Advertisement

தள்ளி போகாதே நிலவே 


அத்தியாயம் 9

நாட்கள் அதன் பாட்டிற்குச் சென்றது. இருவரும் அலுவலக வேலையில் நேரம் காலம் பார்க்காமல் பிஸியாக இருந்தனர். அடுத்த வாரம் இருவரும் கோயம்புத்தூர் சென்றனர். 

எப்போது சென்றாலும் முதலில் சரத் வீட்டிற்குச் சென்றுவிட்டு மாலைப் போல ஷ்ரேயா வீட்டிற்குச் செல்வார்கள். சில நேரம் அங்கேயே இரவு தங்குவார்கள், இல்லையென்றால் இரவு உணவு முடித்துக் கொண்டு வந்து விடுவார்கள். 

அன்று ஷ்ரேயா மாமியாரோடு சேர்ந்து சமையல் செய்தாள். எப்போதும் ஊரில் இருந்து வந்திருக்கிறாள் எனச் சங்கீதா அவளை ஓன்றும் வேலை சொல்ல மாட்டார். இந்த முறை ஸ்ரேயாவே, “அத்தை எனக்குப் புதுசா எதாவது சொல்லிக் கொடுங்க.” எனக் கேட்க, சங்கீதா எளிமையாக அதே நேரம் சீக்கிரம் செய்யும் உணவு வகைகளைச் சொல்லிக் கொடுத்தார். 

மதியம் வித விதமான கலவை சாதங்கள், அதோடு காலிபிளவர் வருவல், பாயசம் என்று வயிறு நிறைய உண்டவர்கள், உண்ட களைப்பில் ஒரு தூக்கத்தையும் போட்டனர். 

மாலை ஸ்ரேயா அவள் அம்மா வீட்டிற்குக் கிளம்ப… சங்கீதா மருமகளுக்கு மல்லிகை பூ கொண்டு வந்து கொடுத்தார். ஷ்ரேயாவுக்கு மல்லிகை பூ என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவள் வந்தாலே பூ வாங்கி வைத்து விடுவார். 

ஷ்ரேயா இன்றைய நவநாகரிக பெண்தான் . இருந்தாலும் புடவை கட்டுவது, பூ வைப்பது எல்லாம் மிகவும் விரும்புவாள். சென்னையில் அலுவலகத்திற்கு அணிந்து செல்ல ஜீன்ஸ், சுடிதார் தான் வசதி என அங்கே அதை அணிபவள், இங்கே வந்தால் புடவை தான் கட்டிக் கொள்வாள். 

புடவை அணிந்து தலை நிறையப் பூ வைத்து அவள் அம்மா வீட்டுக்கு கிளம்பியவள், சரத்தைப் பார்த்து போகலாமா எனக் கேட்க, 

“எனக்குத் தலை வலியா இருக்கு. இந்த முறை நீ போயிட்டு வா… அடுத்த முறை வரேன். நீ வேணா அங்கேயே தங்கிட்டு நாளைக்கு வா.” என்றான். 

இப்படியெல்லாம் சரத் இதுவரை சொன்னது இல்லை. அதனால் உண்மையிலேயே தலைவலி போல என ஸ்ரேயா நினைத்துக் கொண்டாள். 

“ரொம்ப வலிக்குதா…. நானும் வேணா போகாம இருந்திடவா?” 

“அதெல்லாம் வேணாம் நீ போயிட்டு வா… தூங்கி எழுந்தா சரி ஆகிடும். அம்மாதான் இருக்காங்களே…” எனச் சரத் எதோ சொல்லி சமாளிக்க, 

“சரி பார்த்துக்கோங்க.நான் வரேன்.” எனச் சொல்லிவிட்டு ஷ்ரேயா கிளம்பி சென்றாள். 

மகளைப் பார்த்ததும் ஷ்ரேயா வீட்டினர் கொண்டாடினர். “ஏன் மா மாப்பிள்ளை வரலை?” என அவள் தந்தை கேட்க, 

“அவருக்குத் தலைவலிப்பா.” என்றாள். 

“சரி ரெஸ்ட் எடுக்கட்டும். நாளைக்கு மதியம் வேணா சாப்பிட வர சொல்லேன் மா…” 

“அத்தை எதாவது அவருக்குப் பிடிச்சதா ஸ்பெஷல்லா பண்ணுவாங்கப்பா… அதனால் வருவாரா தெரியாது. நான் வேணா கேட்டு சொல்றேன்ப்பா…” 

“ஏன் உன் மாமியார் மட்டும் தான் ஸ்பெஷல்லா சமைப்பாங்களா… நாங்க எல்லாம் சமைக்க மாட்டோமா…” 

“அப்படியில்லை மா..” என ஸ்ரேயா எதோ சொல்ல வர… 

“அதெல்லாம் உனக்கு எதுக்கு. மகன் வரும்போது நல்லா சமைச்சு போடணும்னு நினைக்கிறாங்க.” எனக் கணவர் சொல்ல, கீதா கப்பென்று வாயை மூடிக் கொண்டார். 
“ஸ்ரேயாவுக்கு என்ன வேணும்னு கேட்டு சமைச்சு கொடு. நான் வெளிய போயிட்டு வரேன் மா…” என்ற தந்தையை வழியனுப்பி விட்டு ஷ்ரேயா உள்ளே வர, 

“என்ன உன் புருஷனுக்கு இன்னும் என் மேல கோபம் போகலையா… இங்க வரக்காணோமே…” என அவளின் அம்மா கேட்க, 

“அவருக்கு என்ன கோபம்?” என ஷ்ரேயா புரியாமல் பார்க்க, 

“அது தான் டி, அன்னைக்கு நாம போன்ல பேசும்போது, அவர் நடுவுல வந்திட்டாரே. நீ அப்படி ஸ்பீக்கர்ல போட்டா பேசுவ.” என அம்மா சொன்னதும்தான். அந்த விஷயமே ஸ்ரேயாவுக்கு நினைவு வந்தது. 

“அதெல்லாம் இல்லை மா.. அவருக்குத் தலை வலி தான்.” என்றவள், “அம்மா கோவிலுக்குப் போகலாம் வர்றீங்களா?” எனக் கேட்க, கீதாவும் மகளோடு கோவிலுக்குக் கிளம்பினார். 

ஸ்ரேயாவின் வண்டியில் அவளும் அவள் அம்மாவும் கோவிலுக்குச் சென்றனர். வேம்புலி அம்மன் கோவில். சற்று பெரிய கோவில் தான். 

சனிக்கிழமை என்றதால் அவ்வளவு கூட்டம் இல்லை. இதே வெள்ளிக் கிழமை என்றால்.. அதிகக் கூட்டம் இருக்கும். அம்மாவும் மகளும் நிதானமாகச் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வர…. சற்று தள்ளி கோவில் பிரகாரத்தில் சரத்தும் சங்கீதாவும் அமர்ந்து இருந்தனர். 

அவர்கள இவர்களைப் பார்க்கவில்லை. இவர்கள் பார்க்கும் போதே… அவர்கள் கோவிலில் இருந்து கிளம்பி விட்டனர். 

“என்னவோ உன் புருஷனுக்குத் தலைவலின்னு சொன்ன… ஆனா கோவிலுக்கு எல்லாம் வந்திருக்கார்.” 

“அவங்க அம்மா கூப்பிட்டிருப்பாங்க வந்திருப்பார்.” என விட்டுக் கொடுக்காமல் சொல்லிவிட்டாலும், என்கிட்ட தலைவலின்னு சொல்லிட்டு, கோவிலுக்கு மட்டும் வந்திருக்கிறானே என்ற வருத்தம் இருந்தது. 

ஷ்ரேயா அன்று அவள் வீட்டிலேயே தங்கி விட்டாள். எப்போதும் ஞாயிறு மதிய உணவுக்கு அங்கே சென்று விடுபவள், இந்தத் தடவை ஊருக்குச் செல்லும் நேரம்தான் வந்தாள். 

“மதியம் வந்திடுவேன்னு நினைச்சேன்.” எனச் சரத் சொன்னதற்கு, ஸ்ரேயா பதில் சொல்லாமல் இருக்க, “அவளுக்கும் அவங்க அம்மா கூட இருக்கணும்னு இருக்கும் இல்ல…” எனச் சங்கீதா சொல்ல, சரத் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. 

சங்கீதா மாவு அரைத்து, இட்லி பொடி, புதினா துவையல்,புளியோதரை கலவை எனச் செய்து வைத்திருந்தார். 

“குழம்பு மிளகாய் பொடி இருக்குதானே…” சங்கீதா கேட்க,
“இருக்கு அத்தை.” ஷ்ரேயா சொல்ல, 

“சரி அப்ப நாங்க வரும் போது கொண்டு வரோம்.” என்றதற்கு ஸ்ரேயா சரியென்றாள். “இந்தா மா இதையும் வச்சுக்கோ.” எனச் சரவணன் மருமகளுக்காக எடுத்து வைத்திருந்த உடைகளைக் கொடுக்க…. 

“என்னப்பா வரும் போதெல்லாம் உங்க மருமகளுக்கு மட்டும் டிரஸ்…” எனச் சரத் பொய்யாக முறைக்க, 

“உனக்கும் இருக்கு டா… ரெண்டு பேருக்கும் ஒரே கலர்ல வாங்கினேன். வெளிய போகும்போது ஒண்ணா போட்டுட்டு போங்க.” என.. 

“இதெல்லாம் உங்களுக்குத் தெரியுது. எனக்கு இப்படியெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கீங்களா…” சங்கீதா சண்டைக்கு வர… 

“அம்மா, அப்பா ஒரே மாதிரி எடுக்கிறேன்னு, எனக்கும் பிங்க் கலர்ல எடுத்திருக்கப் போறார்.” எனச் சரத் சொல்ல… 

“இருக்கட்டுமே டா…. ஏன் பிங்க் கலர்ல போட்டா என்ன….” என்ற சங்கீதா, 

“ஷ்ரேயா, இவன் சின்னதில கொஞ்சமா பிங்க் கலர் டிரஸ்ல இருந்தாக் கூட, நான் போட மாட்டேன். இது பொண்ணுங்க கலர்ன்னு சண்டைக்கு வருவான். ரெண்டான் கிளாஸ்லையே எப்படிப் பொண்ணு கலர் பையன் கலர் எல்லாம் தெரியுமோ….” சங்கீதா மருமகளிடம் மகனைப் பற்றிச் சொல்ல, 

“உங்க பையன் அதெல்லாம் விவரம் தான்.” என்றாள் ஷ்ரேயா. அதில் இருந்த உள்குத்துப் புரியாமல் சரவணனும் சங்கீதாவும் சிரித்தனர். ஆனால் சரத்திற்கு அவள் சரியில்லை எனப் புரிந்தது. 

ஷ்ரேயா மிகுந்த கோபத்தில் தான் வந்தாள். ஆனால் சங்கீதாவும் சரவணனும் பாசத்தைப் பொழியும் போது, அவளால் அவர்கள் முன்பு முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள முடியவில்லை. 

இரவு உணவு உண்டு, இருவரும் டாக்ஸியில் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறினர். ஷ்ரேயா முதலில் சண்டை போட வேண்டும் என்றுதான் நினைத்தாள். ஆனால் சண்டை எதுவும் போடவில்லை. 

உரிமையாகச் சண்டை போட்டால் கூட அதுவேறு… ஆனால் ஒரு விலகல் அவளிடம் வந்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்து தான் அவனை விரும்பும் அளவுக்கு, அவன் தன்னை விரும்பவில்லையோ என அவளுக்குத் தோன்றிவிட்டது. 

ஷ்ரேயா அவளுண்டு அவள் வேலையுண்டு என இருக்க… முதலில் சரத் உணரவில்லை. பிறகே எதோ சரியில்லை என்பதாக உணர்ந்தான். 

“என்ன ஆச்சு ஷ்ரேயா? ஏன் டல்லா இருக்க?” 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே….. நான் நல்லத்தான் இருக்கேன்.” 

இப்போது சமையலுக்கு ஆள் இல்லை. வீடு பெருக்கி துடைத்து, பாத்திரம் தேய்க்க ஆள் வைத்திருந்தாள். காலைக்கும் இரவுக்கும் அவள்தான் சமைத்தாள். மதியம் மட்டும் இருவரும் அலுவலகத்தில் உண்டு விடுவார்கள். 

“உனக்குச் சமைக்கக் கஷ்ட்டமா இருக்கா… ஆள் வேணா வச்சிடலாமா?” 

“நான் கஷ்டமா இருக்குன்னு சொல்லையே…” என அவளின் பட்டும் படாத பதிலில் சரத் குழம்பிப் போனான். 

அந்த வாரம் புதுப் படம் ஒன்று வந்திருக்க, ஸ்வாதி சரத்தை அழைக்க, அவன் ஸ்ரேயாவிடம் கேட்க, 

“நீங்க போயிட்டு வாங்க.” என்றாள். 

“எனக்குப் போகத் தெரியாதா? நீ வரியா இல்லையா சொல்லு.” 

“நான் வரலை, நீங்க போயிட்டு வாங்க. எனக்குப் போகத் தெரியாதா, நீ ஒன்னும் எனக்குப் பெர்மிஷன் தர வேண்டாம்.” 

“நான் இல்லைனா நீங்க இன்னும் ப்ரீயா இருப்பீங்க. அதுதான் சொல்றேன்.” 

“நீயா கற்பனை பண்ணிட்டு பேசினா, அதுக்கு நான் பொறுப்பில்லை. படத்துக்கு வர இஷ்ட்டமா இல்லையான்னு மட்டும் சொல்லு.” 

“நான் வரலை.” 

“தேங்க்ஸ், இதைச் சொல்லிட்டு போக வேண்டியது தான…என்றவன், ஸ்வாதியை அழைத்து, “நான் வரலை வேற வேலை இருக்கு.” எனவும் சுவாதிக்கு ஒரே ஏமாற்றம். 

“போ டா, கல்யாணம் ஆனதும் நீ மாறிட்ட.. நீயும் மத்தவங்களை மாதிரிதான்.” என ஸ்வாதி சொல்லிவிட்டு வைக்க, இவ வேற, நிலைமை புரியாம எனச் சரத்துக்கு எரிச்சலாக இருந்தது. 

தான் வரவில்லை என்றதும் சரத்தும் செல்லவில்லை என்பது ஷ்ரேயாவுக்குச் சந்தோஷமே… ஆனால் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.
நாட்கள் அது பாட்டிற்குச் செல்ல, இரண்டு வாரங்கள் சென்று, ஊரில் ஒரு திருமணம் என்று சரத்தும் ஷ்ரேயாவும் கோயம்புத்தூர் சென்றனர். 

எப்போதும் போல ஷ்ரேயா அம்மா வீட்டிற்குக் கிளம்பியவள், சரத்தை அழைக்கவில்லை. 

“நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்.” என்றதற்கு,
நம்மை அழைக்கவில்லை எனச் சரத்திற்கும் நிம்மதியே, “சரி போயிட்டு வா…” என்றான். 

போறதுன்னா போ என்பது போல இருக்கிறானே என்ற கோபத்தில், “நான் மட்டுமே போயிட்டு வரேன். இல்லைனா இல்லாத தலைவலி எல்லாம் உங்களுக்கு வரும்.” என ஷ்ரேயா சொல்ல, 

“இங்கப்பாரு இந்த ஜாடை பேசுறது எல்லாம் வேண்டாம். எது சொல்றதுனாலும் நேரா சொல்லு.” என்றான் சரத்தும் கடுப்பாக. 

“போன தடவை வந்த போது, என்கிட்ட தலைவலின்னு சொல்லிட்டு உங்க அம்மா கூடக் கோவிலுக்குப் போகலை நீங்க.” 

“ஆமாம் போனேன். எனக்கு நேர்ல ஒருமாதிரி பின்னாடி ஒரு மாதிரி எல்லாம் பேச வராது. உங்க அம்மா முகத்துக்கு நேரா ஒண்ணுமே தெரியாத மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது. அவங்களுக்கும் எதுக்குத் தர்ம சங்கடம் அதுதான் வரலை. இப்போ அதுக்கு என்ன?” 

“அவங்க எதோ தெரியாம பேசிட்டாங்க. அதுக்காக அதையே பிடிச்சிட்டு தொங்குவீங்களா… நான் உங்க அப்பா அம்மாவை இது மாதிரி பண்ணா உங்களுக்கு எப்படி இருக்கும்?” 

“பண்ணிப் பாரேன் தெரியும், நான் யாருன்னு?” என்ற சரத்தின் கோபத்தைப் பார்த்து ஸ்ரேயா அதிர்ச்சியில் வாய் அடைத்து நிற்க, 

“உங்க அம்மா மாதிரி எங்க அப்பா அம்மா என்ன டி பண்ணாங்க?” 

“உன்னையும் உங்க வீட்டையும் பத்தி தப்புத் தப்பா சொல்லிக் கொடுத்தாங்களா?” 

“உன்னை மருமகளா அந்த வேலைப் பண்ணு இந்த வேலை பண்ணுன்னு வேலை வாங்கினாங்களா… இல்லைனா அவங்க உட்கார்ந்திட்டு உன்னை அதிகாரம் பண்ணாங்களா…” 

“இங்க வந்திட்டுப் போகும்போது மாவுல இருந்து எங்க அம்மா அரைச்சு தராங்க. ஆனா உங்க அம்மா என்ன பண்ணி இருக்காங்க? எங்க அம்மா பண்றது தெரிஞ்சும் பார்த்திட்டு தானே இருக்காங்க.” 

“நீ இங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக எல்லாம் எதுவும் இல்லை. சொல்லப் போனா மருமகள்ன்னு என்னோட அப்பாவும் அம்மாவும் தான் உன்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறாங்க.” 

“உன்னை விட்டுக் கொடுத்து ஒரு தடவையும் அவங்க பேசினது இல்லை. இதுல எங்க அப்பா அம்மாவைப் பத்தி இவ பேசுவாளாம்.” சரத் விட்டால் அடித்து விடுபவன் போல நின்றான். 

“ஐயோ, நான் உங்க அப்பா அம்மாவை எதுவும் சொல்லலை… என்னை ஆள விடுங்க.” எனக் கையெடுத்து கும்பிட்டவள், கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். 

ஷ்ரேயா கோபத்தில் தான் வார்த்தையை விட்டிருந்தாளே தவிர, அவளுக்குமே புகுந்த வீட்டினரைப் பற்றிக் குறை சொல்ல எதுவும் இல்லை. சரத் சொல்வது எல்லாம் உண்மையும் கூட. சரவணனும் சங்கீதாவும் அவளை மருமகள் போல நடத்தவும் இல்லை. 

இவர்கள் இருவரும் அறைக்குள் இருந்தாலும், சண்டையில் சத்தம் உயர்ந்து கண்டிப்பாக வெளியே கேட்டிருக்கும். இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாமனார் மாமியாரை பார்ப்பது என ஷ்ரேயாவுக்குத் தெரியவில்லை. அதனால் அவள் அம்மா வீட்டுக்கும் செல்லாமல் அறைக்குள்ளேயே முடங்கினாள்.
 

Advertisement