Advertisement

தள்ளி போகாதே நிலவே 


அத்தியாயம் 2 


மூன்று மாதங்கள் சென்றிருந்த நிலையில் சங்கீதாவும் நிறைய வரன்களை மகனுக்குப் பார்த்து இருந்தார். பார்த்தார் என்றால் நேரில் சென்று அல்ல, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெண்ணின் புகைப்படங்களை வாங்கிப் பார்ப்பது என்று இருந்தார். ஆனால் அவருக்கு எதுவும் திருப்தியாக இல்லை. 

ஸ்ரேயாவை விடவும் என மனதிற்குள் வைத்துக் கொண்டு தேடினதுனாலோ என்னவோ, அவருக்கு வேறு எந்த வரணும் பிடிக்கவில்லை. 

சரத்தின் நாட்கள் வழக்கம் போலவே சென்று கொண்டிருந்தது. ஒரு வார இறுதியில் அவனும் ஸவாதியும் மாலில் சுற்றிவிட்டு அங்கிருந்த உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். அதே உணவகத்திற்கு ஸ்ரேயாவும் தன் தோழிகளோடு வந்திருந்தாள். 

ஸ்ரேயா சரத்தை புகைப்படத்தில் பார்த்து இருக்கிறாள். அதோடு மனதில் பதிந்து போன முகமும் கூட… அவள் சரத்தையே கோபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

சரத்தும் ஸ்வாதியும் மட்டுமே இருக்க… அவர்கள் இருவரும் காதலர்கள் என நினைத்துக் கொண்டாள். ஸ்வாதி ரெஸ்ட் ரூம் சென்று வருவதாகச் சொல்லி எழுந்து செல்ல, தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு ஸ்ரேயா சரத் இருக்குமிடம் சென்று அவன் எதிரில் அமர்ந்தாள். 

முதலில் ஸ்வாதி தான் திரும்பி வந்துவிட்டாளோ எனச் சரத் பார்க்க, யாரென்றே தெரியாத பெண் எதிரில் அமர்ந்திருக்கவும், தெரியாத பார்வை பார்த்து வைத்தான். 

“ஹாய் நான் ஸ்ரேயா. நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்.” 

“நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க இல்லை. அதனால இப்படி அடுத்தவங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க சொல்லிட்டேன்.” 

சரத் ஒரு நொடி அவளை லூஸா என்பது போலப் புரியாமல் பார்த்தவன், 
“ப்ளீஸ்… கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றீங்களா… நான் எப்ப உங்க டைம் வேஸ்ட் பண்ணேன். நீங்க யாருன்னு கூட எனக்குத் தெரியாது.” என்றான் கொஞ்சம் எரிச்சலாக.

“நீங்கன்னா நீங்க இல்ல… உங்க அப்பா அம்மா. ஒரு வீட்டுக்கு பொண்ணு பார்க்க போறதுக்கு முன்னாடி, பையனுக்கு விருப்பமா எல்லாம் தெரிஞ்சிட்டு போகணும்.” 

“வீட்டுக்கு வந்து நல்லா சொஜ்ஜி பஜ்ஜி சாப்டிட்டு, இன்டர்வியூ வைக்கிற மாதிரி கேள்வி எல்லாம் கேட்டுட்டு, அப்புறம் வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது.” 

“மைன்ட் யுவர் வேர்ட்ஸ். எங்க அப்பா அம்மா பத்தி பேச உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது.” 

“பாதிக்கபட்டது நான். ஐ ஹேவ் ரைட்ஸ் டு டாக். இப்ப எனக்குப் புரியுது, தப்பு உங்க அப்பா அம்மா மேல இல்லை. லவ் பண்ண தெரியுது அதை வீட்ல சொல்ல தெரியாதா…. உங்களால எவ்வளவு பேருக்கு கஷ்டம்.” 

“ஹலோ…. என்ன விட்டா பேசிட்டே போறீங்க. என்னோட பெர்சனல் பேச நீங்க யாருங்க?” 

“நான் யாரும் இல்லைதான். பொண்ணு பார்க்க வந்திட்டு, வீட்டுக்குப் போனதும், இது சரி வராதுன்னு சொன்னா, நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமலா இருக்கோம். வேண்டாம்ன்னு சொன்ன காரணமாவது சரியா சொல்லணும் இல்ல…” 

“ஓ… எனக்கு இப்பதான் புரியுது. எங்க வீட்ல இருந்து உங்களைப் பெண் பார்க்க வந்திட்டு, அப்புறம் வேண்டாம்ன்னு சொன்னாங்களா…” 

சரத்தின் கேள்விக்கு ஸ்ரேயா பதில் சொல்லாமல் அவனை முறைத்து பார்க்க, அதுதான் விஷயம் எனச் சரத்துக்குப் புரிந்தது. 

“பொண்ணு பார்க்க வந்தா, அந்தப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சட்டம் எல்லாம் இல்லை. நீங்க இந்தக் குதி குதிக்கிறதுக்கு.” என்றான் சரத்தும் சற்று திமிராகவே. 

“நானும் சட்டம் இருக்கிறதா சொல்லலை…. உங்களுக்கு வேணா பொண்ணு பார்க்க போறது பொழுது போக்கா இருக்கலாம். ஆனா எங்களுக்கு அப்படி இல்லை.” 

“இந்த இடம் முடிவாகிடும்னு எங்க வீட்ல சொன்னதுனால தான், நான் பொண்ணு பார்க்கவே ஒத்துகிட்டேன்.” 

“சரி இப்ப அதுக்கு என்ன பண்ணணும்னு சொல்றீங்க?” 

“ஒன்னும் பண்ண வேண்டாம். ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிட்டு பண்ணுங்க. மத்தவங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.” 

“உங்க அட்வைஸ்கு தேங்க்ஸ். கொஞ்சம் இடத்தைக் காலி பண்றீங்களா?” 

சரத்தை முறைத்துக் கொண்டே ஸ்ரேயா எழுந்துகொள்ள, “அப்புறம் இன்னொரு விஷயம். எனக்கு லவ் பண்ணா எங்க வீட்ல சொல்ல தைரியம் இருக்கு. இதை உங்களுக்குச் சொல்லனும்ன்னு எனக்கு அவசியம் இல்லை, இருந்தாலும் சொல்றேன்.” 

“எல்லாம் தெரிஞ்ச மாதிரி எப்பவும் பேசாதீங்க.” சரத் சொன்னதைக் கேட்டு, ஸ்ரேயா முகம் கருத்துப் போய்விட்டது. ஐயோ லவ் பண்றான்னு நினைச்சு இல்ல வந்து பேசினோம் என அவள் நினைக்க, 

“சரியான வாயாடின்னு தெரிஞ்சு தான் எங்க அம்மா வேண்டாம்ன்னு சொல்லி இருப்பாங்க.” எனச் சரத் முனங்க… அது அவள் காதில் நன்றாக விழுந்தது. 

“நான் எப்படி இருந்தாலும் உங்களுக்கு அதைப் பத்தி ஒன்னும் இல்லை.” எனச் சொல்லிவிட்டு சென்றாள். 

சுவாதி ஓய்வு அறையில் முகம் கழுவி மேக்அப் போட்டுக் கொண்டு மெதுவாகத்தான் வந்தாள். பிறகு சிறுது நேரத்தில் இருவரும் அதே மாலில் படம் பார்க்க சென்றனர். ஸ்ரேயாவும் அவள் தோழிகளுடன் அதே படத்திற்கு வந்திருந்தாள். 

ஸ்ரேயா இருந்த அதே வரிசையில் தான் சரத்துக்கும் இருக்கை. அவளைக் கடந்து செல்லும் போது, இவன் அவளைப் பார்த்து முறைக்க, பதிலுக்கு அவளும் முறைத்து வைத்தாள். 

இருவரின் பார்வையும் அடிக்கடி மோதிக்கொள்ள, பார்க்கும் நேரமெல்லாம் முறைத்துக் கொண்டனர். 

வீட்டிற்கு வந்தும் இன்று மாலில் பேசிக் கொண்டதுதான் இருவருக்கும் ஓடிக் கொண்டிருந்தது. 

“தேவையில்லாமல் பேசி விட்டோம்.” என ஸ்ரேயாவுக்குத் தோன்றியது. 

அவன் காதலித்தால் உனக்கு என்ன? காதலிக்கவில்லை என்றால் உனக்கு என்ன? அவனிடம் ஏன் போய் அப்படிப் பேசினாய் எனத் தன்னையே நொந்து கொண்டாள். 

அவளிடம் தன் வீட்டினரை விட்டுக் கொடுக்காமல் பேசி விட்டாலும், இவளைப் போய் ஏன் அம்மா வேண்டாம்ன்னு சொன்னாங்க. நல்லாத்தானே இருக்கா என நினைத்த சரத் தன் அம்மாவையே அழைத்துக் கேட்டான். 

“அம்மா ரேவதி ஆன்டி அண்ணன் பொண்ணு பார்க்க போனதா சொன்னீங்களா… ஏன் அந்தப் பெண்ணை வேண்டாம்ன்னு சொன்னீங்க?” 

“அது ஏனோ அவங்க வீட்ல எல்லாம் முடிவாகின மாதிரி பேசினாங்களா… எனக்கு அது பிடிக்கலை.” 

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு. நல்ல இடம் அதோட ரேவதி ஆன்ட்டிக்கு தெரிஞ்ச இடம். இந்த இடமே முடிவாகிட்டா நல்லதுன்னு நினைச்சு பேசி இருக்கலாம்.” 

மகன் சொன்னதைக் கேட்ட சரவணன் “நல்லா கேளு, உங்க அம்மா பண்றது எதுவும் சரியில்லை.” என்றார். 

“என்னவோ போ எனக்கு அன்னைக்கு அப்படித் தோனுச்சு. அதுக்குப் பிறகு நானே அவங்க வீட்ல பேசினேன், அவங்கதான் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. நான் என்ன பண்றது? உங்க அப்பா சும்மா அதையே குத்திக் காட்டுறார். அதுக்குப் பிறகு நானும் வேற இடம் பார்க்கத்தான் செய்றேன், எதுவுமே அமைய மாட்டேங்குது.” 

“நல்ல நல்ல இடத்தையெல்லாம் விட்டுட்டா… இனி நல்ல இடம் வருமோ இல்லையோ…” 

“நீங்க வேற ஏன் என்னை டென்ஷன் பண்றீங்க?” 

“அம்மா, இனிமே எல்லாம் முடிவான பிறகு பொண்ணு பார்க்கிறது எல்லாம் பண்ணுங்க. என்னை யாராவது வந்து பார்த்திட்டு வேண்டாம்ன்னு சொன்னா உங்களுக்குக் கஷ்ட்டமா இருக்கும் இல்ல… அப்படித்தானே அந்தப் பெண்களுக்கும் இருக்கும்.” 

“சரி டா… நான் அதுக்குப் பிறகு எந்தப் பெண்ணையும் பார்க்க போகலை.” 

“ஒன்னும் அவசரம் இல்லை நிதானமா பார்க்கலாம்.” என்றவன் செல்லை வைத்து விட்டான். 

ஸ்ரேயாவின் கோபம் நியாயம் என்றே தோன்றியது. அவளைப் பார்த்து பேச வேண்டும் என நினைத்தான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வேறு, முன் தினம் அவளைப் பார்த்த நேரத்திற்கு. அதே மாலில், நேற்று பார்த்த அதே இடத்தில் அவளுக்காகக் காத்திருந்தான். 

என்ன நம்பிக்கையில் வந்திருக்கிறான் என அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவள் வருவாள் என்று தோன்றியது. 

எதுவும் சாப்பிடவும் தோன்றாமல், சும்மா வெறுமனே வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அங்கே இங்கே எனப் பார்வையை அலைய விட்டவனுக்கு, மின்தூக்கியில் இருந்து வெளியே வந்த ஸ்ரேயாவை பார்த்ததும் முகம் மலரவே செய்தது. 

அவளும் இவனைப் போலத்தான் வந்துவிட்டாள். ஆனால் அவன் வந்திருப்பானா தெரியாது. அவளுக்கும் அவனை அங்கே பார்த்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் தான். 

நேராக அவனிடம் வந்தவள், “சாரி, நேத்து நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என எடுத்ததும் அவள் ஆரம்பிக்க, 

“பொறுமையா பேசலாம், ப்ளீஸ் உட்காருங்க.” என்றவன், 

“நேத்து நானும் அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என்றான். 

“நான் சொல்ல வந்தது சொல்லிடுறேன்.” என்றவள், “இதுவரை என்னை யாரும் பெண் பார்க்க எல்லாம் வந்தது இல்லை. எங்க அப்பா அப்படி யாரையும் விடவும் மாட்டார். எல்லாம் ஒத்து வந்தாதான் பொண்ணு பார்க்கிறதுன்னு சொல்லி இருந்தார்.” 

“உங்க அப்பா அம்மா வர்றதுக்கு முன்னாடி நாள், என்கிட்ட உங்க போட்டோ பயோடேட்டா எல்லாம் கொடுத்தாங்க. ரேவதி அத்தைக்குத் தெரிஞ்சவங்க, நல்ல இடம், ஓகேவான்னு கேட்டாங்க, நானும் உங்க போட்டோ பார்த்திட்டு ஓகே சொன்னேன்.” 

“எங்க வீட்ல எல்லாம் நல்லா விசாரிச்சு இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா உங்க அப்பா அம்மா வந்து பார்த்திட்டு போன கொஞ்ச நேரத்திலேயே, ரேவதி ஆன்ட்டிகிட்ட வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க, காரணமும் பெரிசா சொல்லலை.” 

“அது எனக்கு ரொம்பக் கஷ்டமாகிடுச்சு.” 

“நீங்க சொல்றது சரி, ஆனா எங்க அம்மா யோசிச்சு முடிவு எடுத்திட்டு, உங்க வீட்ல திரும்ப பேசின போது, நீங்க தானே வேண்டாம்ன்னு சொன்னீங்க.” 

“இல்லை நான் வேண்டாம்ன்னு சொல்லலை… எங்க வீட்ல தான் அப்படிச் சொல்லிட்டாங்க. உங்க வீட்ல பார்த்திட்டு போன கொஞ்ச நேரத்திலேயே ரேவதி அத்தை போன் பண்ணி பேசினப்போ… உங்க அம்மா சரி வராதுங்கிற மாதிரி சொல்லிட்டாங்கன்னு சொன்னாங்க.. அது எங்க வீட்ல கொஞ்சம் கோபம். அதனால உங்க வீட்ல திரும்ப வந்த போது, வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எங்க அம்மா நேத்து ராத்திரி தான் என்கிட்டே சொன்னாங்க.” 

நேற்றுதான் ஸ்ரேயாவின் அம்மா அவளிடம் புலம்பி இருந்தார். அவங்க திரும்ப வந்த போது விட்டுட்டோம், இப்ப எதுவும் நல்ல இடமே வர மாட்டேங்குது. அப்படியே வந்தாலும் ஜாதகம் பொருந்த மாட்டேங்குது எனச் சொல்லி இருந்தார்.

“நேத்து உங்களை ஒரு பெண்ணோட பார்த்ததும், நீங்க லவ் பண்றீங்க போல… அதுதான் என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்கன்னு தப்பா நினைச்சு பேசிட்டேன்.” 

“பரவாயில்லை விடுங்க. தப்பு எங்க மேலையும் இருக்கு. எனக்கு இப்ப கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லை. எங்க அம்மாவுக்காகச் சரின்னு சொல்லி இருந்தேன். அதனால நான் பெரிசா ஆர்வம் காட்டினது இல்லை. எவ்வளவு நாள் தள்ளிப் போகுதோ நல்லதுன்னு நினைச்சு இருந்தேன். ஆனா இன்னொரு பக்கத்தை நான் யோசிக்கலை.” 

“இட்ஸ் ஓகே…… நானும் இவ்வளவு சீரியஸ் ஆகி இருக்க வேண்டாம்.” 

“சரி இனிமே அதைப் பத்தி பேச வேண்டாம் விட்டுடலாம். இப்ப என்ன சாப்பிடுறீங்க சொல்லுங்க.” என்றவன், உணவு வாங்கி வர எழுந்துகொள்ள, 
“நானும் வரேன்.” என் ஸ்ரேயாவும் அவனுடன் சென்றாள். 

இருவரும் அவரவருக்குத் தேவையானது வாங்கி வந்து உண்டபடி, அவர்கள் படிப்பு, வேலை எனப் பேசிக் கொண்டு இருந்தனர். 

சாப்பிட்டு முடித்தும், பேச்சுத் தொடர்ந்தது. அப்போது சரத்தின் செல்லுக்கு ஸ்வாதி அழைக்க, உடனே அழைப்பை ஏற்றான். 

“எங்க இருக்க நீ.” என்றுதான் எடுத்ததும் கேட்டாள். ஸ்ரேயா முன்பு என்ன சொல்வது. 

“வெளிய இருக்கேன் வந்து சொல்றேன்.” என்றான். 

“இப்பவே சொல்லு.” ஸ்வாதி பிடிவாதம் பிடிக்க, அதனால் உடனே எழுந்துகொண்டான். 

“ஓகே அப்புறம் பார்க்கலாம்.” எனச் சரத் விடைபெற, ஸ்ரேயாவும் எழுந்து கொண்டவள், “பாய்…” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டாள். 

எதோ சொல்லத் தெரியாத ஏமாற்றம். இன்று ஒரு உந்துதலில் இருவரும் வந்திருந்தனர். எப்போதும் அப்படியே நடக்குமா என்ன? 

“ஸ்வாதி ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்பிடுறேன்.” என்றவன், விரைந்து சென்று ஸ்ரேயாவின் எதிரில் நிற்க, அவள் அவனை முறைத்தாள். 

“இப்ப என்ன கோபம்?” 

“நான் யாரு உங்க மேல கோபப்பட… உங்க அம்மா தேன்மொழி கனிமொழின்னு யாரையாவது கல்யாணம் பண்ணி வைப்பாங்க. கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க.” என்றாள். 
“உனக்கு எல்லாம் நான் செட்டே ஆக மாட்டேன். இந்த டயலாக் சொல்லலை…” சரத் வாய்க்குள் சிரிப்பை அடக்கியபடி சொல்ல, 
“பொண்ணுங்க தேடி வந்தா, நீங்க எல்லாம் கிண்டலாத்தான் பார்ப்பீங்க.” என்றவள், அங்கிருந்து விரைந்து சென்றாள். 

சரத் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.


Advertisement