Advertisement

தள்ளி போகாதே நிலவே 

இறுதி அத்தியாயம் 

பொங்கல் விடுமுறை முடிந்து ஷ்ரேயாவின் அம்மாவையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினர். 


பத்து நாட்கள் வரை இருந்த தீபா, பிறகு வீட்டையும் கணவரையும் நினைத்து புலம்ப, ஷ்ரேயாவே தான் சமாளித்துக் கொள்வதாகச் சொல்லி, அவரை ஊருக்குப் போகச் சொன்னாள். 

ஷ்ரேயாவுக்கு மசக்கை எனப் பெரிதாக இல்லை. எப்போதோதான் ஒருமாதிரி இருக்கும். அந்நேரம் புளிப்பாக எதாவது சாப்பிட்டால், பிறகு சாதாரணமாக இருப்பாள். தீபா மனமே இல்லாமல் தான் கிளம்பினார். 

“நீ எப்படி வேலை பார்ப்ப, உங்க மாமியாரை வேணா வர சொல்றீங்களா?” என அவர் சொல்ல, உங்களுக்குத் தேவைனா மட்டும், எங்க அப்பா அம்மா வர வேண்டுமா என நினைத்த சரத், “பரவாயில்லை அத்தை, ஒரு மாசம் தானே நாங்க பார்த்து இருந்துகிறோம். அவங்க பிளான் பண்ண படியே வரட்டும்.” என்றுவிட்டான். 

“ஆமாம் மா, அப்படி முடியலைனா நான் லீவ் போட்டுகிறேன். இல்லைனா வீட்ல இருந்து கூட வேலை பார்க்கலாம். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றால் ஷ்ரேயாவும். 

தீபா கிளம்பியது தெரிந்ததும் சரவணன் கூடச் சங்கீதாவை மட்டும் முதலில் அனுப்பி வைப்பதாகச் சொன்னார். ஆனால் சரத் வேண்டாம் என்றுவிட்டான். 

சரவணனுக்கு முன்பு ஒருமுறை உடல்நலமில்லாமல் இருந்தார். அதனால் அவரைத் தனியே விடச் சந்கீதாவுமே யோசிப்பார். அதனால் சரத்தும் அப்பாவை விட்டுத் தனியாக வர வேண்டாம். தாங்கள் சமாளித்துக் கொள்கிறோம் என்றான். 

ஷ்ரேயா வீட்டில் இருந்தே வேலை பார்த்தாள். மற்ற வேலைகளுக்கு ஆள் இருக்க, சமையல் மட்டும் அவளே செய்தாள். சரத்திற்கு இன்னும் சமையல் மட்டும் வெகு தூரமே… அதனால் நல்ல தரமான உணவகத்தில் இருந்து மனைவிக்கு வேண்டியது வாங்கி வந்து தருவான். 

ஸ்வாதி சந்தோஷின் திருமணம் வெகு விமர்சையாக நடக்க, இரண்டு நாட்கள் சரத்தும் ஷ்ரேயாவும் அங்கே தான் இருந்தனர். திருமணம் முடிந்த நான்கு நாட்களில் சந்தோஷ் வெளிநாடு கிளம்பி விட… ஸ்வாதி கணவனைப் பிரிந்த ஏக்கத்தில் சுற்றிக்கொண்டு இருந்தாள். 

ஒரே சோக பாடலாக ஸ்வாதி கேட்டுக் கொண்டிருக்க, சரத்திற்கு ஒருபக்கம் சிரிப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பாவமாகவும் இருக்கும். 

“கவலைப்படாதே சீக்கிரம் விசா வந்து விடும்.” எனத் தோழியைத் தேற்றுவான். ஸ்வாதி சிறிது நாட்களில் வெளிநாடு சென்று விடுவாள் என்பதால்… அவள் இருக்கும் வரை ஒன்றாக இருப்போம் என வார இறுதியில் ஒன்றாகத்தான் ஊர் சுற்றினர். 

சரவணனும் சங்கீதாவும் இனி அதிகம் சென்னையில் இருக்கப் போவதால்… தேவையான பொருட்களை முதலிலேயே வாகனத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். 

பணியில் இருந்து ஓய்வு பெறுவதால்… சரவணனுக்கு அவர் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சரத் மட்டும் வந்து அதில் கலந்து கொண்டான். ஸ்வாதியை ஷ்ரேயாவுக்குத் துணைக்கு வைத்து விட்டு வந்திருந்தான். 

இருவரும் ஒன்றாகச் சமைப்பது அரட்டை அடிப்பது எனப் பொழுதைக் கழித்தனர். முன்பிருந்த இடைவெளி இப்போது இருவருக்கும் இடையில் இல்லை. 

சரத்துடன் அன்றே சங்கீதாவும் சரவணனும் ஊருக்கு கிளம்பினர். அவர்கள் வந்து போனால் தங்க வீடு வேண்டும் என்று வீட்டை வாடகைக்கு விட வில்லை. மேல் வீட்டில் குடித்தனகாரர்கள் இருக்கிறார்கள். இரவுக்கு மட்டும் கீழே படுத்துக்கொள்ள ஆள் வைத்து விட்டு, சென்னை வந்து சேர்ந்தனர். 

சங்கீதா வந்ததும் வீட்டுப் பொறுப்பை அவர் எடுத்துக்கொள்ள, ஷ்ரேயாவுக்கு வீட்டில் எந்த வேலையும் இல்லை. அவள் அலுவலகம் மட்டும் சென்று வந்தாள். ஸ்வாதியும் விசா கிடைத்து கனடா சென்றுவிட்டாள். ஆனால் வாரம் ஒருமுறை வீடியோ கால் செய்து இவர்களிடம் பேசி விடுவாள்.

நடுவில் ஒருமுறை ஷ்ரேயாவின் பெற்றோர் மகளைப் பார்க்க வந்தர்வர்கள், இரண்டு நாட்கள் தங்கிவிட்டு சென்றனர். ஷ்ரேயாவே பெற்றோர் வந்திருக்கிறார்கள் என்றுதான் சின்னச் சின்ன வேலைகள் செய்தாள். அதற்கும் தீபா, “நீயேன் பண்ணுற. அதுதான் உங்க மாமியார் இருக்காங்க இல்ல…” என மகளைச் செல்ல விடாமல் தன்னோடு வைத்துகொள்ள, அதைச் சரத்தும் கவனித்து விட்டான். 

அவனுக்குக் கோபம்தான். ஆனால் முன்பு போல… நேரடியாகக் கோபத்தைக் காண்பிக்கவில்லை. ஆனால் அதற்காக அம்மாவே செய்யட்டும் என இருக்கவில்லை. “ஷ்ரேயா, போ போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணு. அவங்க தான் காலையில மதியத்துக்குச் சமைக்கிறாங்க. நைட்டுக்கு நீ பண்ணு. அவங்க செய்றாங்கன்னு நாம அவங்களையே எல்லா வேலையும் வாங்க கூடாது.” எனப் பொறுமையாக எடுத்து சொன்னான். 

கணவன் சொல்கிறான் என ஷ்ரேயாவும் செல்வாள். மகன் சொல்லித்தான் அவள் வருகிறாள் எனச் சங்கீதாவுக்குத் தெரியும். 

ஒருமுறை ஷ்ரேயா வீட்டில் இல்லாத போது, “நீயேண்டா அவளை வேலை வாங்கிற?” எனக் கேட்டார். 

“நீங்களே பண்ணிட்டு இருப்பீங்களா? உங்களுக்கும் வயசு ஆகுது மா…” என்றான். 

“இப்ப அவ மாசமா இருக்கிறா, இந்த நேரத்தில அவளை வேலை வாங்க வேண்டாம். எனக்கு முடியலைனா நானே சொல்றேன். எங்களுக்கு ஒரு பெண் இருந்திருந்தா.. நான் செய்ய மாட்டேனா?” 

“மாமியார் குல திலகம்ன்னு உங்களுக்குப் பட்டம் கொடுப்பாங்கன்னு நினைப்பா? உங்களை இளிச்சவாயன் வேணா ஆக்குவாங்க.” என்றான் மாமியாரை மனதில் வைத்து. 
அவன் எதற்குச் சொல்கிறான் எனப் புரியாமல் இல்லை.
“டேய், அவங்க பெண்ணைப் பெத்தவங்க. பொண்ணு வசதியா சுகமா இருக்கனும்னு தான் நினைப்பாங்க. நாம அவங்களைத் தப்பு சொல்ல முடியாது.” என்றார் சரவணன். 

“நாம மருமகளைப் பார்க்கிற நேரம் பார்க்காம இருந்திட்டு, நாளைக்கு அவ நம்மைப் பார்க்கனும்ன்னு மட்டும் எப்படி எதிர்பார்க்கலாம்?” சங்கீதா கேட்க, 

“நீங்க மாமியார்களின் இலக்கணத்தை மீறுறீங்க மா…” என்றான் சரத் கிண்டலாக. 

“போடா, என் மாமியார் எல்லாம் என்னை அந்தப் பாடு படுத்தினாங்க. மாசமா இருக்கும் போது கூட அப்படி வேலை வாங்குவாங்க. அப்பவே நினைச்சுப்பேன், நான் என் மருமகளை நல்லா பார்த்துக்கணும்னு.” 

மகன் மட்டும் போதும் என மருமகள் மேல் அக்கறை காட்டாத மாமியார்கள், மத்தியில் சங்கீதா வித்தியாசமாக இருந்தார். தான் பட்டபாடு தன் மருமகள் படவேண்டாம் என நினைத்தார். 

சீராட்ட ஆள் இருந்தாலே கொஞ்சம் சோம்பல் இருக்கும். அது போல ஷ்ரேயாவுக்கும் அத்தை தான் செய்து விடுகிறாரே, நாம் செய்ய வேண்டுமா என எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் கணவன் காட்டிய கண்டிப்பில், சில நாட்களில் அவளாகவே வேலைகளைப் பகிர்ந்து கொண்டாள். 

மாமியார் பேசியதில் சரத்திற்குக் கொஞ்சம் பயம். சில வீடுகளில் அப்படியும் நடக்கிறது தானே… மாமனார் மாமியாரை வேலை செய்ய, தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள என மட்டும் பயன்படுத்துவோரும் இருக்கிறார்கள் தானே… 

“போங்க, வீட்லயே இருக்காதீங்க. கீழ போய் நீங்களும் அப்பாவும் வாக்கிங் பண்ணுங்க, கோவிலுக்குப் போயிட்டு வாங்க.” எனச் சரத் அவர்களுக்கான நேரம் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான். 

வார இறுதியில் ஒருமுறை எல்லோரும் சேர்ந்து வெளியே சென்றால்.. ஒருவாரம் மகன் மருமகளை மட்டும் அனுப்பி வைத்து அழகு பார்த்தனர். அதுவும் சரவணனுக்கு மகனும் மருமகளும் நன்றாக உடை அணிந்து வெளியே செல்வதைப் பார்க்க மிகவும் பிடிக்கும். அவர்கள் வண்டி எடுத்து கிளம்பும் வரை நின்று பார்த்து விட்டு வருவார். 

ஷ்ரேயாவுக்குமே சிறிது நாட்களில் புரிந்தது. இது போல மாமனார் மாமியார் அமைவது எல்லாம் பெரிய வரம். அவளின் மற்ற தோழிகள், உடன் பணிபுரிவோர் வீடுகளில், வீட்டு வேலைகளை முடித்து வைத்து விட்டே அலுவலகத்திற்கு வரும் பெண்களைப் பார்க்கத்தானே செய்கிறாள். அதனால் அவளும் பதிலுக்கு மாமியார் மாமனார் மேல் மிகுந்த அக்கறை காட்டினாள். 

ஒன்பதாம் மாதம் பயணம் செய்வது அத்தனை பாதுகாப்பு இல்லை என்பதால்… ஏழாம் மாதாமே வளைகாப்பை கோயம்புத்தூரில் இவர்களின் வீட்டிலேயே வைத்தனர். வளைகாப்பு முடிந்து ஷ்ரேயா அவள் பெற்றோருடன், அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டாள். 

ஒன்பதாம் மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதாக இருந்தது. வளைகாப்பு முடிந்து சரத் அவன் பெற்றோருடன் வீடு திரும்பி விட்டான். அவனை விட்டு இருக்க முடியாமல் ஷ்ரேயா தான் திணறினாள். அதனால் இரு வாரத்திற்கு ஒருமுறை சரத் ஷ்ரேயாவை பார்க்க கோயம்புத்தூர் சென்று விடுவான். 

அப்போது எல்லாம் நாங்கள் இங்கே இருக்கிறோம், நீ போக வேண்டுமா என்றெல்லாம் அவன் பெற்றோர் கேட்டது இல்லை. மகன் போய் வரட்டும் என அனுப்பி வைத்தனர். 

எப்போதுமே சரவணன் சங்கீதாவின் உலகம் சரத்தை வைத்துதான் சுழலும். அவன் சந்தோஷம் நிம்மதி இரண்டும்தான் முக்கியம் என்று நினைப்பர். அதனால் உனக்கு நாங்கள் முக்கியமா மனைவி முக்கியமா என்ற கேள்வியே மகனுக்கு அவர்கள் வைக்கவில்லை. நீ உன் மனைவியோடு நன்றாக இரு. நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்பதே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதனால் குடும்பத்தில் வீண் சச்சரவு இல்லை. 

பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எல்லோருமாகக் கோயம்புத்தூர் சென்று விட்டனர். அன்று மாலையே சென்று சரவணனும் சங்கீதாவும் மருமகளைப் பார்த்து விட்டு அவர்கள் வீட்டிற்குத் திரும்பி விட, சரத் மட்டும் ஷ்ரேயாவோடு இருந்தான். 

இரண்டாம் நாளே நள்ளிரவில் வலி வர, எல்லோரும் மருத்துவமனை கிளம்ப, சரத் தனது பெற்றோருக்கு தகவல் சொல்வதற்காகக் கைப்பேசியை எடுத்தான். 

“இப்போவோவே ஏன் சொல்லணும். அவங்க வந்து என்ன செய்யப்போறாங்க? குழந்தை பிறந்ததும் சொல்லலாமே…” என ஷ்ரேயாவின் பாட்டி கூடச் சொல்ல, சரத் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவன் பெற்றோரை அழைத்துச் சொல்லியே விட்டான். 

மகளின் பிரசவம் பெற்றோரின் பொறுப்பு என இருக்காமல், அவர்களும் தேவைப்படும் சில பொருட்களை எடுத்துக் கொண்டு, உடனே மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். 

ஷ்ரேயாவின் வீட்டினர் பதட்டத்தில் எதையும் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே கிளம்பி இருக்க, சங்கீதா மருமகளுக்கு ஹார்லிக்ஸ் முதற்கொண்டு கொண்டு வந்திருந்தார். 

அவள் வலியில் துவளும் போதெல்லாம், கொஞ்சம் கெஞ்சிக் கொஞ்சி குடிக்க வைத்தார். 

சரவணனும் சங்கீதாவும் மருமகளைக் கவனித்தால் அவர்களுக்கு என்ன தேவை எனச் சரத் பார்த்துக் கொண்டான். பெற்றோர்களுக்குத் தேவையான உணவு என நேரத்திற்கு வாங்கி வந்து கொடுத்துக் கவனித்தான். அப்போது மற்றவர்களுக்கும் சேர்த்து தான் வாங்கிக் கொடுத்தான். 

அவன் பெற்றோரை இம்மியளவு கூட விட்டுக் கொடுக்காதது பார்த்து, ஷ்ரேயா வீட்டினருக்கு ஆச்சர்யமே. 

ஷ்ரேயாவுமே வலியில் இருந்தாள் கூட மாமனார் மாமியார் சவுகரியத்தைக் கேட்டுக்கொள்வாள். சரத் அப்படி அவளைப் பழக்கி இருந்தான். 

உன்னை நாங்க விட்டுக் கொடுக்க மாட்டோம், அதே போல நீயும் விட்டுக் கொடுக்கக் கூடாது எனப் பதிய வைத்திருந்தான். 

Advertisement