Advertisement

தள்ளி போகாதே நிலவே 


அத்தியாயம் 5 


“டேய் சரத் போன வாரமே படத்துக்குக் கூப்பிட்டேனே, இந்த வாரமாவது வரியா டா….” 

“ஆமாம் கூப்பிட்ட இல்ல….சரி போகலாம். நீ ஸ்ரேயாவுக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுடு.” 

“அவ வருவாளா முதல்ல கேட்டுக்கோ…” 

“அதை நான் பார்த்துகிறேன். நீ டிக்கெட் போடு.” 
அன்று இரவு பேசும் போது, சரத் படத்திற்குப் போகலாம் என்றதும், ஸ்ரேயா சந்தோஷமாகச் சரி என்றாள். 

“ஸ்வாதி தான் கூப்பிட்டா. அவதான் டிக்கெட் போட்டிருக்கா.” என்றதும், ஸ்ரேயாவுக்குச் சொத்தென்று ஆகிவிட்டது. 

“நீங்க உங்க ப்ரண்ட் இல்லாம எங்கையும் வர மாட்டீங்களா?” என்றாள். 

“ஹே… அவ போன வாரமே படத்துக்குக் கூப்பிட்டா… அவளை விட்டுட்டு நாம மட்டும் போனா நல்லா இருக்காது. அவ தெரிஞ்சா பீல் பண்ணுவா.” 

“இந்த வாரம் அவளோட சேர்ந்து போவோம். அடுத்தத் தடவை வேணா நாம மட்டும் போகலாம்.” 

“சரி…” 

“அதைக் கொஞ்சம் சந்தோஷமா சொல்லேன்.” 

“போன்ல சிரிக்கிறது உங்களுக்குத் தெரியுமா?” 

“ஹே இரு, வீடியோ கால் பண்றேன்.” என்றவன் தொடர்பை துண்டித்து விட்டு, வீடியோ கால் செய்து வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தான். 

சனிக்கிழமை காலை அழைத்த சங்கீதா, “இன்னைக்கு என்ன படத்துக்குப் போறியா?” என்றார். 

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” சரத் ஆச்சர்யமாகக் கேட்க, 

“ஸ்ரேயா காலையில போன் பண்ணி இருந்தா அப்ப சொன்னா.” 

“ஓ…. இது எப்போ இருந்து.” 

“அவ உன்னை மாதிரி இல்லை. மூன்னு நாளைக்கு ஒரு தடவை என்கிட்டயும் அப்பா கிட்டயும் பேசுறா.” என்றார். 

சரத் அவனாகப் பெற்றோருக்கு அழைப்பது அரிது. ஆனால் அதே அவர்கள் அழைத்தால், எங்கு இருந்தாலும் எடுத்துப் பேசுவான். அதுவும் சங்கீதா தான் நினைத்த நேரமெல்லாம் போன் செய்வாரே… அதனால் இவன் மெனக்கெட்டு அழைக்க மாட்டான். 

“நீங்க எப்படி மருமகளோட இவ்வளவு ராசி ஆனீங்க எனக்குப் புரியவே இல்லையே…” 

“நாம மருமகளை மகளா நடத்தினா, அவளும் நம்மகிட்ட நல்லா நடந்துப்பா… இதுதான் நான் உங்க அம்மாவுக்குச் சொல்றது.” 

“உங்க அம்மா அப்படித்தான் இருக்கா. ஸ்ரேயாவும் நல்லவிதமாவே எங்ககிட்ட பழகுறா… இது இப்படியே தொடரணும். அதுதான் எங்க ஆசை.” என்றார் சரவணன். 

“அதெல்லாம் தொடரும். சரி நான் கிளம்பனும், அப்புறம் பேசுறேன்.” எனப் போன்னை வைத்தவனுக்கு, இப்போதே ஸ்ரேயாவை காணும் ஆவல் இன்னுமே அதிகமாகியது. 

மூன்று மணிக்குத்தான் படம், ஆனால் அப்போதே அவளைக் காணும் ஆவலில் அழைத்தான். 

“ஸ்ரேயா நீ ப்ரீயா. மதியம் வெளியப் போய்ச் சாப்பிடுவோமா?” 

“நான் தலைக்கு என்னை ஊற வச்சிட்டு, இப்பதான் துணி எல்லாம் துவைச்சு முடிச்சேன். இனிதான் குளிக்கணும்.” 

“பரவாயில்லை… நீ நிதானமா குளிச்சி கிளம்பு. நானும் இனிதான் கிளம்பனும்.” 

“எங்கப் போறோம்? யார் யாரு?” 

“நாம ரெண்டு பேர்தான். சாப்பிட்டு அப்படியே படத்துக்குப் போகலாம்.” 

“உங்க பிரண்ட் வரலை?” 

“லஞ்சுக்கு வெளியப் போறதா பிளான் ஒன்னும் இல்லை. அவ வீட்ல தான் இருக்கா.. அதனால சாப்பிட்டு கிளம்புவாளா இருக்கும்.” 

அவர்கள் இருவர் மட்டுமே என்றதும், ஸ்ரேயா குஷியாகக் கிளம்பினாள். 

ஒரு மணி நேரம் சென்று, சரத் ஸ்ரேயாவின் தங்கும் விடுதியின் முன்பு நின்று கைப்பேசியில் அழைக்க, ஷாம்பூ போட்டு அலசிய கேசம் துள்ள, ஜீன்ஸ் டாப்பில் வந்தவள், சரத்தை பார்த்ததும் முகம் மலர புன்னகைத்தாள். 

“இந்த டாப் உனக்கு அழகா இருக்கு ஸ்ரேயா.” 

“இது போன வாரம் மாமா கொடுத்தாங்களே… அந்த டாப் தான். என்னை விட மாமா நல்லா செலக்ட் பண்றாங்க. இனிமே அவரையே எடுத்து தர சொல்லிட வேண்டியது தான்.” என்றவள், காரின் முன் பக்கத்தில் ஏறி அமர்ந்தாள். 

“காலையில வேற சாப்பிடலை முதல்ல போய்ச் சாப்பிட்டு, அப்புறம் எங்காவது சுத்தலாம். எங்க போகலாம் சாப்பிட? நீயே சொல்லு.” 

“எதாவது சைவ ஹோட்டால் போகலாம். நான் சனிக்கிழமை அசைவம் சாப்பிட மாட்டேன்.” 

“ஓகே…” 

“ஏன் காலையில சாப்பிடலை?” 

“அது நைட் பார்ட்டிக்கு போயிட்டு வந்து தூங்க டைம் ஆகிடுச்சு. காலையில லேட்டாத்தான் எழுந்தேன்.” 

“எங்க ஆபீஸ்ளையும் நிறையப் பேர் போவாங்க. ஆனா அதுல அப்படி என்ன இருக்குன்னு தான் புரியலை?” 

“அடுத்தத் தடவை போகும் போது வேணா உன்னையும் கூடிட்டு போறேன். நீயே வந்து பார்த்து என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கோ.” 

“ஓகே…. அப்படி என்னதான் இருக்கு நானும் பார்க்கிறேன்.” 

ஒரு உயர்தரச் சைவ உணவகத்திற்குச் சென்றவர்கள், வேண்டியதை சொல்லிவிட்டு, உணவு வருவதற்காகக் காத்திருந்தனர்.” 

ஸ்ரேயா தனது செல்லில் புகைப்படம் எடுத்து சரவணனுக்கு அனுப்பி வைத்தாள். 

அதைப் பார்த்ததும் தான் சரத்துக்கு அவளைக் கேட்க வேண்டிய விஷயம் நியாபகம் வந்தது. 

“ஹே… இன்னைக்கு அப்பா அம்மாவோட பேசினியா?” 

“தினமும் தான் பேசுறேன்.” 

“உங்க அப்பா அம்மாவோட இல்லை. என்னோட அப்பா அம்மாவோட.” 

“ஆமாம் பேசினேன்.” 

“உனக்கு எப்படிப் போன் பண்ணி பேசனும்ன்னு தோணுச்சு.” 

“இதுல என்ன அதிசயம்? நாம இனிமே ஒரே குடும்பம் தான… கல்யாணத்துக்கு அப்புறம் பேசத்தான் போறேன். அதை இப்பவே பேசினா என்ன?” 

“ஹே… நான் உன்னை குறையா எதுவும் சொல்லலை… அப்பா அம்மா ரொம்பப் பெருமையாதான் உன்னைப் பத்தி பேசினாங்க. எனக்கு ரொம்பச் சந்தோஷம் தான்.” 

“இது சாதாரண விஷயம் தான், பெரிசு பண்ற அளவுக்கு ஒன்னும் இல்லை.” 

“அப்படி இல்லை ஸ்ரேயா… இந்த மாதிரி எனக்குத் தோணாது. நான் உங்க அப்பா அம்மாகிட்ட இவ்வளவு ப்ரீயா இருப்பேனா தெரியாது.” 

“என்னை மாதிரியே நீங்களும் இருக்கனும்ன்னு அவசியம் இல்லை.” 

“நீ உங்க வீட்டுக்கு பேசும் போது, என்கிட்டே கொடு, நானும் பேசிக்கிறேன்.” 

“ஓகே பார்த்துக்கலாம் விடுங்க.” 

“கல்யாணம் பண்ணிக்க அவ்வளவு யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா இப்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.” 

சரத் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உணவு வகைகள் வந்து விட .. இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். 

சாப்பிட்டு முடித்த பின்னர் இருவரும் காரில் வந்து ஏற, அப்போது ஸ்வாதி சரத்தை அழைத்தாள். 

“சரத் வெளிய போய்ச் சாப்பிட்டு, அப்படியே படத்துக்குப் போய்டலாம் வரியா?” 

“இல்லை ஸ்வாதி…. நான் ஸ்ரேயாவோட லஞ்சுக்கு வெளிய வந்தேன். நீ நேர மாயாஜால் வந்திடு.” 

“ஓ சரி…” என்றவள், போன்னை வைத்து விட்டாள்.
அவளின் முகத்தை வைத்து ஸ்வாதியின் அம்மா என்ன என விசாரித்தார். 

“வெளிய போய்ச் சாப்பிடலாமான்னு சரத்தை கேட்டா, அவன் ஸ்ரேயாவோட சாப்பிட போயிட்டான்.” என்றாள் ஸ்வாதி சோகமாக. 

“பின்ன இன்னும் உன்னோட சுத்திட்டு இருப்பானா…. இதுக்கு முன்னாடிதான் அவனோட சேர்ந்து சுத்திட்டு இருந்த, இப்ப அவனுக்கு நிச்சயம் ஆகிடுச்சு, இனியும் அவனோட வெளியப் போறது எல்லாம் நல்லா இல்லை….” 

“கல்யாணம் நிச்சயம் ஆனா பிரண்ட்ஷிப் விடணுமா… அதெல்லாம் என்னால முடியாது.” 

“நான் சொல்றது சொல்லிட்டேன், அப்புறம் உன்னோட இஷ்ட்டம். சரி சாப்பிட வா….” 

ஸ்வாதி வீட்டிலேயே சாப்பிட்டு கேப் வரவழைத்து மாயாஜால் சென்றாள். திரை அரங்கின் வெளியே அவள் காத்திருக்க, சரத்தும் ஸ்ரேயாவும் சரியாகப் படம் ஆரம்பிக்கும் நேரத்திற்குத் தான் வந்தனர். 

“ஹாய் ஸ்வாதி.” என்றாள் ஸ்ரேயா. ஸ்வாதியும் பதிலுக்குச் சுரத்தே இல்லாமல் ஹாய் என்றாள். 

“ஹே சாரி ஸ்வாதி. ரொம்ப நேரம் ஆச்சா வந்து?” சரத் கேட்க, 

“அவ்வளவு அக்கறை இருக்கவன், நேரத்திற்கு வந்திருக்கணும்.” ஸ்வாதி சொல்ல, 

“நீ வந்திட்டேன்னு எனக்கு எப்படித் தெரியும்? நீ போன் பண்ணி இருக்க வேண்டியது தான…” என்றான். 

“ஏன் நீ பண்ணி இருக்க வேண்டியது தான…” 

“ஓகே விடு…. வாங்க உள்ள போகலாம் டைம் ஆச்சு.” 

திரை அரங்கத்தினுள் சென்று, இருக்கையைத் தேடி அமர்ந்தனர். முதலில் ஸ்வாதி அடுத்து ஸ்ரேயா கடைசியாகச் சரத். 

“சரத், நீ நடுவுல வாயேன்.” ஸ்வாதி சொல்ல, ஸ்ரேயா முகம் மாறி விட்டது. அதைக் கவனித்த சரத், “ஏன்?” எனக் கேட்டான். 

“நான் உன்னோட பேசிட்டே படம் பார்ப்பேன், உனக்குத் தெரியும் இல்ல…” என்றதும், சரத் ஸ்ரேயாவை பார்க்க, அவள் அவனை முறைத்தபடி எழுந்து இடம் மாறி உட்கார்ந்தாள். 

சரத் இருவருக்கும் நடுவில் இருந்தான். “திரும்பப் போகும் போதாவது என்னை வீட்ல விடுவியா… இல்லை நான் தனியா போகணுமா?” 

“உன்னைக் கூப்பிட வரலைன்னு கோபமா?” 

“சர்வேஷ் சொன்ன மாதிரி நீ மாறிட்ட டா… என்னை லஞ்சுக்கு கூப்பிடனும்ன்னு உனக்குத் தோணலை இல்லை… இதே நான் உன்னை விட்டுட்டு எங்காவது போய் இருக்கேனா?” 

“நீயும் நானும் தினமும் ஆபீஸ்ல பார்க்கிறோம். அதுவும் தினமும் ஒன்னத்தான் சாப்பிடுறோம். ஆனா ஸ்ரேயாவை இந்த ரெண்டு நாள் பார்த்தா தான் உண்டு. அதனால தான் அவளோட வெளிய வந்தேன்.” 

“நீ இன்னும் சின்னப் பாப்பா மாதிரியே இருக்க…” என்றவன், ஸ்ரேயா பக்கம் திரும்பி, எதோ சொல்ல வர…. 

“எனக்குப் படம் பார்க்கும் போது பேசினா பிடிக்காது. நீங்க அவங்களோடவே பேசுங்க.” என்றவள், படம் பார்ப்பதில் கவனமாகக் காட்டிக் கொள்ள…. அவள் கோபமாக இருக்கிறாள் எனச் சரத்திற்கு நன்றாகப் புரிந்தது. 

ரெண்டு போரையும் ஒன்றாகக் கூட்டிக் கொண்டு படத்துக்கு வந்தது தவறு என்றும் புரிந்தது. 

படம் முடிந்து வெளியே வந்ததும், “நான் தனியா போய்டுவேன் சரத். நீங்க என்னை விடனும்ன்னு இல்லை.” ஸ்ரேயா சொல்ல, 

“என்கிட்டே உதை வாங்கப்போற… பேசாம வா…” என்றவன் முன்னே செல்ல, ஸ்வாதி அருகில் வந்தாலும், அவளைக் கண்டுகொள்ளாமல் ஸ்ரேயா நடந்தாள். 

அவளது விடுதி முன்பு இறங்கிக் கொண்டவள், “நாளைக்கு வீடு பார்க்க போகணும் சொல்லிட்டேன். சும்மா அங்க வரேன், இங்க வரேன்னு யார்கிட்டயும் கமிட் பண்ணிக்காதீங்க. இன்னைக்கே வேஸ்ட் பண்ணிட்டோம்.” என்றவள், இருவருக்கும் பொதுவான தலையசைப்புடன் விடைபெற்று உள்ளே சென்று விட்டாள். 

“இவ என்ன இப்பவே உன்னை இப்படி அதிகாரம் பண்றா? கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை மொத்தமாவே அடக்கிடுவா போலிருக்கு.” சுவாதி சொல்ல, 

ஸ்ரேயா கோபமாக இருந்ததால் தான் அப்படிப் பேசுகிறாள் எனச் சரத்துக்குப் புரிந்ததால்…. “அவ நல்ல மாதிரிதான். அம்மாவும் வீடு பார்க்க சொல்லிட்டு இருந்தாங்க, நான்தான் மறந்துட்டேன்.” என்றவன் காரை எடுத்தான். 

மறுநாள் சரத்தும் ஸ்ரேயாவும் காலையில் இருந்து வீடு தேடியும் எந்த வீடும் பிடித்தமாக இல்லை. அன்றைய பொழுது அதிலேயே சென்றுவிட்டது. 

அந்த வார இறுதியில் இருவருமே கோயம்புத்தூர் சென்றுவிட்டு வந்தனர். வார நாட்கள் முழுவதும் வேலையில் சென்று விட, வெள்ளியன்று இரவு வழக்கம் போலப் பப்புக்கு சென்றனர். இந்த முறை ஸ்ரேயாவும் அவர்களோடு சென்றாள். 

ஸ்வாதிக்கு ஹாய் மட்டும் சொன்னவள், சரத்தின் மற்ற நண்பர்களை அன்றுதான் சந்தித்ததால்… அவர்களோடு பேசிக் கொண்டு இருந்தாள். 

பப்பின் உள்ளே சென்றால்… காதை கிழிக்கும் இசை, இளவட்டங்கள் அதற்குக் குதித்துக் குதித்து ஆடிக் கொண்டு இருந்தனர். புகைப் பிடிபவர்கள் எல்லாம் ஒரு பக்கம் உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டு இருந்தனர். ஆண்கள் மட்டும் அல்ல… பெண்களும் தான். 

இனி ஆண்களைப் போலப் பெண்களும் சாலையில் நின்று புகைப் பிடிப்பார்கள், நாம் அதற்கும் பழகிக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டாள். 

நடனமாடும் இடத்திற்குச் சரத் ஸ்ரேயாவை அழைத்துக் கொண்டு சென்று ஆடினான். பிறகு வட்டமாக மேஜையில் அமர்ந்து, மது வகைகளை ஆர்டர் செய்தனர்.  

“நீங்க குடிப்பீங்களா சரத்?” ஸ்ரேயா ஆச்சர்யமாகக் கேட்க, 

“அவன் கிரேப் வாட்டர் மாதிரி கொஞ்சமா தாங்க குடிப்பான்.” என்றான் சர்வேஷ். 

“கொஞ்சமா குடிச்சாலும் அதுவும் குடிதான்.” ஸ்ரேயா முகத்தைச் சுளித்துக் கொண்டு சொல்ல, 

“இப்ப என்ன நான் உனக்குக் குடிக்கக் கூடாதா, நான் குடிக்கலை போதுமா…” என்றான் சரத். 

“ஓ….ஓ…” என நண்பர்கள் உற்சாகக் கூச்சல் இட… 

“நாம எத்தனை தடவை சொல்லி இருக்கோம், அப்போ எல்லாம் கேட்கலை… இப்ப இவ வந்து சொன்னதும், உடனே குடிக்கலைன்னு சொல்லிட்டானே…” என ஸ்வாதி நினைத்தாள். 

“போலாமா சரத்…” என ஸ்ரேயா நச்சரிக்க ஆரம்பித்து விட…. சரத் அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். ஸ்வாதியையும் தான். சர்வேஷ்  கூட, தான் ஸ்வாதியை பிறகு வீட்டில் விட்டு விடுவதாகச் சொன்னான். ஆனால் யாரை நம்பியும் அவன் ஸ்வாதியை விடுவதாக இல்லை. 

ஸ்ரேயாவுக்குச் சரத் இந்த மாதிரி இடங்களுக்கு வருவதில்  விருப்பம் இல்லை. அன்று ஸ்வாதி உடன் இருந்ததால்… எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள். 

மறுவாரத்தில் இருந்து சரத்திற்கும் எதற்கும் நேரம் இல்லாமல் போனது. எல்லா வார இறுதியும் இருவரும் கோயம்புத்தூர் சென்றனர். திருமணத்திற்கான நாட்களும் குறைந்து கொண்டே வந்தது. 

அப்படியே வார இறுதியில் ஊரில் இருந்தாலும், இருவரும் வீடு பார்க்க சென்றனர். திருமணதிற்கு ஒரு மாதம் இருக்கும் போது, மூன்று படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மெண்டும் பார்த்து விட்டனர். 

வேலையோடு வேலையாக ஒரு நல்ல நாளில் சரத்தின் பெற்றோர் வந்து வீட்டில் பால்காய்ச்சி வைத்துவிட்டு சென்றனர். அதன் பிறகு சரத் அந்த வீட்டில் தங்கிக் கொண்டான். 

குறித்த தினத்தில், சுற்றமும் நட்பும் சூழ, சரத் ஸ்ரேயா திருமணம் ஜாம்ஜாமென்று நடந்து முடிந்தது. 

இனிதான் ஆட்டம் ஆரம்பம். திருமணதிற்கு முன்பு ஸ்ரேயாவுக்கு எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்து சென்ற சரத், இனியும் அப்படி இருப்பானா…. அல்லது ஸ்ரேயாவாவது விட்டுக் கொடுப்பாளா…. இருவருக்கும் இடையே பனிப்போர் ஆரம்பம்.


Advertisement