Advertisement

தள்ளி போகாதே நிலவே 


அத்தியாயம் 4 


சரத்தோடு ஸ்வாதியை பார்த்ததும் ஸ்ரேயாவின் முகம் மாறி விட்டது. ஆனால் அதை அவர்கள் கவனிப்பதற்குள் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாள். 

சரத் ஸ்ரேயாவை பார்த்ததும் “ஹே… ஸ்ரேயா வா….” என்றவன், “இவ என்னோட ப்ரண்ட் ஸ்வாதி . நாங்க ஒரே ஆபீஸ் தான்.” என இருவருக்கும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தான். 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகையுடன் ஹாய் சொல்லிக் கொண்டனர். 

“போன வாரமே உன்னைக் காட்டலைன்னு மேடம் என்கிட்டே ஒரே சண்டை.” என்றான் சரத். 

“போன வாரம் பார்த்திருந்தா கூட உங்களோட என்ன பேசி இருக்க முடியும். ஆனா இப்ப நீங்க சரத்தோட வருங்கால மனைவி அதனால உரிமையா பேசலாம்.” சுவாதி சொல்ல, 

“ம்ம்… ஆமாம் நீங்க சொல்றது கரெக்ட் தான்.” என்றாள் ஸ்ரேயா. 

“ரெண்டு பேருக்கும் ஒரே வயசு தான் இருக்கும். எதுக்கு வாங்க போங்க எல்லாம்.” சரத் சொல்ல, இரு பெண்களும் அமோதிப்பது போலப் புன்னகைத்தனர். 

“சாப்பிட எங்க போகலாம்.” சரத் இருவரையும் பார்த்து கேட்க, 

“ஸ்ரேயாவே சொல்லட்டும் அவங்க தானே புதுசா வந்திருக்காங்க.” சுவாதி சொல்ல, 

“நீதான் ஸ்வாதி எங்களோட விருந்தாளி, அதனால நீயே சொல்லு.” என்றாள் ஸ்ரேயா.

விருந்தாளி என்பது எதோ தள்ளி நிறுத்துவது போல ஸவாதிக்கு தோன்றியது.

“நானும் சரத்தும் ரெண்டு வருஷமா ப்ரண்ட்ஸ். நீங்க தானே புதுசா வந்திருக்கீங்க. அப்ப நீங்க தான் விருந்தாளி.” ஸ்வாதி சொல்ல, 

“அதை உங்க ப்ரண்டை சொல்ல சொல்லுங்க.” என்றாள் ஸ்ரேயா. 

“ஆமாம் இது ஐநா சபை பாரு. உங்க ரெண்டு போரையும் முக்கியமான முடிவு எடுக்கச் சொன்ன மாதிரி… நீ சொல்லு, நான் சொல்லுன்னு. இதுல நான் வேற கருத்து சொல்லனுமா.” 

“இங்க யாரும் விருந்தாளி எல்லாம் இல்லை. நான் கூடிட்டு போற இடத்துக்கு, நீங்க ரெண்டு பேரும் வாங்க.” எனச் சரத் முன்னே நடக்க, பெண்கள் இருவரும் புன்னகையுடன் அவனைப் பின்தொடர்ந்தனர். 

சரத் காரின் ஓட்டுனர் இருக்கைக்குச் செல்ல, ஸ்ரேயா அவனோடு முன் பக்கம் அமர்ந்துகொள்ள, ஸ்வாதி பின்னால் சென்று அமர்ந்து கொண்டாள். இத்தனை நாள் அவள் உரிமையாய் உட்கார்ந்த இடம், இப்போது அவளுக்கு இல்லை.
பிரபலமான செட்டிநாடு உணவகம் ஒன்றிருக்குச் சென்றவர்கள், அவரவருக்குத் தேவையானது ஆர்டர் கொடுத்தனர். 

ஸ்ரேயா அவளுக்கு இறால் பிரியாணி சொல்லி இருந்தாள். அது வந்ததும் அவள் சரத்துக்கு வைக்கச் செல்ல, சரத் அதைக் கவனிக்கவில்லை. ஆனால் ஸ்வாதி ஸ்ரேயாவின் கைபிடித்துத் தடுத்தாள். 

“சரத்துக்கு இறால் பிடிக்காது.” என்றவள், “என்னை விருந்தாளின்னு சொன்னீங்க. ஆனா உங்களுக்குச் சரத்துக்கு என்ன பிடிக்கனும்ன்னு கூடத் தெரியலை.” என அவள் கேலி செய்ய… அது ஸ்ரேயாவுக்குப் பிடிக்கவில்லை. அதை அவள் முகமே காட்டிக் கொடுக்க…. 

“ஹே அவளுக்கு எப்படித் தெரியும் ஸ்வாதி? நான் சொன்னா தானே தெரியும்.” என்றான் சரத். 

“இனிமே தான் உங்க ப்ரண்ட்டோட தனியா பேசி எல்லாம் தெரிஞ்சிக்கணும்.” என்றாள் ஸ்ரேயாவும் சிரித்துக் கொண்டு.
ஸ்ரேயா உள் குத்து வைத்து பேசுவது சரத்துக்குப் புரிந்தது. ஸ்வாதிக்கு புரியவில்லை. 

மூவரும் உண்டு முடித்து விட்டு கிளம்ப, முதலில் ஸ்ரேயாவின் ஹாஸ்டல் வரும் என்பதால்… அவள் அங்கே இறங்கிக்கொள்ள, மற்ற இருவரும் அவளிடம் விடைபெற்று சென்றனர். 

அடுத்து வந்து இரு நாட்கள் வழக்கமாகச் சென்ற பின்னரே, சரத் யோசித்தான். அன்றைக்கு அவன் ஸ்ரேயாவை பார்த்தது தான். அதன் பிறகு அவள் அவனை அழைக்கவே இல்லை. இன்று பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தான். 

மதிய உணவு இடைவேளையில் சரத் அவன் நண்பர்களோடு பேசியபடி உணவருந்திக் கொண்டு இருந்தான். 

“டேய் சரத், இந்த வாரம் தனுஷ் படம் வருது போகலாமா டா…” ஸ்வாதி கேட்க, 

“ஹே… நீ என்ன இன்னும் இவளோடையே சுத்திட்டு இருக்கியா… உன் ஆளு கூடப் போ மச்சி.” என்றான் சர்வேஷ். 

அதைக் கேட்டதும் ஸ்வாதிக்குக் கோபம் வந்துவிட்டது. “பிகர் வந்ததும் ப்ரண்டை கழட்டி விடுற பழக்கம் சரத்துக்கு இல்லை. அவன் என்னோட சினிமாவுக்கு வருவான். வருவே தான சரத்.” ஸ்வாதி கேட்க, 

“அதை அப்புறம் பார்ப்போம்.” என்றான் சரத். 

“இனி உன்னோட சுத்த அவன் என்ன லூசா? அவன் ஆளோட போவான்…” சர்வேஷ் சொல்ல, 

“நீ சொல்லு சரத், உனக்கு உன் பெஸ்டி தானே முக்கியம். நீ என்னோட வருவ தான…” 

“கடவுளே ! கொஞ்சம் சும்மா இருக்கியா. இந்த வாரம் எனக்கு நிச்சயம். நான் ஊருக்கு போகணும்.” 

“ஓ… சாரி டா நான் அதை மறந்துட்டேன்.” 

“நிச்சயத்துக்கு வர்றீங்களா… உங்களுக்குச் சேர்த்து டிக்கெட் போட்டுடுவா?” 

“இல்லை டா நிச்சயத்துக்கு ஒரு நாள்ல வந்திட்டு திரும்பனும்.. கல்யாணத்துக்கு வரோம். அப்படியே கோயம்புத்தூர் முழுசா சுத்தி பார்க்கிற மாதிரி.” பாலாஜி சொல்ல, அதை மற்ற நண்பர்களும் ஆமோதித்தனர். 

“நீ வாயேன் ஸ்வாதி.” 

“இல்லை டா, எங்க அம்மா கல்யாணத்துக்குப் போன்னு சொல்லிட்டாங்க.” 

“ஓகே….” 

இரவு அறைக்கு வந்தவன், தன் வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு ஸ்ரேயாவை அழைத்தான். 

“ஹாய் எப்படி இருக்கீங்க?” 

“நல்லா இருக்கேன். கோபமா என் மேல போன்னே பண்ணலை.” 

“நான் ஏன் உங்க மேல கோபப்படணும். கோபப்பட எதாவது காரணம் இருக்கா என்ன?” ஸ்ரேயா தெரியாதது போலக் கேட்க, 

“எனக்குத் தெரியும், அன்னைக்கு நான் ஸ்வாதியை கூடக் கூடிட்டு வந்தது, உனக்கு அவ்வளவா பிடிக்கலை.” 

“பிடிக்கலைன்னு இல்லை…. நான் உங்களைப் பார்க்க ஆர்வமா வந்தேன், நீங்க உங்க பிரண்டோட இருந்ததும், கொஞ்சம் மூட் அவுட் ஆனது உண்மை. இதே நீங்க வேற எப்பவாவது அப்படிப் பண்ணி இருந்தா… நான் ஒன்னும் பீல் பண்ணி இருக்க மாட்டேன். நான் உங்களோட நிறையப் பேசனும்ன்னு நினைச்சு வந்தேன்.” 

“எனக்குப் புரியுது. இதுல ஸ்வாதி தப்பு எதுவும் இல்லை. நான்தான் உன்னை அவளுக்குக் காட்டணும்ன்னு ஆசைப்பட்டுக் கூடிட்டு வந்தேன்.” 

“நான் உங்க பிரண்டை ஒன்னும் சொல்லலை…” 

“இருந்தாலும் சொல்றது என்னோட கடமை. எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க. ஆனா ஸ்வாதி என்னோட ரொம்ப க்ளோஸ். மத்த ப்ரண்ட்ஸ் நம்ம நிச்சயத்துக்கு அப்புறம் உனக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன்.” 

“ஓகே… பரவாயில்லை.” 

“அப்புறம் சாப்பிட்டியா? என்ன பண்ற?” சரத் வேறு பேச்சுக்கு தாவ…. 

“சாப்பிட்டேன். நீங்க?” என ஸ்ரேயா தொடர… நள்ளிரவு வரை அவர்கள் பேச்சு நீண்டது. 

“ஹே… நிச்சயத்துக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஊருக்கு போகலாமா?” 

“ம்ம்… சரி. ஆனா நீங்க மட்டும் தானே வருவீங்க.” 

“ஸ்வாதி வர்றதா தான் இருந்தது. ஆனா அவங்க வீட்ல கல்யாணத்துக்குப் போகச் சொல்லிட்டதுனால வரலை.” 

“அப்ப ஓகே. நாம சேர்ந்து போகலாம்.” 

“ஹே உனக்கு ஸ்வாதியை பிடிக்கலையா ஸ்ரேயா.” சரத் கவலையாகக் கேட்க, 

“உங்களுக்கு எத்தனை ப்ரண்ட்ஸ் வேணா இருக்கலாம் சரத், அவங்க எத்தனை வருஷ நண்பர்களா இருந்தாலும், நான் உங்களுக்கு ஸ்பெஷல் தானே…. அது ஏன் உங்க ப்ரண்டுக்கு தெரியலை.” 

“அவ விளையாட்டுக்கு பேசுறா ஸ்ரேயா. அவளுக்கு மட்டும் தெரியாதா என்ன?” 

“சரி விடுங்க.” 

“நான் டிக்கெட் போட்டுட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்.” 

“சரி.” என்றவள் போன்னை வைக்க, ஐயோ இப்பவே கண்ணைக் கட்டுதே எனச் சரத் நினைத்துக் கொண்டான். 

வெள்ளியன்று இரவு ரயிலில் இருவரும் கோயம்புத்தூர் செல்வதாக இருந்தது. முதலிலேயே ஸ்ரேயா வந்து காத்திருக்க, சரத் தாமதமாகத்தான் வந்தான். 

அவன் வந்த ரயிலில் ஏறுவதற்கும், ரயில் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. 

“ஏன் இப்படி டென்ஷன் பண்றீங்க? கொஞ்சம் முன்னாடியே வர மாட்டீங்களா?” 

“நான் எப்பவும் இப்படித்தான் வருவேன்.” சரத் கூலாகச் சொல்லிவிட்டு, அவர்கள் இருக்கையை நோக்கி நடக்க… ஸ்ரேயா அவனைப் பின் தொடர்ந்தாள். 

இருவருக்கும் பக்கவாட்டில் இருந்த இருக்கையில் பதிவு செய்து இருந்தான். அதனால் உட்கார்ந்து பேச வசதியாக இருந்தது. 

“அப்புறம் சொல்லு, நிச்சயத்துக்கு ரெடியா?” 

“நான் கல்யாணத்துக்கே ரெடி.” ஸ்ரேயா சொன்னதும், சரத்துக்குச் சிரிப்பு வந்துவிட… 

“ச்ச… நம்ம கல்யாணத்தை ரொம்பத் தள்ளி வச்சிட்டாங்களோ.” 

“அதை விடுங்க. நாம இருக்க வீடு பார்க்கணும் இல்ல…” 

“ஆமாம். உன்னோட ஆபீஸ் பக்கத்தில பார்ப்போம்.” 

“வேண்டாம் ரெண்டு பேருக்கும் வசதியா இருக்க மாதிரி பார்ப்போம்.” 

“சரி…” 

“இப்பவே தேட ஆரம்பிக்கணும். அப்பத்தான் கிடைக்கும். ரெண்டு ரூம் இருக்க வீடு போதும்.” 

“ரெண்டு பெட்ரூம் பத்தாது ஸ்ரேயா. அப்பா ரிடையர் ஆனதும், அப்பாவும் அம்மாவும் நம்மோட தான் இருப்பாங்க.” இதைச் சொல்லும் போது சரத்தின் பார்வை முழுவதும் ஸ்ரேயாவின் மீது தான். ஆனால் அவளின் முகம் கொஞ்சம் கூட மாறவில்லை. 

“அப்படினா கூட ரெண்டு ரூம் போதுமே…அவங்களுக்கு ஒன்னு நமக்கு ஒன்னு.” 

“உங்க அப்பா அம்மா வந்தா, ஹால்ல இருக்கச் சொல்ல முடியுமா… போறது போறோம் பெரிய வீடாவே போவோம்.” 

“ஆமாம் நீங்க சொல்றது கரெக்ட் தான்.” 

சரத் தன் பெற்றோர் தன்னோடு தான் இருப்பார்கள் எனச் சொல்லிவிட்டான். ஆனால் அது பிடிக்காதது போல எந்தப் பாவனையும் ஸ்ரேயாவின் இடத்தில் இல்லை. அவள் சகஜமாகப் பேசிக்கொண்டு வந்தாள். 

ஸ்வாதியின் விஷயத்தில் ஸ்ரேயாவின் அணுகுமுறையில், கொஞ்சம் பயந்து போயே இருந்தான். இப்போது மனதுக்கு நிறைவாக இருந்தது. 

ரயில் நிலையத்தில் சரவணன் மகனை அழைத்துச் செல்ல காத்திருந்தார். ஆனால் ஸ்ரேயாவின் வீட்டில் இருந்து யாரும் வந்திருக்கவில்லை. 

“ஹாய் ஸ்ரேயா எப்படி இருக்க?” 

“நான் நல்லா இருக்கேன் மாமா. அத்தை எப்படி இருக்காங்க?” 

“உங்க அத்தை ரொம்பப் பிஸியா இருக்கா.” 

“நீங்க என்ன சின்னப் பையனா? உங்களைக் கூப்பிட மாமா வந்திருக்காங்க.” ஸ்ரேயா சரத்தை கிண்டல் செய்ய… 

“அவர் சொன்னாலும் கேட்க மாட்டார்.” என்றான் சரத். 

“உன் அத்தை, காலையிலேயே எழுப்பிக் கையில காபி கொடுத்து, சரத்தை போய்க் கூடிட்டு வாங்கன்னு சொல்லிட்டா.” 

“அவனே வந்துப்பான்னு சொல்லி நான் வரலைன்னு வச்சுக்கோ…. அப்பன்னு பார்த்து இவனும் நேரத்துக்கு வீட்டுக்கு வரலைனா, நான் தொலைஞ்சேன்.” 

“எதுக்கு இந்த வம்பு. அதுக்கு இங்க வந்து இவனைக் கூடிட்டே போகலாம்.” சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே செல் அடிக்க, 

“உன் அத்தை தான். மகன் வந்திட்டானான்னு கேட்ப்பா.” என்றவர் எடுத்து பேசினார். 

ஸ்ரேயாவும் சரத்தோடு வந்திருப்பதாகச் சொன்னவர், “பாரு மருமகளைக் கூப்பிட எல்லாம் யாரும் வரலை. நீதான் என்ன கொடுமை பண்ற.” என்றார் சிரித்துக் கொண்டு. 

“அவளும் நம்ம பொண்ணு தான். நீங்க போய் அவளை அவங்க வீட்ல விட்டுட்டு வாங்க.” எனச் சொல்லிவிட்டுச் சங்கீதா போன்னை வைத்து விட்டார். 

“வா ஸ்ரேயா உன்னை உங்க வீட்ல விட்டுட்டு நாங்க போறோம்.” சரவணன் சொல்ல… 

“வேண்டாம் மாமா, நான் ஆட்டோவுல போயிப்பேன்.” ஸ்ரேயா மறுக்க… 

“உங்க அத்தையோட ஆர்டர் மா அதெல்லாம் மீற முடியாது.” என்றவர், சங்கீதா சொன்னதைச் சொன்னார். 

“இனிமே உனக்கும் இதே நிலைமை தான். பேசாம வா.” என்றான் சரத்.
ஸ்ரேயாவை அவர்கள் வீட்டின் முன்பு இறக்கி விட்டு, மறுநாள் பார்க்கலாம் எனச் சொல்லி விடைபெற்று சென்றனர். 

மறுநாள் நிச்சயம் வெகு சிறப்பாக மண்டபத்தில் வைத்து உறவினர்களை அழைத்துச் செய்தனர். நிச்சயம் மாப்பிள்ளை வீட்டில் தான் வைக்க வேண்டும். வசதிக்காக மண்டபத்தில் வைத்து இருந்தனர். 

நிச்சயம்தார்த்தம் முடிந்து சாஸ்த்திறத்துக்காக ஸ்ரேயாவை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஸ்ரேயா வீட்டை எல்லாம் சுற்றி பார்த்தாள். பிறகு எல்லோரோடும் சகஜமாகப் பேசிக் கொண்டு இருந்தாள். 

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். மாலையில் ஸ்ரேயாவின் வீட்டில் இருந்து அவளை அழைத்துச் செல்ல, அவள் பெற்றோரும் அண்ணனும் வந்திருந்தனர். 

“சீக்கிரம் வீடு பார்க்க ஆரம்பிங்க.” சங்கீதா சொல்ல, 

“ஆமாம் சென்னையில தனிக் குடித்தனம் வைக்கணுமே…” என ஸ்ரேயாவின் அம்மா தீபா வாய் விட… தனிக் குடித்தனம் என்ற வார்த்தை சங்கீதாவை தாக்கியது. ஆனாலும் அமைதியாகத்தான் இருந்தார். 

“அடுத்த வாரம் சனி ஞாயிறு நானும் சரத்தும் போய் வீடு பார்க்கிறோம்.” என்றாள் ஸ்ரேயா. 

“அப்ப நாங்க கல்யாணத்துக்கு வாங்கிற சீர் வரிசை எல்லாம் சென்னையிலேயே வாங்கிட்டா சவுகரியமா இருக்காது.” மீண்டும் கீதா பேச…. 

“அம்மா, அத்தை மாமா இன்னும் கொஞ்ச நாள்ல சென்னை வந்திடுவாங்க. அப்ப இங்க இருக்கிற சாமான் எல்லாம் அங்கதான கொண்டு வருவாங்க. அதனால நாங்க எங்களுக்கு எது தேவையோ, அது மட்டும் பார்த்து வாங்கிக்கிறோம்.” 
ஸ்ரேயா அப்படிச் சொன்னதும், சங்கீதாவின் மனம் குளிர்ந்து போனது. 
“உங்களுக்கு உங்க பொண்ணுக்கு செய்யணும்ன்னு ஆசை இருக்கும். ஆனா எங்களுக்கும் ஒரு பையன் தானே… நாங்க வச்சிருக்கிறது எல்லாம் அவங்களுக்குத்தானே….அதனால நாங்க பார்த்துக்கிறோம்.” எனச் சங்கீதா முடித்துக் கொண்டார். 

வீட்டிற்கு வந்ததும் கீதா தன் மகளை ஒரு பிடி பிடித்தார். 

“நீ சரியான அசடு. நானே தனிக் குடித்தனம்ன்னு பேச்சை ஆரம்பிச்சா… நீ நடுவுல வந்து எல்லாத்தையும் குழப்பிட்ட.” 

“நீங்க தான் தேவையில்லாம பேசினீங்க மா.” 

“உன் நல்லதுக்குத் தானே பேசினேன். நீ பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருப்பேன்னு பார்த்தேன். இங்க தான் வீடு வாசல் இருக்கே… அப்புறம் என்ன அந்த அம்மாவுக்கு மகனோட வந்து ஒட்டிகனுமா.” 

“அப்படிப் பிக்கல் பிடுங்கல் இல்லைதா வீடு வேணும்ன்னா… எதாவது அநாதை பையனை பார்க்க வேண்டியது தானே…” 

“அவங்க கஷ்ட்டப்பட்டுப் பையனை பெத்து வளர்த்து வச்சிருப்பாங்க. ஆனா அவங்க மகனோட சேர்ந்து இருக்க நினைக்கக் கூடாதா? நல்லா இருக்கு மா உங்க நியாயம்?” 

“இப்ப எல்லாமே நல்லா இருக்கும். சேர்ந்து இருந்து பாரு தெரியும்.” 

“இன்னும் கல்யாணமே ஆகலை.. அதுக்குள்ள ஏன் இதெல்லாம் பேசுறீங்க. உங்களை மாதிரி அம்மாக்கள் தான், நல்லது பண்றதா நினைச்சு, பொண்ணுங்க மனசுல விஷத்தை விதைச்சிடுறீங்க. அதுதான் ஆரம்பத்திலேயே அந்தப் பெண்ணால அவங்க புகுந்த வீட்டோட ஓட்ட முடியாம போய்டுது.” 

“நான் உன் நல்லத்துக்குத் தான் சொன்னேன். நீதான் ப்ரீயா இருப்ப.” 

“ஆமாம் மாமியார் மாமனார் இடைஞ்சல்ன்னு நீயே சொல்லிக் கொடு. இப்படி உன் பையன் இருந்தா நீ ஒத்துப்பியா… நீ மட்டும் அவனோட தான இருக்கனும்ன்னு நினைப்ப.” 

“உனக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா…” 

“நான் உன் நல்லதுக்குத் தான் சொன்னேன். கேட்டா கேளு, கேட்கலைனா போ… நாளைக்கு எதாவது குறை சொன்ன அவ்வளவுதான்.” 

“நீங்கதான் இப்படி இருக்கீங்க. ஆனா சரத் வீட்ல அப்படி இல்லை.” 

“நான் கூட ரெண்டு ரூம் இருக்க வீடு போதும்ன்னு சொன்னேன். ஆனா சரத் தான். உங்க அப்பா அம்மா வந்தா தங்க ரூம் வேணும், அதனால மூன்னு ரூம் இருக்க வீடே பார்ப்போம்ன்னு சொன்னார்.” 

“நேத்து ரயில்வே ஸ்டேஷன்ல, அதுவும் நம்ம பொண்ணுதான். வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வாங்கன்னு அத்தை சொல்லிதான் மாமா வந்து என்னை இங்க விட்டுட்டு போனார்.” 

“அங்க யாரும் என்னை வேற வீட்டுப் பெண்ணா பார்க்கலை… நீங்க மட்டும் ஏன் இப்படி இப்பவே பிரிச்சு பார்க்கிறீங்க? அப்படியே பின்னாடி எதாவது பிரச்சனை வந்தா, அது எங்க பிரச்சனை நாங்க பார்த்துக்கிறோம்.” ஸ்ரேயா தன் அம்மாவிடம் பதிலுக்குப் பதில் அடித்துப் பேசி விட… 

“நான் உனக்காகத்தான் பார்த்தேன். இதெல்லாம் நீ உங்க அப்பாகிட்ட சொல்லிடாத.” என்றார். ஸ்ரேயாவின் அப்பா மிகவும் கண்டிப்பானவர், ஸ்ரேயா அவரைப் போலத்தான். அவரிடம் கீதாவுக்கு மிகுந்த பயம். 

மறுநாள் இரவு ரயில் நிலையத்திற்குச் சங்கீதாவும் வந்திருந்தார். “இந்தா மா உனக்கு.” என வீட்டில் செய்த தின்பண்டங்களை அவர் கொடுக்க, 

“சரத்துக்கு ட்ரெஸ் வாங்கின போது, உனக்கும் ரெண்டு சுடிதார் வாங்கினேன்.” எனச் சரவணன் நீட்டினார். 

“சூப்பரா இருக்கு மாமா. உங்களுக்கு நல்லா செலக்ட் பண்ண தெரியுதே….” ஸ்ரேயா ஆச்சர்யப்பட… 

“அவருக்குப் பெண் குழந்தைங்கனா ரொம்ப இஷ்ட்டம். எப்ப கடைக்குப் போனாலும், பொண்ணுங்க ட்ரெஸ் சைட் போய்ப் பார்த்திட்டு வருவார். இனிமே உனக்கு வாங்கிக் கொடுத்து ஆசையைத் தீர்த்துப்பார்.” 

தன் மனைவி சொன்னதற்குச் சரவணன் ஆமோதிப்பாகப் புன்னகைக்க, “புதுசா மருமகள் வந்ததும், என்னை மறந்துடாதீங்க.” என்றான் சரத். 

“கொஞ்சம் பொறாமை…” ஸ்ரேயா சொல்ல, “ஆமாம்.” என்றான் புன்னகையுடன். 

“உனக்குத் தெரியாது இவனைப் பற்றி. நான் எங்க சொந்தக்காரங்க பசங்களுக்குச் சோறு ஊட்டினா கூடப் பிடிக்காது. வந்து அந்தப் பசங்களைத் தள்ளி விட்டுடுவான்.” என்றார் சங்கீதா. 

“இனிமே போட்டிக்கு நான் வந்துட்டேனே என்ன பண்ணுவீங்க.” ஸ்ரேயா கேட்க, 

“பரவாயில்லை நீ தானே எனக்குப் பிரச்சனை இல்லை.” சரத் சொல்ல, மற்ற எல்லோரும் சிரித்தனர். 

பெண் பார்த்த சமயத்தில் நடந்த குழப்பத்தில், அனைவருமே இது எப்படி இருக்கும், சரியாக வருமா என நினைத்து இருந்தனர். 

இப்போது ஸ்ரேயாவை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக அவர்கள் பொருத்திக்கொள்ள…. ஸ்ரேயாவும் அழகாக அந்தக் குடும்பம் எனும் கூட்டிற்க்குள் பொருந்தி போனாள்.


Advertisement