Advertisement

தள்ளி போகாதே நிலவே 


அத்தியாயம் 7

சரத் வெளியே சென்றதும், சிறுது நேரம் ஸ்ரேயா கோபமாக உட்கார்ந்து இருந்தாள். பிறகு அவளின் பார்வை உணவு மேஜையில் இருந்த உப்புமாவின் பக்கம் செல்ல… அப்போது தான் அவளுக்குப் பசியே தெரிந்தது. 

ஒரு தட்டில் பரிமாறியவள், பசியில் ருசி அறியாமல் முதல் நான்கு வாய் சாப்பிட்டவளுக்கு, மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. 

தண்ணீரை குடித்து விழுங்கு எனச் சரத்திடம் சொன்னவளுக்கு, அதைச் செய்தும் விழுங்க முடியவில்லை. 

குப்பையில் கொட்டி விடலாம் என நினைத்து எழுந்தவள், சரத் உள்ளே வருவதைப் பார்த்து, சாப்பிடுவது போல அமர்ந்து கொண்டாள். பின்னே மானம் எங்களது உயிர் அல்லவா… 

பிரட் பழங்கள் என வாங்கி வந்தவன், ப்ரெடில் ஜாம் தடவி சாப்பிட ஆரம்பித்தான். உப்புமாவை விழுங்க முடியாமல் ஸ்ரேயா விழுங்கிக் கொண்டு இருக்க…. 

“அதைப் போய் எப்படிச் சாப்பிடுற? அதோட பேரே உப்புமா தான். ஆனா அதுல உப்பே இல்லை…. அதைக் குப்பையில போட்டுட்டு இந்தப் பிரட் சாப்பிடு. மத்தியானம் வெளிய போய்ச் சாப்பிடுவோம்.” சரத் சொல்ல, 

“அப்படி ஒன்னும் மோசமில்லை. எனக்குப் பிடிச்சிருக்கு… ஆனா எனக்குப் பிரட்டும் பிடிக்கும்.” என்றவள், உப்புமாவை வைத்து விட்டு வந்து, பிரட்டை எடுத்து உண்டாள். இன்னொரு சண்டை வேண்டாம் என நினைத்து, சரத் வாயிக்குள் சிரிப்பை அடக்கினான். 

“இங்க பாரு கஷ்ட்டப்பட்டு எல்லாம் நீ வேலைப் பார்க்க வேண்டாம். முடியலைனா சமையலுக்கு ஆள் வச்சுக்கோ.” என்றான். 

“ம்ம்…” 

இருவரும் சாப்பிட்டு எழுந்ததும், ஸ்ரேயா உப்புமா இருந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி, இதை என்ன செய்வது என யோசிக்க…. 

“இந்த உப்புமாவை தயவு செஞ்சு நாய்க்கு மட்டும் போட்டுடாத… அப்புறம் அது கோபத்தில உன்னைக் கடிச்சு வச்சிடும்.” எனச் சரத் கேலி செய்ய… 

உப்புமாவை சாப்பிடுவதற்கு முன்பு ஸ்ரேயா இருந்த மனநிலை வேறு…. சாப்பிட்ட பிறகு இருக்கும் மனநிலை வேறு… அதனால் அவளுக்குமே சரத் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பு வந்துவிட்டது. அவள் சிரித்ததும், சரத்தும் பதிலுக்குச் சிரித்தான். 

சிரித்தபடி இருந்தவனின் பார்வை மனைவியை வேறு நோக்கில் ஆராய…அதை உணர்ந்து சிவந்த ஸ்ரேயா… அங்கிருந்து செல்லப் பார்க்க… 

“ஹே… எங்க போற?” என்றவன், மனைவியைத் தள்ளிக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றான். 

“எனக்கு வேலை இருக்கு. மதியம் வெளியப் போகணும்ன்னு சொன்னீங்க…” 

“அதுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு. நானும் உனக்கு உதவி பண்றேன்.” என்றவன், அங்கே ஒரு காதல் அத்தியாத்தை எழுத தொடங்கினான். 

சரத் சொன்னபடி சமையலுக்கு ஒரு வட நாட்டு பெண்மணியை வைத்தனர். வேறு யாரும் கிடைக்கவில்லை. 

காலை வேலைக்கு ஸ்ரேயாவே தோசை, இட்லி எனச் செய்து விடுவாள். மதியம் அலுவலகத்தில் உண்டனர். இரவு மட்டும் சப்பாத்தியும் தொட்டுக்கொள்ளக் குழம்பும் செய்வதுதான் ஆள் வைத்தனர். 

அந்தப் பெண்மணி இரவு ஏழு மணிக்குத்தான் வருவர். அரை மணியில் சமையல் முடித்து, பாத்திரமும் கழுவி வைத்து விட்டு சென்று விடுவார். 

முதல் ஒரு வாரத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. ஸ்ரேயாவிற்கும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லாததால்…. டென்ஷன் இல்லாமல் இருந்தாள். 

எல்லாம் ஒரு வாரம் வரையில் தான். அதற்குள்ளேயே அவரது சமையல் சலிப்பை கொடுத்தது. சப்பாத்தியாவது பரவாயில்லை. ஆனால் குழம்பு தான் சொதப்பியது. எந்தக் குழம்பு வைத்தாலும், ஒரே சுவையில் தான் இருந்தது. வேறு ஆள் கிடைப்பது கடினம் என்பதால் சமாளித்துக் கொண்டு இருந்தனர். 

அதற்கு அடுத்து வந்த வார இறுதியில் மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு சரவணனும் சங்கீதாவும் வந்து விட… இருவருக்கும் சாப்பாடு பிரச்சனை தீர்ந்தது. 

சங்கீதாவும் வந்த உடனேயே சமையலில் இறங்கி விட்டார். காலை வேளைக்கு வெண் பொங்கல், சட்னி, சாம்பாருடன் வடையும் செய்து இருந்தார். 

சங்கீதா வெகு நேரம் சமையல் அறையில் நிற்பவர் அல்ல… ஆனால் அதே சமயம் சீக்கிரத்தில் சுவையாகச் சமைத்து விடுவார். 

சரத்திற்குப் பொங்கல் மிகவும் பிடிக்கும். அவன் நன்றாக ஒரு கட்டுக் கட்டிக் கொண்டு இருந்தான். 

மதியத்திற்கும் கார குழம்பு செய்து, இரண்டு பொரியல் வைத்து இருந்தார். மாலையில் சரத் பாயசம் செய்யச் சொல்லி கேட்டு வாங்கிச் சாப்பிட்டான். 

“அம்மா, நைட் நீங்களே சமைச்சுடுங்க. சப்பாத்தி வேண்டாம்.” என்றான். 

சங்கீதா ரவா தோசை ஊற்றிக் கொடுத்தார். சமையல் செய்யும் பெண்மணி வந்து பாத்திரம் மட்டும் கழுவி வைத்து விட்டு சென்றார். 

நான்கு நாட்களும் மகன் மருமகளுக்கு வாயிக்கு ருசியாகச் சங்கீதா சமைத்து போட்டார். 

ஊருக்கு கிளம்பும் அன்று, இரவு சாப்பிடும் போது சரத், “அம்மா புதினா துவையல் அரைச்சு வச்சிடீங்க தானே.” என்றான். 

“வச்சிட்டேன் டா…” சங்கீதா சொல்ல, 

“ஆனாலும் அத்தை, நீங்க ரொம்ப உங்க மகன் நாக்கை வளர்த்து வச்சிருக்கீங்க. நீங்க இருக்கிறதுனால இவ்வளவு சாப்பிடுறார்… இல்லைனா சாப்பிடுறது இல்லை.” ஸ்ரேயா சொல்ல, 

“அவனுக்கு டேஸ்ட் நல்லா இருக்கணும். சில பேர் மாதிரி அசைவம் தான் பிடிக்கும்ன்னு இல்லை. சாம்பார் வச்சு நல்ல பொரியல் வச்சாக் கூடச் சாப்பிட்டு போய்டுவான்.” எனச் சங்கீதா மகனைப் பற்றிப் பெருமையாக ஆரம்பிக்க… 

“சாப்பிட மட்டும் கத்துக் கொடுத்து இருக்கீங்க. ஆனா சமைக்க மட்டும் தெரியலை…. சமையல்கட்டுப் பக்கம் எட்டி கூடப் பார்க்க மாட்டேங்கிறார். நீங்க என்ன பையன் வளர்த்து இருக்கீங்க?” எனக் கேலியாக ஸ்ரேயா சொல்ல, சரத்திற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவன் பெற்றோரைப் பார்க்க… 

“இப்படி இருக்காத டா… வர்ற மருமகள் என்னைத்தான் திட்டுவான்னு, நானும் சொல்லத்தான் செய்வேன்… பாரு நீ இப்ப சொல்லி காட்டிட்டே…” என்ற சங்கீதாவின் குரலில் மருந்துக்கும் கோபம் இல்லை. 

“ஆண் பிள்ளை அதனால அவன் சமையல் செய்யக் கூடாதுன்னு எல்லாம் இல்லை. அவன் சின்னப் பையனா இருக்கும்போது, என் மாமியாரும் இருந்தாங்க. அதனால வீட்ல ரெண்டு பொம்பளைங்க இருந்ததுனால… அவன் சமையல் கத்துக்கனும்ன்னு அவசியம் வரலை.” 

“பெரிசானதும் காலேஜ் போக வரத்தான் நேரம் இருந்தது. வீட்டுக்கு வந்தும் படிக்கனுமே… அப்புறம் வேலைக்காகச் சென்னை வந்தாச்சு… இதுல நான் எங்க சமையல் கத்துக் கொடுக்கிறது.” 

“நீ என்னையே இப்படிச் சொல்ற. எங்க மாமியார் இருக்கும் போது, இன்னும் அவனுக்கு ராஜ உபச்சாரம் தான். தண்ணி கூட அவன் எடுத்து குடிக்க மாட்டான்.” 

“நான் அப்படியே அவனை எதாவது வேலை சொன்னாலும், என் மாமியார் அவனுக்கு முன்னாடி நிற்பாங்க. நான் என்ன சொல்றது?” 

“என் மாமியார் இருந்தவரை, இவரையும் ஒன்னும் பண்ண விட மாட்டாங்க. இப்பத்தான் உங்க மாமனார் எனக்குச் சமையல் வேலையில ஒத்தாசை பண்றார்.” 

“ஓ… ராஜா வீட்டு கண்ணுக் குட்டி.” என ஸ்ரேயா கிண்டல் செய்ய… மற்றவர்கள் சிரிக்க, சரத் சிரிக்க வேண்டுமே என லேசாக உதடை இழுத்துப் பிடித்தான். 

சரவணனும் சங்கீதாவும் கோயம்புத்தூர் சென்று மூன்று நாட்கள் ஆகிவிட்டது. சரத் வேலையைக் காரணம் காட்டி, இரவில் வீட்டிற்குத் தாமதமாகத் தான் வந்து கொண்டிருந்தான். 

வெள்ளி இரவு தாமதமாக வந்தவன், சனிக்கிழமை வழக்கத்தை விடச் சீக்கிரமே எழுந்து கொண்டான். ஸ்ரேயா எழுந்து வருவதற்குள் தன்னுடைய உடைகளைச் சலவை இயந்திரத்தில் போட்டுவிட்டு… குளித்து விட்டு வந்தான். 

“என்ன அதுக்குள்ள எழுந்து குளிச்சிட்டீங்க.” 

“இன்னைக்கு ஒரு ட்ரீட் இருக்கு. அதுதான் கிளம்பிட்டு இருக்கேன்.” 

“யாரு உங்க ப்ரண்ட் ஸ்வாதி கொடுக்கிறாளா?” 

“சும்மா அவளையே ஏன் வம்புக்கு இழுக்கிற? பாலாஜி பெங்களூர்ல வேலை கிடைச்சுப் போறான். அதுக்கு இன்னைக்கு ட்ரீட் கொடுக்கிறான். அதுதான் கிளம்பிட்டு இருக்கேன். எனக்கு மதியம் சமைக்க வேண்டாம்.” 

“உங்க பிராண்டுக்கு ட்ரீட் கொடுக்க வேற நாள் இல்லையா? சனிக்கிழமை கூட வீட்ல இருக்க விட மாட்டாங்களா? நாம வெளியப் போறோம், நான் வரலைன்னு சொல்லுங்க.” 

இதையேதான் இவனும் பாலாஜியிடம் கேட்டு இருந்தான். ஆனால் மற்றவர்கள் இன்றுதான் வசதி எனச் சொல்லிவிட்டனர். அதனால் சரத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அதை ஸ்ரேயாவிடம் சொல்லாமல் வாக்குவாதம் செய்தான். 

“இப்ப என்ன டி உனக்குப் பிரச்சனை? கல்யாணம் ஆனதும், உன் பின்னாடியே நான் எல்லாத்துக்கும் வாலாட்டிட்டு நிற்கனும்ன்னு எதிர்பார்க்கிறியா?” 

“அன்னைக்கு எங்க அம்மாவை பார்த்து என்ன பையனை இப்படி வளர்த்து வச்சிருக்கீகன்னு கேட்கிற?” என இத்தனை நாள் மனதிற்குள் வைத்திருந்ததைக் கேட்டே விட்டான். 

“நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்.” 

“நீ விளையாட்டுக்கு கேட்கலை, அது எனக்கு நல்லாத்தான் தெரியும்.” 

“சமையல் மட்டும் ஏன் சொல்லிக் கொடுக்கலைன்னு கேட்டேன். அது ஒரு தப்பா?” 

“உனக்கு மட்டும் எல்லாமே தெரியுமா… பொண்ணா இருந்து சமைக்கக் கூடத் தெரியலை…. அதை நான் பொறுத்திட்டு சாப்பிட்டிருக்கேனே தவிர, யார்கிட்டையாவது உன்னை விட்டுக் கொடுத்து பேசி இருக்கேனா…” 

“அதோட சமையல்காரங்க செய்றது எனக்குச் சுத்தமா பிடிக்கலை… ஆனா அவங்களை நிறுத்தினா உனக்குக் கஷ்ட்டமா இருக்கும்ன்னு தான், அதையும் பொறுத்திட்டு தான் போறேன். ஆனா நீ என்னைப் பத்தியே எங்க அம்மாகிட்ட குறை சொல்ற.” 

“இதுவரை உன்னை நான் எதாவது சொல்லி இருக்கேனா… இதைப் பண்ணாத அதைப் பண்ணாதேன்னு…” 

“எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, நீ அதைத் தாண்டிப் போற சொல்லிட்டேன்.” 

சரத் பேசப் பேச ஸ்ரேயாவின் கோபம் ஏறிக் கொண்டே சென்றது. 

“நானும் தான் கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் பண்ணது இல்லை. இப்ப பண்றேன் இல்ல… ஏன் சமைக்கிறது பொண்ணுங்க வேலையா?”
“நீங்களும்தான் அன்னைக்கு வேலைக்கு போகதே சொன்னீங்க. நான் உங்களுக்கு சமைச்சு போடத்தான் இருக்கேனா.”  
“நான் அப்படி நினைக்ககிறவனா ஸ்ரேயா? நீ கஷ்ட்டபப்டுறியேன்னு தான் சொன்னேன்.”

“உன் மனசாட்சி தொட்டு சொல்லு, நான் உனக்கு வேற வேலை எதுவும் பண்றது இல்லையா.. சமையல்ல மட்டும் தான் உதவி பண்றது இல்லை. ஆனா நீ எங்க அம்மாகிட்ட என்னைக் குறை சொல்லலை. இதே நான் உங்க அம்மாகிட்ட எப்பவாவது உன்னைப் பத்தி குறை சொல்லி இருக்கேனா?” 

ஸ்ரேயா அவன் பெற்றோரிடம் சரத்தை பற்றிச் சொன்னது, அவனை மிகவும் காயப்படுத்தி இருந்தது. உண்மையில் சரத் யாரும் தன்னைக் குறை சொல்லும் அளவு வைத்துக் கொள்ள மாட்டான். 

அலுவலகத்தில் கூட மேல் அதிகாரிகள் கேள்வி கேட்கும் நிலையை கூட அவன் என்றுமே வைத்துக் கொண்டது இல்லை. சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுத்து விடுவான். பள்ளியில் படிக்கும் போதிருந்தே அப்படித்தான். 

“நான் உங்க அப்பா அம்மாகிட்ட தானே சொன்னேன். வேற யார்கிட்டேயும் சொன்னேனா?” 

“யாருக்கு தெரியும், எங்க அப்பா அம்மாகிட்ட சொன்னவ, உங்க அப்பா அம்மாகிட்ட மட்டும் சொல்லி இருக்க மாட்டியா என்ன?” 

“நான் சொல்லலை…” 

“நீ சொன்னாலும், எனக்குக் கவலை இல்லை.” என்றவன், அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். 

“உங்களுக்கு மட்டும் தான் கோபப்படத் தெரியுமா எனக்கும் தெரியும்.” எனக் கதவுக்கு வெளியே நின்று ஸ்ரேயா கத்தினாள். 

சரத்திற்கு வெளியே செல்லும் மனநிலையே இல்லை. அந்நேரம் ஸ்வாதி அழைக்க, எடுத்து என்ன என்றான். 

“கிளம்பிட்டியா டா? எங்க இருக்க?” 

“நான் வர லேட் ஆகும், நீ கிளம்பி போ…” 

“என்னடா இப்ப சொல்ற?” 

“நான் என்ன உனக்கு டிரைவரா? என்னால வர முடியாது போ.”
ஸ்ரேயாவின் மீது இருந்த கோபத்தைச் சரத் ஸ்வாதியிடம் காட்ட, “கல்யாணம் ஆனதும் நீ ரொம்ப மாற்றிட்ட டா…” என அவள் வேறு வாயை விட…. 

“இத்தனை நாள் பண்ணது எல்லாம் மறந்திட்ட இல்ல… ஒருநாள் மூட் சரி இல்லாம சொன்னா…. உடனே நான் மாறிட்டேன்.” 

“ஹே அப்படி இல்லை டா….” 

“பொண்ணுங்க எல்லாம் ஒரே மாதிரி தான். உங்களுக்குப் பிடிச்ச மாதிரியே நாங்க எப்பவும் நடந்துக்கணும். அப்படி நடந்துகிட்டா நாங்க நல்லவங்க, இல்லைனா கெட்டவங்க.” 

“என்ன டா? நான் என்னவோ கேட்டா, நீ என்னவோ சொல்ற. சரி நீ கிளம்பி வா… அப்புறம் பாலாஜி தப்பா நினைச்சிப்பான். நான் கேப் புக் பண்ணி வந்திடுறேன்.” 

“ம்ம்… சரி…” என்றவன், வேகமாக உடைமாற்றி வெளியே வர… ஸ்ரேயா ஹாலில் உட்கார்ந்து இருந்தாள். 

“நான் வர சாயங்காலம் ஆகும்.” என்றவன், காலணி அணிந்து கொண்டு வெளியே செல்ல, 

“எப்ப வந்தா எனக்கு என்ன?” என ஸ்ரேயா நொடித்துக் கொண்டாள்.
அந்நேரம் அவளது அம்மா அழைக்க, தனியாக இருந்ததால் ஸ்பீக்கர் போட்டு பேசினாள். 

“என்ன டி என்ன பண்ற?” 

“சும்மாதான் மா இருக்கேன்.” 

“இன்னைக்குச் சனிக்கிழமை ஆச்சே எங்கையும் போகலை.” 

“இல்லை அவர் மட்டும் ப்ரண்ட்ஸ் கூட வெளிய போய் இருக்கார். ஆபீஸ் ட்ரீட் அதுதான்.” 

“போன வாரம்தான் உன்னோட அத்தை மாமா வந்திருந்தாங்க. எங்கேயும் வெளிய போகலை… இந்த வாரம் அவர் மட்டும் ஊர் சுத்த போயிட்டாரா…” 

“இவங்க அப்பா அம்மாவுக்கு வேலை பார்க்கவும், இவருக்குச் சமைச்சு போடவும் தான் நீ இருக்கியா?” எனத் தீபா எப்போதும் போலப் புலம்பலை ஆரம்பிக்க… 

ஸ்ரேயா வேறு மனநிலையில் இருந்ததால்… தீபா சொன்னதைச் சரியாகக் காதில் வாங்கவில்லை. ஆனால் சரத்தின் காதில் நன்றாக விழுந்திருந்தது. 

ஸ்ரேயாவுடன் சண்டை போட்டுவிட்டு சென்றவனுக்கு, அவளை விட்டு செல்லவும் மனமில்லை. வார இறுதியில் தான் நன்றாகப் பேசிக்கொள்ளக் கூட நேரம் இருக்கும். அன்றும் தான் மட்டும் வெளியே சென்றால், அவளுக்குக் கோபம் வரத்தானே செய்யும் என நினைத்து வீட்டிற்குத் திரும்பி இருந்தான். 

அவளையும் அழைத்துக் கொண்டு செல்வோம், என்ன பாலாஜி தானே… என் பொண்டாட்டியோட தான்டா என்னால வர முடியும் எனச் சொல்லிடுவோம் என்ற எண்ணத்தில் திரும்ப வந்தவன், தீபா பேசிய அனைத்தையும் கேட்டு இருந்தான். 

“ஹே…. நீ எப்ப டி அவங்களுக்கு வேலை பண்ண? எங்க அம்மாதான் உனக்கும் சேர்த்து சமைச்சு போட்டாங்க….. எப்படி இப்படி மனசாட்சி இல்லாம உங்களால பேச முடியுது?” சரத் சொல்லிக்காட்டவும் தான் ஸ்ரேயாவுக்கு அவள் அம்மா என்ன பேசினார் எனப் புரிந்தது. 

அதற்குள் சரத்தின் குரல் கேட்டு தீபாவும் போன்னை வைத்து விட்டார். 

“எங்க அம்மா உன்னைப் பார்த்த அன்னைக்கே சொன்னாங்க டி.. எனக்கு எதோ சரியாப்படலைன்னு… நான் எங்க அம்மா பேச்சை கேட்டிருக்கணும்…. பேசியே என்னைக் கவுத்திட்ட இல்ல… நான்தான் முட்டாள்.” 

“உன்னையும் கூடிட்டு போகலாம்ன்னு வந்தேன் பாரு ,என்னைச் சொல்லணும். நல்ல அம்மா நல்ல பொண்ணு.” என்றவன், ஸ்ரேயாவின் பக்க விளக்கத்தைக் கேட்காமலே திரும்பி சென்றான். 

தனது அம்மா பேசியதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும், அவன் நம்பப் போவது இல்லை என ஸ்ரேயாவுக்குப் புரிந்தது. 

அவள் சொன்ன ஒரு சின்ன விஷயத்திற்கே கோபப்பட்டவன், இப்போது தீபா பேசியதைக் கேட்ட பிறகு, ஸ்ரேயா எதோ சொல்லித்தான் அவள் அம்மா அப்படிப் பேசுகிறார் என்று தானே நினைப்பான். 

ஸ்ரேயாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. அதோடு, “உன்னை வேண்டாம்ன்னு எங்க அம்மா சொன்னாங்க, நான் அதைக் கேட்டிருக்கணும்.” என்ற வார்த்தை மிகுந்த வலியைக் கொடுத்தது. 

அவனால் எப்படி இப்படிச் சொல்ல முடிந்தது. அவனுக்கு நான் வேண்டாம் என்றால்… எனக்கும் அவன் வேண்டாம் என நினைத்தவளுக்குக் கண்ணீர் பெருகியது. 

நீ என்னை எப்படி விட்டுக் கொடுக்கலாம் என்பதுதான் இருவரின் எண்ணமும். 

தம்பதிகள் எந்த நிலையிலும் ஒருவரையொருவர்விட்டுக் கொடுக்கவில்லை என்றால்… அப்போது ஒரு கர்வம் வருமே…அது தரும் அழகே தனி. 

எல்லோருக்கும் அந்தப் புரிதல் திருமணமான உடனே வந்து விடாது. சில காலங்கள் பிடிக்கும், சரத்தும் ஸ்ரேயாவும் இப்படி அவசரப்பட்டால் எப்படி?

Advertisement