Advertisement

பிள்ளைகள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நம் பெற்றோரை நாம் முதலில் நன்றாக நடத்தினால் தான், நம் துணைக்கும் அந்த எண்ணம் வரும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. 

இங்கே சரத் எந்த இடத்திலும் தன் பெற்றோரை விட்டுக் கொடுக்கவில்லை. அதைப் பார்த்தே ஷ்ரேயா வீட்டினர் முதலில் காட்டிய அலட்ச்சியத்தை, இப்போது காட்ட துணியவில்லை. 

அதே நேரம் அவர்கள் மகளையும் நன்றாகத்தானே வைத்துக் கொள்கிறார்கள். 

குடும்பத்திற்குள் விட்டுக் கொடுத்து இருக்கலாம், எந்தக் காரணத்திற்காகவும் குடும்பத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. அப்படி இருந்தாலே வெளி ஆட்களால் குடும்பத்திற்குள் கலகம் செய்ய முடியாது. அதில் ஷ்ரேயாவின் புகுந்த வீட்டினர் தெளிவாகவே இருந்தனர்.
அன்று மதியத்திற்கு மேல்தான் ஷ்ரேயாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. 

பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டவர்கள் அல்லவா.. சங்கீதா பேத்தியை மகிழ்ச்சியாக முதலில் கைகளில் ஏந்தியவர், தனது கணவரிடம் சென்று காட்டினார். சரத்தும் ஆவலாக வந்து மகளைப் பார்த்தான். பிறகு ஷ்ரேயா வீட்டினர் என ஒவ்வொருவராகக் குழந்தையைப் பார்க்க, ஒரு மணி நேரத்தில் ஷ்ரேயாவும் அறைக்கு வந்து விட்டாள். 

சரத் மனைவியின் நலம் விசாரிக்க, அவனுக்குப் பதில் சொன்னவள்,” மாமா பாப்பாவை பார்த்தாங்களா? அவங்கதான் பொண்ணு தான்னு சொல்லிட்டே இருப்பாங்க. எங்க மாமா?” எனக் கேட்க. பிறகே அவர் இல்லாததை மற்றவர்கள் கவனித்தனர். 

“அப்பா எங்க மா?” சரத் கேட்க, 

“வேற எங்க போயிருப்பார் ஷாப்பிங்தான். இதனை நாள் குழந்தை பிறக்கிற வரை எதுவும் வாங்கக் கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தேன். இனி அவரைப் பிடிக்க முடியுமா?” என்றார் சங்கீதா. 

சிறிது நேரம் சென்று தான் சரவணன் வந்தார். அப்போது இன்னும் சில நெருங்கிய உறவினர்களும் வந்திருந்தனர். எல்லோருக்கும் தான் வாங்கி வந்த இனிப்புகளைக் கொடுத்தவர், பேத்திக்கு சில விளையட்டுச் சாமான்கள், பருத்தி உடைகள், மருமகளுக்கு இரண்டு காட்டன் நைட்டிகள் என வாங்கி வந்ததை மருமகளிடம் கொடுத்துவிட்டு, “அதுல பால் ரஸ்க் இருக்கு. காலையில சாயங்காலம் பால்ல தொட்டு சாப்பிடு.” என்றார். 

“சரிங்க மாமா?” 

“வேற எதுவும் வேணுமா?” 

“இல்லை இப்போதைக்கு இது போதும்.” 

பேத்திக்கு வாங்கி வந்தார் சரி. ஆனால் மருமகளின் தேவை அறிந்து அவளுக்கு வாங்கி வந்ததை எல்லாம் பார்த்து மற்றவர்களுக்கு ஆச்சர்யமே… 

“புதுத் துணி அப்படியே போட கூடாது. நான் துவைச்சு நாளைக்கு எடுத்திட்டு வரேன்.” எனச் சங்கீதா கணவர் வாங்கி வந்ததை எடுத்துக் கொண்டவர், “இனி அவ ரெஸ்ட் எடுக்கட்டும். நாம கிளம்பலாம்.” 

“நைட்டுக்கு நான் சரத்கிட்ட உனக்கும், அம்மாவுக்கும் இட்லி கொடுத்து விடுறேன். காலையில சாப்பாடு எடுத்திட்டு நானும் மாமாவும் வரோம்.” எனக் கணவரை அழைத்துக் கொண்டு கிளம்பி சென்றார். 

சரத்தும் வீட்டிற்குப் போய் விட்டு வருவதாகச் சொல்லி கிளம்பி விட, எஞ்சியிருந்த ஷ்ரேயாவின் உறவினர்கள், இப்படிச் சம்பந்தி எல்லாம் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. எங்க பொண்ணுக்குச் செஞ்சிருக்க இடத்தில, அவங்களும் வந்து உட்கார்ந்திட்டு அதைச் செய் இதைச் செய்யுன்னு அதிகாரம் வேணா பண்ணுவாங்களே தவிர… இப்படியெல்லாம் இருக்க மாட்டாங்க. அதுவும் பொண்ணு பிறந்திடுச்சுன்னு வேற முழ நீளத்துக்கு முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருந்தாங்க. எங்க பொண்ணு அன்னைக்கும் அழுதா. ஆனா உங்களுக்கு நல்ல சம்பந்தம் கிடைச்சிருக்கு.” என்றபோது, ஷ்ரேயாவின் அம்மாவும் பாட்டியும் ஆமோதிக்கத் தான் செய்தனர். 

ஷ்ரேயாவுக்குப் புகுந்த வீட்டினரை நினைத்து பெருமிதமே… 

மூன்று மாதங்கள் சென்று போகலாம் என்றதற்குக் கேட்காமல் முப்பதாம் நாளே குழந்தைக்குப் பெயர் வைத்த அன்றே, ஷ்ரேயா அவள் வீட்டினருடன் சென்னை திரும்பி விட்டாள். நால்வரும் காரிலேயே சென்னை வந்து விட்டனர். 

ஆறு மாதங்கள் வரை விடுமுறையில் இருந்தவள், பிறகு வீட்டில் இருந்தே வேலைப் பார்த்தாள். குழந்தைக்குப் பத்து மாதம் ஆனதும் அலுவலகம் சென்று வர ஆரம்பித்தாள். 

அவள் வரும் வரை குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் சங்கீதா, அவள் வந்தவுடன் குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் குடியிருப்பில் இருக்கும் தோழிகளோடு பேச, அல்லது கோவிலுக்குக் கடைக்கு என்று எங்காவது சென்று விடுவார். சரவணனும் அவரைப் போல ஓய்வு பெற்றவர்களுடன் வாக்கிங், யோகா எனச் செய்து கொண்டிருப்பார். இல்லையென்றால் கணவன் மனைவியுமே சேர்ந்து எங்காவது செல்வார்கள். 

காலை மதியம் சங்கீதாவே சமைத்து இருவருக்கும் கட்டி கொடுத்து விடுவார். இரவு மட்டும் ஷ்ரேயா செய்வாள். சனி ஞாயிறுகளில் ஷ்ரேயா தான் சமைப்பாள். சில நேரம் வெளியே சென்றும் உணவு அருந்துவார்கள். 

அன்றும் மருமகள் வந்ததும் சங்கீதா மருமகளிடம் பேத்தியை கொடுத்து விட்டு வெளியே சென்று விட, ஒரு நேர உணவாவது பேத்திக்கு மருமகள் கொடுக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதை ஷ்ரேயாவும் விரும்புவாள். 

இரவுக்கு எளிமையான உணவுதான். அதற்குத் தயார் செய்து வைத்து விட்டு, மகளுக்கு இரவு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள். அப்போது சரத் உள்ளே நுழைந்தவன், மனைவியையும் மகளையும் பார்த்துப் புன்னகைத்தான். 

தந்தையைப் பார்த்ததும் தன் அரிசி பல்லைக் காட்டி மகள் சிரிக்க, அதில மயங்கியவன், “ஹே சாய் ரொம்ப ஹாப்பியா இருக்காங்க போல…” எனச் சொல்லும் போதே, தன்னிடம் தாவிய மகளை, “இருடா, அப்பா வந்திடுறேன்.” என்றவன், வேகமாகச் சென்று முகம் கைகால் கழுவி, உடைமாற்றி வந்து தூக்கிக் கொண்டான். 

கணவனோடு மகள் விளையாடும் போதே, அவளுக்கு வேகமாக உணவை ஊட்டி முடித்தவள், “அத்தை எப்படி இவளை சமாளிக்கிறாங்க தெரியலை. ஆனா என்னால முடியலை.” என்றாள். சரத் அவளைப் பார்த்துச் சிரித்தான். 

“சிரிக்காதீங்க உங்களை எத்தனை நாளா இவளுக்குச் சாக்ஸ் வாங்கிட்டு வாங்க சொல்றேன், வாங்கிட்டு வந்தீங்களா?” ஷ்ரேயா கேட்க, 

“ஐயோ மறந்திட்டேனே.” என்றான். 

“தெரியும், மாமா இன்னைக்கு வாங்கிட்டு வந்து கொடுத்திட்டார். மாமா எப்படி இருக்காங்க, நீங்க எப்படி இருக்கீங்க பாருங்க.” 

“விடு இனிமே அவர்கிட்டயே கேளு.” என்றான். 

பெற்றோர் இருப்பதால் சரத் நிறைய வேலைகளில் இருந்து தப்பித்துக் கொள்வான். ஷ்ரேயாவும் தான். அவர்கள் இல்லையென்றால் குழந்தையைப் பற்றிக் கவலையில்லாமல் வேலைக்குச் சென்று வர முடியுமா… வேறு யாரையும் நம்பி குழந்தைகளை விடத்தான் முடியுமா. 

சரத்தும் ஷ்ரேயாவும் மட்டும் இருக்கும்போது அலுவலகமும் சென்று வந்து வீட்டையும் பார்க்க மிகவும் சிரமப்பட்டனர். அதனால் இருவருக்கும் இடையே நிறையச் சண்டைகளும் வரும். 

எதற்குத் திருமணம் செய்தோம், காலமெல்லாம் இப்படித்தான் இருக்கப் போகிறோமா எனச் சரத் நினைத்திருக்க, தான் விரும்பிய வேலையை விட்டு விட வேண்டியது வருமோ என்றெல்லாம் ஷ்ரேயாவும் நினைத்திருக்கிறாள். ஆனால் இன்று இருவரும் அப்படியே நேர்மறையாக இருந்தனர். 

வீட்டில் பெரியவர்கள் இருப்பது அவ்வளவு மன அமைதியை தந்தது. மாமியார் மருமகளுக்கு இடையே முட்டிக் கொள்ளாமலும் இல்லை. ஆனால் அதை அப்படியே யாரும் தொடர விடுவது இல்லை. 

அதுவும் மாமனார் வருந்தும்படி ஷ்ரேயா நடந்து கொள்ளவே மாட்டாள். மாமனாருக்கும் மருமகளுக்கும் ரொம்பவே ஒத்து போகும். சரத் இல்லாமல் கூட ஷாப்பிங் செல்வாள். ஆனால் மாமனார் இல்லாமல் செல்ல மாட்டாள். 

சரத்திற்குப் பொறுமை குறைவு. சீக்கிரம் தேர்வு செய்யச் சொல்வான். இல்லையென்றால் நீ வாங்கிட்டு வா, நான் உட்கார்ந்துகிறேன் எனச் சென்று உட்கார்ந்து விடுவான். ஆனால் சரவணன் அப்படியில்லை. மருமகள் எடுக்கும் வரை பொறுமையாக இருப்பார். அவரே பணமும் கொடுத்து விடுவார். 

“அப்பா, மகனுக்குச் சேர்த்து வைக்காம… இப்படி மருமகளுக்கு அள்ளி விடுறீங்களே..” எனச் சரத் கூடக் கேலி செய்வான். தானே சம்பாதித்தாலும் மாமனார் கொடுக்கும்போது ஷ்ரேயாவுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். 

சரவணன் வெளியே சாப்பிடுவதை ரொம்பவே விரும்புவார். ஆனால் அவரின் உடல்நலம் கருதி சங்கீதா அனுமதிக்க மாட்டார். 

“நீங்க இங்க பாருங்க, நாங்க வந்திடுறோம்.” எனச் சொல்லி, மாமனாரை தனியே அழைத்துச் சென்று, அவருக்குப் பிடித்தது வாங்கிக் கொடுத்து ஷ்ரேயா உண்ண வைப்பாள். இதில் எல்லாம் மாமனார் மருமகள் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். 

ஒருநாள் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய சரத், “இந்த வருஷம் எங்காவது டூர் போகலாமா? மலேசியா சிங்கப்பூர் போகலாமா.” என்றான். 

“நீங்க போய்ட்டு வாங்க. நாங்க இருக்கோம்.” எனச் சங்கீதா சொல்ல, ஆனால் சரவணனுக்குச் செல்வது விருப்பம் என்று அவர் முகத்தைப் பார்த்தே புரிந்து கொண்ட ஷ்ரேயா, 

“ஐயோ ! இவரோட போய் என்ன பண்றது? உங்க பையன் இது பண்ணக் கூடாது, அது பண்ணக் கூடாதுன்னு ஆயிரம் ரூல்ஸ் போடுவார். மாமா தான் நல்லா என்ஜாய் பண்ணுவாங்க. அதனால நாம எல்லோரும் போகலாம்.” என்றாள். 

“எதுக்கு நீயும் உங்க மாமனாரும் எங்களுக்குத் தெரியாம ரோட்டு கடையில விக்குறது எல்லாம் வாங்கித் திங்கவா…” எனச் சங்கீதா கேட்க, 

“ஆமாம் அதுக்குத்தான். அப்படியே நல்லா ஷாப்பிங் பண்ணலாம்.” எனச் சரத் எடுத்து கொடுக்க, 

“போயிட்டு வந்து ஒரு மாசத்துக்கு, உங்க மாமாவுக்கு வெறும் கஞ்சி தான் கொடுப்பேன் சொல்லிட்டேன்.” சங்கீதா சொல்ல, தங்கள் குட்டு வெளிப்பட்டதில் ஷ்ரேயா திருதிருவென விழித்தாள். 

“அப்படியே இவங்க ரெண்டு போரையும் வெளியேயும் விடக் கூடாது. இல்லைனா நமக்குத் தெரியாம வெளியே சாப்பிட்டு வந்திடுவாங்க.” சரத் மனைவியைப் பார்த்துக் கொண்டே சொல்ல, 

“மலேசியா சிங்கப்பூர் போயிட்டு வந்து ஆறு மாசத்துக்கு ஷாப்பிங் இல்லை. மாமனாரும் மருமகளும் எங்காவது எதாவது வாங்கட்டும் அப்புறம் இருக்கு. இங்க வீட்ல வைக்க இடம் இல்லை. அலமாரி எல்லாம் ரொம்பி வழியுது.” எனச் சங்கீதா மேலும் சத்தம் போட… 

“ப்ளீஸ் போதும்.” என ஷ்ரேயா அவருக்குத் தெரியாமல் சரத்தை பார்த்து கையெடுத்து கும்பிட… அதைச் சங்கீதாவும் பார்த்து விட… ஷ்ரேயா பயந்து விட்டாள். 

மருமகளைப் பார்த்து சங்கீதாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவரோடு மற்றவர்களும் இணைத்துக் கொள்ள, அந்த வீட்டின் சின்னச் சிட்டுக்கு எதுவுமே புரியவில்லை என்றாலும், அதுவும் கைதட்டி சிரிக்க, அதைப் பார்த்து எல்லோருக்கும் மேலும் சிரிப்புப் பொங்கியது. 

“நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க….”

Advertisement