனோடு இப்போது சுற்றிக் கொண்டிருக்க தனித்து விடப்பட்ட இவள் இறைவனை நாடி இருந்தாள்.

நீண்டநேரமாக இறைவனை தொல்லை செய்திருக்க போதும் என்று முடிவெடுத்தவளாக, அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவள் பிரகாரத்தை சுற்றி வர ஆரம்பித்தாள். ஒன்பது முறை அவள் வளம் வந்து முடித்து நிற்கவும் இறைவனுக்கு அபிஷேகம் முடிந்து ஆராதனை காட்டவும் சரியாக இருக்க, கையெடுத்து கும்பிட்டவள் பின் விலகிவந்து குளத்தின் கரையில் அமர்ந்துக் கொண்டாள்.

 

அந்த குளத்தில் இந்த ஆண்டு பெய்திருந்த மழையின் விளைவாய் மீன்கள் நன்றாக வளர்ந்து நீந்திக் கொண்டிருக்க, பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது அந்த காட்சி. அதை ரசித்துக் கொண்டே அமர்ந்துவிட்டவள் தன் கையிலிருந்த பொறியை அவ்வப்போது குளத்தில் வீசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு துணையாக யாரும் இல்லாமல் இருக்க தனித்தே வந்திருந்தாள் கோவிலுக்கு.

 

இப்போதும் யாரும் அருகில் இல்லாமல் போக, அந்த மீன்களுடன் உறவாடிக் கொண்டிருந்தவள் நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருக்க அவள் அருகில் வந்து அமர்ந்தார் அவளின் தந்தை மாணிக்கம். அவரை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் அவள் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்துவிட, அவள் கோபத்தை புரிந்து கொண்டவர்

 

” அம்மாடி. நான் என்னடா பண்ணட்டும். பணம் வாங்க போன இடத்துல அந்த வேலு என்னை உட்காரவைச்சிட்டு பக்கத்துல எங்கேயோ போய்ட்டான். அங்க காத்திருக்க வேண்டியதா போச்சு. அதான் உன்னை கூப்பிட வர கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சிடா. கோவிக்காத கண்ணா ” என்று அவர் விளக்கம் கொடுக்கவும்

 

” போங்கப்பா. எப்பவும் இதேபோல தான் பண்றிங்க. நானாவது வீட்டுக்கு போய் இருப்பேன். வரேன்னு சொல்லி இத்தனை நேரம் உட்கார வச்சிட்டிங்க” என்று அவள் செல்லமாக கோபித்துக் கொள்ளவும்,

 

” சரிடா கண்ணா. வீட்டுக்கு கிளம்புவோம். இன்னும் தாமதமா போனா உன் அம்மா ஆரம்பிச்சிடுவா” என்று பயந்தவர் போல் சொல்லவும், சிரித்துக் கொண்டே அவருடன் கிளம்பினாள் அவள். மாணிக்கம் அவரின் புல்லட்டை கிளப்ப, அவருக்கு பின்னால் ஒருபக்கமாக தாமரை அமர்ந்து கொள்ளவும் வண்டியை கிளப்பினார் அவர்.

மாணிக்கம் அந்த ஊரின் முக்கிய புள்ளிகளில் ஒருவர் என சொல்லும் அளவுக்கு அந்த ஊரில் மட்டுமில்லாமல் அக்கம்பக்கத்து ஊர்களிலும் செல்வாக்கு பெற்றவர். பரம்பரை தொழிலாக அரிசி மில்லும், சர்க்கரை ஆலையும் இருக்க, இவரின் தாத்தா காலம் தொட்டே விவசாயக் குடும்பத்தினர்தான் என்பதால் இன்று வரை விவசாயத்தை தன் முதன்மை தொழிலாக கருதுபவர்.

 

அந்த ஊரில் மட்டுமில்லாமல் அக்கம் பக்கத்துக்கு ஊர் விவசாயிகளுக்கும் நிறைய உதைவிகள் செய்பவர். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்னும் நேரத்தில் முதல் ஆளாக அங்கு போய் நிற்கவும் தவறுவதில்லை. விஷயம் ஊருக்குள் முடிந்தாலும் சரி, இல்லை அரசாங்கத்தின் உதவி வேண்டியதாக இருந்தாலும் சரி அதை முடித்து அவர்கள் குறை தீர்க்கும்வரை ஓயமாட்டார் அவர். அந்த அளவுக்கு அந்த மண்ணின் மீதும்,அங்குள்ள மக்களின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர் அவர்.

 

இவரின் மனைவி விசாலமும் இவருக்கு ஏற்றவராக அமைந்துவிட, கணவனின் கண்பார்வை உணர்ந்து நடந்து கொள்வார் அவர். ஆனால் கொஞ்சம் உரத்த குரல் உடையவர். பேசுவதே சற்று சத்தமாகவும், யாரும் எதிர்த்து பேசமுடியாத அளவுக்கும் இருக்கும். அவரை பொறுத்தவரை சரியென்றால் சரி. தவறு என்றால் தவறு. பட்டென பேசிவிடுவார்.

 

யாரையும் உறவு என்றோ, தெரிந்தவர் என்றோ அவர்கள் செய்யும் தவறுக்கு துணை போகாதவர். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசிவிட்டாலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம் இருந்தது விசாலத்திடம். அதற்காகவே ஊரில் அவ்வளவு நல்ல பெயரும் இருந்தது அந்த குடும்பத்திற்கு. ஒரு குடும்பத்தின் கௌரவம் அந்த குடும்பத்தின் பெண்களை கொண்டே அல்லவா.

 

மாணிக்கம்-விசாலம் தம்பதிக்கு இருபிள்ளைகள். மூத்தவன் தனஞ்செயன் தந்தையை போலவே விவசாயத்தை மதிப்பவன் என்பதால் அதையே படிப்பாக எடுத்து படித்து முடித்து தந்தையின் தொழிலை கையில் எடுத்து வெற்றி கண்டிருக்கும் நவீன விவசாயி. தந்தையின் மனமறிந்து நடக்கும் மகன். அந்த ஊரில் தந்தைக்கு ஏற்ற மகனாக தானும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருந்தான் அந்த மகன்.

 

இளையவள் தாமரைச்செல்வி. தந்தைக்கும் அண்ணனுக்கும் செல்லம் என்றாலும் விசாலம் சற்று கண்டிப்பையே காட்டுவார். ஆனால் தன் குறும்பு தனத்தால் அவரையும் அவ்வபோது மயக்கிவிடுவாள் மகள். ஒரே பெண் என்பதால் எந்த அளவுக்கு செல்லம் உண்டோ அதே அளவுக்கு கண்டிப்பும் இருக்கும் விசாலத்தின் வளர்ப்பில்.

 

இப்போது ஹவுஸ் சர்ஜனாக அவள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சியில் இருக்க, விசயத்திற்கு இப்போதைக்கான ஒரே கவலை இவளுக்கு விரைவில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமே. மகனிற்கு வயது ஏறிக்கொண்டே போக முதலில் மகளுக்கு திருமணத்தை முடித்துவிட்டு மகனுக்கு பார்க்க நினைத்தவர் மகளுக்கு வரன் தேடும் பணியில் இறங்கி இருந்தார்.

கோவிலிலிருந்து கிளம்பிய இருவரும் வீட்டை அடைந்திருக்க தாமரை நேராக பூஜை அறை சென்று வணங்கியவள் கூடத்தில் அமர்ந்திருந்த தன் அண்ணனுக்கு விபூதியை பூசிவிட்டவள்.கிட்சனில் வேலையாக இருந்த விசாலத்திற்கும் விபூதி வைத்துவிட்டு வந்து தன் அண்ணனோடு அமர்ந்துவிட்டாள். தனஞ்செயன் தன் தங்கையின் புறம் திரும்பியவன்

 

” ஏன்மா இவ்வளவு நேரம் ” என்று கேட்க

” நான் எப்பவோ சாமி கும்பிட்டு முடிச்சிட்டேன் அண்ணா. அப்பா வரத்தான் லேட் ஆகிடுச்சு. வேலு மாமா அப்பகூட போன இடத்துல யாரையோ பார்க்க போய்ட்டாங்களாம்.அதனால அப்பா லேட்டா வர அவரால நானும் லேட்டு” என்று ராகமாக கூற

 

அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான் அவன். அதே நேரம் விசாலம் அவளை அழைக்க உள்ளே சென்றவளிடம் உணவை எடுத்து வைக்குமாறு அவர் கூற, அவர் சமைத்திருந்த உணவை எடுத்து டேபிளில் வைத்தவள் தந்தைக்கும் அண்ணனுக்கும் பரிமாற விசாலம் வந்தவர் மகளையும் அமர்த்தி தானே உணவை பரிமாற ஆரம்பிக்க, உண்டு முடித்து நிம்மதியாக உறங்க சென்றது அந்த குடும்பம்.

 

அதே நேரம் இங்கு தன் அரிசி மில்லில் இருந்து வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான் இளவேந்தன். அன்று அனுப்ப வேண்டிய லோடு ஒன்று இதுவரை அவன் வேலையை இழுத்து இருக்க, வேலையாட்களும் குறைவாக இருக்கவே தானும் சட்டையை கழட்டிவிட்டு, அரிசி மூட்டைகளை ஏற்றி அனுப்பி இருந்தான் அவன்.

 

எல்லா வேலையும் முடித்து, அனைவர்க்கும் கணக்கு பார்த்து கூலியை அந்த நேரத்திலேயே அவன் கொடுத்து முடித்து வீட்டுக்கு கிளம்ப மணி பத்தரைக்கு மேல் ஆகி இருந்தது. வீட்டை அடைந்தவன் அமைதியாக சென்று குளித்துவிட்டு வந்து அன்னை எடுத்து வைத்திருந்த உணவை உண்டு முடித்தவன் அமைதியாக சென்று படுத்துவிட அவனை தூங்கவிடாமல் வந்து இம்சை கொடுக்க ஆரம்பித்தாள் அவள்.

 

இருவருக்கும் திருமணம் பேசுவதாக சொல்லிய பெரியவர்கள் அதை என்ன காரணமோ அப்படியே கிடப்பில் போட்டுவிட அவன் வீட்டுக்கு வரும் நேரமும் குறைந்து, அவன் உணவும் குறைந்து இருந்தது இந்த இடைப்பட்ட நாட்களில்.

 

ஏன் எதற்கு என்று ஒரு காரணமும் தெரியாமல் அவன் திருமணப்பேச்சு தொடங்கிய வேகத்தில் முடிந்திருக்க எப்போதும் அவனிடம் எதையும் மறைக்காத அன்னைக்கூட என்ன நடந்தது என்று அவனிடம் எதுவும் சொல்லவில்லை. அந்த காரணத்தாலேயே வீட்டில் உள்ளவர்களிடம் பேச்சை குறைத்துக் கொண்டவன், முக்கியமாக செவ்வியின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தான்.

 

இப்போது அந்த நினைவுகளில் மூழ்கி இருந்தவன் எப்போது உறங்கினான் என்று தெரியாமல் உறங்கிவிட, சரியாக நன்கு மணிக்கெல்லாம் அவனுக்கு உறக்கம் தெரிந்துவிட்டது. அந்த நேரம் எழுந்துகொண்டவன் மீண்டும் குளித்து கிளம்பிவிட அவன் வீட்டிற்கு வந்து சென்றான் என்பதே அவன் உண்டு முடித்திருந்த உணவை வைத்துதான் தெரிந்து கொண்டார் அவனின் அன்னை ரங்கநாயகி.

இவனுக்கு பொழுது இப்படி விடிந்திருக்க, விடிந்த இந்தகாலைபொழுது நிச்சயம் தாமரைக்கு நல்ல பொழுதாக இருக்கவில்லை. வழக்கம் போல் தன் அறையில் அவள் உறங்கி கொண்டிருக்க அந்த நேரம் வாசலில் உரக்க கேட்டது மங்கையின் குரல்

 

” அடியே என் ஆள்மயக்கி சிறுக்கி. வாடி வெளிய. நீ ஊடலை புகுந்து விளையாட என் மக வாழ்க்கைதான் கெடைச்சிதா”

 

” யாருகிட்ட இந்த மங்கையை பார்த்தா கேணைச்சிருக்கி யாட்டமா தெரியுதா. எம்புட்டு தைரியம் இருந்தா என் அண்ணன் மகனுக்கு வளைய விரிச்சிருப்பா ” என்று இன்னும் கூட காதில் கேட்க முடியாத வசவுகளால் அவர் வாசலில் நின்று கத்திக் கொண்டிருக்க விசாலம் வெளியே வரவும், அப்போதுதான் எழுந்த தாமரையும் இவர் எங்கே இங்கு வந்தார் என்று பார்க்க வெளியில் வந்தாள்.

 

” வாடி என் ஓடுகாலி சிறுக்கி. அதெப்படிடி. ஊர்ல இத்தனை ஆம்பளைங்க இருக்கும்போது அத்த்னை போரையும் விட்டுட்டு என் அண்ணன்மகன் தான் கெடைச்சானா உனக்கு. ஆள் மயக்கி சிறுக்கி” என்று அவர் மீண்டும் கத்த ஆரம்பிக்க, இதற்குள் அந்த தெருவே கூடி இருந்தது விசாலத்தின் வாசலில்.

 

விசாலம் அதற்குமேல் பொறுத்திருக்காமல் ” அடச்சீ , நாயே வாயை மூடு. யாரை பத்தி யார் பேசுறது. வந்த மகாலட்சுமிய வச்சு வாழ தெரியாம துரத்தி விட்ட நீ என் மகளை பத்தி பேசுறியா.”

 

” ஒரு அறை விட்டேன்னு வச்சிக்க ஒடம்புல இருக்க மொத கொழுப்பும் இறங்கி போகும். போக்கத்தவளே. வந்துட்ட வரிஞ்சி கட்டிக்கிட்டு. என்னடி தெரியும் உனக்கு என் மகளை பத்தி” என்று அவரும் கத்த ஆரம்பிக்க

அந்த நேரம் அங்கு வந்திருந்தனர். மாணிக்கமும்,தனஞ்செயனும் வீட்டிற்கு முன்னால்  கூட்டம் கூடி இருப்பதை கண்ட இருவரும் பதட்டத்துடன் அருகில் ஓடிவர தாமரை அண்ணனை அணைத்துக் கொண்டவள் கதறி அழ ஆரம்பித்தாள்.

மங்கை அப்போதும் விடாதவராக ” இங்க பாருங்கண்ணே. என் அண்ணன் மகனை என் மக மனசார விரும்புறா.இது தெரிஞ்சும் உங்க பொண்ணு அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கா. இது நல்லதில்லை ன்னு நான் புத்தி சொல்ல வந்தா உங்க பொண்டாட்டி என்னையவே சண்டைக்கு இழுக்குது. பார்த்துக்கோங்க. என் பொண்ணுக்கு ஒண்ணுன்னா நான் சும்மா இருக்கமாட்டேன் ” என்று நல்லவராக கூறிவிட்டு சென்றுவிட

 

அங்கு நின்றிருந்த கூட்டம் ஆளுக்கொன்றாக பேசிவிட்டு அந்த இடத்தை காலி செய்தது. தாமரை தன் அண்ணனின் முகம் பார்த்தவள் ” அண்ணே சத்தியமா நான் எதுவும் பண்ணலண்ணே” என்று கதறி அழ

 

அவளை அனைத்துக் கொண்டவன் ” ஹேய். உன்னை எனக்கு தெரியாதாடா. இந்த பொம்பளையை எங்க பார்க்கணுமோ அங்க பார்த்துக்கறேன். நீ விடு ” என்று தங்கையை உள்ளே அழைத்து சென்றான் அவன்.

 

 

 

 

தணலில் தகிக்கும் தாமரை

தலைவனை சேருமா ……………………………

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement