Advertisement

அத்தியாயம் இருபத்தி ஏழு:

இன்றைய நிகழ்வுகள்

“எங்கே போகலாம்”, என்று கேட்டு கொண்டே ரமணன் காரை எடுக்க……… “அஷ்டலட்சுமி கோயில்”, என்றாள் வரமஹாலக்ஷ்மி.

அதற்கு மேல் அமைதி இருவரிடத்திலும், சென்று சன்னதியில் நின்று………….  கடவுளை வணங்கிய பொழுது………….. அவளையறியாமல் கண்களில் மறுபடியும் கண்ணீர் வழிந்தது.

திரும்பி பார்த்தவன், “இவளை என்ன செய்வது தெரியவில்லையே”, என்று மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டான்.

“போகலாமா”, என்று கேட்டவனிடம், “சரி”, என்பது போல் தலையசைத்தவள் வந்து கார் கதவை திறக்க………….

அவள் முகத்தை பார்த்தவன் அவள் சிறிது மனவருத்தத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவனாக…………. அதை மாற்றும் பொருட்டு,

“இங்கே பீச்ல கொஞ்ச நேரம் உட்காரலாமா”, என்று கேட்ட ரமணனிடம்,

“ஒன்பது மணியாயிடுச்சு, அம்மா இன்னும் காணோம்னு தேடுவாங்க”, என்றவளிடம் பதில் பேசாமல் போனை எடுத்து, ராம் பிரசாத்தை அழைத்தவன்………..

“அண்ணா வீட்லையா இருக்கீங்க, நானும் வராவும் வெளிய வந்தோம். கொஞ்சம் நேரமாகும்ன்னு சொல்ல கூப்பிட்டேன். அப்படியே வீட்ல சொல்லிடுங்க”, என்று சொல்லி தொலைபேசியை வைத்தான்.  

“இப்போ உட்காரலாமா”, என்றான்.

“ம்”, என்று பதில் சொல்லியவளை, “வா”, என்று அழைத்து சென்று அமைதியாக கடலின் அருகில் சென்று  தண்ணீரில் கால் நனைத்தான்.

அவன் முகத்தை பார்த்து, பார்த்து, திரும்பியவளிடம்……….. “என்ன கேட்கணுமோ கேளேன். நீ இப்படி கேட்காம என்னை திரும்பி, திரும்பி, பார்த்தா…………. நீ என்னை ஆசையா பார்க்கிறேன்னு நான் தப்பா நினைச்சிட்டா”, என்று வேண்டுமென்றே சீண்டினான்.

அவன் யுக்தி வேலை செய்ய, அழுகையை நிறுத்தி சண்டைக்கு வந்தாள்.

“டேய் ஏதாவது பேசின, தண்ணில தள்ளி விட்டுவேன்”, என்றாள்.

“என்ன இது…………? இப்படி மரியாதையில்லாம டேய் போட்ட……… வள்ளிம்மா கிட்ட சொல்லிடுவேன்”, என்று விளையாட்டாக மிரட்ட……….

“சரிங்க டேய்ங்க அவர்களே, இல்லையில்லை மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் வெங்கட ரமணன் அவர்களே, அதுவுமில்லை வெங்கி சங்கி மங்கி……… அவர்களே”,   என்று வரிசையாக அவள் கூறிகொண்டே வர………….  

“அம்மா தாயே! நிறுத்து! நிறுத்து! இதுக்கு அதுவே பரவாயில்லை”, என்றான்.

“எது? எது? பரவாயில்லை. நீ என்னை விட்டுட்டு போனதா?”, என்றாள்.

அவள் சீரியஸ் என்றுனர்ந்தவன், “நீ எப்போ கூப்பிட்டாலும் நான் வர்றேன்னுதானே சொன்னேன்”, என்றான் தயங்கியபடியே.

“எதுக்கு நான் கூப்பிடனும். என்னை கேட்டா நீ என்னை கல்யாணம் செஞ்ச. நீயே தானே செஞ்ச. அப்புறம் ஏன் விட்டுட்டு போனே”,

“புரியாம பேசாத பாப்பா! நீ நம்ம வாழ்கையை இப்போ தொடங்க வேண்டாம், கொஞ்சம் நாள் போகட்டும்ன்னு சொன்னே………… நான் செஞ்சேன்”, என்றான்.

“அது நீ என் கூடவே இருந்தா முடியாதா”,

“முடியாது!……………… எப்படி முடியும்? அழகான மனைவி தேவையில்லை, மனைவின்னு ஒருத்தி இருந்தாளே பக்கத்தில வராம இருக்க முடியாது. அப்படியிருக்கறப்போ நான் எப்படி இங்கே இருக்க முடியும்”.

அவனே தொடர்ந்தான், “நீ என்னை ரொம்ப அட்றாக்ட் பண்ணுவ. இப்போன்னு இல்லை, சின்ன பொண்ணுல இருந்தே. உன் இந்த கண்………… கண்ணீர் விட்டா எனக்கு பார்க்க முடியாது. உன்னை பார்த்துட்டே எப்படி என்னால இருக்க முடியும்”.

“கொஞ்சம் நீ என்னை யோசிச்சு பார்க்கணும்” என்றான் வேண்டும் குரலில்.          

“அதுக்காக நீ என் கூட பேசலை, வீட்ல யாராவது கூப்பிட்டா போன் எடுக்க மாட்டீங்க. கல்பனா அண்ணி டெய்லி எத்தனை தடவை கூப்பிடுவாங்க தெரியுமா”, என்றாள்.

“எடுக்கலைன்னா ஏன் அண்ணி கூப்பிடறீங்கன்னு, நான் சண்டை கூட போடுவேன்”.

“எடுக்கலைன்னா போகுது, அட்லீஸ்ட் இதை பார்க்கும் போது நம்ம ஞாபகமாவவது வருமில்லை, அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் மறுபடியும் கூப்பிடுவாங்க”,    

“நான் உன்னை கொஞ்சம் டென்ஷன்ல வச்சிருந்ததால தான் நீ அடங்கின. இல்லைன்னா நீ கல்பனா கிட்ட உளறி இருக்க மாட்டியா” என்றான் பதிலுக்கு ரமணன்.

“நான் பண்ணினது தப்பில்லையா”, என்று அவனிடமே திருப்பி கேட்டாள்.

“இல்லைன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது”.

“என்னால தானே அண்ணாவை கடத்தினாங்க……….. அதனால தானே அண்ணிக்கு அடிபட்டு, குழந்தை”, என்று மறுபடியும் விசும்ப ஆரம்பித்தாள்.

அவளருகில் வந்து அவள் தோள் அணைத்தவன், “நீ அது தெரிஞ்சு செய்யலை! விட்டுடு! அதை பற்றி நினைக்காதே பேசாதே” என்று சிறிது இடைவெளி விட்டான்.

“அதுக்காக தான் நம்ம உங்க அண்ணிக்கு இன்னொரு குழந்தை பிறக்கும்வரை வெய்ட் பண்ணலாம்னு நீ சொன்னதுக்கு நான் ஒண்ணுமே சொல்லாம உன்னை விட்டுட்டு போனேன்”.

“குழந்தை பிறந்தவுடனே வரலாம்னு நினைச்சதுக்கு…………. மறுபடியும் ஒண்ணு சொன்னே? அதுக்கும் பதில் பேசாம போயிட்டேன்”.

“ஆனா நீ சொல்ற ஒன்னை, எப்போவுமே எங்களால ஒத்துக்க முடியாது”, என்றான் சீரியசாக,

“அது எனக்கு தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு”, என்றாள் குரலில் வலியுடன் வரமஹாலக்ஷ்மி.  

“உங்கண்ணன் நொறுங்கி போயிடுவான். பரவாயில்லையா?”,

கண்களில் நீர் வடிய அமைதியாக இருந்தாள்.

“எத்தனை தடவை உன்கிட்ட சொன்ன பிறகும், நீ என்ன பாவமன்னிப்பு கேட்க போகிறியா கல்பனாகிட்ட……………. என்னால தான் ராம் அண்ணனை கடத்தினாங்க………….. அதனால் தான் இப்படி ஆயிடுச்சுன்னு சொல்லனும்னு சொன்னா, எப்படி ஒத்துப்போம்”.       

“ராம் அண்ணாக்கு நீ என்ன மாதிரின்னு உனக்கு தெரியாதா. அதே சமயம் எந்த அம்மாவும் தன்னோட குழந்தை இறந்ததுக்கு மறைமுகமான காரணமா யாரையாவது நினைச்சா………. அவங்களோட அவளால பழக முடியுமா”.

“அதனால தான் மறைக்கிறோம். கல்பனா, உன்னை தப்பா எடுத்துப்பாளா இல்லையாங்கற பேச்சுக்கே இடமில்லை. ஒருவேளை நினைச்சிட்டா ராம்னால தாங்க முடியுமா?”.

“அவனுக்கு உன்னை விட முடியாது. கல்பனாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா உன்னோட அவளுக்கான உறவு எப்படி இருக்கும்னு தெரியாது”.

“அதனால தான், உன் வாழ்கையில ஸ்ரீதர்ன்னு ஒருத்தன் இருந்தான்றது எனக்கு, எங்கப்பாக்கு, ராம் அண்ணாக்கு, உங்க அப்பாக்கு, தவிர நம்மை தெரிஞ்சவங்கள்ள யாருக்குமே தெரியாது”.

“நீ இன்னும் ஏதோ தப்பு செஞ்சிட்ட மாதிரி பேசறதை முதல்ல விடு”, என்றான்.

தெளியாதவள்……………. அன்று ஒரு நாள் ராத்திரி அவனுக்கு தொலைபேசியில், நெஞ்சு நிறைய ஆதங்கத்தில் அழைத்து கேட்ட கேள்வியை இன்று தெளிவாக கேட்டாள்.

“நீ ஏன் என்னை வேண்டாம்னு சொன்னே? நான் கெட்ட பொண்ணா?”, என்றாள்.

“நான் உன்னை ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு கட்டாயம் தெரியனுமா?”.

“ஆமாம்”, என்பது போல் தலையசைத்தாள்.

“ஒரு நாள் நீ டான்ஸ் கிளாஸ் போனதுக்கு நான் திட்டினேன். பதிலுக்கு நீயும் திட்டின, அதுவும் உன்னை திட்றதுக்கு நான் யார்ன்னு கேட்டு கேட்டு திட்டுனியா……………., அந்த கோபம் நிறைய நாள் இருந்தது. அதனால நீ வேண்டாம்னு சொன்னேன்”.

“ஆனா என்ன செஞ்சும் உன் நினைவுகள் என்னை விட்டு போகவேயில்லை. உனக்கு யாரோடயாவது கல்யாணம் ஆகற மாதிரி இருந்திருந்தா கூட நான் கட்டாயம் விட்டிருக்க மாட்டேன்”, என்றான் உண்மையான குரலில்…………….

“சும்மா சொல்ற நீ………… நான் போன் பண்ணலைன்னா நீ வந்திருக்க மாட்ட, நான் கெட்ட பொண்ணு ஆகியிருப்பேன்”, என்றாள் குரலில் வருத்தத்துடன்.        

அதற்கு பதில் சொல்லாத ரமணன், கேள்வியை அவளை நோக்கி திருப்பினான்.

“சும்மா கெட்ட பொண்ணு, தப்பு பண்ணிடேன்…………. இப்படியே சொல்லிட்டு இருக்கியே. அப்படி என்ன தப்பு பண்ண?”, என்றான்.

அவள் ஸ்ரீதருடன் பழகியதை தப்பென்று நினைத்து கொண்டிருந்தாள்.  அவள் எதை தப்பென்று நினைத்துக் கொண்டிருக்கிறாளோ, அதை சொல்ல பிரியப்படாமல்………… “அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது”, என்றாள் எரிச்சலான குரலில்.

“சரி யார் கிட்ட சொல்வியோ சொல்லு! நான் அவங்க கிட்ட கேட்கறேன்”, என்றான்.

“டேய்!!!! சும்மா கடுப்படிக்காத, தண்ணில தள்ளி விட்டுவேன்”, என்றாள்.

சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள் அரவமே இல்லை. சட்டென்று அவளை தண்ணீரில் தள்ளினான்.

“இதை நான் உனக்கு செய்யனும்னு ஆசையா? அதான் சொல்லிட்டே இருக்கியா?”, என்று அவள் இடையை பிடித்து அமிழ்த்தியவாறே தண்ணீரில் விளையாடினான்.

திடீரென்று இந்த செய்கையை எதிரபார்க்கததால், அவள் சத்தம் இறங்கி விட்டது.

மெதுவான குரலில், “யாராவது பார்க்க போறாங்க”, என்றாள்.

“அப்போ பார்க்கலைனா பரவாயில்லையா”, என்று கேட்க………….

“அதை அப்போ தான் சொல்ல முடியும்!”, என்றாள்.

“சரி! நீ இப்போ பண்ணின தப்பை சொல்லு!”, என்றான்.

“ப்ச்! சும்மா தெரிஞ்சிட்டே கேட்காத”, என்றாள்.

“அந்த தப்பை கேட்டால், எனக்கு சிரிப்பா வருது. கொஞ்சம் அந்த ஜோக் கேட்கறேன், சொல்லு”, என்றான்.

சொல்லாமல் விடமாட்டான் என்றுணர்ந்து, “அது நான் ஸ்ரீதர் பார்த்து ஐ லவ் யூ சொன்னேன்” என்றாள் எங்கோ பார்த்து கொண்டு.

“என்னை பார்த்து சொல்லு வரா”, என்றான்.

பார்க்கவேயில்லை,

“எத்தனை தடவை சொன்னே?”,

“ஒரு தடவை”, என்றாள் அழுகை எட்டி பார்க்க……….

“இது எப்படி இருக்கு தெரியுமா, யாராவது தேங்க்ஸ் சொன்னா பதிலுக்கு சில சமயம் அவங்க நிறைய தேங்க்ஸ் சொல்லறாங்களே………….. நம்ம ஒரு தடவையாவது சொல்லுவோம்னு சொல்லுவோம்”.

“அப்படியும் சொல்லலாம், இல்லைன்னா சின்ன குழந்தைங்க சேம் பிஞ்ச் சொல்ற மாதிரி சொல்லலாம்”, என்று சத்தம் போட்டு சிரிக்க,

அவன் கைகள் மட்டும் அவளை தண்ணீருக்குள் வேறு உலகத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தது.

“ஆனா அதனால எவ்வளவு சேதாரமாயிடுச்சு”, என்று அவள் கண்களில் அவன் தந்த மயக்கத்தையும் மீறி கண்ணீர் பெருக…………

“அது நடக்கனும்றது விதி! அது உன் மூலமா நடந்தது! வா!”, என்றவன்.

அவளை அழைத்து தண்ணீருக்கு வெளியே வந்தான்.

அன்று அவள் புடவை உடுத்தியிருந்தாள். உடைகள் ஈரம் ஆனதால் அவள் நடக்க முடியாமல் தடுமாற……….. அவளை தூக்கி காருக்கு வந்தான்.

கீழே விட மனசில்லாமல் பார்த்திருக்க…………. “யாராவது பார்க்க போறாங்க, ப்ளீஸ் விடுங்க”, என்றாள் மறுபடியும். 

அவளை அமர வைத்து, காரை எடுக்க………… ஒரு பேச்சில்லா மெளனம் இருவர் இடையே நீடித்தது.

அதுவே வீடுவரை தொடர்ந்தது. வீடு சேர்ந்த பின்பும் தொடர்ந்தது. யாரும் ஹாலில் இல்லாதது சௌகர்யமாக, தண்ணீரில் அமிழ்ந்ததால் நிறைய பசி தெரிந்தது. அவள் சாப்பிடாததால் வேகமாக தட்டில் எடுத்து கொண்டு மேலே போனாள்.

அதற்குள் அவனுக்கு தொலைபேசி அழைப்பு வர பேச நின்றான்.

யாரையும் பார்க்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. வேகமாக சென்றவள், உண்டு முடித்து……….. அதை விட வேகமாக உறங்குவது போல் கண்மூடி கொண்டாள்.

வந்து பார்த்தவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு பீறிட்டது. அவன் சிரிப்பு சத்தம் நன்றாக கேட்டது. இருந்தாலும் கண் திறக்காமல், “லூசு சிரிக்குது பாரு, நான் தூங்கறதை பார்த்தா சிரிப்பாவா இருக்கு”, என்று அவனை மனதிற்குள் செல்லமாக வைதாள்.

பின்பு பத்து நிமிடம் போல் கழிந்த பிறகும், ஒரு சத்தமும் இல்லாததால் மெதுவாக கண்களை திறந்து பார்க்க…………..

அவள் முகத்துக்கு வெகு அருகில் பார்த்து கொண்டிருந்தான்.

“என்ன இது?”, என்று சற்று அதிர்ந்து அவள் எழுந்து கொள்ள,

“ஹப்பா! கண் திறந்திட்டியா, உனக்கு சத்தம் கேட்காம எவ்வளவு நேரம் மூச்சு அடக்கி வைக்கிறது”.

முகம் கொள்ளா சிரிப்பு அவனுக்கு,

“எதுக்கு இப்படி அவசரமா எல்லா வேலையையும் முடிச்சிட்டு வந்து தூங்கறே……………, ஆனா ஒரு வேலையை நீ பாக்கி வச்சிட்ட, நான் செய்யறதுக்கா…………..??”, என்றான்.

“நான் ஒண்ணும் எதுவும் பாக்கி வைக்கலை, ஏதாவது இருந்தா நீயே செஞ்சிக்கோ”, என்றாள் தெனாவெட்டாக வரப்போவதை அறியாதவளாக………

“பேச்சுமாற மாட்டியே”, என்றான்.

“வரா மாற மாட்டா”, என்றாள் மறுபடியும் தெனாவெட்டாக.

“நீங்க உங்க ஈரமான டிரெஸ் இன்னும் மாற்றலையே பாப்பா”, என்றான் விஷமமான குரலில்.

அப்போதுதான் தான் ஈரமான உடையுடன் இருப்பதை உணர்ந்தவள், “அய்யோ! இப்படியா சொதப்புவ வரா!”, என்று தன்னை தானே கடிந்தவள், “இதெல்லாம் செல்லாது! செல்லாது!”, என்று வேகமாக எழுந்து குளியலறை நோக்கி ஓட…………,

ஒரே கையால் அவளை பிடித்து அப்படியே தூக்கியவன், “எல்லாம் செல்லும்………… நான் பேச்சு மாற மாட்டேன்! நான் தான் மாற்றுவேன்!, என்றவன், பிறகு அவனும் பேசவில்லை, அவளையும் பேசவிடவில்லை.  

காலையில் ரமணன் விழித்ததே அறிவழகனின் தொலைபேசி அழைப்பிற்கு தான்.

“அண்ணா!”, என்றவன், “நீங்க சொன்னவங்க எல்லாரும் இதுல சம்பந்தப்பட்டு இருக்காங்க! ஆனா அவங்களை விடவும் இன்னுமிரண்டு பேர் இருக்காங்க!”, என்று அவன் கைது செய்ய திட்டமிட்டு இருப்பவர்களையும் கூறினான்.

“சரி அறிவு! நான் பார்த்துக்கறேன்”, என்றான்.

அவனிடம் பேசி முடித்த பிறகு, “என்னடா இது? அறிவழகன் வேலையை முடிச்சிட்டான். இதே வேலையை தானே நான் எழில் வேந்தன் கிட்ட கொடுத்திருந்தேன்”.

“இன்னும் அவன் எதுவும் ரிப்போர்ட் சொல்லலையே”, என்று அவன் நினைத்து கொண்டிருக்கும் போதே எழில் அழைத்தான்.   

“சர்”, நீங்க சொன்னதை விசாரிச்சிடேன். அவங்க நாலு பேரும் இன்வால்வ் ஆகி இருக்காங்க. நீங்க சொன்ன இன்னும் ரெண்டு பேரும் தான் இதுக்கு சென்னைல முக்கிய ஆளுங்க”, என்றவனிடம்………..

“அப்போ இன்னைக்கு காலையில ரெண்டு பேரையும் அர்றேஸ்ட் பண்ற மாதிரி பார்த்துக்கறேன்”.

“முதல்ல நான் பண்ணிடறேன், ஒரு ரெண்டு மூணு நாள்ல உங்க கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணறேன்” என்று எழில் வேந்தனிடம் கூறியபடியே வேகமாக படுக்கையை விட்டு எழுந்தவன், மின்னல் வேகத்தில் குளித்து யூனிபார்ம் அணிந்து வந்தவன், மணியை பார்க்க அது காலை ஆறரை என்றது.  

“என்னடா இது? அவனுங்க தான் ஒரு ஆர்வக்கோளாருல சீக்கிரம் கூப்பிட்டா………… நானும் நேரம் பார்க்கலையே. சரி ஆரம்பிச்சிட்டோம் முடிச்சிடுவோம்”, என்று நினைத்தவாறு வேலையை பார்க்க கிளம்பினான்.      

யாரும் எழுந்திருக்கவில்லை. அப்போது தான் ரோஹித்தை ஸ்கூலிற்காக கல்பனா எழுப்பி கொண்டிருந்த சத்தம் கேட்டது.

“வராவை எழுப்பலாமா”, என்று நினைத்தவன், அவளை தான் தூங்க விட்டதே சில மணி நேரங்களுக்கு முன் தான் என்று உரைக்க……… முகத்தில் அவனையறியாமல் ஒரு ரகசிய புன்னகை மலர்ந்தது.  

சமையல் ஆளை தேடினால், அவனை காணவில்லை. காய் கறி வாங்க சென்றிருப்பான். சாப்பிட்டு சென்றால் தேவலாம் போல இவனுக்கு தோன்றியது.

அப்பொழுது தான் ராம் நடைபயிற்சி முடித்து வெளியே இருந்து வந்தவன், இவன் அவசரத்தை பார்த்து, “இருடா”, என்று அவனே சென்று காபி கலந்து எடுத்து வந்தான்.

ராமிற்கு தெரியும் வீட்டிலிருந்து செல்லும் போது வெளியில் சாப்பிடுவதை ரமணன் விரும்பமாட்டான் என்று.

இதை “சாப்பிடு”, என்றவன், அவன் காபி குடிக்கும் முன்னரே  தோசை சுட்டு………. அதற்கு தொட்டு கொள்ளவும் ஏதோ சைட் டிஷ் வைத்து கொடுத்தான்.

“அண்ணா என்ன இது? நான் வெளில பார்த்துக்க மாட்டேனா”. என்று ரமணன் சொன்னதை சிறிது கூட கவனிக்காமல்………. அவன் சாப்பிட்ட பிறகே அவனை அனுமதித்தான்.

ரமணன் கிளம்பும் நேரம் அவசரமாக வரா வர……………… “நான் போகணும் வரா, ஒரு அவசரமான வேலை”, என்று அவளிடம் அவள் முகம் பார்க்காமல் சொல்லி சென்றான். மற்றவர்கள் முன் பார்க்கும் கூச்சம். 

அது வராவிற்கு புன்னகையை கொடுக்க………….. அவள் முகத்திலும் ஒரு வெட்க புன்னகை மலர்ந்தது.

யாரும் இதை உணரவில்லை என்றாலும்……………. கல்பனாவின் பார்வைக்கு தப்பவில்லை.   

“சாப்பிட்டுட்டாங்களா…….. தேங்க்ஸ் அண்ணா”, என்ற கூறிய வராவிடம்,

“போங்க பாப்பா, நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்றீங்களா”, என்று அவள் அண்ணன் சிரிக்க…………

“ஒஹ்! நீ அவருக்கு  தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு பெரிய ஆளாகிட்டியா, இல்லை ரமணன் இன்னும் உனக்கு ஸ்பெஷல் ஆகிட்டானா”, என்று கல்பனா அவளிடம் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்க,

“அவங்க எனக்கு ஸ்பெஷல் ஆனதால, நான் பெரியாளாயிட்டேன் அண்ணி”, என்றாள் ஒரு புன்னகையுடன்.

 

அத்தியாயம் இருபத்தி எட்டு

அன்றைய நினைவுகள்:

 

“கல்பனா”, என்று அவள் அருகில் சென்று………… அவள் கையை பிடித்தவன், “அமைதியாயிரு கத்தாதே”, என்று சொன்னான்.

வேறு வார்த்தைகள் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால்………………. ஏன் குழந்தை இறந்தது என்றும் தெரியவில்லை. 

அங்கே வரா எப்படி இருக்கிறாள் என்றும் தெரியவில்லை.

ஆண்மகனான அவனின் நிலைமை அவனுக்கே பிடித்தமானதாக இல்லை. தன்னை ஒருவர் கடத்தி சென்றது…………… தன் குழந்தை இறந்தது………. கல்பனா சீரியஸ்…….. வரா சீரியஸ்…………

ராம் பிரசாத்திற்கு அடக்கமாட்டாமல் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. கல்பனாவின் கதறல் குறைந்தபாடாக இல்லை.

வெளியே வந்தவன், ரோஹித்தை வாங்கி கொண்டு உள்ளே சென்றான். “கல்பனா பாரு! நான் வந்துட்டேன். நீ அழுதா ரோஹித் அழறான் பாரு! அழாதே!”, என்று அதட்டினான்.

இரண்டு மூன்று முறை அதட்டிய பிறகு…………….. அது சற்று வேலை செய்ய………….. அவள் கதறல் நின்று, தேம்பலாக மாறியது.

சற்று நேரம் அங்கேயே நிற்க………….. “அம்மா என்னாச்சு பா, குட்டி பாப்பா பொறந்திடிச்சா”, என்ற தன் மகனின் கேள்விக்கு பதிலளிக்க தெரியாமல்……… “பார்த்துகோங்க”, என்று தன் மாமியாரிடம் கல்பனாவை காட்டி விட்டு வெளியே வந்தான்.

வந்தவன்………….. “குழந்தை”, என்று ராமநாதனை கேட்க…………..

“வா”, என்று அழைத்து கொண்டு போக, “இருங்க”, என்ற சுந்தரவல்லி ரோஹித்தை வாங்கி ராஜேஸ்வரியிடம் கொடுத்தார்.

சென்றவர்கள் பார்த்தது……………. வெள்ளை துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பூ குவியல் போன்ற ஒரு பெண் மகவு.  பார்த்திருந்த ராம் அடக்கமாட்டாமல் அழத் துவங்கினான்.

ராமநாதன் யாரையும் சிவசங்கரனையும் ராம் பிரசாதையும் அணுக விடவில்லை.    

அவரே முன்னின்று எல்லாம் செய்தார். ராமின் மாமனாரின் பண்ணையிலேயே ஒரு இடத்தை தேர்வு செய்தவர், எரிக்கும் முறை கொண்டிருந்த சிவசங்கரனின் குடும்ப வழக்கத்தை விடுத்து புதைக்கலாம் என்றார்.

குழந்தையின் அன்னையின் மடியில் வைத்து தர வேண்டும் என்ற சாங்கியங்களையெல்லாம் ஒதுக்கி தள்ளினார்.

துக்க வீட்டில் எப்பொழுதும் ஆளுக்கொரு முறையை சொல்லி வைப்பர். எதையும் யாரையும் சொல்ல விடவில்லை.

ராமிடம் மட்டும் இன்னும் யாரும் கல்பனாவிடம் குழந்தையை காட்டவில்லை. எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. இப்பொழுது தான்  மயக்கமான உறக்கத்தை தழுவி இருக்கிறாள் அவள் விழித்த பிறகு அவளிடம் ஒரு முறை குழந்தையை காட்டி பிறகு அதற்கு செய்ய வேண்டியதை செய்யலாம் என்றுவிட்டார்.

ஒன்றிரண்டு பேர் வரமஹாலக்ஷ்மியை கேட்டதற்கு, “அவளுக்கு காலில் அடிபட்டிருக்கிறது……………………….. ஹாஸ்பிடலில் இருப்பதால் அழைத்து வரவில்லை”, என்றார்.

ராஜேஸ்வரியிடம் கூட அதையே தான் கூறினர்.

“வரமஹாலக்ஷ்மி தானாக தான் ஸ்ரீதரோடு சென்றாள்”, என்றே அதுவரை  சிவசங்கரன், ராமநாதன், ராம் பிரசாத், என்று அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால் அந்த சூழலிலும் அதை பற்றி மூவரும்  ஒரு வார்த்தை பேசினாறில்லை, தங்களுக்குள்ளும் பேசவில்லை, தாங்கள் மனைவியரிடமும் பேசவில்லை.

கல்பனா கண் விழிப்பதர்காக காத்திருந்த போது, வராவின் நிலையை பற்றி அந்த நிலையிலும் ராம் பிரசாத், ரமணனை தொலைபேசி அழைத்து கேட்டான்.

வெங்கட ரமணன் சாமானியத்தில் சொல்ல வில்லை. “அண்ணா நீங்க அங்க பாருங்க”, என்றான் குழந்தையை பற்றி கேள்வி பட்டிருந்தவன்.

“இனி அவ திரும்ப முடியாத இடத்துக்கு போயிட்டா. நீ வராவை பற்றி சொல்லு”, என்று அவன் கட்டாயபடுத்திய பிறகே,   

“வராவிற்கு வலது பக்கம் இடுப்பு எழும்பில் சிறு மயிரிழை எழும்பு முறிவு, வலது தோளில் மூட்டு பிசகி இருக்கிறது”.

“இடது பக்கம் முட்டியில் எழும்பு முறிவு, தலையில் அடிபட்டது தையல் போட்டிருக்கிறார்கள்”, என்று அவன் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தான்.

கொடுத்தவன்……….. “நான் இருக்கிறேன் அவளை பார்த்துக்கறேன். இப்போ உங்க சப்போர்ட் கல்பனாவுக்கு ரொம்ப தேவை. அவசரப்பட்டு சென்னை வந்துடாதீங்க. நான் இங்கே தான் நீங்க வர்ற வரைக்கும் இருப்பேன், பார்த்துக்கறேன்”, என்றான்.

ராஜேஸ்வரியிடம் வராவிற்கு அக்சிடன்ட்………. ராமை யாரோ அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கடத்தி விட்டார்கள்…………. என்றே சொல்ல பட்டது.

ராஜேஸ்வரி தன் மகளிடம் செல்ல பிரியப்பட்ட போது கூட, “இந்த மாதிரி நடந்திருக்கும் போது……. நீ போகாதே! என் மகன் பார்த்துக் கொள்வான்”. என்றார் சுந்தரவல்லி……………..

“நான் காரியம் முடிந்ததும் செல்கிறேன், மகாலட்சுமியை பார்த்துகொள்கிறேன்”, என்று சமாதானப்படுத்தி ராஜேஸ்வரியை அங்கே நிறுத்தி வைத்தனர்.   

மறுபடியும் கல்பானாவிடம் குழந்தையை காட்டி, அவளின் கதறலை கேட்டு…………… கேட்டுக் கொண்டிருந்தவர்களின் கண்களில் எல்லாம் கண்ணீரை வரவழைத்தாள்.

ராம் கூட “குழந்தையை காட்ட வேண்டாம்”, என்ற போது……… ராமநாதன் தான் பிடிவாதமாக………. “காட்டுப்பா சரியோ தப்போ அவ பார்த்துடட்டும். அவளுக்கு இது நிறைய வலியையும் வேதனையையும் கொடுக்கும் தான்”.

“ஆனா பார்க்காம விட்டுட்டா, இன்னுமே அந்த வலி அதிகமா இருக்கும். நீயே போய் காட்டு”, என்று சொல்லி அனுப்பினார்.

ஏதோ நடக்கிறது என்றுணர்ந்த ராம், கல்பனாவின், தலைமகன் ரோஹித் “குட்டி பாப்பா எங்கே”, என்று தன்னை வைத்திருந்தா பாட்டியிடம் மறுபடியும் மறுபடியும்  கேட்க………..

“அவ சாமியாயிட்டா செல்லம்”, என்று அவர் பாட்டி பதிலளித்ததை கேட்டிருந்த அனைவரின் கண்களும் குளமாகின. 

அந்த சிறு பெண் மகவின் அன்னையும் தந்தையும் மீண்டும் மீண்டும் கதறிய பிறகு…………….. கதற வைத்த பிறகு………….

அவள் வளர்ந்து…….. ஆளாகி……… வாழ்ந்து……… கடைசியாக போகும் இடத்திற்கு………. பிறந்ததும் நேராக சென்றாள்.

 

Advertisement