Advertisement

தள்ளி போகாதே நிலவே 


அத்தியாயம் 6 


திருமணம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் இருவர் வீட்டிலும் இருந்து விட்டு, புதுமணத் தம்பதிகள் கேரளாவுக்குத் தேனிலவு சென்றனர். ஐந்து நாட்கள் சென்று அவர்கள் திரும்ப வந்ததும், இருவரின் வீட்டினர் உட்பட எல்லோருமாகச் சேர்ந்து சென்னைக்குச் சென்றனர்.

ஸ்ரேயாவின் பெற்றோர் வீட்டிற்குத் தேவையான சாமான்களைச் சீர்வரிசையாகக் கொடுத்து விட்டு மறுநாளே கிளம்ப, சரவணனும் சங்கீதாவும் மட்டும் மேலும் இரண்டு வாரங்கள் இருந்தனர். 

அதற்கு மேல் சரவணனுக்கு விடுமுறை இல்லாததால் தான் கிளம்பினர். இருந்தவரை வீட்டு நிர்வாகம் சங்கீதாவிடம் தான். சரத்தும் ஸ்ரேயாவும் நிம்மதியாக வேலைக்குச் சென்று வந்தனர். 

ஸ்ரேயாவின் அம்மா தினமுமே அவளிடம் கேட்டு விடுவார். “இன்னும் உன் மாமனார் மாமியார் அங்க உட்கார்ந்திட்டு என்ன பண்றாங்க? புதுசா கல்யாணம் ஆனவங்க தனியா இருக்கட்டுமேன்னு கூட நினைக்க மாட்டாங்களா?” என்று. 

“அவங்க இருந்தா உங்களுக்கு என்ன மா? அவங்க இருக்கிறதுனாலதான் நான் நிம்மதியா வேலைக்குப் போயிட்டு வரேன்.” 

“உனக்கு இப்ப புரியாது நான் சொல்றது.” 

“புரியவே வேண்டாம்.” 

“எப்படியோ போ எனக்கு என்ன வந்தது?” 

சங்கீதாவும் சரவணனும் சென்றதும் வீடே அமைதியாக இருந்தது. இவர்களை அலைய வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, அவர்களே டேக்ஸ்யில் ரயில் நிலையத்திற்குச் சென்று இருந்தனர். 

“வீடே சட்டுன்னு அமைதியான மாதிரி இருக்கு இல்ல…” ஸ்ரேயா சொல்ல, அருகில் இருந்த சரத், அவளைத் தோளோடு அனைத்துக் கொண்டான். 

அன்று இரவு தனிமையும் மிகவும் இனிமையாக அந்தப் புது மனதம்பதிகளுக்குச் சென்றது. 

சங்கீதா இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டு சென்றதால்… அடுத்த நான்கு நாட்கள் சிரமாக இல்லை. காலை இரவு இட்லி தோசை எனச் செய்து சாப்பிட்டவர்கள், மதியத்திற்கு முடிந்தால்… ஸ்ரேயா சமைப்பாள்… இல்லையென்றால் அன்று மட்டும் வெளியே சாப்பிட்டனர். 

வார இறுதியில் இவர்கள் கோயம்புத்தூர் சென்றனர் அல்லது சரவணனும் சங்கீதாவும் இங்கே வந்துவிடுவார்கள். ஒரு மாதம் இப்படியே செல்ல…. வாழ்க்கை நன்றாகவே இருந்தது. 

ஒருநாள் அலுவலகத்தில் இருந்து வந்த சரத், எதோ சரி இல்லாததாக உணர்ந்தான். ஆனால் அலுவலகத்திலோ வீட்டிலோ பிரச்சனை இல்லை. 

என்ன என்ற ஸ்ரேயாவிடம், “இன்னைக்கு என்னவோ குறையுது என்னன்னு புரியலை.” என்றவன், உடனே நினைவுக்கு வந்தது போல… “இன்னைக்கு அம்மா உன்கிட்ட பேசினாங்களா?” எனக் கேட்டான். 

“இல்லையே நானும் பண்ணலை….” 

“அதுதான் அம்மா எப்பவும் நான் ஆபீஸ்கு போனதும் கூப்பிடுவாங்க, இன்னைக்கு ஏன் கூப்பிடலை? நானும் வேலையில கவனிக்கலை.” என்றவன், சங்கீதாவின் எண்ணிற்கு முயல… அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. சரவணின் எண்ணிற்கு முயல… அதுவும் தொடர்பில் இல்லை. 

“என்னவோ சரி இல்லை. இல்லைனா அம்மா பண்ணாம இருக்க மாட்டாங்க.” எனச் சரத் கொஞ்ச நேரம் தவித்துப் போனான். 

“நான் போய் எங்க அப்பாவை நம்ம வீட்ல பார்த்திட்டு வர சொல்லவா….” ஸ்ரேயா சொல்ல, அந்நேரம் சரவணனே அழைத்து விட்டார். சரத் பயந்தது போலத்தான் சங்கீதாவிற்குத் தான் உடல்நலம் சரி இல்லை. 

அவருக்கு மெனோபாஸ் நேரம், அதனால் சில மாதங்களாகவே தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த முறை வலியும் அதிகமாக இருக்க, மருத்துவமனை சென்று விட்டு வந்திருந்தனர். 

சரத் சொன்னால் பயப்படுவான் என்பதால் தான் அவனிடம் சொல்லவில்லை.
சங்கீதாவே தான் நலமாக இருக்கிறேன் எனச் சொல்லிவிட்ட போதிலும், சரத் அமைதி இல்லாமல் காணப்பட்டான். 

“அவங்களைப் போய்ப் பார்த்திட்டு வந்திடலாம். அப்பத்தான் நீங்க நிம்மதியா இருப்பீங்க.” ஸ்ரேயா சொல்ல, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு, அன்று இரவே இருவரும் கோயம்புத்தூர் கிளம்பி சென்றனர். 

பேருந்தில் ஏறிய பிறகுதான் வீட்டிற்கு அழைத்து வருவதாகச் சொல்லி இருந்தனர். 

தன் அம்மா நலமாக இருக்கிறார் என நேரில் பார்த்த பிறகுதான் சரத்திற்கு நிம்மதி ஆனது. சங்கீதா உதிரபோக்கின் காரணமாகச் சோர்வாக இருக்க, மருத்துவர் சொன்னபடி பழங்களைச் சரத் நறுக்கிக் கொடுத்தான். 

சரவணன் சமைக்க ஸ்ரேயா அவருக்கு உதவினாள். ஸ்ரேயாவுக்கு இன்னும் சமையல் அவ்வளவு பழகவில்லை. தெரிந்த சில பதார்த்தங்களைத் தான் திரும்பத் திரும்பச் செய்து சமாளித்துக் கொண்டு இருந்தாள்.  அவளும் படித்து முடித்ததும் வேலையில் சேர்ந்து விட்டாள். சமையல் கற்க எங்கே நேரம் இருந்தது.

மறுநாள் சங்கீதா முழுக் குணம் ஆகி விட… ஸ்ரேயா மட்டும் தன் தாய் வீட்டிற்குச் சென்றாள். இன்னும் அவள் வந்தது அவள் வீட்டினருக்குத் தெரியாது. 

திடிரென்று மாலை மகள் வந்து நின்றதும், தீபா திகைத்துப் போனவர், “வந்தது கூடச் சொல்லலை… அப்படி என்ன நாங்க அன்னியம் ஆகிட்டோம்.” எனச் சண்டைக்குச் சென்றார். 

ஸ்ரேயா தன் மாமியார் உடல்நிலை குறித்துச் சொன்னவள், அவங்களைப் பார்க்க திடிரென்று தான் கிளம்பி வந்தோம் என்றாள். 

“சின்ன விசயத்துக்குப் போய் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? இதுக்கா அவசரமா கிளம்பி வந்தீங்க…. ரொம்ப நல்லா இருக்கு.” 

“உங்க மாமனார் மாமியாராவது சொல்லக் கூடாது. இப்ப உங்களுக்குத் தானே தேவை இல்லாத அலைச்சல்.” 

“பாவம் அவங்களுக்கு ரொம்பத்தான் முடியலை. ஆனாலும் அவங்க எங்களை வர சொல்லலை… நாங்களா தான் வந்தோம்.” 

“சொன்னா வரத்தான் செய்வீங்க, இதெல்லாம் ஒரு விஷயமா ஏன் சொல்லணும்?” 

“அப்படியா சரி உனக்கு இது மாதிரி உடம்புக்கு வந்தா, நான் உன்னைப் பார்க்க வரலை…” ஸ்ரேயா தன் அம்மாவுக்குத் திருப்பிக் கொடுக்க, 

“நீ பார்க்கனும்ன்னு நானும் எதிர்பார்க்கலை.” என்றார் தீபாவும் திமிராக. 

“உனக்கு என்ன? பாட்டி இருக்காங்க, அதோட பையன் இருக்கான்னு தைரியம். என் மாமனார் மாமியாருக்கு யாரு இருக்கா?” 

“ஆமாம் உங்க பாட்டி அப்படியே வேலை பண்ணி கிழிக்கிறாங்க, அவங்களால தான் நான் எங்கையும் போக முடியாம உட்கார்ந்து இருக்கேன். உங்க வீட்ல கூட ஒருநாள் தானே இருந்தேன். அது தெரியலையா உனக்கு.” தீபா முகம் வாட…. 

தீபாவின் மாமியார் முன்பு எல்லாம் நன்றாக வேலை செய்வார். இப்போது அவருக்கு வயது ஆகிவிட்டதால் முடியவில்லை. அவரைப் பார்த்துக் கொள்ளவேண்டி தீபாவும் வெளியே எங்கையும் சென்று தங்க மாட்டார். 

“சரிமா… நான் அப்பாகிட்ட சொல்லிட்டு உங்களை ஒரு வாரம் என்னோட சென்னைக்குக் கூடிட்டு போறேன். பாட்டி வேணா அத்தை வீட்ல இருக்காட்டும்.” என்றவள், அவள் அப்பாவிடமும் நச்சரித்துத் தீபாவை உடன் அழைத்துக் கொண்டுதான் சென்னை சென்றாள். 

மகள் வீட்டில் ஒரு வாரம் இருந்து நன்றாகச் சீராடிவிட்டுத் தீபா கோயம்புத்தூர் கிளம்பினார். சரத் உணவு அருந்தும் வேளைகளில் அவரைச் சாப்பிட்டாரா எனக் கேட்டுக் கொள்வான், மற்றபடி அளவாகத்தான் பேசுவான். அவரிடம் மட்டும் அல்ல, மற்றவர்களிடமும் அவன் ரொம்பவும் அளவாகத்தான் பேசுவான். அது ஸ்ரேயாவுக்கு நன்றாகத் தெரியும். 

தீபாவும் சென்ற பிறகு, ஸ்ரேயாவிற்கு வீட்டை பார்த்து அலுவலகத்திற்கும் சென்று வர அலுப்பாக இருந்தது. சங்கீதாவின் உடல் நலம் கருதி, வீண் அலைச்சல் வேண்டாம் என்று அவர்களும் இங்கே வருவது இல்லை. இவர்கள் மட்டும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சென்று வந்தனர். 

திருமணமான புதிதில் ஆவலாகச் செய்து வந்த சமையல் வேலை இப்போது கடினமாகத் தெரிந்தது. சரத் வீட்டை ஒதுங்க வைப்பது, சலவை இயந்திரம் போடுவது எல்லாம் செய்வான், மற்றபடி சமையல் அறை பக்கம் கூட வர மாட்டான். 

வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்ததும், ஸ்ரேயாவுக்கு இரண்டு நாட்கள் விடுமுறையை நினைத்து மகிழ்ச்சியாக இல்லாமல், வீட்டில் இருக்கும் வேலைகளை நினைத்து கவலையே வந்தது. 

அவளுக்கு இன்னும் இட்லிக்கு மாவு அரைக்கத் தெரியாது. சங்கீதா இங்கு வந்தால்… அரைத்து வைத்துவிட்டு செல்வார். அல்லது இவர்கள் ஊருக்கு சென்றால்… அங்கே இருந்து அரைத்துக் கொடுத்து விடுவார். 

தீபா ஊருக்குச் செல்வதற்கு முன்பு அரைத்து விட்டுச் சென்றது காலியாகி இருந்தது. வார நாட்களில் மாவு இல்லை என்றால் மிகவும் சிரமம். கடை மாவு இவர்களுக்குப் பிடிப்பது இல்லை. அதுவேறு ஒருமுறை சங்கீதா, கடை மாவில் கல்லைக் கழுவாமல திரும்பத் திரும்ப அரைப்பார்கள், சோடா உப்பு வேறு போடுவார்கள் என சொல்லி இருந்ததால்… ஸ்ரேயாவுக்கு வெளியே வாங்கவும் யோசனையாக இருந்தது. 

இரவுக்கு மாவு இல்லாததால் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்து விட்டுத் தக்காளி தொக்கு செய்தாள். 

சரத் இன்னும் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கவில்லை. உடனே அவனுக்கு அழைத்தாள். 

“நான் வர லேட் ஆகும் ஸ்ரேயா, ப்ரண்ட்ஸ் கூட வெளிய போறேன்.”  என்றான்.

“எங்க பப்புக்கா?” 

“ஆமாம்…” 

“கல்யாணம் ஆகியும் திருந்த மாட்டீங்களா நீங்க.” 

“நான் திருந்துற அளவுக்கு தப்பு எதுவும் பண்ணலைன்னு நினைக்கிறேன்.” 

“வீட்ல எவ்வளவு வேலை இருக்கு, நான் என்ன பண்றதுன்னு தெரியாம மண்டையை உடைச்சிட்டு இருக்கேன். நீங்க வெளிய போறேன்னு சொல்றீங்க.” 

“ரெண்டு நாள் லீவ் தான…. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். நீ ரெஸ்ட் எடு நான் வந்திடுறேன்.” 

“இன்னைக்கு அப்படிக் கண்டிப்பா போகனுமா…” 

“ஸவாதி நான் இல்லாம தனியா போக மாட்டா…. நான் வரேன்னு அவகிட்ட சொல்லிட்டேன்.” 

“அப்ப உங்களுக்கு என்னை விட அவ முக்கியம்.” 

“இந்த ஆட்டத்துக்கு நான் வரலை… வீகென்ட் எனக்கு என்னோட பிரண்ட்ஸ் கூட இருக்க கூட சுதந்திரம் இல்லையா…. ஓ.. இதுக்குத்தான் பசங்க கல்யாணம் பண்ணிக்கப் பயப்படுறாங்க போலிருக்கு.” 

“இது ஒன்னு சொல்லிடுங்க, அப்ப பொண்ணுங்க நாங்க மட்டும் எல்லாத்தையும் விடணுமா…” 

“உன்னை யாரு விடச் சொன்னா, நீயும் வேணா எங்களோட வா…” 

“ச்ச… வைங்க போன்னை, உங்களோட பேசுறதே வேஸ்ட். ஆனா குடிச்சிட்டு மட்டும் வாங்க அப்புறம் வச்சுகிறேன்.” 

“என்னைக் குடிகாரன் ரேஞ்சுக்கு பேசாத…. உனக்குத் தெரியும் நான் சும்மா லைட்டாத்தான் எடுப்பேன்னு. அதுவும் பிரண்ட்ஸ் தப்பா நினைப்பாங்கன்னு தான்.” 

“உங்களுக்கு உங்க ப்ரண்ட்ஸ் தான் முக்கியம் அவங்களையே கட்டிட்டு அழுங்க.” என்றவள், போன்னை வைத்து விட்டாள். 

அந்த நேரம் வந்த ஸவாதி, “போகலாமா சரத் எல்லோரும் நமக்காகக் காத்திருக்காங்க.” என்றதும், சரத் எழுந்து சென்றான். 

மதிய உணவு வேளையில் ஸ்வாதி தான் ஆரம்பித்தாள். “இத்தனை நாள் தான் பார்ட்டிக்கு வரலை… இன்னைக்காவது வருவியா… உன்னை நம்பித்தான் எங்க வீட்லயும் அனுப்பினாங்க. வேலை செஞ்சு செஞ்சு மண்டை எல்லாம் சூடாகி இருக்கு டா…. போய் ஒரு டான்ஸ் போட்டுட்டு வந்தா நல்லா இருக்கும்.” என அவள் சொன்னதும், சரத்திற்கும் சென்று வரலாமே என்று தோன்றியது.
நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என இருந்துவிட்டு வீடு வந்தால்…. ஸ்ரேயா உறங்கி இருந்தாள். 

மறுநாள் காலை இருவருமே தாமதமாகத் தான் எழுந்தனர். சரத் ஸ்ரேயாவை சமாதானம் செய்யும் எண்ணத்தில், புன்னகையுடன் அவளின் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுக்க, “எனக்கு வேலை இருக்கு.” என அவன் கையைத் தட்டி விட்டு சென்றாள். 

சரத்திற்கு இறங்கி செல்லும் பழக்கமே இல்லை. அதனால் அதோடு விட்டு விட்டான். அவனின் ஒரு வார உடைகளையும் சலவை இயந்திரத்தில் போட்டு விட்டு வந்து, வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். 

ஸ்ரேயா காலை உணவுக்கு ரவை உப்புமா செய்து எடுத்து வந்து ஹாலில் வைத்தவள், தொட்டுக் கொள்ளச் சக்கரை தான் வைத்து இருந்தாள். 

சரத் கொஞ்சமாகத் தட்டில் எடுத்துக் கொண்டு டிவி முன்பு சென்று ஒருவாய் எடுத்து வைத்தவனின், முகம் அஷ்ட்ட கோணல் ஆனது. 

“என்னது இது உப்மாவா கலியா… வாயெல்லாம் ஒட்டுது.” 

“ஓட்டினா தண்ணியைக் குடிங்க. இதைச் செய்ய நான் எவ்வளவு கஷ்ட்டபட்டேன்னு எனக்குத்தான் தெரியும்.” 

“இதைப் போய் உன்னை யாரு கஷ்ட்டப்பட்டுச் செய்யச் சொன்னது? நான் பிரட் கூடச் சாப்பிட்டிருப்பேன்.” என்றவன், உப்புமாவை சென்று அங்கிருந்த குப்பை கூடையில் கொட்டியதை பார்த்ததும், ஸ்ரேயாவின் ரத்தம் அழுத்தம் உச்சி வரை ஏறியது. 

“எப்படி உங்களுக்குச் சாப்பாட்டைக் குப்பையில கொட்ட மனசு வருது?” 

“அதுக்காக நல்லா இல்லாததைச் சாப்பிட முடியுமா?” 

“நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டுப் பண்ணேன்.” 

“நான் உன்னைச் சமையல் பண்ண சொல்லி சொல்லலையே… கஷ்ட்டமா இருந்தா பண்ணாத.” 

“அதுக்காகச் சாப்பிடாம இருக்க முடியுமா…. நான் வேலைக்கும் போயிட்டு வீட்லயும் வேலை பார்கிறேன். கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ்ட் பண்ண முடியாதா….” 

“உனக்கு ரெண்டும் பார்க்க கஷ்ட்டமா இருந்தா, வேலையை வேணா விட்டுடு…. நீ வேலைக்குப் போய்த் தான் ஆகணும்ன்னு கட்டாயம் இல்லை.” என்றவன், தனது பர்சை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான். 

அவன் வேலைக்குப் போகாதே என்றது ஸ்ரேயாவின் சுயமரியாதையைத் தட்டி பார்த்தது. 

அவனைப் போலத் தானே, நானும் கஷ்ட்டப்பட்டுப் படிச்சு வேலை வாங்கினேன். இவனுக்குச் சமைத்து போட, நான் வீட்டில் இருக்கணுமா எனக் கோபம் வந்தது. 

அவள் சிரமம் என்று சொன்னதால் தான் சரத் வேலைக்குப் போகாதே என்றான். 
எதோ பணத்திற்காக மட்டும் வேலைக்குச் செல்வது போல அவன் நினைத்துவிட்டான். பணம் தானே போனால் போகிறது என்ற எண்ணம் அவனுக்கு.

அப்படியே வேலைக்குப் போக வேண்டாம் என முடிவெடுத்தாலும், அது ஸ்ரேயாவின் முடிவாக இருக்க வேண்டும். 

வேலைக்குச் செல்வதில் அவளுக்கு இருக்கும் விருப்பம், ஆர்வம் அதைப் பற்றி எல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவன் எடுத்ததும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றதும், ஸ்ரேயா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள்.


Advertisement