Advertisement

தள்ளி போகாதே நிலவே 


அத்தியாயம் 10 


ஷ்ரேயா கட்டிலில் படுத்திருக்க, சரத் அதே கட்டிலில் மறுபக்கம் உட்கார்ந்திருந்தான். 

“உங்க அம்மா வீட்டுக்கு போகலை.” 

கணவன் கேட்டது காதில் விழுந்தும், விழாதது போல அவள் படுத்திருக்க, சரத்தும் ஒரு தோள் குலுக்களோடு, தனது செல்லை பார்க்க ஆரம்பித்தான்.
தெரியாமல் வாயை விட்டுவிட்டு ஷ்ரேயா மாமனார் மாமியாரை பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு, அறைக்குள்ளேயே இருந்தாள். 

இருவருக்கும் சண்டை என்றதும் சங்கீதாவுக்குக் கை கால் வெடவெடுக்கவே ஆரம்பித்து விட்டது. இருவரும் பேசியதை தெளிவாகவே கேட்டிருந்தார். கதவை தட்டி சரத்தை வெளியே அழைப்போமா என அவர் நினைக்கும் போதே, இருவரும் சண்டையை நிறுத்தி இருந்தனர். 

சிறிது நேரம் சென்று அறையின் கதவை தட்டியவர், “சரத், நானும் அப்பாவும் ரிசப்ஷன் போயிட்டு வரோம். நீயும் ஷ்ரேயாவின் டயத்துக்குச் சாப்பிடுங்க. நாங்க சீக்கிரம் வந்திடுறோம்.” என்றவர், ஷ்ரேயா ஏதாவது நினைத்துகொள் போகிறாள் என “ஷ்ரேயா, நாங்க போயிட்டு வறோம் மா.” என மருமகளிடம் சொல்லி விட்டு சென்றார். 

அதுவரை கோபித்துக் கொண்டிருப்பார்களோ எனக் கலங்கி இருந்த ஷ்ரேயா, “சரிங்க அத்தை.” என, பார்த்தியா எங்க அப்பா அம்மாவை என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு, சரத்தும் பெற்றோரை வழியனுப்ப வெளியே சென்றான். 

“டேய், அவளோட சண்டைப் போட்டியா?” சங்கீதா கேட்க, 

“அதெல்லாம் அவங்களுக்குள்ள, நாம அதுல தலையிடவேண்டாம்.” எனச் சரவணன் சொல்ல, 

“டேய் திரும்பச் சண்டை போடாத டா….” எனச் சங்கீதா மகனிடம் சொல்ல, 

“நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க.” என்றான் சரத் எரிச்சலாக. 

சங்கீதா செல்லாமல் நின்று மகனையே முறைத்துப் பார்க்க, “சரி சண்டை போடலை, போயிட்டு வாங்க.” எனச் சரத் சொன்ன பிறகே சங்கீதா கிளம்பினார். 

சரத் தன்னால் ஒருவேளை தான் உறவினரின் வீட்டுத் திருமணத்திற்கு வர முடியும் எனச் சொல்ல, “சரி, நீங்க ரெண்டு பேரும் காலையில கல்யாணத்துக்கு வாங்க.” என்றுவிட்டு, சரவணனும் சங்கீதாவும் மட்டும் வரவேற்புக்கு சென்றனர். 

பெற்றோர் சென்றதும் உள்ளே வந்த சரத் அறைக்குள் செல்லாமல், ஹாலிலேயே டிவி போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டான். ஷ்ரேயாவும் எழுந்து வெளியே வரவில்லை. 

சரத்திற்குப் பசித்தது இருந்தாலும், அவளிடம் உணவு எடுத்து வை எனச் சொல்லவும் இல்லை. அவளை விட்டு தான் மட்டும் எப்படிச் சாப்பிடுவது என நினைத்து உண்ணாமலும் இருந்தான். 

இவர்கள் இருவரும் மீண்டும் சண்டையிட்டு கொள்வார்களோ என்ற பதட்டத்தில், சங்கீதா வரவேற்பில் தலையைக் காட்டிவிட்டு, அங்கே உணவு உண்ணும் இடத்தில் அதிகக் கூட்டம் இருந்ததால்…. நாளை தான் வருவோமே என யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், கணவரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார். 

அவரைப் பார்த்ததும் சரத், “மா பசிக்குது.” என, 

“ஷ்ரேயா, நீயும் சாப்பிட வா.” எனச் சங்கீதா குரல் கொடுக்க, ஷ்ரேயா உறங்குவது போலக் கட்டிலில் படுத்திருந்தாள். 

அவள் உறங்கவில்லை எனச் சரத்திற்குத் தெரியும். சாதாரணமாகச் செல்வது போல அறைக்குள் சென்றவன், “ஹே,  பிரச்சனையை நீ வீணா பெரிசாக்கிற சொல்லிட்டேன், ஒழுங்கா வந்து சாப்பிட்டு போ. எங்க அம்மா உன்னைக் கெஞ்சனுமா?” என்றதும், விருட்டென்று எழுந்த ஷ்ரேயா வெளியே வர, சங்கீதா தோசை ஊற்றி எடுத்து வந்தார். ஷ்ரேயா பேசாமல் உட்கார்ந்து உண்ண, அவர்கள் இருவருக்கும் வைத்து விட்டு, அடுத்து கணவரை சங்கீதா உண்ண அழைக்க, “நீங்க அங்க சாப்பிடலையா?” எனச் சரத் வாய்விட்டு கேட்க, அந்தக் கேள்வியே ஷ்ரேயாவின் பார்வையிலும் தொங்கி நின்றது. 

“இல்லை, அங்க சாப்பிடுற இடத்தில ஒரே கூட்டம். அது தான் வந்திட்டோம்.” எனச் சங்கீதா சமாளிக்க, ஆனால் உண்மையான காரணம் இளையவர்கள் இருவருக்கும் புரிந்தே இருந்தது. 

சரத் முகம் மேலும் இறுக, அமைதியாக உண்டு எழுந்தான். 

“நீங்க சாப்பிடுங்க அத்தை. நான் தோசை ஊத்துறேன்.” என மருமகள் சொன்னதும், சங்கீதாவும் உணவு உண்ண அமர்ந்தார்.

உண்டு முடித்துச் சங்கீதா உடை மாற்ற அறைக்குள் செல்ல, ஷ்ரேயா அடுக்களை ஒழுங்கு செய்தாள். பெரியவர்கள் இவர்கள் சண்டை தெரிந்தது போலக் காட்டிக்கொள்ளாததால், அவளும் இயல்பாக இருந்தாள். 

வேலை முடித்து ஷ்ரேயா அவர்கள் அறைக்குச் செல்ல, “காலையில ஏழு மணிக்கெல்லாம் அங்க இருக்கணும். அதுக்கு ஏற்ற மாதிரி எழுந்து ரெடி ஆகிடுங்க.” என்ற சங்கீதா, “அப்புறம் காலையில கல்யாணம் முடிஞ்சதும், நீங்க ரெண்டு பேரும் ஷ்ரேயா வீட்டுக்கு போயிட்டு வந்துடுங்க. நானும் அப்பாவும் மதியம் சாப்பிட்டுதான் கல்யாண வீட்டில் இருந்து கிளம்புவோம்.” என அவர் சரத்தை பார்த்து சொல்ல, மீண்டும் வாக்குவாதம் வேண்டாம் என நினைத்த சரத், “சரி மா…” எனச் சொல்ல, “நீயும் உங்க அம்மாகிட்ட நாளைக்கு மதியம் வரோம்னு சொல்லிடு. அவங்களும் தயாரா இருப்பாங்க.” என மதிய உணவை மனதில் வைத்தே சங்கீதா சொன்னார்.

ஷ்ரேயா சரி சரியெனத் தலையாட்டியவள், அவள் அம்மாவிடம் வருவதாகச் சொல்ல மறந்து விட்டாள்.  

சரத் வெகு நேரம் வரை டிவி பார்த்து விட்டே படுக்கச் சென்றான். விடியற்காலையில் குளியல் அறையின் கதவு திறக்கும் சத்தத்தில் விழித்தவன், ஷ்ரேயா வெளியே வந்த கோலத்தைப் பார்த்தும், அவன் விழிகளில் இருந்த மிச்ச உறக்கம் நொடியில் மறைந்து போக… விழி தட்டாமல் மனைவியைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
பின்னே தலைக்குக் குளித்துத் தலையில் துண்டை சுற்றியிருந்தவள், உள் பாவாடையும் பட்டு ரவிக்கை மட்டுமே அணிந்து வந்து நின்றால்… அவனின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா. 

ஷ்ரேயாவுக்கு அவன் விழித்திருப்பது தெரியவில்லை. இன்னும் சரியாக  விடியவில்லை. அதோடு கணவன் உறங்குகிறான் என விளக்கும் போடவில்லை. 

நேராக டிரெஸ்ஸிங் டேபிள் முன்பு சென்று நின்றவள், அங்கே இருந்த விளக்கை போட்டு விட்டு, ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள். அது இன்னும் அவளின் அழகை ரசிக்க வசதியாக இருக்க… சரத் மனைவியின் வடிவான அழகை ரசித்திருந்தான். 
தலையை ஈரம் போக துவட்டியவள், பிறகு ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள். முதலில் கிரீம் எடுத்து அவள் முகம் மற்றும் கழுத்தில் போடும் போதே சத்தமில்லாமல் சரத் எழுந்து குளியல் அறைக்குச் சென்றான். அவன் சென்றதையும் கவனிக்காமல், ஷ்ரேயா அடுத்து பவுடரை எடுத்து ஒற்றியவள், விழிகளுக்கு மை தீட்ட செல்லும் போது, பின்னால் வந்து நின்ற கணவனைக் கவனித்தாலும், அவள் அலட்டிக்கொள்ளாமல் விழிகளில் மை தீட்ட, “என்னடி டிரஸ் இது?” எனச் சரத் கேட்க, 

“புடவை கட்டிட்டு மேக்கப் போட்டா, புடவையில பட்டுடுச்சுன்னா அதுக்குதான்.” 

அவள் சொன்ன பதிலில் மலர்ந்த புன்னகையுடன், “செம்மையா இருக்க டி…” என்றபடி, அவளை அப்படியே பின்னால் இருந்து அனைத்துக்கொள்ள,
கையில் இருந்த காஜலை கீழே வைத்தவள், “நான் டிரஸ் பண்ணனும் விடுங்க.” என்றால் சிணுங்கலாக. 

“ம்ம்… நீ என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணிட்ட… எனக்கு வேற ஏதேதோ பண்ணனும் போல இருக்கே…” சரத் கிறக்கமாகச் சொன்னவன், சொன்னதோடு நிற்காமல்… கை மற்றும் இதழால் அவளின் அங்கம் தீண்ட… ஷ்ரேயா கிறங்கினாலும், கணவனின் கைகளில் இருந்து நழுவியவள், “சரத் ப்ளீஸ், இப்ப வேண்டாம். நாம கல்யாணத்துக்குப் போகனும், எனக்கு இப்ப திரும்பக் குளிக்க எல்லாம் டைம் இல்லை.” எனச் சொன்னதும், ஆசைக்கும் சூழ்நிலைக்கும் இடையில் சிறிது நேரம் அல்லாடியவன், “சரி, ஆனா நாளைக்கு நைட் நோ சொல்லக் கூடாது சரியா” என, அதற்கு ஷ்ரேயாவும் ஆமோதிக்க, இதே போல டிரஸ்ல எனக் கண் சிமிட்டிவிட்டு அவன் குளிக்க செல்ல, ஷ்ரேயாவின் சிவந்த முகம் இன்னும் சிவந்து போனது. 

சந்தோஷ மனநிலையிலேயே இருவரும் திருமணத்திற்குச் செல்ல கிளம்பினர். இருவருக்கும் இருந்த மனஸ்தாபம் கூட அப்போது நினைவில் இல்லை. 

அவர்கள் இருவரும் கிளம்பி வந்து நின்ற தோரணையும், முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் பார்த்து, சங்கீதாவும் நிம்மதி கொண்டார். நான்கு பேருமாகத் திருமணத்திற்குச் சென்றனர். 

பதினோரு மணி போலச் சரத்தும் ஷ்ரேயாவும் மண்டபத்தில் இருந்து கிளம்பி ஷ்ரேயா வீட்டிற்குச் சென்றனர். அப்போதுதான் இன்னும் தாங்கள் வருவதை வீட்டில் சொல்லவில்லை என ஷ்ரேயா நினைத்தாலும், நம் வீடு தானே என அவள் அலட்டிக்கொள்ளவும் இல்லை. 

இவர்கள் சென்றபோது ஷ்ரேயாவின் பெற்றோர் வீட்டில் இல்லை. அவர்களும் ஒரு திருமணத்திற்குச் சென்று இருந்தனர். பாட்டி மட்டுமே வீட்டில் இருந்தார். இருவரும் அவருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, ஷ்ரேயாவின் பெற்றோர் உள்ளே நுழைந்தனர். 

“வாங்க மாப்பிள்ளை, எப்ப வந்தீங்க?” என ஷ்ரேயாவின் அப்பா சரத்தை நலம் விசாரிக்க, 

“என்ன டி நேத்தே வருவேன்னு பார்த்தேன். வரவும் இல்லை, போன்னும் பண்ணலை.” தீபா சொல்ல, 

“இன்னைக்கு வரேன்னு சொல்ல மறந்திட்டேன் மா… நம்ம வீடு தானே… சொல்லிட்டு வரணுமா என்ன?” என்றால் ஷ்ரேயா. 

“அது தானே… நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க.” என்ற ஷ்ரேயாவின் தந்தை மனைவியைத் தனியே அழைத்துக்கொண்டு சென்றவர், தான் சென்று மதிய சமையலுக்கு மட்டன் வாங்கி வருவதாகச் சொல்ல, தீபா சரி என்றார்.
மட்டன் வாங்கி வந்து கொடுத்தவர், வெளியே சென்று விட்டு வருவதாகச் சொல்லி செல்ல, சரத் ஷ்ரேயாவின் அறைக்குள் சென்று டிவி பார்த்தான். 

ஷ்ரேயா அவன் இருந்த அறைக்குள் உடை மாற்ற வர, சிறிது நேரம் மனைவியைக் கொஞ்சியவன், “சரி நீ உன் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணு, அவங்க தனியா சமைப்பாங்க.” எனச் சொல்லி அனுப்பி வைத்தான்.
தீபா வெங்காயம் நறுக்கிக் கொண்டு இருக்க, ஷ்ரேயா சென்று அவரோடு நின்றாள். 

“எப்படி உன் வீட்டுக்காரர் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தார். உன் மாமியார் எப்படி விட்டாங்க.” எனக் கேட்க, 

“அவங்க தான் போகச் சொன்னாங்க. அவங்க கல்யாண வீட்ல இருக்காங்க. அங்கேயே மதியம் சாப்பிட்டு வந்திடுவாங்க.” என ஷ்ரேயா எதார்த்தமாகச் சொல்ல, 

தீபாவும் அவர் கணவரும் திருமண வீட்டிலேயே மதிய உணவை உண்டிருந்தனர். மாமியார் மதியத்திற்குத் தோசை ஊற்றிக்கொள்கிறேன் என்றிருந்தார். மகனும் வெளியே சென்றிருந்தான். அதனால் மதியம் சமையல் வேலை இல்லை என்று நினைத்தால்…. திடிரென்று மகளும் மாப்பிள்ளையும் வந்திருந்தனர். 

ஏற்கனவே திடீர் சமையல் செய்யும் கடுப்பில் இருந்தவர், மகள் சொன்னதைக் கேட்டதும், “அவங்களுக்குக் கல்யாண வீட்ல சாப்பாடுன்னு உங்களை இங்கே அனுப்பிட்டாங்களா?” எனத் தீபா நக்கல் செய்ய, ஷ்ரேயாவுக்கே கோபம் வந்துவிட்டது. 

“நீங்க என்ன மா அவர் வரலைனா, அதுக்கும் எதாவது சொல்றீங்க, வந்தாலும் எதாவது சொல்றீங்க. நான் நேத்தே இங்க வர கிளம்பினேன். ஆனா வர முடியலை. அதுதான் இன்னைக்குப் போகச் சொன்னாங்க. நான்தான் போன் பண்ண மறந்திட்டேன். நீங்க கல்யாண வீட்டுக்குப் போனது தெரிஞ்சிருந்தா, நாங்களும் அங்கேயே சாப்பிட்டு வந்திருப்போம்.” என்றவள், “நீங்க தள்ளுங்க நானே சமைக்கிறேன்.” என்றாள். 

அவள் சென்றதும் சரத் எழுந்து உடைமாற்றி முகம் கழுவி வந்தவன், தண்ணீர் குடிக்க எண்ணி சமையல் அறைக்கு வந்தவன், அனைத்தையும் கேட்டு இருந்தான். அவனுக்கு மிகுந்த கோபம் தான். ஆனால் அந்த நேரம் ஷ்ரேயாவின் அப்பா வந்துவிட, எதையும் காட்டிக்கொள்ளாமல், அவருக்காகப் பொருத்துப் போனான். 

மதிய உணவு உண்ணும் போதும், காலையில் திருமண வீட்டில் உண்டதே இன்னும் இறங்கவில்லை என்று கூறி, தயிர் போட்டு கொஞ்சமாகவே உண்டான். 

சமையல் அறைக்கு வந்த தீபா, “உன் வீட்டுகாரருக்கு அவங்க அம்மா சமையல் தான் பிடிக்கும் போல… தெரிஞ்சிருந்தா இவ்வளவு சமைச்சே இருக்க வேண்டாம்.” என்று சொல்ல… இந்த அம்மாவுக்கு வேற வேலை இல்லை என நினைத்தாலும், சரத்தின் முகம் சரியேயில்லை என அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்கிறான் என நன்றாகவே தெரிந்தது. 

உண்டுவிட்டு சிறிது நேரம் ஷ்ரேயாவின் அப்பாவோடும் பாட்டியோடும் பேசிக்கொண்டு இருந்தவன், “சரிங்க மாமா, நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க கிளம்புறோம்.” எனச் சொல்ல, அதற்குள்ளா என்பது போல ஷ்ரேயா பார்க்க,
“நீ வேணா இருந்திட்டு வா…” என்றான். 

“இல்லையில்லை.. நானும் உங்களோடவே வரேன்.” என ஷ்ரேயாவும் கிளம்பி விட்டாள். 

இருவரும் காரில் வரும் போது, சரத் வழியிலேயே சொல்லிவிட்டான். 

“எனக்குப் புரியவே இல்லை. உங்க அம்மாவுக்கு ஏன் எங்க அம்மான்னா ஆக மாட்டேங்குதுன்னு. இதுக்கு மேல உன்னை நாங்க எப்படிப் பார்த்துக்க முடியும்னு எனக்குப் புரியவே இல்லை.” 

“ரெண்டு வீட்டுக்கும் நடுவுல இருக்கிற உறவு நிலைக்கனும்னு நினைச்சா… தயவு செய்து இனி என்னை உங்க வீட்டுக்குக் கூப்பிடாத சொல்லிட்டேன். எதாவது விசேஷமா நான் வரேன். மத்தபடி நீ எப்ப வேணாலும் போயிட்டு வா… என்னை விட்டுடு.” என்றான் சரத். 

அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் ஷ்ரேயாவுக்கும் புரிந்ததால் அமைதியாக வந்தாள். அவள் அம்மா தெரியாமல் பேசுவதாகத்தான் அவள் நினைத்துக் கொண்டு இருந்தாள். 

இன்றைய காலகட்டத்தில் பெண்ணைப் பெற்ற சிலருக்கு, மாப்பிள்ளை மட்டுமே வேண்டும். பையனின் பெற்றோர் என்பது எதோ அதிகபடியாகத் தோன்றி விடுகிறது. மகள் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருக்கவேண்டும் என நினைத்து ஏதேதோ செய்வது. தீபாவும் அதற்கு விதிவிலக்கல்ல… அதனால் தான் மகளை அவள் புகுந்த வீட்டினருக்கு எதிராக உருவேற்றிக் கொண்டிருந்தார். 
அவர் எதிர்பார்த்தது போல…. அவர்கள் குடும்பத்தில் சச்சரவு ஏற்படவே செய்தது. ஆனால் வேறு விதத்தில். அவர் நினைத்தது போல மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பிரச்சனை உண்டாகவில்லை. மாறாக அவர் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே தான் பிரச்சனை உருவானது.

Advertisement