Advertisement

அத்தியாயம் பதினொன்று:

இன்றைய நிகழ்வுகள்

மேலே சென்றவன் அவளுடைய ரூமிற்கு செல்ல அவள் அங்கே இல்லை.

அது ஹை ரூபிங் செய்யப்பட்ட ஹால். அதனால் அங்கே இருந்தே எட்டி பார்த்தவன், ராமும் கல்பனாவும் இருக்கும் இடத்தை பார்த்து, “அவ ரூம்ல இல்லை”, என்றான்.

“விளங்கும்”, என்ற கல்பனா, “உன் ரூம் தான், அவ ரூம்”, என விளக்க, “எப்போ இருந்து”, என்றான் பதிலுக்கு,

“ ம்ம்ம்ம்!!!!!!!!!!!!! அவளுக்கு எப்போ எல்லாம் தோணுதோ! அப்பப்போ! என்றாள் கடுப்பாக.

அவனிடம் இப்படி கடுப்பாக பேசும் தைரியம் உள்ளவள், கல்பனா மட்டும்தான். புன்னகைக்க ஆரம்பித்த இதழ்களுடன் அவனுடைய ரூமிற்குள் நுழைய கதவு திறக்கும் ஒலி கேட்டு, கதவிற்கு எதிர் புறம் படுத்திருந்த வரா எழுந்தாள்.

“நானே வர்றேன், அவர் வந்துட்டாரா!”, என்று கேட்டபடியே எழுந்தாள். அவளுடைய அம்மாவோ அண்ணியோ அழைக்க வந்திருப்பார்கள் என்றெண்ணி.

உடனடி பதில் வராததில் இருந்தே, வந்தது யார் என்பதை உணர்த்த சட்டென்று திரும்பினாள்.

புன்னகை முகத்தோடு வந்த ரமணன், அதை முகத்திலிருந்து விலக்காது அப்படியே நின்றான்.

அவனை பார்த்த வரா பார்த்தது பார்த்தபடியே நின்றாள். நிறைய மாதங்களுக்கு பிறகு வரும் நேரடியான தனிமை சந்திப்பு. ரமணன் திருமணத்திற்கு பிறகு சென்னை வரவேயில்லை.

அவ்வபோது இவன் அம்மா அப்பாவை பார்க்க செல்லும் பொழுது அம்மா இவளை வரவழைத்து விடுவார்கள். சொல்லாமல் சென்றாலும் இவன் கிளம்புவதற்குள் அவளை வரவழைத்துகொள்வார்கள். அதனால் அங்கே தாங்கும் படியாக செல்ல மாட்டான். காலை செல்பவன் இரவு கிளம்புவது போல் பார்த்து கொள்வான்.

அவள் மட்டுமே வருவாள். அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, என்று யாரையும் உடன் அழைத்து வந்து அவனை சங்கடதிர்க்கோ யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லும் நிலைக்கோ தள்ள மாட்டாள்.

வரும்பொழுது எந்த மாதிரியான மனநிலையில் வருகிறானோ என்ற சஞ்சலத்தில் இருந்தவளை அவன் புன்னகைத்த முகம் பெரும் ஆசுவாசத்தை கொடுத்தது.

அவனுடைய பார்வையில் என்ன இருந்தது என்ற ஆராய்ச்சியோடு அவள் பார்க்க அதே வேலையை தான் அவனும் செய்தது கொண்டிருந்தான்.

இருவரின் பார்வையும் மற்றவருக்கு விளங்கவில்லை. பார்வையின் ஆராய்ச்சியை விட்டு, இருவருமே என்ன மாற்றம் மற்றவரிடம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினர்.

வரமஹாலக்ஷ்மியின் பார்வைக்கு வெங்கட ரமணன் நிறம் மங்கி கறுத்து விட்டது போல் தோன்றியது. நிறைய வேலை செய்கிறானோ தன்னை கவனிப்பது இல்லையோ என்று யோசித்தாள்.

அவனின் தோற்றத்தில் கம்பீரம் அதிகரித்திருப்பது போல் அவளுக்கு தோன்றியது. அவனுடைய தந்தை பெரிய மீசை வைத்திருப்பார். எப்பொழுதும் ரமணனுக்கு அது பிடிக்கும்.

வேலையில் சேர்ந்த போது தன் மீசையை அவர் போல தான் வைத்து கொண்டு இருப்பான். அது கம்பீரமாக இருந்தாலும், ஒரு தமிழ்நாட்டுத் தோற்றத்தை பார்த்தவுடனே அளிக்கும்.

இப்பொழுது புதியதாக அந்த மீசையை கீழே இறக்கியிருந்தான். அது அவனுக்கு சற்று மாடர்னான தோற்றத்தை கொடுத்து கம்பீரத்தோடு சற்று ஸ்டைலையும் சேர்த்து கொடுத்திருந்தது.      

மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லாமல் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு எப்படி பார்த்தாளோ, நடுவில் மூன்று நான்கு முறை அவன் ஊருக்கு வந்தபோது வள்ளிம்மா அழைத்து அவள் போனபோது அவனை பார்த்தும் பார்க்காமல் பார்த்த மாதிரியே இருந்தான்.

 அப்படியே தான் இருந்தான். முக்கியமாக அந்த பார்வை. அவளையே அளவெடுப்பது போல் பார்த்துக்கொண்டிருந்த அந்த பார்வை அவளுக்கு அவனிடம் எப்பொழுதும் பயத்தை கொடுக்கும்.

அந்த பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் அந்த பார்வையின் வீரியம் தாங்காமல் முயன்று ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து வேறு புறம் திரும்பினாள்.   

அவனின் பார்வையை தாங்க முடியாமல் தான் திரும்புகிறாள் என்றுணர்ந்த ரமணன் அவளை எப்படித்தான் பார்ப்பது என்று யோசித்தபடியே பார்த்தான்.  

நிறைய தோற்றத்தில் மாற்றம் இருந்தது அவளிடம். என்ன என்று அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு என்னவோ பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றியது.

பாலைவனத்தில் தண்ணீரை பார்த்தது போல் கண்களுக்கு குளிர்ச்சியாக தோன்றினாள். அவளுடைய அழகு நிறைய கூடியிருப்பது போல அவனுக்கு தோன்றியது.  

 பொதுவாக பெண்களை அதிக நேரம் ரமணன் பார்க்கவே மாட்டான். தானாக கருத்தில் பதிந்தால் ஒழிய அவனாக பதிய வைக்க ஆர்வத்துடன் பார்க்க மாட்டான். அப்படி அவன் கவனத்தை கவர்ந்தால் பார்க்க தயங்கியதும் இல்லை.

மிக சில பெண்கள் மட்டுமே அவனை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்கள். வராவோடே வளர்ந்ததினால் அவளிடத்தில் அவனுக்கு அவன் அம்மாவை, அத்தையை, அவன் வீட்டு பெண்களை பார்ப்பது போன்ற பார்வை தான் இருக்கும்.           

இந்த சில வருடங்களில் அவளிடம் மாற்றத்தை உணர்ந்த பிறகு தான் அவளை கவனித்து பார்க்க ஆரம்பித்ததே. அப்போதும் அவளுடனான திருமணத்திற்கு முன்……………. ஆராய்ச்சி பார்வை தான் இருக்கும்.

திருமணத்திற்கு பின் முயன்று அவளை தன் மனைவி என்ற உரிமையோடு பார்க்க நினைத்தாலும் அப்படி தான் பார்க்கிறானா என்றே தெரியவில்லை.

அவளாக கூப்பிடும் வரை தமிழ் நாட்டுக்கு வரக்கூடாது என்ற முடிவோடு தான் இருந்தான். ஆனால் அவள் கூப்பிடுவது போல் தெரியவில்லை. அம்மாவும் அப்பாவும் ஒரு புறம் இங்கே வருமாறு வற்புறுத்தி கொண்டிருக்க, இங்கே சிவசங்கரன், ராஜேஸ்வரி, ராம், கல்பனா, எல்லோரும் கேட்டு கொண்டே இருந்தனர்.

அவன் போன் எடுக்க மாட்டான் என்று தெரிந்தும் சலிக்காமல் கூப்பிடுவர். அபூர்வமாக அவன் அதனை எடுக்கும் பொழுது சிறிது கூட அவன் எடுக்காததன் கோபத்தை காட்டாது அவன் நலத்தை விசாரிப்பார் சிவசங்கரனும் ராஜேஸ்வரியும். இந்த மாதிரியான அவர்களுடைய நடத்தைகள் தான் அவனுக்காக இல்லாவிட்டாலும் அவர்களுக்காகவாவது இங்கே வர வேண்டும் என்று தோன்ற வைத்தது.

அப்பொழுதும் அதற்கான முயற்ச்சியை அவன் எடுத்தானில்லை. திடீரென்று இந்த ட்ரான்ஸ்பர் வரும் பொழுதே இது அவர்களுடைய வேலை என்று தெரியும். அதனால் தான் மறுத்திருக்க முடிந்திருந்தாலும் மறுக்காமல் வந்துவிட்டான்.

வயது ஏறிக்கொண்டே போவதும் மற்றொரு காரணம். போன தடவை அவனை தொடர்பு கொண்ட போதே அம்மா மிகவும் வருத்தப்பட்டார்கள்.

 அம்மா இல்லாத போது தனியாக தொடர்பு கொண்ட அப்பா, சிறிது நேரம்  ஒன்றுமே சொல்லாமல் இருந்தவர், “என்னப்பா சொல்லுங்க!”, என்று ஊக்கியவுடன்………..,

“வந்துடுப்பா!, என்னை மாதிரி நீயும் ரொம்ப வயசான பிறகு குழந்தை பெறப்போறியா……………….. என்னால உனக்கு ஆக்டிவா ஏதாவது செய்ய முடிஞ்சதா. தானா உருவாகலன்னா பரவாயில்லை! நாமா தள்ளி போடக்கூடாது…………………”,

“அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கணும், நானும் உங்க அம்மாவும் நீ பொறக்கரதுக்குள்ள பட்ட கஷ்டம்……………. மறுபடியும் குழந்தைங்க இல்லைன்ற பேச்சு………………. நம்ம குடும்பத்துக்கு தொடர வேண்டாம்!,  என்றார் பளிச்சென்று.

பேசும் போது அவர் குரலில் இருந்த கலக்கம் அவனையறியாமல், “சீக்கிரம் வந்துடறேன்பா…………..”, என்று பதில் சொல்ல வைத்தது.   

முதன் முறையாக சமூக சிந்தனையிலிருந்து விடுபட்டு தன்னுடைய வாழ்கையை பற்றி அவன் சிறிது சிந்திக்க ஆரம்பித்ததே, அதன் பிறகு தான்.

“அப்படி என்ன நம்மால் வேலையையும் குடும்பத்தையும் ஒரு சேர பார்க்க முடியாதா? என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்?”, என்று அவன் யோசிக்க ஆரம்பித்த பொழுது இந்த ட்ரான்ஸ்பர் வர, அதை பட்ற்றி அவளா? நானா? பார்த்துக்கொள்ளாலாம்! என்ற முடிவோடு தான் வந்தான்.

இருந்த இடம் அசையாமல் நின்றிருந்தவனை, தயங்கி மெதுவாக, “வாங்க!”, என்றாள் ஒற்றை சொல்லாக…………

அவளையே பார்த்திருந்தவன் சிறிது கோபம் தலை தூக்க,

“உன் போன் நம்பர் இதுதானே!”, என்று ஒரு நம்பரை சொல்லி கேட்க………….

“ஆம்”, என்பது போல் தலையாடினாள்.

“என் போன் நம்பர் சொல்லு!”, என்றான் பதிலுக்கு,

எதற்கு என்று புரியாவிட்டாலும் சொன்னாள்.

“அப்போ! என் போன் நம்பர் உனக்கு நல்லா ஞாபகமிருக்கு. ஆனா ஒரு தடவை கூட நீயா கூப்பிடலை. நான் தான் போன் பண்றேன்னு தெரியும்! ஒரு தடவை கூட எடுக்கலை! என்றான் கைகளை கட்டியபடியே அவளையே பார்த்தவாறு.

என்ன பதில் சொல்வது என்று தெரியாத வரமஹாலக்ஷ்மி வாய் பேசாது அப்படியே நின்றாள். பிறகு துணிந்து “தேவைன்ற போது உங்களை தவிர நான் வேற யாரையும் கூப்பிடளையே” என்றாள்.

அது உண்மைதானே. அதனால் வேறு ஒன்றும் ரமணன் பேசவில்லை. 

அவன் இங்கே வருகிறான் என்ற செய்தி அறிந்தவுடனே இனி தன்னை விட்டு விலகமாட்டான் என்று அவளுக்கு தெரியும். வருகிறான் அவனோடு இயல்பாய் பொருந்த வேண்டும். தன்னுடைய மனவுளைச்சல்கள் அவனை அண்ட விட கூடாது! வேண்டிய நேரம் எடுத்தாகி விட்டது என்றுனர்ந்தவள்,

அவனை நேர்கொண்டு பார்த்தாள். அவன் முகம் களைப்பில் இருப்பது போல் தோன்ற, “சாப்பிட்டீங்களா!” என்ற கேள்விக்கு, “இல்லை!”, என்று தலையாட்டினான், “சாப்பிடுவோமா!”, என்றாள்.

 “சரி”. என்பது போல் அவளை பார்த்து தலையசைக்க, பதிலே பேசாமல் குழந்தை கீழே விழுந்து விடாமல் இருக்க தலையணையை வைத்தவள், “முகம் கைகால் கழுவிட்டு வாங்க”, என்றாள்.

“குளிக்கணும்”, என்றான், அமைதியாகவே டவல் எடுத்துக் கொடுத்தவள், போன் வர எடுத்தவள், “வள்ளிம்மா………….”, “வந்துட்டாங்க வள்ளிம்மா”, “இன்னும் சாப்பிடலை”, “பேசறீங்களா”, “ம்……சரி”, என்று வைத்துவிட “சாப்பிட்டுட்டு கூப்பிட சொன்னாங்க”, என்றாள் இவனை பார்த்து.

பதில் பேசாமல் இவளை ஒரு பார்வை பார்த்து ரமணன் குளிக்க போக, “நன்றாக சிரித்த முகத்தோடு தானே வந்தான், இப்பொழுது எதற்கு இப்படி பார்க்கிறான்”, என்று புரியாமல் மனதோடு குழம்பினாள்.

                         அத்தியாயம் பன்னிரெண்டு

அன்றைய நினைவுகள்:

“அவங்கவங்களுக்கு பிடிச்சதை அவங்கவங்க தான் பார்க்கணும்!”, என்ற வராவின் கூற்றை கேட்டவன்,

“எதை”, என்றான் ஒற்றை சொல்லாக………………..

அவளும் சளைக்காமல், “எல்லாத்தையும்”, என்றாள். இப்படி அவனிடம் பதில் பேசும் வரா புதியவள். சிறு வயதில் வாயடித்ததுடன் சரி பிறகு ஒரு வயது வந்தவுடன் இப்படி வாயடிக்க மாட்டாள் பயத்துடன் தான் பார்ப்பாள்.

தற்பொழுது உடனுக்குடன் பதிலளிக்க அவனுக்கு புதியதாய் தெரிந்தாள். எது கொடுத்தது இந்த தைரியம். 

“எல்லாத்தையும்ன்னா கரக்டா, எதைன்னு சொல்லு!”, என்றான் சற்று குரலை உயர்த்தி………………

இவன் இப்படி அதிகாரமாக கேட்கவும், புதியதாய் பிறந்த தைரியம் சற்றே குறைய பதில் பேசாமல் எழுந்து கொள்ள போனாள்.

மறுபடியும் ஏதோ ரமணன் சொல்லப்போக, “இப்போ தானே காலேஜ்ல இருந்து வந்தா விடு!”, என்று அவள் அண்ணன் பரிந்து வர,

“ ஏன் காலேஜ்ல இருந்து வந்தா பதில் சொல்ல வாய் வலிக்குமா! சொல்லுங்க மங்கி, இல்லையில்ல வெங்கின்னு என்னை என்னவோ இன்னைக்கு தான் புதுசா பார்கிற மாதிரி, பெரிய இவ மாதிரி வந்து உட்கார்ந்தா!”, என்று அவனை பார்த்து அந்நியனை போல் அமர்ந்ததற்க்கு, ரமணன் பொறிய…………………

எதற்கு இப்படி கோபப்படுகிறான் என்று ராமிற்கு புரியவில்லை.     

குறைந்த தைரியம் மறைந்தே விட்டது வரமஹாலக்ஷ்மிக்கு. இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வரா இதுதான் சமயம் என்று இடத்தை விட்டு அகன்றாள்.

ஏதோ சரியில்லை என்று உணர்ந்த ரமணன் பிறகு பார்க்கலாம், தற்பொழுது அம்மா சொன்ன விஷயம் முக்கியம் என்று நினைத்து, “அம்மாவும் அப்பாவும் ஒரு வரன் சொன்னாங்களே உங்களுக்கு ஏன் பிடிக்கலை!”, என்றான்.

“எந்த வரன்”, என்றவனிடம், “எதுன்னு கேட்கிற அளவுக்கு உங்களுக்கு க்யுல நிக்குதோ!”, என்றான்.    

“அட உனக்கு ஏன்பா என்மேல இத்தனை காண்டு!”, என்றான் ராம் பிரசாத். “அதுவா என்னை உயிரை எடுக்கறாங்க பொண்ணு வீட்டுக்காரங்க அதுதான்!”, என்றான்.

“உன்னை ஏன்பா உயிரை எடுக்கறாங்க!”,

“உங்க கிட்ட சிபாரிசு பண்ண சொல்லி!”,

“இது என்னப்பா புது கதை!”, என்ற ராமிடம், “நான் என்ன கதையா சொல்றேன்!”, என்று ரமணன் கோபப்பட, “பொறுமை! பொறுமை!”, என்று ராம் பிரசாத் சொல்ல………….

ரமணன் முறைத்தான். “விஷயத்தை சொல்லுடா”, என்றான் ராம் மறுபடியும் பொறுமையாகவே.

“எங்கம்மா வோட ஒண்ணு விட்ட அண்ணன் பேத்தி! ஏன் வேண்டாம்னு சொன்னீங்க!”, என்றான்

“பேர சொல்லுப்பா! எங்கம்மா ஒரு வாரத்துல மூணு நாலு பொண்ணு போட்டோ காட்டுவாங்க விவரம் சொல்லுவாங்க எனக்கு எதுவும் மனசுலையே நிற்காது”,  என்ற ராமிற்கு,

 “கல்பனா!”, என்றான் ரமணன்.

“டேய்! பொண்ணு கருப்புடா!”, என்றான் ராம்.

“என்ன இது ராமண்ணா! கலர் கம்மின்னு சொல்லுங்க”, என்று கடிந்தவன் “கருப்பெல்லாம் உங்களுக்கு போட்டோலயே தெரியுதா???/”,

“இல்லை சொன்னாங்க!”,

“மாநிறதுக்கும் கொஞ்சம் கம்மி அவ்வளவு தான். ஆனா பார்க்க லட்சணமா இருப்பா ”, என்றான் ரமணன் பதிலுக்கு,

“உனக்கு அவளை தெரியுமா!”,

“எங்கம்மா வோட அண்ணா பேத்தி. எனக்கு எப்படி தெரியாம இருக்கும்! உங்களுக்கும் தெரியும்! என்கூட காலேஜ்ல பார்த்ததில்லை! என்னோட கிளாஸ் மேட்! நான் இங்கே படிக்கறேன்னு அவளை பார்த்துக்க வசதியா இருக்கும்னு, இங்க சேர்த்தாங்க!”.

“உங்க கிட்ட கூட சொல்லியிருக்கேன். உங்க ஆபீஸ்க்கு என் கூட வற்ரதுக்கு கேட்டதுக்கு கூட, பொண்ணுங்க எல்லாம் எனக்கு சரி வர மாட்டாங்கன்னு சொல்லிடீங்க”,

“ஞாபகமில்லைடா!”, என்றான் பரிதாபமாக……………

“நான் இங்க படிக்கறேன், அவளை பார்த்துப்பேன்னு தான் இங்க காலேஜ்ல கொண்டு வந்து சேர்த்தாங்க! உங்க கிட்ட கூட சொல்லியிருக்கேன்! உங்க கூடவே தானே இருந்தேன்! இது கூட தெரியாதா!”, என்றான் மறுபடியும் குரலில் எரிச்சல் இழையோட.

இப்போழுது ராம் பிரசாத் அவனை பார்த்து முறைதான். “டேய்! உங்க அப்பா, உங்க ஊர்ல இருக்கற பொண்ணுங்களையெல்லாம் தைரியமா இந்த படிப்புக்கு சேருங்க! என் பையன் அங்க தான் படிக்கிறான்! அவன் பார்த்துப்பான்னு சொல்லி, எங்கப்பாவோட தேர்தல் வாக்குறுதிய விட அதிகமா கொடுத்து  ஒரு நாலஞ்சு பேரையாவது சேர்த்திருக்கா மாட்டார்”,. 

“பசங்கலயே கவனிச்சுக்கலாம் போல! அதுங்க பண்ண கலாட்டா கொஞ்சமா நஞ்சமா! அதுகளை கவனிக்கறேன்னு நீ இழுத்துக்கிட்ட பிரச்சனையே அதிகம். இதுல யாரை எனக்கு ஞாபகம் இருக்கும்”, என்றான் கடுப்புடன்.    

“எல்லாரும் என் ஜூனியர்ஸ்! இவ மட்டும் தான் என் கிளாஸ் மேட்!”, என்றான்.

“ஞாபகமில்லைடா! இப்போ கூட இந்த பேர் சொல்லி கொஞ்சம் நிறம் கம்மினாங்க! நான் அதுக்கப்புறம் பார்க்கவேயில்லை! விவரமும் கேட்கலை! அது லாயர்ன்னு கூட எனக்கு தெரியாது!”.

“நீங்க அவளை பார்த்திருக்கீங்க ராமண்ணா!”, என்றவன்,

“ஒரு தடவை கல்பனா  ஸ்கூட்டியை ஒரு கார்காரன் இடுச்சிட்டு நிறுத்தாம போய்ட்டான்னு சொல்லி, கார் பின்னாடியே போய் கார் நின்னவுடனே அதோட கண்ணாடியை கல்லெடுத்து அடிச்சி, உடைச்சி, பிரச்சனையாகி, நம்ம போனோமே ஞாபகமில்லையா!”, என்றான்.    

“அதுவா எனக்கு முகம் ஞாபகமில்லியே! நான் பேசிட்டு இருக்கும் போதே இன்னொரு கண்ணாடியையும் உடைப்பேன்னு கத்திட்டு இருந்துச்சின்னு, நீ அவசரமா ஒரு ஆட்டோ பிச்டிச்சி அனுப்பிட்டு! அப்புறம் அதுக்கு அஞ்சாயிரம் ரூபா நீ கட்டிநியே அதுவா?”,………..“சரியா! பார்க்கலைடா”.

“இன்னொரு தடவை கூட போனீங்க ராமண்ணா! நான் கூட இல்லை! அவங்க ஃபிரண்ட்ஸ் ஹோட்டல் சாப்பிட போனப்போ, ஏதோ ப்ரச்சனை ஆகி அவ பேரறை அடிச்சு, அவன் அழுதுட்டு இருந்தான்னு, பின்ன கண்ணாடியை உடைச்சு போலிஸ் வந்து நீங்க அவசரமா போனீங்களே!”,

அவனுக்கு சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது. அவன் அந்த நிகழ்ச்சியை யோசித்தவாறே இருக்க, இவனுக்கு இன்னும் ஞாபகமில்லை போல் என்று இன்னும் அவளின் அருமை பெருமைகளை ரமணன் சொல்ல வர ,

“ஞாபகமிருக்கு!”, என்றான் ராம். “ஏண்டா சொல்றது எல்லாம் இப்படி கலாட்டாவா சொல்லற! அதை உடைச்சா இதை உடைச்சான்னு சொல்ற! அதை ஏன் வேண்டாம்னு சொன்னீங்கன்னு கேட்கற!”.

“இல்லைன்னா என் மண்டையை உடைச்சிடுவாளே!”, என்று மனதிற்க்குள் நினைத்த ரமணன்,

“கொஞ்சம் அடாவடியான ஆளு! மத்தபடி நல்ல பொண்ணு! என் சொந்தம்ன்றதால சொல்லலை. என் கூட அஞ்சு வருஷம் படிச்சிருக்கா, ஐ நோ ஹெர். நல்ல பொண்ணு. கலர் கொஞ்சம் கம்மி மற்றபடி பார்க்க நல்லா இருப்பா. உங்க ஸ்டேடஸ்க்கு சமமா வசதி வாய்ப்பிருக்கு. மதுரைக்காரங்க…………… யோசிங்க! பார்க்கணும்னா என் எக்சாம் முடிச்சு பார்க்கலாம். எனக்கு இப்போ படிக்கணும் இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு”, என்றவன்,

வராவையும் ராம் பிரசாத்தையும் மறந்தவனாக படிப்பில் ஆழ்ந்தான். பரிச்சை முடியும் வரை எல்லாரும் கண்ணில் பட்டாலும் யாரும் கவனத்தில் பதியவில்லை.

பரிச்சை முடிந்து அவன் தன்னை ரிலாக்ஸ் செய்த பிறகு தான் சுற்று புறத்தை கவனித்தான். பிறகு யோசித்த போது தான் புரிந்தது அன்றைய அவனுடைய வராவிடமான சந்திப்பிற்கு பிறகு அவளை சந்திக்கவேயில்லை என்றுனர்ந்தான். தனக்கு பெஸ்ட் ஆப் லக் சொல்ல கூட அவள் ஏன் வரவில்லை என்று புரியவில்லை.

அவனிடம் ஒரு அசட்டு துணிச்சலோடு பேசியதாகவே பட்டது. எது கொடுத்தது இந்த அசட்டு தைரியம், துணிச்சல், யோசனையாக இருந்தது அவனுக்கு. 

நேரடியாக அவளுடைய ரூமிற்கு சென்றவன் அவளை பார்க்க டீ.வி பார்த்து கொண்டிருந்தாள், இவன் வந்ததை கூட கவனிக்காமல் ஆழ்ந்து பார்த்துகொண்டிருந்தாள். வரா என்ற இவன் அழைப்பிற்கு துள்ளி திரும்பினாள்.

மிக சில நேரங்களில் மட்டுமே அவன் ரூமிற்கு வருவான். இப்போது எதற்கு வந்திருக்கிறான் என்ற பதட்டம் முகத்தில் ஏறியது. 

“அமைதியாக அவளை கையாள வேண்டும். என்ன? என்று கண்டுபிடிக்க வேண்டும். ஏதோ சரியில்லை!”, அவன் உள்மனது சொல்லியது. அவனுடைய கணிப்பு நிறைய நேரங்களில் சரியாக தான் இருக்கும். அதனால் அதனை அவனால் ஒதுக்க முடியவில்லை.

என்ன பார்த்துக் கொண்டிருந்தாள் என்று பார்க்க ஏதோ பேஷன் சேனல், ராம்ப் வாக் ஓடிக்கொண்டிருந்தது.

“எங்க உன்னை பார்க்கவே முடியலை. நேத்து எனக்கு எக்சாம். விஷ் பண்ணுவ எப்பவும். நேத்து அதுக்கு கூட என்னை பார்க்கலை. நானும் அவசரத்துல கவனிக்கலை, இல்லைனா நானே பார்த்திருப்பேன்”.

அவளுக்கு நன்றாக ஞாபகமிருந்தது, இருந்தாலும் என்னவோ அவன் முன்னிலையில் அடிக்கடி செல்ல பயம். அதனாலேயே தவிர்த்து விட்டாள்.

தற்போது அவனுக்கு விஷ் செய்திருக்க வேண்டும் என்ற குற்றவுணர்ச்சி மேலோங்க, என்ன சமாதானம் சொன்னாலும் கண்டு பிடித்து விடுவான் என்றுணர்ந்து, “சாரி”, என்றாள் ஒற்றை வார்த்தையாக……………             

“எப்படி இருக்கு காலேஜ்?”, என்று ஆரம்பித்து அவளிடம் சகஜமாக பேச்சுக்கொடுக்க துவங்கினான்.

சரளமாக அவளை பேச வைத்தான். பேசியதில் அவனுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. நன்றாக தான் பேசினாள்.

ஒன்றுமில்லாதைதை தானாக ஏதாவது நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்பது போல் உணர்ந்தவன், அவளிடம் அவன் மீது இருந்த பயத்தை அதிகரிப்பது போல் எதுவும் செய்யாமல் சகஜமாக பேசினான். அவளையும் பேசவைத்தான்.   

“உங்கண்ணாக்கு பொண்ணு பார்க்கலாமா?”,

“உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்!”.

“எனக்கில்லை, பொண்ணுக்கு!………………. என்னோட ரிலேடிவ் பிளஸ் என்னோட கிளாஸ் மேட். என்னோட நிறைய தடவை உங்க அண்ணனை  பார்த்திருக்கா. இப்போ ஜாதகம் வரவும் இவன் தான் அவன்ன்னு தெரிஞ்சவுடனே, அவளுக்கு ஒரு ஆர்வம். உங்கண்ணன் வேற அவளை நேரே பார்க்காம, போட்டோ பார்த்து……………. யார்ன்னு தெரியாம வேண்டாம்னு சொல்லிட்டான்”.

“கல்பனா, என்கிட்ட ஏன் என்னை வேண்டாம்னு சொன்னான். நீ தானே என் கூட இருந்த!, என்னை பத்தி என்ன சொன்ன நீ! அப்படின்னு என்னை ஒரே டார்ச்சர். நான் ஒண்ணுமே சொல்லலைனா நம்ப மாட்டேங்கறா! என்னை அவரோட பேசவை! ஏன் என்னை வேண்டாம்னு சொன்னாங்கன்னு நானே கேட்கறேன்னு சொல்லறா!”. 

“என்ன செய்யலாம் ஒரு ஐடியா சொல்லு!”, என்றான்.

“ரெண்டு பேருமே உங்களுக்கு வேண்டியவங்கன்னா, நீங்க இதுல தலையிட வேண்டாம்! அவங்களே பேசிக்கட்டும். அண்ணன் வேண்டான்னு சொன்னா அவனே சொல்லட்டும்! ஏன் வேண்டான்னு சொன்னான்னு கல்பனாக்கு கேட்கணுமா அவங்களே கேட்கட்டும்”.

அதுவே ரமணனிர்க்கும் சரியென்பது போல் பட, “அந்த மாதிரியே ஏதாவது செய்யறேன்”, என்றான்.

பிறகும் அவளிடம் தானாகவே நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்து, “நாளை ஊருக்கு செல்கிறேன்”, என்று அவளிடம் கூறிக் கொண்டிருந்த போது………… ராமும் வர அவர்களை பார்த்தவன்,

“என்னடா இது உலகத்தின் எட்டாவது அதிசயம், நீ அவளை எரிச்சல் பண்ணாம பேசிக்கிடிருக்க, அவளிடம் உன்கிட்ட பயமில்லாம பேசிக்கிடிருக்கா………..”, என்றபடியே அவர்களின் பேச்சில் ஐக்கியமாக…………

 திரும்பவும் அவர்கள் பேச்சு இழுத்துகொண்டே போக,  ராஜேஸ்வரி அவர்களை சாப்பிட அழைக்க வந்த போது அவரையும் அவர்களுடைய பேச்சில் இணைத்துக்கொள்ள, மாலை ஐந்தரை மணிக்கு பேச ஆரம்பித்தவர்களின் பேச்சு இரவு பத்தரை வரை நீடிக்க……..

அங்கே ஒரு குதூகல சூழ்நிலை நிலவ……………., ரமணனிடம் பயம் இருந்தாலும் ஒரு நட்புணர்வுடன் கூடிய நம்பிக்கை அவனிடம் வரமஹாலக்ஷ்மிக்கு தோன்றுமாறு செய்தான்.     

 

Advertisement