Advertisement

“சாப்பிட்டது ஒரு மாதிரி நெஞ்சுக்குள்ளேயே இருக்கு. பொங்கலை நிறையச் சாப்பிட்டேன் போல… அதுதான் திகட்டுது.” 
“இரு காரமா எதாவது சாப்பிடு சரியா போயிடும்.” எனச் சரத் சொல்ல, ஷ்ரேயா ஊர்காய் எடுத்திட்டு வாங்க என்றாள். 
சரத் சென்று ஊறுகாய் எடுத்து வர, ஷ்ரேயா புளிப்பான மாங்காய் ஊறுகாயை எதோ சாக்லேட் போல வாயில் போட்டுக்கொள்ள… அவளை எதோ அதிசய பிறவி போலச் சங்கீதா பார்த்துக் கொண்டு இருந்தார். 
“அம்மா, இவ இப்படித்தான் மா கொஞ்ச நாளாஊறுகாயா சாப்பிடுறா…. நீங்க கொடுத்த ஊறுகாய் எல்லாம், இவளே காலி பண்ணிட்டா…” எனச் சரத் சொல்ல… கேட்ட சங்கீதாவிற்குத் தலையே சுற்றியது. அவர் அங்கேயே கட்டிலில் உட்கார்ந்து விட்டார். 
“எப்ப ஷ்ரேயா வீட்டுக்குத் தூரம் ஆன…” சங்கீதா கேட்க, ஷ்ரேயா விழித்தாள். 
“நான் தேதி எல்லாம் நியாபகம் வச்சுக்க மாட்டேன். ஆனா கரெக்டா வரும்.” 
“ம்ம்… எப்ப கடைசியா வந்தது.” 
“அது நியாபகம் இல்லை.” 
“நியாபகம் இல்லைனா இப்ப சமீபமா இல்லைன்னு தானே அர்த்தம்.” 
“ஆமாம்… என்னைக்கு வந்தது? மண்டையைத் தட்டி யோசிக்கும் மருமகளின் தலையில் நங்கென்று ஒன்று போடலாமா எனச் சங்கீதாவிற்குத் தோன்ற… அவர் பரபரத்த கையை அடக்கிக் கொண்டு இருந்தார். 
“இவ இப்படித்தான். திடிர்ன்னு என்னை அது வாங்கிட்டு வா, இது வாங்கிட்டு வான்னு கடைக்கு அனுப்புவா…முன்னாடியே தேதி நோட் பண்ணி வச்சு வாங்கி வைக்க மாட்டா…” சரத் சொல்ல… இதெல்லாம் போய்ச் சொல்றான் பாரு என ஷ்ரேயா அவனை முறைத்தாள். 
என்ன வாங்க சொல்லுவாள் எனச் சங்கீதாவுக்குப் புரிய, அவர் அமைதியாக இருந்தார். 
“சரி கடைசியா எப்ப போய் வாங்கின…” சங்கீதா கேட்க, 
“ஹான்… ஒருநாள் என்னை ராத்திரி அனுப்பினா.. கடை எல்லாம் மூடிட்டான். நான் மெடிகல் ஷாப்ல போய் வாங்கினேன். இருங்க கூகள் பே தான் பண்ணேன். தேதி பார்கிறேன்.” என்றவன் கைபேசியில் தேட… 
இப்படியொரு மகன் மருமகளை வைத்துக்கொண்டு என்ன சொல்வது என்பது போலச் சங்கீதா உட்கார்ந்து இருந்தார். 
சரத் பார்த்து விட்டு நவம்பர் இருபத்தியெட்டு எனச் சொல்ல.. அதற்குப் பிறகு வரவில்லை என ஸ்ரேயாவும் சொல்ல… கிட்டதட்ட ஒன்னரை மாதங்கள் ஆகி இருந்தது. 
கண்டிப்பாகக் குழந்தை தான் எனச் சங்கீதாவிற்குத் தோன்ற… அவருக்குப் படபடப்பாக இருந்தது. சரத்தை உண்டானது தெரிந்த போது கூட இப்படிப் பரபரத்ததில்லை. பேரன் பேத்தி என்பது பெரிய வரம தான் போலும்.. அதுவும் அவர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தது. ஆவலாக எதிர்பார்த்தாலும் சங்கீதா மற்ற மாமியார் போல மருமகளை மாதம் மாதம் கேட்டுக் கொண்டும் இருக்க மாட்டார். இருந்தால் அவர்களே சொல்வார்கள் எனத் தெரியும். ஆனா இங்கே தான் இத்தனை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டியதாக இருக்கும் என அவரும் நினைக்கவில்லை. 
சரத் ஸ்ரேயாவுக்குமே படபடப்பு தான். இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதும் பிறகு பார்வையைத் திருப்புவதுமாக இருந்தனர். 
“டாக்டர்கிட்ட போவோமா…” சரத் கேட்க, 
“அது நல்லநாள் பார்த்து போவோம். முதல்ல வீட்லயே செக் பண்ணி பார்ப்போம். நீ போய் வாங்கிட்டு வா… உங்க அப்பாகிட்ட உறுதி ஆனதும் சொல்லுவோம். ரொம்ப ஆர்வமா இருந்தார். அதனால டென்ஷன் ஆவார்.” சங்கீதா சொல்ல, சரத் வெளியே செல்ல, 
இன்னும் தெளியாமல் இருந்த ஷ்ரேயாவை பார்த்த சங்கீதா, “நீ விவரமா இருப்பேன்னு நான் உன்னை எதுவும் கேட்கறதில்லை ஷ்ரேயா… ஒரு மாசமா ஊறுகாய் சாப்பிட்டும் உனக்குப் புரியலியா… நல்ல பொண்ணு போ…” என்றார். 
ஸ்ரேயாவுக்குத் தன் அறியாமையை நினைத்து முட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. 
“நீ படுத்துக்கோ… நான் போய் எலுமிச்சை ஜூஸ் போட்டுக் கொண்டு வரேன். இனி நெஞ்சை கரிச்சா… ஊர்காய் எல்லாம் சாப்பிடக் கூடாது. அது நல்லதில்லை.” என்றவர், மருமகளுக்கு ஜூஸ் போட சென்றார். 
அவர் பின்னே சமையல் அறைக்கு வந்த சரவணன், “ஸ்ரேயாவுக்கு என்ன ஆச்சு?” எனப் பரபரக்க… 
குழந்தை என்று சொல்லிவிட்டு இல்லையென்று ஆனால் தங்க மாட்டார் என நினைத்த சங்கீதா, “ரெண்டு நாளா ஒரே வேலை இல்லை… அதுதான் அலுப்பா இருக்கா… கொஞ்சம் படுத்து எந்திரிச்சா சரி ஆகிடும். அவளுக்குத் தான் ஜூஸ் போட போறேன்.” என்றதுதான் தாமதம், 
“நான் போய் ஜூஸ் போட சாத்துக்குடி வாங்கிட்டு வரேன், அது குடிச்சா தெம்பா இருக்கும்.” என்ற சரவணன், மனைவி சொல்ல வந்ததைக் கேட்க கூட இல்லாமல் சிட்டாகப் பறந்து இருந்தார். 
விஷயம் தெரியரதுகுள்ள இப்படி, தெரிஞ்சா இந்த மனுஷனை கையில் பிடிக்க முடியாது எனச் சங்கீதா நினைத்தபடி ஜூஸ் போட்டுக் கொண்டு போய் மருமகளிடம் கொடுக்க, சரத்தும் வந்துவிட்டான். 
“நீங்க பார்த்திட்டு வாங்க. நான் வெளியே இருக்கேன்.” எனச் சங்கீதா செல்ல, 
“இல்ல… நீங்க ரெண்டு பேரும் பாருங்க.” எனச் சரத் வெளியே சென்றுவிட்டான். 
சங்கீதா எப்படிப் பார்க்க வேண்டும் எனச் சொல்ல, ஷ்ரேயா கற்பத்தை உறுதி செய்யும் கருவியோடு குளியலறைக்குள் சென்றவள், இரண்டாவது கோடு விழுவதற்குள் தவித்துப் போனாள். இரண்டு கோடுகளும் விழுந்ததும் தான் நிம்மதி. 
குழந்தையை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும், சற்று நேரத்திற்கு முன்பு தான் குழந்தையைப் பற்றித் தெரிந்திருந்தாலும், மனதிற்குள் ஒரு பெரிய ஆவல்… எதோ சொல்லத் தெரியாத உணர்ச்சி. 
அவள் வெளியே வந்ததும், அவள் முகத்தில் இருந்தே விஷயத்தைப் படித்த சங்கீதா, மருமகளைப் பார்த்து புன்னகைத்தவர், “இப்போ சந்தோஷமா…” எனக் கேட்க, 
“எனக்கு தெரியாவே இல்லை அத்தை. நீங்க கேட்கலைனா எனக்கு இப்பவும் தெரிஞ்சிருக்காது. தேங்க்ஸ் அத்தை.” எனச் சொல்ல… அதற்குள் சரத்தும் ஆவல் தாங்காமல் உள்ளே வந்துவிட்டான். 
“உன்னையும் என் மருனளையும் போல மக்கா இல்லாம… எங்க பேரனோ பேத்தியோ புத்திசாலியா இருக்கட்டும்.” என வாழ்த்தி விட்டு சங்கீதா வெளியே செல்ல… சரத்தும் ஸ்ரேயாவும் ஒருவரையொருவர் பார்த்து அசடு வழிந்தனர். 
“நிஜமா நான் எதிர்பார்க்கவே இல்லை ஷ்ரேயா…. ஆனா இப்போ எப்போ குழந்தையைப் பார்ப்போம்னு ஆர்வமா இருக்கு.” சரத் சொல்ல… 
“ஆமாம் எனக்கும். இதுக்கு முன்னாடி வரை ஒன்னும் தோணலை… ஆனா இப்ப குழந்தைன்னு தெரிஞ்சதும் பரபரன்னு இருக்கு.” 
“வா அப்பாகிட்ட சொல்லுவோம்.” சரத் அழைக்க, ஷ்ரேயா அவனுடன் வெளியே சென்றாள். அப்போது தான் சரவணன் வெளியே இருந்து வந்தார். 
ஷ்ரேயாவை பார்த்தவர்,” இப்போ எப்படி இருக்கு மா… சாத்துக்குடி வாங்கிட்டு வந்தேன். ஜூஸ் குடி சரியாகிடும்.” எனச் சொல்ல, அதற்குள் சமையல் அறையில் இருந்து சக்கரை பொங்கலோடு வந்த சங்கீதா அதைச் சரவணனுக்குக் கொடுக்க… 
“காலையில தானே சாப்பிட்டேன் இப்ப எதுக்கு?” என்றார். 
“ஷு… ஒழுங்கா வாயை திறங்க. ஏற்கனவே உங்க கை ஓட்ட கை… இனி பேர பிள்ளைக்கு வேற வாங்கிக் குவிக்க மாட்டீங்க.” என மனைவி சொன்னது புரிந்தும் புரியாமலும் சரவணன் பார்க்க, சரத் ஷ்ரேயா முகத்தில் இருந்த மகிழ்ச்சியே அவருக்கு விஷயத்தைப் புரிய வைக்க… மனிதர் பெரிதாக மகிழ்ந்து போனார். 
“நீ ரெஸ்ட் எடுமா ஷ்ரேயா… பாவம் ரெண்டு நாளா வேற ஒரே வேலை உனக்கு. இனி இப்படியெல்லாம் வேலை செய்யாதே.” என்றார்.” 
“நீ உங்க அம்மாவுக்குப் போன் பண்ணிக் கொடு. நான் பேசுறேன்.” எனச் சங்கீதா சொல்ல, ஸ்ரேயாவுக்கும் வெட்கமா இருக்க… மாமியாரே சொல்லட்டும் என நினைத்தாள். 
மகள் அழைத்ததும், “என்ன டி எப்ப வர?” எனத் தீபா கேட்க, 
“ம்ம் வரேன் மா… இருங்க அத்தை பேசணுமாம்.” எனப் போன்னை சங்கீதாவிடம் கொடுத்து விட்டாள். 
“எதுக்கு இப்ப அவங்ககிட்ட கொடுக்கிறாள்.” எனத் தீபாவிற்குக் குழப்பம். 
“என்ன ஷ்ரேயா அம்மா எப்படி இருக்கீங்க?” எனச் சங்கீதா ஆரம்பிக்க, 
“நல்லா இருக்கேன் அண்ணி. நீங்க எப்படி இருக்கீங்க.” என்றார் தீபாவும். 
“நல்லாயிருக்கேன்.” என்றவர், நல்ல விசயத்தை அவரிடம் சொல்லிவிட்டு ஷ்ரேயாவிடம் போன்னை கொடுத்துவிட்டு சென்றார். 
எல்லா விவரமும் மகளிடம் கேட்டு தீபா தெரிந்து கொண்டவர், “சரி எப்போ நம்ம வீட்டுக்கு வர.” என்றார். 
“இப்ப எப்படி மா உடனே கிளம்ப முடியும். நான் அப்புறம் அத்தைகிட்ட கேட்டுட்டு சொல்றேன்.” என ஷ்ரேயா வைத்து விட்டாள். 
வெளியே அப்பா அம்மா மகன் மூவரும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டு இருந்தனர். ஷ்ரேயாவை பார்த்ததும் போட்டுக்கொண்டிருந்த ஜூசை சரவணன் மருமகளுக்குக் கொடுத்தார். 
“உன் பிள்ளை புளிப்பாதான் கேட்குது. நான் புளியோதரை பண்றேன். கூட மாங்காய் துவையல்  வைக்கிறேன். நீ போய்ப் படு.” என்றார். 
ஷ்ரேயா சரத்தை தயக்கமாகப் பார்த்துக் கொண்டே அறைக்குள் செல்ல, சரத் சற்று நேரம் விட்டு அறைக்குச் சென்றவன், என்ன என்று கேட்க, “எங்க வீட்டுக்கு எப்ப போறது?” என்றாள். 
மற்ற நேரம் எப்படியோ, இப்போது மனைவி கர்ப்பம் என தெரிந்ததும், சரத்திற்கு அவளது விருப்பத்தை மறுக்கும் எண்ணம் இல்லை. எல்லா ஆண்களுமே இந்த நேரத்தில் மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதானே நினைப்பார்கள். 
“இரு நான் அம்மாவை கேட்கிறேன்.” எனச் சென்றவன், சங்கீதாவிடம் கேட்க, 
“மாசமா இருக்கிற பெண்ணை அப்படிச் சட்டுன்னு எங்கேயும் அனுப்ப முடியாது. அவங்க வீட்ல சொல்லிட்டோம் இல்ல… அவங்க அப்பா அம்மா வந்து அழைப்பாங்க. நல்லா நாள் பார்த்து அனுப்புவோம்.” எனச் சங்கீதா முடிந்து கொண்டார். அவர் சொன்னதை ஸ்ரேயாவும் கேட்டுக் கொண்டு இருந்தாள். 
சரி பெரியவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என நினைத்தவள், சென்று படுத்துக் கொண்டாள். 
தீபா வெளியே சென்றுவிட்டு வந்த கணவரிடம் விசயத்தைச் சொல்லிவிட்டு, மகளை இங்கே அனுப்பவில்லை எனப் புலம்ப… 
“உனக்கு அறிவு இருக்கா.. மாசமா இருக்கிற பெண்ணை அவங்க எப்படி அனுப்புவாங்க. நாம தான் போய்ப் பார்த்திட்டு வரணும். கிளம்பு நாம போயிட்டு வருவோம்.” என்றார். 
கணவர் சொன்னதற்கு மறுப்பு சொல்லாமல் தீபாவும் கிளம்ப ஆரம்பித்தார். 

Advertisement