Advertisement

அத்தியாயம் – 9
வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது தன் மனைவி அழைப்பதை பார்த்த செழியன், அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் சாப்பிட்டோமா என்று கேட்டகவோ அல்லது தன்னிடம் மன்னிப்பை வேண்டவோ அழைப்பாள் என்ற எண்ணத்துடன் அதை அட்டன்ட் செய்தவன், எதிர்புறத்தில் ஒரு ஆண் குரல் ஒலிக்கவும், குழம்பிப் போனான். சில நிமிடங்களிலேயே குழப்பம் அதிர்ச்சியாக மாறியது.
“உங்க வைப் பேங்கல மயங்கி விழுந்துட்டாங்க. நான் அவங்க கூட வொர்க் பண்றேன். பக்கத்துல இருக்குற ஹாஸ்பெட்டல் கூட்டிட்டு போறோம். அங்க வந்திருங்க.”
மருத்துவமனையின் பெயரை பேசியவன் கூற, செழியன் தான் உடனே அங்கு கிளம்பி வருவதாக சொல்லி பேசியை வைத்தான். நேராக தன் மேனேஜரிடம் சென்றவன், விஷயத்தை கூறி, உடனே தான் கிளம்புவதாக கூறினான்.
அவரும் நிலைமை புரிந்து அனுமதி தர, நேராக தன் இருப்பிடம் சென்று பேக்கை எடுத்துக் கிளம்பினான். உடன் பணிபுரிபவன் செழியனின் அவசரத்தை கண்டு என்னவென்று வினவ, “தமிழ் மயக்கம் போட்டு விழுந்துட்டாளாம் பேங்க்ல. அதான் கிளம்பறேன்.” என்று கூறினான்.
ஒரு கணம் திகைத்து நின்ற அவன் தோழன், பின் விஷமமான சிரிப்புடன், “டேய் கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆயிருக்கு அதுக்குள்ளயா??” என்று குறும்புடன் கேட்க, அவனை திட்டக் கூட நேரமில்லாமல், “போடாங்” என துப்பாமல் துப்பிவிட்டு மருத்துவமனைக்கு பறந்தான் செழியன்.
‘இங்க சிங்கிள் டீக்கே வழியில்லையாம்! இவன் எல்லாம் எங்கயிருந்து வரான்னே தெரியலையே….’
மனதுக்குள் புலம்பியபடி ஐந்தே நிமிடத்தில் தன் இரு சக்கர வாகனத்தை விரட்டி மருத்துவமனை போய் சேர்ந்தான். அங்கே தமிழழகியின் பெயரை கூறி விசாரித்து, அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றவன், அங்கே தன்னிடம் விவரம் கூறியவனை கண்டு நன்றியுரைத்தான். தமிழழகியின் கைப்பையை அவனிடம் ஒப்படைத்து வங்கியில் இருந்து வந்திருந்த மேலும் இரண்டு பேரை கூட்டிக் கொண்டு தகவல் கொடுத்தவன் விடை பெற, உள்ளே இருக்கும் மருத்துவர் வெளியே வருவதற்காக காத்திருந்தான்.
உள்ளே அவன் மனைவியின் உடலையும், வெளியே அவன் பொறுமையையும் நன்றாக பரிசோதித்தே வந்தார் அப்பெண் மருத்துவர். இவன் அறிமுகம் செய்தவுடன், தலையசைத்து தமிழின் உடல் நிலையை பற்றி விளக்கினார்.
“மார்னிங் எதுவும் சாப்பிடாம வேலைக்கு போயிட்டாங்க. அதுமட்டுமில்லாம, இன்னிக்கு பீரியட்ஸ் ஃபிரஸ்ட் டே போல. அதான் ரொம்ப வீக்காகி, மயங்கிட்டாங்க. டிரிப்ஸ் ஏத்துனதும் நார்மல் ஆயிட்டாங்க. கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்.”
அவன் முகம் அப்போதும் தெளியாததை கண்டு, சகஜமான குரலில் ஆறுதல் கூறினார். “டோன்ட் வொரி. எல்லா பொண்ணுங்களுக்கும் வர பிரச்சனை தான் இது. சில பேருக்கு வாந்தி வரும், சில பேருக்கு இந்த மாதிரி மயக்கம்னு இருக்கும். நல்லா சாப்பிட குடுங்க. மார்னிங் டிபன் மட்டும் எப்போவுமே ஸ்கிப் பண்ணாம பார்த்துக்கோங்க. ஓகே…”
சொல்ல வேண்டியதை முடித்ததும் டாக்டர் நடக்கத் துவங்க, “தாங்க்ஸ் டாக்டர்” என கூறி உள்ளே சென்றான்.
அங்கே பெரிய அறையில் பல தடுப்பகளை கொண்டு இருக்க, அதில் தமிழை தேடி சென்றான் அவள் கணவன். அவனை கண்டதும் என்ன செய்வது என அறியாமல் திருதிருவென முழித்தாள் தமிழழகி. எப்போதும் வேலை செய்து சுற்றி கொண்டிருப்பவளை கையில் டிரிப்ஸுடன் கண்டவன், ஒரு மாதிரி ஆகிவிட்டான்.
என்னவென்று அவனால் முழுதாக உணர இயலவில்லை. அவளின் அருகில் சென்று, “ஏதாவது சாப்பிடறியா?” என்று கேட்டான் கட்டையான குரலில். “இல்ல, இப்போ தான் லைம் ஜுஸ் குடுத்தாங்க… குடிச்சேன்” என அமைதியாக பதிலளித்தாள் தமிழ்.
டிரிப்ஸ் ஏறி முடிந்ததும், பில் கட்டிவிட்டு கால் டாக்சி பூக் செய்து, தமிழை அதில் வர சொல்லி, இவன் பின்னாலயே சென்று வீடு போய் சேர ஒரு மணி ஆகியது!
வீட்டிற்கு வந்ததும் தான் உணர்ந்தனர், இருவரின் சாப்பாட்டு பையும் அவரவர் வங்கியில் இருப்பதை. வீட்டில் இருந்த சாப்பாடை இருவருமாக பங்கிட்டு சாப்பிடலாம் என்றால், தமிழ் சாப்பாடே வேண்டாம் என்றாள்.
அதேல்லாம் கேட்பானா செழியன்! ஐந்தே நிமிடத்தில் இரண்டு தட்டில் சாப்பாடு ரெடியாக இருந்தது. வலது கையில் டிரிப்ஸ் ஏற வென்ஃபிளான் போட்டிருந்ததால் சாப்பிட தமிழ் கஷ்டப்பட, அடுத்த நொடி ஒரு கவளை சோறு செழியனின் கைகளால் தமிழழகியின் வாயில் அடைக்கப்பட்டிருந்தது!
கண்களை அகல விரித்து அவன் செய்கையையும், வாயில் இருந்த உணவையும் ஒன்றன் பின் ஒன்றாக சுவைத்துக் கொண்டிருந்தவளை கவனிக்காமல் அவன் பாட்டிற்கு பேசினான் செழியன்.
“காலையில நான் தான் சாப்பிடாம லூசு மாதிரி போனேன்னா, நீயும் அப்படி தான் போவியா? டாக்டர் காலையில மட்டும் சாப்பிடாம இருக்கக் கூடாதுனு சொல்றாங்க. உன்கிட்டயும் சொன்னாங்களா?”
உணவை விழுங்கிக் கொண்டு தலையாட்டலை பதிலாக அளித்தாள் தமிழ். “ஹ்ம்ம்ம், உடம்பு முடியலைனா லீவ் போட்டிருக்கலாம்ல? ஏன் கிளம்பிப் போன இன்னிக்கு?”
“இல்ல, பேங்க் போனதும் திடீர்னு முடியாம போச்சு.”
“சும்மா சொல்லாத! உனக்கு ஏன் இப்படி ஆச்சுனு டாக்டர் சொல்லிட்டாங்க. எப்போவுமே இப்படி தான் இருக்குமா? எனக்கு இதை பத்தியெல்லாம் தெரியாது. அம்மா சில டைம் முடியலைனு படுத்துப்பாங்க. அவ்வளோ தான். மத்தபடி இப்படி மயங்கி விழுந்ததுலாம் இல்ல…”
இதைப்பற்றி அவள் தந்தையிடமே பேசாத போது, செழியனிடம் வாய் திறக்க முடியவில்லை தமிழால். மாதவிடாய் பற்றி பெண்கள் இன்னமும் தங்கள் வீட்டு ஆண்களிடம் இயல்பாக பேசுவது இல்லையே! ஆனால், அவள் கூச்சப்படுவதை புரிந்துக் கொண்டு, அதற்கேற்றவாரு பேசினான் செழியன்.
“இங்க நாம ரெண்டு பேரு மட்டும் தான். முடியலைனா என்கிட்ட சொல்லு. நீ ஏதோ நேத்து நடந்ததுல கோபமா இருக்கன்னு நினைச்சுட்டு இருந்தேன். அதான் காலையில அப்படி திட்டிட்டேன். சாரி….”
இரண்டு குலோப் ஜாமூனால் காதுகளை அடைத்தது போன்று ஜீவ்வென்று இருந்தது தமிழுக்கு. அதே நேரம் தன் பங்கு மன்னிப்பையும் கேட்க தவறவில்லை.
“இல்ல என் மேல தான் தப்பு. நேத்து பண்ணதை நினைச்சுட்டு தூங்கினேன். காலையில லேட் ஆகிடுச்சு. அப்புறம், இந்த மாதிரி டைம்ல, வயிறு வலியும் இடுப்பு வலியும் தான் ஜாஸ்தியா இருக்கும். மத்தப்படி ஒண்ணுமில்லை….”
அவன் கேட்டதினால் கூறியவள், பின் வாயை அவன் ஊட்டிவிடும் போது சாப்பாடு வாங்கிக் கொள்ள மட்டும் திறந்தாள். சாப்பிட்டதும், நேராக அவளின் அறைக்குச் சென்று படுக்க சொன்னான் செழியன்.
அவன் சொன்னவாரே செய்தவள், உடலில் சக்தியற்று இருந்தாலும், மனதில் பல மடங்கு சக்தி ஏறியிருந்தது. செழியன் தானும் சாப்பிட்டு, அவளின் அறைக்குள் எட்டிப் பார்த்தவன், தமிழ் அலைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தவன் கோபமாக முறைத்து கூறினான்.
“உன்னை ரெஸ்ட் எடுன்னு தான சொன்னேன்.”
அவன் அழுத்தமான குரலில் ஆழமான சிந்தனையில் இருந்து விடுப்பட்ட தமிழ், அவனுக்கு அவளின் செல்போனை காட்டி பேசினாள். “பேஸ்புக்ல என்னோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ்ஸ ‘மேரிட்டு’னு மாத்தினேன். அவ்வளோ தான்! போதுமா?”
ஒய்யாரமாக கூறியவளை நோக்கி அவனை அறியாமல் சிரித்தவன், இதையே இப்போது தான் செய்கிறாளா என எண்ணமிட்டபடி வெளியேறினான். 
அடுத்த இரண்டு நாட்கள் செழியன் அவன் மனைவியை தங்கத் தட்டில் தாங்கவில்லை என்றாலும் கூட, மண் பானையாய் உடைக்கவுமில்லை. அவனால் முடிந்த மட்டும் நன்கு கவனித்தான். தமிழழகியின் பெற்றோருக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் வருந்துவார்கள் என உணர்ந்து, அவன் அன்னையிடம் தமிழின் உடல்நிலை பற்றி கூறி, அவளுக்கு கொடுக்க வேண்டிய உணவு வகைகளாக செய்துக் கொடுத்தான். இரண்டு நாட்களில் தமிழும் வேலைக்கு செல்ல துவங்கினாள்.
சசிகலா தான் அங்கே வருவதாக கூற, அதை மறுத்துவிட்டாள் தமிழழகி. “எனக்கு ஒண்ணுமில்ல அத்தை. நீங்க அங்க அக்காவயும் பாப்பாவயும் பார்த்துக்கோங்க.”
இந்த கவனிப்பு உபசரிப்புக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல, வெள்ளியன்று ஒரு குறுஞ்செய்தியை தமிழின் மொபைலுக்கு அனுப்பிவிட்டு, தன் அறையில் சமத்து பிள்ளையாக அமர்ந்துக் கொண்டான் அவள் கணவன்.
குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு நேராக அவன் முன் போய் நின்றவள், ஆச்சரியமாக அவன் முகத்தை பார்க்க, புருவத்தை தூக்கி இறக்கி என்னவென்று வினவினான் செழியன். “நீங்க அனுப்பின மேசேஜ் வந்துச்சு….”
உவகை பொங்கிய குரலில் கூறியவளை கண்டு, “ஹ்ம்ம் டிக்கேட் கிடைக்காம படத்துக்கு போகாம இருக்கறது எவ்வளோ கொடுமைன்னு எனக்கு தெரியும். அதான், உனக்கு புக் பண்ணி கொடுத்தேன். உன் பிரண்ட்ஸ் யாரையாச்சும் கூட்டிட்டு போ…” என்று பெரிய மனித தோரணையுடன் பேசியவனை பார்த்து அழகாக சிரித்தாள்.
அலைப்பேசியை இறுக்கிப் பிடித்து கொண்டு, “எனக்காக தான் புக் பண்ணிங்களா??” என கேட்டாள் தமிழ். “ஆமா, ஏதோ சின்ன பொண்ணு திரும்ப அழ வேணாமேன்னு செஞ்சேன்.”
போனால் போகிறதென்று செய்தது போல் கூறினாலும், அப்படியில்லை என்பது தமிழுக்கு நன்றாகவே புரிந்தது.
‘இந்த டையலாக்கு ஒண்ணும் குறச்சல் இல்லை… பெரிய மௌன ராகம் கார்த்திக்னு நினைப்பு!’ உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்க மறுநாள் ஸ்வேதாவுடன் ஆர்பாட்டமாக கிளம்பினாள் தமிழழகி.
ஆனால், படம் பெரிதாக சொல்லுக்கொள்ளும்படி இல்லை. அது தமிழுக்கு வருத்தமே… வழக்கம் போல் ஒரு நல்ல மசாலா படம்! அபினவ்வின் வழக்கத்தை கொண்டிருந்தது. இதை வைத்து செழியன் கிண்டல் செய்வானோ என பார்த்தால், அவன் அதை பற்றி வாயே திறக்கவில்லை. நேரில் பேசாததற்கு சேர்த்து வைத்து முகநூலில் கலாய்த்தான் நன்றாகவே!
அக்கிண்டலையும் சரி இன்னும் விளையாட்டாக இருக்கினான் என சிறு மன உறுத்தலுடன் ஒதுக்கப் பழகிக் கொண்டாள் தமிழழகி. அவளுக்கு இப்போது எல்லாம் செழியனே முக்கியமாக மனக் கண்ணில் காட்சியளிக்க தோன்றினான்.
அதற்காக தலைவன் அபினவ்வை முழுதாக விட்டுக் கொடுக்க அவள் தயாராகவும் இல்லை. ஆனால், செழியன் முகநூலில் இடும் பதிவுகள் பெரிதாக அவளை பாதிக்கவில்லை, என்பது உண்மை. ஒருவேளை படம் நன்றாக இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இவன் இப்படித் தான் என மனதளவில் அவனை புரிந்துக் கொண்டதுமாக இருக்கலாம்! தங்களுக்குள் பிணைப்பு ஏற்பட்டவுடன் இதை பற்றி தெளிவாக பேசி, ஒரு வரையரை வகுக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தாள்.
இந்த கூத்துக்களும் சில நாட்கள் தான், அதன்பின் ஒரு மாதத்தில் வரவிருக்கும் ‘தலை தீபாவளி’க்காக இருவரும் தயாராக ஆரம்பித்தனர். கேசவனும் வள்ளியும் திருச்சி செல்லும் போது பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்ததாக பட்டாடைகள் எடுத்துக் கொள்ள கூற, மீண்டும் சென்னை திரும்பியவுடன் ஒரு நாள் முழுக்க சுற்றி தங்களுக்கு உடைகள் எடுத்தனர்!
இல்லை இல்லை தமிழ் எடுத்தாள்… ஒரு கடை சென்று அங்கே பிடிக்கவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் மற்றொரு பெரிய கடைக்கு செல்வது என்று அழிச்சாட்டியம் செய்தாள். “ஹே இந்த கடையில நல்லா தான இருந்துச்சு? ஏன் எடுக்கலை??”
“ஹலோ பட்டு சாரி வாங்குறோம். கொஞ்ச கடை ஏறி இறங்குனா ஒண்ணுமாகாது! இங்க இருக்குற மாடல் எல்லாம் நம்ம கல்யாணத்துக்கே வாங்கிட்டேன்.…”
“நீ ஏறு எதுக்கு என்னையும் ஏற வைக்குற? நான் இங்கையே எடுப்பேன்ல? நீ புடவை வாங்குற கலர்ல தான் நானும் சேர்ட் வாங்கனும்னு சொல்றது எல்லாம் ஓவர் சொல்லிட்டேன்.”
“ஏன் வாங்குனா என்ன? இப்போ தான் பசங்களுக்கும் எல்லா கலர்லயும் சில்க் சேர்ட் வருதுல…. சோ, நோ பிராப்ளம்.”
“அதுக்குன்னு நீ பிங்க் கலர்ல சேரி எடுத்தனா நானும் பஞ்சு மிட்டாய் கலர்ல வாங்கனுமா?”
“ஆமா, கண்டிப்பா… அப்போ தான் ஜோடி பொருத்தம் சரியா இருக்கும்!”
“ரொம்ப பண்ற சொல்லிட்டேன்…”
இப்படியாக அடித்துக் கொண்டு அடுத்த கடைக்குள் நுழைந்தவள், அங்கே வண்ணமயமாக இருந்த பட்டுப் புடவைகளில் மூழ்கிவிட, அவள் எதை எடுப்பாளோ என பயந்து பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அவனுக்குமே ஒரே கலரில் பட்டாடைகள் என்பது நெஞ்சில் இனிக்க தான் செய்தது!
ஒரு வழியாக தங்கள் இருவருக்கும் பிடித்த பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் உடைகள் வாங்கிக் கொண்டு கிளம்பலாம் என இருந்த செழியனை முறைத்துப் பார்த்தாள் தமிழழகி.
“நமக்கு மட்டும் எடுத்தா போதுமா? கல்யாணம் முடிஞ்சு முதல் தீபாவளி. ரெண்டு பேர் வீட்டுக்கும் வாங்கிட்டு போலாம் வாங்க…”
‘ஐய்யோ இது வேறயா?’ என வந்தது செழியனுக்கு. மேலும் ஒரு மூன்று மணி நேரம் அக்கடையிலேயெ கழித்து, அள்ள முடியாமல் பைகளை அள்ளிக் கொண்டு வீடு திரும்பினர்.
தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் இருந்த போதே தமிழழகியும் செழியனும் சரிசமமாக ஆவலாக இருந்தனர். தமிழழகி தாங்கள் வாங்கிய ஆடைகளை வீட்டினருக்கு தீபாவளின்று சர்பிரைஸாக கொடுப்பதாக கனவில் மூழ்கியும், அவளால் முடிந்த மட்டும் இனிப்பு வகைகள், பலகாரங்கள் செய்வதிலும் ஆழ்ந்து விட்டாள்.
செழியனோ வேறு விதமாக ஆவல் கொண்டான். அவனின் தலைவன் ரக்ஷன் படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருந்தது. அது போதாதா?ிது தானே உண்மையான தலை தீபாவளி என்று மகிழ்ந்து, திருச்சியில் இருக்கும் தன் நண்பர்களுடன் திட்டங்கள் அப்போதே வகுக்க ஆரம்பித்தான்.
தமிழ் இதை எல்லாம் கண்டும் காணாமலும் இருந்தாள். யாருமே எதிர்பார்க்காதபடி அத்தீபாவளி சிறப்பாக, மிகவும் சிறப்பாக சென்றது!!!

Advertisement