Advertisement

தள்ளி போகாதே நிலவே

அத்தியாயம் 13 

ஷ்ரேயாவின் வீட்டினர் மாலை வருவதாகச் சொல்லியிருந்ததால்… சங்கீதா மதியம் கூட ஓய்வு எடுக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஷ்ரேயாவின் அம்மாவிற்குத் தாம்பளத்தில் வைத்துக் கொடுக்கப் புடவை வாங்க அவரும் சரத்தும் கடைக்குச் சென்று வந்தனர். 

அவள் வீட்டினர் வரும் வரையே ஷ்ரேயா உறங்கிக் கொண்டிருந்தாள். சரத்தும் அவளை முன்பே எழுப்பி இருக்க, ம்ம் என முனங்கினாலும் எழுந்துகொள்ள மனமில்லாமல் படுத்தே கிடந்தாள். 

உண்டாகி இருப்பது தெரியாதவரை சுறுசுறுப்பாகத் தான் இருந்தாள். ஆனால் மசக்கை என்று தெரிந்தவுடன் படுத்தே கிடக்க வேண்டும் போல இருந்தது. 

சரவணனும் சங்கீதாவும் வந்தவர்களை வரவேற்க, பெற்றோரின் சத்தம் கேட்டதும் அப்படியே எழுந்து வந்து பெற்றோர் இருவருக்கும் நடுவில் சோபாவில் அமர்ந்தவள், அவள் அப்பாவின் தோள் மீது தலை சாய்த்துக் கொண்டாள். இன்னும் விழிகளில் உறக்கம் மிச்சம் இருக்க… பெற்றோரை பார்த்த மகிழ்ச்சியில் முகம் மலர்ந்திருந்தது. 

“எப்படி இருக்க ஷ்ரேயா? பார்த்தா ரொம்பச் சோர்வா தெரியறியே… ஒழுங்கா சாப்பிட்டியா இல்லையா?” எனத் தீபா மகளை விசாரிக்க, 

“நல்லா சாப்பிட்டேனே… இப்பதான் தூங்கி எழுந்தேன் அதுதான்.” என ஷ்ரேயா சொல்ல,
“வாந்தி தலைசுத்தல் எதுவும் இருக்கா?” எனத் தீபா தொடர்ந்து கேட்க, 

“அதெல்லாம் இல்லவே இல்லை. நல்லாத்தான் இருக்கேன்.” என்றாள். சரத்தும் சரவணனும் அவர்கள் பேசுவதைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 

கோதுமை அல்வா, முந்திரி பக்கோடா எனச் சங்கேத வீட்டிலேயே செய்திருந்தவர், அதை அழகான சின்னத் தட்டுகளில் வைத்துக் கொண்டு வந்தவர், “ஷ்ரேயா தலை வாரி முகம் கழுவிட்டு வந்து சாப்பிடு.” என்றவர். மற்றவர்களுக்குக் கொடுக்க, ஷ்ரேயா எழுந்து உள்ளே சென்றாள். 

“நான் ஷ்ரேயாவோட சாப்பிடுறேன்.” என்ற தீபா தானும் எழுந்து மகள் பின்னே சென்றார். 

வாங்க மா என்ற ஷ்ரேயா தலைவார…தீபா கட்டிலில் உட்கார்ந்து மகளின் அறையை ஆராய்ந்தார். 

ஷ்ரேயா முகம் கழுவி பொட்டு வைத்துக் கொண்டு வர, இருவரும் மீண்டும் ஹாலுக்கு வந்தனர். 

சங்கீதா அவர்கள் இருவருக்கும் டிபன் தட்டைக் கொடுத்தார். 

டிபன் சாப்பிட்டதும் எல்லோருக்கும் டீ கொடுத்தவர், பிறகு தானும் அங்கேயே அவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். 

அப்போது சாதரணமாகக் கேட்டிருந்தால் பரவாயில்லை, “நாங்க இப்பவ ஷ்ரேயாவை எங்களோடு கூடிட்டு போறோம். மாசமா இருக்கிற பொண்ணு நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.” எனத் தீபா கட்டளை போலச் சொல்லவும் சரத்திற்குக் கோபம் வந்துவிட்டது. 

ஏன் சங்கீதாவிற்குமே முகம் வாடிவிட்டது. எதோ இங்கே அவர் பெண்ணைக் கொடுமை படுத்துவது போல, இது என்ன பேச்சு எனக் கடுப்பாக இருக்க, அதற்குள் சரத், “அவ இங்கேயும் ரெஸ்ட் தான் எடுக்கிறா.” என்றான் பட்டென்று. 

அதற்குள் சுதாரித்த சங்கீதா, “என்ன இருந்தாலும் அம்மா வீடு போல வருமா…அவ அம்மாகிட்ட இன்னும் ப்ரீயா என்ன வேணும்னு கேட்பா.” என்றார். 

“ஏன் இங்க என்ன குறை? நீங்களும் தான் அவளுக்கு என்ன வேணும்னு பார்த்து செய்தீங்க. அப்பா அவளுக்கு ஜூஸ் போட்டுக் கொடுக்கலை.” என்றவன், “என்ன ஷ்ரேயா பார்த்திட்டு இருக்க, இங்க உன்னை நல்லாத்தானே கவனிச்சோம். நீ எதுவும் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.” எனச் சரத் நேரடியாக மனைவியிடம் பாய…. 

“இங்கேயும் நான் ரெஸ்ட் தான் எடுத்தேன். அத்தை தான் எல்லாம் பண்ணாங்க.” என்றாள் ஷ்ரேயா. 

“இருந்தாலும் அவ அம்மாகிட்ட படுத்துகிட்டு வேலை வாங்குவா… அப்படியெல்லாம் மாமியாரை வேலை வாங்க முடியுமா? அதெல்லாம் உனக்குப் புரியாது.” என்றவர், மகனிடம் பார்வையில் பேசாதே என்றார். 

மகன் இங்கே இருந்தால் மேலும் எதுவும் பேசிவிடுவானோ என்ற பயத்தில், “சரத், தாம்புலத்துல வைக்க வெத்தலை வாங்க மறந்துட்டேன். நீ போய் வாங்கிட்டு வா.” என்றவர், “இன்னைக்கு நாள் நல்லா இல்லை. நாளை மறுநாள் நல்லா இருக்கு. அன்னைக்கு நீங்க வந்து அழைச்சிட்டு போனாலும் சரி, இல்லைனா சரத்தை கூட வந்து விடச் சொல்றேன்.” எனச் சங்கீதா சொல்லவும், 

“இங்க இருந்தாலும் ஒண்ணுதான். அங்க இருந்தாலும் ஒண்ணுதான். நீங்க எங்களை விட நல்லா பார்த்துபீங்கன்னு தெரியும். எனக்கு அதெல்லாம் ஒன்னும் கவலை இல்லை. நீங்க சொல்றபடியே பண்ணலாம்.” என ஷ்ரேயாவின் அப்பா சொல்ல, அவர் பேச்சில் சங்கீதாவிற்கு மனது நிறைந்து போனது. 

“இந்த ஒருமுறை தான் நாள் கிழமை பார்க்கிறது. அப்புறம் உனக்கு எப்ப போகணுமோ, உங்க அம்மா வீட்டுக்குப் போகலாம். உனக்கு அங்கேயே இருக்கனும்னாலும் இருந்துக்கோ.” எனச் சங்கீதா ஷ்ரேயாவிடம் சொல்ல, அவள் சம்மதமாகத் தலையசைத்தாள். 

சரத் கடையில் இருந்து வந்ததும், ஷ்ரேயாவின் பெற்றோர் கிளம்ப, சங்கீதா தீபாவிற்கு மஞ்சள் குங்குமம் கொடுத்தவர், பெரிய தாம்புலத்தில் பட்டுபுடவை தேங்காய், மஞ்சள் சரடு, பூ, பழம், வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்துக் கொண்டு வந்து மருமகளிடம் கொடுத்து, அவள் அம்மாவுக்குக் கொடுக்கச் சொன்னார். 

சங்கீதா ஒரு பை கொண்டு வந்து கொடுக்க, தீபா அதில் எல்லாம் வைத்து எடுத்துக் கொண்டார். ஷ்ரேயா அவள் பெற்றோரை வழியனுப்ப வெளியே வரை சென்றாள். அவர்கள் தனியாகப் பேசிக்கொள்ளட்டும் என இவர்கள் யாரும் செல்லவில்லை. 

வாயிலில் வைத்து ஷ்ரேயாவின் அப்பா, “உனக்குப் பேசவே தெரியலை… இப்படியா பட்டுன்னு பேசி வைப்ப, அவங்க முகமே வாடி போச்சு. மாப்பிள்ளைக்கு வேற கோபம் வந்திடுச்சு.” என மனைவியைக் கடிந்து கொள்ள, 

“நான் ஷ்ரேயாவுக்காகச் சொன்னேன்.” எனத் தீபா சமாளிக்க, 

“நல்லா கவனிக்கலைனா சொல்லலாம். அவங்களே நல்லா கவனிக்கும் போது நாம குறைச்சு சொல்லலாமா… அவங்களுக்குக் கஷ்ட்டமா இருக்காதா? உங்க அம்மா அப்படிச் சொன்னாலும், நீ இல்லைன்னு உடனே மறுக்க வேண்டாமா ஷ்ரேயா, மாப்பிள்ளை சொல்ற மாதிரியா வச்சுகிறது.” 

“இல்லைப்பா எனக்குச் சட்டுன்னு தோணலை…” 

“நாட்டில் என்னவெல்லாமோ நடக்குது. எவ்வளவு செஞ்சாலும் பத்தலைன்னு சொல்ற சம்பந்திங்க தான் இருக்காங்க. ஆனா அவங்க நம்மகிட்ட எதுவும் அப்படி அடாவடியா கேட்டது இல்லை. அவங்க ஷ்ரேயாவையும் நல்லா பார்த்துகிறாங்க. அப்படி இருக்கிறவங்களை நம்ம பேச்சாலே நாமே மாத்திட கூடாது. அது நாளைக்கு நம்ம பெண்ணைத் தான் பாதிக்கும்.” 

“ஷ்ரேயா, நீயும் எப்ப பேசணுமோ அப்ப பேசணும். மாப்பிள்ளை சொன்னதுக்குப் பதில் நீயே சொல்லியிருந்தா… அது வேற மாதிரி போயிருக்கும். ஆனா பாரு அவரைப் பேச விடாம அவங்க அம்மா கடைக்கு அனுப்பினாங்க. பட்டுபுடவை எல்லாம் தயாரா வச்சிருகவங்க, வெத்தலை வாங்கி வச்சிருக்க மாட்டாங்களா என்ன?” 

“இனி அவங்களுக்குத் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணாதே.” 

“சரிப்பா.” என்றாள் ஷ்ரேயா. அவளும் அவள் அப்பா சொன்னதால் பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள்… இதே சரத் சொல்லியிருந்தால் சண்டை தான் வந்திருக்கும். 

“நீ அவகிட்ட எதுவும் சண்டை போடக்கூடாது.” எனச் சரத்தை சங்கீதா அங்கே எச்சரிக்க, 

“ஆமாம் டா சரத், அவங்க அம்மா பேசினதுக்கு நீ ஷ்ரேயாவை கோவிக்கிறதுல நியாயம் இல்லை. நீ சண்டைப் போட, அவ இன்னும் நம்மை விட்டு விலகி தான் போவா… இதெல்லாம் கண்டுக்காம விடு.” என்றார் சரவணனும். 

“ஷ்ரேயா நல்ல மாதிரிதான். இவனுக்குதான் அவகிட்ட பேச தெரியலை. அவ அன்பா சொன்னா கேட்கிறவ தான்.” என்ற சங்கீதா மருமகள் வருவதைப் பார்த்து, “வா ஷ்ரேயா…” என்றவர், மருமகளைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டார். 

அன்று இரவு உண்டு முடிக்கும் வரை எல்லோரும் ஹாலில் தான் இருந்தனர். இரவு படுக்கத்தான் அறைக்குச் சென்றனர். 

“அம்மா சொல்றது போல நமக்குதான் பேச தெரியலையோ…” எனச் சரத்தும் யோசனையில் இருந்தவன், ஷ்ரேயா அவன் அருகில் படுப்பதைப் பார்த்ததும், “உனக்கு இன்னைக்கு உங்க அம்மா வீட்டுக்கு போக முடியலைன்னு வருத்தமா?” எனக் கேட்க, 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே… தலைப் பொங்கல் அதனால போகலாம்னு நினைச்சேன். அதுதான் அவங்களே இங்க வந்துட்டாங்களே…” என அவள் சொல்ல, 

“பத்து நாள் லீவ் ஒண்ணா இருக்கலாம்னு நினைச்சேன். நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா, எனக்குதான் இங்க போர் அடிக்கும்.” என்றான். 

கணவன் அப்படிச் சொன்னதும் மனைவிக்கு உச்சி குளிர்ந்து போனது.
“நீங்களும் என்னோடவே இருங்க.” என்றாள். 

“உங்க அம்மா உன்னைக் கவனிப்பாங்களா இல்லை என்னைக் கவனிப்பாங்களா… நானும் அங்க வந்து உட்கார்ந்திட்டா, அவங்களுக்குத் தான் வேலை. இங்க அம்மாவுக்கு நான் அப்பா எல்லாம் உதவி பண்ணுவோம். ஆனா உங்க வீட்ல அப்படியில்லை. உங்க அம்மாவே பண்ணனும்.” 

சரத் சொல்வது உண்மைதான். தீபாவின் மாமியார் முடியாதவர், வீட்டு வேலைக்கு எல்லாம் ஆட்கள் இல்லை. தீபா தான் செய்வார். 

“என்ன பன்றது? நான் போய்ட்டு ரெண்டு நாளல்ல வந்திடவா…” ஷ்ரேயாவுக்கும் சரத்தை விட்டு இருக்க விருப்பம் இல்லை. அதுவும் கணவனே அப்படிச் சொன்னதும், சந்தோஷத்தில் ரெக்கை இல்லாமல் வானத்தில் பறந்தாள். 

மனைவி இவ்வளவு சொன்னதே சரத்திற்குப் போதும், “நீ ஊருக்கு போறவரை அங்கேயே இருந்திட்டு வா… நாம ஊர்ல போய்ச் சேர்ந்து தானே இருக்கப் போறோம். நான் டெய்லி சாயங்காலம் உன்னைப் பார்க்க வரேன்.” என்றான். 

“உங்களுக்குச் சின்னக் குழந்தை எல்லாம் தூக்க தெரியுமா?” என ஷ்ரேயா சந்தேகம் கேட்க,
அவளுக்குத் தெரியாது என அவள் கேட்பதிலேயே தெரிந்தது. 

“தெரியாது தான். அதுக்காகத் தூக்காம இருக்க முடியுமா… அதுதான் அம்மா இருக்காங்களே.. அவங்க சொல்லித்தருவாங்க கவலைப்படாதே.” என்றான். 

“குழந்தைக்குத் தேவையானது எல்லாம் எப்ப வாங்கிறது?” 

“உன்னை விட எங்க அப்பா ஆர்வக்கோளாறு. குழந்தை பிறக்கிற வரை எதுவும் வாங்கக் கூடாது. பிறந்ததும் தான் வாங்கனும்ன்னு அம்மா சொன்னாங்க. அதனால அப்பவே வாங்குவோம்.” 

“ம்ம்… குழந்தைக்குத் தனியா குட்டி கட்டில் மெத்தை எல்லாம் வாங்கணும்.”
“கண்டிப்பா வாங்கலாம்.” 

கணவனும் மனைவியும் வெகு நேரம் குழந்தையைப் பற்றிய அழகிய கற்பனையில் ஆழந்து போனார்கள். 

மறுநாள் காலை சரத் எழுந்து வெளியே வந்த போது, மாமியாரும் மருமகளும் சிரித்துப் பேசியபடி காலை உணவை செய்து கொண்டிருந்தனர். 

போன முறை இங்கே வந்து பிரச்சனை ஆன போது ஷ்ரேயா கொஞ்சம் விலகலையே காண்பித்தாள். இந்த முறை அவன் பெற்றோரால் தான் வாயை அடக்கினான். இல்லையென்றால் இருந்த கோபத்திற்கு நேற்று அவளிடம் தான் சண்டைக்குச் சென்றிருப்பான். 

சரத்திற்கு அப்போது தோன்றியது ஒன்றுதான். எல்லாவற்றிற்கும் ரியாக்ட் செய்ய வேண்டாமோ… சில விஷயங்கள் கண்டும் காணமல் இருந்தாலே சரியாகி விடுமோ எனத் தோன்றியது. 

இரண்டு நாட்கள் சென்று சரத்தே ஷ்ரேயாவை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அன்றே மருத்துவரையும் பார்த்து விட்டு வந்தனர். 

இரண்டு நாட்கள் கழித்துச் சரத்தோடு சங்கீதாவும் மருமகளைப் பார்க்க பூ பழங்கள் என வாங்கிக் கொண்டு வந்தார். அப்போது ஷ்ரேயாவின் தந்தையும் வீட்டில் இருந்தார். 

“சரத் ஷ்ரேயாவுக்காக எங்களைச் சென்னை வர சொல்லி கூப்பிடுறான். ஆனா இவருக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு ரிடையராக. நீங்க இப்ப ஷ்ரேயாவோட அவங்க அம்மாவை அனுப்பினா… நாங்க அடுத்த மாசம் போறோம்.” என எடுத்து சொல்ல, சம்பந்தி சொல்லும்போது மறுக்க முடியாமல் ஷ்ரேயாவின் அப்பாவும் சரியென்றார். 

அம்மாவும் உடன் வரப் போகிறார் என்றதும் ஷ்ரேயாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. தீபாவுக்கும் சென்னைக்குச் சென்று மகள் வீட்டில் இருப்பது விருப்பமே… 

திரும்ப வரும் வழியில் சரத் “ஏன் மா நீங்க வரலை… சும்மா பொய் சொல்லாதீங்க. அப்பாவுக்கு லீவ் எடுக்க முடியும் எனக்குத் தெரியும்.” என்றான். 

“இந்த மாதிரி நேரத்தில பெண்களுக்கு அவங்க அம்மாவோட இருந்தா தான் ப்ரீயா இருப்பாங்க. அதோட உன் மாமியாரும் பாவம் வேற எங்கேயும் போறது இல்லை.” 

“அவங்க அம்மாவை பார்க்கனும்னு உங்க மாமனாரும் அவங்களை எங்கேயும் அனுப்புறது இல்லை.” 

“எனக்கும் ஷ்ரேயா அம்மா ஏன் இப்படின்னு புரியாமதான் இருந்தது. ஆனா ஒரு நாள் மீரா என்கிட்டே சொன்னா…” 

“ஷ்ரேயா பாட்டி ஒரு காலத்தில அவங்க பெண்களோட சேர்ந்திட்டு மருமகளை ஆட்டி வச்சாங்க போல… அதோட மத்த பிள்ளைங்க எல்லாம் அவங்களை வச்சு பார்க்கலை… உங்க மாமியார் தான் பார்கிறாங்க. அதுதான் நம்மைப் போல நம்ம பெண்ணும் அப்படியே இருந்திடுவாளோன்னு பயத்துல உங்க மாமியார் இப்படி நடதுக்கிறாங்க.” 

“அவங்களையும் குத்தம் சொல்ல முடியாது. அவங்க அனுபவம் அப்படி. நாம அப்படியில்லைன்னு அவங்களுக்குப் புரிஞ்சதுன்னுவை, அவங்க மாறிடுவாங்க. அப்படி அவங்க மாறலைனாலும் நமக்கு ஒன்னும் இல்லை. நமக்கு ஷ்ரேயா நல்லாயிருந்தா போதும். நாம நல்லதே நினைப்போம்.” 

அம்மா சொன்ன அனைத்தையும் சரத் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான். அதன் விளைவாக மறுநாள் மனைவியைப் பார்த்து விட்டு கிளம்பும் போது, 

“உங்க அம்மாவை ரொம்ப வேலை வாங்காத. நீயும் முடியும் போது கொஞ்சம் அவங்களுக்கு உதவி செய்.” என மனைவியிடம் மாமியாரை வைத்துக் கொண்டு சொல்ல…. தீபா முதல்முறையாக மருமகனை நன்றி பெருக்கோடு பார்த்தார். 

Advertisement