Advertisement

                 அத்தியாயம் பதிமூன்று:  

இன்றைய நினைவுகள்

குளித்து விட்டு வந்தவனை, “எதுக்கு அப்படி பார்த்தீங்க………..”, என்று வினவினாள்.

 “எப்படி பார்த்தேன்?”,

 “நான் வள்ளிம்மா கிட்ட பேசும்போது பார்த்தீங்களே!”,

“ஏன் அவங்க என்கிட்ட பேசமாட்டாங்களா! உனக்கு போன் பண்றாங்க!”.

“ஷ்………… இதுதானா என்னவோன்னு பயந்துட்டேன்!”, என்றாள் இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போல்…………..

“என்னன்னு பயந்த?”,

“தெரியலை!” என்றாள் ஒற்றை வார்த்தையாக…………, வரா குரலில் என்ன இருந்தது என்று புரியவில்லை. 

அவளருகே வந்தான், பார்த்துக்கொண்டே இருந்தாள். இன்னும் அருகில் இடித்து கொண்டு நிற்பது போல் வர……… பின்னால் நகர்வாள் என்று எதிர் பார்க்க அப்படியே தான் நின்றாள்.

“நான் இவ்வளவு கிட்ட வர்றனே படபடப்பா இல்லை!”, என்றான்.

அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். “இப்படி மேல இடிச்சா எதுவும் ஆகலை!”, என்றபடியே அவளை இடித்துக்கொண்டு உராய்வது போல் நிற்க…..

மெதுவாக தயங்கி, “ஒண்ணும் ஆகலை! என்றாள். “பார்த்தாலே என்னவோ ஆகும்! தொட்டா மின்சாரம் பாயர மாதிரி இருக்கும்ன்னு நிறைய வர்ணனைகள் படிச்சிருக்கேன்! நிறைய நாளா எனக்கு டெஸ்ட் பண்ணனும்னு ஒரு ஆசை! அதான் டெஸ்ட் பண்ணினேன்!” என்று ஆசையாக சொல்ல நினைத்து அதையும் சீரியசாகவே சொல்லி வைத்தான்.

“என்ன காரணம் உனக்கு ஏதாவது தெரியுமா!”, என்றான் பாவம் போல் முகத்தை வைத்து.  இப்பொழுது இருவருக்கும் சிரிப்பு எட்டி பார்த்தது.

அவள் சிரித்த விதமே மனதில் என்னவோ நினைத்தாள் என்று காட்டி கொடுக்க, “என்ன நினைச்ச சொல்லேன்”, என்றான் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.

“சொல்ல மாட்டேன்”, என்பது போல் தலையசைத்தாள்.

“ப்ளீஸ்!”, என்றான். இரண்டு மூன்று முறை வற்புறுத்தி கேட்டவுடன்,  “நம்ம ரெண்டு பேருக்கும் ஹார்மோன் ரியாக்ட்சன் சரியில்லைன்னு நினைச்சேன்”, என்றாள் புன்னகையுடன்.

“உனக்கு சரியில்லைன்னு சொல்லு! எனக்கும் ஏன் சேர்த்துக்கற! எனக்கு என்னென்னவோ ஆச்சே! நீ என்னன்னு கேட்டா சொல்றேன்!”, என்றான்.

அமைதியாகி விட்டாள்.

“சகஜமா இரு வரா! என்கிட்ட நீ என்ன வேணும்னாலும் பேசலாம் பதட்டபடாதே! சிறிது இடைவெளி விட்டவன், “நான் இருக்கும் போது நீ எதுக்கும் பயப்பட கூடாது!. என்கிட்டயும் பயம் வேண்டாம்!”, என்றான்.

 ஒரு தலையசைப்பு மட்டுமே அவளிடம்.      

யோசித்துக்கொண்டே இறங்கினான். ஒரு ஒரு வார்த்தை தான் பேசுகிறாள் தன்னிடம் மட்டுமா எல்லோரிடமுமா…………

அவளோடு சாப்பிட இறங்க, அவளும் அவனும் படியிறங்கும் காட்சியை டைனிங் டேபிளில் அமர்ந்து ராம் பிரசாத் கண்களில் நிறைத்து கொண்டிருந்தான்.

பக்கத்தில் அமர்ந்திருந்த கல்பனா,

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க                          காத்திருந்த    காட்சி     இங்கு     காணக்கிடைக்க………..

என்று ஒரு ஸிச்சுவேசன் பாட்டை எடுத்து விட……..  

அதை ஒரு புன்னகையோடு கேட்டிருந்தான் ராம்,

அவர்கள் காதிலும் சன்னமாக கேட்டது. அதை கேட்ட ரமணன்…………

“அம்மா தாயே ஆரம்பிச்சிட்டியா உன் கத்தலை, பாடறேன்னு சொல்லி கத்தி கத்தியே எல்லோரையும் ஒரு வழி பண்றதை நீ இன்னும் நிறுத்தலையா……………”,

“ராமண்ணா! உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம், ஆனா எல்லாரும் அப்படின்னு சொல்ல முடியாது. எனக்கு கொஞ்சம் ஹார்ட் வீக்கு…………. உங்க பொண்டாட்டிய நான் இல்லாதப்போ மட்டும் கத்த……………..” கல்பனாவின் முறைப்பை பார்த்தவன், “இல்லையில்லை பாட சொல்லுங்க………….”, என்றான்.

இதை ரமணன் சிரிக்காமல் சொல்ல…………., ராம் சிரிக்க………. கல்பனாவின் முகத்தில் புன்னகை அரும்ப……………,

“அறிவிருக்கா உங்களுக்கு?”, என்றாள் கோபமாக ரமணனை பார்த்து வரமஹாலக்ஷ்மி, என்ன வென்று புரியாமல் அனைவரும் விழிக்க அதற்குள்,     

கிளம்புவதற்காக வராவின் அப்பா சிவசங்கரன் வர, இவர்கள் பேச்சு நின்று, அவரை வழியனுப்புவதில் மும்முரமாக,

அவர் போனவுடனே, கல்பனா வராவை பார்த்து, “நான் எதுவும் ஹர்ட் பண்ணிடேன்னா…………. ஏன் அப்படி கோபப்பட்ட”, என்றாள்.

“இல்லைண்ணி ஒண்ணுமில்லை!……………. நான் உங்க மூட ஸ்பாயில் பண்ணிட்டேனா ஐ அம் சாரி”, என்றாள்.

“இல்லையில்லை நீ எதுக்கு கோபப்பட்ட”,

அப்போது சட்டென்று கோபம் வந்தது. இப்போது நினைத்தாள் சற்று அசட்டுத்தனம் போல் தோன்ற………… ஆனாலும் சொல்லாவிட்டால் கல்பனா என்னவோ ஏதோவென்று நினைத்து கொள்வாள் என்பதற்காக சொன்னாள்.

“அது அவங்க லூசு மாதிரி ஹார்ட் வீக்ன்னு சொன்னாங்களா! எனக்கு ஏனோ அது அபசகுனமா பட்டது! அதனால தான் அவங்களை திட்டினேன். ஜோக்ன்னு தெரியும்! ஆனா டக்குன்னு வாயில வந்துடுச்சு!”, என்றாள் ஒரு தர்மசங்கடமான புன்னகையோடு.        

தான் பாடியது பிடிக்கவில்லையோ? அதனால் கோபப்பட்டாளோ என்று நினைத்திருந்த கல்பனா முகம் தெளிந்து,

“நான் சொன்னா தப்பா எடுத்துக்காத வரா, இப்போ இந்த நிமிஷம் வாழற வாழ்கை தான் நிஜம்! நாளைக்கு எப்படின்னு நமக்கு தெரியாது. அதனால கடந்தவைகளை நினைச்சு நிகழ்காலத்த சிரமமாக்கிக்க கூடாது. வாழ்கையை அனுபவிக்கணும்! அதுவும் சில விஷயங்கள் அந்த அந்த வயசுல அனுபவிக்கணும்!”.

 “மனசளவுல துணை ரொம்ப முக்கியம். அதே தான் உடலளவுளையும்! நீ புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன். நம்ம மனைவி, நம்ம கணவன், அப்படின்ற ஒரு எண்ணம் மனசுல பதிஞ்சிட்டா மனைவியோ கணவனோ  என்ன தப்பு செஞ்சாலும் அது அடுத்தவங்களுக்கு பெருசா தோணாது! கணவன் மனைவிக்குள்ள என்னைக்கும் ஈகோ வரவே கூடாது!”.

“நீ விட்டு குடுத்து நடந்துப்பியோ இல்லை, அவனை விட்டு கொடுக்க வைப்பியோ, எல்லாம் உன் கையில்!. இதையெல்லாம் நான் ரமணன்  கிட்ட பேச முடியாது. ஒரு சமயம் ரமணன் நல்லா பேசினாலும் ஒரு சமயம் உன் வேலையை பாருன்னு திட்டிடுவான். சந்தோஷமா இரு! அந்த சந்தோஷத்தை ரமணனுக்கும் கொடு. ஹி டிசெர்வ்ஸ் தி மோஸ்ட் அவுட் ஆப் யூ”, என்று சொல்லி அவள் நிறுத்த……..

“ஐ அண்டர்ஸ்டான்ட்”, என்றாள் ஒற்றை வார்த்தையாக………..

“இவ்வளவு பேசியிருக்கேன், ஒரு வார்த்தைல பதில் சொல்றா! சரியான கல்லுளிமங்கி! புருஷனும் பொண்டாட்டியும் இந்த விஷயத்துல மேட் பார் ஈச் அதர் தான்”, என்று மனதிற்குள் கல்பனா அவள் வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

ரமணனும் ராமும் வர சாப்பிட எல்லோருக்கும் கல்பனா எடுத்து வைக்க ஆரம்பித்தாள், வரா நிற்க………….. “நீயும் அவங்களோட உட்கார்ந்து சாப்பிடு!”, என்று அதட்டியவள், “நீங்களும் உட்காருங்கத்தை”, என்று ராஜேஸ்வரியையும் அமர சொன்னவள் எல்லோருக்கும் பரிமாறினாள், “நீங்களும் உட்காருங்க அண்ணி!”, என்ற வராவிடம், “இல்லை நான் அப்புறம் சாப்பிடறேன்!”, என்றாள்.

“ராமண்ணா உங்க பொண்டாட்டி ரொம்ப பொருப்பா மாறிட்டா போல!”, என்று அவன் காதோடு ரமணன் சொல்ல………. “யார் ட்ரைனிங்!”, என்று என்று பெருமையடிப்பது போல ராம் சொல்ல………….

அவர்கள் மெதுவாக பேசினாலும் மற்றவர்கள் காதில் விழ, “நிச்சயம் உங்க ட்ரைனிங்  இல்லை! சாப்பிடுங்க!”, என்றாள் கல்பனா.  

 சாப்பிட்டு முடித்தவுடன் ராமும் பிரசாத்தும், வெங்கட ரமணனும், பேசிக்கொண்டு அமர்ந்திருக்க, “குட்டியை தூக்கிட்டு வந்துடறேன்!”, என்று கல்பனா செல்ல…………

“இருக்கட்டும் அண்ணி, தூக்கத்துல எழுந்தா என்னை தேடுவா!” என்று வரமஹாலக்ஷ்மி இவ்வளவு நாட்கள் அவள் தன்னோடு தானே தூங்கினாள் என்று பதிலளிக்க………….

திரும்பி அவளை முறைத்த கல்பனா, ரமணனை காட்டி……… ”குட்டியை விட அவன் உன்னை தூக்கத்துல இவ்வளவு நாளா நிறைய தேடியிருப்பான். அப்படி இதுவரைக்கும் தேடியிருக்களைன்னா! இனிமே தேட வை!”, என்று அவளிடம் சொல்லிய படியே குழந்தையை தூக்கி கொண்டு சென்றாள்.

அவளையே பார்த்த வரா, வாய் வரை திருப்பி பேச வந்த வார்த்தைகளை மென்று விழுங்கினாள், “ஏன் அவன் தான் தேடியிருப்பானா! நான் தேடியிருக்க மாட்டேனா!”, என்று……………

“வள்ளிம்மா பேச சொன்னாங்க!”, என்று ரமணனுக்கு வரா ஞாபகப்படுத்த, அவன் போனை கையில் எடுக்கும் போதே அது அடிக்க ஆரம்பித்தது. 

“எப்போ?…………..”, “கிளம்பிட்டேன்”, என்றபடியே அவசரமாக ரமணன் எழ……….

எல்லாரும் அவனையே பார்க்க………….. “சிறையில கைதிங்களுக்கு இடையில அடிதடி நான் போகணும்”, என்றபடியே யூனிபார்ம் மாட்ட சென்றான்.

வரா பார்த்தபடியே நிற்க………….. “போ வரா! ஹெல்ப் பண்ணு போ!”, என்று அவளை விரட்டினாள் கல்பனா.

அவள் மேலே செல்வதற்கு ஆனா ஓரிரு நிமிடங்களுக்குக்குள்லேயே யூனிபார்ம் அணிந்திருந்தவன், “எப்போ வருவேன்னு தெரியாது! தூங்கு வெயிட் பண்ணாத!”, என்று கூறி அவசரமாக செல்ல………..

“இவ்வளவு நாட்களாக இவனில்லாமல் தானே தூங்கினோம், இந்த பக்கம் எட்டி கூட பார்க்கலை! நான் போன் எடுக்கலைனா, என்னை விட்டுடுவானா!!!!!!!!!!!. இன்னைக்கு வந்து போன் பண்ணினா, நான் எடுக்கலைன்னு ரூலஸ் பேசறான்”.

“சென்னை வந்து என்னை பார்க்க வரவேயில்லை. நான் இவனை பார்க்க கம்பத்துக்கு போனா, என்னவோ பேயை பார்த்த மாதிரி அவனோட அப்பா அம்மாவை பார்க்க வந்ததை கூட விட்டுட்டு உடனே அவசரமா ஓடிப்போயிடுவான். நானா இவனை என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு அழுதேன். இடியட்!” என்று மனதுக்குள் அவனை நிற்க வைத்து பொரியத் துவங்கினாள்.

 “நான் இவனை கூப்பிட்டா தான் வருவானா! வேணும்னா வரட்டும்!.  இன்னைக்கு வந்து பெரிய இவன் மாதிரி எனக்கு இன்ஸ்ட்ரக்சன் குடுக்கறான்!. விட்டா எல்லாரும் இவனுக்கு கோயில் கட்டி கும்பிடுவாங்க போல!” என்று எண்ணியபடியே உறங்க முயற்சித்தாள்.

இத்தனை வார்த்தைகள் அவள் மனதில் ஓடினாலும், ரமணன் முன் பேசும் துணிவு அவளுக்கு இதுவரை வந்ததேயில்லை. என்றும் போல் மனதில் அவனை திட்டி கொண்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து தூக்கத்தை வருவாயா? மாட்டாயா? என்று சண்டைக்கு அழைத்து கொண்டிருந்தாள்.    

             அத்தியாயம் பதினான்கு

அன்றைய நினைவுகள்

வராவின் அவன் மீதான பயத்தை சற்று குறைத்து,  தோழமை உணர்வை ஏற்படுத்தி கொண்டே ரமணன் ஊருக்கு சென்றான்.

அவன் அம்மா அங்கே “பெண் வீட்டார் பேச சொல்கிறார்கள், என்ன செய்யலாம்?”, என்று கேட்க, “ராமநாதன் யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்த கூடாது”, என்றார்.

“பார்த்தால் தானே அப்பா பிடிக்குதா இல்லயான்னு தெரியும். நான் ராமண்ணா கூடவே இருந்ததால, என்னை ஏன்னு கல்பனா கேள்வி கேட்கறா அப்பா?, நான் தெரியாதுன்னு சொன்னாலும், நம்ப மாட்டேங்கறா! அவளுக்கு தெரியும்பா நானும் ராமண்ணாவும் க்ளோஸ்ன்னு”, என்றவனை………..

“ஏன் பிடிக்கலைன்னு காரணம், பொண்ணுக்கு எல்லாம் சொல்வாங்களா?”, என்றவரிடம், “இல்லைப்பா, ஃபிரன்ட்ன்னு என்கிட்ட உரிமையா கேட்கறா, அவ்வளவு தான்”.

“நானும் அவளோட ஃபிரென்ட் தானேப்பா, எனக்கு தெரிஞ்சது அவளுக்கு தெரியணும். வேண்டான்னா விட்டுட்டு வேற பார்ப்பாங்க இல்லை கல்பனா வீட்ல!  இப்படி இதை பிடிச்சு தொங்கிட்டு இருக்க மாட்டாங்க தானே!”,

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை ரமணா! எந்த பிரச்சனையும் நாளைக்கு வந்துடக்கூடாது பொண்ணு விஷயம், ரொம்ப ஜாக்கிரதை! யார் மனசும் நம்மால சங்கடபடகூடாது”.

“என்னை நம்புங்கப்பா, நான் பார்த்துக்கறேன்!”, என்றவனை……….. “செய்” என்றது போல் ஒரு பார்வை மட்டுமே பார்த்தவர், அதை வாயால் சொல்லாமல் செல்ல…………….

“இந்த பெருச சமாளிக்கறதுக்குள்ள ஒரு வழியாயிட்டோமே! இன்னும் ரெண்டு பேர் வேற இருக்காங்கள்ள!”, என்று மனதிற்குள்ளேயே என்ன செய்வது என்று யோசித்தான்.

பிறகு, “ஏதாவது சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்று கல்பனாவை சென்னை வரவழைப்போம். அங்கே இருவருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள ஒரு சந்தர்பம் ஏற்படுத்திக்கொடுப்போம். பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுவோம்”, என்று யோசித்தவன் மனது ஒரு பக்கம்……,

“இது உனக்கு தேவையா! யாரோ என்னவோ செய்துகொள்கிறார்கள்! உனக்கு என்ன? அவன் வேண்டாம் என்று சொன்னால் அவன் இஷ்டம்! நீயேன் பார்பதற்க்கு சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறாய்!”, என்று அவனை திட்ட…………….,

இரண்டிற்கும் நடுவில் நடனமாடி, முடிவில் அவனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்றாலும் சந்திக்க வைப்பது என்று முடிவெடுத்தான்.

சென்னையில் இறங்கியவுடன், காலேஜ் செல்வதற்கு முன், இவனும் கல்பனாவும் காபி அருந்துவது போல் காபி ஷாப்பிற்க்கு செல்ல…………. அங்கே ஏதோ வேலையிறுப்பது போல் ராம் பிரசாத்தை வரவழைத்தான்.

ஒரு மனது உனக்கு இது தேவையா என்று இடித்துகொண்டிருக்க, விடுடா! டேய் விடுடா! என்று அவனுக்கு அவனே சமாதானம் சொல்லி கொண்டிருக்க…………

அப்பொழுது பார்த்து கல்பனா ஏதோ சொல்ல……………. “சும்மா தொனதொனங்காத காஃபியை சாப்பிடு!” என்று எறிந்து விழுந்தான் ரமணன்.

கல்பனா முழித்தாள், “என்னவாயிற்று இவனுக்கு, பேசாமல் எழுந்து சென்று விடலாமா!”, என்று யோசித்து கொண்டிருக்கும் போதே “யார்கிட்டடா இப்படி கத்திட்டு இருக்க!”, என்று கேட்ட படியே ராம் வர……….

திரும்பி பார்த்த கல்பனா, ‘ஒஹ் இந்த திருவாளர் வர்றதுக்கு தான் இந்த ரீயாக்ஷனா!”, என்று நினைத்தபடியே எழுந்து கிளம்ப போனாள்.

“எங்க போற?’, என்றான் ரமணன். “இவனை மீட் பண்ண தான் கூட்டிட்டு வந்தியா!” என்றாள்.

“அவனை இவனைன்ன பிச்சிடுவேன். எனக்காக தான் வந்திருக்காங்க! உன்னை விட பெரியவங்க! மரியாதையா பேசு!”, என்று அதட்டினான்.

“உன்னை பார்க்க வந்தா என்னை ஏன் இருக்க சொல்லற?”, என்றாள் கல்பனாவும் பதிலுக்கு சூடாக…………

“நீதானே என்னை ஏன் வேண்டாம்னு சொன்னாங்கன்னு……….. நீ என்னை பத்தி என்ன சொன்னன்னு……….. சண்டைக்கு வந்த! அதுதான் இந்த மீட்டிங்!”, என்று சரியாக திருப்பி கொடுக்க,

“ஆமா நீ என் ஃபிரென்ட் நினைச்சு என்ன ரீசன்ன்னு கேட்டேன், அது தப்பா”, என்றாள்.

அவள் குரல் அவளையும் மீறி கலங்கியது. “அதுக்காக என்கிட்ட சொல்லாம இப்படி செய்வியா!”, என்றாள்.

“எப்படி செஞ்சேன்?”, என்றான் ஸ்ருதி இறங்கியவனாய் ரமணன்,

இவர்கள் இருவரும் வார்தையாடிகொண்டிருந்த போது கல்பனாவை தான் ராம் பிரசாத் கவனித்தான். நேரில் பார்க்கும் போது அவள் கலர் அவனுக்கு ஒரு பெரிய குறையாக தெரியவில்லை.

பார்க்க லட்சணமாக அட்ராக்டிவாக இருந்தாள். முன்பே நிறைய முறை பார்த்திருக்கிறான், ஆனால்  அவனுக்கு போட்டோவில் தெரியவில்லை.

அவள் கலங்கியபோது ரமணனை திட்ட வேண்டும் போல் எழுந்த உந்துதலை கஷ்டப்பட்டு அடக்கினான். ரமணன்….. அவன் அப்படி ஏதாவது செய்தால் தொலைத்து விடுவான் என்று தெரியும்.

ரமணன் அருகில் அமர்ந்தவன், “எல்லாரும் உங்களையே பார்க்கிறார்கள்! என்ன செய்யறீங்க ரெண்டு பேரும்?”, என்றான் பொதுவாக,

சட்டென்று அமைதியான கல்பனா இருவரையும் பார்க்காமல் முகத்தை வேறு புறம் திருப்பினாள்.

ராம் பிரசாத்தை பார்த்த ரமணன், “ஏற்கனவே அப்பாக்கு நிறைய சமாதானம் சொல்லி உங்க ரெண்டு பேரையும் பார்க்க ஏற்பாடு செஞ்சிருக்கேன்”…………

“பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க! பிடிக்கலைன்னா ஏன்னு சொல்லிடுங்க! ஐந்து நிமிஷம் டைம் தர்றேன்!”, என்றவனை,

“ரொம்ப தாராள மனசு”, என்று மனதிற்குள் ராம் நினைக்க…………..

“இதை நீ தாத்தாகிட்ட வேற சொன்னியா! தொலைஞ்சேன்!”,  என்றாள் பதட்டத்துடன் கல்பனா

“தாத்தாவா யார் அது?”, என்று ராம் கேட்க…………. “எங்கப்பா அவளுக்கு தாத்தா முறை ஆகணும்”, என்றான் ரமணன்.

பிறகு அவன் எழுந்து சென்றுவிட…….. ராம் கல்பனாவை பார்க்க………….. அவள் மறுபடியும் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டாள்.

பீச் கலர் சுடிதார் அணிந்திருந்தாள். அது அவளுடைய நிறத்திற்கு பொருந்தியது. அவளை அழகாக காட்டியது. கொஞ்சம் நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கும் போல என்று நினைத்தான் ராம்.

இப்படி யோசித்து கொண்டு அவளையே பார்க்க, சட்டென்று அவள் எழுந்திருக்க போக கை பிடித்து நிறுத்தினான். தீடிரென்று கை பிடித்த வுடன், “ஐயோ……. என்ன பண்றீங்க விடுங்க!”, என்றாள் பதட்டமாக……….

“அப்போ உட்கார்!”, என்றான் அமைதியாக. அமர்ந்தவளை, “சாரி பார்க்காம பிடிக்கலைன்னு சொல்லிட்டேன்! இப்போ பார்த்தவுடனே பிடிச்சிருக்கு!”, என்றான்.

“இதை ஏன் என்கிட்ட சொல்றிங்க! யார் கிட்ட பிடிக்கலைன்னு சொன்னிங்களோ, அவங்க கிட்ட சொல்லுங்க!”, என்றாள்.

அவள் எவ்வளவு கட்டுபடுத்தியும் முகத்தின் மலர்ச்சியை மறைக்க முடியவில்லை.

பிறகு கல்பனாவும் பேசவில்லை, ராமும் பேசவில்லை. ஐந்து நிமிடத்திற்கு முன்னமே ரமணன் வந்துவிட, “டேய் தாராள பிரபு! இன்னும் ஐந்து நிமிஷம் ஆகலைடா!”, என்றான்.

“எனக்கு இதுக்கு மேல பொறுமையில்லை. ஏன் பிடிக்கலைன்னு சொல்லிட்டியா!”, என்றான் ரமணன்.

“என்ன பிடிக்கலையா? நான் எப்போடா அப்படி சொன்னேன்!”, என்று ராம் கேட்க…………

அவனை முறைத்த ரமணன், “நான் சொல்லலை! நீ சொன்னன்னு, இவ சொன்னா!”, என்று கல்பனாவை காட்ட…………….,

“அவ சின்ன பொண்ணு! தெரியாம சொல்லியிருப்பா!”,

“அவ சின்ன பொண்ணா? பொண்ணு கருப்புன்னு யாரோ என்கிட்ட சொன்னாங்க………”, என்று ரமணன் போட்டு கொடுக்க, கல்பனாவின் பார்வை ராமை நோக்கி திரும்பியது…………..

“டேய்! கலர் கம்மின்னு சொல்லுடா!”, என்றான் ராம் பரிதாபமாக………….

“அடாவடின்னு  யாரோ சொன்னாங்க!”,

“எவ்வளவு அமைதியா உட்கார்ந்திருக்கா பாருடா!”, என்றான்.

உண்மையாகவே கல்பனா அவள் இயல்பையும் மீறி அமைதியாக இருந்தாள். ராம் அவளை பிடித்திருக்கிறது என்று சொன்னதை அனுபவித்து கொண்டிருந்தாள். 

“அண்ணா! உங்களுக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா! எனக்கு இவளை பத்தி கவலை இல்லை! ஏன்னா நீங்க என்னை பார்க்க காலேஜ் வரும்போதே இவ செமையா லுக் விடுவா. ஆனா நான் அதை சீரியஸா எடுத்ததில்லை!. நீங்க பயங்கர ஹான்ட்சம். இவ உங்க பக்கத்துல கொஞ்சம் கம்மி தான். யோசிச்சிகோங்க!”, என்றான்.

ஏதானாலும் ராம் பிரசாத்தின் வாய்வழியாக கேட்பதற்காக தான் மறுபடியும் மறுபடியும் ஏதாவது சொல்லிகொண்டிருந்தான். ரமணன், இந்த  விஷயத்தில் குளறுபடி செய்தான் என்று தெரிந்தால் ராமநாதன் தொலைத்து விடுவார் என்று தெரியும். அப்பா சொல் தட்டாத மகன் வெங்கட ரமணன்.

“ரமணா! சொதப்பாத! எனக்கு அவளை பிடிச்சிருக்கு! போதுமா! அவளுக்கு என்கிட்ட அவ்வவளவு சப்போர்ட் பண்ணிட்டு! இப்போ ஏன் மாற்றி பேசுற!”, என்றான் ராம் பிரசாத்.       

“ஏய் அடாவடி! என்ன பண்ண நிமிஷத்துல அண்ணா மனசு மாறிட்டாங்க!” என்ற ரமணனின் கூற்றிற்கு……

“ம்ம்!!!!!! சொக்குபொடி போட்டேன்! கூப்பிட்டுட்டு வந்து, என்னை இவ்வளவு டென்ஷன் பண்ணிட்டு, இப்போ மனசு மாறிட்டாங்கன்னு என்ன கதைவிடற! நான் கிளம்பறேன். நீ வந்தா வா…….. வராட்டி போ…….”, என்று கல்பனா கோபமாக எழுந்து போக…………

“டேய் ரமணா போறாடா!”, என்று ராம் சொல்ல…………. “உங்களுக்கு  வேணும்னா நீங்க கூட போங்க………….. நைட் எட்டு மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் கூட்டிட்டு வந்துடுங்க. நான் வீட்டிக்கு போறேன்!”, என்றவாறு ரமணன் கிளம்ப…………

“டேய் படுத்தாதடா! எனக்கு வேலையிருக்கு!”, என்றான் ராம்.

“அதை உங்கம்மா கிட்ட சொல்லி, அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு போங்க. நான் கூட்டிட்டு வந்தேன்னு தெரிஞ்சது! எங்கம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க! ஆனா எங்கப்பா…………. பிச்சுடுவார் பிச்சு! என்னை!……………”, என்ற படியே அமர்ந்த இடத்திலேயே அவன் அமர்ந்திருக்க, ராம் கல்பனாவின் பின்னோடு ஓடினான். 

வீட்டிற்கு ரமணன் செல்ல……………. அங்கே ராஜேஸ்வரி மட்டுமே இருந்தார். ரமணன் அவரிடம் எல்லாவற்றையும் கூறி, “என்னுடைய ஃபிரன்ட் அத்தை கல்பனா”, என………….

இதற்கு மேல் அவருக்கு எந்த வார்த்தையும் தேவையிருக்கவில்லை, சுந்தரவல்லியிடம் பேசி…….. பெண்வீட்டாரிடம் பேசி…………. பெண் பார்பதற்க்கு நாள் குறித்து, அன்றே ஒப்பு தாம்பூலம் மாற்ற முடிவு செய்தனர்.

பிறகு ராமிற்கு போன் செய்து, கல்பனாவை அங்கே இங்கே அலைய வைக்காமல், வீட்டிற்கு கூட்டி வர சொல்ல………….அவர்களும் வர எல்லாம் இனிதே நடந்தது.

மாலை ஆறு மணியாகியும் வரமஹாலக்ஷ்மி வீட்டிற்கு வரவில்லை. “எங்கே?????????”, என்று ரமணன் கேட்க………. ராஜேஸ்வரி. “டான்ஸ் கிளாஸ்”, என்றார்.

“இது எப்போ இருந்து?”, என்று ரமணன் கேட்க……… “கடந்த இருபது நாட்களாக!”, என்றார்.

ஃபோனும் நாட் ரீச்சப்ல் என்று வந்தது. அவர்கள் கிளம்பும் வரை வரா வரவில்லை. ரமணனுக்கு அவளை பார்க்காமல் கிளம்ப மனமில்லை. ஆனால் கல்பனாவை அழைத்து வந்திருப்பதால் ஊருக்கு அவளை கூட்டி போக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

மனமில்லாமல் சென்றான். மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, வராவை சுற்றியே மனம் வட்டமிட்டது.

காலை கல்பனாவை வீட்டில் விட்ட அடுத்த நிமிடம், திரும்பவும் சென்னை கிளம்பினான்.

அவன் சென்ற போது மாலையாக, நேரே வீட்டிற்கு போய் நின்றான். ராஜேஸ்வரி, “என்ன தம்பி? அதுக்குள்ள வந்துட்டீங்க………… என்ன விஷயம்?”, என்றார் கலக்கமாக…………  

காலையில தான் எனக்கு தெரிஞ்சது அத்தை! இந்த வாரம் ரிசல்ட்ன்னு சொன்னாங்க, எல்லாமே இந்த அட்ரெஸ் தான் எனக்கு! அதான் வந்துட்டேன்!”, என்றான்.

அது உண்மையும் கூட, ரிசல்ட் வந்தபிறகு வரலாம் என்றிருந்தான். ஆனால் தற்பொழுது வராவை பார்க்க வேண்டும் போல தோன்ற வந்தே விட்டான்.   

“எங்க அத்தை வரா?”, என்றான். “இன்னும் கிளாஸ்ல இருந்து வரலை தம்பி!”, என்றார்.

“எங்க இருக்கு கிளாஸ்? நான் போய் பார்த்துட்டு கூட்டிட்டு வரேன்!”, என்றான். அவர் இடம் சொல்ல………. அங்கே போய் நின்றால்………..

“அம்மாடி!”, என்று இருந்தது அவனுக்கு. ஏதோ காலேஜ் காம்பஸ்க்குள் நுழைந்த உணர்வு அவனுக்கு. டான்ஸ் கிளாஸ் என்றவுடன் அவன் கிளாசிகல் என்று நினைத்திருக்க அது வெஸ்டர்ன்.

 ரூம் ரூமாக எல்லாவற்றிலும் ஆண்களும் பெண்களும் இருந்தனர். எல்லாரும் பிஸியாக அவறவர் மூவ்மென்ட்ட்ஸ் சரி பார்த்துக்கொண்டிருந்தனர்.

சிலவற்றில் மாஸ்டர்கள் கிளாஸ் எடுத்து கொண்டிருந்தனர். எங்கே போய் இவளை தேடுவது என்று அறியாதவனாக, அங்கேயே அமர, சிறிது நேரம் கழித்து வரமஹாலக்ஷ்மி ஒரு பெரிய ஹால் உள்ளிருந்து வந்தாள்.

டைட் டி-ஷிர்ட், டைட் பேன்ட் அணிந்திருந்தாள். அவளுக்கு பொருந்தியது. ஆனாலும் ரமணனுக்கு அந்த உடையில் அவளை பிடிக்கவில்லை. அவளோடு பேசியபடியே இன்னும் ஒரு யுவனும் யுவதியும் வர, இருவரையும் பார்த்தால் வேற்று கிரக வாசிகள் போல் அவன் கண்களுக்கு தோன்றியது.

அந்த யுவன் ஹேர் கலர் செய்து………. ஹால்ஃப் பேன்ட் போல ஏதோ அணிந்திருந்தான். அந்த யுவதி பார்க்கவே வித்தியாசமாக தெரிந்தாள். ஷார்ட் ஸ்கிர்ட் அணிந்திருந்தாள். இதை அணிந்து கொண்டு இவள் எப்படி டான்ஸ் செய்திருப்பாள் என்று அவனுக்கு யோசனையாக இருந்தது.

இவன் அமர்ந்திருப்பதை பார்க்காமல் மிகவும் சுவாரஸ்யமாக ஏதோ பேசிய படி செல்ல………. இவனும் வராவை அழைக்காமல் அவள் பின்னோடு சென்றான்.

 அப்பொழுதும் அவள் கவனித்தாளில்லை, இவனுக்கு எரிச்சலாக வந்தது, அப்படி என்ன பின்னோடு யார் வருகிறார்கள் என்று கவனிக்காமல் பேச்சு என்று,

எப்போது தான் பார்க்கிறாள் என்று பார்ப்போம் என்று நினைத்தவனாக அவர்கள் செல்லும் போது பின் சென்றான். சிறிது தூரம் சென்றவுடனே நின்று பேசினர். அவனும் நின்றான். பின் நடந்தனர் அவனும் நடந்தான்.

இப்படியே ஒரு ஹாலை கடந்து…………. ரிசெப்ஷனை கடந்து……………. வாயில் படி இறங்க……………. சுத்தமாக அரைமணி நேரம் ஆனது.

இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று வரா என்றவளை அழைக்க வாய் திறக்க, “டேய் மச்சி! உன் ஆளுடா!”, என்ற சத்தம் கேட்க……………. நின்று திரும்பி பார்க்க………

அங்கே இரண்டு மூன்று பேர் நின்றிருந்தனர். அவர்கள் சொன்னது சத்தமாக………….. நிச்சயம் சுற்று புறத்தை உணர்ந்திருந்தாள், அவள் காதில் விழுந்திருக்கும். ஆனால் அவள் திரும்பவில்லை.

“டேய் கஜினி முகமது மாதிரி நீயும் தினமும் படைஎடுக்கற, ஒரு நாள் கூட………… திரும்பிகூட பார்க்கலையே மச்சான்!”, என்று இன்னொருவன் கூற……

“எங்கடா போய்ட போறா! அவளை மடக்கி காட்றனா இல்லையா பாருங்கடா!”, என்று சவால் விட………….. ரமணனுக்கு ஓங்கி அவனை ஒரு அறை விட வேண்டும் என்று கால்கள் அவன் பக்கம் இழுத்து செல்ல, திரும்பி இவளை பார்த்தால் இவள் காரில் ஏறி கொண்டிருப்பது தெரிந்து…….

“வரா…………!”, என்று கூப்பிட வாய் திறக்கும் முன்னே கார் பறந்திருந்தது.  

 

Advertisement