Advertisement

அத்தியாயம் – 17
அடுத்து வந்த வாரத்தில் செழியனுடன் மருத்துவமனை சென்று ஒரு முறை செக்கப்பும் சென்று வந்தாள் தமிழழகி. இவர்கள் சென்ற நேரம், கேசவன் தான் சென்னை வருவதாக கூறினார். சரியென மருத்துவமனையிலிருந்து வந்ததும், தன் தாயாருடன் சமையல் வேலையில் இறங்கினான் செழியன். கிச்சனுக்குள் எட்டிப் பார்வையிட்ட தமிழழகியை பார்த்து சசிகலா என்னவென்று கேட்க, “இப்போவே நல்லா டிரெயினிங் குடுங்க அத்தை. எனக்கு உடம்பு சரியில்லனா இவரு தான் சமைக்கனும்.” என்றாள் நக்கலான தோனியில்.
“கேட்டீங்களா? இவள என்ன செய்ய…”
“உடம்பு சரியில்லனா இதை கூட செய்ய மாட்டியாடா?”
காயை நருக்கிக் கொண்டே சசிகலா கேட்க, கண்கள் செழியனிடம் இருக்க மௌன பாஷை அவனிடம் பேசியபடி தன் மாமியாரிடம் அவனை விட்டுக் கொடுக்காமல் பேசவும் செய்தாள் தமிழ். “அதேல்லாம் நல்லாவே பார்த்துப்பாரு அத்தை! சும்மா சொன்னேன் நானு…”
இவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் கேசவன் தன் மனைவியுடன் வீட்டுக் கதவை தட்டினார். தமிழ் தான் சென்று கதவை திறக்க, அவளின் சிரித்த முகம் பெற்றவர்களுக்கு சிறிது மகிழ்ச்சியை கொடுத்தது. பின்னோடு வந்த செழியனும், சசிகலாவும் அவர்களை அமரச் சொல்லி, நலம் விசாரிக்க சசிகலாவிடம் நன்றாக பேசிய கேசவன் செழியனிடம் தயங்குவது வெளிப்படையாகவே தெரிய, தமிழ் தான் ஆழமாக காயப்பட்டாள்.
“நான் கொஞ்ச நேரம் படுக்கறேன்.” பொதுவாக கூறி, எப்படி தன் தந்தைக்கு புரிய வைப்பது என யோசனையுடன் தன் அறைக்குள் அகப்பட்டாள் தமிழ்.
“சமையல் செஞ்சிட்டு இருந்தேன், கொஞ்சம் இருங்க ரெடி ஆகிடும்.” சசிகலா சமையல் அறைக்குள் எழுந்து செல்ல, வள்ளி அவருடன் சென்றார். தனியாக அமைதியாக அமர்ந்திருந்த கேசவன் அங்கே இருந்த நாளிதழை எடுத்துப் புரட்டத் துவங்க, செழியன் வேறு வழியில்லாமல், டிவி பார்க்கத் தொடங்கினான்.
இதை எல்லாம் அறையில் இருந்த படி பார்வையிட்ட தமிழ், அடுத்த நாளே தன் தந்தையுடன் பேசுவதற்கு வழி வகுத்தாள். அதுவரை ஒரு சில முறை, செழியன் தானாக முன் வந்து பேசியதற்கு கேசவன் ஒற்றை வார்த்தையில் பதில் கூறி தன் நிலையை காட்டினார். செழியனும் என்ன செய்வது என அறியாமல், அமைதி காத்தான்.
மறுநாள் தங்களின் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு தந்தையுடன் நடை பயிற்சி என்ற போர்வையில் அவருடன் பேசச் சென்றாள் தமிழ். வந்தது என்னவோ வந்தாயிற்று. ஆனால், பேச வார்த்தைகள் வரவில்லை.
கணவனுக்காக பேசப் போய் தந்தையை அவமதிப்பது போல் எடுத்துக் கொண்டால்? இவளின் யோசனை படிந்த முகத்தை கண்டு கேசவனே என்னவென்று கேட்க, அதன் மேல் அமைதி காக்காமல் மனதை கொட்டினாள் தந்தையிடம்.
“ஏன்பா அவர்கிட்ட சரியா பேச மாட்டேன்றீங்க?”
இவ்வளவு நேரடி தாக்குதலை கேசவன் எதிர்பார்க்கவில்லை போல… ஆச்சரியம் வடிந்தவுடன் பதிலுரைத்தார்.
“பின்ன எப்பவுமே உன்னை ஏதாவது டார்சர் பண்ணிட்டே இருக்காரு. வீட்டை விட்டு கிளம்பற அளவுக்கு உன்னை கொடுமை படுத்தி இருக்காரு… எப்படி பேச சொல்ற?”
டார்சர், கொடுமை போன்ற வார்த்தைகள் தமிழை கடுமையாக தாக்கின. என்ன அப்பா செழியனை பற்றி இப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறாரா?!
“என்ன நடந்ததுனு தெரியாம நீங்களா கொடுமை படுத்தினாரு முடிவு பண்ணிட்டீங்களா? ரொம்ப சந்தோஷம்! ஒரு பிரச்சனை இருந்தது உண்மை தான்பா… ஆனா, வீட்டை விட்டு போகனும்னு முடிவு செஞ்சது நான் தான். அப்போ கூட என்னை போக வேணாம்னு எவ்வளோ சொன்னாரு தெரியுமா?
நான் தான் கேக்கலை! அம்மா கோச்சிட்டு பாட்டி வீட்டுக்கு போறப்போ கூட, நீங்க அந்த மாதிரி சொன்னதில்லை… ஆனா, நான் போறது பிடிக்காம என் கூடவே பைக் எடுத்துட்டு வந்தாரு தெரியுமா? நான் தான் டிரைவரை ஸ்பீடா போக சொல்லி இப்படி ஆகிடுச்சு!
எல்லாம் என்னோட நேரம்… அது மட்டுமில்லாம எங்களுக்கு யாரு கார் குடுத்து ஹெல்ப் பண்ணாங்க தெரியுமா?”
தொடர்ந்து ரக்ஷனை பார்த்தது, ஆனால் அது செழியனை பெரிதாக பாதிக்காதது, அவளை முன் நிறுத்தி எல்லாவற்றையும் செய்தது என அடுக்கிக் கொண்டே சென்று கடைசியில் மூச்சு முட்டி நின்றாள் தமிழ்.
கேசவன் வாய் அடைத்து தான் நின்றார் உண்மையாக. அவருக்கு பேச்சே எழவில்லை சிறிது நேரம்… அவரின் மௌனத்தில் நிறைய பேசி அப்பாவை காயப்படுத்திவிட்டோமோ என பயந்துப் போனாள் மகள்.
“சாரிப்பா ரொம்ப பேசிட்டேனா? உங்கள…”
“சே சே அப்படி இல்லடா… தலை தீபாவளிக்கு சென்னைக்கு போக மாட்டேன்னு சொன்ன பொண்ணு தானா எனக்கே டவுட் வந்துடுச்சு அதான்…”
புன்னகையுடன் அப்பா கூறியதை கேட்ட தமிழ், தானும் சிரித்துக் கொண்டே பதிலளித்தாள். “அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்! இப்போ கிரிஸ்மஸ்ஸே வர போகுதுபா…”
“அது சரி! நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும்டா. நான் செழியன் கிட்ட பேசறேன். போதுமா?”
“ஹ்ம்ம் டபுள் ஓகே”
தந்தை பேசுவதாக கூறவும், எல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக மாடிப்படி இறங்கினாள். ஆனால், செழியனிடம் தனியாக பேசும் போது எடுத்தவுடன், கேசவன் மன்னிப்பை வேண்ட அவன் பதறிப் போனான்.
“நீங்க ஏன் மாமா சாரி எல்லாம் கேட்டுட்டு? தப்பு என் மேல தான், உங்க கோவம் புரியுது. இனிமே கண்டிப்பா இப்படி நடக்காம பார்த்துக்கறேன்.”
“இல்ல, அழகி தான் என் கிட்ட வந்து நீங்க எப்படி பேசாம இருக்கலாம்னு கேட்டா… நீங்க ரக்ஷனை மறந்துட்டு அவளை பார்த்துக்கிட்டதும் அவளுக்கு ஒரே சந்தோஷம். நான் தான் புரிஞ்சிக்காம கோவமா இருந்துட்டேன்.”
அழகி தன் தந்தையிடம் தனக்காக பேசினாள் என்றவுடன் அவனையும் அறியாமல் செழியனின் மனம் பூரிக்கவே செய்தது. அன்றே மனைவியை தனியாக அறைக்குள் பிடித்து வைத்து, “என்ன மாமாகிட்ட ஏன் பேசலைன்னு சண்டை போட்ட போல?” என்று கேட்க, உடனே மறுத்து பதிலளித்தாள் தமிழழகி.
“நான் ஒண்ணும் சண்டை எல்லாம் போடல…. ஏன்னு கேட்டேன் அவ்வளோ தான்.”
முகத்தை கோணலாக்கிக் கொண்டு பேசிய மனைவியை பார்க்கப் பார்க்க இன்னமும் பிடித்தது செழியனுக்கு. அவளின் முகத்தை பற்றி கன்னங்களில் தன் முத்திரையை பதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
நாட்கள் இவ்வாரே செல்ல, கிருத்துமஸ் பண்டிகை வெள்ளியன்று வருவதால் மூன்று நாட்கள் விடுமுறை வந்தது. “நம்ம ஊருக்கு போலாமா? அத்தையும் பாவம் நம்ம கூட இங்கயே இருக்கறாங்க.”
தமிழ் கேட்டதை மறுக்க இயலாமல் செழியன் ஒத்துக் கொள்ள, வியாழன் மாலையே அவர்களுக்கென வாங்கிய புத்தம் புது காரில் மூவரும் கிளம்பினர். சுவாமிநாதன் ஒரே ஒரு முறை மட்டுமே நடுவில வந்து சென்றார். அப்போதும் ஒரே நாள் தான் தங்கினார். தமிழுக்கு அது வருத்தம் தான், இருந்தாலும் தன் தந்தையிடம் உரிமையாக பேச முடிந்தது போல் மாமனாரிடம் பேசும் துணிவு சுத்தமாக இல்லை.
மீண்டும் சென்னைக்கு திரும்பும் போது தான் பேச வேண்டும், என நினைத்துக் கொண்டாள். எல்லோரும் எதிர்பார்ப்போடு திருச்சியில் காத்திருக்க, தமிழை தான் நலம் விசாரித்து தாங்கினர்.
செழியனுடன் மற்றவர்கள் பேசினாலும் சுவாமிநாதன் அவன் பக்கம் கூட திரும்பவில்லை. அன்றைய பொழுது அவ்வாரே கழிய, மறுநாள் அண்ணனும் தம்பியும் வீட்டுக்கு தேவையானதை வாங்கி வர சென்றிருக்க, தமிழ் தனிஷ்காவுடன் ஐக்கியம் ஆகினாள்.
சசிகலாவும் நதியாவும் சமையலில் மும்முரமாக இறங்கி இருந்த வேலையில், சுவாமிநாதனே வந்து பேச்சை தொடுத்தார் மருமகளிடம். “எப்போமா திரும்ப பேங்க்ல ஜாயின் பண்ணனும்?”
அவரை பார்த்து புன்னகைத்தபடி கூறினாள், “பொங்கல் முடிஞ்சு, பிப்பரவரி மாசம் தான் ஜாயின் பண்ணுவேன் மாமா.”
“ஹோ சரிமா….”
சில நிமிடங்கள் அவள் குழந்தையுடன் விளையாடுவதை பார்த்துவிட்டு பின்பு மீண்டும் தொடர்ந்தார். “நீ சந்தோஷமா தானமா இருக்க?”
தமிழே ஒரு நிமிடம் ஆச்சரியம் பொங்க, தன் மாமனாரை பார்த்தாள். “நான் சந்தோஷமா தான் மாமா இருக்கேன். எந்த பிரச்சனையும் இல்ல…”
‘எந்த பிரச்சனையும்’ என்பதில் அழுத்தம் கொடுத்து அவள் சொல்லிய விதத்தில், சுவாமிநாதனின் முகமும் அகமும் மலர்ந்து விகசித்தது. அதே உற்சாகத்துடன் கூறினார். “ஓகே மா… சந்தோஷம்.”
கடைக்கு சென்றுவிட்டு அப்போது தான் கை நிறைய பைகளுடன் மாறனும் செழியனும் உள்ளே நுழைந்தனர். “அம்மா இங்க வா, கேட்டது எல்லாம் வாங்கி வந்திருக்கேன்.”
மாறன் குரல் கொடுக்க, பதில் குரல் அதிகாரமாக வந்தது அவன் அன்னையிடமிருந்து அல்ல, மனைவியிடம் இருந்து! “அங்க வைச்சு என்ன பண்ண முடியும்? இங்க கிச்சனுக்கு எடுத்துட்டு வாங்க….”
இதை கேட்டு மற்றவர்கள் சிரிக்க, மாறனோ தாவி வந்த தனிஷ்காவை மீண்டும் தமிழிடம் விட்டு சலித்துக் கொண்டு சென்றான். “உங்க பாட்டியை கூட சமாளிச்சிடலாம். உங்க அம்மா இருக்காளே!”
செழியன் தன் தந்தை இருந்ததால் பேசாமல், வாங்கி வந்த பைகளை எடுத்து வைப்பதில் கவனம் செலுத்த, வெகு நாட்கள் கழித்து பேசிய தந்தையின் குரலில் அவன் வேலை அப்படியே நின்றது.
“செழியா என்னோட பைக் சர்வீஸ்க்கு குடுத்துருக்கேன். ஈவ்னிங் போய் எடுத்து வந்திடறியா?”
வீட்டில் யாராலுமே நடப்பதை நம்ப முடியவில்லை. தமிழே ஒரு நிமிடம் திகைத்து, பின் தன் மாமனாரின் கோபம் வற்றியதை உணர்ந்து இன்னமும் பதில் கூறாமல் அதிர்ந்து நின்ற கணவனை தட்டி இவ்வுலகிற்கு கொண்டு வந்தாள்.
“ஹா எடுத்து வந்திடறேன்பா…” மண்டையை நன்றாக உருட்டி செழியன் கூறியதை தலையசைத்து ஏற்று தன் அறைக்குச் சென்றார் சுவாமிநாதன். மாறன், நதியா, சசிகலா எல்லாம் கிச்சனில் இருந்து வந்து, கேள்விகளாக செழியனிடம் தொடுக்க, தமிழ் தான் பதில் கூறினாள்.
“ஐய்யோ அவருக்கு ஒண்ணுமே தெரியாது. என்கிட்ட மாமா சந்தோஷமா தான இருக்கனு கேட்டாரு. நான் ஆமா மாமா, எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னேன். அதான் இவரு கிட்ட பேசிட்டாரு போல…”
தமிழ் கூறியதை கேட்டு எல்லோரும் மகிழ்ந்து மீண்டும் உள்ளே செல்ல, அவர்கள் சென்றனரா என கூட பார்க்காமல் செழியன் ஆழ்ந்த முத்தத்தை தன் மனைவின் நெற்றில் வைத்தான். “ஐய்யோ யாராவது பார்க்க போறாங்க…”
தமிழ் தான் சலித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவசரமாக. செழியனுக்கு அன்று முழுக்கவே தன் தந்தை பேசிய சந்தோஷம் மனதில் இனித்தது. மாலையானதும் தந்தையின் ஹோன்டா ஆக்டிவாவை முதல் வேலையாக சர்வீஸில் இருந்து எடுத்து வந்தான்.
அன்றிரவு படுக்க வந்த செழியனை ரசனையாக பார்த்து கேள்வி எழுப்பினாள் தமிழ். “என்ன அப்பா பேசினதுல ஒரே ஹாப்பி தான் போல?”
“ஆமா பின்ன இருக்காதா! எத்தனை நாள் அப்பா பேசலைன்னு ஃபீல் பண்ணிருப்பேன். இது கூட உன்னால தான். நீ சந்தோஷமா இருக்கேன்னு சொன்னதுனால தான் அப்பா என்கிட்ட பேசினாரு.”
தமிழை அணைத்துக் கொண்டு கூற, அவன் எதிர்பாரா விதமாக கேள்வி கேட்டாள் அவன் மனைவி.
“இந்த கொஞ்சல்ஸ் எல்லாம் இருக்கட்டும், திரும்ப நமக்குள்ள ரக்ஷன், அபினவ் வைச்சு சண்டை வராதுல??”
“அதேல்லாம் வராதுடி. எனக்கு எப்படி ரக்ஷனை பிடிச்சிருக்கோ, அந்த மாதிரி உனக்கு அபினவ் பிடிச்சிருக்கு…. அதுமட்டுமில்லாம நான் ஏன் உன்கூட திரும்ப சண்டை போட போறேன்?”
“நான் ரக்ஷனை ஏதாவது கிண்டலடிச்சா கூட சும்மா இருப்பீங்களா?”
“ஹ்ம்ம்ம் ஆமா… நீ தான கலாய்க்கர… அதனால ஓகே!”
“அப்போ வேற யாராவது கிண்டல் பண்ணா?”
“அம்மா தாயே மறுபடியும் அந்த மாதிரி யார் கூடயும் சண்டை போட மாட்டேன். போதுமா?”
“ஹ்ம்ம்ம் ஓகே!”
நிம்மதியுடன் கண்களை மூடி உறக்கத்தை தழுவிய தமிழை பார்த்து புன்னகைத்தபடியே, தன் உறக்கத்தை பறி கொடுத்தான் செழியன்!

Advertisement