Advertisement

தள்ளி போகாதே நிலவே 


அத்தியாயம் 1

மென்பொருள் நிறுவனங்கள் கலவையாக இருக்கும், அந்தத் தொழில்நுட்ப பூங்காவின் ஒரு தளத்தில் அலுவலக வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் என்றுதானே நினைத்தீர்கள் அதுதான் இல்லை. 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால்…. நிறையப் பேர் முன்பே சென்று இருக்க… இளைஞர் கூட்டம் ஒன்று அங்கிருந்த கேபைட் ஏரியாவில் அரட்டையில் ஈடுபட்டிருந்தது. 

அப்போது பார்டிக்கு செல்வது போல நன்றாக உடை அணிந்து கொண்டு சில பெண்கள் வர…. “ஸ்வாதி எங்க?” என அவர்களைப் பார்த்து சரத் கேட்க, 

“மேடம் இன்னும் மேக் அப் முடிக்கலை.” என்றாள் அணு. 

“வருவா டா… என்ன அவசரம் உனக்கு.” பாலாஜி என்பவன் கிண்டலாகக் கேட்க, 

“சரத்தும் ஸ்வாதியும் தான் ரொம்ப க்ளோஸ். அவன் அவளைத் தேடினா உனக்கு என்ன டா மச்சி.” என்றான் சர்வேஷ் எனப்படுபவன். 

“என்னவோ பேசிக்கோங்க.” என்பது போலச் சரத் அலட்சியமாகப் பார்த்து இருந்தான். 

“சரி கிளம்புவோமா…” என மற்றவர்கள் எழுந்துகொள்ள. சரத் தனது மொபைலில் ஸ்வாதியை அழைத்தான். 

ஸ்வாதி அழைப்பை ஏற்கவில்லை. ஆனால் அவசரமாக அங்கு வந்து சேர்ந்தாள். 

“சாரி லட் ஆகிடுச்சா.” அவள் கேட்க, 

“உன்னை விட்டுத்தான் கிளம்பி இருப்போம்.” என்றான் பாலாஜி. 

“நீங்க போனாலும், என் பெஸ்டி போக மாட்டான் டா…” என்றாள். 

“உனக்கு அந்தத் தைரியம்தான்.” என்றான் சர்வேஷ். 

சரத் வேறு எதுவும் பேசவில்லை. இருக்கையில் இருந்து எழுந்தவன், வாயிலை நோக்கி செல்ல, ஸ்வாதி சென்று அவனோடு சேர்ந்து கொண்டாள். மற்றவர்களும் உடன் சென்றனர். 

அவரவர் வாகனங்களில் ஓ. எம். ஆர் சாலையில் இருந்த பப்புக்கு தான் சென்றனர். வெள்ளியன்று வாடிக்கையாக நடப்பது தான். 

வெளியுலகம் ஒன்று இல்லாதது போல… எல்லாவற்றையும் மறந்து, நள்ளிரவு வரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். 

ஆண் பெண் பாகு பாடெல்லாம் இங்கு இல்லை. இப்போது வைன் குளிர்பானத்தில் சேர்ந்து விட்டது போல… பெண்கள் சிலர் ஜஸ்ட் வைன் தான் எனச் சாக்கு சொல்லிவிட்டு அருந்தினர். சிலர் எதைப் பற்றியும் கவலையில்லாமல் வோட்காவை கூட அசால்ட்டாக உள்ளே தள்ளினர். 

அது ஒரு வேறுபட்ட உலகம். வெள்ளிவரை கடிவாளம் கட்டிய குதிரையைப் போல அலுவலக வேலையில் மட்டும் கவனம் வைத்திருப்பவர்கள், வார இறுதியை ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் எனச் சொல்லி, இது மாதிரி பப்புக்கு போவது வாடிக்கையாகி விட்டது. 

சரத் எப்போதுமே அதிகம் குடிப்பது இல்லை. அவன் இங்கு வருவது நண்பர்களோடு இருக்கத்தான். ஸ்வாதியும் குடிக்க மாட்டாள். அவளும் நண்பர்களோடு இருக்கத்தான் வருவாள். சரத் அவளைப் பத்திரமாக வீட்டில் விட்டுவிடுவான். அதனால் பயமின்றி வருவாள். 

அன்றும் சரத் அளவோடு நிறுத்து விட, அவனே காரை ஓட்டினான். வழியில் காவலர்கள் நிறுத்தி சோதனை செய்ததில், அவன் லிமிட்டை தாண்டாமல் இருக்க, அவனது காருக்கு வழிவிட்டனர். 

ஸ்வாதியை அவளது வீட்டில் விட்டு “நாளைக்குப் பார்ப்போம்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான். 

சரத்தும் ஸ்வாதியும் ஒரே அலுவலகத்தில் இரண்டு வருடமாகப் பணிபுரிகிறார்கள். ஸ்வாதி வருவதற்கு முன்பே சரத் அந்த நிறுவனத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

இந்த இரண்டு வருடமாக இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இருவரும் காதலிக்கிறார்கள், ஆனால் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள் என்றுதான் அலுவலகத்தில் சிலர் பேசிக் கொள்வார்கள். 

மற்றவர்கள் அப்படிப் பேசுவது சரத் ஸ்வாதிஇருவருக்குமே தெரியும். அமோதித்தோ அல்லது மறுத்தோ என எந்தப் பதிலும் சொல்லவில்லை. நீங்கள் என்ன நினைத்தாலும் கவலை இல்லை என்பது போல இருந்தனர். 

“என்னோட பெஸ்டி.” என்றுதான் சரத்தை ஸ்வாதி எப்போதும் சொல்லுவாள். 

ஸ்வாதி வீட்டிற்குள் நுழைந்தபோது, அவள் அம்மா வனிதா ஹாலில் இருந்த திவானில் தான் படுத்து இருந்தார். அவள் வருவது தெரிந்ததும் எழுத்து அமர்ந்தார். 

“நான்தான் வெயிட் பண்ணாதீங்க தூங்குங்க தான சொன்னேன்.” 

“நீ எல்லாம் சொல்லுவ, ஆனா நீ வீட்டுக்கு பத்திரமா வந்து சேர்ந்தது தெரியாம, என்னால எப்படி நிம்மதியா தூங்க முடியும். நாளைக்கு உனக்கு ஒரு பொண்ணு பிறந்தாதான், உனக்கு என்னோட கஷ்ட்டம் தெரியும்.” 

“உங்க அப்பாவும் உனக்குப் பரிஞ்சிட்டு தான் பேசுறார். நம்மகிட்ட சொல்லிட்டு தானே மா போறா… வேலை ஸ்ட்ரெஸ், ரிலாக்ஸா இருக்கட்டும் விடுன்னு சொல்றார்.” 

“காலம் எப்படிக் கெட்டுக் கடக்குது. எதாவது நடந்தா தான் அவருக்கு உரைக்கும் போல….” 

தன் அம்மாவின் புலம்பல் தாளாது. “அதுதான் சரத் என்னைப் பத்திரமா கொண்டு வந்து விடுறானே…. அப்புறம் என்ன உங்களுக்கு?” என்றாள். 

“நானும் அதேதான் சொல்றேன். அந்தப் பையன் நல்ல பையன்னு நீயே சொல்ற, பேசாம அவனையே கல்யாணம் பண்ணிக்கோயேன். நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்.” என்றார். 

“ஆரம்பிச்சுடீங்களா… இங்க பாருங்கப்பா இந்த அம்மாவை.” என அறை வாயிலில் நின்ற தந்தையிடம் ஸ்வாதி புகார் சொல்ல, 

“நாட் ஏ பேட் ஐடியா…” என்றார் அவரும். 

“நீங்களுமா, சரத் என்னோட பெஸ்டி பா…. நான் அவனை எப்படிக் கல்யாணம் பண்ணிக்க முடியும்.” என்ற மகளைப் பார்த்து புன்னகைத்த தியாகு, “நாங்க எங்க விருப்பத்தைச் சொன்னோம். உன்னை நாங்க வற்புறுத்த மாட்டோம்.” என்றார். 

“தேங்க்ஸ் பா…” என்றபடி ஸ்வாதி தந்தையின் தோள் சாய்ந்துகொள்ள, 

“நல்லதுக்குச் சொன்னா கேட்கிறது இல்லை. எக்கேடோ கெட்டு போங்க.” எனச் சொல்லிவிட்டு வனிதா அறைக்குள் சென்றுவிட்டார். 

நண்பர்களோடு தங்கி இருக்கும் அபார்ட்மெண்ட் சென்ற சரத், தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு சென்றவன், தனக்கு என இருக்கும் அறைக்குச் சென்று முடங்கினான். 

மறுநாள் காலை பதினோரு மணி போல அவனது செல்லின் அழைப்பு மணி சத்தத்தில் தான் எழுந்தான். 

செல்லை எடுத்து காதுக்குக் கொடுத்தவன், “சொல்லுங்க மா…” என்றான் கண்களைத் திறக்காமலே. அவனுக்குத் தெரியும் அவன் அம்மா தான் அழைத்திருப்பார் என்று. 

“நீ இன்னும் எழுந்துக்கலையா?” 

“வாரா வாரம் இதே கேள்வியைக் கேட்பீங்களா?” 

“சரி கேட்கலை…. இப்ப நான் சொல்ல வந்த விஷயத்தைக் கேளு…” 

“நம்ம ரேவதியோட அண்ணன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம். நல்ல இடம். பெண்ணும் அழகா இருக்கா…சென்னையில தான் அவளும் வேலை பார்க்கிறா. உனக்குப் பார்க்கலாமா?” 

“ம்ம்… பாருங்க.” 

“சரி இதைச் சொல்லத்தான் போன் பண்ணேன். நான் அப்புறம் பேசுறேன்.” என வைத்து விட்டார். சரத்தும் தன் தூக்கத்தைத் தொடர்ந்தான். 

அவர் நினைத்த நேரம் எல்லாம் அழைப்பார் என்பதால்… சம்ப்ரதாயப் பேச்சு வார்த்தைகள் எல்லாம் இருக்காது. சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு வைத்து விடுவார். 

அவர் சொன்ன விஷயமும் புதிது அல்ல… சரத்திற்கு இருபத்தியைந்து வயதில் இருந்தே பெண் பார்க்க தொடக்கி விட்டார். ஆனால் இப்போது அவனுக்கு இருபத்தியேழு வயது ஆகிறது. ஆனால் இன்னும் பெண் பார்த்து முடிக்கவில்லை. 

மாலை அவன் அறையில் இருக்கும் நண்பர்களோடு வெளியே சென்று விட்டு வந்து, இரவு வெகு நேரம் வரை விழித்து இருந்துவிட்டுத் தாமதமாகத் தான் உறங்கினான். 

ஞாயிறு மதியம் போல அழைத்த ஸ்வாதி. “படத்துக்குப் போயிட்டு, அப்படியே ஷாப்பிங் போகலாமா…” எனக் கேட்டதும், சரத்தும் சரியென வெளியில் செல்ல கிளம்பிவிட்டான். 

படம் பார்த்து விட்டு இருவரும் மாலில் இருந்த விளையாட்டு அரங்கில், ஸ்னோ பவுலிங் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சங்கீதா அழைத்தார். 

“சரத் அந்தப் பொண்ணு வேண்டாம் டா…” என்றார்.
இதுவும் அவனுக்குப் புதிது இல்லை. இருந்தாலும் காரணம் கேட்டான். 

“பொண்ணு நல்லா அழகா இருக்கா… உன்னைப் போட்டோவுல பார்த்தே அவளுக்குப் பிடிச்சிட்டது போல… என்கிட்டே உன்னைப் பத்தி தான் பேசினா. ஆனா அவங்க அம்மா பேச்சு எனக்குப் பிடிக்கலை. அதனால வேற இடம் பார்க்கலாம்.” 

இதெல்லாம் ஒரு காரணமா என நினைத்தாலும், சரத் ஒன்றும் சொல்லவில்லை. “சரி மா உங்க இஷ்டம்.” என்றான். 

இதுவரை அவனுக்கு ஒவ்வொன்றோயும் பார்த்து பார்த்துச் செய்து இருக்கிறார். இப்போது கூட அவன் கோயம்புத்தூர் சென்றால்… அவன் குளித்து விட்டு வரும் போது, அவன் அணிந்து கொள்ள உள்ளாடை முதற்கொண்டு எடுத்து தயாராக வைத்திருப்பார். ஒவ்வொரு நேரமுமே அவன் என்ன சாப்பிட விரும்புகிறான் எனக் கேட்டுத்தான் சமைப்பார். 

வேலையின் காரணமாகத்தான் அவனைப் பிரிந்து இருப்பதே… சரத்தின் அப்பா அங்கே அரசாங்க வேலையில் பெரிய பதவியில் இருக்கிறார். சரத்தும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பெற்றோரை பார்க்க கோயம்புத்தூர் சென்று விடுவான். 

“சரத்…இங்க வா…” என்ற ஸ்வாதியின் குரல் அலைபேசியில் கேட்க, 

“அவளோடத்தான் வெளிய வந்திருக்கியா?” என்றவர், “பிரான்ட் தானே அவ…” என எப்போதும் கேட்பதையே மீண்டும் கேட்டார். 

“ஆமாம் எத்தனை தடவை சொல்றது. வைங்க போன்னை.” என்றவன் சுவாதியிடம் சென்றான். பையன் மேல் நம்பிக்கை தான் இருந்தாலும் ஒரு பயம் அவருக்கு. 

“அந்தச் சுவாதியோட என்னத்துக்கு எந்நேரமும் சேர்ந்து சுத்துறான்.” எனச் சங்கீதா தன் கணவரிடம் புலம்ப… 

“நீயும் பொண்ணு பார்கிறேன்னு நாளை ஒட்டிட்டே இரு. கல்யாணம் பண்ணி வச்சா தானே பொண்டாட்டியோட சுத்துவான்.” 

“இதோட எத்தனை பொண்ணுங்களை வேண்டாம்ன்னு சொல்லிட்ட…” 

“நீ பண்றது தப்பு சங்கீதா. நம்ம பையன் நமக்கு ஒசத்திதான், அதுக்காக எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் குறையே கண்டுபிடிக்கக் கூடாது.” 

“நான் என்ன வேணுமுன்னே வா பண்றேன்.” 

“முதல்ல பார்த்த பெண்ணை, பொண்ணு பார்த்திட்டு வரும் போதே…. கார் டயர் பஞ்சர் ஆகிடுச்சு. அது கொஞ்சம் அபசகுனமா இருந்தது, அதனால வேண்டாம்ன்னு சொன்னேன்.” 

“ரெண்டாவது பார்த்த வீட்ல, அவங்க அப்பா அம்மா பேசினது உங்களுக்குத் தெரியும். என்னவோ நான் என் பிள்ளையை அவங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கிறது போலப் பேசினாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் சரத்தை நாம மறந்திட வேண்டியது தான்.” 

“அதெல்லாம் விடு, இப்ப கடைசியா பார்த்தியே அந்தப் பொண்ணு ஸ்ரேயா, அவளுக்கு என்ன குறை? அவ்வளவு அழகா பாந்தமா இருக்கா…. அவளை ஏன் வேண்டாம்ன்னு சொன்ன.” 

“அது அந்தப் பெண்ணோட அம்மா ஒரு மாதிரி தொணத் தொணன்னு பேசுறாங்க. நம்ம சரத்துக்கு அப்படிப் பேசினா எல்லாம் பிடிக்காது.” சங்கீதா சொல்ல, அவரை ஆழ்ந்து பார்த்த சரவணன், “நான் காரணம் சொல்லட்டுமா… அந்தப் பெண் சரத் மேல ரொம்ப ஆர்வம் காட்டினா, இப்பவே இப்படி இருக்கா, கல்யாணத்துக்கு அப்புறம் உன் பையனை முழுசா அவ பக்கம் இழுத்துப்பாளோன்னு உனக்குப் பயம். அதனால்தான் நீ வேண்டாம்ன்னு சொன்ன. சரியா?” 

“நீங்க என்னவேனா நினைச்சுக்கோங்க.” சங்கீதா பதில் சொன்ன விதமே, அவரைக் காட்டிக் கொடுக்க, 

“தப்பு பண்ற நீ. அவங்க நல்ல இடம். அவளும் நம்ம சரத் மாதிரியே படிச்சு நல்ல வேலையில இருக்கா. குடும்பமும் நல்ல குடும்பம். நீ தேவை இல்லாதது நினைச்சு, நல்ல பெண்ணை விடுற.” 

“சரத் யாரைக் கல்யாணம் பண்ணாலும், கல்யாணத்துக்குப் பின்னாடி அவன் மாறலாம். என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். அதனால நீ மனசை போட்டு குழப்பிக்காம இரு.” 

“நாம என்ன வேணா ஆசைப்படலாம் மா… ஆனா விதின்னு ஒன்னு இருக்கு.” எனச் சரவணன் எழுந்து சென்றார். 

சங்கீதாவும் தான் தவறு செய்கிறோமோ என நினைத்து கலங்கி போனார். 

இவர்கள் பெண் பார்க்க சென்ற அன்று, ஸ்ரேயா கரும் பச்சையில் மைசூர் சில்க் புடவையில் வெகு பாந்தமாக இருந்தாள். நல்ல உயரம் ஒடிசலான உடல்வாகு, அவளின் உயரத்திற்கும் கோதுமை நிறத்திற்கும், சரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பாள் எனத் தோன்றியது. 

ஸ்ரேயா சங்கீதாவிடம் ஆன்டி எனப் பார்த்ததுமே ஒட்டிக் கொண்டாள். சரத்தை பற்றி வேறு அவள் ஆர்வமாக விசாரிக்க, அது கொஞ்சம் அதிகபடியாகச் சங்கீதாவுக்குத் தோன்றியது. 
பொண்ணு தானே பார்க்க வந்திருக்கோம், திருமணம் நடக்கும் என்ற உறுதியும் இல்லை. அதற்குள் என்ன இவ்வளவு ஒட்டுதல் என நினைத்தார். அது கொஞ்சம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் வீட்டிற்கு வந்ததும், ரேவதியை அழைத்து, இந்த இடம் வேண்டாம் எனச் சொல்லி இருந்தார். 

இப்போது கணவர் பேசியது கேட்டதும், யோசிக்க ஆரம்பித்தார். மறுநாள் அவரே பெண் வீட்டினரை அழைத்துப் பேசிய போது, நாங்க வீட்ல பேசிட்டு சொல்றோம் என வைத்து விட்டனர். 

சிறிது நேரம் கழித்து அவர்களே அழைத்து, “நாங்க இப்ப கல்யாணம் பண்ற மாதிரி இல்லை. பெண்ணும் கொஞ்ச நாள் வேலைக்குப் போறேன்னு சொல்றா.” என்றதும், சங்கீதாவும் நிம்மதியாக வைத்து விட்டார். 

யாருக்கு எங்கு ப்ராப்தமோ அங்குதான் அமையும்.  

Advertisement