Advertisement

அத்தியாயம் – 14
மாறனிடம் பேசி முடிந்ததும் பொறுக்க முடியாமல், மீண்டும் அந்த எமெர்ஜென்சி கதவின் வழியே ஏதாவது தெரிகிறதா என பார்த்தவனை, கண்டு ஒரு செவிலியர் கத்தினார்.
“சார் கையில என்ன ரத்தம் வருது?”
செவிலியரின் பார்வை சென்ற இடத்தில் தானும் பார்த்தவன், தன் வலது முழங்கையில் பட்டிருந்த காயத்தின் வீரியத்தை அப்போது தான் கவனித்தான். அதுவரை ஏதோ கீறி விட்டது, சரியாகிவிடும் என்ற நினைப்பில் இருந்தான். இப்போது பார்த்தால், இரண்டு இடங்களில் பெரிதாக ரத்தம் வெளியேறி வீங்கியிருந்தது.
அச்செவிலியர் அவனிடம் அனுமதி எல்லாம் கேட்கவில்லை. முதல் உதவி செய்யும் பெட்டியை உடனே எடுத்து வந்து அவன் காயத்தை சுத்தம் செய்து, கட்டுப் போட ஆரம்பித்தார்.
“இப்படியே வா சார் விடுவீங்க? கொஞ்சம் ஆழமா பட்டுயிருந்தா தையல் போட வேண்டியிருக்கும். உங்களுக்கு வலிக்கலயா?”
“இல்ல ஏதோ சின்ன அடின்னு நினைச்சேன். என்னோட வைப்புக்கு பெருசா ஒண்ணுமில்லலை??”
குரலே அதை மறுத்து சொல்லேன் என கூப்பாடு போட்டது. “டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க…. அவங்களுக்கு தான் தெரியும்.”
இவன் காயத்தை மருந்திட்டு, அவர் வேலையை கவனிக்க சென்றார் செவிலியர். சில நிமிடங்களிலேயே, டாக்டரும் வெளியே வந்து இவனை அறைக்கு அழைத்துச் சென்றார்.
“உங்களுக்கு என்னாச்சு?”
“அது கார் கதவை ஓபன் பண்ணும் போது உடைஞ்ச கண்ணாடி வழியா கை விட்டேன். கீறிடுச்சு! அது ஒண்ணுமில்ல சார். தமிழ் எப்படியிருக்கா??”
“அவங்களுக்கு ரைட் ஹேன்ட்ல ஃபிரேக்சர் ஆகிருக்கு. இப்போ ஸ்டீல் பிளேட் பிக்ஸ் பண்ண ஓப்ரேஷன் செஞ்சாகனும். மத்தபடி பாதத்துல ஒரு மூணு தையல் போடுற அளவுக்கு அடிப்பட்டுருக்கு. அப்புறம் நெத்தியில ரெண்டு தையல் போட்டிருக்கோம்.”
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு சிறிது நேரம் இடைவெளி விட்ட டாக்டரிடம் மேலே என்ன கேட்பது என தெரியவில்லை செழியனுக்கு. ஒவ்வொன்றாக அவர் அடுக்கவும், அவ்வளவு நேரம் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் எட்டிப் பார்த்தது. கால், கை, நெற்றி என கட்டுக்களுடன் படுத்துருக்கும் மனைவியை அவனால் கற்பனை கூட செய்ய முடியவில்லை….
“ஹே ஏன் அழறீங்க? ஒண்ணுமில்ல எல்லாம் சரியாகிடும். உங்க வீடு செங்கல்பட்டு தானா?”
“இல்ல டாக்டர். சென்னை. நுங்கம்பாக்கத்துல இருக்கோம்…. நாங்க இப்போ சென்னைக்கு ஷிப்ட் பண்ணலாமா? ஒண்ணும் பிராப்ளம் இருக்காதே?”
“உங்களுக்கு வேணும்னா ஷிப்ட் பண்ணலாம். நோ பிராப்ளம்.”
டாக்டரிடம் கேட்டுக் கொண்டு ஒரு முறை தூரத்தில் இருந்து தமிழை கண்களால் நிரப்பிக் கொண்டு, மீண்டும் மாறனை அழைத்தான் செழியன். மணி அப்போதே பத்தரையை தாண்டியிருந்தது.
மாறனோ சுவாமிநாதனும், சசிகலாவும் தன்னுடன் வந்து கொண்டிருப்பதாக சொல்லவும், ஆயாசமாக போனது செழியனுக்கு. தந்தையும் தாயும் ஒவ்வொரு கேள்வியாக அடுக்க, தான் பதில் கூற முடியாமல் திக்கி திணறுவதை போல ஒரு காட்சி மனக்கண்ணில் மின்னி மறைந்தது.
“ஹே இப்போ நாங்க வேற சென்னையில இருக்குற ஹாஸ்பெட்டல் ஷிப்ட் பண்ண போறோம். நீ நேரா அங்க வந்துரு.”
மருத்துவமனையின் பெயரைக் கூறி, தமையனிடம் அவளுக்கு எலும்பு முறிவு என்பதை மட்டும் பகிர்ந்து, போனை வைத்தான் செழியன்.
பின் வேலைகள் அடுக்கடுக்காக வளர்ந்தன. செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது, சென்னையில் இருக்கும் மற்றொரு மருத்துவமனையில் பேசி தமிழின் நிலையை விளக்கி, அங்கே அனுமதிக்க வேண்டினான்.
பின் ஆம்புலன்ஸ்ஸில் ஒருவழியாக தமிழழகியின் அருகில் பயனிக்கவும், அவனின் உணர்வுகளை அவனாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. “அவங்களுக்கு சிடேடிவ் குடுத்துருக்கு. நிறைய அடிப்பட்டதால… சோ, எழுந்துக்க மாட்டாங்க.”
டாக்டர் கூறியது புத்திக்கு எட்டினாலும், மனது அதை ஏற்க மறுத்தது. நினைவு திரும்பியவுடன் வலி தாங்காமல் நிறைய அழுவாளோ? இல்லை அதற்குள் அறுவை சிகிச்சை முடிந்துருக்குமா?? அவனால் ஒன்றுமே சிந்தனை செய்ய இயலவில்லை….
ஒரு நிலை மேல் பையித்திமே பிடித்துவிடும் போல தோன்றியது. கூட யாராவது ஆறுதல் சொல்ல இருந்தால் தேவலை! யாருமற்று தமிழுடன் மட்டும் நேரம் செலவு செய்வது தான் கொடுமையாக இருந்தது. ஒரு வழியாக அவர்கள் சென்னை மருத்துவமனையை அடைய, தமிழழகியை உடனே அனுமதித்து நாளை காலையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொன்னார்கள்.
நேரம் இரவு பன்னிரெண்டை கடந்திருந்தது தற்போது. அறையின் வெளியே நின்றிருந்த போது, மாறன் அழைத்தான் அலைப்பேசியில். மருத்துவமனைக்கு வழி கூறிவிட்டு, தமையனுக்காக காத்திருந்த போது தான் அவனின் மாமனார், மாமியார் இதை சொல்லவே இல்லையே என பயம் நெஞ்சு முழுக்க பரவியது.
நடுநிசியில் அழைக்க முடியாது என்பதை உணர்ந்து, இப்போது பார்க்க வேண்டியது தமிழை தான் என எண்ணிக் கொண்டிருந்த வேளையில் அவன் பெற்றோர்களும், அண்ணனும் வந்து சேர்ந்தனர்.
அவன் நினைப்பை பொய்யாக்காமல், ஆளுக்கொன்றாக கேள்விகளை அடுக்க, செழியன் ஒரு நிமிடம் திணறிப் போனான்.
“நான் இப்போ எல்லாத்தையும் சொல்ற மாதிரி இல்ல…. எதுவா இருந்தாலும், நாளைக்கு தமிழுக்கு ஓபரேஷன் முடிஞ்சதும் கேளுங்க.”
செழியனின் வரண்ட குரலும், அழுதுவடிந்த கண்களும், நிலையற்ற தண்மையும் பல கதைகளை கூறியது அவர்களுக்கு. வேறு வழியின்றி அமைதி காத்தனர். செவிலியப் பெண்ணிடம் கேட்டு தமிழழகியை அறையின் வாயிலில் நின்று பார்த்த சுவாமிநாதனுக்கு நெஞ்சமேல்லாம் ஒரு வித வலி மட்டுமே.
செழியனை கல்யாணத்திற்கு வற்புறுத்தி இருக்க வேண்டாமோ என முதன் முறையாக தோன்றியது அவருக்கு. சசிகலாவுக்கு வேண்டுதலை கடவுளிடம் சேர்ப்பதிலேயே நேரம் பறந்தது. நதியா, குழந்தை தனிஷ்காவை பற்றி கேட்ட செழியனுக்கு, அவர்கள் நதியாவின் தாய் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதாக பதிலளித்தான் மாறன்.
யாருக்கும் காத்திராமல் பொழுது விடிய, காலை ஆறு மணி அடித்தவுடன், சுவாமிநாதன் தன் சம்மந்திக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்து, விஷயத்தை பதறாமல் கூறி சென்னைக்கு கிளம்புமாரு சொன்னார்.
போட்டது போட்டபடியே தமிழின் பெற்றோர்களும், பார்வதியும் சென்னைக்கு கிளம்பினர். காலை ஏழு மணியளவில் தமிழழகிக்கு சிறிது முழிப்பு தட்டியது. செவிலியப் பெண் கூறியதால், உடனே  உள்ளே சென்றனர்.
அரை மயக்கத்திலும் வலி சுலீரென்று அங்கங்கே தெறித்தது தமிழுக்கு. அகத்தின் வலி முகத்திலும் பிரதிபலித்தது. வலியுடனே தன் புகுந்த வீட்டாரை பார்த்தவளை, அனைவரும் ஆறுதல் கூறி தேற்ற முயன்றனர்…. அவளின் கணவனை தவிர! அமைதியாக கட்டிலின் பக்கத்தில் நின்றவனை பார்த்ததும், அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது அவளுக்கு!
தமிழின் கண்ணீரை பார்த்ததும், செழியனும் கலங்கிப் போக, மற்ற மூவரும் புரிந்துக் கொண்டு அவர்களுக்கு தனிமை கொடுக்கலாமா என யோசித்த வேளையில் சட்டென்று அவ்விடத்தை விட்டு கிளம்பினான் செழியன்.
குடும்பத்தினர் திகைத்து நிற்க, தமிழழகி வேதனையுடன் கண்களை மூடினாள். சிறிது நேரத்திலேயே அவளை அறுவை சிகிச்சைக்காக அழைத்தும் சென்றனர்.
வீட்டிற்கு சென்று சிறிது இளைப்பாறி விட்டு வருமாறு செழியன் கூற, சுவாமிநாதன் முகத்தை வேறு பக்கம் திருப்பினார் என்றால், சசிகலா ஓபரேஷன் முடிந்தது செல்லலாம் என கூறினார்.
ஒரு பெருமூச்சுடன் நகர்ந்த போது தான், தன் பைக்கை பற்றிய நினைவு வந்தது செழியனுக்கு! நேற்றிரவு உதவி செய்தவன், பைக்கை ஓரமாக விட்டு சாவியை மட்டும் இவனிடம் கொடுத்திருந்தான். இப்போது எப்படி சென்று எடுத்து வருவது?
திகைத்து நின்ற தம்பியை பார்த்து என்னவென்று கேட்டான் மாறன். “இல்ல பைக் நேத்து ஆக்சிடன்ட் ஆன இடத்துலயே இருக்கு… அதான், எப்படி எடுத்திட்டு வரலாம்னு யோசிக்கிறேன்.”
“சாவி இருக்குல? குடு நான் எடுத்துட்டு வரேன்.”
“நேத்து தான் நைட்டெல்லாம் கார் ஓட்டிட்டு வந்த? உன்னால முடியுமா??”
“அதேல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ குடு.”
சாவியை செழியனிடம் வாங்கிக் கொண்டு, பெற்றோர்களிடம் விஷயத்தை கூறிவிட்டு நகர்ந்தான் மாறன். வேகமாக நேரம் அதன்பின் பறக்க, கேசவன், வள்ளி, பார்வதி மருத்துவமனை வந்து சேர்ந்தனர். யாரும் அறுவை சிகிச்சை முடியும் வரை பேசவே இல்லை. முடிந்தவுடன் தூரத்திலிருந்து மயக்கத்தில் உடம்பின் பல இடங்களில் கட்டுக்களுடன் படுத்து இருந்த தமிழை பார்த்தவுடன் இதற்காகவா காத்திருந்தோம் என மாய்ந்து போனார் கேசவன்.
ஒரு சண்டையில் தமிழ் திருச்சி கிளம்பும் போது இந்த விபத்து நடந்தது என்பது மட்டும் கூறப்பட்டது செழியனால் எல்லோருக்கும். இம்முறை கேசவனுக்கு நிறையவே கோபம் வந்தது செழியன் மேல். ஆனால், அதையும் வெளிக்காட்டாமல் பெண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்.
ஓபரேஷன் நல்லபடியாக முடிந்ததும் செழியன் தன் வீட்டிற்கு கிளம்பினான். யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. அவன் செல்வதே தமிழின் பொருட்கள் அடங்கிய பையையும், அவளின் மற்ற உடமைகளையும் அவனின் அறைக்கு மாற்றவே!
இவ்வளவு நாட்கள் கழித்தும், தாங்கள் பிரிந்திருப்பது தெரிந்தால் இருவரின் பெற்றோர்களும் வருந்துவர். அதனால் சீக்கிரமாக அனைத்தையும் மாற்றியமைத்து மீண்டும் மருத்துவமனைக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு ஓடினான்.
வழியில் நதியா அழைத்து தமிழின் நிலை பற்றி கேட்டறிய, சரியாக பதிலளிக்காமல் இரண்டொரு வார்த்தைகளில் முடித்து கொண்டான் செழியன். நதியாவிற்கு என்ன பிரச்சனை என்பதும் தெரியாததால் அவளும் பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டாள்.
முழுதாக மயக்கத்தில் இருந்து வெளியே வர, மாலையானது தமிழுக்கு. மீண்டும் வலி, வலி, வலி அது மட்டுமே!!! யாரிடமும் எதுவும் வாய்விட்டு பேசவில்லை அவள். செழியனும் அப்படியே இருந்ததில் மிகவும் நொந்து போயினர் அனைவரும்.
வள்ளியை மட்டும் தமிழுடன் இருக்க விட்டுவிட்டு, எல்லோரும் செழியனின் வீடு சென்றனர். “மாறா நான் ஹாஸ்பெட்டல் கிளம்பறேன். நீ இங்க பார்த்துக்கோ….”
“ஹே அங்க ஒருத்தர் தான் தங்க முடியும். தெரியாதா உனக்கு?”
“தெரியும்…. ஆனா என்னால இங்க இருக்க முடியாது. ப்ளீஸ், அங்கயே இருந்துக்கறேன்.”
இறுகிய முகத்துடன் சொன்ன செழியனை மாறனால் துளியும் புரிந்துக் கொள்ள இயலவில்லை. அதன்பின், ஒரு வாரமும் இப்படியே நகர்ந்தது இரு வீட்டாருக்கும்.
செழியன் வங்கியில் விடுப்பு எடுத்துருக்க, மாறன் மட்டும் திருச்சி சென்றிருந்தான்.
வீட்டில் பெரியோர்கள் தமிழை ஆள் மாற்றி ஆள் மாற்றி பார்த்துக் கொண்டனர். தமிழழகியின் மௌனத்தையும், செழியனின் மௌனத்தையும் தான் யாராலும் களைய முடியவில்லை. சரி அவர்களுக்குள்ளாக பேசிக் கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை!!!
நாள் முழுக்க ஒரே அறையில் இருந்தாலும், ஒரு வார்த்தையும் பகிர்தல்? ஹூஹூம் இல்லவே இல்லை. அவளின் பெட்டை அட்ஜஸ்ட் செய்வது, உணவு எடுத்து வருவது, மாத்திரை எடுத்து தருவது என எல்லாம் செய்வான் செழியன். ஆனால், கண் பார்வை பரிமாற்றல் நிகழ்ந்தாலும் உடனே அதை விலக்கிக் கொள்வது வாடிக்கையாக போனது இருவருக்கும்.
தன்னால் தான் எல்லாம் தமிழுக்கு இவ்வளவு கஷ்டம் என்பதில் செழியனுக்கு குற்ற உணர்ச்சி கொள்ளாமல் கொன்றது! அதுவே அவன் இறுகிய மனதுடன் உலாவியத்திற்கு முற்றும் முதலுமான காரணம்.
தமிழுக்கு உடல் வலியுடன் கூடிய மனத்தின் வலிகள் பல. அதை ஒட்டிய யோசனையில் அவள் ஆழ்ந்திருந்தாள். இவர்கள் பேசிக் கொள்ளாததை எல்லோரும் கவனிக்க தான் செய்தனர்.
கவனித்தது மட்டுமின்றி அவர்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். நாளை தமிழ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறாள். அவளுடன் செழியன் துணைக்கு இருந்ததால், வீட்டில் பெரியவர்கள் மட்டுமே.
சுவாமிநாதன் தான் பேச்சை துவக்கினார் கேசவனிடம். “நாளைக்கு தமிழ் டிஸ்சார்ஜ் ஆனதும், சசி இங்க இருந்து பார்த்துக்கறேன்னு சொல்றா…. உங்களுக்கு ஓகே தான சம்மந்தி?”
“இங்கயா??? நாங்க அவள எங்களோட திருச்சிக்கு கூட்டிட்டு போலாம்னு இருந்தோம்.”
கேசவன் கூறியதும் ஒரு நிமிடம் மௌனம் சூழ்ந்தது அந்த இடத்தில்.
“நீங்க தமிழ்கிட்ட பேசிட்டீங்களா இதை பத்தி?”
சசிகலா கேள்விக்கு கேசவனே பதில் அளித்தார் வருத்தத்துடன்.
“எங்க எதுவுமே பேச மாட்றா… எப்படியும் மூணு மாசத்துக்கு தமிழால பேங்குக்கு போக முடியாது. மெடிகல் லீவ் தான எடுக்க போறா, அதான் அங்க கூட்டிட்டு போகலாம் யோசிச்சோம்.”
“சரிதான்… இங்க இருந்தா மேல பிரச்சனை தான் வளரும். அங்கயே இருக்கட்டும். பிரிஞ்சு இருந்தா தான் இவனுக்கும் புத்தி வரும். அவன் என்ன தப்பு பண்ணி இருந்தாலும், அதுக்காக நான் சாரி கேட்டுக்கறேன் சம்மந்தி.”
“ஐய்யோ எதுக்கு நீங்க போய் சாரி அது இதுனுட்டு. என் பொண்ணு மேலயும் தப்பு இருக்குன்னு நினைக்குறேன். இல்லனா அவ இப்படி ஒரு வாரமா அமைதியா இருக்க மாட்டா. என்கிட்ட ஏதாவது சொல்லிருப்பா….”
சம்மந்திகள் இருவரும் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டு, மறுநாள் மருந்த்துவமனை சென்றனர்.
தமிழின் பொருட்களை எடுத்துக் கொண்டே கிளம்பினர். ஹாஸ்பெட்டலில் இருந்து அப்படியே டாக்சியில் திருச்சி செல்வதாக ஏற்பாடு. ஹாஸ்பெட்டலுக்கு அனைவரும் வந்தவுடன் செழியன் திடுக்கிட்டான். என்னவோ முடிவெடுத்து வந்திருக்கின்றனர் என புரிந்து போனது அவனுக்கு.
டிஸ்சார்ஜ் செய்யும்  முறைகளை அவன் பார்க்க செல்ல, அறையில் இருந்த பொருட்களை பெரியவர்கள் எடுத்து வைக்க துவங்கினர். தமிழ் இதை எதையும் மனதில் ஏற்றாமல், சிந்தனையில் உழன்றாள்.
டிஸ்சார்ஜ் செய்யும் பணிகள் முடிந்ததும், செழியன் அறைக்குத் திரும்ப, கேசவன் பைகளை தூக்கிக் கொண்டு, வள்ளியை தமிழை நடத்தி கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்.
“வரேன் மாப்பிள்ளை…” அண்ணியமான குரலில் மாமனார் விடைபெறுவதை ஒரு நிமிடம் திகைத்து பார்த்தவன், பின் விஷயத்தை புரிந்துக் கொண்டு அறையின் கதவை அடைத்தான் அவசரமாக.
“தமிழை கூட்டிட்டு எங்க போறீங்க மாமா?”
“திருச்சிக்கு… எங்க வீட்டுக்கு….”
ஒரு நொடி அமைதியாக இருந்த செழியன், பின் விஸ்வரூபம் எடுத்தான்.
“எதுக்கு இப்போ திருச்சிக்கு போகனும்? இங்கயே இருக்கட்டும் மாமா… இதுல நீங்க எதுவும் தலையிடாதீங்க.”
செழியனின் பேச்சை அவன் அன்னையாலேயே பொருத்துக் கொள்ள முடியவில்லை. “என்னடா நினைச்சுட்டு இருக்க? தமிழு இங்க தனியா எப்படி இருப்பா?? ஒழுங்கா நடக்கக் கூட முடியல அவளால.”
“அதேல்லாம் நான் ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன். நான் பேங்க் போகும் போது பார்த்துப்பாங்க வீட்டுல வேலை செய்யுற அம்மா…”
“இது சரிபட்டு வராது மாப்பிள்ளை, நாங்க தமிழை கொஞ்ச நாள் எங்க வீட்டுல வைச்சுருந்து உடம்பை தேத்தி அனுப்பறோம்.”
கேசவன் உறுதியாக கூற, செழியன் அடுத்து பேச வாய் திறக்கும் முன், தமிழ் முந்திக் கொண்டாள். “நான் இங்கயே இருக்கேன்பா!”
அமைதியாக, அழுத்தமாக வந்த சொற்களில் அறையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பெரியவர்களும் சரி, செழியனும் சரி இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை….
அமைதியாக குண்டை போட்டுவிட்டு திறந்த வாய் மூடாமல் நின்றிருந்த செழியனை பார்த்தாளே ஒரு பார்வை!! அது ஆயிரம் கதைகள் கூற, மேலே மேலே வானத்தில் பறந்தான் அவளின் கணவன்….

Advertisement