Advertisement

“ஸ்ரேயா, நீங்க உங்க ஆபீஸ்ல இப்படியெல்லாம் ப்ரண்ட்ஸ் கூட வெளிய போக மாட்டீங்களா?” 

“நான் இப்ப இருக்கிற ஆபீஸ்ல சேர்ந்து கொஞ்ச மாசம்தான் ஆகுது. நடுவுல கல்யாணம் வேற வந்திடுச்சா… இன்னும் யாரையும் அவ்வளவா ப்ரண்ட்ஸ் பிடிக்கலை… ரூம்ல இருந்த ப்ரண்ட்ஸ் கூட எப்பவாவது போன்ல பேசுவேன். அவங்களை ஒருநாள் வீட்டுக்கு கூப்பிடனும்” 

“ஓ… சரி.” 

ஸ்ரேயாவும் ஸ்வாதியும் தான் பேசிக் கொண்டு வந்தனர். சரத் அவர்கள் இருவர் பேசுவதைக் கேட்டபடி காரை ஓட்டினான். 

ரெசார்ட் சென்று சேர்ந்ததும், காரை அதற்குரிய இடத்தில நிறுத்துவிட்டு, மூவரும் வரவேற்பு அறை நோக்கி நடந்தனர். அங்கே மற்ற நண்பர்களும் வந்திருக்க… அதிலும் சிலர் மனைவி குழந்தைகள் என வந்திருக்க… அங்கே ஒரு அறிமுகப்படலம் நடந்தது. 

அப்போது மதியம் இரண்டு மணி என்பதால்… மாலை சந்திப்போம் என அவரவர் அறை சாவியை வாங்கிக் கொண்டு பிரிந்து சென்றனர். 

ஒரு அறையில் ஸ்வாதியும் இன்னொரு பெண்ணும் தங்கிக்கொள்ள…அதற்குப் பக்கத்து அறையில் சரத்தும் ஸ்ரேயாவும் தங்கிக் கொண்டனர். 

மாலை எல்லோரும் பொதுவான அறையில் குழும… அங்கே எல்லோருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்து இருந்தனர். அதை உண்டு விட்டு, சிலர் நீச்சல் குளத்திற்கும், சிலர் கடற்கரையை நோக்கியும் நடையைக் கட்டினர். 

ஆண்கள் கடற்கரை மணலில் பீச் வாலிபால் விளையாட… சரத்தும் அவர்களோடு சேர்ந்து விளையாடினான். 

ஸ்ரேயாவும் ஸ்வாதியும் மணலில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, அவர்களோடு சர்வேஷின் மனைவி சுஜியும் இணைந்து கொண்டாள். மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். 

சிறிது நேரம் சென்று அவர்களுடன் உட்கார்ந்த சர்வேஷ், “இந்த ரெசார்ட் நல்லா இருக்கு இல்ல…” என்றதும், பெண்கள் மூவரும் ஆமோதித்தனர். 

“இன்னைக்குப் பௌர்ணமி வேற… நிலவு வெளிச்சத்துல பீச்ல நடந்தா நல்லா இருக்கும்.” ஸ்ரேயா சொல்ல, 

“நல்லத்தான் இருக்கும். ஆனா நீங்க கூட ஒரு கரடியை வேற கூடிட்டு வந்து இருக்கீங்க.” எனச் சர்வேஷ் ஸ்வாதியை காட்டி சொல்ல… 

“ஹே… என்ன நக்கலா?” ஸ்வாதி அவனிடம் எகிற. 

“நான் சொல்லலை…. சரத் தான் சொல்லிட்டு இருந்தான். இந்த ஸ்வாதி வேற கூட இருக்கா… பிரீயாவே இருக்க முடியலைன்னு, இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னான்.” என்றதும், 

“சரத் அப்படிச் சொல்லி இருக்கவே மாட்டான்.” என ஸ்வாதி அடித்துப் பேசினாள். 

“அவனை வேணா கூப்பிட்டு கேட்போமா?” சர்வேஷ் சொல்ல…
காரில் சரத் பேசியதை வைத்து, ஸ்ரேயா கூடச் சரத் அப்படிச் சொல்லி இருப்பான் என நம்பிவிட்டாள். ஆனால் ஸ்வாதி அசரவே இல்லை. அவன் அப்படிச் சொல்லி இருக்க மாட்டான் என்றாள். 

சிறிது நேரம் சென்று சரத் வந்து ஸ்ரேயாவின் பக்கத்தில் அமர, “அவனிடம் கேளு…” எனச் சர்வேஷ் சொல்ல, “நான் கேட்க மாட்டேன்.” என்றாள் ஸ்வாதி. 

“டேய், நீ சொல்லலை… இந்த ஸ்வாதி வேற கரடி மாதிரி கூடவே இருக்கா, பிரீயாவே இருக்க முடியலைன்னு, நீதானே அப்படிச் சொன்ன, சொல்லு மச்சி.” சர்வேஷ் சொல்ல… 

“கரடின்னு அவளை மட்டும் எப்படிச் சொல்லி இருப்பேன்… வேணா கரடிகள்ன்னு சொல்லி இருப்பேன்.” எனச் சரத் சிரிக்க… 

“பார்த்தியா நான் சொன்னேன் இல்ல…. எனக்குத் தெரியும்… சரத் அப்படிச் சொல்லி இருக்க மாட்டான்.” என்ற ஸ்வாதி எழுந்து நின்று, “என் நண்பேன் டா…” எனச் சரத்தை பார்த்து சொல்லிவிட்டு, அங்கிருந்த மற்ற நண்பர்கள் கூட விளையாட சென்றுவிட்டாள். 

ஷ்ரேயாவிற்கு முகம் தொங்கி போய்விட்டது. தனக்குத் தெரியவில்லை தன் கணவனைப் பற்றி, அவன் தோழிக்குத் தெரிகிறது. அவர்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருக்கிறது. அவர்கள் இருவரையும் பார்த்து சற்றுப் பொறாமையாகக் கூட இருந்தது. 

அதன் பிறகு ஸ்ரேயா அமைதியாக இருந்தாள். யார் கூடவும் பேசவும் இல்லை. இரவு உணவு முடிந்து கடற்கரையில் தீமூட்டி, அதைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்து இருந்தனர். 

சில விளையாட்டு போட்டிகளும் நடத்திக் கொண்டு இருந்தனர். ஸ்ரேயா வேறு எதோ எண்ணத்தில் இருந்தவள், மெல்ல எழுந்து கடற்கரையை நோக்கி சென்றாள். 

அவள் சென்ற பிறகுதான், அவள் அங்கில்லாததைக் கவனித்த சரத், அவள் தள்ளி நிற்பதை பார்த்து அங்கே விரைந்தான். 

“சொல்லிட்டு வர மாட்டியா…” 

“இல்லை சும்மா காலாற நடந்தா நல்லா இருக்கும்ன்னு தோனுச்சு.” 

“என்னைக் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல…இங்க தனியா எல்லாம் வரக் கூடாது.” என்றவன், அவள் கையைப் பிடித்துக் கொண்டு கடல் நீரில் கால்கள் நனையுமாரு நடந்து சென்றான். 

“என்ன ஆச்சு?” அவன் கேட்டதற்கு, ஒன்றும் இல்லை என்று விட்டாள். 

சிறிது நேரம் நடந்துவிட்டு மற்றவர்கள் இருந்த இடம் வந்த போது, விளையாட்டு முடிந்து சிலர் உறங்கவும், சிலர் மது அருந்தும் இடம் நோக்கியும் செல்ல, இவர்களும் அறைக்குத் திரும்பினர். 

ஸ்வாதியை அவள் அறையில் விட்ட சரத், “யார் தட்டினாலும் கதவை திறக்காத. ஏதாவதுன்னா போன் பண்ணனும். காலையில பார்ப்போம்.” எனச் சொல்லிவிட்டு வந்தான். 

உடைமாற்றி ஸ்ரேயா படுக்கைக்கு வந்தபோது சரத்தும் உடை மாற்றி இருந்தான். 

“எதாவது வேணுமா ஸ்ரேயா…” சரத் கேட்க, 

“இல்லை… பசிக்கலை.” என்றாள். 

“நாம ரெண்டு பேரும் காலையில சீக்கிரம் எழுந்து பீச்க்குப் போய்ச் சன்ரைஸ் பார்க்க போவோம்.” என்றவன் படுத்ததும் உறங்கிப் போனான். சொன்னபடி அதிகாலையில் எழுந்தவன், ஸ்ரேயாவை எழுப்பிக் கடைகரைக்கு அழைத்துச் சென்றான். 

இருவரும் அங்கிருந்த மணல் மேட்டில் உட்கார்ந்து சூரிய உதயத்தைப் பார்த்து ரசித்தனர். 

“நல்லா இருக்கு இல்ல…” 

“ம்ம்..” என்றவள் இறங்கி சென்று கடல் அலையில் கால்களை நனைத்தாள். சரத்தும் சேர்ந்து அவளோடு நின்று கொண்டான். இன்னும் சிலரும் கடற்கரையில் இருந்தனர். 

அப்போது ஒருவன் மட்டும் தனியாக உட்கார்ந்து இருந்தான். அவனைக் காண்பித்த ஸ்ரேயா, “அவரும் உங்க ஆபீஸ் தான… ஏன் எப்பவும் தனியாவே இருக்கார்?” எனக் கேட்டாள். 

“அவன் கொஞ்சம் அமைதியா தான் இருப்பான்.” 

“இன்னும் அவருக்குக் கல்யாணம் ஆகலையா?” 

“இப்ப கொஞ்ச நாள் முன்னாடி டைவர்ஸ் ஆகிடுச்சுன்னு கேள்விபாட்டேன். அதுதான் அப்படி இருக்கானோ என்னவோ.” 

ஸ்ரேயாவுக்கு அவனைப் பார்க்கும் போது ரொம்பப் பாவமாகத் தோன்றியது. அதை அப்படியே அவள் சரத்திடம் சொல்ல… 

“நீ பீல் பண்ற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்லை. இன்னொரு கல்யாணத்துக்குப் பொண்ணு பார்த்திட்டு இருக்கிறதா கேள்வி.” 

அது இன்னும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. டைவர்ஸ், இரண்டாம் திருமணம் எல்லாம் அவ்வளவு எளிதா எனத் தோன்றியது. அப்போது ஸ்வாதி சரத்தின் செல்லுக்கு அழைத்தாள். 

“பீச்ல இருக்கேன் வா…” என வைத்து விட்டான். 

ஒரு கையில்லா பனியனும், முக்கா பேண்ட்டும் அணிந்து வந்தவள், மணல்மேட்டில் குழந்தை போலச் சரிந்து வர…சரத் அவளை முறைத்தான். 

“என்ன டா முறைக்கிற?” என்றவள், அவனைக் கடல் அலையில் தள்ளி விட்டவள், ஸ்ரேயாவையும் தள்ள வர… ஸ்ரேயா விலகி ஓடினாள். 

கீழே இருந்து மண்ணை எடுத்து சரத் மீது அடித்தவள், அவளும் நீரில் உட்கார்ந்து கொண்டாள். 

“பீச்ல இப்படிதான் விளையாடனும், அதை விட்டு அசிங்கமா, நின்னுட்டு இருக்கீங்க.” ஸ்வாதி சொல்ல… 

“நீ கரடி இல்லை டி… நீர் யானை.” என்றான் சரத். அவர்கள் இருவரையும் பார்த்து ஸ்ரேயாவுக்குச் சிரிப்பு வர, வாய்விட்டு சிரித்தாள். 

“நீ இந்தப் பிசாசு கிட்ட இருந்து தப்பிச்சிட்ட…” என்றவன், இன்னும் உள்ளே சென்று கடலில் குளித்தான். 

“நீயும் வாயேன் ஸ்ரேயா இன்னும் குளிக்கலை இல்லையா…” ஸ்வாதி அழைக்க … ஸ்ரேயாவும் அவள் அருகில், நீரில் சென்று உட்கார்ந்தாள். 

“உன்னைக் கரடி, நீர் யானை, பிசாசுன்னு எல்லாம் சொல்றார். உனக்குக் கோபமே வரலையா…” ஸ்ரேயா கேட்க, 

“எது சொன்னாலும் என்கிட்டே நேராத்தான் சொல்வான். பின்னாடி யார்கிட்டயும் சொல்ல மாட்டான்.” என்றாள் ஸ்வாதி தெளிவாக. 

இந்தக் குணம் அவனுக்கு இருப்பதால் தான்… அன்று அவள் அம்மா பேசியதை கேட்டதும், அவ்வளவு கோபம் வந்தது எனப் புரிந்தது. 

இப்போது ஸ்வாதி மீது கூட ஸ்ரேயாவுக்குப் பொறாமை இல்லை. சரத் நட்புக்கு எந்த அளவு முக்கயத்துவம் கொடுத்தானோ… அதற்கு மேலாகவே மனைவிக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் கொடுத்தான். எந்த இடத்திலும் அவளை விட்டுக் கொடுத்தது இல்லை. 

அவன் தெளிவாகத்தான் இருக்கிறான். நாம்தான் குழப்பிக் கொள்கிறோமோ என ஸ்ரேயா நினைத்தாள். 

மனம் விட்டு பேசினாலே பாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும். சரத் செயலில் நிறையக் காட்டுவானே தவிர… மனம் விட்டு பேச மாட்டான். 

பெற்றோர் மீது கூட நிறையப் பாசம் வைத்திருக்கிறான். இருந்தாலும், அவன் அதை வாய்விட்டு சொல்ல மாட்டான். ஏன் அம்மாவின் மடியில் படுப்பது, செல்லம் கொஞ்சுவது எதுவும் கிடையாது. ஆனால் கொஞ்சமும் விட்டுக் கொடுக்க மாட்டான். அதை வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும். 

ஆனால் அப்படியே எல்லா நேரத்திலும் இருக்கக் கூடாது. மனைவிடம் மானே தேனே பொன்மானே எனப் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். 



Advertisement