Advertisement

தள்ளி போகாதே நிலவே 



அத்தியாயம் 3


ஸ்ரேயாவையே பார்த்துக் கொண்டு சரத் நின்றுவிட…. திரும்ப ஸ்வாதியே அழைத்து விட்டாள். 


“டேய் என்ன டா பண்ற?” 


“நான்தான் பண்றேன்னு சொன்னேன் இல்ல…” 


“இப்ப எங்க இருக்க நீ?” 


“அபிராமி மால்ல.” 


“உன் ப்ரண்ட்ஸ் கூடப் போய் இருக்கியா?” 


“இல்லை நான் மட்டும் தான் வந்தேன்.” 


“நீ மட்டும் தனியா எல்லாம் போக மாட்டியே.” 


“அது உனக்கு நான் நாளைக்குச் சொல்றேன். நீ ஏன் இப்ப போன் பண்ண?” 


“வீட்டுக்கு சாப்பிட வரியான்னு அம்மா கேட்டாங்க.” 


“இல்லை… நான் இங்க சாப்பிட்டேன். நாளைக்குப் பார்க்கலாம்.” என்றவன், போன்னை வைத்து விட்டான். 


மறுநாள் மதிய உணவு வேளையில் ஸ்வாதிதான் பேச்சை ஆரம்பித்தாள். சரத் நடந்த அனைத்தையும் சொன்னான். 


“அது எப்படி அவ வருவான்னு உனக்குத் தெரியும்?” 


“தோனுச்சு…..போனேன்.” 


“இப்ப என்ன பண்ணப் போற?” 


“நீ என்ன கதை கேட்டுட்டு இருக்கியா? உனக்கு இன்னுமா புரியலை? அவன் பொண்ணு பார்த்திட்டு வந்திருக்கான். இனி கல்யாணம் தான்.” சர்வேஷ் சொல்ல, 


“அப்படியா டா?” 


“எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு, அது நல்லாவே புரியுது. ஆனா ரெண்டு வீட்லயும் சொதப்பி வச்சிருக்காங்க. அதை முதல்ல சரி செய்யணும்.” 


“இதெல்லாம் சின்னப் பிரச்சனை மச்சி.” சர்வேஷ் சொல்ல, 


“ஆன்டி இதுக்கு ஒத்துப்பாங்களா?” ஸ்வாதி கேட்க, 


“எனக்குப் பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டா, எங்க அம்மா மறுக்க மாட்டாங்க.” என்றான் சரத் நம்பிக்கையாக. 


“சரி அதை விடு. ஆனா பிகரை பார்த்ததும் பிரண்ட் என்னைக் கழட்டி விட்டுட்ட இல்ல…” சுவாதி கோபித்துக்கொள்ள.. 


“ஹே… அப்படி இல்லை. நிஜமாவே அவ வருவாளான்னு எனக்குத் தெரியாது. இதுல உன்கிட்ட என்ன சொல்லி கூடிட்டு போறது.” 


“அவளை மால்ல பார்த்த அன்னைக்கு ஏன் சொல்லலை…” 


“அப்ப அவளும் அங்க இருந்தா… அவளை வச்சிட்டு என்ன சொல்றது. நான் ரொம்பக் கோபத்தில் வேற இருந்தேன்.” 


“சும்மா சமாளிக்கிறான், இன்னும் நிச்சயம் கூட ஆகலை, அதுக்குள்ள உன்னைக் கழட்டி விட்டுட்டான். இனி இதுதான் உன் நிலைமை…” எனச் சர்வேஷ் நன்றாகச் சுவாதியை வெறுப்பேற்றி விட்டு செல்ல… 


“நான் எதாவது உன்கிட்ட மறைச்சிருக்கேனா டா… போ என்கிட்டே பேசாத….” என ஸ்வாதி கோபித்துக் கொண்டாள். 


“சாரி ஸ்வாதி…” எனச் சரத் பேசிக் கொண்டிருக்கும் போதே… அங்கிருந்து எழுந்து சென்றும் விட்டாள். 


இரண்டு நாட்கள் படாதபாடு பட்டுதான், சரத் அவளை மலை இறக்கினான். அந்த வாரம் வெள்ளி விடுமுறை எடுத்துக் கொண்டு, வார இறுதியோடு மூன்று நாட்கள் சேர்த்து கோயம்புத்தூர் சென்றான். 


அவன் வந்திருப்பதால் சரவணனும் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தார். 


காலை உணவு முடிந்து மூவரும் ஆறுதலாக அமர்ந்திருக்கும் வேளையில், சரத் பேச்சை ஆரம்பித்தான். 


“நான் சென்னையில ஒரு மால்ல ஸ்ரேயாவை பார்த்தேன்.” 


எந்த ஸ்ரேயா என யோசித்த மற்ற இருவருக்கும், ரேவதியின் அண்ணனின்  பெண் என்றதும் நியாபகம் வந்துவிட்டது. 


“ஆமாம் அவதான் ஸ்ரேயான்னு உனக்கு எப்படித் தெரியும்?” சங்கீதா கேட்க, 


“அவளுக்கு என்னைத் தெரியும் போல… அவதான் வந்து பேசினா.” என்றான். 


“ஓ…. என்ன சொன்னா?” 


“ஒன்னும் சொல்லலை சும்மா பேசினா.” 


“அவளைப் பாத்ததும் உனக்கு என்ன தோனுச்சு?” சரவணன் கேட்க, 


“நல்லாத்தான் இருக்கா.. நல்லாவும் பேசுறா.” என்றான் சரத் பட்டும்படாமல். 


“இப்ப நீ என்ன சொல்ல வர… உங்க அப்பா போல, நல்ல வரன் விட்டுட்டேன்னு சொல்ல வரியா.” 


“அம்மா நான் எதுவும் சொல்லலை… ஸ்ரேயாவை எதேச்சையா பார்த்தேன், பேசினேன். ஆனா அவளுக்கு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி நான் எதுவும் பேசலை… ஏன் காட்டிக்கக் கூட இல்லை. உங்களுக்கு அவளைப் பிடிக்கலைனா, இதை இதோட விட்டுடலாம்.” என்றான் சரத் தெளிவாக. 


“ஆனா உனக்குப் பிடிச்சு இருக்கு, அதுதானே சொல்ல வர…” 


“நல்லா இருக்கான்னு சொன்னேன் அவ்வளவு தான். அப்புறம் உங்க இஷ்டம்.” 


“அந்தப் பெண்ணைப் பார்த்ததும், நான் சொன்னேன் இல்லையா… அவ ரொம்ப ஸ்மார்ட். இதோ உங்க பையன் வாயில இருந்தே பிடிச்சிருக்குன்னு வர வச்சிட்டா பார்த்தீங்களா?” என்றார் சங்கீதா சரவணனைப் பார்த்து, 


“நீ கோபிக்க ஒன்னும் இல்லை. அவன் தான் தெளிவா உங்களுக்கு விருப்பம் இருந்தான்னு சொல்றானே…. உனக்கு விருப்பம் இல்லைனா விட்டுடு.” 


“அது எப்படி அப்படி விட முடியும். பிடிச்சிருக்கப் போய்த் தானே நம்மகிட்ட சொன்னான்.” 


“அப்ப பேசாம கல்யாணத்தைப் பண்ணி வை.” 


“நான் ரேவதிகிட்ட பேசுறேன்.” என்றார் சங்கீதா. தன் விருப்பத்திற்கு எப்போதுமே மறுப்பு சொல்ல மாட்டார் எனச் சரத்துக்குத் தெரியும். 


“தேங்க்ஸ் மா…” என்றான். 


“நீ எதுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடியே, நானும் உன் அப்பாவும் உங்களோடத்தான் இருப்போம்ன்னு சொல்லிடு. அவ தனிக்குடித்தனம்ன்னு நினைச்சுக்கப் போறா.” 


“ஏன் மா இப்படிப் பேசுறீங்க?” 


“இல்லை ஆரம்பத்துலையே சேர்ந்து இருந்திட்டா தெரியாது. உங்க அப்பாவுக்கு இன்னும் ஒரு வருஷம் சர்விஸ் இருக்கே…. அதனால எதுக்கும் சொல்லிடு.” 


“நீங்க ஏன் மா இப்படி இல்லாதது எல்லாம் கற்பனை பண்றீங்க?” 


“ஆமாம் டா, நான் கற்பனை தான் பண்றேன். உங்க பெரியம்மா என்ன ஆகினாள் நியாபகம் இருக்கா? அவ பையன் பொண்டாட்டியோட வெளிநாடு ஓடிட்டான். எங்க அக்கா தன் பிள்ளையோட இருக்க முடியலைன்னு, ஏங்கி ஏங்கியே செத்துப் போனா? எனக்கும் அந்த நிலைமை வரணும்ன்னு சொல்றியா?” 


“நானும் அப்படி இருப்பேன்னு நினைக்கிறீங்களா மா? அப்படினா எனக்குக் கல்யாணமே வேண்டாம். நான் உங்களோடவே இருந்திட்டு போறேன்.” 


“இதை அவகிட்ட சொல்றதுக்கு உனக்கு என்ன கஷ்ட்டம்? கல்யாணம் பண்ணிக்காம சந்நியாசி ஆகப்போறியா? இதுக்குதான் உன்னைக் கஷ்ட்டப்பட்டு வளர்த்தோமா?” 


“நீ அவகிட்ட சொல்லு சொல்லாம போ… நான் என் கடமையைப் பண்ணிடுறேன்.” என்றவர், ராகுகாலம் முடிந்ததும் ரேவதி வீட்டிற்குக் கிளம்பி சென்றார். 


மகனின் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்த சரவணன். “உனக்கு இஷ்டம்னு தெரிஞ்ச பிறகு, உங்க அம்மா இந்தக் கல்யாணத்தை எப்படியும் நடத்திடுவா.” என்றார். 


“இல்லைப்பா அம்மா முழு மனசா சம்மதிக்கலை… என் மேல நம்பிக்கை இல்லையாப்பா அவங்களுக்கு. நான் ஏன் அவகிட்ட சொல்லணும்? என்னோட அப்பா அம்மா என்னோடதான் இருப்பாங்கன்னு, அவளுக்கே தெரியாதா?” 


“உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லை. இப்ப காலம் அப்படி இருக்கு. கூட்டு குடும்பமா இருக்க எல்லோரும் விரும்பறது இல்லை. அதனால முன்னாடியே சொல்லிட்டா நல்லது.” 


“உங்க அம்மா பேசுறது எல்லாம் மனசுல வச்சுக்காத. நீ எங்களுக்கு ஒரே பையன். உன் அம்மாவுக்கு நீதான் உயிரே…உன்னை சட்டுன்னு இன்னொருத்திக்கு தூக்கி கொடுக்க மனசு வராது.” 


“கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டி வந்த உடனே அம்மாவை விட்டுக் கொடுத்திடுறாங்க பசங்க. நீ அப்படி இல்லைன்னு உங்க அம்மாவுக்குப் புரிஞ்சிட்டா…. அவ மனசு அமைதி ஆகிடும்.” 


“அதுவரை அவ அப்படித்தான் இருப்பா, நீ கண்டுக்காம விட்டுடு.”
அவன் அப்பா சொன்னதைச் சரத்தும் யோசிக்க ஆரம்பித்தான். 


ரேவதி வீட்டிற்குச் சென்ற சங்கீதா, “நீ சொன்னதும் நான் வேற எதுவும் யோசிக்காம பொண்ணு பார்க்க வந்திட்டேன். ஆனா பொண்ணு உட்பட எல்லோரும் எதோ கல்யாணம் முடிவானா மாதிரி பேசினாங்க. என் பையனுக்கு வேற பிடிக்குமோ இல்லையோ…அவங்க எதோ அவசரப்படுற மாதிரி தோணிடுச்சு, அதுதான் யோசிச்சேன் வேற ஒன்னும் இல்லை.” 


“அது அப்படி இல்லை சங்கீதா அக்கா. என்னோட அண்ணன் எல்லாம் ஒத்து வந்தாதான் பொண்ணு பார்க்கிறதுன்னு சொல்லி, இதுவரை யாரையும் பொண்ணு பார்க்கவே விடலை… நீங்க பொண்ணு பார்க்க வந்ததும், அப்ப முடிவான மாதிரின்னு நினைச்சிட்டாங்க. அவ்வளவுதான்.”


“ஓ அப்படியா…எனக்கு அது தெரியாது இல்லையா….” 


“பரவாயில்லை விடுங்க, இப்ப சொல்லுங்க உங்களுக்கு எங்க அண்ணன் பெண்ணைப் பிடிச்சிருக்கா.” 


“பிடிச்சிருக்கு, சரத்தும் சரின்னு சொல்லிட்டான். இனிமே பொண்ணு பார்க்கிறது வேண்டாம், நேரா நிச்சயமே வச்சிடலாம்.” 


“ஓ ரொம்பச் சந்தோஷம், நான் எங்க அண்ணன் வீடல் பேசுறேன். அவங்களும் இந்த இடத்தை விட்டுட்டோமேன்னு கவலையாத்தான் இருக்காங்க.” 


“நீ என்ன பண்ணுவியோ தெரியாது. பொண்ணு வீட்ல கல்யாணத்துக்கு ஓகே சொல்லணும்.” 


“நான் இன்னைக்கே பேசிட்டு சொல்றேன்.” 


மாலையே ஸ்ரேயா வீட்டில் இருந்து சம்மதம் எனத் தகவல் வந்தது. 

“நாங்கதான் பொண்ணு வீடு எல்லாம் பார்த்திட்டோமே… நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. பையனும் இங்க இருக்கான், மேற்கொண்டு பேசிக்கலாம்.” எனச் சரவணன் சொல்ல… அதன்படியே ஞாயிற்றுக்கிழமை அன்று, பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீடு பார்க்க வந்திருந்தனர். 


சரத்தை நேராகப் பார்த்ததும் அவர்களுக்கு வெகு திருப்தி. நாங்கள் இது செய்வோம் அது செய்வோம் என ஆரம்பித்த போது, அது உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்யணுமோ, செஞ்சுக்கோங்க. எங்களுக்கு அதைப் பத்தி ஒன்றும் இல்லை என முடித்து விட்டனர்.

அடுத்தப் பதினைத்து நாளில் நிச்சயம். மூன்று மாதத்தில் திருமணம் என முடிவு செய்து கொண்டு சென்றனர். 


அன்று இரவு சரத் சென்னை கிளம்புவதால்… சங்கீதா அவனது தோய்த்து தேய்த்த உருப்படிகளை, அவன் பெட்டியில் அடுக்கிக் கொண்டு இருந்தார். சரத் அவர் எதிரில் சென்று உட்கார்ந்தான். 


“அம்மா, நிஜமா நீங்க முழு மனசாதான் இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்களா?” 


“ஆமாம் டா அதுல என்ன உனக்குச் சந்தேகம்?” 


“இல்லை சும்மா கேட்டேன்.” 


“பையனுக்குக் கல்யாணம்னா எல்லா அம்மாக்களுக்கும் இருக்கப் பயம் எனக்கும் இருக்கு. எங்களுக்கு வேற பிள்ளைகளும் இல்லை. நீ ஒரே பையன்.” 


“உங்க அப்பா சொல்றார், மனசுல எந்த எதிர்ப்பார்ப்பும் வச்சுக்காதன்னு. நானும் அப்படி இருக்கப் பழகிக்கிறேன்.” 


“ஏன் மா இப்படிப் பேசுறீங்க? எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” 


“நான் நல்லத்தான் இருக்கேன். நீ சந்தோஷமா இரு. அதுதான் எங்களுக்கு வேணும். நீ மனசுல எதுவும் போட்டு குழப்பிக்காத.” 


“சரி மா…” என்றவனை, நல்ல மனநிலையுடனே பெற்றவர்கள் அனுப்பி வைத்தனர். 


ரயிலில் ஏறி அமர்ந்தவன், செல்லை எடுத்து பார்க்க, இப்போது பேச முடியுமா எனக் கேட்டு ஸ்ரேயா தகவல் அனுப்பி இருந்தாள். சரத்தே அவளை அழைத்தான். 


“ஹாய் சொல்லு.” 


“நான் என்ன சொல்றது, நீங்கதான் சொல்லணும். எப்படி நம்ம கல்யாணம் திடிர்ன்னு நிச்சயம் ஆச்சு? எங்க வீட்ல சொன்ன போது என்னால நம்பக் கூட முடியலை.” 


“ஏற்கனவே ரெண்டு வீட்டுக்கும் பிடிச்சு தான் இருந்தது. ஆனா என்ன சரியா புரிஞ்சிக்கலை… இப்ப எடுத்துச் சொன்னதும், ஓகே சொல்லிட்டாங்க அவ்வளவுதான்.” 


“இப்ப இந்தக் கல்யாண பேச்சு நடக்க, நீங்கதான் காரணம் இல்ல… ஆனா அன்னைக்கு என்கிட்டே ஒரு சதவீதம் கூட உங்களுக்கு விருப்பம் மாதிரி காட்டிக்கலையே….” 


“அது வீட்ல பேசாம எப்படிச் சொல்றது?” 


“அப்ப உங்க வீட்ல வேண்டாம்ன்னு சொல்லி இருந்தா?” 


“இப்ப எதுக்கு அதெல்லாம். நான் என்னோட விருப்பத்தைச் சொன்னதும், எங்க அம்மா ஒரு நிமிஷம் கூட யோசிக்கலை… உடனே சரின்னு சொன்னாங்க. அப்படி அவங்க வேண்டாம்ன்னு சொன்னா, அதுல எதாவது நியாயமான காரணம் இருக்கும்ன்னு நினைச்சு விட்டிருப்பேன்.” 


எதுக்கு டா இவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என ஸ்ரேயாவுக்குத் தோன்றியது. 


“என்ன சத்தத்தைக் காணோம்?” 


“ஒரு பொய்யாவது சொல் கண்ணே….
உன் காதல் நான்தான் என்று…” என ஸ்ரேயா பாடிகாட்ட… 


“எதுக்குப் பொய்யா எல்லாம். இனிமே உண்மையாவே காதலிக்கலாம். காதலிச்சிட்டுத்தான் கல்யாணம் பண்ணனும்ன்னு இல்லை. கல்யாணம் பண்ணிட்டும் காதலிக்கலாம்.” 


சரத்தின் குரலில் இருந்த துள்ளல் ஸ்ரேயாவையும் தொற்றியது. முகம் மலர்ந்து புன்னகைத்தவள், “உங்களைப் பார்க்கணும் போல இருக்கு. எப்ப பார்க்கலாம்?” எனக் கேட்டாள். 


“ஆபீஸ் நாள்ல முடியாது. வாரக் கடைசியில வேணா பார்க்கலாம்.” என்றான். 


சனிக்கிழமை அன்று, அவர்கள் முன்பு சந்தித்த அதே மாலில், அதே இடத்தில் சந்திப்பது என முடிவு செய்து பேச்சை முடித்தனர். 


எப்போது சனிக்கிழமை வரும் எனக் காத்திருந்து ஸ்ரேயா சரத்தை பார்க்க சென்றால்… அங்கே அவன் மட்டும் இல்லை.


Advertisement