Advertisement

தள்ளி போகாதே நிலவே 

அத்தியாயம் 11 

இவர்கள் இருவரும் வீடு சென்று சேர்ந்த சற்று நேரத்திற்கு முன்பு தான் சங்கீதாவும் சரவணனும் திருமண வீட்டில் இருந்து திரும்பி இருந்தனர். 


கதவை திறந்த சங்கீதா, “என்ன டா அதுக்குள்ள வந்துட்டீங்க?.” எனக் கேட்க, 

ம்ம்… என முனங்கி விட்டு சரத் அறைக்குள் சென்று விட, ஷ்ரேயாவின் முகமும் களைப்பை காட்ட. சங்கீதா மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. எல்லோருமே சிறிது நேரம் படுத்து உறங்கி எழுந்தனர். 

மாலை ஷ்ரேயா ஊருக்கு செல்ல எடுத்து வைத்துக் கொண்டு இருக்க, 
“ஷ்ரேயா, இங்க கொஞ்சம் வா….” என்ற சங்கீதா, மருமகள் வந்ததும், 
“இதெல்லாம் போதுமா பாரு. உனக்கு வேற எதுவும் வேணுமா.” என எப்போதும் கொடுப்பது போல மசாலா பொருட்கள், பொடி வகைகள் எனத் தயாரித்து வைத்திருக்க, 

எப்போதும் கேட்டு வாங்கிக் கொள்ளும் ஷ்ரேயா இந்த முறை, “எதுக்கு அத்தை உங்களுக்குச் சிரமம், இதெல்லாம் இப்ப அங்கவே சூப்பர் மார்கெட்ல கிடைக்குது.” எனச் சொல்ல, சங்கீதாவின் முகம் மாறி விட்டது. 

“என்ன இருந்தாலும் வீட்ல செய்யுறது போல வராது. அதுவும் உங்களுக்குச் செய்றது எனக்கு ஒன்னும் சிரமம் இல்லை.” என்றார்.

“மாவு இப்ப நானே அறைச்சுகிறேன். அதனாலே பொடி மட்டும் வேனா கொடுங்க.” என ஷ்ரேயா சொல்ல, உள்ளே இருந்து இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சரத் வெளியே வந்தவன், “இங்க பாரு என்ன வேணும் வேணாம் எல்லாம் நீ சொல்ல வேண்டாம். எங்க அம்மா எனக்குக் கொடுக்கிறாங்க. எனக்கு எங்க அம்மா செய்யுறது தான் பிடிக்கும்.” என்றவன், 

“நீங்க எதுக்கு அவளைக் கேட்டுட்டு இருக்கீங்க. எப்பவும் போல எடுத்து வைங்க.” என்றான் சங்கீதாவிடம்.  

“நான் அவங்களுக்கு எதுக்குக் கஷ்டம்னுதான் சொன்னேன்.” என்ற ஷ்ரேயா விருட்டென்று அறைக்குள் சென்று விட, 

“நீ இப்போ எதுக்கு அவளைக் கத்துற. நாங்க ரெண்டு பேர் தானே பேசிட்டு இருந்தோம். உனக்கு என்ன வந்தது?” 

“நானும் நேத்துல இருந்து பார்க்கிறேன். நீ அவகிட்ட சண்டை போட்டுட்டே இருக்க.” 

“எங்களாலே உங்களுக்குள்ள சண்டை வர்றது எனக்குப் பிடிக்கலை.” 

“நீ இப்படிச் சண்டை போட்டுட்டு இருந்தினா, நாங்க எப்பவும் சென்னைக்கு வரலை. இங்கேயே இருந்துக்கிறோம்.” எனச் சங்கீதா சரத்தை கத்த. 

“எதுக்கு எதைச் சம்பந்தப் படுத்திப் பேசுறீங்க.” எனச் சரத்தும் பதிலுக்குக் கத்த, 

“இவ்வளவு நாள் நல்லாத்தானே போயிட்டு இருந்தது. இப்ப என்ன ஆச்சு? சங்கீதா அவனுக்கு டிரெயினுக்கு டைம் ஆகுது. நீ போய் வேலையைப் பாரு.” என்றார் சரவணன். 

சங்கீதா சமையல் அறைக்கு செல்ல, சரத் கோபமாக அங்கேயே உட்கார்ந்து விட்டான். இப்படித் தன்னையிட்டு அம்மாவுக்கும் மகனுக்கும் சண்டை வரும் என ஷ்ரேயாவும் நினைக்கவில்லை. 

அவளே வந்து சங்கீதா கொடுத்த பொருட்களைப் பையில் எடுத்து வைக்க, “பண்றது எல்லாம் பண்ணிட்டு, இப்ப நல்லவ மாதிரி நடிக்காத. இப்ப உனக்குச் சந்தோஷமா? எனக்கும் எங்க அம்மாவுக்கும் சண்டை வந்தாச்சு.” எனச் சரத் அவளுக்கு மட்டும் கேட்கும் படி கடிந்து கொள்ள, 

“நீங்க வேற எங்க வீட்டு மேல கோபமா இருந்தீங்க. இதுல உங்க அம்மாவை வேற கஷ்ட்டப்படுத்துறேன்னு நினைக்கப் போறீங்கன்னு தான் வேண்டாம்ன்னு சொன்னேன்.” என்றால் ஷ்ரேயா. 

சரத் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் சொன்னதை நம்பவில்லை எனப் பார்வையே சொன்னது. 

இரவு உணவை உணவு மேஜையில் கொண்டு வந்து வைத்த சங்கீதா, இருவரையும் பொதுவாக உண்ண அழைக்க, “எனக்குப் பசிக்கலை வேண்டாம்.” என்றான் சரத் வீம்பாக. 

அவன் மதியமும் சரியாக உண்ணவில்லை என ஸ்ரேயாவுக்குத் தெரியும் அதனால், “அவர் மதியமும் பசி இல்லைன்னு தயிர் விட்டுக் கொஞ்சமாத்தான் சாப்பிட்டார்.” என அவள் சொல்ல, சரத் அவளை முறைத்தான். 

அவன் சரியாக உண்ணவில்லை என்றதும் சங்கீதா மகனை ஆராயும் பார்வை பார்த்தார். 

எவ்வளவு சுவையான உணவு என்றாலும், ஒரு அளவுக்கு மேல் சரத் எப்போதுமே உண்ண மாட்டான். பிறகு எப்படி பசிக்காமல் போகும்? வேறு என்னவோ காரணம் எனச் சங்கீதாவிற்குப் புரிந்தது. 

“என்ன தான் டா உனக்குப் பிரச்சனை?” எனச் சங்கீதா நேரடியாகவே கேட்க,
எங்கே அவள் அம்மா பேசியதை எதையும் சொல்லிவிடுவானோ என ஷ்ரேயாவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. அவளின் முக மாறுதலை கவனித்த சரத், “ஒன்னும் இல்லை… நீங்களா கற்பனை பண்ணாதீங்க.” என்றான். 

“ஓ… அப்ப நீ நல்லாத்தான் இருக்க… நான்தான் தேவையில்லாம பிரச்சனை பண்றேன்னு சொல்றியா?” எனச் சங்கீதா கோபப்பட…. 

“எது பேசினாலும் இந்த வீட்ல குத்தம்.” என்ற சரத் ஊருக்கு செல்ல கிளம்ப, அவன் உண்ணாமல் கிளம்புவது சங்கீதாவை மிகவும் பாதிக்க, அவர் பேசாமல் சென்று உட்கார்ந்து விட்டார். 

“நீ சாப்பிட்டு போ… இல்லைனா உங்க அம்மா உன்னை நினைச்சே கவலைப்பட்டு அவ ஒழுங்கா சாப்பிட மாட்டா.” எனச் சரவணன் சொன்னதும், சரத் சாப்பிட உட்கார, தான் சென்று பரிமாறவில்லை என்றால் உண்ண மாட்டான் எனச் சங்கீதா கோபத்தை விட்டு எழுந்து சென்றார். 

மதியமும் சரியாக உண்ணாததால் சரத் நல்ல பசியில் இருக்க, மகனின் முகம் பார்த்தே, சங்கீதா அவனுக்குத் தேவையானது பார்த்து பரிமாற, 

சப்பாத்தியும் சிக்கன் குழம்பும் வேறு, சரத் யாரையும் நிமிர்ந்து  கூட பார்க்காமல் வேகமாக உண்ண, கணவன் உண்பதைப் பார்த்து ஷ்ரேயாவுக்கும் திருப்தியே. 

பசி போனதும் சரத்தின் கோபமும் குறையத் தொடங்கியது. மற்றவர்கள் உண்ண அவன் எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான். 

“அவன் எதோ மூட் சரியில்லாம இருக்கான். நீயும் பதிலுக்குப் பதில் பேசாத. சண்டை போட்டுட்டு ஊருக்கு போனா, அவன் அங்க போய் நிம்மதியா இருக்க மாட்டான். நீயும் இருக்க மாட்ட. அதனால அவன்கிட்ட ஒழுங்கா பேசி அனுப்பி வை.” எனச் சரவணன் சொல்ல, 

அவன் இந்த மனநிலையில் ஊருக்கு சென்றால்… தன்னாலும் நிம்மதியாக இருக்க முடியாது எனச் சங்கீதாவும் நினைத்தார். 

உண்டு முடித்த ஷ்ரேயா ஊருக்கு செல்ல கிளம்ப, சரத் கிளம்பாமல் கட்டிலில் படுத்திருந்தான். 

என்ன கிளம்பாம இருக்கான் என நினைத்தாலும், கேட்க பயந்து கொண்டு ஷ்ரேயா கேட்காமல் இருந்தவள், நேரம் ஆகிக்கொண்டே செல்ல, வேறு வழியில்லாமல், “கிளம்பலாமா டைம் ஆகிடுச்சே.” என்றாள். 

“ம்ம்… எனக்கு ஊருக்கு போக வேண்டாம். நான் இப்ப இருக்கிற மனநிலையில் ஊருக்கு வந்தாலும், நம்ம ரெண்டு பேருக்குள்ள சண்டை தான் வரும். அம்மாகிட்ட வேற கோபத்தைக் காட்டிட்டேன். அவங்களும் நிம்மதியா இருக்க மாட்டாங்க. அதனால ஒரு ரெண்டு நாள் கழிச்சு போகலாம்.” என்றான். 

“எனக்கு மீட்டிங் இருக்கு. நான் நாளைக்கு ஆபீஸ் போயே ஆகணும்.” 

“உன் லேப்டாப்தான் இருக்கு இல்ல… நீ இங்க இருந்து கலந்துக்கோ, என்னால இந்த மன நிலையில் வர முடியாது. அதுக்கு மேல உனக்குப் போகணும்னா, நீ மட்டும் போ. நீ தனியா போய் வந்தவத் தானே….” என்றான் சரத். 

அவளை மட்டும் போகச் சொன்னது, ஷ்ரேயாவை மிகவும் காயப்படுத்தியது. 

“அப்ப என்னைத் தனியா போகச் சொல்றீங்களா?” என அவள் கேட்க, 

“நான் உன்னை இருக்கத்தான் சொல்றேன். நீதான் இருக்க முடியாது சொன்ன.”  என்றான். வேறு வழி இல்லாதவன் போல… 

ஷ்ரேயா வெளியே வந்தவள், “அவர் ஊருக்கு வரலைன்னு சொல்றார். நான் மட்டும் கிளம்புறேன்.” என்றதும், சங்கீதா மிகவும் கவலை கொண்டார். 

சரத்தின் அறைக்குள் சென்றவர், “சரத், இருந்தா ரெண்டு பேரும் இருங்க, இல்லைனா ரெண்டு பேரும் போங்க. அவளைத் தனியா அனுப்பிட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியாது.” சங்கீதா சொல்ல, சரத் பதில் சொல்லாமல் எழுந்து கிளம்ப ஆரம்பித்தான். 

அவன் விருப்பம் இல்லாது கிளம்புவதைப் பார்த்து, “உனக்குக் கண்டிப்பா போகணுமா ஷ்ரேயா. லீவ் எடுக்க முடியாதா?” சங்கீதா கேட்க, 

“ஒரு மீட்டிங் இருக்கு. சரி நான் உடம்பு சரியில்லைன்னு சொல்லிக்கிறேன்.” என் அவள் சொல்ல, சங்கீதா முகம் மலர மகனை பார்க்க, 

“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையில்லை மா…” சரவணன் கேட்க, 

“இல்லை மாமா, நான் ஆபீஸ்ல சொல்லிகிறேன்.” என்றாள் ஷ்ரேயா, 

“நான் கேட்கும்போதே சரின்னு சொல்லியிருந்தா என்ன ரொம்பச் சீன் போடுறா.” என மனதிற்குள் நினைத்த சரத், திரும்பப் படுக்கச் செல்ல, 

“டேய் ஒரு நிமிஷம் வெளியே வா…” என்ற சங்கீதா, பூஜை அறைக்குச் சென்று கற்பூரம் எடுத்து வந்தார். அவர் பூஜை அறையில் இருந்து வருவதைக் கவனித்த சரத்திற்கு அவர் என்ன செய்யப் போகிறார் எனத் தெரிந்ததால்… அவனே கிழக்குப் பக்கம் பார்த்து உட்கார, ஸ்ரேயாவையும் அவன் அருகே அமர்த்தி, சங்கீதா டிஷ்ட்டி கழித்தவர், அவர்களுக்குக் கழித்து விட்டு தன் கணவருக்கும் சுற்றி விட்டு, வெளியே செல்ல திரும்ப, 

“உங்களுக்கும் சுத்தி போடுங்க.” என்றான் சரத், இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என நினைத்த சங்கீதா, அவரே அவரின் தலையைச் சுற்றி டிஷ்ட்டி கழித்தவர், வாசலில் சென்று பத்த வைத்து விட்டு வந்தார். 
இருவரும் இவ்வளவு நாட்கள் நன்றாகத்தானே இருந்தனர். இப்போது ஏன் திடீர் சண்டை என்ற கலக்கத்தில், அவரும் எல்லாம் செய்து பார்த்தார். 

ஊருக்கு செல்லாததால் ஸ்ரேயா சென்று மாவை பிரிட்ஜில் வைத்து விட்டு வர, சரத் அப்படியே ஹாலில் டிவி பார்க்க உட்கார்ந்து விட்டான். அப்போது எதோ விளையாட்டு நிகழ்ச்சி வர, சங்கீதாவும் சரவணனும் அவனோடு உட்கார்ந்து பார்த்தனர். 

ஷ்ரேயா சென்று உடை மாற்றி விட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டாள். சரத் சிறிது நேரத்தில் சங்கீதாவோடு இயல்பாகப் பேச ஆரம்பிக்க, அவர்களின் சிரிப்புச் சத்தம் அறைக்குள் வரை கேட்டது. 

அம்மாவுடன் மனஸ்தாபம் என்று தானே சரத் இன்று ஊருக்கு கிளம்பவில்லை. ஆனால் தன்னை மட்டும் அவன் போகச் சொன்னது ஷ்ரேயாவிற்கு நெருடலாக இருந்தது. தான் அவனுக்கு இரண்டாம் பட்சம் தானோ என எண்ணம் வந்தது. 

இப்படி ஒரு எண்ணம் வரவே கூடாது. தாய் முதல்லா தாரம் முதல்லா என்ற கேள்விக்கு விடையே இல்லை. அவரவருக்கு தனிச் சிறப்புகள்  உண்டு. 

உண்மையில் சரத் அவளை மனதார போகச் சொல்லவில்லை. கோபத்தில் தான் சொல்லிவிட்டான். அவளே தனியாகச் செல்ல கிளம்பி இருந்தாலும், செல்ல விட்டிருக்க மாட்டான். அதனால் தான் சங்கீதா வந்து சொன்னதும், ஊருக்கு செல்ல விருப்பம் இல்லையென்றாலும் உடனே எழுந்து கிளம்ப ஆரம்பித்தான். 

சரத்திற்கு மனதிற்குள் பாசம் இருந்தாலும், அதை வெளிகாட்டி கொள்ள மாட்டான். சங்கீதா முடியவில்லை என்றாலும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார். அதைக் கவனித்து விட்டால், உருகி எல்லாம் பேச மாட்டான். மாறாக அவனாகவே அவர் வேலையைக் குறைத்து விடுவான். 

மகனைப் பற்றிச் சங்கீதாவுக்குத் தெரியும். ஆனால் ஷ்ரேயாவுக்குக் கணவனை இன்னும் புரியவில்லை. 

அவர்கள் எல்லாம் ஒன்று, தான் வேறு தானோ… என ஷ்ரேயா அவளாகவே ஏதேதோ நினைத்து குழம்பி, கொஞ்சம் விலகவும் ஆரம்பித்தாள். 

எப்போதும் கலலப்பாக இருப்பவள், இப்போது அவளுக்குள்ளேயே ஒடுங்க ஆரம்பித்தாள். அது அந்த வீட்டில் இருந்த மற்ற அனைவருக்கும் தெரியாமல் இல்லை. 

மறுநாள் இரவு சரத் படுக்கச் செல்லாமல் இருக்க, “என்ன டா படுக்கலையா?” சங்கீதா கேட்க, 

“நாளைக்கு லேட்டா எழுந்தா போதும், நாம எதாவது விளையாடுவோமா.” என்றான்.  

“ஆரம்பிச்சுட்டியா…” சங்கீதா சொல்ல, சரத் சென்று அலமாரியில் இருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்து வந்தான். 

அதில் தாயக் கட்டை மற்றும் காய்கள் இருந்தது. மகனின் விருப்பம் அறிந்து, சரவணன் மரப் பலகையில் தாயம் விளையாட கட்டம் வரைந்தார். சரத் ஷ்ரேயாவை அழைக்கச் சென்றான். 

“ஷ்ரேயா வா விளையாடலாம்.” 

“நான் வரலை நீங்க விளையாடுங்க.” 

“நாளைக்கு மெதுவா எழுந்தா போதும் தானே. உனக்குச் சமைக்கிற வேலை கூட இல்லை. அம்மாவே பண்ணிடுவாங்க. வா ப்ளீஸ்…” என அவளை வம்படியாக இழுத்துக் கொண்டு சென்றான். 

“நானும் ஷ்ரேயாவும், நீங்களும் அப்பாவும்.” என்றவன், எடுத்ததும் தாயம் தான் போட்டான். 

அம்மாவும் மகனும் விளையாட்டில் குத்திக் கொள்வதைப் பார்த்து ஸ்ரேயாவுக்கு ஆச்சர்யம். சங்கீதாவும் மகனுக்கு விட்டுக் கொடுக்கவில்லை. சரத்தும் அம்மா என்று பார்க்காமல் அவர் காயை வெட்டிக் கொண்டே இருந்தான். 

“ஏன் இப்படி?” ஷ்ரேயா கேட்க, 

“இவன் எங்களுக்கு ஒரு பையன் இல்லையா… நாம விட்டுக் கொடுத்து, அவன் இஷ்டத்துக்கே விட்டா, நாளைக்கு மத்தவங்க கிட்டயும் அதே தானே எதிர்பார்ப்பான். மத்தவங்க இவனுக்காக விட்டுக் கொடுப்பாங்களா என்ன? அப்ப இவனால அந்த ஏமாற்றத்தை தாங்க முடியாதுன்னு சொல்லி… நான் விளையாட்டுல கூட இவனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்.” 

“ஒரு தம்பியோ தங்கையோ இருந்தா இவனுக்குச் சரிக்குச் சமமா தானே
எதிர்த்து நிப்பாங்க. அவங்க இல்லாத குறைக்கு, நான் அந்த வேலை எல்லாம் பண்றேன்.” சங்கீதா நீளமாகச் சொல்ல, 

“அச்சச்சோ… எனக்காக இல்ல மா…. இல்லைனா நான் மனசொடிஞ்சு போயிடுவேன்.” எனச் சரத் கேலி பேச… 

“சில நேரம் சரத் கூடப் பெருந்தன்மையா நடந்துப்பான். ஆனா உங்க அத்தை தான் சின்னப் பிள்ளை போல அவன்கிட்ட மல்லுக்கு நிற்பா…” என்றார் சரவணன். 

“இவனைத் இவ்வளவு தட்டி வச்சே … நேத்து எகிறி குத்துச்சான் இல்ல.. இவனையெல்லாம் தட்டித்தான் வைக்கணும்.” எனச் சங்கீதா சரத்தின் குமட்டில் குத்த, 

“நீங்க சொல்றது உண்மை தான் அத்தை. என் கிளாஸ்ல ஒரு பொண்ணு இருந்தா.. அவ வீட்ல ஒரே பொண்ணுன்னு செல்லம் அதிகம். எல்லோரும் அவளுக்கு விட்டுக் கொடுக்கணும் எதிர்பார்ப்பா… யாராவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கலைனாலும் சண்டை ரகளைத் தான். சண்டை போட்டும் சரிவரலைனா உட்கார்ந்து ஓன்னு அழுவா…. அவளைச் சமாளிக்கிறதுகுள்ள நாங்க அந்தப் பாடு பட்டோம்.” ஷ்ரேயா சொல்ல, 

“உன் மாமியாருக்குத் தெரியாது. நீ அவங்களுக்கு எடுத்து கொடு.” எனச் சரத் கேலி செய்ய… 

“ஷ்ரேயா, இவன் சண்டை போட்டா… நீயும் பதிலுக்குச் சண்டை போடு. விட்டு எல்லாம் கொடுக்காத. அப்பப்ப சண்டை போட்டு பிரச்சனையை அப்பவே தீர்த்துக்கணும்.” 

“இந்தப் பேசாம இருக்கிறது, கோவிச்சுகிட்டு சாப்பிடாம இருக்கிறது எல்லாம் கூடாது. நைட் தூங்கும்போது சமாதானம் ஆகிடனும். அதுக்கு மேல எல்லாம் இழுத்திட்டே இருக்கக் கூடாது.” 

தன்னைத் தான் மாமியார் சொல்கிறார் என நினைத்து ஷ்ரேயா முகம் மாறினாலும், சரி என்று சொல்ல, 

“உன் பையனுக்கும் சொல்லு. அவனும் கோபத்துல சாப்பாடு வேண்டாம்ன்னு சொன்னான்.” எனச் சரவணன் மருமகளைத் தாங்கி பேச… 

“அவனுக்கும் சேர்த்துதான் சொல்றேன்.” என்றார் சங்கீதா மகனை முறைத்துக் கொண்டு. 

சரத்திற்கும் ஷ்ரேயாவிற்கும் தனிப்பட்டு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எல்லாம் சரியாகவும் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் சரியாகவும் இருக்காது. ஒரு குடும்பத்தில் கணவனோ அல்லது மனைவியோ விட்டுக் கொடுத்துதான் செல்வர். இன்னும் அந்தப் பக்குவம் இருவருக்குமே இல்லை.

Advertisement